32. மகிழ்ந்து மரிக்கும் வரம் ஏனோ..?

5
(17)

வரம் – 32

“ஹேய் ரிலாக்ஸ் மோஹி… இப்போ என்ன ஆச்சுன்னு இப்படிக் கத்துற..?” என அப்போதும் தன்னுடைய நிதானத்தை இழக்காமல் பொறுமையாகக் கேட்டான் ஷர்வாதிகரன்.

இயல்பில் அவன் பொறுமை என்றால் என்ன விலை எனக் கேட்பவன்தான்.
ஆனால் தன்னுடைய காதல் விடயத்திலோ மிக மிக பொறுமையைக் கடைப்பிடித்தான் அவன்.

“வாட் இப்போ என்ன ஆச்சுன்னு நான் கத்துறேனா…? என்ன ஆகல…? உன்னால என்னோட வாழ்க்கை முழுக்க அழிஞ்சு நாசமா போச்சு… போதுமா…?

என்னைக்கு இங்க உனக்கு ஹெல்ப் பண்றதுக்காக வந்தேனோ அன்னைக்கே என்னோட நிம்மதி சந்தோஷம் எல்லாமே போச்சு…
இங்க வராம நான் அமெரிக்காலயே இருந்திருந்தேன்னா எங்க அப்பா கூடவாச்சும் நிம்மதியா இருந்திருப்பேன்.‌‌ நான் இங்கே வந்ததாலதான் அவருக்கும் மனசு உடைஞ்சு போச்சு தனிமையிலிருந்து செத்துப் போயிட்டாரு…

சே…! உனக்கென்ன நீ பக்கா செல்ஃப்பிஷ், உனக்கு உன்னோட வைரம் கிடைச்சா போதும்.‌‌ அதே மாதிரி உன்னோட காதல் ஜெயிச்சா போதும்.. மத்தவங்களோட காதல பத்தியோ அவங்களோட மனசு பத்தியோ உனக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லைல்ல…?

அப்பாவோட சந்தோஷத்துக்காகத்தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டேன்… ஆனா இப்போ எதுக்காக பண்ணிக்கிட்டோம்னு நரக வேதனையில் கிடந்து வெந்துகிட்டு இருக்கேன்….

ஹேய் உனக்கு என்னடா வேணும் சொல்லு… இந்த உடம்பு தானே உன்னோட டார்கெட்…?

அதுக்காகத்தானே காதல் காதல்னு பினாத்திக்கிட்டு இருக்க..?
எடுத்துக்கோ… என்ன முழுசா அனுபவிச்சதுக்கு அப்புறமா டிவோர்ஸ் கொடுத்துடுவ தானே…?

எப்போ பாத்தாலும் வாயை மூடாம பேசிக்கிட்டே இருப்பியே… இப்போ எதுக்காக அமைதியா இருக்க…? பேசி தொலைக்கலாம்ல…?

சொல்லு என்ன முழுசா அனுபவிச்சு முடிச்சதுக்கப்புறம் எனக்கு டிவோர்ஸ் கொடுத்துடுவ தானே..?” எனக் கேட்டவள் உச்சகட்ட கோபத்தில் தன்னுடைய ஆடைகளை வேக வேகமாக கழற்றத் தொடங்க,

“ஸ்டாப் இட்….” எனக் கர்ஜித்தான் அவன்.

அவனுக்கோ அவளுடைய செயல்கள் யாவும் பேரதிர்ச்சியைக் கொடுத்தன.

“போ… போதும்டி… இனி ஒரு வார்த்தை உன்னோட வாயிலிருந்து வந்தாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்….” என்றவன் அவளுடைய பட்டன்கள் கழன்று கிடந்த ஆடையை வெறுப்போடு பார்த்துவிட்டு படுக்கையில் இருந்த போர்வையை எடுத்து அவள் மீது விட்டெறிந்தான்.

“இப்போ எதுக்கு பெரிய உத்தமன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க.. எல்லா ஆம்பளைங்களும் இந்த உடம்புக்குத் தானே ஆச….” என அவள் கூறி முடிப்பதற்கு முன்பே அவளுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் ஷர்வா.

“ஏய்ய்ய்…. உஷ்….. இனி ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை கூட நீ பேசக் கூடாது… காதலுக்கும் காமத்துக்கும் அர்த்தம் தெரியாத உன்னை காதலிச்சத நினைச்சு எனக்கே அசிங்கமா இருக்குடி…

உடம்புதான் முக்கியம்னா இங்க எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க… உலகத்திலேயே நீ மட்டும்தான் பொண்ணுன்னு நினைப்பா..? உன்னை உயிருக்கு உயிரா காதலிச்சேன்டி… அதுக்காக மட்டும்தான் உன்ன விட்டுக் கொடுக்காம என் கூடவே வச்சிருக்க நினைச்சேன்… ஆனா நீ இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு தெரிஞ்சதும் என்னை நானே கட்டாயப்படுத்தி என்னோட மனச மாத்திக்கிட்டேன்…
உன்ன விட்டு விலகித்தான் போனேன்… நீதான்டி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்ன… உங்க அப்பாக்காக சொத்துக்காக என்ன கல்யாணம் பண்ணது நீ…

என்னால நம்ம கல்யாணத்த நாடகமா நினைக்க முடியலடி… நினைக்கவும் முடியாது… இந்த நிமிஷம் வரைக்கும் உன்ன என்னோட மனைவியாதான் பார்த்துகிட்டு இருக்கேன்… ஆனா என் கூட இருக்கிறது நரகத்துல இருக்கிற மாதிரின்னு எப்போ சொன்னியோ போதும்டி… இதுக்கு மேல உன்னை இழுத்துப் பிடிச்சு வெச்சிருக்க எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை…
உனக்கு டிவோர்ஸ் தானே வேணும்..? சொல்லுடி அது தானே வேணும்..? நான் கொடுத்துர்றேன்.. ப்ரோப்ரா இந்த கல்யாணத்திலிருந்து உனக்கு விடுதலை கொடுத்திடுறேன்… ஆனா நீ அரவிந்தன்கிட்ட மட்டும் போகவே கூடாது.. நான் எப்படி உன்னோட வாழ்க்கைல இனி இல்லையோ அதே மாதிரி அரவிந்தனும் உன்னோட வாழ்க்கைல இனி இருக்கவே கூடாது.. நீ உங்க ஊருக்கே போயிரு…..” என அவளைப் பார்த்துக் கூறிவிட்டு அவன் அந்த அறையை விட்டு வெளியே சென்று விட அவளுக்கோ புயல் அடித்து ஓய்ந்தாற் போல இருந்தது.

அவன் அடித்ததில் கன்னம் வெகுவாக வலித்தது.

கரங்கள் நடுங்க தன்னுடைய ஆடையின் பட்டன்களை மீண்டும் போட்டுக் கொண்டவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

தலை வலிப்பது போல இருந்தது.

அரவிந்தன் மீது இருந்த அனைத்து கோபத்தையும் ஷர்வாவிடம் கொட்டி விட்டோம் என்பது புரிய தன் தலையில் அடித்துக் கொண்டாள் அவள்.

அளவு மீறி நடந்து கொண்டோமோ என மனம் தவிக்கத் தொடங்கியது.

காதலும் தேவையில்லை கல்யாணமும் தேவையில்லை என அனைத்தையும் ஒதுக்கி எறிந்து விட்டு மீண்டும் தன்னுடைய ஊருக்கே கிளம்பி விடலாமா என சிந்திக்கத் தொடங்கியது அவளுடைய காயம் பட்ட மனம்.

ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கிக் கொண்டே போக அதிலிருந்து விடுதலை அடையும் வழி தெரியாது அப்படியே அசைவற்று வெகு நேரமாக அமர்ந்திருந்தாள் அவள்.

வெளியே சென்ற ஷர்வாதிகரனோ கிட்டத்தட்ட 4 மணி நேரம் கழித்தே அறைக்குள் வந்தான்.

வந்தவன் அறை முழுவதும் இருளில் மூழ்கி இருப்பதைக் கண்டு மின் விளக்கை ஒளிரச் செய்ய அங்கே சோபாவில் இருளில் அமர்ந்திருந்த மோஹஸ்திராவைக் கண்டு அவனுடைய புருவங்கள் உயர்ந்தன.

இருந்தும் அவளிடம் எதுவும் பேசத் தோன்றாது அமைதியாக அவன் அறைக்குள் நுழைய ஒளி அந்த அறைக்குள் படர்ந்ததன் பின்னரே அவளுக்கு சுயம் திரும்பியது.

வெகு நேரமாக எதையெதையோ சிந்தித்த வண்ணம் அப்படியே இருந்து விட்டோம் என்பது புரிய மெல்ல எழுந்து குளியல் அறைக்குள் நுழைந்தாள் அவள்.

உடல் வியர்த்துப் போய் இருந்தது.
தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு வெண்ணிற துவாலை ஒன்றை தன்னுடைய மார்பில் எடுத்து முடிந்து கொண்டவள் ஷவரின் கீழே நின்றாள்.

சிந்தனைகள் அவளைத் தீயாய் எரிக்க அவளது கவனம் முழுவதும் அரவிந்தன் பேசிய வார்த்தைகளிலும் ஷர்வா கொடுத்த விடுதலையிலும் நிலைத்திருந்தது.

மிகப்பெரிய தவறு செய்து கொண்டிருக்கிறோமோ என அவளுடைய மனம் அச்சத்தில் பதைபதைக்கத் தொடங்க மீண்டும் தன்னுடைய சுயம் மறந்து வெகு நேரமாக ஷவரின் அடியிலேயே நிற்கத் தொடங்கி இருந்தாள் அவள்‌.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் வெளியே வராது போக அறைக்குள் அமர்ந்திருந்த ஷர்வாதிகரனுக்கோ பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

சில மணி நேரங்களுக்கு முன்னர் அவள் நடந்து கொண்ட விதமும் இப்போது உள்ளே சென்று வெகு நேரமாகியும் அவள் வெளியே வராது போக அவனுக்கோ மனதை அச்சம் கவ்விக் கொள்ளத் தொடங்கியது.

இன்னும் சில நிமிடங்கள் பொறுமையாக காத்திருந்து பார்த்தவன் அவள் வரவில்லை என்றதும் வேகமாக எழுந்து சென்று குளியல் அறைக் கதவைப் படபடவெனத் தட்டினான்.

அவன் தட்டிய வேகத்தில் அவளோ சிந்தனைகள் கலைந்து பதறிப் போய் வேகமாக என்னவோ ஏதோ என்று கதவைத் திறக்க கீழே இருந்த சோப்பு நுரையில் அவளுடைய பாதங்கள் பட்டு சட்டென அவளை வழுக்கி விட்டது.

கதவைத் திறந்தவள் நிற்க முடியாது அப்படியே பின்பக்கமாக சரிந்து தரையில் விழுந்து விட,

“ஹேய் பார்த்துடி…” எனப் பதறியவன் அவளைப் பிடிப்பதற்கு முன்னரே அவளுடைய கால்கள் பின்பக்கமாக மடங்கி அவளுடைய இடுப்பு தரையோடு மோதி இருந்தது.

ஆவென வலியில் அலறியவளைப் பார்த்து அவனுக்கு உள்ளம் பதறிப் போக சட்டென அவளைத் தன் கரங்களில் ஏந்திக் கொண்டவன் அவளை சோபாவில் அமரச் செய்துவிட்டு இன்னொரு துவாலையை எடுத்து வந்து அவளுடைய தோள்களைப் போர்த்தி விட்டான்‌.

அவளுடைய அரை குறை ஆடை அவனை நிலைகுலைய வைத்தது.

ஆனால் அடுத்த நொடியே அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவனுடைய நினைவடுக்கில் தோன்றி விட அவளைப் பார்ப்பதையே தவிர்த்துக் கொண்டான் அவன்.

அவன் கொடுத்த துவாலையால் நன்றாக தன்னைப் போர்த்திக் கொண்டவள் வலியோடு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“எங்க அடிபட்டுச்சுன்னு சொல்லு தைலம் தேய்க்கலாம்… இல்லன்னா டாக்டரை வரச் சொல்லவா..?” என அவன் கேட்க தன்னுடைய மடங்கிய கால்களைத் தன் ஒற்றைக் கரத்தால் நீவி விட்டவள்,

“ஹிப்லையும் கால்லையும் அடிபட்டுருச்சு.. பெயின் கில்லர் ஸ்ப்ரே இருந்தா கொடுங்க…” என முனகியவாறு கூற அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தான் அவன்.

மெல்ல நிமிர்ந்தவள் அவன் தன்னைப் பார்க்காது தரையைப் பார்த்த வண்ணம் ஸ்ப்ரேயை நீட்டிக் கொண்டிருப்பதை கண்டு நிம்மதியாக பெருமூச்சு விட்டவள் அதை வாங்கிக் கொண்டாள்.

“நீ… நீங்க கொஞ்சம் வெளியே இருக்க முடியுமா..?” என அவள் கேட்க,
“ஓகே ஏதாவது வேணும்னா உடனே கூப்பிடு..” என்றவன் பால்கனியில் போய் நின்று கொண்டான்.

அவன் சென்றதும் தன் உடலில் சுற்றி இருந்த துவாலையை விலக்கி வலித்த இடத்தில் அந்த ஸ்ப்ரேயை அடித்தவள் தன் கரங்களால் சற்று நேரம் நீவி விட்டாள்.

பின் மீண்டும் துவாலையைத் தன் உடலைச் சுற்றி விட்டு எழுந்து கொள்ள முயன்றவளுக்கு கால்கள் வெகுவாக வலித்தன.

நடக்க முடியாது போக பெருமூச்சோடு பால்கனி நோக்கி தன்னுடைய பார்வையைத் திருப்பியவள் “ஷர்வாஆஆஆ…” என சத்தமாக அழைத்தாள்.

அடுத்த நொடியே அவன் வேகமாக அவள் அருகே வந்து நிற்க,

“நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணணும்… என்ன வாட்ரோப்புக்கு பக்கத்துல அழைச்சிட்டு போக முடியுமா..?” எனக் கேட்க,

“ஓகே….” என்றவனுடைய கரங்கள் அவளைக் கையில் பூமாலை போல ஏந்திக் கொண்டன.

அவனுடைய அழுத்தமான பிடியில் உடல் கூசத் தொடங்கியது அவளுக்கு.

இதழ்களைக் கடித்து தன்னுடைய முகமாற்றத்தை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டவள் தனக்கான ஆடைகளை எடுத்ததும் அவனைப் பார்க்க அவனோ மறுபுறமாக திரும்பி நின்று கொண்டான்.

நிம்மதிப் பெருமூச்சோடு வேகமாக தன்னுடைய ஆடைகளை அணிந்து கொண்டவள்,

“ஓகே நீங்க திரும்பலாம்..”

“ம்ம்..” எனத் திரும்பியவனின் பார்வை ஆழமாக அவளுடைய முகத்தில் நிலைத்தது.

“உன்னோட அப்பா இறந்ததுக்கு அப்புறமா லாயர் கேட்டுக் கிட்டதாலதான் நம்ம திருமணத்தை ரெஜிஸ்டர் பண்ணிக்கிட்டோம்… இப்போ நினைக்கும் போது அத பண்ணாமலே இருந்திருக்கலாம்னு தோணுது… இட்ஸ் ஓகே நான் லாயர்கிட்ட பேசிட்டேன்… ரெண்டு பேரோட சம்மதமும் இருந்தா சீக்கிரமா டிவோர்ஸ் கிடைச்சுரும்…” என இரும்பென இறுகிய குரலில் கூறிவிட்டு அவன் சோபாவில் அமர்ந்து தன்னுடைய அலைபேசியைப் பார்க்கத் தொடங்க விடுதலை என எண்ணி மகிழ்வதா இல்லை மனம் உள்ளே தவிப்பதை எண்ணிப் பதறுவதா என்று புரியாது குழம்பிப் போனாள் அந்த மாது.

💜💜💜💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!