பரீட்சை – 42
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன் மேனியில்
ஏற்பட்ட காயம்
என் உளத்தை
கிழிக்குதடி..
நீ ரத்தம்
சிந்தினால்
என் உயிரில்
வலிக்குதடி..
உன் வலிக்கு
காரணமாய்
என்றுமே
நான் இருப்பேன்
என்று உணர்ந்தே
உன்னை
என்னிலிருந்து
தள்ளி வைத்தேன்..
அருகில் வர
முயன்றதற்கே
அடிபட்டுவிட்டதடி
உனக்கு..
என்னோடு
நீ சேர்ந்தால்
என்னவெல்லாம்
வேதனைகளை
நீ சகிக்க
வேண்டிவருமோ
என்
இளங்கொடியே…!!
####################
வராதே.. அருகில்..!!
“நித்திலா.. இந்த அறை நீ செஞ்ச தப்புக்கு இல்ல.. தப்பு செஞ்சு மாட்டிக்கிட்ட பாரு.. அதுக்காக தான்.. நீயும் அவமானப்பட்டு நின்னு என்னையும் எல்லார் முன்னாடியும் தலை குனிய வச்ச பாரு.. அதுக்காக..” என்று சொன்னவரை நம்ப முடியாமல் பார்த்தாள் நித்திலா..
“என்னப்பா சொல்றீங்க? அங்க நீங்க பேசுனதெல்லாம்..” என்று அவள் இழுக்க “என் பொண்ணு நீ.. இன்னும் ஸ்மார்ட்டா இருக்கணும் நித்திலா.. இப்ப நான் உனக்கு சப்போர்ட் பண்ணி இருந்தேன்னா என்னையும் திட்டி உன்னையும் இந்த காலேஜை விட்டு அனுப்பி இருப்பாங்க.. ஆனா இப்போ என் முகத்துக்காக உன்னை இந்த காலேஜ்ல தொடர்ந்து படிக்க அனுமதிச்சிருக்காங்க.. நம்மளை அவமானத்துக்கு உள்ளாக்கின ஒவ்வொருத்தரையும் பழி வாங்குறதுக்கு நம்மளுக்கு இன்னொரு சான்ஸ் கொடுத்து இருக்காங்க..”
பார்வையில் அடிபட்ட சிங்கத்தின் கோபத்துடன் சொன்ன தந்தையை அப்படியே வெறித்து பார்த்திருந்தாள் நித்திலா..
“அப்பா.. அப்புறம் ஏம்பா..? என்னை சாதாரண ரூம்ல தங்க சொன்னீங்க? என்னோட வசதி எல்லாம் குறைக்கிறேன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு பணமும் கொடுக்க மாட்டேன்னு சொன்னீங்களேப்பா.. நம்ப வீட்டுக்கு நான் வரக்கூடாதுன்னு சொன்னிங்களே பா.. எப்பவும் போலவே நான் இருந்திருப்பேன்லப்பா?” நித்திலா உதட்டை பிதுக்கியபடி கேட்டாள்..
“அது இந்த காலேஜ்ல உனக்கு தந்த பனிஷ்மென்ட் இல்ல.. நான் உனக்கு தந்த பனிஷ்மென்ட்.. என் பொண்ணா இருந்துகிட்டு உன்னை எதிர்க்கறவங்களை ஜெயிக்க விட்டு அவமானப்பட்டு நின்னுட்டு இருக்கே.. அதுக்காக நான் உனக்கு கொடுத்த தண்டனை இது.. அந்த அருண் ஆஃப்டர் ஆல் ஒரு மெக்கானிக்.. அவனை உன்னால ஜெயிக்க முடியல.. அவன் கிட்ட எல்லாம் தோத்து போயிருக்க.. உன்னை என் பொண்ணு சொல்லிக்கறத்துக்கே வெக்கமா இருக்கு..” என்றார் அவர்..
“அருண் மெக்கானிக்னு உங்களுக்கு எப்படிப்பா தெரியும்? நீங்க இப்பதான அவனை மீட் பண்ணீங்க?”
நித்திலா கேட்க சத்தமாக சிரித்தவர் “உங்க அப்பாவை பத்தி இவ்வளவு வருஷத்துல நீ சரியாவே புரிஞ்சுக்கல நித்தி.. உங்க மேடம் எனக்கு அந்த வீடியோ அனுப்பிச்சாங்களே அன்னைக்கே அருணை பத்தி ஃபுல் டீடைல்ஸ் தெரிஞ்சுக்கிட்டேன்.. அவனே வாழ்க்கையில விரக்தியோட வாழ்ந்துட்டு இருக்கான்.. அவன் கிட்ட போயி நீ லவ்வு கிவ்வுன்னு பேசி இருக்க.. அப்படியே உன் லவ்வை அவன் அக்ஸப்ட் பண்ணி இருந்தாலும் உனக்கு அவனால எந்த சந்தோஷமும் கிடைச்சிருக்காது.. நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கல.. உன்னை அவன் அடிச்சிருக்கான்னு தெரிஞ்ச அந்த நிமிஷமே அவன் மெக்கானிக் ஷாப்போட அவனை தரைமட்டமாக்கியிருப்பேன்.. நான் கண்ணை காட்டினா கூட அவனை போட்டு தள்ளறதுக்கு எனக்கு ஆள் இருந்தது.. ஆனா இந்த முறை நான் அப்படி வேணும்னே தான் செய்யல.. இது நீ ஆரம்பிச்சு வெச்ச விளையாட்டு.. நீயே தான் முடிக்கணும்..” என்றார் அவர்..
“நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்கப்பா.. நிச்சயமா நீங்க சொல்றபடி நான் செஞ்சு காட்டுறேன்.. என்னை இக்னோர் பண்ணவன் நிம்மதியாவே இருக்க கூடாதுப்பா” என்றாள் நித்திலா..
“இப்ப யாரெல்லாம் நீ அவமானப்பட காரணமா இருந்தாங்களோ.. அத்தனை பேரையும் சரியா காத்திருந்து பழி வாங்கினப்புறம் தான் நீ நம்ம வீட்டுக்குள்ள என் பொண்ணா இளவரசியா நுழைய முடியும்.. உங்க அப்பா இவ்வளவு பெரிய பிசினஸ்மேனா இருக்கேன்னா அதுக்கு வெறும் பிசினஸ் மைண்ட் மட்டும் காரணம் இல்ல.. என்னை எதிர்த்தவங்க ஒருத்தரையும் என்னை ஜெயிக்க விடாம அவங்க இருந்த தடமே இல்லாம ஆக்கி இருக்கேன்.. நீயும் அப்படித்தான் இருக்கணும் நித்திலா.. நாளைக்கு என்னோட பிசினஸ் சாம்ராஜ்யத்தையே நீ தான் பாத்துக்கணும்.. உன்னை ஒருத்தர் மதிக்கல.. நீ ஆசைப்பட்டதை உனக்கு கிடைக்க விடாம பண்றாங்க.. இப்படி எது இருந்தாலும் ஒன்னு அவங்களை ஜெயிக்க பாரு.. ஜெயிக்க முடியலன்னா அவங்களை இருந்த இடமே தெரியாம அழிச்சிடு.. இதுதான் நான் உனக்கு சொல்லிக் கொடுக்கிற தாரக மந்திரம்..” என்று சொன்னார் அவர்..
“அப்பா.. நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா இப்படி எந்த வசதியும் இல்லாம பணமும் இல்லாம நான் எப்படிப்பா அவங்கள பழி வாங்க முடியும்?”
“இப்ப நீ அவங்களுக்கு எதிரா எது செஞ்சாலும் எல்லாரோட சந்தேகமும் உன் பக்கம்தான் திரும்பும்.. புத்திசாலித்தனமா சிங்கம் மாதிரி நம்ம எதிரிகளை தாக்கணும்.. முதல்ல பதுங்கணும்.. அப்புறம்தான் பாய்ஞ்சி அடிக்கணும்.. இப்போ நீ பதுங்கி இருக்க வேண்டிய டைம்.. இன்னும் உனக்கு ஒன்றரை வருஷ படிப்பு இருக்கு.. இந்த ஒன்றரை வருஷ காலத்துல அமைதியா ரொம்ப நல்லவளா அந்த தேஜூவோட ஒரு நல்ல ஃப்ரெண்டா இரு.. ஆனா நீ இங்க படிப்பை முடிச்சுட்டு வரும்போது அந்த தேஜு அருண் எல்லாரையும் துடிக்க வைக்கிற மாதிரி பழி வாங்கிட்டு வா.. இதுதான் உங்க அப்பா பட்ட அவமானத்துக்கு நீ செய்யற பரிகாரம்.. என் வாழ்க்கையிலேயே ஒருத்தர் முன்னாடி நான் தலை குனிஞ்சு நின்னது இன்னைக்கு தான் நித்திலா.. அதுவும் உனக்காகத்தான்.. இதை ஞாபகம் வச்சுக்கோ.. அவங்களை ஜெயிக்கிற வெறி உனக்குள்ள இருந்துகிட்டே இருக்கணும் ” என்று சொன்னார் ஈஸ்வரமூர்த்தி..
“தேஜூவோட நல்ல ஃப்ரெண்டா பழகி கடைசியா நான் எப்படி இன்னைக்கு தலை குனிஞ்சு அவமானத்துல துடிச்சனோ அதே மாதிரி அவளையும் துடிக்க வைப்பேன்.. அப்படி துடிக்க வைக்கலனா என் பேரு நித்திலா இல்ல.. இது நான் உங்களுக்கு செஞ்சு கொடுக்கற பிராமிஸ்.. ஒருவேளை என்னால அவங்களை பழிவாங்க முடியலைன்னா நான் வீட்டுக்கு வரவே மாட்டேன்..” என்று நித்திலா சொல்ல “தட்ஸ் லைக் மை கேர்ள்..” என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்தார் அந்தப் பசு தோல் போர்த்திய புலி ஈஸ்வரமூர்த்தி..
###############
மரத்தடியில் காத்திருந்த அருணை தேடி வந்தாள் தேஜு..
“ஹலோ.. மிஸ்டர் அருண்..” என்றவளை திரும்பிக்கூட பார்க்காமல் அங்கே ஒருத்தி இருக்கிறாள் என்ற பிரக்ஞை கூட இல்லாதவன் போல் ஏதோ புத்தகத்தை படிக்கவே பிறந்தவன் போல் படித்துக் கொண்டிருந்தான் அருண்..
அவன் மரத்தின் கீழே இருந்த கல் மேடையில் அமர்ந்திருக்க நின்று கொண்டிருந்த தேஜு அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் காதில் கையை வைத்து “ஹலோ.. மிஸ்டர் அருண்..” என்று கத்தினாள்..
அவனுக்கு கோவம் உச்சிக்கு வந்து அவள் கழுத்தை பிடித்தான்..
அவன் கண்ணுக்குள் அவள் விழித்து பார்க்க அந்தப் பார்வையில் தடுமாறியவன் கையை உதறி வேறு பக்கம் திரும்பிக் கொண்டு “ஏண்டி என் உயிரை எடுக்கிற.. அதான் என் மேல இல்லாத பழி எல்லாம் சொல்லி மாட்டிவிட்டு இப்ப ஏதோ அந்த நிலவழகன் புண்ணியத்துல எல்லாம் சரியாகி நான் காலேஜ்ல கண்டினியூ பண்றதுக்கு பர்மிஷன் கிடைச்சிருக்கு.. அது உனக்கு பொறுக்கலையா? இப்ப மறுபடியும் என் படிப்பை எப்படி கெடுக்கலாம்ன்னு பார்த்துக்கிட்டு தான் என்னோட வந்து பேசுறியா? போடி.. முதல்ல இங்கருந்து..” எரிந்து விழுந்தான் அவள் மேல்..
அவளோ ஏற்கனவே இதை எதிர்பார்த்தது போல் “அப்போ ஏதோ ஒன்னை பத்தி தப்பா நினைச்சுகிட்டு கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன்.. இப்பதான் உன்னை பத்தி நல்லா புரிஞ்சுகிட்டேன் இல்ல.. அதனால தான் கஷ்டப்பட்டு அந்த நித்திலாவோட பேசி அவ அந்த சரணோட பேசினதை என் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி அதுக்கப்புறம் அவளை அந்த லைப்ரரிக்கு வர வச்சு வசமா மாட்டி விட்டேன்.. அனாவசியமா நல்லா படிக்கிற உன்னை மாதிரி ஒரு பையனோட படிப்பு கெடக்கூடாதுங்கறதுக்காக தான் இவ்வளவு மெனக்கெட்டேன்.. அதை அப்ரிஷியேட் பண்ணலன்னா கூட பரவாயில்ல.. இப்படி திட்டாம இருக்கலாம் இல்ல..?”
அவள் தன் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு சொல்ல அதற்கு மேல் அவள் அருகாமையை தாக்கு பிடிக்க முடியாது “இப்ப அதுக்கு என்ன.. உனக்கு கோயில் கட்டி கும்பிடட்டுமா? இல்ல தினமும் பாத பூஜை பண்ணனுமா?” என்று கேட்டவன் அவள் பக்கம் திரும்பி இரண்டு கைகளையும் சேர்த்துக்கொண்டு “ரொம்ப தேங்க்ஸ் மா தாயே.. இதோட என் வாழ்க்கையில தலையிடாம அப்படியே போயிரு..” என்று சொன்னான்..
“கோவில் கட்டி பாத பூஜை எல்லாம் பண்ண வேணாம்.. என்னோட ஃப்ரெண்ட் ஆனா போதும்.. நாளைக்கு நியூ இயர் பொறக்குது.. நியூ இயர்க்கு என்னை நியூ ஃப்ரெண்டா அக்செப்ட் பண்ணிக்கோ.. ப்ளீஸ்..”
அவன் நாடியை பிடித்து அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி கெஞ்சும் தொனியில் சொன்னவள் முகத்தைப் பார்த்தவன் அதற்கு மேல் தாங்க முடியாது என்று “நீ இப்படி எல்லாம் சொன்னா கேக்க மாட்ட.. நீ இங்கருந்து போக மாட்டே இல்ல? நான் போறேன்..”
அவன் அங்கு இருந்து இரண்டு அடி செல்ல அவன் கையைப் பிடித்து நிறுத்தியவள் “வேண்டாம் வேண்டாம்.. நீ போக வேண்டாம்.. நானே போறேன்..” என்று சொல்லி அவனை அந்த கல் மேடையிலே அமர வைத்துவிட்டு எழுந்து இரண்டு அடி அவனை திரும்பிபார்த்துக் கொண்டே நடக்க அங்கே முன்னிருந்த கல்லில் தடுக்கி அப்படியே குப்புற கீழே விழுந்தாள்..
பதைப்பதைப்புடன் அவள் அருகே ஓடி வந்தவன் “கண்ணை முதுகு பக்கம் வெச்சிருக்கியா? பார்த்து நடக்க மாட்டியா?” என்று கேட்க “ஒருத்தி கீழே விழுந்து இருக்கேன்.. எங்கேயாவது கை கொடுத்து தூக்கணும்னு தோணுதா உனக்கு..? திட்டிட்டு இருக்கே.. முதல்ல கையை கொடுத்து எழுப்பு..”
அவனிடம் கையை நீட்ட அவளை கையைப் பிடித்து அவன் எழுப்ப அவளோ எழுந்திருக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.. கால் முட்டியில் நன்கு அடிபட்டிருந்தது.. அவளுடைய உடை அந்த இடத்தில் லேசாக கிழிந்து முட்டியில் ரத்தம் வந்து கொண்டிருந்தது..
அதைப் பார்த்தவன் திடுக்கிட்டு போய் கைகள் இரண்டும் உதவி செய்ய பரபரக்க தன்னையே கட்டுப்படுத்திக் கொண்டு தொண்டையை கனைத்து “எல்லாம் என் தலையெழுத்து..” என்று தலையில் அடித்துக் கொண்டு அவளை அப்படியே தன் இரு கைகளில் பூப்போல் தூக்கி அந்த கல் மேடையில் அமர வைத்தான்..
“இப்படியே உக்காரு.. நான் போய் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் வாங்கிட்டு வரேன் ஆஃபீஸ்ல இருந்து..” என்று சொல்லிவிட்டு போனவனை பார்த்த படியே இருந்த தேஜூ “நீ ஆயிரம் தான் திட்டுனாலும் அது கூட ஏதோ என்கிட்ட ஆசையா பேசுற மாதிரியே இருக்குடா.. பாரு.. உன்னால கீழ விழுந்த என்னை அப்படியே விட்டுட்டு போக முடியல இல்ல.. இது போதும்டா.. எனக்கு.. கூடிய சீக்கிரம் உனக்கு ஃப்ரெண்ட் ஆயிடுவேன்..” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் அவள்..
முதலுதவி பெட்டியை வாங்க போனவன் நடுவழியில் சிறிது நேரம் நின்று கண்ணை மூடி தன்னை தானே அமைதிப்படுத்திக் கொண்டான்..
“ஐயோ நீ என்ன பாடா படுத்துறியே அஷ்வினி.. வேணாம் அஸ்வினி.. என்னை நெருங்கி வராத.. உனக்கு நல்லது இல்ல.. பாரு.. என்னை நெருங்கி வரணும்னு நினைக்கும் போதே உனக்கு காயம் தான் கிடைக்குது.. வேண்டாம்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் கல்லூரி அலுவலகத்திற்கு சென்று முதலுதவி பெட்டியை வாங்கி வந்தான்..
ஆனால் அவனுக்கு புரியாத விஷயம் ஒன்று இருந்தது.. அவனோடு இருந்ததால் அவளுக்கு காயம் ஏற்படவில்லை.. அவள் காயத்துக்கு மருந்து கிடைக்கிறது என்பது அவனுக்கு புரியவில்லை..
முதலுதவி பெட்டியை வாங்கிக் கொண்டு வந்தவன் எதிரில் சுமி வர “ஆமா நீயும் அவளும் ரெட்டை பிறவி மாதிரி எப்பவும் ஒட்டிக்கிட்டே தான திரிவீங்க.. இப்ப எதுக்கு அவளை தனியா விட்ட.. அவ கீழே விழுந்து அவளுக்கு கையில கால்ல எல்லாம் அடிபட்டு இருக்கு.. நானே இந்த மருந்தெல்லாம் எப்படி போடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.. நல்ல வேளை நீ வந்துட்டே.. வா வந்து மருந்து போடு அவளுக்கு” என்றான்..
“தேஜுக்கு அடிபட்டுருச்சா? எங்க இருக்கா அவ?” என்று கேட்டுக் கொண்டே அவன் பின்னாடியே ஓடியவள் தேஜு எப்போதும் அவன் அமர்ந்திருக்கும் மரத்தின் அடியில் அதே கல் மேடையில் அமர்ந்து தன் காயங்களை ஊதி எரிச்சலை ஆற்றிக்கொண்டு இருந்ததை பார்த்து ஓடி சென்று முதல் உதவி பெட்டியை திறந்து அவளுக்கு மருந்து போட்டு விட்டாள்..
“என்னோட தான இருந்த? எப்படி இங்க வந்த? எதுக்குடி இங்க வந்த? இவனை பத்தி தான் உனக்கு தெரியும் இல்ல? இவன்கிட்ட வந்து வாங்கி கட்டிக்கலைன்னா உனக்கு தூக்கம் வராதா?” என்று கேட்டவளிடம் “நாளைக்கு நியூ இயர்.. அதான் ஃப்ரெண்ட் ஆயிட்டு விஷ் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்..” என்று சொன்னவுடன் “யார் கூட..? இந்த துர்வாசர் கூட ஃப்ரெண்டாக போறியா? கிழிஞ்சிடும்.. அவன்கிட்ட திட்டு வாங்கறதுலதான் உன் நேரமெல்லாம் போகும்..” என்று சொன்னாள் சுமி..
“பரவாயில்ல.. இந்த மாதிரி ஒரு நல்லவர் கூட ஃப்ரெண்டாகறதுக்காக எவ்வளவு திட்டு வேணா வாங்கிக்கலாம்..” என்று சொன்னவளை பார்த்து இடவலமாக தலையாட்டிய அருண் சுமியிடம் “உன் ஃப்ரெண்டுக்கு ரொம்ப முத்தி போச்சு.. நல்ல டாக்டரா கூட்டிட்டு போய் காட்டு.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லி அங்கிருந்து சென்று விட்டான்..
“இங்க பாரு தேஜூ.. அவன் ரொம்ப நல்லவன் தான்.. உழைச்சு சம்பாதிச்ச பணத்துல படிக்கிறான்.. தான் கால்ல நிக்கிறான்.. பார்க்கவும் ஸ்மார்ட்டா இருக்கான்.. எல்லாம் சரிதான்.. ஆனா அவன் கிட்ட ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கறதுங்கறது நடக்காத காரியம் டி.. அவன் இந்த காலேஜ்ல யாரோடயுமே சிரிச்சு பேசறதை நான் பார்த்ததில்லை.. அவனுக்கு ஃப்ரெண்ட் ஆகணும்னு ஏண்டி இப்படி பிடிவாதம் பிடிக்கிற..? அவன் உன் மனசை தான்டி காயப்படுத்துவான்.. வேண்டாம் தேஜூ.. சொன்னா கேளு..” என்றாள் சுமி அக்கறையுடன்..
“என் ஃப்ரெண்ட் தானே ஆக மாட்டான்.. நாளன்னைக்கு நம்ம காலேஜ் திறந்துடும் இல்ல.. அன்னைக்கு இந்த தேஜூவோட வேற ஒரு அவதாரத்தை பார்ப்பே..” என்று சொன்னவள் “சரி.. இப்போ டாக்ஸிக்கு சொல்லு.. வீட்டுக்கு கிளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு அவள் தோளை பிடித்துக் கொண்டு கல்லூரி வாயிலை நோக்கி அடி மேல் அடி வைத்து அடிபட்ட காலை தாங்கி தாங்கி நடந்து போனாள்…
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”