13. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(13)

வரம் – 13

எத்தனையோ மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்த வைரம் பதிக்கப்பட்ட அந்த கிரீடத்தை அலட்சியமாகத் தன் கரத்தில் வைத்திருந்தான் அவன்.

அவன் முகம் முழுவதும் சீற்றத்தில் இறுகிப் போய் இருந்தது.

எவ்வளவு சிரமப்பட்டு இந்த வைரத்தை திருடி வந்தும் இதை எங்கும் விற்க முடியாதுள்ளதே என எண்ணி நொந்து போயிருந்தான் அவன்.

ஷர்வாதிகரன் வைரம் தொலைந்ததைக் கண்டுகொண்ட அடுத்த நிமிடமே காவல்துறை அதிகாரி தொடக்கம் சிபிஐ வரை மற்றும் வைர வியாபாரிகள் என அனைவரிடமும் தொடர்பு கொண்டு இரகசியமான முறையில் டீல் பேசியிருப்பதை அறிந்து வைத்திருந்தவனுக்கு யாரிடமாவது இதைக் கொண்டு சென்று விற்க முயற்சி செய்தால் எங்கே தான் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்ற அச்சம் உள்ளுக்குள் வியாபிக்கத் தொடங்கி இருந்தது.

நாடு விட்டு வேறு நாட்டுக்கு இதை எடுத்துச் செல்லும் அளவுக்கு நிச்சயம் அவனிடம் தைரியமோ பண பலமோ இல்லை.

மாட மாளிகையிலோ பண மேட்டிலோ வாழவில்லை அவன்.

தைரியம் இல்லை என்பதை விட ஏதாவது ஒரு சோதனையில் சிக்கிவிட்டால் பின் ஷர்வாதிகரனின் கரத்தில் சின்னா பின்னம் ஆகி விடுவோமோ என்ற அச்சம் அவனுக்குள் அதீதமாய் இருந்தது.

அவனுடைய பணபலம் பற்றி அறிந்து வைத்திருந்தவன் அடக்கி வாசித்தான்.
ரெட் ரிபெல் வைரத்தின் சொந்தக்காரன் ஷர்வாதான் என்பது பல கோடீஸ்வரர்கள் மற்றும் செல்வந்தர்கள் உட்பட இந்திய அரசாங்கமே அறிந்த ஒன்று.

இவர்களுடைய கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவி விட்டு எப்படி இதனை நாடு கடத்துவது என தவித்துப் போயிருந்தான் அவன்.

தங்கமாக இருந்திருந்தால் உருக்கி வேறு வடிவம் செய்தாவது வித்திருக்கலாம்..
ஆனால் உலகிலேயே மிகப் பெரும் பழமை வாய்ந்த பெறுமதி மிக்க இந்த வைரத்தை எப்படி பணமாக மாற்றி எடுப்பது..?

அத்தனை கோடிகளை எப்படித் தன் வசம் வைத்திருப்பது என்பது அந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த வாலிபனுக்குப் புரியாமல் போனதுதான் துயரமே.

வெறுப்போடு தன் கரத்திலிருந்து கிரீடத்தை மீண்டும் ஆடைகள் நிறைந்த அந்தப் பெட்டிக்குள் மறைத்து வைத்துவிட்டு நிமிர்ந்தவன் வாயிலில் வந்து நின்ற தன் மனைவியைக் கண்டு திகைத்தான்.

“யோவ்.. என்னத்த மறைச்சு வைக்கிற..? மறுபடியும் அந்த கஞ்சாவ எடுத்துட்டு வந்துட்டியா..?” என கோபத்தில் அவனுடைய மனைவி கத்த,

“செம காண்டுல இருக்கேன்.. ஒழுங்கா போய் சோத்தப் போடு.. என் வாயைக் கிளறாத…” என்றான் அவன் அதட்டலாக.

அவளோ அவனைத் தாண்டி வேகமாக சென்றவள்,

“ஆமா நீ உழைச்சுட்டு வந்து துட்டா அள்ளிக் கொட்டுற பாரு.. த்தூ உதவாக்கர… உன்ன கட்டிகிட்டு வந்து படாத பாடு பட்டுகிட்டு இருக்கேன் ச்சை…”

“அடியேய் வாய மூடுடி… விட்டா ஓவரா பேசிக்கிட்டே போற…”

“ஆமாய்யா நான் இப்படித்தான் பேசுவேன்.. உருப்படியா ஏதாவது வேலைக்குப் போறியா நீ…? இப்போ நீயும் நானும் மட்டும்தான்.. நமக்குன்னு ஒரு குழந்தை உருவாகிச்சின்னா அதை எப்படி பார்த்துக்கிறது…? ஒருவேளை சோத்துக்கே சிங்கி அடிக்க வேண்டியதா இருக்கு.. எங்க ஆச்சி அப்பவே சொன்னாங்க உன்னை கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு நான்தான் கேட்காம உன்னோட பசப்பு வார்த்தைகள நம்பி ஏமாந்து தொலைச்சிட்டேன்…”

“அடியே பொண்டாட்டி ஓவரா பேசாதடி… இன்னும் கொஞ்ச நாள்ல நாம ஒஹோன்னு வாழப் போறோம்..”

“என் வாயில ஏதாவது நல்லா வந்துரும்… போதும் நிறுத்து… ஒன்னர மாசமா எந்த வேலைக்குப் போகாம இதைத்தான் சொல்லிக்கிட்டு இருக்க.. எப்பவுமே நான் இப்படி இருக்க மாட்டேன் மாமா.. எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு எங்க ஆச்சி வீட்டுக்கு கிளம்பிடுவேன் பாத்துக்கோ…” என கோபமாகக் கூறியவாறு அவள் அந்த வீட்டுக்குள் இருந்த சமையல் அறைக்குள் நுழைய அவளின் பின்னாலேயே சென்றவன் சட்டென அவளுடைய இடையில் தன் கரத்தை அழுத்தமாகப் பதித்து தன்னை நோக்கி அவளை இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது வந்து வேகமாக மோதியவள் அவனை முறைத்துப் பார்க்க,

“என்னடி என்ன விட்டுட்டுப் போயிருவியா..?” எனக் கேட்டவாறே முறைத்துப் பார்க்கும் அவளுடைய நயனங்களின் மீது அழுத்தமாக முத்தத்தைப் பதித்தவன் கோபமாக பேச முயன்ற அவளுடைய இதழ்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தான்.

நீண்ட நெடிய முத்தத்தை அவளுடைய இதழ்களுக்கு வழங்கிவிட்டு அவன் நிமிர்ந்த போது அவளுடைய விழிகளோ தானாக மூடிக்கொண்டன.

இவ்வளவு நேரமும் கோபத்தில் வார்த்தைகளை விட்டுக் கொண்டிருந்த அவளுடைய இதழ்கள் லேசாக நடுங்கத் தொடங்க தன்னுடைய கரத்தை உயர்த்தி அவளுடைய உதடுகளை அழுத்திப் பிடித்தவன்,

“இப்போ என்ன செலவு பண்றதுக்கு பணம் வேணும் அவ்வளவு தானே..? நான் கொண்டு வரேன்…” என்றவன் அவள் விழிகளைத் திறந்ததும் அவளுடைய இடையில் அழுத்தமாக கிள்ளிவிட்டு நகர்ந்து கொள்ள அவனைப் பார்த்து சலிப்பாகத் தலையசைத்தாலும் கூட அவளுடைய கன்னங்கள் சிவந்துதான் போயிருந்தன.

“இதோ பாருய்யா மத்த நகைகளை திருப்பலைன்னா கூட பரவால்ல என்னோட தாலியும் அடகுல இருக்கு…‌ அதையாவது திருப்பிக் கொடு… நாற்பதாயிரம் ரூபா கடன் இருக்கு… அதையும் கொடுக்கணும்… முதல்ல நீ வேலைக்குப் போ…. இல்லன்னா என்னையாவது வேலைக்குப் போக விடு…” என சற்றே நலிந்த குரலில் கூறியவள் சமைப்பதற்கு தயாராகி விட அவளுடைய தலையின் மீது தன் கரத்தைப் பதித்து அழுத்தமாக வருடி விட்டவன் வேகமாக வெளியே வந்து ஆடைகள் நிறைந்த பெட்டியில் மறைத்து வைத்த வைரம் பதித்த கிரீடத்தை பழைய சாக்கு மூட்டை ஒன்றினுள் மறைத்து வைத்துவிட்டு டி-ஷர்ட் ஒன்றை எடுத்து தன் உடலில் மாட்டியவாறு வெளியே செல்லத் தொடங்கினான்.

காலையிலிருந்து மாலை வரை அவன் செய்து கொண்டிருக்கும் ஒரே வேலை ஷர்வாதிகரனை வேவு பார்ப்பது ஒன்றே.

இப்படி எல்லாம் அவனை வேவு பார்த்து அவன் அறிந்து கொண்ட ஒரே ஒரு விடயம் ஷர்வாவின் மிகப்பெரிய எதிரி மோஹஸ்திரா.

ஷர்வாவிற்கு எதிரியாக இருக்கும் மோஹஸ்திரா நிச்சயமாக இந்த வைரத்தை விற்பதில் தனக்கு உதவக் கூடுமோ என்ற நம்பிக்கை அவனுக்குள் துளிர் விடத் தொடங்கி இருந்தது.

அதிலும் “நீ தலைல போடும் கிரீடத்த என்னோட காலுக்கு கீழே போட்டு மிதிச்சுக் காட்டுறேன்…” என அன்று அத்தனை பேரின் முன்பும் அவள் சவால் விட்ட வார்த்தைகள் இவனுக்கு அதீத நம்பிக்கையைக் கொடுக்க வைரத்தை இவளுக்கே விற்று விடலாமா அல்லது மறைமுகமாக இவளிடம் தன் அடையாளம் எதுவும் கூறாமல் தொடர்பு கொண்டு பேசலாமா என எண்ணத் தொடங்கினான் அந்த மறைமுகத் திருடன்.

வேறு வழியில்லை திருடிய இந்த வைரத்திற்கு பாதுகாப்பு வேலை பார்ப்பதை விட கிடைத்த பணத்துக்கு இதை விற்றுவிட்டு நிம்மதியாக இருப்பதே மேல் என எண்ணிக் கொண்டவன் தன்னுடைய அடையாளத்தை மறைத்து எப்படி மோஹஸ்திராவுடன் தொடர்பு கொள்வது என சிந்திக்கத் தொடங்கினான்.

சிந்தித்தவாறு அவனுடைய ஏரியாவை விட்டு வெளியே வந்தவன் ஊருக்கு சற்று ஒதுக்குப்புறமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார் பைக்கை எடுத்து ஸ்டார்ட் செய்தவாறு சிறிய துணி ஒன்றை எடுத்து தன்னுடைய முகத்தை மறைத்துக் கட்டினான்.

அடுத்த நொடி அவனுடைய கரங்களில் அந்த பைக் சீறிப் பாய்ந்தது.

ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அமைதியாக சென்றவன் ஆட்கள் குறைவாக நடமாடும் பகுதிக்குச் சென்றதும் தன்னுடைய வேகத்தைக் குறைத்துக் கொண்டான்.

அடுத்த நொடியே அவனுடைய விழிகள் சுற்றிலும் வேகமாக ஆராயத் தொடங்கின.

தூரத்தில் ஒரு நடுத்தர வயதைச் சேர்ந்த பெண்மணி தனியாக நடந்து செல்வதைக் கண்டதும் தன்னுடைய பைக்கை வேகமாக முறுக்கியவன் அவருக்கு குறுக்காக பைக்கை நிறுத்தி அவருடைய கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இழுத்துப் பறிக்க அவரோ பதறி அவனுடைய கையைப் பிடித்து தடுத்து தன்னுடைய தங்கச் சங்கிலியை பாதுகாக்க முயற்சி செய்ய,

“ஏய் விடுடி…” எனக் கத்தியவன் அவருடைய முடியைக் கொத்தாகப் பிடித்து அவரை தரையில் விழுத்த முயன்ற நேரம் அவரோ மற்றைய கரத்தால் அவன் முகத்தில் கட்டிய துணியை இழுத்து விட சட்டென அமைதியானான் அவன்.

அவனுடைய இழுபறி போராட்டம் நின்று போனது.

“தப்பு பண்ணிட்டியே… என்னோட முகத்தை நீ பார்க்காம இருந்திருந்தா உன்னோட சங்கலியோட போயிருப்பேன்… என்னோட முகத்தை பார்த்து நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட…” என அழுத்தமாகக் கூறியவன் நிதானமாக தன்னுடைய பாக்கெட்டில் கைவிட்டு சிறிய கத்தி ஒன்றை வெளியே எடுக்க அந்த பெண்மணிக்கோ உள்ளம் பதறத் தொடங்கியது.

சட்டென தன் சங்கிலியை அவரே அறுத்து,

“ப்ளீஸ் என்ன எதுவும் பண்ணிடாத… விட்று… உனக்கு இது தானே வேணும் கொண்டு போ…. என்ன விட்று…” என தரையில் விழுந்தவாறு பதற அவனோ அவருடைய பதற்றத்தை சிறிதும் கண்டு கொள்ளாது கீழே விழுந்தவரின் கழுத்தை சட்டென கத்தியால் கீறிவிட நரம்பு அறுந்து உதிரம் கொட்டத் தொடங்கியது.

அடுத்த கணமே அந்தச் சங்கிலியை எடுத்துக்கொண்டு வேகமாக செல்லத் திரும்பியவன் சட்டென அவருடைய காதுகளில் இருந்த பெரிய ஜிமிக்கியைக் கண்டதும் நிதானித்து அவருடைய இரண்டு காதுகளையும் வேகமாக அறுத்து தோடுகளோடு எடுத்துக் கொண்டவன் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு செல்லத் தொடங்கினான்.

மீண்டும் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் தான் அணிந்திருந்த கையுறைகள் தொடக்கம் தன்னுடைய பைக் வரை ஒரு ஒதுக்குப்புறத்தில் நிறுத்தி பெறாறோலை ஊற்றியவன் நெருப்பை வைத்து எரித்து விட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஓடத் தொடங்கினான்.

அவன் வீரா..!!

பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மாபெரும் கொடூரன் அவன்.

அவன் அறுத்து எடுத்து வந்திருந்த காதுகளில் போட்டிருந்த தோட்டையும் ஜிமிக்கியையும் கழற்றி எடுத்தவன் வேறொரு ஊரில் இருந்த நகை கடைக்கு கொண்டு சென்று நகைகள் அனைத்தையும் விற்றுவிட்டு அதில் கத்தையாக பெற்றுக் கொண்ட பணத்தோடு திருப்தி புன்னகையை சிந்தினான் அவன்.

ஒரு உயிரைக் கொன்று விட்டோம் என்ற வருத்தம் அவனுக்கு சிறிதளவும் இல்லை.

இந்தப் பணத்தை தன் காதல் மனைவியிடம் கொடுத்தாலே போதும் என எண்ணிக் கொண்டவன் எப்படியாவது கையில் இருக்கும் வைரத்தை விற்றுவிட்டு வேறு ஏதாவது பெரிய நாட்டுக்குச் சென்று சுகபோகியாக வாழ வேண்டும் என ஆசைப்பட்டான்.

அவனுடைய ஆசைக்கு துருப்புச் சீட்டாக பயன்படுவாளா மோஹஸ்திரா..?

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!