பரீட்சை – 43
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
அழகி உன்
ஒரு வார்த்தையில்
அந்த ஆண்டே
எனக்கு
இனித்ததடி
ஆருயிரே..
மறு வருடம்
எனக்கு இல்லை
என்றால் கூட
மனதிற்கு சம்மதமே
என்
மணிக்குயிலே..
குழல் போல
மெல்லியதாய்
உன் குரலை
கேட்ட
நொடியில்
கற்கண்டாய்
தொடங்கியதடி
என் வாழ்வின்
இனிய வருடம்..
#################
இனிமையான புத்தாண்டு…!!
அருணின் டைரியில்…
என்னோடு நட்பு பாராட்ட என்னை தேடி வந்தாள் என் தேவதை.. எனக்குள்ளும் ஒரு நொடி அவளுடைய நண்பனாய் மாறி ஒவ்வொரு நொடியும் அவளை தாங்கிப் பிடிக்க ஆசை எழுந்தது.. ஆனால் அப்படி செய்வதினால் ஏற்படும் விளைவுகளை நினைத்து பார்த்த என் மனது அடுத்த நொடியில் என் முடிவை மாற்றிக் கொண்டது..
என்னோடு விளையாட்டாய் அவள் பேசத் தொடங்கி இருக்கிறாள்.. என் பெயரை என் காதில் அவள் கூறியதை கேட்டு அது தந்த சிலிர்ப்பை வார்த்தையால் சொல்லி மாளாது.. இன்னும் இரண்டு நிமிடம் அப்படியே என் செவிகள் என் பெயரை அவள் வாயால் கேட்கும் இன்பம் பெறுமா என எனக்குள் ஒரு ஏக்கம் பிறந்தது..
ஆனால் அவள் மனதில் அது ஒரு சலனத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று என் பெயரை உச்சரித்த அவள் இதழுக்கு பரிசாய் முத்தம் கொடுத்து இருக்க வேண்டிய நான் என் பெயரை பிறப்பித்த அந்த கழுத்தை நெறித்தேன்..
அப்போது அந்த அதிர்ச்சியில் விழி விரித்தவள் கண்களின் ஆழத்தைப் பார்த்தவன் அதனுள் மூழ்கி இருப்பேன்.. ஒருவேளை என்னை அறியாமல் அதற்குள் மூழ்கி இருந்தால் மூச்சு திணறி செத்திருப்பேனோ என்னவோ காதல்
தாபத்தினால்… ஆனால் சுதாரித்துக் கொண்டு அவள் பார்வையை தவிர்த்து விட்டேன்..
எனக்காக வாதாடி போராடி என் மேல் எந்த தவறும் இல்லை என்று நிரூபித்த என் அஸ்வினி.. இந்தக் கல்லூரியை விட்டு கல்லூரி முதல்வர் என்னை போக சொன்ன போது என் உயிரே போனது போல் உணர்ந்தேன்.. போன என் உயிரை எனக்கு திரும்பவும் மீட்டு தந்தாள்..என் அழகி..
அவள் என்னை நெருங்கி வர வர நான் அவளை மேலும் மேலும் விரட்ட அவளோ இன்னும் நெருங்கி வந்து கொண்டிருந்தாள் என்னிடம்.. அவள் பால் செல்லும் என் மனதை அடக்க முடியாமல் அவள் அருகாமையை தவிர்த்து நான் கோபமாய் விலகிச் செல்ல அவளோ என்னை சமாதானப்படுத்தி பிரிய மனம் இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டே விலகி சென்றவள் கல் இடறி கால் தடுக்கி கீழே விழ அடிபட்டது அவளுக்கு.. ஆனால் வலித்ததோ எனக்கு..
இந்த முறை உண்மையாகத்தான் அவளை கடிந்துக் கொண்டேன்.. என் தேவதை அவள் மேனியில் ஒரு சிறு காயம் ஏற்படுத்த என்னவளுக்கே உரிமை கிடையாது.. என் அருகாமையில் இருந்ததற்கே அவளுக்கு காயம் பட்டது.. என்னோடு அவள் சேர்ந்தால் அவள் அனுபவிக்கும் துன்பத்திற்கு அளவே இருக்காது.. அவள் இந்த சிறிய காயம் பட்டு துடிப்பதை காண முடியாத என்னால் அந்த பெருந்துன்பத்தில் அவள் அவஸ்தைபடுவதை பார்த்து சகிக்க முடியாது..
இப்படி என்னிடமிருந்து தள்ளியே இருக்கட்டும் அவள்.. நாளை புது வருடம்.. எனக்கு அந்த கல்லூரியில் மீண்டும் தொடர்ந்து படிக்க அனுமதி கிடைத்தது எனக்கு என்னவள் தந்த புது வருட பரிசு.. அவள் புது வருட பரிசாக என்னிடம் கேட்ட நட்பை என்னால் அவளுக்கு தர முடியவில்லை… ஆனால் என்னுடைய அரவணைப்பை என்னுடைய அன்பை வெறும் பார்வையால் மட்டும் தள்ளி நின்று என்றும் தந்து கொண்டிருப்பேன் என் இனிய தேவதைக்கு..
###################
டைரியை படித்த வைஷு “அக்கா கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிக்கிட்டே இருக்கீங்க.. நீங்க வேணா பாருங்க.. நிச்சயமா நீங்க அருண் குட்டியை லவ் பண்ணிடுவீங்க..” என்று சொல்ல “என்னது லவ் பண்ணிடுவேனா?” முறைத்தாள் தேஜூ..
“இல்ல இல்ல.. நான் அந்த டைரியில சொல்றேன்.. இப்பதான் நீங்க ராம் சாரை லவ் பண்ணிட்டு இருக்கீங்களே.. வேற யாரும் உங்க மனசுல வர முடியாது தானே? இந்த கதைல லவ் வந்துடும் போல தோணுது” என்று சொல்ல “போதும் நீ வாய் அடிச்சது.. டைரியை படி..” என்றாள் தேஜூ..
“அக்கா இன்னைக்கு ஒரு நாளைக்கே உங்களுக்கு இப்படி இருக்கே.. தினம் தினம் இவ பேச்சைக் கேட்டு கேட்டு என் காதுல ரத்தம் வருதுக்கா.. இந்த மாதிரி தான் அராத்து மாதிரி ஏதாவது பேசிக்கிட்டே இருப்பா..” என்றான் விஷ்வா..
“நீங்க வேணா பாருங்க.. கூடிய சீக்கிரம் அருண் லவ் ப்ரொபோஸ் பண்றாரோ இல்லையோ நீங்க நிச்சயமா இந்த டைரி இல்லைன்னா அடுத்த வருஷம் டைரி முடியறதுக்குள்ள என் அருண் செல்லத்துக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணி இருப்பீங்க..” என்றாள் வைஷு..
“ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது.. முதல்ல டைரியை படி.. அப்புறம் உன் கற்பனை நடக்குதா இல்ல இதோ இந்த அருணோட கற்பனைல உதிச்சது நடக்குதான்னு பார்க்கலாம்”
“ஐயையோ.. கற்பனையா? கற்பனையாலாம் இருக்க கூடாது.. அதுவும் அந்த சுமி கற்பனையாகவே இருக்க கூடாது.. இந்த சுமியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இந்தக் கதை மட்டும் உண்மையா இருந்தா என்னைக்காவது ஒரு நாள் அந்த சுமியை போய் மீட் பண்ணி ஃப்ரெண்ட் ஆகணும்”
விஷ்வா சொல்ல அவனைப் பார்த்து முறைத்த வைஷூ “என் கண்ணு முன்னால இருக்கிற அருணை நான் ஆசையா பாத்தது தப்பு.. ஆனா இருக்காளா இல்லையான்னே தெரியாத சுமியை நினைச்சு நீ ஆறா ஊத்திட்டு இருக்கியே.. அது தப்பே கிடையாதா? இன்னொரு முறை என்னை திட்டு.. உன்னை வெச்சுக்கறேன்..” தொடர்ந்து டைரியை படித்தாள்..
####################
அருணின் டைரியில்..
அன்று இரவு நேரம் 11:59.. என் கைப்பேசி ஒலிக்க நன்றாக உறங்கி கொண்டிருந்த நான் விழித்தெழுந்து கைபேசியை எடுத்து பார்த்தேன்.. அதில் புதிதாய் ஒரு எண் இருக்கவே ஒருவேளை யாருக்காவது அவர்களுடைய வண்டி நடு சாலையில் நின்று அதை பழுது பார்க்க என்னை அழைத்து இருக்கிறார்களோ என்று அவசர அவசரமாக அந்த அழைப்பை ஏற்றேன்..
அந்தப் பக்கத்தில் என் தேவதையின் குரல்…!! “ஹாப்பி நியூ இயர்” என்று ஒலிக்க நான் வாழ்ந்த அத்தனை வருடங்களில் மிகச்சிறந்த மிக இனிமையான வருடம் அந்த வருடம் தான் என எனக்கு தோன்றியது.. என் உடல் எல்லாம் மனமெல்லாம் பூ பூக்க என் தேவதையவள் குரலில் அழகான வாழ்த்து..
அந்தக் குரல் தந்த உற்சாகத்தில் அப்படியே படுக்கையை விட்டு எழுந்தவன் முகம் முழுதும் மலர்ந்திருக்க இதழ் பெரிய புன்னகை கொண்டு விரிந்தது.. ஆனால் இது எதையுமே என் தேவதையிடம் வெளிப்படுத்த முடியாது..
“யாரு யார் நீங்க? நியூ இயர் விஷ்லாம் பண்றீங்க?”
என் குரலில் என் மகிழ்ச்சியின் சாயல் தெரியாமல் இருக்க மிகவும் பாடு பட்டேன் நான்.. அவ்வளவு கஷ்டப்பட்டு என் குரலில் இருந்த குதூகலத்தை தெரியாமல் அடக்கியும் என்னையும் மீறி என் உற்சாகம் வெளிப்பட்டிருக்கும் போல ..
என் தேவதை என்னிடம் “உனக்கு நான் யாருன்னு தெரியும்.. உன் குரலிலே தெரியுதே அவ்வளவு சந்தோஷம்.. ஆனாலும் சும்மா யாருன்னு தெரியாத மாதிரி கேக்குற இல்ல? ஆனா நான் சொல்ல மாட்டேன்.. யாருன்னு தெரியாமலே இருந்துக்கோ.. ஆனா இந்த வருஷம் எனக்கு ரொம்ப சந்தோஷமான வருஷமா இருக்கணும்.. உனக்கும் அப்படி இருக்கணும்னு ஆசைப்படுறேன்.. நாளைக்கு உன்னை பார்க்கும் போது இந்த புது வருஷத்துக்கான கிஃப்டோட உன்னை பாக்குறேன்.. ஓகேவா?” என்று சொல்லிவிட்டு “பாய்.. ஒன்ஸ் அகெய்ன் ஹேப்பி நியூ இயர்.. இந்த உலகத்தில் இருக்கிற அத்தனை அன்பும் உனக்கு கிடைக்கணும்னு நான் அந்த கடவுளை வேண்டிக்கிறேன்.. ஒரு விஷயம் சொல்லட்டுமா..? நான் இதுவரைக்கும் எவ்வளவோ பேருக்கு விஷ் பண்ணி இருக்கேன்.. எங்க அம்மா அப்பாக்கு விஷ் பண்ணும் போது எனக்கு எப்படி சந்தோஷமா இருக்குமோ அதே மாதிரி இன்னிக்கு ஒனக்கு விஷ் பண்ணும் போதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஓகே பாய்.. சீ யூ டுமாரோ..” என்று சொல்லிவிட்டு கைபேசி இணைப்பை துண்டித்து விட்டாள் என் தேவதை உருவில் இருந்த அன்பு ராட்சசி..
“நாளைக்கு என்ன கொண்டு வருவாள் எனக்காக?” என்று மனம் ஏங்கி தவித்தாலும் எவ்வளவு புறக்கணித்தாலும் அவள் மேலும் மேலும் என்னை நெருங்கி வருவது எனக்குள் ஒரு பயத்தை பிறப்பித்தது.. இந்த புது வருடம் எனக்கும் என் தேவதைக்கும் தனக்குள் இன்பங்களை புதைத்து வைத்திருக்கிறதா இல்லை துன்பங்களை மறைத்து வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை.. ஆனால் என் தேவதையினுடைய முதல் வாழ்த்து கிடைத்ததால் இந்த இனிய ஆண்டை ஆவலுடன் எதிர்பார்த்தபடி உறங்கிப் போனேன் நான்..
###################
அன்று காலை 8 மணிக்கு கல்லூரிக்கு கிளம்பி வந்து இருந்தாள் தேஜூ.. சுமியையும் அவசரப்படுத்தி அவளையும் இழுத்து வந்திருந்தாள்..
“10 மணிக்கு காலேஜுக்கு எதுக்குடி 8 மணிக்கே இழுத்துட்டு வந்த?” என்று கேட்க “அதுவா ஒருத்தர் இந்த காலேஜுக்கு வரதுக்கு முன்னாடி வந்து பார்த்து அவர் என்ன பண்றாருன்னு நான் ஃபாலோ பண்ணனும்.. அதுக்கு தான்..” என்றாள் தேஜூ..
“யாருடி? அந்த பாழா போன அருணா?” என்று கேட்க “ஏய்.. அருணை பாழாப்போன அருண்.. அது இதுன்னு ஏதாவது திட்டினே மண்டையை ஒடச்சிடுவேன்..” என்று சொல்லி கையையும் ஓங்க “அடி ஆத்தா.. மகமாயி.. விட்டுடு.. தெரியாம சொல்லிட்டேன்.. அடங்கிருடி செல்லம்..” என்றாள் கையை கூப்பிய படி சுமி..
“அந்த பயம் இருக்கட்டும்.. இனிமே என் முன்னாடி அருணை பத்தி ஏதாவது தப்பா பேசினே.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்..”
“இது போற போக்கே சரியில்லையே.. அந்த அருண் கிட்ட இவ அடி வாங்கறதும் இல்லாம எனக்கும் சேர்த்து அடி வாங்கி வைக்காம போக மாட்டா போல இருக்கு.. அப்படி தான் தலைவிதி இருந்தா என்ன பண்ண முடியும்? வாங்கிட்டு போக வேண்டியதுதான்..” என்று எண்ணியவள் “இப்ப எதுக்கு அவன் என்ன செய்றான்னு உனக்கு பாக்கணும்..?” என்று கேட்க “அதுவா இப்ப அவன் வருவான் பாரு.. உனக்கே தெரியும்..” என்று சொல்லி அவளை அடக்கினாள்..
அப்போது அங்கே நித்திலா வர ” ஹாய்.. இங்க என்ன பண்ணிட்டு இருக்க தேஜூ?” என்று கேட்க “அதுவா.. ஒருத்தர் எப்ப வர போறாருன்னு காத்துட்டு பாத்துட்டு இருக்கா..” என்றாள் சுமி..
“யாருக்காக காத்துட்டு இருக்கா?” என்று நித்திலா கேட்க சுமியை பார்த்து தேஜூ முறைக்க “இல்ல இல்ல.. நம்ப மேக்ஸ் புரஃபசர் இல்ல.. அவர்கிட்ட எதோ டவுட் கேட்கணுமாம்.. அதான்.. ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கா..” என்று கூறி சுமி சிரித்தபடியே சமாளித்தாள்..
“ஓகே.. நீங்க டவுட் கேட்டுட்டு வாங்க.. நான் என் கிளாசுக்கு போறேன்..” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள் நித்திலா..
“ஆமா எதுக்குடி உன் வண்டியை யூஷூவலா பார்க் பண்ற இடத்தில நிறுத்தாம வேற இடத்துல நிறுத்தின?”
“அதுக்கும் காரணம் இருக்கு.. நீயே நடக்கிறதை வேடிக்கை பாரு.. அப்புறம் உனக்கே புரியும்” என்று சொல்ல வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்..
கல்லூரிக்குள் நுழைந்த அருண் நுழைந்தவுடன் முதலில் தேஜு வழக்கமாய் வண்டி நிறுத்துமிடத்தை நோட்டமிட்டான்..
பிறகு உள்ளே வந்தவன் நேரே தன் ஆஸ்தான மரத்தடிக்கு சென்று அமர்ந்து கொண்டு அவ்வப்போது திரும்பி திரும்பி அவள் வண்டி நிறுத்தும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்..
இதைப் பார்த்த சுமி “என்னடி இவன்… நீ வண்டி நிறுத்தற எடத்தையே திரும்பி திரும்பி பார்த்துகிட்டு இருக்கான்?” என்று கேட்க “புரிஞ்சுதா..? அவனுக்கு என்னை புடிச்சிருக்கு டி.. என்னோட ஃப்ரெண்டா இருக்கணும்னு நினைக்கிறான்.. ஆனா தனக்கு யாரையுமே பிடிக்காத மாதிரி இருக்கான்.. இது அவனோட உண்மையான முகம் இல்லை..” என்று அவள் சொல்ல “அப்பறம் ஏன் மண்டைய ஒடச்சிகிட்டு..? வா அவன்கிட்டயே போய் கேட்ருவோம்..” என்று சுமி அவளையும் இழுத்துக்கொண்டு அருண் அருகில் சென்றாள்..
அப்போதுதான் திரும்பி அவள் வண்டி நிறுத்தும் இடத்தை ஒருமுறை நோட்டமிட்ட அருண் முன்பக்கம் தலையை திருப்ப அங்கே தேஜூ நின்றிருந்ததை பார்த்தவனுக்கு அப்படியே தூக்கி வாரி போட்டது..
பிறகு சமாளித்துக் கொண்டவன் “இராட்சசி.. இப்படியா வந்து நிப்ப முன்னாடி..? பயந்தே போயிட்டேன்” என்று சொல்ல “நீ தானே நான் வண்டி நிறுத்துற எடத்தை பார்த்து பார்த்து எனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தே.. அதான் உன்னை எதுக்கு அவ்ளோ நேரம் வெயிட் பண்ண வைக்கணும்னு நான் வந்து பார்த்தேன்..” என்று சொல்ல சத்தமாக சிரித்தவன் “யாரு.. நானா உனக்காகவா? வெயிட் பண்ணேனா?” என்று சொல்ல “சும்மா நடிக்காத.. நீ என் வண்டி நிறுத்துற இடத்தை திரும்பி திரும்பி பார்த்ததை நான் பார்த்துட்டேன்.. இந்த சமாளிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம்..” என்றாள் அவள்..
“ஓ.. நீ உன் வண்டியை அங்க தான் நிறுத்துவியா?” என்றவன் “கொஞ்சம் இரு..” என்று சொல்லி வேக வேகமாக கல்லூரி நுழைவாயிலை நோக்கி நடந்தான்..
அங்கே அந்த கல்லூரியில் பெருக்கும் வேலை செய்யும் முதியவர் வந்து கொண்டிருந்தார்..
அவரை ஓடி சென்று அணைத்தவன் “அண்ணா.. ஹாப்பி நியூ இயர் அண்ணா..” என்று சொல்லவும் “ஒருத்தி இங்க எவ்வளவு முறை விஷ் பண்ணிட்டு இருக்கேன்..? என்னை கண்டுக்க கூட இல்லாம அவருக்கு போய் கட்டிப்பிடிச்சு “ஹேப்பி நியூ இயர்” சொல்றியா? இருடா வரேன்..” என்று மனதிற்குள் நினைத்தவள்.. நேரே அவர்களிடம் சென்று “ஹேப்பி நியூ இயர் அண்ணா..” என்று அவளும் அவரிடம் வாழ்த்து தெரிவித்தாள்..
“தேங்க்ஸ் மா” என்று சொன்னவரை பார்த்த அருண் “அண்ணா.. உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்..அதோ அங்க நிக்குதே சைக்கிள்.. அது யாரோடதுண்ணா..?” என்று கேட்க “ஏம்பா என்னோடது தான்.. தினமும் அங்கதான் நிறுத்துவேன்..” என்று அவர் சொல்ல அவன் காண்பித்த இடத்தில் அவள் வழக்கமாய் வண்டி நிறுத்தும் இடத்திற்கு பக்கத்து இடத்தில் அவருடைய மிதிவண்டி நின்று கொண்டிருந்தது..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️சுபா❤️”