அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 45🔥

5
(7)

பரீட்சை – 45

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

புத்தாண்டு பரிசாய் 

என் தேவதை 

நான் அவள் மனதில் 

புகுந்து விட்டேன் 

என்றுரைக்க

 

பூமியிலிருந்து 

என் கால்கள் 

மேல் நோக்கி 

பறந்து 

புத்துலகம் 

போய்விட்ட 

புது மனிதனாய் 

ஆனேன் நான்

 

மனதினில் 

மத்தாப்பு 

சிதறல்கள்.. 

இருந்தாலும் 

மாதவளை 

ஏசினேன் என் 

மெய்யான முகம்

மறைத்து..

 

கோபம் கொண்டு 

கடிந்தாலும் 

கைநீட்டி அடித்தாலும் 

சிறிதும்

கலங்கவில்லை என் 

காதல் நாயகி

அவள்..

 

மீண்டும் மீண்டும் 

உன்னிடமே வந்து 

என் காதல் 

சொல்வேன் என 

முரண்டு பிடித்தாள் 

என் 

மாயமோகினி..

 

#############

 

மனதில் நிறைந்தவள்…!!

 

அருணிடம் பேசிவிட்டு நிலவழகன் அங்கிருந்து சென்றவுடன் சுமியுடன் அங்கே வந்த தேஜூ முதல் நாள் அந்த கல்லூரிக்கு வந்த போது  நித்திலாவின் வற்புறுத்தலால் எப்படி ஒரு சிகப்பு ரோஜாவை அருணிடம் கொடுத்து அவனை பார்த்து காதலிப்பதாக  சொன்னாளோ அதேபோலவே இப்போதும் சொன்னாள்..

 

ஆனால் இந்த முறை யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் அவள் மனதில் நிஜத்தில் இருந்த மலையளவு காதலை கண்ணில் தேக்கி வைத்து அருணை பார்த்து உளமாற அவனை விரும்புவதாக சொன்னாள்..

 

அருண் அருகே வந்தவள் தன் கையில் இருந்த ரோஜா மலரை நீட்டி “அருண்.. நேத்து வரைக்கும் எனக்கு ரொம்ப குழப்பமா இருந்தது.. நான் உன்னை விரும்புறேனா இல்லையான்னு.. இன்னிக்கு எனக்கு நிச்சயமா தெரிஞ்சிருச்சு.. நான் உன்னை மனசார விரும்புறேன்.. ஐ லவ் யூ அருண்..” என்று சொன்னபடி அவன் கண்ணை காதலுடன் பார்த்தவளின் செய்கையில் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒரு நிமிடம் தடுமாறித்தான் போனான் அருண்..

 

ஆனால் அடுத்த நொடியே சுதாரித்தவன் அன்று அறைந்தது போலவே இன்றும் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து இருந்தான்.. அப்போது தேஜூ அருணை தேடி போவதை பார்த்துக்கொண்டே அவளை பின்தொடர்ந்து வந்த நித்திலாவும் தேஜுவின் இந்த திடீர் காதல் நடவடிக்கையில் அதிர்ந்து தான் போனாள்.. ஆனால் அருண் அவளுக்கு கொடுத்த அடி நித்திலாவை ஏகத்துக்கும் மகிழ்வித்து இருந்தது..

 

“அதானே.. இந்த ருத்ரமூர்த்தி கிட்ட காதலை சொன்னா திரும்பவும் உனக்கு காதலா கிடைக்கும்.. அடி தான் கிடைக்கும்..” என்று எண்ணியவளுக்கு உதட்டோரம் லேசான புன்னகை மலர்ந்தது..

 

அருண் அவளை அறைந்த சத்தம் அங்கு சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேர் காதிலும் விழ அங்கே ஒரு சிறு கூட்டமே கூடியிருந்தது.. நிலவழகன் வந்து விஷயத்தை கேட்க அதற்கு தேஜு சொன்ன பதிலில் அவனும் கொஞ்சம் ஆடித் தான் போனான்..

 

“என்ன தேஜூ சொல்றீங்க? நீங்க அருணை லவ் பண்றீங்களா? இத்தனை நாள் அவனை பார்த்தாலே உங்களுக்கு பிடிக்காதே.. அன்னைக்கு நான் உங்ககிட்ட வந்து அவன் இப்படி பண்ணி இருக்கமாட்டான்..  அவன் அப்படிப்பட்டவன் கிடையாதுன்னு உங்களுக்கு புரிய வைக்கிறதுக்காக முயற்சி பண்ணப்போ அதைக் கேக்கறதுக்கு கூட நீங்க தயாரா இல்லை.. அப்ப நான் சொன்னதை  கூட நீங்க லேசுல நம்பவே இல்லையே.. அந்த வீடியோவை காட்டினப்பறம் தான் நம்புனீங்க.. இப்ப என்னடான்னா அருணை விரும்புறேன்னு சொல்றீங்க..” நம்பமாட்டாமல் கேட்டான் நிலவழகன்..

 

அவன் சொன்னதை கேட்ட நித்திலா “ஓ.. இதுக்கெல்லாம் நீ தான் காரணமா? இருடா இரு.. நீ செஞ்சதுக்கு எல்லாம் உனக்கும் பதில் கொடுக்கிறேன்” மனதிற்குள் கருவினாள்..

 

“நிலவழகா.. அதெல்லாம் யாரும் என்னை விரும்பல்லாம் இல்ல.. முதல் நாள் இவளை அடிச்சேன் இல்ல..? அதுக்கு பழிவாங்கறதுக்கு தான் இப்படி எல்லாம் டிராமா போட்டுட்டு இருக்கா.. இவ இப்படி எல்லாம் பேசினா இவளை நம்பி நான் உடனே இவ காதல் வலையில விழுந்துருவேன்னு ஏதேதோ கற்பனை பண்ணிட்டு இருக்கா.. அதெல்லாம் இந்த அருண் கிட்ட நடக்காது.. இங்க பாரு உன் பேர் என்ன..? ஹான்… ஏதோ… அஸ்வினி.. உன்னோட இந்த நடிப்பு எல்லாம் வேற எங்கேயாவது போய் வச்சுக்கோ.. இதான் உனக்கு லாஸ்ட் வார்னிங்.. இன்னைக்கு உன்னை அடிக்கிறதோட விட்டேன்.. இன்னொரு முறை இப்படி பண்ணின உன்னை கொன்னே போடுவேன்..” என்று அருண் சொன்னதைக் கேட்டு தேஜூ இதழ் விரிய புன்னகைத்தாள்..

 

அவள் புன்னகையை கண்ட அருணுக்கு விருவிருவென கோபம் ஏறியது.. “ஏய் நீ என்ன லூசாடி? நான் இவ்வளவு திட்டிக்கிட்டு இருக்கேன் உன்னை… நீ என்னடான்னா இப்படி சம்பந்தமே இல்லாம இளிச்சுகிட்டு இருக்கே.. உனக்கு வெட்கம் மானமே கிடையாதா?” என்றான்..

 

“நான் சம்பந்தம் இல்லாம ஒன்னும் சிரிக்கல.. இப்போ என் பேரு ஞாபகம் இல்லைன்னு சொல்லி ஏதோ அஸ்வினின்னு சொன்னியே… அதை நினைச்சு தான் சிரிச்சேன்… இங்க இருக்கிறவங்க எல்லாருமே என்ன தேஜூன்னு தான் கூப்பிடுறாங்க.. எப்பயோ ஒரு தடவை பிரின்ஸ்பல் மேடம் மட்டும்தான் என்னை தேஜஸ்வினின்னு முழு பேரை கூப்பிட்டு இருக்காங்க.. ஆனா இத்தனை தடவை இவங்க எல்லாம் கூப்பிட்டுட்டிருக்குற பேரு உனக்கு ஞாபகம் இல்ல.. பிரின்ஸ்பல் மேடம் கூப்ட்ட தேஜஸ்வினில தேஜூங்கற பேர் ஞாபகம் இல்ல.. ஆனா உன்னோட அருண்கிற பேருக்கு பெர்ஃபெக்ட் மேட்சிங்கா இருக்கிற அந்த அஸ்வினிங்ற பேரை மட்டும் கரெக்டா சொல்ற.. அப்படின்னா உன் மனசுல நான் அஸ்வினியா அழுத்தமா பதிஞ்சிருக்கேன்னு தானே அர்த்தம்..? நீ என்னை பத்தி நினைக்கவே இல்லன்னு எப்படி வேணா சொல்லிக்கோ.. அதை நம்பறதுக்கு நான் தயாரா இல்ல.. நான் உன்னை விரும்புறேன்.. இது உண்மை.. அதை உன்கிட்ட சொல்லிட்டேன்.. இனிமே தினமும் வந்து அதை உன்கிட்ட சொல்லிக்கிட்டே தான் இருப்பேன்.. உனக்கு ஆசையா இருந்தா தினமும் வேணா என்னை அடிச்சுக்கோ.. ஆனா நான் உன்னை காதலிக்கிறேன்.. இதுல எந்த மாற்றமும் இல்லை..” என்றாள் தேஜஸ்வினி அவனை தீர்க்கமாக பார்த்துக்கொண்டு..

 

அவள் சரியாக அவன் நாடி பிடித்து பேசியதை கேட்டவன் முகம் இறுக கை விரல்களை மடக்கி பல்லை கடித்துக் கொண்டு அவள் முன்னே சுட்டு விரலை நீட்டி “இதை பார்.. நான் ரொம்ப பொறுமையா இருக்கேன்.. இன்னொரு முறை உனக்கு சொல்ல மாட்டேன்.. இதோடு என் வழியில் குறுக்க வராத.. வந்தே..” என்று நிறுத்தியவன் அவள் கழுத்தருகில் அவள் கழுத்தைப் பிடிக்கப் போவது போல் தன் கையை வைத்துக்கொண்டு “கொன்னுடுவேன் உன்னை..” என்றான்..

 

“ம்ம்ம்ம்.. முடிஞ்சா கொன்னு போடு.. ஆனா உன்னால அது முடியாது.. எனக்கு தெரியும்.. நீ இப்ப அடிச்சது கூட எனக்கு சந்தோஷமா தான் இருக்கு.. நான் உனக்கு புது வருஷம் அதுவுமா ரோஸ் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணினேன்.. இது புது வருஷத்துக்கு நான் உனக்கு கொடுத்த கிஃப்ட்.. அதுக்கு ரிட்டன் கிஃப்ட்டா நீ என் கன்னத்துல அறைஞ்சிருக்க..” 

 

 தன் கன்னத்தில் கை வைத்து வருடிக்கொண்டே சொன்னவள் “எனக்கு இந்த கிஃப்ட் ரொம்ப புடிச்சிருக்கு.. டெய்லி நான் இந்த ப்ரபோஸலை கிஃப்ட்டா உனக்கு கொடுத்துக்கிட்டே இருப்பேன்.. நீயும் எனக்கு இந்த அடியையே தெனமும் கிஃப்ட்டா கொடுத்தாலும் எனக்கு சந்தோஷம் தான்.. தினமும் உன்கிட்ட அடி வாங்குறதுக்கு கூட நான் ரெடியா தான் இருக்கேன்..” என்று சொன்னவள் “ஓகே.. நீ உன் கண்ணுல தெரியுற காதலை மறைக்க கோபத்தை காட்டி ரொம்ப கஷ்டப்படுற.. இதுக்கு மேல உன்னை நான் கோபப்படுத்த விரும்பல.. நான் கிளம்புறேன்.. பாய்..” என்று சொன்னவள்  அவன் கையை பிடித்து புறங்கையில் அழுத்தமாய் தன் இதழை பதித்துவிட்டு “என்னை அடிச்ச கைக்கு என்னோட கிஃப்ட்” என்றவள் அவன் கன்னத்தை கிள்ளி “ஹேப்பி நியூ இயர் டா செல்லம்..” என்று சொல்லி அவன் முறைப்பை பதிலுக்கு வாங்கிக் கொண்டு அங்கிருந்து நேரே கல்லூரி வாயிலை நோக்கி ஏதோ சினிமா பாடலை மெதுவாக இசைத்துக் கொண்டே போனாள்..

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அருண் தன் காலை தூக்கி தரையில் அடித்து கோபத்தை காட்டியவன் அங்கே உட்கார மனம் இல்லாமல் தன் வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரியை விட்டு புறப்பட்டான்..

 

இவர்கள் பேசியதை பார்த்துக் கொண்டிருந்த நித்திலா “பரவாயில்ல.. கேம் இப்ப தான் கொஞ்சம் சூடு பிடிக்குது.. போக போக நானும் சேர்ந்து விளையாடி இதை இன்னும் இன்ட்ரஸ்டிங்கா ஆக்குறேன்..” ஒரு மெல்லிய புன்னகையோடு நினைத்துக் கொண்டாள்…

 

நிலவழகன் “இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தாங்கன்னா நல்லாத்தான் இருக்கும்.. ரொம்ப அழகான ஜோடி.. ரெண்டு பேருமே மனசால ரொம்ப நல்லவங்க.. ஆனா இந்த அருண் தான் ரொம்ப பிடிவாதமா இருக்கானே.. எந்த பொண்ணையும் திரும்பி பார்க்க மாட்டான்.. இந்த தேஜூவோ மறுபடியும் மறுபடியும் அவன்கிட்ட பேசி அடி வாங்கிட்டு இருக்கா.. என்னதான் நடக்க போகுதோ?” ஒரு பெருமூச்சை விட்டவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்..

 

#################

 

வைஷு 2012-ஆம் வருட டைரியை படித்து முடித்திருக்க அடுத்ததாய் 2013-ஆம் வருட டைரியை படிக்க தொடங்கியிருந்தாள்.. 

 

“அக்கா இந்த வருஷ டைரில உங்க வாழ்க்கையோட எந்த பகுதி ஒளிஞ்சிருக்கோ எனக்கு தெரியாது.. ஆனா என் அருணோட மனசு.. அவன் உங்க மேல வெச்ச உண்மையான காதல் இதெல்லாம் படிக்கும் போது உங்க மேல ரொம்ப பொறாமையா வருது கா.. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா அக்கா? இப்ப நீங்க ராம் சாரை கல்யாணம் பண்ணிக்காம இருந்திருந்தா இந்த டைரியை படிக்கற இந்த நிமிஷத்துல ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பீங்களோ? இந்த டைரியில இருக்கிற அருணோட காதலுக்கு நீங்க ரொம்ப மரியாதை கொடுத்து இருப்பீங்களோ?”

 

 வைஷூ கேட்க “இதை பாரு நீ சொல்றது எல்லாமே கற்பனை.. இனிமே அது நடக்க முடியாது.. எனக்கும் ராமுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.. நான் ராமை என் உயிரை விட அதிகமாக விரும்புறேன்.. இதுதான் உண்மை.. நீ என் மேல் பொறாமை பட்டதெல்லாம் போதும்.. நீ முதல்ல டைரியை படி” என்றாள் தேஜூ..

 

“ஏ.. வைஷூ.. அவங்கதான் அவ்வளவு தூரம் சொல்றாங்க இல்ல..? அப்புறம் ஏன் இந்த மாதிரி தர்ம சங்கடமான கேள்வி எல்லாம் கேட்டு அவங்களை தொந்தரவு பண்ற? பேசாம உன்னால டைரியை படிக்க முடியாதா? அவங்களை டார்ச்சர் பண்ணாத.. டைரியை படி..” என்றான் விஷ்வா..

 

வைஷூவும் தொடர்ந்து டைரியை படிக்க தொடங்கினாள்..

 

#################

 

அருணின் டைரியில்..

 

நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தால் என் அஸ்வினிக்கு என்னை பற்றி முழுமையாய் புரிந்திருந்தது.. அவள் என்னை பார்க்கும் விதமே மாறி இருந்தது.. கல்லூரியில் நான் வழக்கமாய் அமரும் மரத்தின் அடியில் என் தேவதையை காணும் ஆவலோடு வழி மேல் விழி வைத்து காத்திருந்து அவள் வராத ஏமாற்றத்தில் மறுபக்கம் திரும்பிய எனக்கு என் முகத்தருகே முகம் காட்டி தரிசனம் தந்து என்னை இன்பக் கடலில் மூழ்கடித்தாள் என்னுயிர் ஆனவள்..

 

ஆனாலும் அவள் முகம் வாட கடுமையாய் பேசி கசப்பை கொட்டினேன் அவளிடம்..

ஆனால் அது பற்றி எல்லாம் கவலைப்படாது அவளோ பதிலளிக்க முடியாத கேள்விகளை என்னிடம் கேட்டு என்னை திணறடித்தாள்..

 

மாலையில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த என் முன் என் தேவதை கையில் ஒரு ரோஜா மலரோடும் கண்ணில் அளவில்லா காதலோடும் “ஐ லவ் யூ” என்று இதழ் மலர என் முன்னே நின்றாள்.. அதில் ஒரு நொடி மயங்கி திக்குமுக்காடி தான் போனேன் நான்..

 

 அவளை வாரி அணைத்து “நானும் உன்னை உயிருக்கு உயிராய் விரும்புகிறேனடி என் தங்கமே..” என்று சொல்ல வேண்டும் போல இருந்தது.. ஆனால் அப்படி செய்ய முடியாமல் அந்த உணர்வை கட்டுப்படுத்த கொஞ்சம் திணறித்தான் போனேன் நான்..

 

அணைக்க வேண்டிய கையால் அவளை அடித்து விட்டேன்.. ஆனால் அதையும் புது வருட பரிசாக ஏற்றவள் தன் பரிசாக காதலை சொன்னதோடு நில்லாமல் என் கையில் இதழ் முத்தம் பதித்து சென்றாள்..

 

கடவுள் எனக்கு நான் விரும்பிய வரத்தை கொடுத்தும் அதை அனுபவிக்க முடியாத பாவியாய் இருக்கிறேன் நான்.. உன்னை இதற்கு மேல் வெறுத்து ஒதுக்கினால் உன் மனம் உடையும் என்று தெரிந்து உன்னை வெறுப்பதாய் நடிக்கிறேனடி என் ஆருயிரே..

 

அழகே.. அஸ்வினி… என்னை மன்னித்து விடு.. நீ மனமுடைந்து போவதை கண்டால் நானும் உடைந்துதான் போவேன்.. என்றாலும் உன்னை ஏற்றுக் கொண்டு உன்னையே இழந்துவிட்டு இந்த உலகத்தில் வாழும் சக்தி எனக்கு இல்லை…

 

###################

 

வைஷு அந்த பக்கத்தை படித்து முடிக்கும் போது தேஜூ அந்த டைரியை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.. திடீரென அந்த டைரியை வைஷூவிடம் இருந்து பறித்து அந்த அறையின் மூலையில் விட்டெறிந்தாள்.. 

 

“இதெல்லாம் பொய்.. இதுல இருக்குறது எல்லாம் உண்மை இல்ல.. இவன் ஏதோ கதை எழுதி இருக்கான்.. இவன் என் வாழ்க்கையை குழப்ப பாக்குறான்.. என் மனசை குழப்ப பாக்குறான்.. நான் இதெல்லாம் நம்ப மாட்டேன்.. வேண்டாம்.. எனக்கு இந்த டைரியை படிக்க வேண்டாம்.. நான் போறேன் இங்க இருந்து..” வெறி பிடித்தவள் போல் கத்திக்கொண்டு திரும்ப போனவளை கைப்பிடித்து நிறுத்தினாள் வைஷு..

 

“ஏன்க்கா.. அந்த டைரியில எழுதி இருக்கிறது உங்களை பத்தி தான்னு உங்களுக்கு முழுசா நம்பிக்கை வந்துடுச்சா? ஒருவேளை அது நீங்களா இருந்தா உங்க ராம் சாருக்கு நீங்க துரோகம் பண்ணி இருப்பீங்களோன்னு மனசுல ஒரு பயம் வந்துருச்சா?” 

 

குரலில் சலனம் இல்லாமல் வைஷூ கேட்க தன் மனம் போகும் போக்கையும் அதை வைஷூ சரியாக கணித்துவிட்டதையும் எண்ணி அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் தேஜூ..

 

“இல்ல இல்ல.. நிச்சயமா என் ராமுக்கு எந்த காலத்துலயும் நான் துரோகம் பண்ணி இருக்க மாட்டேன்.. இல்ல.. இது உண்மை இல்ல.. இது உண்மை இல்ல.. என்  ராமை தவிர யார் கிட்டயும் நான் காதலிக்கிறேன்னு சொல்லி இருக்க மாட்டேன்.. இந்த அருண் பொய்.. இந்த டைரி பொய்.. என் ராம் மேல நான் வெச்சிருக்கற காதல் மட்டும் தான் உண்மை.. ஐ லவ் யூ ராம்.. ஐ லவ் யூ ஒன்லி…” 

 

கண்களில் மிரட்சியுடன் பின்னாலேயே அடி மேல் அடி வைத்து சென்றவள் சுவற்றில் அவள் முதுகு பக்கம் மோத அப்படியே கால் மடித்து அமர்ந்து தலையில் கை வைத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள்..

 

 ” ஐ லவ் யூ ராம்.. நான் உங்களை மட்டும் தான் காதலிக்கிறேன்.. யூ ஆர் மை லைஃப்… என் லைஃப்ல வேற யாருக்கும் இடம் கிடையாது.. ஐ லவ் யூ ஒன்லி ராம்..” என்று சொன்னதையே மறுபடி மறுபடி சொல்லி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!  கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!!  இந்த யூடி பத்தியும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி

“❤️சுபா❤️”

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!