அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 27🔥🔥

5
(10)

பரீட்சை – 27

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மருண்ட விழியோடு 

மாயவள் நீ 

என்னை பார்த்த 

பார்வையில் 

மயங்கி போனேனடி..

 

உன் கயல் விழியின் 

அழகில் 

மயங்கி விட்டது என் 

மனம் என 

ஏற்றுக் கொள்ள 

மறுத்து விட்டதடி 

இதயம்

 

எனக்குள் இருந்த 

இறுமாப்பால்

உன்னை கண்டு

எழுந்த 

இன்ப அவஸ்தையை 

வெளியே 

சொல்லாமல்

 

இறுக்கத்தை மட்டுமே 

முகத்தில் 

இறக்கி

பூசி வைத்த

என் அரிதாரம்

இன்னும் எத்தனை 

நாட்களுக்கு

 

என்னில் பூத்த 

ஆனந்தத்தை 

பூட்டி வைக்கும் என 

விளங்கவில்லையடி 

என் 

விழி அழகியே..!!

 

###########

 

விழி அழகி…!!

 

அன்று என் தனிமை வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த கல்லூரியில் என்னை சந்திக்க ஒருத்தி  வந்து கொண்டிருந்தாள்..

 

இப்படி அருண் டைரியில் எழுதி இருந்ததை சத்தமாக படித்த வைஷு “அக்கா.. உங்களை மாதிரியே ஒருத்தி இருக்கான்னு சொன்னேன்ல.. அவ என்ட்ரி குடுக்குற நேரம் வந்துருச்சு.. அவளை பத்தி தான் சொல்லி இருக்காருன்னு நினைக்கிறேன்.. இந்த டைரியோட அட்டையில அவரோட கட்டிட்டு ஒரு பொண்ணு நிக்கிறாளே அவதான்..” என்றாள் தேஜூவை குறுகுறுவென பார்த்தபடி..

 

“இப்போ உன்னை யாராவது அது யாருன்னு கெஸ் பண்ண சொன்னாங்களா? மனுஷனுக்கு அது யாருன்னு தெரிஞ்சுக்காம மண்டை வெடிக்குது.. ஒக்காந்து அவங்களா தான் இருக்கும்.. இவங்களா தான் இருக்கும்னு ஐடியா சொல்லிக்கிட்டு இருக்கே.. சீக்கிரம் படிடி..” அவளை அவசரப்படுத்தினான் விஷ்வா..

 

விஷ்வா வாய் திறந்து சொல்லி விட்டான் தேஜுவால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை.. அவ்வளவுதான் வித்தியாசம்.. ஆனால் மனதிற்குள் அவளும் அதையே தான் நினைத்துக் கொண்டாள்.. அவளுக்கு அந்த பெண் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எல்லை தாண்டிய ஆர்வம் ஏற்பட்டிருந்தது..

 

“ஆமா வைஷூ.. அடுத்து என்ன ஆச்சுன்னு சீக்கிரம் படியேன்.. எனக்கு ரொம்ப ஸஸ்பென்ஸ் ஜாஸ்தியாயிட்டே போற மாதிரி இருக்கு..” 

 

அதுவரை தன் குடும்பத்தை பற்றியும் தன்னைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்த தேஜு இப்போது அருணின் கதையை கேட்பதற்கு ஆர்வமாக இருப்பதை பார்த்த வைஷ்ணவிக்கு ஆச்சரியமாக இருந்தது..

 

 “அப்படி ஒரு லவ்.. நம்ம ஆளோடது..” என்று நினைத்துக் கொண்டாள் மனதில்..

 

“சரி படிக்கிறேன்.. கேளுங்க..” என்று சொன்னவள் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தாள் அருணின் காதல் கதையை..

 

######################

 

அருணிண் டைரியில்…

 

எப்போதும் போல் அந்த மரத்தின் அடியில் என் தனிமையை சுகமாய் அனுபவித்துக் கொண்டு என் உயிர் தோழனான என் புத்தகத்தை வாசித்துக்கொண்டு நின்றிருந்தேன்..

 

அப்போது எனக்கு பின்னே ஒரு குரல் கேட்டது..

 

“சார்..” என்று அழைத்த அந்த இனிமையான குரலை கேட்டு என்னால் தொடர்ந்து என் புத்தகத்தில் கவனத்தை வைத்து படிக்க முடியவில்லை.. தனிச்சையாக என் தலை அந்த குரல் கேட்ட திசையை நோக்கி திரும்பியது..

 

நான் “என்ன..?” என்பது போல் புருவத்தை சுருக்கி அவளை பார்க்க என் முன்னே நின்ற அந்த பேரழகியோ “சார்.. ஐ லவ் யூ சார்..!!” என்று தன் கையில் பின்னால் மறைத்து வைத்திருந்த பூவை எடுத்து என் முன்னே நீட்டினாள்..

 

அதைப் பார்த்த எனக்கோ ஏதோ அந்த வானத்து தேவதை கீழே இறங்கி வந்து என்னை விரும்புவதாக மலர் கொடுத்து சொன்னது போல் மனதில் தோன்றியது.. ஆனால் என் வாழ்வில் எந்த பெண்ணுக்கும் இடமில்லை.. இது எனக்கு நானே ஏற்படுத்திக் கொண்டிருந்த விதி..

இதைத் தாண்டுவதற்கு எனக்கே நான் உரிமை அளிக்கவில்லை அதனால்..

 

என் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவளிடம் “நான் யாருன்னு உனக்கு தெரியுமா? என் பேர் என்னன்னு உனக்கு தெரியுமா?” என்று கேட்டேன்..

 

அவளோ தயக்கமாக அவள் பூவிதழ் பிரித்து “தெரியாது சார்..” என்றாள்..

 

அப்போது ஏனோ அவளை கடிந்து கொள்ள கூட மனம் வரவில்லை.. என்றாலும் மனதை கல்லாக்கி கொண்டு மலரிதழினும் மென்மையாக இருந்த அவள் கன்னத்தில் என் கையின் ஐந்து விரலும் பதியுமாறு ஓங்கி அறைந்தேன்..

 

அவள் அந்த ஒரு நொடியில் பயந்து மிரண்டு விட்டாள்.. அவள் கண்களில் கண்ணீர் பூக்கள் சிந்தி கொண்டிருந்தன.. அந்த நொடி அவள் சிந்திய கண்ணீர் என் மனதில் ரத்தம் வடிய வைத்தது.. 

 

ஏனோ தெரியவில்லை.. அந்த மிரண்டு போன மான் விழிக்குள் தொலைந்து விடுவேனோ என்று எனக்குள் ஒரு அச்சம் பிறந்தது.. சட்டென என் முகத்தை கோபமாய் திருப்பி வைத்துக் கொள்வது போல் திருப்பிக் கொண்டு என்னை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்..

 

இன்னும் ஐந்து நொடிகள் அவள் கண்ணை தொடர்ந்து பார்த்து இருந்தேன் என்றால் அவளை இறுக்கி அணைத்து சமாதானப்படுத்தி இருப்பேன்..

 

பிறகு என்னை நானே சுதாரித்துக் கொண்டு அவள் புறம் திரும்பி “ம்ம்ம்.. என் பேரே தெரியலைங்குற.. அப்ப யார் சொல்லி இந்த வேலை பண்ற? உனக்கு சொந்தமா அறிவு இல்லையா? யார் என்ன சொன்னாலும் செஞ்சிடுவியா?” என்று கேட்டு இன்னொரு அடி கொடுப்பது போல் கையை ஓங்கினேன்..

 

ஆனால் என்னால் அவளை அடிப்பதைப் பற்றி யோசிக்க கூட முடியவில்லை.. அந்த பிஞ்சு கன்னம் ஏற்கனவே நான் கொடுத்த அடியில் சிவந்திருந்தது.. அந்த வலியை அவளுக்கு கொடுத்ததில் எனக்கு பல மடங்காக வலித்தது.. இந்த யோசனையுடனே என் கை அந்தரத்திலேயே நின்று இருக்க.. அவளோ இன்னொரு முறை அடித்து விடுவேன் என்ற பயத்தில் கண்ணை இறுக்க மூடி தன் கன்னங்கள் இரண்டையும் கைகளால் மூடி  இருந்தாள்..

 

அப்படியே  பயந்து மிரண்டு கண்களை இருக்க மூடியவளை பார்த்து நான் அந்த மிரண்டு பயந்த குழந்தையாய் தோன்றிய அவளுடைய வெகுளித்தனமான அழகிலும் மயங்கி போனேன்.. ஒரு நிமிடம் அவளை ரசித்துக் கொண்டிருந்த நான் அவள் சட்டென தன் கையை கன்னத்தில் இருந்து எடுத்து அவளை அனுப்பியவளின் புறம் நீட்டி காட்ட என் தேவதையை நான் அடிக்க காரணமாயிருந்த அந்த ஜந்துவை அப்போதே எரித்து விட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.. 

 

நேரே அவளை அனுப்பிய பெண்ணிடம் சென்று அவளுக்கு அவள் கன்னத்தில் இடியாய் ஒரு அடியை இறக்கினேன்..

 

“ஏய்.. உன் பேர் என்ன..? ஹான்..மித்திலாவா.. நித்திலாவா..? ஏதோ ஒன்னு.. இருந்துட்டு போகுது.. உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா.. அந்த பொண்ணு கிட்ட என்னை பார்த்து ப்ரொபோஸ் பண்ண சொல்லி இருப்பே.. நீ ராகிங் பண்ணு.. இல்லை… ஜாகிங் பண்ணு.. என்னவோ பண்ணி தொலை… ஆனா என்னை இந்த மாதிரி சீண்டற வேலை எல்லாம் இன்னொரு வாட்டி வச்சுக்கிட்ட.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” 

 

 என் சுட்டு விரலை நித்திலாவின் முகத்துக்கு நேரே காட்டிவிட்டு ஒரு முறை நன்றாக முறைத்த முறைப்பில் அவள் பயந்து போனாள்..

 

நான் நித்திலாவை அறைந்த போதும் மிரட்டிய போதும் என் தேவதை முகத்தில் ஒரு சின்ன புன்னகை மின்னல் போல் பூத்து மறைந்ததை ஓரக் கண்ணால் கவனித்தேன்.. ஏனோ அவள் முகத்தில் புன்னகையை கண்ட அந்த நொடி என் மனம் எல்லாம் பூ பூத்தது போல் மலர்ந்தது..

 

இந்த நித்திலா ஒரு இரண்டு மாதங்களுக்கு முன் என்னிடம் வந்து அவள் என்னை காதலிப்பதாக சொன்னாள்.. ஆனால் இப்படி பல பெண்கள் என்னிடம் ஏற்கனவே சொல்லி இருக்கின்றார்கள்.. 

 

அப்போதே அவளிடம் “எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. இனிமே இப்படி வந்து என்னை காதலிக்கிறேன்னு சொல்ற வேலையெல்லாம் வச்சுக்காத.. அப்புறம் நடக்குறதே வேற…” என்று மிரட்டி விட்டு சென்றேன்..

 

அந்தக் கல்லூரியில் அவள் கடைக்கண் பார்வைக்காக அத்தனை ஆண்கள் அவள் பின்னால் ஏக்கத்துடன் சுற்றி கொண்டிருக்கும் போது அவளாகவே என்னிடம் அவளுடைய காதலை சொல்லியும் நான் அதை புறக்கணித்தது அவளுக்குள் ஏற்கனவே என் மீது ஒரு கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.. என்னை பழி வாங்க நேரம் பார்த்து காத்து கொண்டு இருந்தாள் அவள்..

 

இப்போது அதன் விளைவு தான் இந்த நிகழ்வு.. ஆனால் ஒரு விதத்தில் நான் நித்திலாவுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.. என் தேவதையை என் கண்முன்னே கொண்டு வந்து காட்டியவள் அவள் தான்.. ஒரு காதல் விண்ணப்பத்தோடு என் முன்னே என் தேவதையை நிறுத்தியவள் அந்த நித்திலாதான்.. அதற்காக அவளுக்கு நிச்சயமாக நன்றி சொல்லவேண்டும்  தான்..

 

அதன் பிறகு  அங்கு இருந்து திரும்பி பார்க்காமல் சென்று விட்டேன்.. அந்தப் பெண்ணின் பெயர் என்னவென்று கூட தெரியாமல் அவள் பின்னே என் மனம் என் சொல் பேச்சு கேட்காமல் போய்க் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்..

 

அதன் பிறகு எப்படி இருந்தாலும் அவளை சந்திக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.. அதனால் எந்த பிரச்சனையும் என் மனக்கட்டுப்பாட்டுக்கும் வராது.. என் தனிமை வாழ்வுக்கும் எந்த பங்கமும் வராது.. என்று எண்ணிக்கொண்டு கல்லூரிக்குள் சென்றேன் நான்.. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு அடுத்த நாளே வந்தது..

 

###############

 

டைரியை படித்துக் கொண்டிருந்த வைஷு அப்படியே விழியை விரித்து நின்ற இடத்திலேயே குதித்தாள்..

 

“வா….வ்..  ஒரு அழகான லவ் ப்ரோபோசலோட ஃபர்ஸ்ட் மீட்டிங்.. சான்சே இல்ல.. நான் லவ் ஸ்டோரிஸ் நிறைய கேட்டு இருக்கேன்.. பார்த்திருக்கேன்.. படிச்சிருக்கேன்.. ஆனா இந்த மாதிரி மீட் பண்ண லவ்வர்ஸ் பத்தி கேட்டதே இல்லை.. முதல்ல லவ் ப்ரொபோஸ் பண்ணிட்டு அப்புறம் லவ் பண்ணி இருக்காங்க.. அப்பப்பப்பப்பா…” அருணை பார்த்த வைஷு.. இருகை விரல்களை குவித்து மாற்றி மாற்றி குவித்த வலக்கை விரல்களிலும் இடக்கை விரல்களிலும் முத்தமிட்டு அவனை நோக்கி கொஞ்சிக் கொண்டிருந்தாள்..

 

“என்னமா ரசிச்சு ரசிச்சு லவ் பண்ணி இருக்கேடா.. ஐயோ அந்த பொண்ணா நான் இல்லாம போயிட்டேனே..” புலம்பினாள் அவள்..

 

விஷ்வா தலையில் அடித்துக் கொண்டான்.. 

 

“அக்கா.. இவளுக்கு அருண் பைத்தியம் முத்தி போச்சு.. அனேகமா அவர் எழுந்ததும் ஜோதியோட கலந்து ஐக்கியமாயிடுவான்னு நினைக்கிறேன்..” 

 

தேஜுக்கோ அவள் படித்ததெல்லாம் ஏற்கனவே ஏதோ ஒரு படத்தில் பார்த்தது போல் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது..

 

“சரி.. அடுத்த நாள் செகண்ட் மீட்டிங் எப்படி நடந்ததுன்னு பார்க்கலாம்..” என்ற வைஷு தொடர்ந்து அந்த டைரியை படிக்கலானாள்..

 

##################

 

அருணிண் டைரியில்…

 

அன்று என் வகுப்புக்கு சென்ற பிறகு நான் அவளை முழுதாக மறந்து விடுவேன் என்று நினைத்திருந்தேன்.. ஆனால் என் கணக்கு தப்பாய் போனது..

 

எப்பாடுபட்டு முயன்றும் என்னுடைய பாடத்திலும் நான் செய்யும் வேலையிலும் என் கவனத்தை முழுவதுமாய் செலுத்த முயற்சி செய்தும் என் மனக்கண் முன் அவள் உருவமே வந்து வந்து நின்றது.. 

 

அவள் முகம் என் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது.. அந்த மிரண்டு போன விழிகள்.. அவளுடைய சிவந்த கன்னங்கள்.. பேசும்போது அழகாக குவிந்து விரிந்த அவளுடைய அதரங்கள்.. அவள் முகத்தில் எப்போதும் இருந்த ஒரு குழந்தை தனம்.. இவற்றில் எதுவும் என் மனத்திரையை விட்டு அகலவே இல்லை.. எந்த பொருளை பார்த்தாலும் என் கண் முன் அவள் முகமே வந்து வந்து நின்றது..

 

மாலை என்னுடைய மெக்கானிக் கடைக்கு சென்ற பிறகு கூட அங்கே சின்ன பையனுக்கு பாடம் எடுத்த போதும்.. அவ்வப்போது அவள் முகம் கண் எதிரில் வந்து நிற்க நான் என்னையே மறந்து ஒரு சில நிமிடங்கள் பேச்சற்று அவள் நினைவில் அப்படியே உறைந்து போனேன்..

 

சின்ன பையனும் “அண்ணே.. அண்ணே.. என்னண்ணே.. அப்பப்போ நிறுத்திடறீங்க..? சொல்லுங்கண்ணா.. இதுக்கப்புறம் என்ன வரும்?” என்னை உலுக்கி உலுக்கி மறுபடியும் பாடத்தை தொடர்ந்து சொல்லிக் கொடுக்கச் சொன்னான்..

 

இரண்டு மூன்று முறை  இதே போல் சொல்லி பார்த்தவன் அதன் பிறகு வேலை செய்யும் போதும் நான் அதே போல் இருக்க “அண்ணே என்னவோ நீங்க இன்னைக்கு சரியில்லண்ணே.. ஏதோ நடந்திருக்கு காலேஜ்ல.. கேட்டா எப்படியும் நீங்க சொல்லவும் மாட்டீங்க.. ம்ம் ம்ம் ம்ம்… எனக்கென்னமோ ஏதாவது லவ் மேட்டரா இருக்குமோன்னு டவுட்டா இருக்கே..” 

 

அவன் தன் நாடியில் கைவைத்து சொல்ல நான் அவன் தலையில் தட்டி “டேய்.. அதிக பிரசங்கி.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல.. போய் வேலையை பாரு..” என்றேன்..

 

ஆனால் என்னுடைய நடவடிக்கைகளில் தெரிந்த வித்தியாசங்களினால் அவன் என் மனதில் இருந்ததை சரியாக கண்டுபிடித்து விட்டானோ என்ற ஒரு பதட்டம் எனக்குள்ளே இருந்ததை நான் மட்டுமே அறிவேன்..

 

எனக்குள் என்ன நடக்கிறது என்று எனக்கே விளங்காத போது நான் அவனிடம் என் நிலையை என்னவென்று சொல்லி புரிய வைக்க…

 

எப்போதும் வேலை முடித்து அடித்துப் போட்டார் போல் இருக்க ஆழ்ந்த உறக்கத்திற்கு நொடியில் சென்று விடுபவன்.. அன்றிரவு உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு என் படுக்கையில் படுத்திருந்தேன்.. அவள் அழகு முகத்தை என் கண்களுக்குள் இருந்து மிகவும் சிரமப்பட்டு தள்ளி வைத்து நேரம் விடியலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது தான் சிறிது கண்ணயர முடிந்தது என்னால்.. 

 

ஆனால் காலையில் வழக்கத்தை விட முன்னதாகவே எழுந்து விட்டேன் தூக்கத்திலிருந்து.. அவளைப் பார்க்கவே கூடாது என்று தான் முடிவு செய்திருந்தேன்.. ஆனால் இப்போது என் மனமோ அவளைப் பார்ப்பதற்காகவே கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது..

 

அப்படி தறிக்கெட்டு ஓடும் மனதை அடக்கி எப்படி அவள் புறம் இருந்து தள்ளி வைக்கப் போகிறேன் என்று எண்ணும் போதே எனக்கு அது என்னால் இயலாத காரியம் என்றே தோன்றியது..

 

இருந்தாலும் மனதை திடப்படுத்தி கொண்டு கல்லூரிக்கு சென்றேன்.. அன்றும் அதே மரத்தடியில் ஒரு எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது.. ஆனால் என்னை சந்தித்தது என்னுடைய காதல் தேவதை அல்ல.. அவளை இந்த பூமிக்கு கொண்டு வர காரணமாய் இருந்த அவளுடைய தந்தை..

 

என் காதல் தேவதை எப்படி புத்தகம் படித்துக் கொண்டிருந்த என்னை வந்து அழைத்தாளோ அதே போலவே அவள் தந்தையும் என்னை வந்து “தம்பி..” என்று அழைத்தார்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!