அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 12🔥🔥

5
(12)

பரீட்சை – 12

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மறுபடியும் 

என் ஆசை 

மன்னவனை 

சேர்வேனோ

இல்லை

மருகி மருகி 

உருகி உருகி 

மனம் வெந்து 

சாவேனோ..

 

அழுவதற்கு கண்ணீர் 

மிச்சம் இல்லை 

விழிகளில்..

என்னை

ஆற்றுவதற்கும் 

ஆருயிர் கணவன் 

இல்லை 

அருகினில்..

 

அவனுக்கு 

வந்த துன்பம் 

என் உயிரை 

கொல்லுதே

 

மரத்துப்போன 

மனமதுவோ

மாயவனை 

தேடுதே..

 

விரைவில் 

வந்துன் 

முகம் காட்டி

என்னுயிர் 

மீட்டிடடா

இல்லை

வேதனை தீர 

வாழ்வை துறக்க 

எனக்கொரு வழி 

காட்டிடடா…

 

#############

 

உயிரே..உயிரே..!!

 

தேஜூ கண்ட காட்சி அப்படியே அவள் உயிரையே  உறைய வைத்துவிட்டது..

 

ராமின் கைகளில் விலங்கு மாட்டி இருக்க அவனை காவலர்கள் போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டிருந்தனர்..

 

“ஐயோ.. என்ன நடக்குது..? ராமை எதுக்கு போலீஸ் கூட்டிட்டு போறாங்க?” 

 

இறங்கி ஓட எத்தனித்தவளின் கையை இறுக்க பிடித்த அருண் “நான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல..? மறைஞ்சிருந்துதான் பார்க்கணும்..  அங்க போனப்புறம் சீன் போட கூடாதுன்னு..” அவன் சொல்லி முடிப்பதற்குள் அந்த ஜீப் அங்கிருந்து காவல் நிலையம் நோக்கி பறந்துவிட்டிருந்தது..

 

“டேய்.. உனக்கு மனசாட்சியே கிடையாதாடா? அவரை எதுக்கு போலீஸ் புடிச்சிட்டு போறாங்கன்னு தெரியல.. என்னை விடுடா.. நான் போய் அவரை பாக்கணும்.. அவர் எவ்வளவு கஷ்டப்படுறாரோ?” 

 

அவன் கைப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பிரயத்தனம் செய்து கொண்டு இருந்தவளை அப்படியே இருக்கையில் தள்ளி கார் கதவினை லாக் செய்தவன் வண்டியை அங்கிருந்து எடுத்தான்..

 

“டேய்.. நீ என்னடா நெனச்சுக்கிட்டு இருக்க?” 

 

அவனை வண்டியை ஓட்ட விடாமல் கையை பிடித்து இழுத்தவள் “நான் அவரை பார்க்க போகணும்.. நிறுத்துடா.. நிறுத்து..” 

 

அவன் கையைப் பிடித்து இழுப்பதை தொடர வண்டியை நிறுத்தியவன் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான்..

 

அவன் அறைந்த அறையின் வேகத்தில் மயக்கமாகி விழுந்தவளை அப்படியே இருக்கையில் சாய்த்து படுக்க வைத்துவிட்டு நேரே வீட்டிற்கு வண்டியை ஓட்டி சென்றான்..

 

மயக்கத்திலிருந்து விழிக்கும் போது  அருண் வீட்டின் அறையில் தான் கட்டிலில்  இருப்பதை உணர்ந்தவள் பக்கத்தில் அவன் அமர்ந்திருப்பதை பார்த்ததும் அப்படியே வெறிகொண்டு எழுந்தாள்.. 

 

அவன் சட்டை காலரை பிடித்தவள் “டேய்.. உனக்கு என்னதான்டா வேணும்? ஏன்டா என்னை இப்படி கொடுமை படுத்துற? என்னடா பண்ண அவரை..?அவரை எதுக்கு போலீஸ் பிடிச்சது?”  

 

அவள் அவனை உலுக்கி உலுக்கி கேட்கவும் அவள் கையை நிதானமாக விலக்கியவன் “அவனை எதுக்கு போலீஸ் புடிச்சுதுன்னு உனக்கு தெரியணும்.. அவ்வளவு தானே? இங்கே பார்..” தன் கைபேசியில் ஒரு செய்தி அலைவரிசையின் காணொளியை ஓடவிட்டான்..

 

அதில் “ராம் என்கிற இந்த வங்கி மேலாளர் தன்னிடம் தெரிந்தவருக்காக தொழில் செய்ய கடன் கேட்டு வந்த சக பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. அந்தப் பெண் புகார் கொடுத்ததும் காவல்துறையினர் உடனடி நடவடிக்கையாக அவரை கைது செய்துள்ளனர்.. மேற்கொண்டு வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்துவிட்டு விசாரணையை மேலும் தொடர்வதாக அவர்கள் நம் செய்தி சேனலுக்கு தகவல் தந்துள்ளனர்..” காணொளி செய்தியை பார்த்தவள் அப்படியே கட்டிலில் உறைந்து அமர்ந்தாள்..

 

“நீ இந்த பக்கம் வந்த உடனே அந்த பக்கம் உன் புருஷன் மத்த பொண்ணுங்க கிட்ட தன் லீலை எல்லாம் காட்டறான் போல இருக்கு.. இதுதான் ராம்லீலாவா?” 

 

 கிண்டலாக கேட்டவனை தீயாய் முறைத்து அவன் கழுத்தை தன் கை கொண்டு இறுக்க பிடித்தவள் “இன்னொரு வார்த்தை பேசின.. அப்படியே உன் கழுத்தை நெறிச்சு கொன்னுடுவேன்.. நீ இதுல என்ன விளையாடி இருக்கேன்னு எனக்கு தெரியாது.. ஆனா ரொம்ப தப்பு பண்ணற.. ரொம்ப கஷ்டப்படுவ நீ இதுக்காக..” கோபத்தில் கொந்தளித்தாள் அவள்..

 

“அவனுக்காக உன் கண்ணுல காதலை பார்க்க பார்க்க இன்னும் அவனை கஷ்டப்படுத்தணும்னு எனக்கு வெறி ஏறுதுடி.. உனக்கு ராமுங்கற பேரு மேல தான் காதல்னா என் பேரை ராம்ன்னு மாத்திக்க கூட நான் தயாரா இருக்கேன்.. ஆனா நீ என்னை மட்டும் தான் காதலிக்கணும்.. நீ வேற யாருக்கும் சொந்தமில்லை.. புரிஞ்சுதா?” 

 

 அவள் கன்னத்தைப் பிடித்து அவள் கண்களுக்குள் பார்த்து சொன்னவன் அங்கிருந்து எழுந்து விடுவிடுவென வெளியே போய் விட்டான்..

 

அவளோ ராமுக்கு என்ன ஆயிற்று என்று கவலையோடு அமர்ந்திருந்தாள்.. தன் முகத்தை அப்படியே தலையணைக்குள் புதைத்தவள்.. குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..

 

“என்னை மன்னிச்சிடுங்க ராம்.. என்னால நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க.. பேசாம என்னை வெறுத்துட்டு உங்க வேலையை பாருங்க.. எனக்காக போராடாதீங்க ராம்.. அட்லீஸ்ட் அப்பவாவது உங்களை இந்த ராட்சசன் கொடுமைபடுத்தாம இருப்பான்..” புலம்பிக்கொண்டே கதறினாள் அவள்..

 

 

#############

 

 

இரண்டு நாளாய் ராமுடன் அலைந்து கொண்டிருந்த அந்த இன்ஸ்பெக்டர் தான் இன்று அவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இருந்தார்.. அவராலேயே இதை நம்ப முடியவில்லை.. 

 

“ராம்.. ரெண்டு நாளா நீங்க நடந்துக்கிட்ட விதத்தையும் உங்க வைஃப் மேல நீங்க வச்சிருந்த நம்பிக்கையையும் பார்த்துருக்கேன்.. என்னால இந்த கம்ப்ளைன்ட் வந்தப்போ அதை நம்பவே முடியல.. என்ன நடந்துச்சு ராம்..? எனக்கு உங்க சைடுல இருந்து என்ன நடந்ததுன்னு கேட்கணும்னு ஸ்ட்ராங்கா தோணுது.. ப்ளீஸ் சொல்லுங்க..” நிதானமாக கேட்டார் அந்த இன்ஸ்பெக்டர்..

 

“சார்.. என்ன சார் சொல்ல சொல்லுறீங்க? அவங்க சொல்றது எல்லாமே பொய்.. அப்படி எதுவுமே நடக்கல.. அவங்க வந்து அவங்களுக்கு தெரிஞ்சவங்களுக்காக லோன் கேட்டாங்க.. அந்த பேப்பர்ஸ் சரியில்லன்னு சொல்லிதான் நான் லோன் கொடுக்க மாட்டேன்னு சொன்னேனே தவிர வேற எதுவும் அவங்க கிட்ட எதிர்பார்த்து லோன் கொடுக்க மாட்டேன்னு சொல்லல.. இதுதான் உண்மை.. ” நடந்ததை அப்படியே சொன்னான் ராம்..

 

“ஓகே சார்.. நிஜமா இதுதான் நடந்ததுன்னா நிச்சயமா அந்த சிசிடிவி கேமராவில இது எல்லாமே பதிஞ்சிருக்கும்.. நாங்க செக் பண்ணி பார்க்கிறோம்..” என்று சொன்னவர் அவனை ஒரு ஓரமாக அமரச் சொல்லிவிட்டு கான்ஸ்டபிளை அழைத்தார்..

 

“கான்ஸ்டபிள்.. அந்த சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் வந்திருச்சா? வந்த உடனே என்கிட்ட கொண்டுவந்து குடுங்க..” 

 

“கணேஷ் தான் ஸ்பாட்டுக்கு போயி அந்த ஃபுட்டேஜ் எல்லாம் கலெக்ட் பண்ணிட்டு இருக்காரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு சார்..” என்று சொன்னார் கான்ஸ்டபிள்.. அப்பொழுது உள்ளே வந்த கணேஷ் நேரே வந்து இன்ஸ்பெக்டரிடம் சல்யூட் அடித்து நின்றார்..

 

“சொல்லுங்க கணேஷ்.. ஃபுட்டேஜ் கிடைச்சுதா? அதுல அவங்க கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கிற மாதிரி ஏதாவது தப்பா நடந்துருக்கா?” 

 

இன்ஸ்பெக்டர் கேட்கவும் கணேஷ் என்ற அந்த காவலரோ “சார்.. அவங்க சொன்ன அந்த டைம்லேர்ந்து பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் தான் சிசிடிவி கேமரா ஒர்க் பண்ணி இருக்கு சார்‌‌.. அதுக்கப்புறம் சிசிடிவி கேமராவை யாரோ டிஸ் ஏபிள் பண்ணி இருக்காங்க சார்… அங்க பேங்க்ல விசாரிச்சப்போ அவங்க எல்லாம் இந்த ராம்தான் தனக்கெதிரா சாட்சி இல்லாம தப்பிக்கிறதுக்காக அப்படி பண்ணி இருப்பாருன்னு சொல்றாங்க சார்..” என்றார் அவர்..

 

இன்ஸ்பெக்டருக்கும் “இது யாரோ செய்யும் சதி” என தோன்றியது.. ஆனால் சரியான ஆதாரம் கையில் இல்லாமல் இப்போது ராமை குற்றமற்றவர் என்று தான் சொன்னால் தான் அவரிடம் இருந்து ஏதோ பணம் பெற்றுகொண்டு அவருக்கு ஆதரவாக பேசுவதாக எல்லோரும் குற்றம் சாட்டுவார்கள் என்று அவருக்கு தெரியும்.. 

 

அதனால் இப்போதைக்கு அமைதியாக இருப்பதே நல்லது என்று நினைத்தவர் “கான்ஸ்டபிள்.. ராமை அந்த செல்லுக்குள்ள அனுப்புங்க.. இப்போதைக்கு இது பத்தி எதுவும் பேச வேண்டாம்.. நம்ம ஃபர்தரா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு அப்புறம் இது பத்தி ஒரு முடிவுக்கு வரலாம்..” என்று சொல்லிவிட்டு ராமிடம் வந்தார்..

 

“ராம் உங்களை சுத்தி ஏதோ பெருசா சதிவலை பின்றாங்கன்னு நினைக்கிறேன்.. எதுக்காக இப்படி பண்றாங்கன்னு தெரியல.. முதல்ல உங்க வைஃப் காணாம போனதிலிருந்தே நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும்.. சரி.. இப்போதைக்கு நீங்க இங்க ஜெயிலுக்குள்ள இருக்கிறதுதான் உங்களுக்கு சேஃப்… அதனால இப்போதைக்கு அந்த செல்லுல போய் இருங்க.. நான் இன்னும் ஏதாவது ஆதாரத்தை தேட முடியுமான்னு பார்க்கிறேன்..”

 

“ஹூம்.. சார்.. நான் வெளியில இருந்தா என் தேஜூவை கண்டு பிடிச்சு கடத்தினவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துடுவேன்னு அவன்தான் இதை பண்ணி இருக்கணும் சார்.. எனக்கு அந்த டவுட்டு தான்.. இந்த பிரச்சனைனால நீங்க தேஜுவை கடத்தினவன் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்காம விட்டுறாதீங்க.. தயவு செஞ்சு அந்த வேலையை கொஞ்சம் எனக்காக பண்ணிக்கிட்டே இருங்க சார்.. உங்களை கெஞ்சி கேட்கிறேன்..” என்றான் ராம்..

 

“எனக்கு புரியுது ராம்.. நிச்சயமா அந்த கேசை ரீஓப்பன் பண்ணது பண்ணதுதான்.. நான் உங்க வைஃபை தேடுறதை நிறுத்த மாட்டேன்.. அதே சமயம் இந்த கேஸ்ல இருந்து உங்களை எப்படி வெளியில கொண்டு வர்றதுன்னு நான் பார்க்கிறேன்…” என்றவர் வெளியே போக அங்கே முழுவதும் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர்..

 

“ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்துட்டு இருக்காரு அந்த பேங்க் மேனேஜர்.. நீங்க அவருக்கு எதிரா என்ன ஆக்ஷன் சார் எடுக்க போறீங்க? எஃப் ஐ ஆர் ஃபைல் பண்ணிட்டீங்களா? அவரை எப்ப சார் கோர்ட்டுக்கு கூட்டிட்டு போறீங்க? அவரை எல்லாம் சும்மா விடக்கூடாது சார்..” என்று எல்லோரும் கத்த “எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்..” என்றார் அவர் தீர்க்கமான குரலில்..

 

“நாங்க இன்வெஸ்டிகேட் பண்ணிட்டுதான் இருக்கோம்.. இப்போதைக்கு யார் சொல்றது உண்மை.. யார் சொல்றது பொய்.. இதெல்லாம் தெரியாது.. ஒரு பொண்ணு சொல்லி இருக்காங்கன்றதுக்காகவே உங்களை மாதிரி நாங்களும் கண்ணை மூடிட்டு அவரை தண்டிக்க முடியாது.. ரெண்டு பக்கமும் விசாரணை நடத்த வேண்டியது எங்களோட கடமை.. நாங்க அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்.. ராம் மேல நிஜமாவே தப்பு இருக்குன்னு ஊர்ஜிதம் ஆச்சுன்னா அவரை தண்டிக்கிற முதல் ஆளு நாங்களா தான் இருப்போம்.. அதனால தயவு செஞ்சு நீங்க இப்படி அஜிடேட்டாகாதீங்க.. எங்க வேலையை எங்களை ஒழுங்கா செய்ய விடுங்க.. இன்னொரு ரிக்வெஸ்ட்.. உங்ககிட்ட.. யாரும் கற்பனை பண்ணி எதுவும் எழுதாதீங்க… உண்மை என்னன்னு கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சு உங்களை மறுபடியும் நாங்க சந்திக்கிறோம்.. எந்த விதத்திலயும் குற்றவாளியை நாங்க தப்பிக்க விடமாட்டோம்…” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் அங்கிருந்து புறப்பட்டு ஜீப்பில் ஏறி சென்றார்..

 

 

############

 

அழுது அழுது ஓய்ந்து போயிருந்த தேஜஸ்வினி அப்படியே உறங்கிப் போயிருந்தாள்.. அவள் திரும்பவும் எழுந்த போது மதியம் ஆகி விட்டிருந்தது.. 

 

அவள் அறைக்கு வந்த அருணை பார்த்தவள் “என் கண்ணு முன்னாடி நீ நிக்காத.. தயவு செஞ்சு இங்க இருந்து போயிரு..” என்று சொல்லவும் “ஏன் அஷ்ஷூமா.. உன் குழந்தைகளை பத்தி உனக்கு யோசனையே வரலையா? அம்மா நீயும் என் கூட இருக்க.. அப்பாவும் ஜெயில்ல இருக்கான்.. அவங்க எப்படி தனியா இருப்பாங்கன்னு யோசிச்சியா? அவங்க ஸ்கூல்ல இப்போ என்ன நடந்துட்டு இருக்கும்னு யோசிச்சியா?” என்று அவன் கேட்கவும் அப்போதுதான் தன் குழந்தைகள் பள்ளியில் என்ன பாடு படுகிறார்களோ என்று அவளுக்கு யோசனை வந்தது..

 

தான் ராமை பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருந்தோமே தவிர தன் பிள்ளைகளை பற்றி துளி கூட எண்ணவில்லையே என்று எண்ணியவள் தன் தலையில் அடித்துக் கொண்டாள்..

 

 “என்னால என்னடா பண்ண முடியும்? அதான் கொண்டு வந்து இங்க வச்சிருக்கியே.. பாவம்.. அத்தையும் மாமாவும் அவங்களை வச்சுக்கிட்டு அங்க தனியா என்ன பாடு படுறாங்களோ.. தெரியல..” என்றாள் அவள்..

 

“அதுக்குதான்.. உன் கவலையை போக்குறதுக்கு ஒரு ஐடியா சொல்லலாம்னு வந்தேன்..” என்றான் அவன்..

 

“என்ன சொல்ல வந்த..?” என்று அவள் முறைத்துக் கொண்டே கேட்கவும் “இப்போ நம்ம ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு கிளம்பி போய் உன் பிள்ளைகளை இங்க கூட்டிட்டு வந்துடலாம்.. நீயே அவங்களை பாத்துக்கோ.. அவங்களுக்கும் அம்மா கூட இருந்த மாதிரி இருக்கும்.. உனக்கும் அவங்களை பிரிஞ்சு இருக்கிற வேதனை இருக்காது.. என்ன சொல்ற?” 

 

“நெஜமாதான் சொல்றியா? என்னை கூட்டிட்டு போ.. நான் உடனே என் பிள்ளைகளை கூட்டிட்டு வரணும்..” என்றாள் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டே..

 

“சரி கிளம்பு.. போலாம்.. ஆனா ஒரு விஷயம்.. போன முறை நம்ம பிள்ளைகளை சந்திக்க போனப்போ நான் உனக்கு என்ன கண்டிஷன் எல்லாம் சொல்லி இருந்தேனோ அது அத்தனையும் இப்பயும் அப்ளை ஆகுது.. எதுவுமே மாறல.. அதே கண்டிஷன்ஸ் தான் நீ இப்பவும் ஃபாலோ பண்ணணும்.. அதுல ஏதாவது தப்பு நடந்தது.. இப்பவே ராம் எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கான்னு உனக்கு தெரியும்.. இதுக்கு மேலயும் அவன் கஷ்டப்படணும்னு நீ நினைக்க மாட்டேன்னு நான் நம்புறேன்” என்று சொன்னான் அருண்..

 

சொன்னவனை எச்சில் விழுங்கி பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.. 

 

பள்ளிக்கு சென்ற தேஜூ அது மதிய உணவு நேரமாக இருந்ததால் நேரே தலைமை ஆசிரியை அறைக்கு சென்று “எஸ்கியூஸ் மீ மேடம்” என்றாள் 

 

“மிஸஸ்.தேஜஸ்வினி.. வாங்க வாங்க.. பாவம்.. உங்களை காணும்னு உங்க ஹஸ்பண்ட் ரொம்ப துடிச்சு போயிட்டாரு நேத்து.. நீங்க இப்ப வந்திருக்கிறது தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவார்.. ஆனால் அவர் இப்ப…” என்று தலைமை ஆசிரியர் இழுக்க “மேடம் இப்ப அவரை பத்தி பேசல்லாம் எனக்கு நேரம் இல்ல.. நான் என் பிள்ளைகளை கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.. அவரும் இப்ப ஜெயில்ல இருக்காரு.. அவங்களை பார்த்துக்க யாரும் கிடையாது.. அதனால என்னோடயே அவங்களை கூட்டிட்டு போலாம்னு நான் நினைக்கிறேன்.. அதுக்கு உங்க பர்மிஷன் வேணும்..” என்று சொன்னாள் அவள்..

 

“ஆனா உங்களை அந்த அருண் கடத்தி வச்சிருக்கிறதா..” என்று தலைமை ஆசிரியை இழுக்கவும் “இந்த கற்பனை கதையை உங்களுக்கு யார் சொன்னது? நான் எங்கேயாவது மனசார விரும்பி போனா நீங்களா என்னை கடத்திட்டாங்கன்னு கதை கட்டி விடுவீங்களா? நான் சொல்லாம நீங்க எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் மேடம்?” என்று காட்டமாக கேட்டாள் தேஜு..

 

அவள் அப்படி கேட்டதை புன்னகையோடு தன் காரில் இருந்த படி கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தான் அருண்..

 

தொடரும்…

 

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன் என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!