பரீட்சை – 75
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
என் பெயரன்
என் உரிமை
என்று சொல்லி
எங்கிருந்தோ
வந்தார் அந்த
பெரிய மனிதர்..
என் பெண்ணுக்காகவும்
சேர்த்து
கவலைப்பட்டவரின்
பேச்சை தட்ட
முடியாமல்..
மருமகனாய்
நினைத்தவனின்
மரணம் தவிர்க்க
மருத்துவ செலவை
அவரே ஏற்க
முழு மனதாய்
இல்லாமல்
அரை மனதுடன்
சம்மதித்தேன்..!!
###################
உரிமையும் கடமையும்…!!
சின்ன பையன் அழுது கொண்டே அமர்ந்திருக்க அவன் அருகில் ஒரு கன்னிகாஸ்திரி வந்து நின்றார்.. “நீ அருணோட மெக்கானிக் ஷெட்ல அவன் கூட இருந்தவன் தானே?” என்று கேட்டார் சின்ன பையனிடம்..
அருண் இருந்த ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருந்த கன்னிகாஸ்திரி தான் அவர்.. அருண் ஆசிரமத்தை விட்டு வந்த பிறகு மூன்று மாதம் கழித்து அவன் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு அவன் மெக்கானிக் ஷெட்டுக்கே போய் அவனை பார்த்தார் அவர்.. அவன் தாத்தாவிடம் அவன் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்தது பற்றி அதுவரை அவர் சொல்லி இருக்கவில்லை..
அருணை எப்படியாவது சமாதானப்படுத்தி மறுபடி ஆஷ்ரமத்திற்கே கூட்டி சென்று விடலாம் என்ற எண்ணத்தோடு தான் அவர் வந்திருந்தார்… ஆனால் அருண் முற்றிலுமாய் ஆஷ்ரமத்துக்கு திரும்பி வர மறுத்து விட்டான்..
அப்போது சின்ன பையனுக்கு அவன் ஆதரவளித்து படிக்க வைத்து கொண்டிருப்பதாயும் அவன் சொல்ல அதை கேட்டு அவனை மிகவும் பாராட்டினார் அவர்.. அவன் தாத்தா தரும் பணத்தை ஆசிரம செலவுக்கே எடுத்துக் கொள்ளுமாறு அருண் சொன்னான்.. தான் ஆஸ்ரமத்தை விட்டு வந்தது அவருக்கு தெரிய வேண்டாம் எனவும் சொன்னான்.. ஆஸ்ரமத்தை விட்டு போய்விட்டாலும் அவன் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் இருக்கிறான் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு திரும்பி சென்றிருந்தார் அவர்…
“ஆமா சிஸ்டர்.. நீங்க மெக்கானிக் ஷெட் வரும்போது பார்த்தீங்களே… அந்த சின்ன பையன் தான் நான்..” என்றான் சின்ன பையன்..
“ஆமா.. ஏன் அழுதிட்டு இருக்க? என்ன ஆச்சு?” என்று கேட்டார் அந்த கன்னிகாஸ்திரி..
“எங்க அண்ணனுக்காக தான் சிஸ்டர்.. இப்பவோ அப்பவோன்னு இருக்காரு சிஸ்டர்.. அவரோட கடைசி நாட்களை எண்ணிகிட்டு இருக்காரு.. இனிமே எனக்குன்னு யாருமே இல்ல சிஸ்டர்.. நான் மறுபடியும் அனாதை ஆயிடுவேன் போல இருக்கு” என்று அவன் அழ அதைக் கேட்டு பதறியவர் அவனிடம் “ஏன்? அருணுக்கு என்ன ஆச்சு? நான் அவனை பார்க்க முடியுமா?” என்று கேட்க அழகப்பனை அழைத்து விஷயத்தை சொன்னான் சின்ன பையன்..
அவர் மருத்துவரிடம் அனுமதி வாங்கி அந்த கன்னிகாஸ்திரியை அருணை பார்க்க வைத்தார்..
அவனைப் பார்த்தவர் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கன்னம் தாண்டி விழுந்தது.. “ரொம்ப நல்ல பையன் சார்.. இவனை மாதிரி பசங்க இந்த காலத்துல கிடைக்க மாட்டாங்க சார்.. எல்லாருக்கும் ஹெல்ப் பண்ணுவான்.. எப்பவும் சிரிச்ச முகத்தோட தான் இருந்துட்டு இருந்தான்.. இவன் ஃப்ரெண்டு இறந்தப்புறம் தான் இவனோட குணமே மாறி போச்சு.. அதுக்கப்புறம் கூட பொண்ணுங்களை தான் கிட்ட சேர்க்க மாட்டானே தவிர மத்தவங்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ணிக்கிட்டு தான் இருந்தான்.. இவனை மாதிரி பிள்ளைகளை எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.. கர்த்தருக்கும் இவனை ரொம்ப பிடிச்சிருக்கு போல இருக்கு.. அதான் சீக்கிரம் தன்கிட்ட கூப்பிட்டு வெச்சுக்கணும்னு நெனைக்கறாரு போல” என்று சொன்னவர் “இவனோட ஹாஸ்பிடல் செலவெல்லாம் யார் சார் பார்த்துக்கறாங்க?” என்று கேட்க “நான் தான் பாத்துக்குறேன்..” என்றார் அழகப்பன்..
“நீங்க..?” என்று அந்த கன்னிகாஸ்திரி கேட்க “நான் இவர் லவ் பண்ற பொண்ணோட அப்பா.. அவளுக்கும் அடிபட்டு இந்த ஹாஸ்பிடல்ல தான் இருக்கா..” என்று சொன்னார்..
“அப்படியா? அருண் ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்காங்கறதை கேட்டாலே எனக்கு ஆச்சரியமா இருக்கு.. அவன் அவனுடைய எவ்வளவு பிரச்சனைகளை தாண்டி உங்க பொண்ணை லவ் பண்ணி இருப்பான்னு எனக்கு புரியுது.. பொண்ணுங்களை பார்த்தாலே அவங்களை கொன்னு போடுற அளவுக்கு அவன் பொண்ணுங்களை வெறுத்துட்டு இருந்தான்.. அப்பேர்ப்பட்டவனை தன் அன்பால மாத்தியிருக்கான்னா உங்க பொண்ணு நெஜமாவே ஒரு தேவதையா தான் இருக்கணும்.. உங்க பொண்ணு எப்படி இருக்காங்க?” என்று தேஜுவை பற்றி விசாரித்தார் அந்த கன்னிகாஸ்திரி..
“அவ நல்லாத்தான் இருக்கா.. ஆனா..” என்று இழுத்தவர் தேஜுவின் நிலைமையை முழுதுமாய் அந்த கன்னிகாஸ்திரியிடம் சொன்னார்..
“இயேசுவே… இது என்ன சோதனை? இந்த அருணுக்கு வாழ்க்கையில எந்த சந்தோஷமுமே கிடைக்காதா?” அருண் தலையை தன் கையால் வருடியபடி சொன்னார் அவர்..
“சார் உங்க பொண்ணுக்கும் அருணுக்கும் நீங்க தான் ஹாஸ்பிடல் செலவு மொத்தம் பாத்துக்குறிங்க.. ரெண்டு பேருக்கும் ரொம்ப பெருசா அடிபட்டு இருக்குங்கறதுனால ரொம்ப செலவாகுமே.. எப்படி சமாளிக்கிறீங்க?” என்று கேட்டார் அவர்..
“உங்ககிட்ட உண்மைய சொல்லனும்னா எனக்கு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. நான் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன் தான்.. இப்போ என் பொண்ணு கல்யாணத்துக்காக நான் சேர்த்து வச்ச பணத்தை எல்லாம் ஹாஸ்பிடல் செலவுக்கு செலவு பண்ணிட்டேன்.. இனிமே வர்ற செலவுக்கெல்லாம் கடன் தான் வாங்கணும்.. என் பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்னு சொல்லிட்டாங்க.. ஆனா அருண் குணமாக எவ்வளவு நாள் ஆகும்னு தெரியல.. அவரை எங்க ஊருக்கு கூட்டிட்டு போய் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி பார்த்துக்க போறேன்.. அவருக்கு உறவுன்னு சொல்லிக்க எங்களை தவிர வேற யாரும் இல்லைன்னு எனக்கு தெரியும்.. என்னைக்கு என் பொண்ணு என்கிட்ட வந்து அவரை காதலிக்கிறேன்னு சொன்னாளோ அன்னைக்கே அவரும் எனக்கு புள்ள மாதிரி ஆயிட்டாரு.. அவருக்கு நான் செலவு பண்ணாம வேற யாரு செலவு பண்ண முடியும்..? இதே என் பொண்ணு தேஜூக்கு இந்த மாதிரி நிலைமை இருந்தா கடன் வாங்கியாவது.. ஏன் என் தலையை அடமானம் வெச்சாவது நான் அவளை காப்பாத்தணும்னு நினைக்க மாட்டேனா? என் மகளுக்கு எப்படியோ அப்படித்தான் என் மருமகனுக்கும்” என்று சொன்னார் அழகப்பன்..
“சார்.. நீங்க அருண் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கீங்கன்னு எனக்கு புரியுது.. அவனை உங்க பொண்ணோட புருஷனாவே நினைக்கிறீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியுது.. ஆனா நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டீங்கள்ல? இந்த பையனுக்காக மாசா மாசம் அவங்க தாத்தா கொடுக்கிற பணத்தை வெச்சு ஆஷ்ரமத்தில இத்தனை நாளா எல்லா பசங்களும் நல்லா சாப்பிட்டுக்கிட்டு நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க.. இவன் அங்கேயிருந்து வந்து மூணு வருஷம் ஆகுது.. ஆனா அதை அவங்க தாத்தா கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டான்.. ஆனா இப்போ இவனுக்கே அந்த பணம் தேவைப்படுது.. இவன் ஹாஸ்பிடல் செலவை அந்த பணத்தை வெச்சு நான் பண்ணிக்கிறேன் சார்.. இப்ப கூட அந்த பணத்தை இவனுக்கு செலவு பண்ணலேன்னா என் மனசாட்சியே என்னை கொன்னுடும்.. அவங்க தாத்தாவும் பணம் இல்லாததுனால இவனுக்கு உயிர் போச்சுன்னு தெரிஞ்சா எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாரு.. ஏற்கனவே இவன் ஆஷ்ரமத்தில இருந்து வெளியில போனதை அவர்கிட்ட இருந்து சொல்லாம மறைச்சிருக்கோம்.. அதை மறைச்சதுனால ஆசிரமத்தில இருக்கற நெறைய குழந்தைங்களுக்கு நல்லது நடந்திருக்கு.. அவனும் ஒரு தொழில் செஞ்சு அவனையும் காப்பாத்திக்கிட்டு இன்னொரு பையனையும் காப்பாத்தி படிக்க வெக்கிற அளவுக்கு வளர்ந்திருந்தான்.. அதனால அந்த தப்பை கர்த்தர் மன்னிச்சுடுவார்னு நான் தைரியமா செஞ்சிட்டேன்.. ஆனா இப்ப இவன் நிலைமையை அவனோட தாத்தா கிட்ட இருந்து மறைச்சு அந்த பணத்தையும் நான் வாங்கி ஆசிரமத்துக்கு செலவு பண்ணுனா அதைவிட மோசமான விஷயம் வேற எதுவுமே இருக்க முடியாது சார்.. கர்த்தர் கூட என்னோட அந்த பாவத்தை மன்னிக்க மாட்டாரு.. தயவு செஞ்சு நீங்க அருணோட தாத்தா கொடுக்கிற பணத்தை அவன் வைத்தியத்துக்கு செலவு பண்றதுக்கு அனுமதிக்கணும்..” என்று சொன்னார் அவர்..
“நீங்க சொல்றதெல்லாம் சரிதான்.. ஆனா அருணுக்கு இதுல இஷ்டம் இருக்காது இல்ல..? அப்புறம் நான் எப்படி இதை அனுமதிக்க முடியும்? அந்த பணத்தை வாங்கக்கூடாதுன்னு தானே அருண் ஆஷ்ரமத்தை விட்டு வந்தாரு.. அதனால என்னை மன்னிச்சிடுங்க சிஸ்டர்.. நான் அந்த பணத்தை வாங்க முடியாது..” என்று சொன்னார் அழகப்பன்..
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சின்ன பையன் அழகப்பன் போன பிறகு இந்த கன்னிகாஸ்திரியிடம் நடந்த அனைத்தையும் கூறி எப்படியாவது அருணை காப்பாற்றி விடுமாறு கெஞ்சினான்.. அந்த கன்னியாஸ்திரி யாருக்கோ தன் கைபேசியில் அழைத்து வரவழைத்தார்..
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த மருத்துவமனைக்குள் வயதான மனிதர் ஒருவர் வந்தார்.. நேரே அருண் இருந்த அறைக்கு சென்றவர் உள்ளே சென்று அவனைப் பார்த்து விட்டு வந்தார்..
கண் கலங்க வெளியே வந்தவர் அழகப்பனிடம் வந்து “ஹலோ நீங்கதானே மிஸ்டர் அழகப்பன்..?” என்று கேட்க அவரைப் பார்த்து அழகப்பன் “ஆமா.. நீங்க யாரு? உங்களை எனக்கு யாருன்னு தெரியலையே..” என்று சொல்ல “என்னை உங்களுக்கு யாருன்னு தெரியாது.. ஆனா நீங்க தானே அருண் ஹாஸ்பிடல் செலவெல்லாம் பாத்துகிட்டு இருக்கீங்க?” என்று கேட்டார்..
“ஆமா.. நீங்க எதுக்கு அதை பத்தி எல்லாம் கேக்குறீங்க? அருணை உங்களுக்கு தெரியுமா?” என்று அழகப்பன் கேட்க “நான் அருணோட தாத்தா.. அருணுக்கு இங்க ஆகுற செலவெல்லாம் நானே பார்த்துக்கறேன்.. இந்த ஹாஸ்பிடல்லயே வச்சு அவனுக்கு ட்ரீட்மென்ட் நடக்கட்டும்.. நீங்க உங்க பொண்ணை மட்டும் கவனிச்சுக்கோங்க.. நான் உங்க பொண்ணுக்கு ஆகற செலவையும் சேர்த்து கொடுக்க தயாராக இருக்கேன்..” என்று சொன்னார் அவர்..
“தயவு செஞ்சு நீங்க என்னை மன்னிக்கணும்.. அருண் என்கிட்ட அவரை பத்தி எல்லாமே சொல்லி இருக்காரு.. நீங்க அவர் ட்ரீட்மென்ட்காக செலவு பண்றதை அவர் விரும்ப மாட்டார்.. அதனால நானே அவங்களுக்கு செலவு பண்ணிக்கிறேன்..” என்று சொல்ல சாதாரணமாய் பேசிக் கொண்டிருந்த அந்த வயதான மனிதர் ருத்ரமூர்த்தியாய் மாறினார்..
“உங்களுக்கு புரியலையா? நான் அவ்வளவு தூரம் சொல்றேன் இல்ல? அவன் என் பேரன்.. அவன் உயிரோட விளையாடாதீங்க..” என்று கத்தினார் அவர்..
“நீங்க கோபப்படாதீங்க.. என் நிலைமையையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க..” அமைதியாய் அவருக்கு புரிய வைக்க முயன்றார் அழகப்பன்..
“இங்க பாருங்க.. என் பேரன் உயிர் ஊசலாடிகிட்டு இருக்குன்னு சொல்றாங்க.. இந்த சமயத்துல நான் கொடுக்கிற பணத்தை அவன் ட்ரீட்மென்ட்க்கு செலவு பண்ணாம நீங்க நான் செலவு பண்றேன்னு சொல்லி அவன் உயிரை எடுக்கறதுக்கு நான் அனுமதிக்க முடியாது.. என்கிட்ட இருக்கற பணத்துக்கு நான் வெளிநாட்டிலிருந்து டாக்டரை வர வச்சி அவனை பார்க்க வைப்பேன்.. அவனுக்கு பிடிக்காதுங்கறதுக்காக அவன் உயிரோட விளையாடாதீங்க… என்னோட பணம் இல்லாததுனால அவன் உயிரை காப்பாத்த ஒரு வாய்ப்பு இருந்தும் அவன் உயிர் ஒருவேளை போயிருச்சுன்னா உங்களையே உங்களால மன்னிக்க முடியுமா?” என்று கேட்டார் அவர்..
சிறிது யோசித்த அழகப்பன் “நீங்க சொல்றது உண்மைதான்.. சரி.. நீங்க அவர் ட்ரீட்மென்ட்க்கு செலவு பண்ணுங்க.. ஆனா அவரை என்னோட நான் சென்னைக்கு கூட்டிட்டு போறேன்..” என்று சொன்னார்..
“நான் இங்க அருணையும் உங்க பொண்ணையும் கவனிக்கிற டாக்டர் கிட்ட எல்லாம் விவரமும் ஃபோன்லயே கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.. அவர் சொல்றபடி பார்த்தா இப்போதைக்கு உங்க பொண்ணு கிட்ட அருண் இருக்கற நிலைமையை பத்தி சொன்னா அவ அவன் என்ன நிலைமைல இருந்தா எனக்கு என்னனு தான் கேள்வி கேட்பா.. ஏன்னா அவன் யாருன்னே அவளுக்கு இப்போதைக்கு தெரியாது.. அப்படி இருக்கும்போது யாருன்னே தெரியாத ஒருத்தனை பத்தி அவ கிட்ட சொல்லி அவ உயிருக்கு ஆபத்தாகணுமா..? அவ இருக்கிற இடத்தில அவன் இருந்தாலே அவளுக்கு அவளோட பழைய வாழ்க்கையை பத்தி தெரியுற ஆபத்து இருக்கு.. அப்படி அவளோட இந்த ரெண்டு வருஷ வாழ்க்கையை பத்தி யார்கிட்ட இருந்தாவது அவளுக்கு அரைகுறையா தெரிஞ்சா அது அவ மூளைக்கு பாதிப்பு கொடுக்கும்னு டாக்டர் சொல்லி இருக்காரு.. நீங்க எப்படி என் பேரனை உங்க மருமகனா நினைக்கிறீங்களோ அதே மாதிரி தான் நானும்.. என்னிக்கு உங்க பொண்ணை அவன் விரும்பினானோ அன்னிக்கே அவ என் பேரனோட பொண்டாட்டியாயிட்டா.. அவளை என் பேத்தியா தான் நினைக்கறேன்.. அவளை ஸ்ட்ரெஸ் பண்ணி அவ உயிருக்கு எதுவும் ஆபத்து வர வேண்டாம்.. நீங்க உங்க பொண்ணை கூட்டிட்டு போங்க.. நான் என் பேரனுக்கு இந்த ஹாஸ்பிடல்லையோ இல்ல எங்கயாவது வெளிநாடு கூட்டிட்டு போயோ வைத்தியம் பார்க்கறேன்.. அவன் பொழைச்சான்னா.. பொழைச்சான்னா என்ன? அவன் நிச்சயமா பொழைச்சிடுவான்.. நான் அவனை பிழைக்க வச்சுருவேன்.. அப்படி அவன் உயிரோட திரும்பி வரும்போது உங்க கிட்ட வந்து சொல்றேன்..” என்றார்
மேலும் அவரே தொடர்ந்தார்..
“ஒரு பெண்ணை பெத்தவனுக்கு அந்த பொண்ணு கஷ்டப்படுறதை பார்க்க முடியாது.. நானும் ஒரு பொண்ணை பெத்தவன் தான்.. எனக்கு அது நல்லாவே தெரியும்.. அருண் என் பேரன் தான்னாலும் அவன் இன்னைக்கோ நாளைக்கோன்னு இருக்கான்னு டாக்டர் சொல்றார்.. அவனுக்காக உங்க பொண்ணு கிட்ட இந்த விஷயத்தை எல்லாம் சொல்லி அவ உயிரை எடுக்க பாக்காதீங்க.. இப்போதைக்கு அவ உயிரை காப்பாத்த பாருங்க.. நான் என் பேரன் உயிரை காப்பாத்த பார்க்கிறேன்.. ஒருவேளை அவன் நல்லபடியா பொழைச்சு வந்தான்னா நானே அவன் கிட்ட சொல்லி உங்க பொண்ணை வந்து கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்.. அதுவரைக்கும் தயவுசெஞ்சு உங்க பொண்ணை பத்திரமா பாத்துக்கோங்க.. இங்க இருந்து அவளை முதல்ல கூட்டிட்டு போயிருங்க..” என்றார் அந்த பெரிய மனிதன்..
“ஒரு வேளை அருண் எழுந்து தேஜூ பத்தி கேட்டான்னா என்ன சொல்லுவீங்க?” என்று கேட்டார் அழகப்பன்..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!!
மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!!
உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி
“❤️❤️சுபா❤️❤️”