பரீட்சை – 22
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
வாழ்வில் பல
வெற்றி
கண்டு..
முன்னேறிச் செல்ல
முனைந்து
உழைத்து..
அதற்கான வழியை
எட்டிப் பிடிக்கும்
வேளையில்…
ஏதோ ஒரு
தடை
வந்து ..
என் வழியை
மறிக்கிறதே…
நான் கொண்ட
பல
கனவு …
நனவாகாமல்
போய்
விடுமா..?
அதிரடியாய்
வந்த
செய்தி..
அள்ளி கொட்டியதே
நெஞ்சுக்குள்
நெருப்பை…
இனி என்ன
நடக்குமோ
என உள்ளம்
பதறுதம்மா..!!
###############
கனவு நனவாகுமோ..?!
அறைக்கு வெளியே காலடி சத்தம் கேட்டது..
“போச்சு.. கல்யாணி அம்மா வந்துட்டாங்க..” என்றான் விஷ்வா..
இருவரையும் பார்த்து வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ளுமாறு சைகை காட்டினான்.. இருவரும் அவ்வாறே வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள அவனும் அதே போல ஒரு கையால் வாயையும் மூக்கையும் மூடிக் கொண்டான்.. அவன் மறு கையில் மயக்க மருந்து தெளிப்பானை ( ஸ்ப்ரே) வைத்திருந்தான்..
கல்யாணி அம்மா கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து அருண் கட்டிலில் மயக்கமாய் படுத்திருந்ததையும் அவர்கள் மூவரும் நின்று கொண்டிருந்ததையும் பார்த்தவர் “என்ன ஆச்சு அருண் தம்பிக்கு..? நீங்க எல்லாம் யாரு ? அஸ்வினி மா நீங்க என்னமா பண்றீங்க இந்த ரூம்ல?” என்று வரிசையாக கேள்வி கேட்க அதற்குள்ளாக தான் கையில் வைத்திருந்த மயக்க மருந்து தெளிப்பானை (ஸ்பிரே) கல்யாணி அம்மாவின் முகத்தில் அடித்து விட்டிருந்தான்..விஷ்வா..
அவர் மயங்கி விழுவும் அவரை தாங்கியவன் அவரை அப்படியே தூக்கி வந்து அங்கே இருந்த அகல் தவிசில் ( சோஃபா) படுக்க வைத்தான்..
“ஓகே.. மேட்டர் ஓவர்.. அக்கா இனிமே நீங்க ஜாலியா டைரியை படிக்கலாம்.. ரெண்டு பேரும் இன்னும் குறைஞ்சது ரெண்டு மணி நேரத்துக்கு எழுந்துக்க மாட்டாங்க..” என்று அவன் சொல்ல தேஜுவோ மயக்கமாய் இருந்த இருவரையும் மாற்றி மாற்றி பாவமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவளுக்கு இருந்த இரக்க குணம் அவர்களை அப்படி மயக்கமாக்கியதை நியாயப்படுத்தவில்லை.. ” பாவம் கல்யாணி அம்மா..” என்று அவள் வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல வைஷுவும் விஷ்வாவும் “ஐயோ.. கடவுளே..!!” என்று தலையை இடவலமாக ஆட்டி தலையில் கை வைத்து நின்று கொண்டு இருந்தார்கள்..
வைஷ்ணவியோ ,” அக்கா சும்மா டெம்பரரியா கொஞ்ச நேரத்துக்கு அவங்கள மயக்கம் போட வச்சிருக்கோம்.. அந்த டைரியை படிச்சு முடிச்சதும் அவங்களும் எழுந்திட போறாங்க.. நமக்கும் எல்லா விஷயமும் தெரிஞ்சுரும்.. ப்ளீஸ் கா.. இதுக்கு மேல டிலே பண்ணாம அந்த டைரியை எடுத்து படிச்சிருங்களேன்.. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு.. விஷயம் தெரிஞ்சுக்காம..” என்றாள் வைஷு..
தேஜுவும் அந்த முதல் அலமாரியை திறந்து அதற்குள் இருந்து முதல் நாட்குறிப்பு கையேட்டை (டைரி) எடுத்தாள்.. 2013 -ம் வருட நாட்குறிப்பேடு அது.. முதல் பக்கத்தை திறந்தாள்.. அவள் கை ஏனோ நடுங்கியது.. அவளுடைய புகைப்படங்களையும் அதிலிருந்த கவிதைகளையும் பார்த்ததிலிருந்தே அருண் தன்னை கடத்தி வந்ததற்கு பின்னால் பெரிய காதல் கதையே இருக்கிறது என்று அவளுக்கு புரிந்தது..
அந்த புரிதலே அவள் கை நடுக்கத்திற்கான காரணமாய் போனது.. ஏற்கனவே அந்த புகைப்படங்கள் தன் மனதில் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தியிருக்க கையில் வைத்திருந்த குறிப்பேட்டில் என்ன ரகசியங்கள் அடங்கி இருக்கிறதோ என்று எண்ணி அவளுக்கு ஒரு நிமிடம் உடம்பெல்லாம் சிலிர்த்து அடங்கியது.. முதல் பக்கத்தில் அவள் இதழ் விரித்து சிரித்துக் கொண்டு இருந்த புகைப்படத்தின் கீழே “என்னுயிர் கண்ணம்மா…!! ” என்று எழுதி இருந்தது..
ஏனோ அந்த வரியை படித்த அடுத்த நொடி அவள் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் அந்த வார்த்தையில் இருந்த எழுத்தில் பட்டு நனைத்து தெறித்தது..
###############
“என்கிட்ட எதையோ மறைச்சீங்களா? என்ன மாமா சொல்றீங்க?” என்று ராம் கேட்க.. அழகப்பன் தலையை குனிந்து கொண்டு கைகளை பிசைந்து கொண்டிருக்க அவர் கண்களில் இருந்து சிந்திய ஒரு துளி கண்ணீர் அவர் கை மேல் விழுந்ததை கவனித்து பதறிப் போனான் ராம்..
“மாப்பிள்ளை.. இந்த விஷயத்தை நான் உங்ககிட்ட இருந்து மட்டும் மறைக்கல.. தேஜூ கிட்டே இருந்தும் மறைச்சிருக்கேன்.. நான் இது மாதிரி ஒரு விஷயத்தை மறைச்சிருக்கேன்னு தெரிஞ்சா அவ என்னை வாழ்க்கை முழுக்க மன்னிக்க மாட்டா.. ஆனா எனக்கும் வேற வழி இல்லாம தான் இதை பண்ணேன்.. முதல்ல நீங்க என்னை மன்னிச்சிருங்க மாப்ள..” அவர் நா தழுதழுக்க பேசினார்..
“மாமா… நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல.. எனக்கு ரொம்ப படபடன்னு இருக்கு மாமா.. தயவு செஞ்சு விஷயம் என்னன்னு சீக்கிரம் சொல்லுங்க..” என்று ராம் கேட்க “நான் சொல்றேன் மாப்பிள.. ஆனா நம்ம வேற எங்கேயாவது போய் பேசுவோமா?” என்று கேட்டார் அழகப்பன்..
“ஓகே மாமா.. இருங்க நான் அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்..” என்று சொன்னவன் உள்ளே சென்று தன் அம்மாவை பார்த்து “அம்மா..” என்று அழைக்கவும் “என்னடா அந்த பெரிய மனுஷன் வழக்கம்போல உன்கிட்ட நடிச்சுக் கொட்ட ஆரம்பிச்சுட்டாரா?” என்று அவர் கேட்க ராமுக்கோ கண்களில் கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது..
“அம்மா… அவரே பொண்ணு வாழ்க்கை இப்படி ஆயிடுச்சுன்னு பதட்டத்தில வந்திருக்காரு.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அவர் கிட்ட எப்படி இப்படி உன்னால நடந்துக்க முடியுது? வேண்டாம்.. அவர் இங்க இருந்து உன்கிட்ட மேல மேல அவமானப்பட வேண்டாம்.. நான் அவர வெளியில எங்கேயாவது கூட்டிட்டு போறேன்.. எதாவது ஹோட்டல்ல தங்க வெச்சிக்கறேன்.. இத்தனை நாள் தலையில தூக்கி வெச்சு ஆடின மருமகளை பத்தி தப்பா ஒரு வார்த்தை யாரோ சொன்னாங்கனு இப்படி தூக்கி போட்டு வீசிட்டிங்களேமா.. நான் மாமாவை கூட்டிட்டு வெளியே போறேன்.. அட்லீஸ்ட் பூஜாவையும் அஸ்வினையுமாவது ஒழுங்கா பாத்துக்கோங்க.. அவ வயத்தில பிறந்தாங்கன்னு அவங்களையும் வெறுத்துறாதீங்க..” காட்டமாக சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றான்..
“சரி மாமா.. வாங்க.. பக்கத்துல இருக்குற ஹோட்டலுக்கு போலாம்..” என்று சொன்னவன் அருகில் இருந்த ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் அவருக்கு ஒரு அறையை எடுத்து மூவரும் அந்த அறைக்கு சென்றனர்..
அழகப்பன் கட்டிலில் அமர்ந்திருக்க அவர் மனைவி அவர் பக்கத்தில் நின்றிருக்க ராம் ஒரு கதிரையை அழகப்பனுக்கு எதிரே இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து ” இங்க நம்ம மூணு பேரை தவிர யாருமே இல்ல மாமா.. இப்ப சொல்லுங்க.. என்ன நடந்தது?” என்று கேட்டான் ராம்..
” சொல்றேன் மாப்பிள.. இது 2 மணி நேர சின்ன கதை இல்ல.. மூணு வருஷம் நடந்த கதை.. தேஜூவ அந்த அருண் கடத்திட்டு போறதுக்கு காரணமா இருந்த கதை.. தயவு செஞ்சு இந்த கதையை கேட்டு என் பொண்ண எந்த விதத்திலும் தப்பா நினைச்சுக்காதீங்க மாப்பிள்ளை.. அவ மேல எந்த தப்பும் இல்லை..” என்று கெஞ்சினார் அந்த பெரிய மனிதன்..
“ஐயோ மாமா.. தேஜுவே வந்து அவளை பத்தி ஏதாவது தப்பா சொன்னாலும் நான் அவளை தப்பா நினைக்க மாட்டேன்.. அவ அப்படியே ஏதாவது செஞ்சு இருந்தாலும் அதுக்கும் ஏதாவது ஒரு நியாயமான காரணம் இருக்கும்னு நான் நம்புறேன்.. ஏன்னா அவளால தப்பா எதையும் செய்யறதுக்கு நினைச்சு கூட பார்க்க முடியாது.. நீங்க தயவு செஞ்சு தைரியமா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க மாமா.. அப்பதான் தேஜூ என்ன சங்கடத்தில் இருக்கான்னு எனக்கு தெரியும்.. நானும் அவளை அந்த அருண் கிட்ட இருந்து மீட்டுட்டு வர முடியும்.. பாவம்.. என் தேஜூ அந்த ராட்சசன் கிட்ட மாட்டிகிட்டு என்ன கொடுமை எல்லாம் அனுபவிக்கிறாளோ..” என்றான் கோபத்தில் கையை இறுக்கிக் கொண்டு ராம்..
“மாப்பிள்ளை.. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. மறந்தும் கூட அந்த அருண் தேஜூவுக்கு எந்த கஷ்டமும் கொடுக்க மாட்டான்.. அவனே நினைச்சாலும் அவனால தேஜூவை கஷ்டப்படுத்த முடியாது..” அவர் சொன்னதை கேட்ட ராமுக்கோ வியப்பில் முகத்தில் ஈயாடவில்லை..
“என்ன சொல்றீங்க மாமா? அவ்வளவு நல்லவனா இருந்தா அவன் ஏன் தேஜூவை ஏமாத்தி கடத்திட்டு போகணும்?”
“சொல்றேன் மாப்பிள.. தேஜூவும் அவனும் சந்திக்கணுங்கறது விதி.. அதே விதி தான் தேஜூவை உங்களோட இணைச்சு வச்சது.. வாழ்க்கையில் நடக்கிற விசித்திரமான கடவுளோட விளையாட்டுகள்ல இதெல்லாமும் ஒண்ணு.. அந்த நாள் எனக்கு இன்னும் அப்படியே ஃப்ரெஷ்ஷா நேத்து நடந்தது போல நினைவில இருக்கு..” என்றவர் தேஜூவின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார்..
#################
2012… ஜூன் மாதம்..
கணினியின் முன் அமர்ந்து கொண்டிருந்தாள் தேஜு.. தன் பரீட்சை எண்ணை அதில் தட்டச்சு செய்து பதித்தவள் தன் தேர்வு முடிவுக்காக காத்திருந்தாள்.. ஐந்து நிமிடங்கள் ஏதோ ஐந்து யுகங்கள் போல் நீண்டு கொண்டிருப்பதாய் தோன்ற மிகவும் பதட்டத்தோடு நகத்தை கடித்துக் கொண்டு கணினியின் திரையிலிருந்து கண்ணை அகற்றாமல் பார்த்து அமர்ந்திருந்தாள் தேஜூ..
கணினியோ வட்டத்தை சுற்றி சுற்றி அவள் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்தது.. அவள் அருகில் அவளோடு அமர்ந்திருந்த அவள் தோழி மல்லியும் அவளோடு சேர்ந்து கணினியின் திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அப்போது திடீரென அவள் எடுத்த மதிப்பெண் பட்டியல் திரையில் வர உற்று ஒரு ஒரு பாடத்திலும் தான் வாங்கிய மதிப்பெண்களை பார்த்தவளுக்கு அப்படியே மகிழ்ச்சியில் கால்கள் தரையில் நிற்கவில்லை.. வேகமாக ஏதோ கணக்கிட்டவள் ” ஹே… 95% வாங்கி இருக்கேன்.. மேக்ஸ்ல சென்டம்.. அய்யோ மல்லி.. எனக்கு சந்தோஷம் தாங்கலடி..” என்று மல்லியை அணைத்து துள்ளி எழுந்தவள்.. கால் தரையில் நிற்காமல் குதித்துக் கொண்டே இருந்தாள்..
“சூப்பர்டி.. அனேகமா நீ தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்னு நினைக்கிறேன்.. அப்படியே என்னோட மார்க்கும் பாருடி..” என்று மல்லி சொல்ல அப்போதுதான் நினைவு வந்தவளாக “சாரிடி.. எக்ஸைட்மென்ட்ல உன்னை பத்தி மறந்தே போயிட்டேன்” என்று சொன்னவள் திரையில் அவள் எண்ணை புகுத்தி முடிவுக்கு காத்திருந்தாள்..
அதேபோலவே அவர்களை ஐந்து நிமிடம் பாடாய்படுத்திய கணினி அதன் பிறகு முடிவை ஒளிபரப்பியது.. மல்லியும் நன்றாக படிப்பவள் தான்.. அவளும் 87 சதவீதம் மதிப்பெண் வாங்கி இருந்தாள்..
சந்தோஷமாக அறைக்கு வெளியே வர அங்கே அழகப்பன் கையில் ஒரு இனிப்பு பெட்டியுடன் நின்று இருந்தார்..
“அப்பா… இது என்னப்பா..? கையில் ஸ்வீட் பாக்ஸோட நிக்கிறீங்க.. நான் இனிமே தானே ரிசல்ட்டே சொல்ல போறேன்..?” என்று அவள் சொல்ல “எப்படியும் நீ ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவேன்னு எனக்கு தெரியும்.. அதான் முன்னாடியே வாங்கி வச்சுட்டேன்.. என்ன 95யா 96ஆ எவ்ளோ பர்சன்ட் வாங்கினே..?” என்றவர் கேட்க.. அவளுக்கு பெருமையில் முகமெல்லாம் பூரித்து போனது..
“95% பா” என்றவள் அப்படியே ஓடி வந்து தன் தந்தையை அணைத்துக் கொண்டாள்..
அவள் தலையை ஆதுரமாக தடவிய அழகப்பன் “எனக்கு தெரியும் டா.. நீ எப்போவும் என்னை பெருமைப்படுத்துவேன்னு.. என் தலை குனியிற மாதிரி நீ எதுவுமே செய்ய மாட்டே..” என்றார் அவர் பெருமிதமாய்..
இப்போது அவள் அம்மா அகிலாவும் அங்கே வந்து சேர “இந்தாடி.. முதல்ல இதை சாப்பிடு” என்று தான் செய்த கேசரியை கொண்டு வந்து அவள் வாயில் அடைத்தார்..
“இது எப்ப பண்ணின?” என்று அவள் கேட்க “உங்க அப்பா எப்ப கடையில ஸ்வீட் வாங்க போனாரோ அப்பவே நான் இதை பண்ணிட்டேன்.. எனக்கும் தெரியும்.. என் பொண்ணு நிச்சயமா நல்ல மார்க் வாங்குவான்னு” என்றாள் அகிலா கண்களில் பெருமையுடன்..
“தேங்க்யூ மா” என்று அவளையும் அணைத்துக் கொண்டவளிடம் “அப்புறம்.. மல்லி எவ்வளவு வாங்கி இருக்கா?” என்று கேட்க “நான் 87% வாங்கி இருக்கேன் ஆன்ட்டி” என்று சொன்ன மல்லி “நாங்க ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போய் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் பாத்துட்டு வரோம்” என்று சொன்னாள்..
“ஓகே ஓகே.. போயிட்டு வாங்க.. அப்படியே மார்க் ஷீட்டும் வந்திருச்சுன்னா வாங்கிட்டு வந்துருமா” என்றார் அழகப்பன்..
“ஓகேப்பா” என்று சொன்னவள் தன் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு மல்லியும் அவள் மிதிவண்டியில் புறப்பட இருவரும் பள்ளியை நோக்கி சென்றார்கள்..
அங்கே தோழிகளோடு தன் மகிழ்ச்சியை பகிர்ந்தவள் தான் பள்ளியின் முதல் மாணவியாக வந்திருக்கிறோம் என்று அறிந்து ஆனந்தத்தில் திக்கு முக்காடி போனாள்.. அவள் ஆசிரியர்களும் பள்ளி முதல்வரும் அவளை பாராட்டு மழையில் நனைத்து விட்டனர்..
அதன் பிறகு வீட்டுக்கு வந்தவள்.. “அப்பா நான் சொன்ன மாதிரி எப்படியாவது அண்ணா யுனிவர்சிட்டில இன்ஜினியரிங் சேரணும்ப்பா.. சென்னை போயி அங்க தங்கி படிக்கிறேன் பா..” என்று சொல்ல “அதெல்லாம் சரி தான்மா.. நீ அப்ளிகேஷன் வாங்கி அப்ளை பண்ணு.. கிடைச்சதுன்னா சென்னை போய் படி” என்று சொன்னார் அவளுடைய அப்பா..
“ஓகேப்பா” என்று அந்த வேலைகளில் மும்முரமாக இறங்க அவருக்கோ அவளுக்கு சென்னையில் இடம் கிடைத்தால் தன் பெண்ணை பிரிய வேண்டி இருக்குமே என்று வருத்தமாக இருந்தது..
அதையே தன் மனைவி அகிலாவிடம் அவர் சொல்ல அகிலாவோ “எப்படி இருந்தாலும் ஒரு நாள் அவ இன்னொரு வீட்டுக்கு போக போறவ தான்.. இது அதுக்கான ஒத்திகைன்னு நினைச்சுக்கோங்க” என்று சாதாரணமாக சொன்னார்..
அவரும் தன் பிறந்த வீட்டை விட்டு வந்தவர் தானே… அதனால் அவருக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.. ஆனால் கண்ணுக்குள் வைத்து செல்லமாக வளர்த்த தந்தைக்கோ தன் பெண்ணை பிரியப்போவதை நினைத்து மனதிற்குள் ரணமாய் வலித்தது..
சொல்லியபடியே அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர ஒரு வாரத்தில் பொறியியல் படிப்பிற்கான ஆலோசனை கலந்துரையாடல் (கவுன்சிலிங்) தொடங்க .. அவளுக்கு அந்த வார இறுதியில் ஆலோசனை கலந்துரையாடல் சந்திப்புக்காய் (கவுன்சிலிங்) வர அழைப்பு வந்திருந்தது..
அதற்கு முந்தைய நாள் தந்தையுடன் அங்கு செல்ல அவள் கனவுகளோடு கிளம்ப அப்போது அவள் வீட்டு தொலைபேசி அலறவும் அழகப்பனுக்கு ஏதோ அபசகுனமாய் அது ஒலிப்பது போல் தோன்றியது.. வாசல் வரை சென்ற தேஜூ மீண்டும் உள்ளே வந்து அந்த அழைப்பை ஏற்க எதிர்ப்பக்கம் சொன்ன செய்தியை கேட்டவள் அப்படியே உறைந்து நின்றாள்..
அவள் தன் மேற்படிப்பை பற்றி பல கனவுகளோடு கிளம்பினாலும் அவள் விதியோ அவளுக்கு வேறு மாதிரியான திட்டம் தீட்டி வைத்திருந்தது…
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”