22. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

4.7
(18)

வரம் – 22

தன்னுடைய அலைபேசியோடு வெளியே வந்த மோஹஸ்திராவிற்கு பதற்றத்தில் கரங்கள் நடுங்கத் தொடங்கின.

உண்மையை மட்டுமே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காது என எண்ணி தன்னையே நொந்து கொண்டவள் அலைபேசியில் அரவிந்தனின் இலக்கத்தை அழுத்தி அவனுக்கு அழைப்பு எடுக்க அவனோ அவளுடைய அழைப்பை ஏற்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் அவனுக்கு முயன்று கொண்டே இருந்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவளாய் அவனுடைய அலைபேசி இலக்கத்தை வெறித்துப் பார்த்தாள்.

“ஓ மை காட்.. இப்போ அங்க நைட் டைம் தானே..? வீட்லதானே இருப்பாரு… எதுக்கு என்னோட ஃபோன் காலை இன்னும் அட்டென்ட் பண்ணாம இருக்காருன்னு தெரியலையே…” என மனதிற்குள் புலம்பியவள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து மறுபடியும் தோற்றுப் போனாள்.

“ஓஹ் ஷிட்… ப்ளீஸ் அர்வி…. ஃபோனை எடு.. இங்க நான் எவ்வளவு பெரிய ப்ராப்ளத்துல சிக்கிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன்… ஐ நீட் யுவர் ஹெல்ப்.. இந்த வாய்ஸ் மெசேஜ் கேட்டதும் உடனே எனக்கு கால் பண்ணு…” என வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்து அவனுக்கு அனுப்பிவிட்டு தலையில் கை வைத்தவாறு சோபாவில் அமர்ந்து விட்டாள் அவள்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மோஹஸ்திராவின் தந்தையுடன் பேசிவிட்டு வெளியே வந்த ஷர்வாவோ இறுக்கமான முகத்துடன் அவளைத் தேடி வந்தான்.

ஷர்வாவைக் கண்டதும் சட்டென சோபாவில் இருந்து எழுந்து கொண்டவள்,

“அப்பாகிட்ட சொல்லி புரிய வச்சிட்டீங்களா..? அவர் என்ன சொன்னாரு…? எல்லாம் ஓகே தானே…?” என படபடப்போடு கேட்க,
அவளைப் பார்த்து மறுப்பாகத் தலையை அசைத்தவன்,

“எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன்… உங்க அப்பா கேட்கவே இல்லை… லாயரை வரச்சொல்லி சொல்லிவிட்ருக்காரு.. இன்னும் கொஞ்ச நேரத்துல உயில் எழுதப் போறாராம்… இன்னைக்கு அவருக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணாதான் இந்த சொத்தெல்லாம் உன்னோட பேருக்கு வரும்னு சொன்னாரு…
இல்லன்னா எல்லாத்தையும் ட்ரஸ்டுக்கு எழுதி கொடுத்துருவேன்னு சொல்லி இருக்காரு…” என்றான் அவன்.

“சொத்து போனா போகட்டும்… ஐ டோன்ட் கேர்.. எனக்கு அதைப் பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லை… எனக்கு என்னோட காதல்தான் முக்கியம் ஷர்வா… என்னால உங்கள கல்யாணம் பண்ணிக்க முடியாது… எப்படியாவது அப்பாவ கன்வின்ஸ் பண்ணனும்…” என்றாள் அவள்.

“ஓகே அப்போ நீயே உங்க அப்பாகிட்ட பேசு…” என்றான் அவன்.

“பழைய மாதிரி அப்பா நல்லா இருந்தா நானே பேசி எல்லாத்தையும் நிறுத்தி இருப்பேன்… இப்போதான் டாக்டர் அவருக்கு எந்த விதமான அதிர்ச்சியையோ மனக் கஷ்டத்தையோ கொடுக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க… அப்படி இருக்கும்போது எப்படி என்னால அவரை எதிர்த்துப் பேச முடியும்..?

அவரோட கடைசி ஆசைன்னுல்லாம் சொல்லும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஷர்வா… அவரை நோகடிக்க என்னால முடியாது…” என்றவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்துவிட அவளைப் பார்க்க அவனுக்கோ பாவமாகிப் போனது.

“புரியுது மோஹி… முடிஞ்சா அரவிந்தனை உடனே இங்கே கிளம்பி வரச் சொல்லு.. இன்னைக்கு உயில் எழுதட்டும்… கல்யாணத்தை நாளைக்கு வச்சுக்கலாம்னு சொல்லி அப்பாவ சமாளிப்போம்..

அரவிந்தன் வந்ததும் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டு உண்மையை சொல்லி அவனையே கல்யாணம் பண்ணிக்கோ…” என்றான் ஷர்வா.
“அதுக்கு நான் முதல்ல அவன் கிட்ட பேசணுமே… எத்தனை தடவைதான் கால் பண்றது..? இப்போ வரைக்கும் கால் அட்டென்ட் பண்ணவே இல்ல.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா அவனுக்கு கால் பண்ணிட்டு இருக்கேன்… வாய்ஸ் மெசேஜ்ஜும் போட்டு இருக்கேன்… அதைக் கேட்டா கண்டிப்பா கால் பண்ணுவான்…” என தன்னை திடப்படுத்திக் கொண்டு பேசியவளைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தான் அவன்.

“எனக்கு பயமா இருக்கு ஷர்வா.. எதுக்காக கடவுள் இப்படி என்ன சோதிக்கிறார்னு தெரியல…” என நலிந்த குரலில் கூறியவள் வேதனையோடு அவனைப் பார்க்க தன்னை மீறி அவளுடைய கன்னத்தை தன் இரு கரங்களாலும் தாங்கிக் கொண்டவன்,

“எல்லாமே சரியாகிடும் மோஹிம்மா… ப்ளீஸ் கவலைப்படாத…” என மிக மிக மென்மையாகக் கூறினான்.

அவனுடைய பெருவிரல் அவளுடைய கண்ணீரை அழுத்தமாக துடைத்து விட்டது.

அக்கணம் தன்னுடைய அலைபேசி சிணுங்குவதைக் கண்டதும் சட்டென முகம் மலர்ந்தவள்
“அர்விதான் கால் பண்றார்..” எனக் கூறிவிட்டு அவசர அவசரமாக அவனுடைய கரங்களை விலக்கியவள் அதனை ஏற்று காதில் வைத்தவாறு பேசத் தொடங்க,

ஷர்வாவுக்கோ நொடியில் மனம் நொறுங்கிப் போனாற் போல இருந்தது.

பெருமூச்சுடன் அவளைப் பார்வையால் அளந்தான் அவன்.

“எங்க போயிட்ட அர்வி..? உனக்கு எத்தனை தடவை கால் பண்றது..?” என சற்றே கோபமான குரலில் அவள் கேட்க,

“ஹேய் நான் இங்க முக்கியமான வேலைல இருந்தேன் பேபி… ஏன் இத்தனை தடவ கூப்பிட்டு இருக்க…? ஏதாவது பிரச்சனையா…?” என நிலைமையை புரிந்து கேள்வியைக் கேட்டான் அரவிந்தன்.

“ஆமா அர்வி… இங்க கொஞ்சம் ப்ராப்ளமாகிருச்சு… அப்பாவுக்கு உடம்பு ரொம்ப முடியல… அவருக்கு இனிமே எந்த கஷ்டத்தையோ அதிர்ச்சியோ கொடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு… அப்பா வேற உன்ன பாக்கணும்னே சொல்லிட்டு இருந்தாரா நீ வரலைன்னா மனசு கஷ்டப்படுவார்னு நினைச்சு ஷர்வாவை நீன்னு சொல்லி அப்பாகிட்ட அறிமுகப்படுத்தி வெச்சிட்டேன்….”

“ஓஹ் சோ….?”

“இப்போ அப்பா என்னடான்னா இன்னைக்கு உயில் எழுதுறேன்னு சொல்லிட்டாரு…. அவரோட கண்ணு முன்னாடி கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் மொத்த சொத்தும் என்னோட பேருக்கு வருமாம் இல்லைன்னா எல்லா சொத்தையும் ட்ரஸ்ட்டுக்கு கொடுத்துடுவேன்னு எழுதப் போறேன்னு சொல்லிட்டு இருக்காரு…

இன்னும் கொஞ்ச நேரத்துல லாயர் இங்க வந்துருவாரு… எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல அர்வி…”

“ஓ காட்… என்னடி இதெல்லாம்..?” எனப் பதறினான் அவன்‌.

“சாரி அர்வி இப்படி எல்லாம் ஆகும்னு சத்தியமா நான் நினைச்சுக் கூடப் பாக்கல… ‌ எனக்கு இந்த சொத்து எல்லாம் முக்கியமே இல்ல… எனக்கு நீ தான் முக்கியம்.. நம்ம காதல்தான் முக்கியம்…. அர்வி ப்ளீஸ் எப்படியாவது நாளைக்கு இங்க வந்துரு… அப்பாகிட்ட உண்மையை சொல்லி நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்…” என அவள் கூற,

“பைத்தியம் மாதிரி பேசாத பேபி.. என்னால வர முடிஞ்சா நீங்க கிளம்பினப்போவே நான் வந்திருப்பேனே… இப்போதான் அந்தத் திருடனைக் கண்டுபிடிச்சு என்னோட கஸ்டடிக்கு கீழ கொண்டு வந்துருக்கேன்… இப்போ என்னால எங்கேயுமே வர முடியாது.. அதுவும் நாளைக்கு முடியவே முடியாது…” என்றான் அவன்.

“முடியாதா..? நீ தான் பைத்தியம் மாதிரி பேசுற… முடியாதுன்னா நான் இங்க என்ன பண்றது..? அப்பாவ எப்படி சமாளிக்கிறது..? உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையாக இருக்கிறவர்கிட்ட என்னால சண்டை போட முடியாது அர்வி… நீதான் இங்க வந்தாகணும்… என்னோட காதலும் நானும் முக்கியமா இருந்தா கிளம்பி வா.. அதுக்கு அப்புறமா அந்தக் கேஸை ஹேண்டில் பண்ணு..” எனக் கோபமாகக் கத்தினாள் அவள்.

பேசிக்கொண்டு இருக்கும்போதே விழிகளில் இருந்து அவளுக்கு கண்ணீர் மீண்டும் வழிந்தது.

அரவிந்தன் தன்னை அழைத்ததும் இங்கே அனைத்து வேலையையும் தந்தையையும் தனியாக விட்டு விட்டு அவனுக்காக இந்தியா சென்று தன்னுடைய கேரக்டரையே மொத்தமாக மாற்றி அவன் சொன்னதைப் போல எல்லாம் அவள் நடித்திருக்க தனக்கு ஒரு அவசரம் என்றதும் தன்னுடைய வேலையை காரணம் காட்டி அவன் வராமல் புறக்கணிப்பதை எண்ணி நொந்து போனாள் அவள்.

அவளுடைய கோபத்தை உணர்ந்து சட்டென நிதானித்தான் அரவிந்தன்.

“பேபி நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு… நான் இப்போ அங்க வந்தா எல்லாமே பாழாப் போயிடும்.. வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல பானையை உடைச்ச மாதிரி ஆயிடக்கூடாது… சொன்னாப் புரிஞ்சுக்கோ…”

“சரி உன்னால வர முடியாதுன்னா இப்ப என்னை என்ன பண்ணச் சொல்ற..? அப்பாகிட்ட நான் எப்படிப் பேசுவேன்..?
இதுக்கு முன்னாடியாவது நீ அப்பாவை வந்து சந்திச்சுப் பேசி இருந்தா இந்த நிலைமையே வந்திருக்காது… அவர் உன்னை எத்தனை வாட்டி கூப்பிட்டு இருக்காரு… நீ தான் ஒரு தடவை கூட வந்து அவரைப் பாக்கவே இல்ல.. வந்து பார்த்திருந்தா அரவிந்தன் யாரு ஷர்வா யாருன்னு அவருக்குத் தெரிஞ்சிருக்கும்…”

“பொய் சொன்னது உன்னோட தப்பு…” என்றான் அவன்.
அவளுக்கோ முகத்தில் அறைந்தாற் போல இருந்தது.

“சா.. சாரி நான் வேணும்னே இப்படி பொய் சொல்லலை அர்வி… இந்த முறையும் நீ இங்க வரலைன்னு அ… அப்பா உன்னை தப்பா நினைக்கக் கூடாதுன்னுதான் பொய் சொன்னேன்.. நீ வரலைங்கிறது தெரிஞ்சா அப்பாவும் வருத்தப்பட்டுருப்பாரு..”

“ம்ம்…” என்றான் அவன்.

“இப்போ என்ன காரணம் சொல்லி நான் கல்யாணத்தை நிறுத்துறது..?” என அழுகையுடன் கேட்டாள் அவள்.

“உண்மையைச் சொல்லிக் கல்யாணத்தை நிறுத்த முடியாதா..?” என அரவிந்தன் கேட்க,

“நான் பொய் சொல்லி ஏமாத்தினதுல மனசு உடைஞ்சு போய் அவருக்கு மறுபடியும் ஏதாவது ஆச்சுன்னா என்னால தாங்கிக்க முடியாது அர்வி…” என்றாள் அவள்.

“சரி ஓகே… அப்போ கல்யாணம் பண்ணிக்கோ …” என்றான் அரவிந்தன்.
அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
“வாட்…?” என சீறினாள் மோஹஸ்திரா.

“கோபப்படாத பேபி… நான் சொல்றத நல்லாக் கேளு… இப்போதைக்கு உங்க அப்பாவுக்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்கோ… உன்னோட சொத்து எல்லாம் ரொம்ப வேல்யூ… அதை எதுக்கு வீணா வேற யாருக்கோ கொடுக்கணும்…? அடுத்தது சொத்தை விட உங்க அப்பாவோட ஹெல்த் உனக்கு முக்கியம்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… இதுக்கு ஒரே ஒரு வழி இப்போதைக்கு அப்பா முன்னாடி ஜஸ்ட் மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கோ…

இங்க வேலை எல்லாம் முடிச்சுட்டு நான் அங்க வந்து மீதியைப் பாத்துக்குறேன். ஷர்வா புரிஞ்சுப்பான்..” என தெளிவாகப் பேசினான் அர்வி.

“அப்போ நம்ம காதல்..?” என விதிர்விதிர்த்துப் போய் கேட்டாள் அவள்.

“இப்படி பண்றதால நம்ம காதல் எங்கேயும் போயிடப் போறதில்ல.. நீ இங்க வந்து டைமண்ட் கண்டுபிடிக்கிறதுக்காக நடிக்கலையா..? அதே மாதிரி அங்கேயும் கொஞ்சமே கொஞ்சம் நடி பேபி… இதெல்லாம் ஜஸ்ட் நாடகம்னு நினைச்சுக்கோ.. உன்ன ஒன்னும் நிஜமா அவன கல்யாணம் பண்ணி அவன்கூட வாழ சொல்லல.. இப்போதைக்கு அப்பாவ சமாளிக்கிறதுக்காக நான் சொல்ற மாதிரி பண்ணு..”

“ஒருவேளை அப்பா இந்தக் கல்யாணத்தை பதிவு பண்ண சொன்னா என்ன பண்றது…?”

“டிவோர்ஸ் வாங்கிக்கலாம்… அதெல்லாம் பிரச்சனையே கிடையாது.. நீ எந்த காலத்துல வாழ்றேன்னு மறந்துடாத… இதெல்லாம் சிம்பிள் மேட்டர்.. என்ன நடந்தாலும் நீ எனக்கு மட்டும்தான்… என்ன உன்கிட்ட இருந்து யாராலையும் பிரிக்க முடியாது… இப்போ அப்பாவோட உடல்நிலைதான் நமக்கு முக்கியம்.. அதுக்காக மட்டும்தான் இந்தப் போலி கல்யாணம்னு நெனச்சு இதுக்கு சம்மதி…” என அரவிந்தன் கூற அவளோ உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்ந்து போனாள்.

“எ… எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அர்வி…. சத்தியமா இதை என்னால அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியும்னு தோணல…” என விம்மி வந்த அழுகையை அடக்கியவாறு அவள் பேச,

“நான் எல்லாத்தையும் பாத்துக்குறேன் பேபி… நீ ஃபோனை ஷர்வாகிட்ட கொடு…” என அரவிந்தன் கூற விழிகளைக் கூடத் துடைக்காது ஷர்வாவின் கரத்தில் ஃபோனை வைத்தாள் அவள்.

மறுபக்கம் அரவிந்தன் பேசி முடித்ததும் “வில் சீ…” என அழுத்தமான இரட்டை வார்த்தையோடு அழைப்பைத் துண்டித்திருந்தான் ஷர்வா.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!