அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 44🔥🔥

5
(10)

பரீட்சை – 44

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

பொய் முகம் 

காட்டுகிறான் என்று 

தெரிந்தும் 

புன்னகையுடன் அவன் 

முன்னே போய் 

நிற்க 

புரியாத மனம் 

எனை பிடித்து 

தள்ளியது..

 

எனக்காக அவன் 

ஏங்கி நிற்க 

வேண்டும் என 

ஏனோ இந்த 

ஏதும் அறியா 

உள்ளம் 

எதிர்பார்த்து 

நின்றது.. 

 

இப்படி எனக்குள் 

நான் 

எண்ணுவது கூட 

என்ன விதமான 

உணர்வு என்று 

கணிக்க முடியவில்லை 

என்னால்..

 

குழப்பம் தெளிந்து 

அவன் மேல் நான் 

கொண்டது 

அழியா காதல் 

என்று உணர்ந்தேன்

இன்று…

 

################

 

காதல் சொல்ல வந்தேன்…!!

 

அருண் காண்பித்த இடத்தில் அவள் வழக்கமாய் வண்டி நிறுத்தும் இடத்திற்கு பக்கத்தில் முதியவருடைய மிதிவண்டி நின்று கொண்டிருந்தது..

 

“சரிண்ணா.. உங்களுக்கு வேலைக்கு டைம் ஆகியிருக்கும் நீங்க போங்க..” என்று அவரிடம் சொல்லி அவரை அனுப்பிய அருண் திரும்பி தேஜுவை நக்கலாய் பார்த்து “இவருக்காக தான் நான் காத்துகிட்டு இருந்தேன்.. நீ இந்த மாதிரி ஓவரா கற்பனை  பண்றதை விட்டுட்டு உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு.. வெட்டியா நைட்ல ஃபோன் பண்ணி நியூ இயர் விஷ் பண்றது.. காலையில் எனக்காக காத்துட்டு இருக்கிறது.. இதெல்லாம் விட்டுட்டு எதுக்கு இந்த காலேஜுக்கு வந்தியோ அந்த வேலையை மட்டும் பண்ணு..” என்று சொன்னவனிடம் தேஜூ “அப்படின்னா நைட்டு நான் தான்  ஃபோன் பண்ணி உனக்கு விஷ் பண்ணினேன்னு உனக்கு தெரியும் தானே? அப்ப என்னமோ யாருன்னே தெரியலன்னு சொன்ன?” என்று கேட்டபோதுதான் தான் என்ன சொன்னோம் என்று அவனுக்கு நினைவே வந்தது..

 

பிறகு சுதாரித்தவன் “முதல்ல பண்ணும் போது தெரியல தான்.. அப்புறம் இந்த அரை கிறுக்குத்தனமான வேலை பண்ணது.. அப்புறம் ஃபோன்ல நீ உளறுனது அதெல்லாம் கேட்டப்போ அந்த மாதிரி  வளவளன்னு பேசறதுக்கு நீ ஒரு சிங்கிள் பீஸ் தான் இருக்கேன்னு எனக்கு தெரியும்.. வேற சப்ஸ்டியூட்டே கிடையாது.. அதான் நீயாதான் இருக்கும்னு முடிவுக்கு வந்தேன்..” என்று சொல்ல தன்னால் முடிந்த மட்டும் அவனை முறைத்தாள் தேஜூ..

 

அவளுக்கு தன் நடவடிக்கைகளால் தன் மீது ஏதோ சந்தேகம் வந்திருக்கிறது என்று அருணுக்கு புரிந்தது.. காலையில் கல்லூரிக்கு வந்ததும் அவள் முகத்தை பார்த்தால் ஒரு வித உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.. அவ்வளவு நேரம் அவள் வராததால் அவள் தரிசனத்திற்காக வாசலில் வழி மீது விழி வைத்து காத்திருந்தான்.. அருண்..

 

அவள் அப்படி திடீர் என்று கண் முன்னால் தோன்றி அவன் குட்டை கண்டுபிடித்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறித்தான் போனான்.. அப்போது திடீரென அதற்கு முன் அந்த கல்லூரியில் வேலை செய்யும் முதியவர் மிதிவண்டியை அவள் வண்டி விடும் இடத்திற்கு பக்கத்து இடத்தில் விட்டுவிட்டு வருவதை பார்த்தவன்.. அவர் தினமும் அங்கு தான் தன் மிதிவண்டியை விடுவார் என அறிந்ததினால் அவரிடம் போய் புது வருட வாழ்த்து சொல்லி சமாளித்தான்..

 

ஆனால் இது தொடர்ந்தால் அவள் மேலும் மேலும் தன்னை நெருங்குவாள் என்று அறிந்து அவளை வெறுப்பதாகவே நடித்துக் கொண்டிருந்தான் அவன்..

 

“இதை பாரு.. போதும்.. ஏதோ நீ கொஞ்சம் நல்லா பாடுனன்னு ஒரு முறை உன் பாட்டுக்கு கை தட்டிட்டு நான் பட்டதெல்லாம் போதும்.. இன்னும் என்னை என்ன எல்லாம் அசிங்கப்படுத்தனும்னு இப்படி என் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கே…? இந்த மாதிரி சிரிச்சி பேசி அப்புறம் என்னை அவமானப்படுத்தி உன்னை அடிச்சதுக்காக பழி வாங்கலாம்னு நெனச்சா அதுக்கெல்லாம் ஏமாறறதுக்கு வேற ஆளை பாரு.. அதுக்கு இந்த அருண் ஆள் கிடையாது.. நீ வந்து பேசின உடனே உன் பின்னாடி இளிச்சிட்டு வருவாங்க பாரு.. அந்த சரண் மாதிரி ஆளுங்க.. அவனுங்களை மயக்கறத்துக்கு இந்த நேரத்தை செலவு பண்ணினா அட்லீஸ்ட் உனக்கு ஏத்த மாதிரி ஏதாவது மாட்டும்” என்று சொல்லி திரும்பி தன் வகுப்பை நோக்கி நடந்தவனின் கையை பிடித்து நிறுத்தினாள் தேஜூ..

 

“நீ என்னை அவாய்ட் பண்றதுக்கு தான் இப்படி எல்லாம் பேசறேன்னு எனக்கு தெரியும்.. நீ முன்னாடியும் இப்படித்தான் பேசிட்டு இருந்தே.. ஆனா இதுக்காகல்லாம் நான் வருத்தப்பட மாட்டேன்.. உன்கிட்ட எனக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கணும் அதுக்கு மட்டும் பதில் சொல்லிடு.. அன்னிக்கு எதுக்கு கேர்ள்ஸோட சேஞ்சிங் ரூம்க்கு நீ வந்த? இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லிடு.. நான் அதுக்கப்புறம் உன்னை தொந்தரவே பண்ண மாட்டேன்..” 

 

 “உன்னோட எந்த கேள்விக்கும் பதில் சொல்லணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது..  நீ எல்லாம் ஒரு ஆளுன்னு நான் உனக்கு பதில் சொல்லிட்டு இருக்கணுமா? போடீ.. நான் எதுக்கோ வந்தேன்.. அதை எதுக்கு உன்கிட்ட சொல்லணும்?” என்று தன் தோளை குலுக்கி அலட்சியமாய் சொல்லிவிட்டு அவன் வகுப்பை நோக்கி நடந்தான்..

 

“எனக்கு தெரியும்டா.. உன்னால பதில் சொல்ல முடியாது இதுக்கு.. ஒரு நாள் இல்லனா ஒரு நாள் இந்த கேள்விக்கு மட்டும் இல்லை என்னுடைய எல்லா கேள்விக்கும் உன்னை பதில் சொல்ல வைக்கிறேன்.. உன் வேஷத்தை கலைச்சு உன்னோட உண்மையான மனசை வெளியில கொண்டு வரல.. என் பேரு தேஜஸ்வினி இல்லை..” போகும் அவனையே பார்த்து சொல்லிக் கொண்டிருந்தாள் தேஜூ..

 

அதற்குள் தேஜுவை பார்த்து சுமி “அவன் மனசுல இருக்கிறது இருக்கட்டும்.. ஆமா.. உன் மனசுல என்ன இருக்கு? வர வர அருண் திட்ட திட்ட அவன் பின்னாடியே நீ எதுக்கு போயிட்டு இருக்க? என்ன தேஜூ? என்ன விஷயம்?” என்று கேட்க “நீ என்கூட தான இருக்க? இன்னிக்கு சாயங்காலம் உனக்கும் தெரியும் என்ன விஷயம்னு..” என்று சொன்னவள் “சரி வா.. கிளாஸ்க்கு போலாம்..” என்று சொல்லி தன் வகுப்பை நோக்கி சென்றாள்..

 

இவர்கள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.. அவள் கணித பேராசிரியரை பார்க்கத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னது அப்பட்டமான பொய் என்று உணர்ந்தவள் அவள் யாருக்கு தான் காத்திருக்கிறாள் என்று பார்ப்பதற்காக அவர்களுக்கு தெரியாமல் தேஜுவையும் சுமியையும் நோட்டமிட்டு கொண்டிருந்தாள்..

 

அங்கு நடந்தது எல்லாம் பார்த்தவளுக்கு அருண் தன்னை புறக்கணித்தது போலவே தேஜூவையும் புறக்கணிப்பதை பார்த்து ஆனந்தமாக இருந்தது..

 

 “ஏ தேஜூ.. நீ அருணோட பேசுறதெல்லாம் பார்த்தா அவன்மேல உனக்கு ஏதும் ஐடியா இருக்கும் போல இருக்கு.. உன்னை அவனை லவ் பண்ண வெச்சு அதுக்கு அப்புறம் அவனை வெச்சே உன் மனசை சுக்கு நூறா உடைக்கறேன்.. இதுதான் நீ என்னை மாட்டிவிட்டு அவமானப்படுத்தினதுக்கு நான் உனக்கு கொடுக்க போற தண்டனை.. காலம் பூரா மனசு உடைஞ்சு அழுது அழுது புழுங்கனும் நீ.. வாழவே பிடிக்காம ஒவ்வொரு நிமிஷமும் அவஸ்தைப்படணும்.. உனக்கு எவ்வளவு சிரிச்சுக்கணுமோ இந்த ஒரு வருஷம் சிரிச்சுக்கோ.. நான் இந்த காலேஜ்ல இருந்து என்னிக்கு கிளம்பறனோ அன்னிக்கு உனக்கு நிரந்தரமா அழுகையை கொடுத்துட்டு தான் போவேன்…” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவள் அவள் வகுப்பிற்கு சென்றாள்..

 

தன் வகுப்பிற்கு வந்த அருண்  அங்கு நடந்து கொண்டிருந்த பாடத்தை கவைனிக்கவே இல்லை.. அவன் தேஜூ கேட்ட கேள்வியை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.. வர வர அவள் கேட்கற கேள்விகளுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாமல் போவதை எண்ணி மிகவும் கவலை கொண்டான்.. அவளை எப்படி தன்னை வெறுக்க வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான் அருண்..

 

அதே சமயம் அவன் வகுப்பிலே இருந்து நித்திலா அவனை தான் கவனித்துக் கொண்டிருந்தாள்.. அந்த வகுப்பிலேயே மிகவும் நன்றாக படிக்கும் மாணவன் அருண். வகுப்பு நடக்கும் போது அவன் கவனம் வகுப்பு நடத்தும் பேராசிரியரிடம் இருந்து இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பாது.. அப்படிப்பட்டவன் இன்று ஒரு நொடி கூட பாடத்தை கவனிக்க முடியாமல் ஏதோ சங்கடமாய் நெளிந்து கொண்டிருப்பதை பார்த்து ஏதோ சரி இல்லை என்று சந்தேகம் வந்தது அவளுக்கு.. 

 

மதிய இடைவேளையின் போது அருண் அருகே வந்தவள் “என்ன அருண்.. ஒரு மாதிரி இருக்க..? இன்னைக்கு பாடத்தை கவனிக்கவே இல்ல.. ஏதாவது பிரச்சனையா..?” என்று கேட்க “அப்படியே எனக்கு ஏதாவது பிரச்சனையா இருந்தாலும் அதை பத்தி உனக்கு என்ன கவலை? என்ன..? நீ அப்படியே நல்லவளா மாறிட்டேன்னு சொன்ன உடனே மத்தவங்க எல்லாம் நம்பினாங்களே அந்த மாதிரி நானும் நம்பிடுவேன்னு நினைச்சியா? உங்க அப்பா இல்லை செத்துப்போன உங்க தாத்தாவே வந்து சொன்னாலும் நீ மாற மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதனால இந்த நடிப்பு எல்லாம் வேற எங்கேயாவது போய் வச்சுக்கோ.. மறுபடியும் என் வழியில வந்த அப்புறம் நல்லா இருக்காது.. சொல்லிட்டேன்..” என்று சொல்லிவிட்டு வேகமாக கேண்டின் நோக்கி நடந்தான்..

 

அவன் முதுகை பார்த்தபடி “உனக்கு அவ்வளவு திமிரா டா? இருடா.. இந்த திமிரை நான் அடக்கி காட்டுறேன்..” என்று கருவினாள் நித்திலா..

 

மாலை வகுப்பு முடிந்ததும் எப்போதும் போல அந்த மரத்தடியில் வந்து நின்று கொண்டிருந்தவன் சிறிது நேரம் நடந்த பாடங்களை புரட்டிக் கொண்டு இருந்தான்.. அப்போது அங்கே நிலவழகன் வந்து “ஹலோ அருண்..” என்றான்..

 

“ஹாய் நிலவழகா.. பை த வே ரொம்ப தேங்க்ஸ்.. உனக்கு சரியா தேங்க்ஸ் கூட சொல்ல முடியல.. ரெண்டு முறை எனக்கு கெட்ட பேர் வராம காப்பாத்தி இருக்கே… உன்னை மாதிரி எனக்கு நல்லது நினைக்கிறவங்களும் இந்த காலேஜ்ல  இருக்க தான் செய்றாங்க..” என்று சொன்னவனை முதுகில் தட்டிய நிலவழகன் “நீயும் நானும் ஒரே மாதிரியானவங்க தான்.. நீயே நினைச்சாலும் உன்னால எந்த தப்பும் பண்ண முடியாதுன்னு எனக்கு தெரியும்.. அதுவும் ஒரு பொண்ணு கிட்ட நீ தப்பா நடந்துக்க எந்த வாய்ப்பும் கிடையாது.. அதான் ஒவ்வொரு முறையும் கான்ஃபிடண்டா நீ தப்பு பண்ணி இருக்க மாட்டேன்னு முடிவு பண்ணி உனக்கு உதவி செஞ்சிட்டு இருக்கேன்.. அது மட்டும் இல்லாம அந்த நித்திலா எப்படிப்பட்டவன்னு எனக்கு கொஞ்சம் லேட்டா தான் புரிஞ்சுது.. ஆனா புரிஞ்சப்புறம் அவ ஒருத்தரை பழி வாங்குறதுக்கு எந்த லெவல் வரைக்கும் வேணும்னா போவான்னு எனக்கு புரிஞ்சிடுச்சு.. சரி.. அதை விடு.. ஆக்சுவலா நான் உன்கிட்ட இன்னைக்கு நடத்துன லெசனோட நோட்ஸ் வாங்கலாம்னு வந்தேன்…” என்றான்..

 

“ஓ அப்படியா..? சாரி டா.. இன்னைக்கு நான் நோட்ஸ் எடுக்கல.. என்னவோ இன்னிக்கி என்னால லெசன்ல ஃபோகஸ் பண்ண முடியல..” என்றான் அருண்..

 

“உன்னால லெஸ்ஸன்ல ஃபோக்கஸ் பண்ண முடியலையா? ரொம்ப புதுசா இருக்கேடா இது.. நீ எப்பவுமே டிஸ்ட்ராக்ட் ஆக மாட்டியே.. என்ன ஆச்சு? ஏதாவது ப்ராப்ளமா?” என்று கேட்டான் நிலவழகன்..

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல.. இந்த நாலு நாளா நடந்த விஷயங்கள்னால கொஞ்சம் டிஸ்டர்ப்டா இருக்கேன்.. அதுதான் என்னால பாடத்தை ஒழுங்கா கவனிக்க முடியல.. அதுவே தான் மைண்ட்ல ஓடிட்டு இருக்கு..” 

 

“டேய்.. அதான் உன் மேல ஒரு தப்பும் இல்லைன்னு தெரிஞ்சுடுச்சில்ல? இனிமே அதை பத்தி கவலைப்படாத.. அதை மறந்துடு.. நீ ஒரு கோலோட இந்த காலேஜ்ல சேர்ந்திருக்க.. கஷ்டப்பட்டு உன்னோட மெக்கானிக் ஷாப்பில வேலை பார்த்து நீ இங்க படிக்கிற.. அதனால அதெல்லாம் நினைச்சு உன் படிப்பை கெடுத்துக்காதடா.. எங்களுக்கெல்லாம் நீ ஒரு ரோல் மாடல்.. நீயே இப்படியானா நாங்கல்லாம் என்ன பண்ணறது..? சொல்லு..” என்று அவன் சொல்ல சிரித்த அருண் “தேங்க்ஸ் டா.. நாளைலிருந்து நான் ஒழுங்கா பாடத்தைக் கவனிக்கிறேன்” என்று சொன்னான்..

 

“சரிடா.. நான் கிரீஷ் கிட்ட நோட்ஸ் கேட்டுக்குறேன்.. நான் கிளம்புறேன் டா வீட்டுக்கு..” என்று சொன்னவன் “ஆமா.. நீ கிளம்பல..?” என்று கேட்க “எனக்கு இந்த மரத்துக்கு கீழ உட்கார்ந்தா ஒரு அமைதி கெடைக்குதுடா.. அது என்ன ஃபீலிங்னு சொல்ல தெரியல..தினமுமே காலையில வந்த உடனே.. அதே மாதிரி சாயந்திரம் மெக்கானிக் ஷாப்க்கு போறதுக்கு முன்னாடி.. இங்க வந்து ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு போவேன்..” புன்னகைத்தபடி சொன்னான் அருண்..

 

“ஓகே.. அப்ப நீ இங்க பத்து நிமிஷம் உட்கார்ந்துட்டு கிளம்பு.. நான் கிளம்புறேன்..” என்று சொல்லி ஒரு பத்து அடி நடந்து போனவன் காதுகளில் யாரோ யாரையோ அறையும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான்..

 

அப்போது தேஜு அங்கே ஒரு கையில் ஒரு சிவப்பு நிற ரோஜா மலரை வைத்து நீட்டியபடி இன்னொரு கையால் கன்னத்தை பிடித்த படி அருண் முன்னால் நின்று இருக்க அருண் அவளை கோபமாக முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்..  அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சுமி வாயடைத்து போய் தேஜுவையை விழித்து பார்த்திருந்தாள்..

 

அவர்கள் அருகில் சென்று “அருண் என்னாச்சு?” என்று நிலவழகன் கேட்க அப்போது அங்கே வந்த நித்திலா “என்ன ஆச்சு? இந்த அருண் எப்பவும் போல பொண்ணுன்னு கூட பாக்காம தேஜு மேல கைய நீட்டியிருக்கான்.. அவன்தான் ஏற்கனவே ஒருவாட்டி உன்னை அடிச்சிருக்கான்ல? மறுபடி மறுபடி நீ ஏன் அவன் கிட்ட போய் அடி வாங்கிட்டு நிற்கிறே?” என்று கேட்டாள் தேஜுவைப் பார்த்து..

 

“என்ன..? அருண் அடிச்சானா..? என்ன அருண்..? எதுக்கு அடிச்ச?” என்று நிலவழகன் கேட்க “ஏற்கனவே ஒரு முறை இவளை அடிச்சு எந்த தப்பை பண்ண கூடாதுன்னு சொன்னேனோ அதே தப்பை மறுபடியும் பண்ணா அடிக்காம கொஞ்சுவாங்ளா இவளை?” என்று கேட்டான் அருண்..

 

“ஏற்கனவே பண்ணின தப்பா? அப்படி என்ன பண்ணிண தேஜூ?” என்று கேட்க “நான் அவனை லவ் பண்றேன்.. அதனால அருணுக்கு இந்த ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணேன்.. ஐ லவ் யூ ன்னு சொன்னேன்..” என்றாள் தேஜூ..

 

தொடரும்..

 

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

 உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!