அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 23🔥🔥

5
(11)

பரீட்சை – 23

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

இடியாய் இறங்கிய 

செய்தி

இதயத்தை இரண்டாய் 

பிளக்க

 

நெஞ்சை உலுக்கிய 

நிகழ்வை

நம்ப மனம் 

மறுக்க

 

நிலை குலைந்து 

போகாமல்

நானே என்னை 

மீட்டுக்கொண்டு

 

தந்தையவர் 

துயரத்திற்கு

தலை கோதி 

தைரியம் சொல்லி

 

அத்தை பெண் 

அவள் நிலையை

அவசரமாய் 

உணர செய்து

 

அந்த உறவை 

தாங்க வேண்டி

அப்போதே 

தோள் கொடுக்க

 

அதீதமான வலிமை 

கொண்டு

அவள் இருக்கும் 

இடம் போவதற்காய்

 

தெரிவை அவளின்

தீரா துயரம் 

பெரிதென

புரிய வைத்தேன் 

பெற்றவர்க்கு…

 

கரைந்து துடித்த

இதயத்தை 

கல்லாக்கி 

கண்களுக்குள் 

கண்ணீரை கடத்தி

நடித்துவிட்டேன்..

நிஜம் மறைத்து!!

 

##############

 

இடி விழுந்தது..!!

 

 

தேஜூ தொலைபேசியின் அழைப்பை ஏற்க எதிர்ப்பக்கம் சொன்ன செய்தியை கேட்டவள் அப்படியே உறைந்து நின்றாள்..

 

அவளைப் பார்த்த அழகப்பன் “என்னம்மா ஆச்சு தேஜு?” என்று பதட்டமாக கேட்க “அப்பா.. அத்தை… அத்தை..” என்று அவள் ஏதோ கூற முனைய வார்த்தைகள் வராமல் தொண்டையிலேயே சிக்கிக் கொண்டது..

 

” அத்தைக்கு என்ன ஆச்சு?” என்றவர் அவள் கையில் இருந்து தொலைபேசியை வாங்கி “ஹலோ..” எனவும் அந்த பக்கம் அவருடைய தங்கை மகள் நிவேதா “மாமா.. மாமா.. அ…அம்மா.. அ…அப்பா ரெண்டு பேரும் போன வண்டி… வண்டி… ஆக்…ஆக்சிடென்ட் ஆகி ரெண்டு பே..பேரும்… என்னை.. அனாதையா விட்டுட்டு போ…யிட்டாங்க மா…மா..” ஓவென அடக்கமாட்டாமல் அழுதாள் அவள்..

 

 அழகப்பன் அப்படியே இடிந்து நின்றார்… அவர் அருகில் வந்த அகிலா “என்னங்க.. என்ன ஆச்சு?” என்று கேட்க “அகி..லா.. நம்ம செ…செண்பகமும் மா..மாப்பிள்ளையும் போன வண்டி ஆக்சிடென்ட் ஆகி ரெண்டு பேரும் நம்மை விட்டு போயிட்டாங்களாம்..” 

 

 தலையில் அடித்துக் கொண்டு அப்படியே தரையில் அமர்ந்து அவர் அழ அகிலாவோ அவர் சொன்ன செய்தியை நம்ப முடியாமல் பார்த்தார் அவரை.. “என்னங்க சொல்றீங்க..!?” என்றபடியே அவரும் அழ ஆரம்பித்தார்..

 

அதிர்ச்சியிலிருந்து மீண்டு கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் கொட்டிக் கொண்டிருக்க சிறிது சுதாரித்த தேஜு.. தொலைபேசியை எடுத்து, “நிவி.. நீ இப்ப எங்க இருக்க? உனக்கு யார் சொன்னாங்க இதை பத்தி?” என்று கேட்டாள்..

 

“அக்..அக்…அக்கா.. நான் வீட்லதான் இருக்கேன் கா.. ஆக்சிடென்ட் ஆன இடத்திலிருந்து அப்பா மொபைல் ஃபோனில இருந்து என…எனக்கு ஃபோன் வந்தது.. இங்க இருக்கற கவர்மெண்ட் ஹாஸ்பிடல்க்கு ரெண்டு பேரையும் எ..எடுத்துட்டு போயிருக்காங்களாம்… எ..எனக்கு என்ன செய்யறதுன்னே தெ…தெரியலைக்கா.. ரொம்ப ப.. பயமா இருக்கு.. ” சொல்லி முடிப்பதற்குள் உயிர் துடித்து மறுபடியும் கதறி கதறி அழுதாள் நிவேதா..

 

“சரி.. நீ இப்ப எங்கயும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி போக வேண்டாம்.. நீ அங்கேயே இரு.. நாங்க எல்லாரும் உடனே கிளம்பி அங்க வர்றோம்.. நாங்க வர்ற வரைக்கும் நீ வீட்டிலேயே இரு..”

 

 தொலைபேசி இணைப்பை துண்டித்தவள் தன் தந்தையிடம் சென்று அவர் தலையை மெதுவாய் வருடி “அப்பா.. எனக்கு புரியுது பா.. உங்க உயிரையே உரிச்சி எடுக்கற மாதிரி கஷ்டமா தான் இருக்கும் இப்ப.. ஆனா இப்ப நம்ம கஷ்டத்தை விட அந்த சின்ன பொண்ணு நிவேதாவோட கஷ்டத்தை பாருங்கப்பா.. அந்த குழந்தைக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் இல்லப்பா அங்க.. பாவம் கதறி கதறி அழுதுகிட்டு இருக்கா… முதல்ல அங்க போய் அவளுக்கு துணையா இருக்கணும்பா.. வாங்கப்பா கிளம்பலாம்..” அவள் சொல்ல சொல்ல அவருக்கும் நிவேதாவின் நிலை புரிந்தது..

 

“நீ சொல்றது சரிதான்மா.. வாம்மா  கிளம்பலாம்..” 

 

 கண்ணீரை துடைத்துக் கொண்டு சொன்னவர் அங்கிருந்து உடனே ஒரு வாடகை கார் எடுத்துக் கொண்டு அவர்களோடு கிளம்பினார்.. இரண்டு மணி நேரத்தில் தேஜுவின் அத்தையின் வீட்டிற்கு சென்றவர்கள் உள்ளே நுழைந்தவுடன் நிவேதா ஓடி வந்து தேஜுவை கட்டிக் கொண்டாள்..

 

“அக்கா.. அக்கா.. நான் என்னக்கா பண்ணுவேன்? அம்மா அப்பா இப்படி பண்ணிட்டாங்களே அக்கா.. என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாங்களே அக்கா..” 

 

அவள் கதறி அழ “நிவி.. இப்படியெல்லாம் நீ பேசக்கூடாது.. நாங்க எல்லாம் இருக்கும்போது நீ அனாதை ஆகமாட்ட..” அழுது கொண்டே அவள் கன்னம் பிடித்து ஆறுதல் சொன்னாள் தேஜூ..

 

“சரி.. இப்ப நம்ம இந்த கார்லயே கிளம்பி ஹாஸ்பிடல் போலாம்பா நிவியையும் கூட்டிக்கிட்டு..” 

 

 இவர்கள் வந்த காரியிலேயே ஏறி நிவேதாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்கள்..

 

அங்கே செய்ய வேண்டியதை செய்து தேஜூவின் அத்தை மாமாவின் உடலை பெற்று வீட்டுக்கு எடுத்து வந்து காரியம் அனைத்தையும் முடித்தார்கள்.. இரண்டே நாளில் அவர்கள் எல்லோருடைய வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டி போட்டு இருந்தது..விதி..!! வாழ்க்கை நாம் எதிர்பார்க்காத வேளையில் என்னென்ன விபரீத விளையாட்டுகளை எல்லாம் நிகழ்த்தி விடுகிறது..!!

 

நிவேதா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் கொடைக்கானலில்..

 

அவளைப் பற்றி யோசித்து அழகப்பன் தேஜுவிடம் வந்து ” அம்மா தேஜு…நிவி பத்தி கொஞ்சம் பேசணும்மா..” என்று கூற அவளும் தன் தந்தையோடு சென்றாள்..

 

“சொல்லுங்கப்பா..” 

 

 “அம்மா இந்த நிவேதா இப்பதான் டென்த் படிச்சிட்டு இருக்கா.. இந்த நேரத்துல மதுரையில பாதி வருஷத்துல எந்த ஸ்கூல்லயும் அவளுக்கு சீட்டு கொடுக்க மாட்டாங்க.. அதனால அவளுக்கு துணையா நம்ம குடும்பம் இங்கேயே இருக்க வேண்டி இருக்கும்மா.. அவ பிளஸ் டூ முடிக்கிற வரைக்கும் இங்க இருந்துட்டு அதுக்கப்புறம் கிளம்பி அவளையும் கூட்டிகிட்டு..நம்ம வீட்டுக்கு போலாம்னு தோணுது.. ஆனா உன்னோட இன்ஜினியரிங் கனவு நனவாகுமானு எனக்கு தெரியலம்மா.. உன் தங்கைக்காக நீ இந்த தியாகத்தை செய்வியாம்மா ? ” அழகப்பன் கண்கலங்க கேட்டார்..

 

“அப்பா.. நானே உங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சேன்.. இங்க பக்கத்துல ஒரு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இருக்குப்பா.. இப்போதைக்கு நான் அங்க பிஎஸ்சி மேக்ஸ் எடுத்து  3 வருஷம் படிக்கிறேன்.. அதுக்கப்புறம் மேல எம்பிஏ இல்லனா எம். எஸ். சி.. படிச்சுக்கறேன்பா.. ஒன்னும் பிராப்ளம் இல்ல” 

 

“என்னோட எண்ணத்தை புரிஞ்சுகிட்டு நான் கேக்குறதுக்கு முன்னாலயே நீ இப்படி ஒரு வழி சொல்ற.. உன்னை மாதிரி பொண்ணு கிடைக்கறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்மா.. நீ எங்களுக்கு கிடைச்ச தேவதைம்மா..” என்று சொல்லி அவள் தலையை வாஞ்சையுடன் தடவி கொடுத்தார்..

 

“அப்பா.. இப்ப என்னோட கனவை விட நிவிக்கு நம்மளோட அன்பு கிடைக்கிறதுதான் ரொம்ப முக்கியம்.. அவ வாழ்க்கை ஏற்கனவே ரொம்ப கஷ்டத்துல இருக்கு.. இந்த இழப்பிலிருந்து அவ எப்படி வெளியில வரப் போறான்னே தெரியல.. அவளை இதனால ஏற்பட்ட மன உளைச்சல்லருந்து வெளியில் கூட்டிட்டு வர்றதுதான் நம்மளோட முதல் வேலையா இருக்கணும் பா.. இப்ப நீங்க எனக்கு அப்பா அம்மாவா இருக்கிறதை விட அவளுக்கு அப்பா அம்மாவா இருந்து அவளை வழி நடத்துறது தான்ப்பா ரொம்ப முக்கியம்..” ஒரு பொறுப்பான சகோதரியை போல் பேசினாள் அவள்..

 

“தன் சொந்த தங்கையை பத்தியை இந்த காலத்துல யாரும் இப்படி எல்லாம் யோசிக்க மாட்டாங்கம்மா.. ஆனா உன் அத்தை பொண்ணை பத்தி நீ இவ்வளவு யோசிக்கிறே.. அவளுக்காக உன்னோட கனவை தியாகம் பண்ணிட்டு கிடைச்சதை ஏத்துக்கிட்டு அதுல சந்தோஷப்படுறேன்னு சொல்றயே..  எங்களுக்கு மட்டும் இல்ல இன்னிய நிலைமைக்கு நிவேதாவுக்கும் கிடைச்ச பொக்கிஷம் நீ..!!” என்றார் அழகப்பன்..

 

“சரிப்பா.. சாப்பிட வாங்க..” என்று அவள் கூப்பிட “இல்லமா.. எனக்கு சாப்பாடு சாப்பிடணும் போல இல்ல.. நெஞ்சிலே ஏதோ பாரமா அழுத்துற மாதிரி இருக்கு..” என்றார் அழகப்பன் நெஞ்சில் கை வைத்தபடி..

 

“அப்பா..  நம்மளுக்கு சாப்பிட தோணலனாலும் நிவேதாக்காக நம்ம சாப்பிட்டு தான்பா ஆகணும்.. நம்மளே சாப்பிட முடியலன்னு சொன்னா அவ எப்படிப்பா சாப்பிடுவா? அவளை சாப்பிட வைக்கிறதுக்காக அவ கூட சேர்ந்து நம்மளும் சாப்பிடலாம் பா..” 

 

  அவருக்கு தன் மகள் தன் தங்கைக்கு அன்னையாக மாறிவிட்டாள் என்று அவள் பேச்சிலேயே புரிந்தது..

 

“சரிமா.. வா சாப்பிடலாம்..” என்று சொன்னவர் நிவேதாவின் அறைக்கு போய் அழுது கொண்டிருந்த அவளை சமாதானப்படுத்தி சாப்பிட அழைத்துக் கொண்டு வந்தார்.. அகிலா ஒரு தட்டில் தானே உணவை கலந்து நிவேதாவுக்கு ஊட்டினார்..

 

இரண்டு வாய் சாப்பிடுவதற்குள் மறுபடியும் அவளுக்கு அழுகை பொங்கி கொண்டு வர தேஜுவை கட்டிக்கொண்டு கதறி அழுதாள் நிவேதா.. 

 

அப்போது அவள் தலை கோதி கன்னத்தை ஏந்திய அகிலா “நிவி.. என்ன இருந்தாலும் உங்க அம்மா அப்பாவோட எடத்த யாரும் ஈடு செய்ய முடியாது.. எனக்கு தெரியும்.. ஆனா இனிமே நானும் உங்க மாமாவும் தான் உன்னோட அம்மா.. அப்பா.. இனிமே எங்களை அப்படியே கூப்பிடு.. தேஜூ உன்னோட சொந்த அக்கா.. சரியா? இனிமே யாரு கேட்டாலும் எங்களை அம்மா அப்பான்னும் தேஜூவை உன் சொந்த அக்கான்னும் நீ சொல்லு..” என்றார்..

 

அதைக் கேட்ட நிவேதா வார்த்தை எதுவுமே வராமல் “அம்மா.. அம்மா.. அம்மா..” என்று மறுபடியும் மறுபடியும் சொல்லி அகிலாவை கட்டிக்கொண்டு அழுதாள்..

 

அகிலாவும் தேஜூவும் சேர்ந்து நிவேதாவை சமாதானப்படுத்தி ஒருவழியாக சாப்பிட வைத்தனர்..

 

அதன் பிறகு அந்த பத்து நாட்களில் தேஜுவின் அத்தை மாமாவின் கடைசி காரியங்கள் எல்லாம் முடிந்து விட நிவேதாவும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள்..

 

தேஜு தான் கல்லூரியில் சேர வேண்டும் என்று யோசித்து தன் தந்தையோடு அருகே இருந்த ********** கலை கல்லூரியில் முன்னேயே வாங்கி வைத்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொண்டு போய் கொடுத்து அந்த கல்லூரியில் சேர.. அவள் மதிப்பெண்களைப் பார்த்த கல்லூரி முதல்வர் உடனேயே அந்த கல்லூரியில் இடம் கொடுத்து விட்டார்..

 

அடுத்த வாரத்தில் இருந்து கல்லூரிக்கு போக வேண்டி இருந்தது.. என்னதான் தான் கனவு கண்டது போல் பொறியியல் கல்லூரியில் சேர முடியவில்லை என்றாலும் கல்லூரிக்கு செல்ல போகிறோம் என்ற ஒரு உற்சாகம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது..

 

முதல் நாள் கல்லூரிக்கு செல்லவும் அங்கே சில மூன்றாம் ஆண்டு மாணவர்கள் புதிதாய் வந்த மாணவர்களை ராகிங் செய்து கொண்டிருக்க இவளுக்கு கொஞ்சம் நடுக்கம் எடுத்தது..

 

இவள் அவர்கள் கண்ணில் படாமல் மெதுவாக நடந்து சென்று விட வேண்டும் என்று  அடி மேல் அடி வைத்து மெதுவாக நழுவ சரியாக அப்போது அங்கு  ராகிங் செய்து கொண்டு இருந்த கும்பல் நடுவில் அமர்ந்து கொண்டு இருந்த ஒரு பெண் ” ஏய்.. ரெட் சுடிதார்.. இங்க வா..” என்று கூப்பிட்டாள்..

 

அப்படியே தன்னுடைய உடையை குனிந்து பார்த்தவள் தான் சிவப்பு நிற சுடிதார் அணிந்து கொண்டிருக்கிறோம் என்று தெளிந்து, “ஐயோ கடவுளே.. மாட்டிக்கிட்டோமே..” கண்ணை மூடிக்கொண்டு சொன்னவள் தலையை குனிந்து கொண்டே தன்னை அழைத்த பெண் முன்னால் போய் நின்றாள்.. 

 

அங்கே சிறு தூரத்தில் இன்னொரு பெண் – அவளும் முதலாம் ஆண்டு படிக்க வந்தவள் போல் இருந்தாள் – மிதிவண்டி இல்லாமலேயே காற்றில் மிதிவண்டி ஓட்டிக் கொண்டிருந்தாள் அவள்.. அதைப் பார்த்த தேஜூ வந்த சிரிப்பை  அடக்க முடியாமல் சிரித்து விட அவள் சிரித்தது அந்த கண்ணுக்கு தெரியாத மிதிவண்டி ஓட்டும் பெண்ணையும் அந்த ராகிங் செய்து கொண்டிருந்த பெண்ணையும் கோபப்படுத்தியது..

 

“அவளை பாத்து சிரிக்கிறியா நீ..!? உன் பேர் என்ன..?” என்று கேட்டாள் அந்த பெண்.. 

 

“என் பேரு தேஜஸ்வினி..” என தேஜூ சொல்ல “பேர்லாம் நல்லா தான் இருக்கு.. தே..ஜ..ஸ்..வினி.. ” என்று அவள் பெயரை சொல்லி பார்த்தவள் “உன்னை எப்படி கூப்பிடுவாங்க உங்க வீட்ல?” என்று கேட்க “தேஜுன்னு கூப்பிடுவாங்க” என்று மெதுவாக சொன்னாள்..

 

“தேஜு… டேய்.. மச்சான்… தேஜூன்னா என்னடா அர்த்தம்?” என்று அந்த பெண் கேட்க அங்கே பக்கத்தில் இருந்து இன்னொரு இளைஞன் “ஃபாஸ்ட்ன்னு அர்த்தம்னு நினைக்கிறேன்” என்று சொன்னான்..

 

“ஓ….அப்படின்னா நீ எல்லாத்தையும் ஃபாஸ்ட்டா செய்வியா? ஆனா நான் கூப்பிட்டப்புறம் நடந்து வர்றதுக்கு உனக்கு ஒரு மணி நேரம் ஆச்சு.. சரி.. அதை விடு.. இப்ப நான் சொல்ற வேலைய ஃபாஸ்டா செய்ற.. சரியா..?” என்றாள் அந்த பெண்..

 

“என்ன செய்யணும்..?” என்று பயந்து கொண்டே தேஜூ கேட்க “டேய்.. அதை எடுங்கடா..” என்றாள் அந்த பெண் தன் நண்பர்களை நோக்கி..

 

ஒரு சிவப்பு நிற ரோஜா மலரை அவர்கள் எடுத்து அவள் கையில் கொடுக்க “இந்தா.. இதை புடி..” என்று சொல்லவும் ஒன்றும் புரியாமல் அவளையே விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு..

 

“இப்ப நீ என்ன பண்ற? இந்த பூவை எடுத்துட்டு போயி அதோ பாரு அந்த மரத்துக்கு பின்னாடி ஸ்டைலா புக் படிச்சிட்டு நின்னுட்டு இருக்கான் இல்ல? அவன் கிட்ட போயி “ஐ லவ் யூ” ன்னு சொல்லி இந்த பூவை குடுத்துட்டு வந்துரு.. ச்சு.. சீக்கிரம் வேகமா போம்மா செல்லக்குட்டி.. ” 

 

 அந்த பெண் சொல்ல தேஜுக்கு அப்படியே பாறாங்கல்லை விழுங்கியது போல் தொண்டையை அடைத்தது..

 

“என்னது..? எனக்கு தெரியாத யார்கிட்டயோ போய் ஐ லவ் யூ சொல்றதா? ஐயோ எனக்கு மயக்கமா வர மாதிரி இருக்கே..” என்று நினைத்தவள் அந்தப் பெண் யாரிடம் தன்னை பூவை கொடுக்க சொன்னாள் என்று திரும்பி பார்த்தாள்..

 

அங்கே ஆறடி உயரத்தில் எதிர்ப்புறம் திரும்பிக்கொண்டு ஏதோ படிப்பதற்கே பிறந்தவன் போல ஒருவன் புத்தகத்தை படித்துக் கொண்டு நின்றிருந்தான்..

 

“எப்படியும் இவங்க சொன்னதை செய்யலைன்னா என்னை உண்டு இல்லைன்னு பண்ணிருவாங்க.. இவங்க எல்லார்கிட்டயும் அடி வாங்குறதை விட அவன் ஒருத்தன் கிட்ட வாங்கிக்கலாம்.. ஆனா அவன் கோபத்தில அறைஞ்சுட்டான்னா கூட பரவால்ல.. நான் இப்படி சொல்ல போய் என்கிட்ட ஏதாவது தப்பா நடக்க முயற்சி பண்ணான்னா ஐயோ கடவுளே..!! நான் என்ன பண்ணுவேன்? நீதான் என்னை காப்பாத்தணும்..” 

 

 யோசித்துக் கொண்டே “வேறு வழி இன்றி மெதுவாக அந்த இளைஞனின் புறம் நடந்து சென்றாள்..

 

தேஜூ அவன் முன்னே போய் நிற்பதை பார்த்த அந்தப் பெண் வாயை மூடிக்கொண்டு சிரித்தவள் “டேய் மச்சான்.. இன்னைக்கு அவளுக்கு ரெண்டு கன்னமும் நல்லா சிவக்க போகுதுடா.. அந்த ஒராங்குட்டான் அருண் எப்படியும் இவ சொல்றதை கேட்டு அவளை கன்னாபின்னான்னு அடிச்சு போட போறான்..” என்று சொல்லிக் கொண்டே இருந்தவள் கன்னத்தில் ஐந்து விரலும் பதியுமாறு ஒரு அறை விழுந்திருந்தது…

 

எதிரே தேஜூவை யாரிடம் காதல் சொல்ல சொல்லி இருந்தாளோ அந்த இளைஞன் அருண் நின்றிருந்தான் ருத்ரமூர்த்தியாய்…!!

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!