அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 29🔥🔥

5
(13)

பரீட்சை – 29

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

பிறை நிலவை 

பெற்ற 

பெரிய மனிதர் 

என்னிடம் வந்து 

அவளுக்காய் 

பரிந்து பேசி

 

பாவை அவளை 

என்னிடம்  

இல்லாத காதலை 

இயம்பியதற்காக 

மன்னிப்பு கேட்கச் 

சொல்ல

 

மறுவார்த்தை பேசாமல் 

மன்னிப்பு கேட்டவளின் 

மேல் 

மலையளவு 

கோபம் கொண்டது 

மனசாட்சி.. 

 

என்னவள் என்னிடம் 

காதலை சொன்னதற்கு 

எதற்கு இந்த தண்டனை 

என்று 

வீம்பாய் என்னோடு

வாதிட்டது என் உள்ளம்..

 

#################

 

என் மனதை கொள்ளையடித்தவளே..!!

 

தேஜூவின் மனம் குழப்பத்தில் தவித்தது.. ஒவ்வொரு முறையும் அவன் தனக்குத்தானே தன் காதலை வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதாயும் பிறகு அவனை சுற்றி இருப்பவர் அனைவரையும் வெறுப்பது போல் காட்டிக் கொள்வதாயும் எழுதியிருந்தது மனதிற்குள் இவன் ஏன் இப்படி செய்ய வேண்டும் என்று ஒரு கேள்வியை எழுப்பியது..

 

“எனக்கென்னவோ.. இவன் மேல எனக்கு நல்ல அபிப்ராயம் வரணுங்கறதுக்காக இப்படி எழுதி இருப்பான்னு தோணுது.. இப்போ நீ கேக்கற இல்ல..? உங்களை காப்பாத்தணும்னு நினைச்சவன் இப்ப ஏன் கடத்தணும்னு.. இதே மாதிரி நானும் நினைச்சு ஒருவேளை இவன் நல்லவன் தானோன்னு யோசிப்பேன் இல்ல..? அதுக்காக தான் அப்படி எழுதி இருக்கான்னு எனக்கு தோணுது..” என்றாள் தேஜு..

 

அப்போது வைஷுவுக்கு ஏனோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.. “அக்கா.. நீங்க ஆரம்பத்திலருந்தே அவரை பத்தி தப்பு தப்பா யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க.. உங்களை கடத்துனதுக்கு நிச்சயமா அவர் பக்கத்துலருந்து ஒரு நியாயமான காரணம் இருக்கும்ன்னு எனக்கு தோணுது.. அவரு பிளான் பண்ணி இந்த டைரியை எழுதினார்னு நீங்க சொல்றதை என்னால ஒத்துக்க முடியல.. நிச்சயமா சொல்றேன்.. அவர் நல்லவரா தான் இருக்க முடியும்.. நீங்க சொல்ற மாதிரி ஒரு ஆளா அவர் இருந்திருந்தா உங்களை கட்டாயப்படுத்தி அடையறதுக்கு  அவருக்கு எவ்வளவு நேரம் ஆகி இருக்கும்..? ஆனா இதுவரைக்கும் உங்க அனுமதி இல்லாம உங்களை தப்பான எண்ணத்தோடு தீண்டி இருக்காரா..? சொல்லுங்க.. அப்படி அவர் பண்ணிருக்கார்ன்னு நீங்க சொன்னா நானும் ஒத்துக்கிறேன் அவரு நீங்க சொல்ற மாதிரி தப்பான ஆளு தான்னு..” வைஷு கேட்ட கேள்விக்கு தேஜுவிடம் பதில் இல்லை..

 

அவளை காதலிப்பதாயும் அவள் தான் தன் மனைவி என்றும் சொன்னானே தவிர  அவன் கண்ணியத்தில் இருந்து அவன் அந்த நொடி வரை தவறவில்லை.. அவளை கட்டாயப்படுத்தி அவளை அடையவும் அவன் நினைக்கவில்லை..

 

“இப்படி எல்லாம் நடந்துகிட்டா நானா அவன் மேல ஆசைப்பட்டு அவனை கல்யாணம் பண்ணிப்பேன்னு கூட நினைச்சு இருக்கலாம் இல்ல..? இது கூட அவனோட பிளான்ல ஒரு பார்ட்டா இருக்கலாம்..” 

 

 “அக்கா.. உங்களுக்கு புடிக்கலனாலும் நான் ஒன்னு சொல்றேன்.. அவரை ஒரு முறை முழுசா பாருங்க.. எவ்வளவு அழகா இருக்காரு.. அவர் சொடக்கு போட்டா எவ்வளவோ அழகான பொண்ணுங்க அதுவும் என்னை மாதிரி கல்யாணம் ஆகாத சின்ன பொண்ணுங்க..” என்று அவள் சொல்ல விஷ்வா அவள் தலையிலேயே தட்டினான்..

 

“நீ கல்யாணம் ஆகாத பொண்ணுனு சொல்றதை கூட என்னால ஒத்துக்க முடியும்.. ஆனா சின்ன பொண்ணுனு சொன்ன பாரு.. அந்த வயசெல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சுதடி..” என்று அவன் சொல்ல “கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் சின்ன பொண்ணு தான் டா.. உனக்கு ஏண்டா அப்படி சொன்னா எரியுது..?” என்று அவனை திட்டியவள் “சரி இவனை விடுங்க.. அப்படி நிறைய பொண்ணுங்க அவரை தேடி வந்திருப்பாங்க.. ஆனா அவங்களை எல்லாம் விட்டுட்டு அஞ்சு வயசு குழந்தைங்க ரெண்டு பேர் இருக்காங்க உங்களுக்கு.. கல்யாணம் ஆகி புள்ள பெத்த உங்க பின்னாடி அவர் ஏன் சுத்தணும்..?  ஒருவேளை உங்களுக்கு கல்யாணம் ஆகாம இருந்து நீங்க ராம் சாரை லவ் பண்ணிட்டு இருந்து அப்ப இந்த மாதிரி அவர் சுத்துனாலாவது அதுல ஒரு அர்த்தம் இருக்கு.. ஆனா இப்படி கல்யாணம் ஆகி புள்ள பெத்தவங்களை கடத்திட்டு வந்து வச்சிருக்காருன்னா அவரு உங்களை எந்த அளவுக்கு லவ் பண்றாரு.. அதுவும் உங்க மேல அவர் கைகூட படாம வெச்சிருக்கிறாருன்னா உங்களை எந்த அளவுக்கு நோகடிக்க கூடாதுன்னு நினைக்கிறார்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்கக்கா.. எனக்கு என்னவோ இவரை விட பெஸ்ட் லவ்வர் இந்த உலகத்திலேயே இருக்க முடியாதுன்னு தோணுது..” என்றாள் வைஷு..

 

“முடிச்சிட்டியா..? உன் அருண் புராணத்தை.. இதை பாரு.. நீ என்ன தான் சொன்னாலும் என்னால அவன் செஞ்சதை சரின்னு ஒத்துக்க முடியாது.. அப்படியே நீ சொல்ற மாதிரி அவன் காதலிச்சது உண்மையாய் இருந்தாலும் கல்யாணம் ஆகி ஒரு குடும்பத்தில் இருக்கிற என்னை அவன் கடத்திட்டு வந்தது எந்த ஆங்கிள்ல இருந்து பார்த்தாலும் தப்புதான்.. அதனால இந்த வியாக்கியானத்தை எல்லாம் வேற யார்கிட்டயாவது போய் சொல்லு..” என்று சொன்னவள் “சரி நீ டைரியை படி.. இன்னும் இவன் என்னென்ன எல்லாம் அதுல கிறுக்கியிருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டு நான் ரூமுக்கு போறேன்..” என்றாள்..

 

அவள் அப்படி வைஷூவிடம் பேசினாலும் அவள் மனமோ அவன் காதல் உண்மையானதாக தான் இருக்க வேண்டும் என்று முழுதாய் நம்ப ஆரம்பித்திருந்தது..

 

####################

 

அருணின் டைரியில்..

 

என் தேவதையின் தந்தை என்னை அவ்வளவு எளிதில் விட்டு விடுவதாய் இல்லை..  “ஒரு நிமிஷம் பா.. நான் எதுக்கு உன்கிட்ட பேசணும்னு சொன்னேன்..? என்ன பேசணும் வந்தேன்னு.. நீ கேட்கவே இல்லையே..,” என்றார் அவர்..

 

அதுதான் எனக்கு தெரியுமே.. ஆனால் அவர் எதிரில் மற்றவர்களிடம் காட்டுவது போல் என்னுடைய இறுக்கமான முகத்தை காட்ட தயக்கமாய் இருந்தாலும் அதை செய்தே ஆக வேண்டும் என்று உணர்ந்ததால் “நீங்க எதுக்கு வந்து இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. என்னை பொறுத்த வரைக்கும் நான் செஞ்சது ரொம்ப சரி.. நான் அதை பத்தி எதுவுமே பேச விரும்பல.. நீங்க கிளம்பலாம்.. உங்களால கிளம்பமுடியாதுன்னா நான் கிளம்புறேன்..” தோளை குலுக்கியவன் திரும்பி நடையை கட்ட தொடங்கினேன்…

 

என் மனமோ “இப்படியே ஓடிவிடு.. இதற்கு மேல் இங்கு நின்றால் உனக்குள் இருக்கும் நல்லவன் வெளிவந்து விடுவான்..” என்று கத்தி கத்தி அழுது கொண்டிருந்தது..

 

ஆனால் அவரோ இன்னும் தளராதவராக

” இருப்பா.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் என் பொண்ண பூவாட்டமா வளர்த்து வந்திருக்கேன்.. இதுவரைக்கும் அவமேல என் கை கூட பட்டதில்லை.. நேத்து உன் அஞ்சு விரலும் அவ கன்னத்தில பதியற மாதிரி அவளை அடிச்சிருக்க.. அவளை அடிச்சது மட்டும் இல்ல.. இன்னொரு பொம்பள புள்ளயையும் நீ அடிச்சிருக்க.. ஒரு ஆம்பள புள்ளையா இருந்துகிட்டு உன் வீரத்தை..” என்று அவர் சொல்லிக் கொண்டு போக அவர் சொல்வது அத்தனையிலும் நியாயம் இருக்கிறது  என்று எனக்கும் தெரிந்திருந்தது..

 

என் தேவதைக்கு வலியை தந்துவிட்டு அந்த வலியில் இந்த நிமிடம் வரை நான்  துடித்துக் கொண்டிருப்பதை நான் தான் அறிவேன்.. ஆனால் அவளுக்கு வலி கொடுத்த நான் அதற்கு மருந்திட முடியாமல் என் கையை கட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்.. ஆனால் வெகு நேரம் அப்படி செய்யாமல் சமாளித்துக் கொண்டிருப்பது கடினம் என்று எனக்கு தெரியும்…

 

அதனால் வேறு வழி இன்றி இதற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்து அவர் முடிக்குமுன் “யோவ்… அவ்வளவு தான் உனக்கு மரியாதை” என்றேன் என் சுட்டு விரலை அவர் முன்னே நீட்டிக்கொண்டு..

 

ஆனால் என்னை நானே கோவமாக இருப்பது போல் காட்டிக்கொண்ட என் நடிப்பு அவரை சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை..

 

நான் செய்தது தவறு என எனக்கு புரிய வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருந்தார் அந்த பெரிய மனிதர்.. 

 

“என் பொண்ணு கன்னத்துல உன் அஞ்சு விரல் பதிஞ்சு இருக்கிறதை பார்த்தப்போ உனக்கு இப்ப வர்ற கோபத்தை விட பல மடங்கு கோபம் எனக்கு வந்துச்சு.. ஆனா அதெல்லாம் அடக்கி வச்சிட்டு தான் உன்னோட நான் இப்ப பேசிகிட்டு இருக்கேன்.. ஏன் தெரியுமா..? என் பொண்ணு இந்த காலேஜ்ல இன்னும் மூணு வருஷம் படிக்கணும்.. நீயும் ரெண்டாவது வருஷத்துல இருக்கேன்னு நினைக்கிறேன்.. நீயும் இந்த காலேஜ்ல இன்னும் ரெண்டு வருஷம் படிக்கணும்.. அப்படி இருக்கும்போது நீங்க ஒருத்தரை ஒருத்தர் எத்தனை வாட்டி இந்த காலேஜ்ல பார்க்க வேண்டி இருக்குமோ.. தெரியாது.. அப்படி ஒவ்வொரு முறையும் என் பொண்ணை நீ பார்க்கும்போது நான் உன்னை அடிச்சது உனக்கு ஞாபகம் வரக்கூடாதுன்னு நான் நினைச்சேன்.. ஆனா அதுக்காக உன்னை அப்படியே விடவும் எனக்கு மனசு இல்ல.. அதான் நீ செஞ்ச தப்பு எனக்கு எவ்வளவு கோபத்தை கொடுத்திருக்குன்னு உனக்கு புரிய வச்சுட்டு போலாம்னு வந்தேன்..” என்று சொல்லி முடித்தார் அவர்..

 

எவ்வளவு தெளிவாக மெதுவாக பொறுமையாக பேசுகிறார் இந்த மனிதர்.. இவரே இவ்வளவு மென்மையாக இருக்கிறார் என்றால் இவருக்கு பிறந்த என் இதயத்தாமரை எவ்வளவு மென்மையாக இருப்பாள்..? அவளுக்கு வலி தர வேண்டிய கதி எனக்கு நேர்ந்து விட்டதே என்று உள்ளுக்குள் புலம்பினேன்..

 

ஆனால் அவரிடம் ” நான் என்ன தப்பு செஞ்சேன்? ஏன்யா.. உன் பொண்ணுக்கு என் பேரே தெரியாது.. பேர் தெரியாத ஒருத்தன் கிட்ட வந்து ஐ லவ் யூ ன்னு சொன்னா வேற என்ன பண்ணுவாங்க.. அதனாலதான் அடிச்சேன்.. நீ யாருடி எனக்கு ஐ லவ் யூ சொல்றதுக்குன்னு.. இதுல என் தப்பு என்ன இருக்கு? முதல்ல போயி யார் எது சொன்னாலும் அப்படியே எதிர்த்து கேள்வி கேட்காம செய்யற உன் பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணு.. இங்க நின்னுட்டு எனக்கு அட்வைஸ் பண்ணி நேரத்தை வீணாக்காத..” என்றேன்..

 

அவரோ என்னை பார்த்து அமைதியாக புன்னகைத்து “அவ செஞ்சது தப்புதான்.. உன்னோட இப்ப எப்படி பேசிட்டு இருக்கேனோ அதே மாதிரி நேத்து ராத்திரி அரை மணி நேரம் அவகிட்டயும் பேசினேன்.. அவ செஞ்சது தப்புன்னு அவ ஒத்துக்கிட்டு அதுக்கு என்ன பண்ணனுமோ அதை பண்றதுக்கு ரெடியா இருக்கா.. ஒரு நிமிஷம்..” என்றவர் என் அஷ்வினியை தன் அருகில் வருமாறு அழைத்தார்.. 

 

அவளும் என்னை பார்த்து பயந்தபடி தயங்கி தயங்கி அவர் அருகில் வந்து நின்றாள்.. என்னை பார்த்தவுடன் முகம் மலர்ந்து ஓடி வந்து அணைத்து கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கும் என் தேவதையை இப்படி என்னை பார்த்து  மிரண்டு போக வைக்கும் இந்நிலையை எண்ணி என் மனம் அழுது கொண்டிருந்தது..

 

அப்போது “கேளும்மா தேஜூ..” என்று அவர் சொல்ல “சார்.. உங்க பேர் கூட எனக்கு தெரியாது.. ஆனாலும் உங்க கிட்ட வந்து யாரோ சொன்னாங்கன்னு ப்ரொபோஸ் பண்ணது ரொம்ப தப்பு தான்.. ஐ அம் வெரி சாரி.. என்னை மன்னிச்சிடுங்க..” என்று கேட்டவள் மறுபடியும் அவள் தந்தை முன்னால் நான் அவளை ஏதும் அடித்து விடுவேனோ என கொஞ்சம் மிரண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் என்னை..

 

என்னை சந்தித்து பொய்யாக சொன்னாலும் காதலை சொல்லி என்னை இன்ப உலகத்துக்கே அழைத்து சென்றதற்காக என் தேவதை என் முன்னே நின்று மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தாள் அவள் தந்தை பேச்சை தட்ட முடியாமல்.. “நீ சாரி கேட்க வேண்டாம் கண்ணம்மா.. நான் தான் உன்னை அடிச்சதுக்கு நிறைய முறை சாரி கேட்கணும்.. இந்த கையை அப்படியே வெட்டி எறிச்சி விடணும்..” என்னை நானே திட்டிக் கொண்டேன்..

 

ஆனால் அவளிடம் “இட்ஸ் ஓகே.. மறுபடியும் இந்த மாதிரி தப்பு நடக்காம பாத்துக்கோ..” ஏதோ பெருந்தன்மையாக சொல்வது போல் சொல்லிவிட்டு “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்.. உங்க பொண்ணை கூப்பிட்டு சாரி சொல்ல வச்சிருக்கீங்க.. நல்ல விஷயம் தான்.. அப்படியே மறுபடியும் இப்படி எதுவும் அவளை பண்ண வேணாம்னு சொல்லி அட்வைஸ் பண்ணி விடுங்க..”

 

 என் அழகியின் அப்பாவான அழகப்பனிடம் சொல்ல “அவ பண்ண தப்புக்கு அவ சாரி சொல்லிட்டா.. நீ பண்ண தப்புக்கு நீ சாரி சொல்லவே இல்லையே..” என்றார் அழகப்பன்..

 

“என்ன.. நான் சாரி கேட்கணுமா? எதுக்கு?” என்றேன் நான்.. அவள் காலில் விழுந்து பலமுறை அவளுக்கு கொடுத்த வலிக்காக மன்னிப்பு கேட்க துடித்த என் மனதை மறைத்துக் கொண்டு..

 

அவரோ பொறுமையாக “உனக்கு எவ்வளவு தான் கோவம் வந்தாலும் அவளை திட்டி கூட நீ சொல்லி இருக்கலாம்.. ஆனா ஒருத்தரை அடிக்கிறது ரொம்ப தப்பு.. அதுவும் பொம்பள பொண்ணை அடிக்கிறது ரொம்ப தப்பு.. அவங்க திருப்பி அடிக்கலைங்கறதுக்காக நீ செஞ்சது சரியாயிடாது.. அவ நினைச்சு இருந்தா அந்த நேரத்திலேயே உன்னை திருப்பி அடிச்சிருக்கலாம்.. அது உனக்கு எவ்வளவு அவமானமாகி இருக்கும்ன்னு யோசிச்சியா? ஆனா நான் என் பொண்ணை அப்படி வளர்க்கல.. அவ யாரையுமே நோகடிக்க மாட்டா.. அவளால யாரையும் நோகடிக்க முடியாது.. அதனாலதான் அந்த இன்னொரு பொண்ணு சொன்ன உடனே உன்கிட்ட வந்து அவ சொன்னதை அப்படியே சொல்லிட்டா.. இப்போ அவ பண்ணது உன் மனசை நோகடிச்சி இருக்குன்னு தெரிஞ்சு அதுக்காகவும் சாரி கேட்டுட்டா.. இப்போ நீ அவளை அடிச்சு நோகடிச்ச இல்ல..? அதுக்கு அவ கிட்ட மன்னிப்பு கேளு..” என்றார் அழகப்பன் தீர்க்கமாய் என்னை பார்த்துக் கொண்டே..

 

###############

 

“அக்கா இந்த டைரியை படிச்சதிலிருந்து நான் என்னோட அருண் செல்லத்துக்கு மட்டும் இல்ல.. இன்னொருத்தருக்கும் ரொம்ப ஃபேன் ஆயிட்டேன் அக்கா..” என்று சொன்னாள் வைஷு..

 

அது யார் என்று அவளை கேட்பது போல் தேஜுவும் விஷ்வாவும் அவள் முகத்தை பார்க்க “ம்ம்ம்ம்.. அது வேற யாரும் இல்ல உங்க அப்பா அழகப்பன் தான்.. ஆமா உங்க அப்பா நிஜமாவே இவ்வளவு பொறுமையான நிதானமான ஸாஃப்ட் கேரெக்டர் தானா?” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லும் முன் அருண் சொல்லியிருந்த அத்தனை விவரங்களும் தன் தந்தையின் உருவத்துடனும் குணத்துடனும் அச்சு அசலாய் அப்படியே ஒட்டி இருப்பது எண்ணி உள்ளுக்குள்ளேயே ஆச்சரியமடைந்தாள் தேஜு..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு செல்லங்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!