அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 74🔥🔥

5
(7)

பரீட்சை – 74

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

பெற்ற மகளின்

உயிரைக் காக்க 

அவள் உயிராய் 

நினைத்த 

உற்றவனை 

உயிர் போகும் 

நிலையிலும் 

உறுதுணையாய் 

இல்லாமல் 

 

அரவணைக்க 

ஆளின்றி

அனாதையாய் 

அவனை

தனியே விட்டுப் 

போக இந்தத் 

தந்தை மனம்

துணியவில்லை..

 

###################

 

உறவு..!!

 

“அண்ணி.. அண்ணி..” என்று தன்னோடு போலீசையும் கூட்டிக்கொண்டு ஓடி வந்த சின்ன பையன் மயங்கி கிடந்த தேஜூவின் தலையை தூக்கி பிடித்தவன் “ஐயோ அண்ணி.. என்ன அண்ணி? இப்படி ரத்தம் வருது.. அண்ணி எழுந்திருங்க..” என்று அவளை எழுப்ப முயன்றவன் அவள் எழுந்திருக்காமல் போகவும் அங்கிருந்த போலீஸ்காரரை கூப்பிட்டு “சார்.. இவங்களுக்கு ரத்தம் வந்துகிட்டே இருக்கு சார்.. இவங்களை ஹாஸ்பிடல்ல சேர்க்கணும் சார்..” என்றான்..

 

அவர்களோடு  அவசர மருத்துவ ஊர்தியையும் வர சொல்லி இருக்கவே அதில் தேஜுவை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்..

 

அதன் பிறகு சரணை கைது செய்து அழைத்துக் கொண்டு போனார்கள்.. தேஜூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்..

 

சின்ன பையன் தேஜுவை மருத்துவமனையில் கொண்டு சேர்க்க சொல்லிவிட்டு அந்த போலீஸ்காரர்களிடம் பள்ளத்தில் தன் அண்ணன் விழுந்து இருக்கிறார் என்று சொல்லவும் அவர்கள் அந்த இடம் முழுக்க சல்லடை போட்டு தேடினார்கள்..

 

இறுதியில் அருண் தலையில் முகத்தில் கை கால்களில் எல்லா இடங்களிலும் அடிபட்டிருக்க குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்தவனை அள்ளி எடுத்துக் கொண்டு போய் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்கள்..

 

அழகப்பனும் அகிலாவும் இவர்கள் நிலையை கேட்டு மருத்துவமனைக்கு பதட்டமாய் ஓடி வந்தனர்.. அந்த மருத்துவமனையில் அவர்கள் இருவரும் இருந்த அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டு அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டிருந்தனர் இருவரையும் காப்பாற்ற சொல்லி..

 

இருவருமே தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தார்கள்.. இருவருக்குமே தலையில் அடிபட்டு இருந்ததால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..

 

அருண் அங்கிருந்த கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் அவனுக்கு 42 மணி நேரம் கெடு வைத்திருந்தார் மருத்துவர்..

 

அவனுக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது.. 42 மணி நேரத்திற்குள் அவன் கண் விழிக்கவில்லை என்றால் அவன் உயிரை காப்பாற்றுவது மிகவும் சிரமம் என்று சொல்லிவிட்டார் மருத்துவர்..

 

தேஜு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பிறகு கண் விழித்தாள்.. அவளை சுற்றி அழகப்பன், அகிலா, நிவேதா, சுமி, சின்ன பையன் எல்லோரும் நின்று கொண்டிருக்க அவள் அழகப்பனை பார்த்து “அப்பா..” என்று அழைத்தாள்..

 

அவருக்கு போன உயிர் திரும்ப வந்தாற்போல் இருந்தது.. “எனக்கு என்னப்பா ஆச்சு? நான் எப்படி ஹாஸ்பிடல் வந்தேன்?” என்று கேட்டாள் அவள்.. 

 

அவள் ஏன் அப்படி கேட்கிறாள் என்று குழப்பத்துடன் அவர் பார்த்திருக்க அப்போது அங்கே வந்த மருத்துவர் “உனக்கு ஒரு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு மா.. தலையில அடிபட்டதனால உன்னை ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்திருக்காங்க..” என்றார்… அழகப்பனை பார்த்தவர் கண்ணை மூடித் திறந்து ஏதோ ஜாடை காட்டவும் அழகப்பனும் அதற்கு மேல் பேசவில்லை..

 

தன் அன்னையை கண்டு கொண்டவள் அவளையும் கட்டி தழுவிக் கொண்டாள்.. அதன் பிறகு திரும்பி பார்த்தவள் சுமியையும் சின்ன பையனையும் பார்த்து “இவங்க எல்லாம் யாருப்பா? இவங்க எதுக்கு இங்க இருக்காங்க?” என்று கேட்க அப்படியே அதிர்ந்தார்கள் அங்கு இருந்த அனைவரும்..

 

“அண்ணி..!!” என்று அழைக்க வந்த சின்ன பையனை கண்ணைக் காட்டி அமைதி படுத்தினார் மருத்துவர்..  தேஜுவிடம் “உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ அங்க இருந்தவங்கம்மா இவங்க எல்லாம்.. எல்லாரும் சேர்ந்துதான் உன்னை ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து அட்மிட் பண்ணாங்க.. அதான் உனக்கு சரியாயிடுச்சான்னு பார்க்க வந்திருக்காங்க..” என்றார் அந்த மருத்துவர்..

 

“ஓ அப்படியா..?” என்றவள் “உங்களுக்கெல்லாம் ரொம்ப தேங்க்ஸ்..” என்றாள் அவர்களை பார்த்து புன்னகைத்த படி..

 

“சரிமா.. நீ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாது.. நீ ரெஸ்ட் எடுத்துக்கோ.. நம்ம எல்லாரும் வெளில போலாம்.. வாங்க..” என்று அனைவரையும் வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் அந்த மருத்துவர்..

 

“நீங்க எல்லாரும் இங்கேயே இருங்க.. நான் அவங்களோட கொஞ்சம் பேசிட்டு வரேன்…” என்று சொல்லி உள்ளே போனவர் தேஜுவிடம் “அம்மா.. உன் தலையில் சர்ஜரி பண்ணி இருக்கேன்.. அதான் எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ண வந்தேன்.. இப்ப நான் கேட்கிற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா? சும்மா உனக்கு எல்லாம் நார்மலா இருக்கான்னு செக் பண்ணதான்.. வேற ஒன்னும் இல்ல..” என்றார் அந்த மருத்துவர்..

 

“கேளுங்க.. பதில் சொல்றேன்..” என்றாள் தேஜு.. 

 

“இந்த ஆக்ஸிடென்ட்க்கு முன்னாடி கடைசியா நீ என்ன பண்ணிட்டு இருந்த? சொல்லு..” என்று கேட்க “அது.. நான் பிளஸ் டூ முடிச்சுட்டு காலேஜுக்கு அப்ளை பண்ணி இருந்தேன்.. எனக்கு கவுன்சிலிங்க்கு லெட்டர் வந்து இருந்தது காலேஜ்ல இருந்து.. நாங்க அந்த கவுன்சிலிங்க்கு கிளம்பிட்டு இருந்தோம்.. அப்போ கார் ஆக்சிடென்ட் ஆகி அத்தை மாமா இறந்து போயிட்டாங்கன்னு..” என்று அவள் சொல்ல அப்படியே மயங்கி விட்டாள். 

 

அங்கிருந்த செவிலியிடம் அவளுக்கு செலுத்த வேண்டிய மருந்துகளின் பெயரை சொல்லி அவளை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு வெளியே வந்த மருத்துவர் “சார்.. ஒரு நிமிஷம் கொஞ்சம் என் ரூமுக்கு வரீங்களா? மிஸ்.தேஜஸ்வினி பத்தி சில விஷயங்கள் சொல்லணும்” என்று சொல்ல மருத்துவர் பின்னே அவர் அறைக்கு சென்றார்கள் அகிலாவும் அழகப்பனும்..

 

“சார்.. நீங்க கொடைக்கானல் வந்து எவ்வளவு நாள் ஆகுது?” என்று கேட்டார் மருத்துவர்..

 

“ரெண்டு வருஷம் ஆகுது சார்..” என்றவரிடம் “நீங்க கொடைக்கானல் வர்றதுக்கு முன்னாடி அவங்க அத்தை யாருக்காவது..” என்று அவர் இழுக்க “ஆமா சார்.. என் தங்கையும் அவளோட வீட்டுக்காரரும் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டாங்க.. நாங்க அதுக்காக தான் கொடைக்கானல் வந்தோம்..” என்றார் அழகப்பன்..

 

“ம்ம்ம்ம்.. அவங்க அத்தை இறந்து போனது வரைக்கும் தான் இப்போ அவங்க ஞாபகத்துல இருக்கு.. அவங்க இறந்ததுதான் அவங்க மூளைக்கு கிடைச்ச முதல் அதிர்ச்சி.. அவங்களுக்கு அவங்க அத்தைன்னா ரொம்ப பிடிக்குமா?” என்று அவர் கேட்க “ஆமா டாக்டர்.. அவளுக்கு அவங்க அத்தை மாமான்னா உயிர்..” என்று சொல்ல “அதான்.. அவங்க இறந்து போனதும் அதுவும் திடீர்னு இறந்து போனதும் அது அவங்களுக்கு ரொம்ப இம்பேக்ட் ஆயிடுச்சு.. அதுக்கப்புறம் அவங்களே அவங்களை தேத்திக்கிட்டு இருந்திருக்காங்க.. ஆனா இரண்டாவது தடவையா அவங்க உயிரா நினைச்சவரு மலை மேல இருந்து கீழ விழறதை பார்த்து இருக்காங்க..   அந்த அதிர்ச்சியில் தலையில வேற அடிபட்டதனால அவங்க அத்தை இறந்ததிலிருந்து அருண் மலை மேலிருந்து கீழே விழுந்தது வரைக்கும்  இந்த ரெண்டு வருஷம் நடந்த எந்த விஷயமும் அவங்க மைண்ட்ல இல்ல.. கம்ப்ளீட்டா டெலீட் ஆயிடுச்சு.. இப்போ அவங்களுக்கு ஞாபகம் இருக்கறது எல்லாம் அவங்க அத்தை இறந்த வரைக்கும் தான்..” என்ற மருத்துவரை அதிர்ச்சியுடன் பார்த்தார் அழகப்பன்..

 

“டாக்டர்.. அப்போ இது எதுவுமே அவளுக்கு ஞாபகமே வராதா?” என்று கலக்கத்தோடு கேட்டார்..

 

“வரலாம்.. ஆனா உறுதியா சொல்ல முடியாது.. இப்போதைக்கு அவங்களுக்கு இது எதையும் ஞாபகப்படுத்த முயற்சி பண்ணாதீங்க.. அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க.. அவங்க ஞாபகங்கள் ரெக்கவர் ஆகுதான்னு பார்க்கலாம்.. இல்லைன்னா அதுவா வர வரைக்கும் நீங்க வெயிட் பண்ணி தான் ஆகணும்..” என்றார் அந்த மருத்துவர்..

 

“சரி டாக்டர்.. என் பொண்ணு உயிரோட கிடைச்சாளே அதுவே போதும்.. அருணுக்கு எப்படி இருக்கு டாக்டர்?” எனாறு கேட்க “அவருக்கு சர்ஜரி பண்ணி ட்வல் ஹவர்ஸ் முடிஞ்சிருக்கு.. இன்னும் 30 ஹவர்ஸ்ல அவர் கண் விழிக்கலன்னா அவர் உயிருக்கு ஆபத்து தான்.. பார்ப்போம்..” என்று சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்..

 

அதன் பிறகு பதட்டத்துடனே அந்த முப்பது மணி நேரத்தை கடந்தார்கள் அவர்கள் அனைவரும்.. தேஜுவோ இது எதையும் பற்றி தெரியாமல் அவ்வப்போது மயக்கமாகி விழித்தெழுந்தவள் அந்த முப்பது மணி நேரத்தில் மிகவும் சாதாரணமாக பேச ஆரம்பித்திருந்தாள்..

ஆனால் அவள் பேச்சில் அந்த இரண்டு வருடத்தில் நடந்த நிகழ்வுகளின் சாயல் கூட தெரியவில்லை.. 

 

30 மணி நேரத்திற்கு பிறகும் அருண் கண் விழிக்கவில்லை.. பதட்டமடைந்த அழகப்பன் மருத்துவரிடம் சென்று “டாக்டர்.. அருணுக்கு என்ன ஆச்சு..?” என்று கேட்க “நம்ம எதிர்பார்த்தபடி அவரு கண்ணு முழிக்கல.. எதுக்கும் ரெஸ்பான்ட் பண்ணவும் மாட்டேங்கறாரு.. பார்ப்போம்.. சில பேர் மிராக்கிள் மாதிரி அதுக்கப்புறம் கூட கண்ணு விழிச்சிருக்காங்க.. வெயிட் பண்ணலாம்..” என்று சொன்னார்..

 

ஆனால் அடுத்த ஆறு மணி நேரத்தில் அழகப்பன் தலையில் இடியை தூக்கி போட்டார் அவர்.. “மிஸ்டர் அழகப்பன்.. அருண் கோமாக்கு போயிட்டார்.. அவருக்கு ரொம்ப டைம் இல்ல.. நாள் கணக்குல தான் அவரு உயிரோட இருப்பார்.. அவருக்கு பல்ஸ் எல்லாம் குறைஞ்சிட்டு வருது..  அவருக்கு நிறைய பிராப்ளம் இருக்கு.. அவர் உயிரை காப்பாத்த எங்களாலான முயற்சியை செஞ்சிட்டு தான் இருக்கோம்.. ஆனா இதெல்லாம் செய்யறதுனால மேக்ஸிமம் இன்னும் ஒன் வீக்.. அதுக்கு மேல.. ஐயம் சாரி..” என்று சொன்னார் மருத்துவர்..

 

“டாக்டர்.. அப்படின்னா இனிமே அவர் பிழைக்க மாட்டாரா டாக்டர்?” என்று கேட்க “10 பர்சன்ட் தான் சான்ஸ் இருக்கு.. ஆனா அது கூட இன்னும் ஒரு நாளைக்குள்ள அவர் ஏதாவது இம்ப்ரூவ்மென்ட் காமிச்சா..” என்றார் அவர்..

 

“சரி டாக்டர்.. அப்படின்னா நான் என் பொண்ணு கிட்ட சொல்லிடறேன்.. அட்லீஸ்ட் அவ ஒருவாட்டி அந்த பையனை பார்த்துட்டு வரட்டும் டாக்டர்..” என்று சொன்னவரை தடுத்து நிறுத்தினார் அந்த மருத்துவர்..

 

“இப்போ உங்க பொண்ணுக்கு அவரோட வாழ்ந்த வாழ்க்கைல ஒரு நிமிஷம் கூட ஞாபகம் இல்லை.. அது மட்டும் இல்லாம இப்போ அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க.. அப்படியே நீங்க அந்த ரெண்டு வருஷம் நடந்ததை எல்லாம் சொல்லி அவங்களுக்கு புரிய வச்சாலும் அதை கேட்டு அவங்க ஸ்ட்ரெஸ் இன்னும் ஜாஸ்தி தான் ஆகும்.. அதனால அவங்க மூளைல என்ன இன்பாக்ட் இருக்குங்கறதை என்னால சொல்ல முடியல.. அவங்க உயிருக்கே கூட ஆபத்தா முடியலாம்.. அதனால இப்போதைக்கு அவரைப்பத்தி எதுவும் நீங்க அவங்ககிட்ட சொல்ல வேண்டாம்..” என்றார்..

 

“ஆனா எப்பயாவது அவளுக்கு தெரிஞ்சதுன்னா.. அவளுக்கு நடந்ததெல்லாம் ஞாபகம் வந்திருச்சுன்னா..?” என்று அழகப்பன் கேட்க “இங்க பாருங்க.. அவங்களுக்கு எப்பயாவது தெரிஞ்சதுன்னா அது நேச்சுரலா தெரியும்.. அப்போ இவ்ளோ பெருசா இம்பேக்ட் இருக்காது.. ஆனா இப்ப நீங்க இந்த விஷயத்தை சொல்லி தெரிய வச்சீங்கன்னா அவங்க அந்த ரெண்டு வருஷம் என்ன நடந்ததுன்னு கஷ்டப்பட்டு யோசிச்சுப் பார்க்க ட்ரை பண்ணுவாங்க.. அந்த மாதிரி ப்ரெயினுக்கு ஸ்ட்ரெஸ் குடுத்தாங்கன்னா மறுபடியும் அவங்க உயிருக்கே அது ஆபத்து ஆகலாம்.. அவங்க தலையில இப்பதான் சர்ஜரி நடந்திருக்கு.. ரொம்ப ஜாக்கிரதையா பாத்துக்கணும்.. அதனால நான் சொல்றதை கேளுங்க.. இப்போதைக்கு அவங்க கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம்.. இந்த ரெண்டு வருஷம் அவங்க மீட் பண்ண ஆளுங்களோட கொஞ்ச நாளைக்கு அவங்களுக்கு எந்த காண்டாக்ட்டும் இருக்க வேண்டாம்.. என்னோட அட்வைஸ் என்னன்னா நீங்க அவங்களை இந்த ஊரிலிருந்து வெளியில் கூட்டிட்டு போயிருங்க.. அப்படி போனீங்கன்னா கொஞ்ச நாள்ல அவங்க நார்மல் ஆயிருவாங்க.. அப்புறம் எப்பயாவது இந்த பக்கம் வந்தாங்கன்னா அவங்களுக்கா நேச்சுரலா இந்த விஷயங்கள் ஞாபகம் வந்துச்சுன்னா சரி.. இல்லன்னாலும் அப்படியே விடுறது தான் நல்லது.. இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு நீங்க சொல்றதுக்கும் ட்ரை பண்ணலாம்.. ஆனா இப்ப சொன்னீங்கன்னா அவங்களால அதை தாங்கிக்கவே முடியாது..” என்றார் மருத்துவர்..

 

“அப்படின்னா அவளை கூட்டிட்டு இந்த ஊரை விட்டு போக சொல்றீங்களா டாக்டர்?” என்று கேட்க “ஆமா என்னோட அட்வைஸ் அப்படித்தான் இருக்கும்.. ஏன்னா இங்க இருக்க இருக்க அவங்க ஒவ்வொருத்தரையா மீட் பண்ண மீட் பண்ண அவங்களோட பேசும் போது இவங்க எல்லாம் யாரு? இவங்க எல்லாம் யாருன்னு ஏன் நமக்கு தெரியலன்னு அவங்க யோசிக்க ஆரம்பிப்பாங்க.. இப்போ சர்ஜரி முடிஞ்சு இருக்கிற இந்த டைம்ல அவங்க அவ்வளவு ஸ்ட்ரெஸ் எடுத்துக்க கூடாது.. அதனால இங்க இருக்கிற மனுஷங்க யாருமே இல்லாத இடத்துக்கு கூட்டிட்டு போறதுதான் இப்போதைக்கு அவங்களுக்கு ஸேஃப்..” என்று சொன்னார் மருத்துவர்..

 

“டாக்டர் என் பொண்ணு கட்டிக்க போறவரு அந்த அருண்.. அவரை நான் இங்க தனியா விட்டுட்டு இவளை மட்டும் எப்படி கூட்டிட்டு போக முடியும்? அவரையும் என்னோட..” என்று கேட்க “அது.. உங்க விருப்பம்.. இங்க அவர் ஹாஸ்பிடல்ல வைச்சு பாத்துக்குறதுக்கு யாரும் இல்லைன்னா நீங்க தாராளமா அவரை உங்களோட சென்னைக்கு கூட்டிட்டு போலாம்.. இப்போதைக்கு அவரைப்பத்தி எந்த விஷயமும் உங்க பொண்ணுக்கு தெரியாம மட்டும் பாத்துக்கோங்க..” என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார்..

 

என்னதான் மருத்துவர் அருணை பற்றி தேஜுவுக்கு தெரிந்தால் அவள் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்று சொன்னாலும் அருணை யாரும் இல்லாத அனாதையாய் அந்த மருத்துவமனையில் தனியே விட்டுச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை..

 

அப்போது அங்கே வந்த சின்ன பையன் விவரங்களை கேட்க அவனிடம் எல்லாவற்றையும் சொல்லி முடித்தார் அழகப்பன்..

 

சின்ன பையன் அழுது கொண்டே அமர்ந்திருக்க அவன் அருகில் ஒரு கன்னிகாஸ்திரி வந்து நின்றார்..  “நீ அருணோட மெக்கானிக் ஷெட்ல அவன் கூட இருந்தவன் தானே?” என்று கேட்டார் சின்ன பையனிடம்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!

 

மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! 

 

உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி 

“❤️❤️சுபா❤️❤️”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!