நெருக்கம் – 05
தன்னைச்சுற்றி நடக்கும் எதைப் பற்றியும் அறியாது சிறு சிறு குறும்புகளுடனும், மகிழ்ச்சியுடனும் அந்த வீட்டில் நடமாடிக் கொண்டிருந்தாள் அபர்ணா.
நேற்று இருந்ததைப் போல இன்று யாருடைய முகத்திலும் அவ்வளவு சோகம் இல்லாதிருந்தமையே அவளுடைய உற்சாகத்தை மேலும் அதிகரித்திருந்தது.
22 வயதே நிரம்பிய அந்த வீட்டின் கடைக்குட்டி அவளுக்கோ இதுவரை கவலைகள் ஏதும் அவ்வளவாக இருந்ததே இல்லை.
எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவளுக்கு பிடித்த உணவுகள், அதிக ஆடம்பரம் இல்லாத அவளுக்குப் பிடித்த ஆடைகள், அவ்வப்போது அவள் விரும்பிக் கேட்கும் பிஸ்கட் கோன் ஐஸ்கிரீம் என அவளுடைய வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது.
அன்றும் அவளுடைய சிறிய பிளேயரில் பாடலைப் போட்டு, அதை இரசித்தவாறே பாடப்புத்தகத்தில் எதையோ எழுதிக் கொண்டிருந்தவளின் அருகே பத்மா வந்து நிற்க,
“என்னம்மா…? சொல்லுங்க…” என்றாள் அவள்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” எனச் சற்றுத் தயக்கத்தோடு கூறினார் அவர்.
தன்னுடைய அன்னையை வியந்து பார்த்தவள் தன்னிடம் பேசுவதற்கு என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது என எண்ணி,
“இதென்ன…? புதுசா பர்மிஷன் எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கீங்க… என்னன்னு சொல்லுங்க…” என்றாள்.
“இல்லம்மா… நல்ல வரன் வந்திருக்கு… அப்பாவுக்கும், எனக்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு…. உனக்கு பேசி முடிக்கலாம்னு இருக்கோம்…” என்றதும், அவளுடைய விழிகளோ வியப்பில் விரிந்தன.
“இன்னைக்கு ஏப்ரல் ஃபூலா…? இல்லையே…! அப்புறம் ஏன்மா இப்படி பேசுறீங்க…? ஏதாவது ப்ராங் பண்ணப் போறீங்களா…?” என சிரித்தவாறு கேட்டவளைப் பார்த்து பத்மாவுக்கோ தொண்டை அடைத்தது.
“நான் விளையாடல… சீரியஸ்ஸாதான் பேசுறேன்…” என்றதும், தன்னுடைய தாயை முறைத்துப் பார்த்தவள்,
“நான் இன்னும் படிச்சுக் கூட முடிக்கல… அதுக்குள்ள எனக்கு ஏன்மா கல்யாணம்…?” சற்றுக் கோபம் மீதூறிய குரலில் கேட்டாள் அபர்ணா.
தன்னுடைய அன்னை சொன்னதை அவளால் கிஞ்சித்தும் ஏற்றுக் கொள்ள முடியாது போனது.
“இதோ பாரு… உன்னோட வயசு என்ன உனக்கு எப்போ என்ன பண்ணனும்னு… உன்னை விட எங்களுக்கு நல்லாவேத் தெரியும்… நாங்க என்ன பண்ணினாலும் உன்னோட நல்லதுக்குத்தான் இருக்கும் என்பதை மறந்துட்டு பேசாத…”
“அதெல்லாம் எனக்கு நல்லாவே தெரியும்மா… நீங்களும், அப்பாவும் என்னோட நல்லதுக்காக மட்டும் தான் எல்லாமே பண்ணுவீங்க… நான் ஒன்னும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே… இன்னும் நாலு வருஷம் போகட்டும்னு தானே சொல்றேன்… இப்பவே இந்த கல்யாணத்துக்கு என்ன அவசரம்..?” எனச் சற்று கவலையான குரலில் கேட்டாள் அவள்.
பெருமூச்சோடு தன் தலையை பற்றிக் கொண்ட பத்மாவுக்கோ விழிகளில் இருந்து கண்ணீர் நில்லாமல் வழியத் தொடங்கியது.
அன்னையின் கண்ணீரைக் கண்டதும் பதறிப் போனாள் அபர்ணா.
“ஐயோ..! எ.. என்னம்மா..? ஏன் இப்போ அழுகுறீங்க..? நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா..?” எனப் பதறியவாறு கேட்டவளின் கரத்தைப் பற்றிக் கொண்டவர்,
நேற்று சாதனா கூறிய அனைத்தையும் கூற அபர்ணாவுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
அக்காவின் கணவன் தன்னை இரண்டாவது தாரமாக திருமணம் செய்யக் கோரியது, அவளை உறைய வைத்தது.
“இதை விட்டா எனக்கும், அப்பாவுக்கும் வேற வழி தெரியல.. சாதனாவை வச்சு மிரட்டி உன்னையும் கல்யாணம் பண்ண சொல்லிக் கேட்டா..? நாம என்னதான் பண்றது.. அவளுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு.. அவன் வேணாம் விட்டுட்டு வா நாங்க பார்த்துக்கிறோம்ன்னு சொன்னாலும், சாதனா நம்ம பேச்சை கேட்க மாட்டேங்கிறாளே.. இன்னும் அவள்தான் அந்தக் காதலை புடிச்சு தொங்கி அழுதுகிட்டு இருக்கா.. அவனுக்குக் கொஞ்சம் கூட இவ மேல பாசமே இல்லை.. இவங்களோட இந்த இழுபறி வாழ்க்கைல உன்னையும் இழுத்து சீரழிச்சிடுவாங்களோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்குமா..
இன்னைக்கு நேத்து இல்ல மூணு வருஷமா உன்ன கல்யாணம் பண்ணித் தர சொல்லி ஒரே பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கானாம்.. உனக்குன்னு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்துட்டா கண்டவனும் என் பொண்ணு மேல கண்ண வைக்க மாட்டான்ல.. அதனாலதான் சீக்கிரமா உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு எடுத்தோம்..
நம்ம நல்ல நேரமோ என்னவோ தானாவே ஒரு வரன் தேடி வந்திருக்கு.. ரொம்ப வசதியான பையன்.. நாம எதிர்பார்க்கிற மாதிரி ரொம்ப நல்ல குணத்தோட வந்திருக்கான்.. உன்னோட வாழ்க்கையாவது நல்லா இருக்கும்னு நம்புறோம்.. அம்மா சொன்னா கேட்பா தானே கண்ணம்மா..” என அழுகையோடு பத்மா கூற அதிர்ந்து போய் இருந்தவளுக்கு அதற்கு மேல் அந்த திருமணத்தை மறுக்கத் தோன்றவே இல்லை.
“உங்க இஷ்டம்மா…” எனக் கூறி அவள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு சிந்திக்கத் தொடங்க அவளுக்கு தனிமையைக் கொடுத்து விட்டு, அந்த அறையை விட்டு வெளியே சென்றார் பத்மா.
சற்று நேரத்தில் குருநாத் நேற்றைய தினம் குருஷேத்திரன் கொடுத்த பத்திரிகையை பத்மாவிடம் கொடுக்க, அதைப் பார்த்த பிறகு நெஞ்சம் பதைபதைக்கத்தான் செய்தது.
இருந்தும் தன்னுடைய உணர்வை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டால் மகள் இன்னும் பயந்து விடுவாள் என்பதை கருத்தில் கொண்டவர், தன்னுடைய உணர்வுகளை முற்று முழுதாக மறைத்துக் கொண்டார்.
சற்று நேரம் அமைதியாக இருந்து தன்னை சமப்படுத்திக் கொண்டவர், பத்திரிகையை எடுத்துக் கொண்டு அபர்ணாவிடம் கொடுத்துவிட்டு வெளியே வந்து விட, ‘அதற்குள் பத்திரிகையே அடித்து விட்டார்களா..?’ என விக்கித்துப் போனாள் அபர்ணா.
இதுவரை திருமணம் பற்றி கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காதவளுக்கு மேலும் மேலும் அதிர்ச்சியே கூடிக் கொண்டு போனது.
தன்னுடைய திருமணப் பத்திரிகை எனத் தெரிந்தும் அதனை எடுத்துப் பார்க்கவே மிகவும் தயங்கினாள் அவள்.
எத்தனையோ காதல் கடிதங்கள் அவளுக்கு இதுவரை வந்திருக்கின்றன.
எத்தனையோ ஆண்கள் அவள் பின்னால் சுற்றிச் சுற்றி காதலுக்காக யாசகம் கேட்டு இருக்கின்றனர்.
அப்போதெல்லாம் அவளுடைய மனம் தன்னை திருமணம் செய்யப் போகும் ஆணை மட்டும்தான் காதலிக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருக்கத் தனக்கு வந்த காதல் கோரிக்கைகளை எல்லாம் நிராகரித்து வந்திருந்தாள் அபர்ணா.
இதுவரை அவள் தன்னுடைய திருமணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவே இல்லை.
அவளிடம் இருந்து பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.
இனி மாற்றுவதற்கு எதுவும் இல்லை என்பதை சிரமப்பட்டு தன் மூளையில் ஏற்றிக் கொண்டவள், அந்த பத்திரிக்கையை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.
அதில் குருஷேத்திரன் வெட்ஸ் அபர்ணா என இருப்பதைக் கண்டு புருவங்கள் உயர்ந்தன.
‘யார் இந்த குருஷேத்திரன்..?’ என்ற கேள்வி எழுந்தது.
‘இருக்கட்டும் இப்போது அனைத்தையும் விசாரிப்பது சரியாக இருக்காது. அப்புறமாக அம்மாவிடம் அவனைப் பற்றி கேட்டுக்கலாம்..’ என எண்ணி பத்திரிகையை வைத்துவிட்டு வெளியே வந்தாள்.
அதே கணம் அங்கே வந்த ரகுநாத்தோ..,
“உனக்குக் கல்யாணத்துக்கு சம்மதம் தானே கண்ணம்மா…?” எனக் கேட்க, தன்னுடைய தாயைப் பார்த்தவள், ஆம் என தலை அசைத்தாள்.
“எனக்குத் தெரியும் என்னோட பொண்ணு என்ன புரிஞ்சிப்பான்னு. எனக்கு நல்லாவே தெரியும்.. 38 வயசு கொஞ்சம் அதிகம்தான் ஆனா, அவரு உன்ன நல்லா பாத்துப்பேன்னு சொல்லி இருக்காரு.. நீ எதை நினைச்சும் கவலைப்படாத…” என்றவர்,
அவளுடைய தலையை வருடி விட்டு, வேறு ஷர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு வெளியே சென்று விட,
“என்ன 38 வயசா…?” என அந்த வீடு அதிரும் வண்ணம் உரத்த குரலில் கத்தினாள் அபர்ணா.
அவள் கத்திய கத்தில் பத்மா தன் கரத்தில் வைத்திருந்த பாத்திரத்தை தரையில் தவற விட்டார்.
“அடியே..! இப்போ எதுக்குடி..? இப்படி பேய் மாதிரி கத்துற..” என கோபத்தோடு கேட்டார் பத்மா.
“என்னம்மா..? எனக்கு கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு.. யாரோ அரைக்கிழவன மாப்பிள்ளையா பார்த்து வச்சிருக்கீங்க.. என்னால எல்லாம் வயசு போனவன கல்யாணம் பண்ணிக்க முடியாது… அப்பா வந்ததும் எனக்கு சம்மதம் இல்லைன்னு சொல்லிடுங்க…” என கீச்சுக் குரலில் கத்தி முடித்தவள். தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
கோபத்தில் அவளுடைய நெஞ்சம் வேகமாக ஏறி இறங்கியது.
“என்ன நெனச்சுக்கிட்டு இருக்காங்க… 38 வயசு கிழவனைப் போய் எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க எப்படி இவங்களுக்கு மனசு வந்துச்சு…” என பொரிந்து தள்ளியவள், அங்கே மேசையில் கிடந்த பத்திரிகையைக் கண்டதும் வெறியாகி வேகமாக அதனை எடுத்து கிழி கிழி என கிழித்துத் துண்டு துண்டாக அறைக்குள் சிதற விட்டாள்.