பரீட்சை – 65
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன் பெயரை
என் கையில்
செதுக்கிய
அந்த நொடி
ஓராயிரம்
வண்ணத்துப்பூச்சி
ஒன்றாய் சிறகடித்தது
போல
உடலெங்கும்
சிலிர்த்ததடா..
உயிர் பிரிந்து
போகும் வரை
உளத்தில் மட்டுமின்றி
உடலிலும் உன் பெயர்
தந்த
உரைக்க முடியா
இன்பங்களை
உவகையுடன் உணர்வேனடா..
நீ என்னோடு
கலந்து விட்டாய்
என
நினைவிலே நான்
செதுக்கி இருக்க
நிஜத்திலே அனைவருக்கும்
நீயும் நானும்
இணைப்பிரியா
இரு உயிர்கள் என
புரிய வைக்கும்
நம் கையில்
பச்சை குத்திய
ஓவியங்கள்…!!
#########################
நினைவிலே என்றும் நீ..!!
“இந்த டிரஸ் அழகா இருக்கு.. ஆனான்னு ஏதோ சொல்ல வந்த.. என்ன விஷயம்..? ஒழுங்கா உண்மையை சொல்லு..” என்று கேட்டான் அருண் தேஜூவிடம்..
“இல்ல.. எனக்கு கிரீன் தான் ரொம்ப பிடிக்கும்.. இதே டிசைன் கிரீன் கலர்ல இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.. ஆனா உனக்கு பிங்க் பிடிக்கும்னா நான் அதையே வாங்கிக்கிறேன்..” என்று அவள் சொல்ல இடவலமாக தலையை ஆட்டிய அருண் “எப்பவுமே உனக்கு பிடிச்ச கலரை வேர் பண்ணா தான் உன்னோட கான்ஃபிடன்ஸ் ஹையா இருக்கும்.. அதனால நீ கிரீன் கலரே வாங்கிக்கோ..” என்று அதே வடிவமைப்பில் வெளிர் பச்சை நிறத்தில் இருந்த ஆடையை அவளுக்கு பரிசாக வாங்கி தந்தான்..
அதன் பிறகு அவள் அவனிடம் “எனக்கு இன்னொரு ட்ரெஸ் வேணும்” என்று கேட்க “எடுத்துக்கோ.. உனக்கு இல்லாததா?” என்று கேட்டான் அவன்..
“இல்ல.. நீயே உன்னோட மெக்கானிக் ஷெட்ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு ஃபீஸ் எல்லாம் கட்டுற.. நான் வேற உனக்கு செலவு வைக்க வேண்டான்னு பார்த்தேன்..” என்று அவள் சொல்ல “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. என்கிட்ட இப்போதைக்கு பணம் நிறைய இருக்கு.. உனக்கு நிச்சயமா இன்னொரு டிரஸ் வாங்கி தர முடியும்.. எடுத்துக்கோ..” என்று சொல்ல நேரே சென்று அந்த பிங்க் நிற ஆடையை எடுத்துக் கொண்டு வந்தாள்..
“எதுக்கு ஒரே மாதிரி ரெண்டு ட்ரெஸ் வாங்குற..?” என்று அவன் கேட்க “நான் டான்ஸ் காம்பெட்டிஷன்க்கு இதை தான் போட்டுக்க போறேன்.. நான் டான்ஸ் ஆடும்போது இதுல தான் எனக்கு கான்ஃபிடன்ஸ் அதிகமா இருக்கும்.. ஏன்னா உனக்கு பிடிச்ச கலர் ட்ரஸ்ல நான் டான்ஸ் ஆடும் போது நீ என்னை பார்க்கிற பார்வையில அவ்வளவு காதல் இருக்கும்… அந்த காதல் எனக்கு எவ்வளவு நம்பிக்கை தரும்னு எனக்கு தான் தெரியும்..” என்று சொன்னவளை அப்படியே வாரி அணைத்து முத்தமிட அவனுடைய கைகளும் உடலும் பரபரத்தது.. ஆனால் அப்படி செய்தால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று அவனுக்கு தெரியும்.. தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு அவள் கன்னத்தில் கையை வைத்து ஏந்தி “என்னை ஏன்டி இவ்ளோ லவ் பண்ற? ரொம்ப கஷ்டமா இருக்கு டி.. என்னால உனக்கு எதையுமே திருப்பி தர முடியல..” என்றான் அவன்..
“நீ என்னை லவ் பண்றேன்னு சொன்ன இல்ல..? அதுவே போதும் டா எனக்கு..” என்று சொன்னவள் அந்த ஆடையை எடுத்துக் கொண்டு நேரே பணம் கட்டும் இடத்திற்கு சென்று விட்டாள்.. ஆனால் அவள் கண்கள் லேசாக கலங்கி இருந்ததை அவன் கவனித்து விட்டதை அவள் அறியவில்லை..
அங்கிருந்து கிளம்பியவர்கள் வெளியே வர அந்த ஆடை வடிவமைப்பு இடத்திற்கு பக்கத்தில் ஒரு பச்சை குத்தும் கடை இருந்தது.. அதை பார்த்தவள் “அருண் என்னோட வா..” என்று சொல்லி அவனை இழுத்துக்கொண்டு அந்த கடைக்குள் சென்றாள்..
உள்ளே சென்றவள் “எனக்கு ஒரு டாட்டூ போடணும்” என்று கேட்டாள்.. அங்கே இருந்த பெண் “போடலாமே.. இந்த பேப்பர்ல எப்படி போடணும்.. என்ன போடணும்னு எழுதி கொடுங்க.. அப்படியே போட்டுடுவேன்..” என்று சொன்னவுடன் அந்த தாளை வாங்கி அதில் ஏ❤️ஏகே (A❤️AK) என்று எழுதியவள் இதே மாதிரி என் கையில் இந்த இடத்தில் போடுங்க என்று மணிக்கட்டை சுட்டிக்காட்டினாள்..
“போடுறேன் மேடம்” என்றவள் கையைப் பிடித்து பச்சை குத்த போக.. “அஸ்வினி எதுக்கு இதெல்லாம்..? உன்னை நீயே என் கஷ்டப்படுத்திக்கிற..? வேண்டாம்.. வலிக்கும் அஸ்வினி..” என்று சொன்னவனிடம் “வலி இல்லாம எந்த சந்தோஷமும் கிடைக்காது அருண்.. எனக்கு இந்த வலி ரொம்ப பிடிச்சிருக்கு.. இது எனக்கு வேணும்..” என்று சொன்னவள் அந்த பெண்ணை பச்சை குத்த சொன்னாள்..
அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அந்த பெண் பச்சை குத்தும் போதும் அவள் முகத்தில் தெரிந்த வலியை பார்த்தவனுக்கு அதை தாங்க முடியவில்லை..
நின்று கொண்டிருந்தவன் அமர்ந்து கொண்டு பச்சை குத்திக் கொண்டிருந்த அவள் தலையை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்..
அந்த சிறு அணைப்பு தந்த இன்பத்தில் தன் வலியை மறந்து போனாள் அவள்.. அதன் பிறகு அவள் கையில் அந்த எழுத்துக்களை பார்த்தவன்.. அந்த எழுத்துக்களை விட அதிகமாக அவள் சிவந்திருந்த கையைப் பார்த்தே உடைந்து போனான்.. அவன் கண்கள் கலங்கி ஒரு துளி கண்ணீர் அவன் கண்ணில் இருந்து அவள் கையில் தெறித்து விழுந்தது..
“ஹே அருண்.. எதுக்கு நீ அழற? எனக்கு வலிக்கவே இல்ல.. சார் முதல் முறையா என்னை இவ்வளவு நேரம் கட்டிப்பிடிச்சுக்கிட்டீங்க இல்ல..? அதுல எனக்கு வலியே தெரியல டா.. இனிமே என்னை விட்டு உன்னை யாருமே பிரிக்க முடியாது.. அஸ்வினி ஆல்வேஸ் லவ்ஸ் யூ மிஸ்டர் அருண்..” என்று சொன்னாள் கண்களில் காதலுடன்..
“சரி வா. போலாம்..” என்று சொன்னவளின் கையைப் பிடித்து நிறுத்தி “எனக்கும் ஒரு டாட்டூ போடணும்..” என்றான் அந்த பெண்ணிடம்..
அவள் எழுதிய அதே காகிதத்தை எடுத்து தன் கைகளில் போட வேண்டியதை அதில் எழுதி கொடுத்தான்..
ஏகே❤️ஏ (AK❤️A) என்று அவன் எழுதியதை பார்த்து அந்தப் பெண்ணும் அப்படியே அவனுக்கு பச்சை குத்தி முடித்தாள்..
இருவரும் இரண்டு கைகளையும் ஒன்றாக வைத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்..
அதன் பிறகு அவள் வீட்டின் தெரு முனையில் இறக்கி விட்டவன் அவள் பச்சை குத்திய மணிக்கட்டில் முத்தம் கொடுத்து “தேங்க்ஸ் அஸ்வினி.. எனக்கு இதுவரைக்கும் யாருமே இவ்வளவு அன்பு கொடுத்ததில்லை.. என்னால் இதை மறக்கவே முடியாது..” என்று சொல்லவும் அவன் மணிக்கட்டை பிடித்து முத்தம் கொடுத்தவள் “என் லவ் எல்லாம் ஒண்ணுமே இல்ல டா.. எனக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு எனக்கு கஷ்டம் வந்துரும்னு உன் லவ் ஃபீலிங்ஸ கூட எக்ஸ்பிரஸ் பண்ணாம இருக்க பாரு.. நிஜமாவே நீ தான்டா இந்த உலகத்திலேயே என்னை அதிகமா நேசிக்கிறே..” என்று கண் கலங்க சொல்லிவிட்டு தன் வீடு நோக்கி கனத்த இதயத்துடனே நடந்தாள்..
அடுத்த நாள் நடன வகுப்புக்கு சென்றவள் ஒரு நடன அசைவை அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுக்க அது வராமல் மறுபடி மறுபடி தடுக்கி விழப் போனாள்.. ஒரு நிலையில் “எனக்கு எல்லாம் டான்சே வராது சார்.. பேசாம விட்டுடுங்க.. நான் அந்த காம்பெடிஷனில் இருந்து என் பெயரை எடுத்துடறேன்” என்று சொன்னவளை அந்த அறையின் ஒரு மூலையில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த அருண் அவள் அருகில் சென்று அந்த ஆசிரியரிடம் “சார்.. இஃப் யூ டோன்ட் மைண்ட் இந்த ஸ்டெப் ஒரு தடவை நான் அவங்களோட ஆடி பார்க்கட்டுமா?” என்று கேட்டான்..
“ப்ளீஸ்.. ட்ரை பண்ணுங்க..” என்று சொன்னார் அவர்..
அவள் கையைப் பிடித்து பின்னால் இசைத்தட்டு இசைக்க ஆரம்பிக்க அவளோடு ஆடியவன் அவள் கண்ணை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவள் வேறு புறம் முகத்தை திருப்ப முடியாமல் தன் கண்களால் அவள் கண்களை கைது செய்தான்.. பிறகு அந்த பாடல் முடியும் வரை இருவரும் அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அத்தனை அசைவுகளையும் மிகவும் நளினமாக ஆடி முடித்திருந்தனர்..
அவர் கைதட்ட அந்த சத்தம் கேட்டு தங்கள் கண்களில் தொலைந்து போன இருவரும் இயல்பு நிலைக்கு வந்தனர்.. “நீங்க இப்ப ஆடின டான்ஸை பாத்தா இவ்வளவு நேரம் நீங்க இந்த ஸ்டெப்ப ஆட முடியாம தடுமாறி விழுந்துட்டிருந்தீங்கன்னு யாருமே சொல்ல மாட்டாங்க.. உங்களுக்குள்ள நல்ல கெமிஸ்ட்ரி இருக்கு.. ரெண்டு பேரும் ஏதோ மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி ஆடிட்டு இருந்தீங்க.. நான் உங்க டான்ஸ வீடியோ எடுத்து இருக்கேன்.. இதை பார்த்தீங்கன்னா உங்களுக்கு கான்ஃபிடன்ஸ் வரும்.. இதே மாதிரியே உங்க காம்படிஷன்லயும் ஆடுங்க..” என்று சொல்லி அந்த காணொளியை அவளுக்கு காண்பித்தார்..
அதைப் பார்த்த இருவருக்கும் பிரமிப்பாய் இருந்தது.. அப்போது தேஜூ “அருண்.. நீ எனக்காகவே பிறந்தவன்டா..” என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டாள்..
அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து நடந்த கலை விழாவில் அந்த நடன போட்டியில் முதலிடத்தில் வந்த தேஜுவை எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தார்கள்.. அவளுக்கு தெரியாத கலைகளும் ஏதாவது உண்டா என்று அனைவருக்கும் தோன்றியது..
அவள் நடனம் ஆடும் போதும் பரிசு வாங்கும் போதும் பெருமிதத்தோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான் அருண்.. அன்று மாலை அவனை தனியே சந்தித்தவள்.. “என் கூடவே நீ எப்பவும் இருந்திடனும்னு ஆசையா இருக்கு.. என்னை எவ்வளவு கான்ஃபிடண்டா மாத்தற தெரியுமா நீ? உன்னோட இருந்தா இந்த உலகத்தையே நான் ஜெயிச்சுடுவேன்டா..” என்று சொன்னவள் “என்னை இந்த டான்ஸ் ஜெயிக்க வச்சதுக்கு இன்னிக்கு உனக்கு ஒரு ட்ரீட் இருக்கு.. வா ஹோட்டல்க்கு போகலாம்..” என்று சொல்லி அவனை ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றாள்..
“இது என்னோட ஃபேவரிட் ரெஸ்டாரன்ட்.. இங்க டெசர்ட் எல்லாம் செமையா இருக்கும் வா… இன்னைக்கு நம்ம ஸ்வீட் சாப்பிட்டு கொண்டாடலாம்..” என்று சொன்னவள் அவனுக்கு பிடித்த ரசகுல்லாவை கொண்டு வரச் சொல்ல அவன் புருவத்தை சுருக்கி அவளை பார்த்தான்.. “எனக்கு ரசகுல்லா பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க “அதெல்லாம் தெரியும்.. அன்னைக்கு என்னை வீட்டில இறக்கி விடும்போது நீ என்னை ரசகுல்லான்னு கூப்பிட்டே.. உனக்கு அது ரொம்ப பிடிச்சதுனால தானே என்னை அப்படி கூப்பிட்ட?” என்று அவள் கேட்க “ஆமாண்டி என் ரசகுல்லா…” என்று அவள் கன்னத்தை கிள்ளி சொன்னான் அவன்..
களுக்கென சிரித்தவள் “சரி வா.. சாப்பிடலாம்..” என்று சொல்லி சிப்பந்தி கொண்டு வந்து வைத்த ரசகுல்லாவை இருவரும் உண்ணத் தொடங்க அதிலிருந்து ஒரு சிறிய துண்டை அவன் வாய்க்கு அருகில் கொண்டு சென்றாள்.. அவனும் புன்னகைத்தபடி அதை வாங்கிக் கொண்டான்..
அவனும் அதே போல ஒரு துண்டு ரசகுல்லாவை எடுத்து அவளுக்கு ஊட்ட அதை வாயில் வாங்கிக் கொண்டவள் இதழ் ஓரமாய் அந்த சாறு வழிய அவன் தனிச்சையாய் தன் கட்டை விரலால் அதை துடைத்து விட்டான்..
சட்டென கட்டை விரலை பிடித்தவள் தன் இதழால் அதில் இருந்த சாறை உறிஞ்ச சடாரென தன் கையை அவள் கையில் இருந்து இழுத்துக் கொண்டான் அவன்.. அவனுடைய இந்த செய்கையில் அவள் முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது..
அவனோ தன் இருக்கையை விட்டு எழுந்து “போலாம் அஷ்ஷூ..” என்று சொல்லி விடுவிடுவென அந்த உணவகத்தை விட்டு வெளியே வந்து விட்டான்..
உணவுக்கான பணத்தை செலுத்தி விட்டு வெளியே வந்தவள் “சாரிடா.. ஏதோ விளையாட்டா பண்ணிட்டேன்.. என்று சொன்னவளை “இல்ல.. பரவால்ல.. நீ என்ன பண்ணுவ? என்னால தான்..” என்று இழுத்தவன் தன் காரில் சென்று ஏறிக்கொண்டான்.. அவளும் வந்து ஏற காரை அவள் வீட்டை நோக்கி செலுத்தினான்..
அதன் பிறகு அடுத்த ஒரு மாதம் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.. கைபேசியில் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்கள்..
தேஜூ ஒரு நாள் அவர்கள் உறவினர்களின் திருமண விழாவிற்கு சென்று கல்லூரிக்கு தாமதமாய் வருவதாக இருந்தது.. மனதில் ஏதோ தோன்ற நேரே தன்னவனின் மெக்கானிக் ஷெட்டுக்கு சென்றாள்..
அங்கே சின்ன பையன் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தான்.. அருண் கல்லூரிக்கு சென்று இருந்தான்.. “அட அண்ணி.. வாங்க.. எப்படி இருக்கீங்க?” என்று கேட்க.. “ரொம்ப நல்லா இருக்கேன் டா.. டேய்.. சின்ன பையா.. என்னை இன்னொரு முறை அண்ணின்னு கூப்பிடேன்.. கேக்கவே எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்றாள் தேஜு..
“அதுக்கு என்ன அண்ணி..? எத்தனை முறை வேணாலும் கூப்பிடுறேன்.. அண்ணி.. அண்ணி.. அண்ணி.. கூடிய சீக்கிரம் நெஜமாவே எனக்கு அண்ணி ஆகிடுங்க..” என்று சொன்னவனை ஆச்சரியமாக பார்த்தாள் அவள்..
அவ்வளவு நாளாய் அருணுக்கு ஒரே உறவாய் கூட இருந்து வேலை செய்பவனுக்கு கூட உண்மையை சொல்லாமல் மறைத்திருக்கிறான் என்பது அவளை திடுக்கிட வைத்தது..
“உனக்கு விஷயமே தெரியாதா? உங்க அண்ணன் உன் கிட்ட எதுவும் சொல்லலையா?” என்று கேட்க சின்ன பையனோ எதுவும் புரியாமல் அவளை குழப்பத்தோடு பார்த்தான்..
“எதை என்கிட்ட அண்ணன் சொல்லலையான்னு கேக்குறீங்க?
என்ன விஷயம் அண்ணி?” என்று கேட்க “நெஜமாவே இப்ப நான் உன் அண்ணி தாண்டா.. இங்க பாரு உங்க அண்ணன் கட்டின தாலி..” என்று தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அவனுக்கு காண்பித்தாள்..
அதை பார்த்தவன் வியப்பில் வாயை பிளந்தான்..
தொடரும்..
கமெண்ட்ஸ் போட மறக்காதீங்க செல்லம்ஸ்…❤️❤️
உங்கள்
❤️❤️சுபா❤️❤️