எந்த தைரியத்தில் வீட்டுக்குச் செல்லாமல் ஆட்டோவில் ஏறி விட்டோம் என்று அவளுக்கே புரியவில்லை.
ஆட்டோவில் தான் ஏறியாகிவிட்டது இனி எங்கே செல்வது..?
வீட்டையும் கல்லூரியையும் விட்டால் அவளுக்கு வேறு எதுவும் தெரியாதே!
சுற்றுலாவுக்குக் கூட இலங்கையின் வேறு மாவட்டங்களுக்கு செல்லாத பேதை அவளுக்கோ தற்போது எங்கே தான் செல்வது என்று மனம் மருகியது.
“பாப்பா நீங்க எந்த ஊருக்குப் போகணும்..? இல்லனா உங்கள பஸ் ஸ்டாப்ல இறக்கி விடவா..?” எனக் கேட்டார் ஆட்டோ சாரதி.
தடுமாறிப் போனாள் அவள்.
“தெரியல அண்ணா..” என விழித்தபடி அவள் கூறியதும் அவருக்கோ ஆட்டோவை செலுத்துவதா இல்லையா என்ற கேள்வி எழுந்தது.
“ஏன் பாப்பா உனக்கு சொந்தக்காரங்க இல்லன்னா பிரண்ட்ஸ்னு யாரும் கிடையாதா..? அப்படி யாராவது இருந்தா சொல்லு அவங்க வீட்ல விட்டுட்டுப் போறேன்..” என்றார் அவர்.
“அப்படி யாரும் இல்லண்ணா.. ஏதாவது ஒரு ஊருக்குப் போகணும்.. ஏதாவது வேலை தேடணும்.. இப்போ அது மட்டும் தான் என்னோட மைண்ட்ல ஓடிக்கிட்டு இருக்கு..” என்றாள் அபர்ணா.
பேசும் போது அவளுடைய குரல் நடுங்கியது.
“சின்ன பொண்ணா இருக்கியேம்மா..? கைல பணம் வேற இல்ல… உனக்கு என்ன வேலை தெரியும்..? என்ன படிச்சிருக்க..?”
“ப.. படிப்பு இன்னும் முடியல..” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது.
“மட்டக்களப்புல என் ப்ரண்டோட ரெஸ்டாரன்ட் இருக்கு.. அங்க போறியாம்மா..? நான் அவன்கிட்ட பேசி உனக்கு ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கச் சொல்றேன்..” என அவர் கூறியதும் கையெடுத்து கும்பிட்டு விட்டாள் அபர்ணா.
என்ன செய்வது எங்கே செல்வது எனத் தெரியாது திணறியவளுக்கு புதிய வழியைக் காண்பித்த அவர் தெய்வமாகத்தான் தெரியலானார்.
“நிஜமாதான் சொல்றீங்களா அண்ணா..?” என அவள் தழுதழுத்த குரலில் தன்னுடைய கண்ணீரைத் துடைத்தவாறு கேட்க “ஆம்” என்றார் அவர்.
அவர் காட்டிய சிறிய உதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டவள் உடனே சம்மதம் கூற அவளை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கி செல்லத் தொடங்கினார் அந்தச் சாரதி.
செல்லும் வழியில் இருந்த நகைக்கடை ஒன்றில் தன்னுடைய தந்தை வாங்கிக் கொடுத்த மோதிரத்தையும் மெல்லிய சங்கிலியையும் விற்று பணத்தை பெற்றுக் கொண்டாள் அவள்.
கையில் இருக்கும் பணம் முடிவதற்குள் தன்னுடைய அத்தியாவசிய தேவைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என எண்ணியவள் மாதவன் கொடுத்த முகவரியை வாங்கிக் கொண்டு மட்டக்களப்பை நோக்கி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
நெஞ்சின் படபடப்பு அடங்க மறுத்தது.
ஒரு உணவு பொட்டலத்தையும், தண்ணீர் போத்தலையும் வாங்கிக் கொண்டு வந்து கையில் கொடுத்த மாதவனைப் பார்த்து நெகிழ்ந்து போனாள் அவள்.
நன்றி என்ற ஒற்றை வார்த்தை அவளுக்குப் போதவில்லை.
இருந்தாலும் “ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.. நீங்க பண்ற உதவியை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்..” என்றாள்.
“இதுல என்னம்மா இருக்கு..? எனக்கும் உன்னோட வயசுல ஒரு தங்கச்சி இருக்கா.. நீ பத்திரமா இருந்தாலே எனக்குப் போதும்.. என்னோட ப்ரண்டு பேரு சுரேஷ்.. அவன்கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்… நான் கொடுத்த அட்ரஸுக்கு நீ போனதும் உனக்கு அங்கேயே வேலை போட்டுத் தரேன்னு சொல்லி இருக்கான்.. வேற ஏதாவது உதவி வேணும்னாலும் அவன்கிட்ட கேளுமா இல்லைன்னா இது என்னோட நம்பர் இதுக்கு போன் பண்ணு..” எனச் சிறிய துண்டில் தன்னுடைய தொலைபேசி எண்ணை எழுதிக் கொடுத்தான் மாதவன்.
“சரிம்மா பஸ் கிளம்பப் போகுது பத்திரமா இருந்துக்கோ.. எதுக்கும் பயப்படாத, முடிஞ்சா உங்க வீட்டுக்கு எடுத்துப் பேசுமா.. நீ எங்கே இருக்கிறேன்னாவது அவங்ககிட்ட சொல்லு.. உன்ன காணமேன்னு பதறிப் போயிருவாங்க… எவ்வளவு குறைகள் இருந்தாலும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் பெத்தவங்களுக்கு அவங்க பசங்க தான் உசுரு… எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு சீக்கிரமாவே உங்க வீட்டுக்குப் போயிரு.. அதுதான்மா உனக்கு நல்லது.. இந்த வயசுல நீ கஷ்டப்பட்டு வேலை பார்த்து தனியா வாழ்றதெல்லாம் முடியாத காரியம்.. எந்த முடிவெடுக்கிறதா இருந்தாலும் நல்லா யோசிச்சு எடு..” என்றான் மாதவன்.
“சரி அண்ணா..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. விழிகளை மூடித் தன் துக்கத்தை அடக்கிக் கொள்ள வேண்டும் போல மனம் துடியாய்த் துடித்தது.
“சரிம்மா பத்திரமா போயிட்டு வா..” என்றவர் அந்த பேருந்தை விட்டு இறங்க முயற்சித்த கணம்
“அண்ணா ஒரு நிமிஷம்..” என வேகமாக மாதவனை அழைத்தவள் தன்னுடைய பையில் இருந்து 3000 ரூபாயை எடுத்து மாதவனிடம் கொடுத்தாள்.
“அண்ணா இத வச்சுக்கோங்க நீங்க பண்ண எல்லா உதவிக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா..” என்றவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர்,
“இல்லமா எனக்கு இந்தப் பணம் வேண்டாம்..” எனக் கூற,
“ப்ளீஸ் அண்ணா வாங்கிக்கோங்க நீங்களும் என்ன சங்கடப்படுத்தாதீங்க..” என்றாள் அபர்ணா.
அவரோ அந்த 3000 ரூபாயில் ஆயிரம் ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி 2000 ரூபாயை அவளிடமே கொடுத்தவர்,
“இது போதும்மா நீ பத்திரமா போயிட்டு வா..” எனக் கூறிவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி விட இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்தானே என எண்ணிக்கொண்டாள் அபர்ணா.
கொழும்பை விட்டு முதல்முறையாக மட்டக்களப்பிற்கு செல்லப் போகும் இப் பயணம் அவளுக்கோ புதுவிதமான பயத்தை மனதில் விதைத்தது.
அங்கே தெரிந்த நண்பர்களோ உறவினர்களோ ஏன் யாருமோ இல்லை என்பதை உணர்ந்தவள் மாதவன் கொடுத்த முகவரியை தன்னுடைய கரத்தில் அழுத்தமாக பிடித்துக் கொண்டாள்.
‘சுரேஷ் அண்ணா எனக்கு ஏதாவது வேலை கொடுக்கணும் கடவுளே..!’ என மனதார வேண்டிக் கொண்டவள் மெல்ல ஜன்னல் ஓரத்தில் தலையை சாய்த்து விழிகளை மூடிக்கொண்டாள்.
நடந்து முடிந்த விடயங்கள் யாவும் அவளை மிகவும் அழுத்தின.
உள்ளம் நைந்து கதறியது.
அதி வேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்தின் குலுக்களோ தாலாட்டாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே அவளை உறக்கத்திற்கு இழுத்துச் செல்லத் தொடங்கியது.
மெல்லிய உறக்கத்தில் இருந்தவளுக்கு தன்னுடைய உடலில் எதுவோ உரசுவது போன்று தோன்ற விழிகளைத் திறக்காது அதை என்னவென்று உணர முயன்றவள் திகைத்து விழித்தாள்.
அவளுக்கு அருகே அமர்ந்திருந்த நடுத்தர வயதைச் சேர்ந்த ஆண் ஒருவன் அவளுடைய இடுப்பில் தன்னுடைய கரத்தால் வருட அவளுக்கு அருவருத்துப் போனது.
பயந்து போய் இன்னும் நன்றாக ஜன்னலோரம் ஒட்டி அவனுடைய கை படாத அளவுக்கு அமர்ந்து கொண்டவளுக்கு விழிகள் கலங்கிவிடும் போல இருந்தன.
அவள் தள்ளி அமர்ந்ததும் எதுவும் தெரியாததைப் போல திரும்பி அமர்ந்து கொண்டான் அந்த நடுத்தர வயது ஆண்.
இவளுக்கு அச்சத்தில் தூக்கமே வர மறுத்தது.
எங்கே மீண்டும் தூங்கிவிட்டால் மீண்டும் தன் உடலில் கையை வைத்து தடவுவானோ எனப் பயந்தவள் தூங்காது விழித்தபடி அமர்ந்திருக்க சற்று நேரத்தில் அவள் புறம் நெருங்கி அவளுடைய தொடைகளை உரசியவாறு அமர்ந்து கொண்டான் அந்த ஆண்.
அவளுக்கோ சீ என்றாகிப் போனது.
இதற்கு மேல் அவளால் நகர்ந்து அமரவும் இடம் இல்லாது போக தவித்துப் போனவள் நெளியத் தொடங்கினாள்.
அந்த ஆணோ இன்னும் அவளை நெருங்க,
“அண்ணா தயவு செஞ்சு கொஞ்சம் தள்ளி இருங்களேன் ப்ளீஸ்..” என அவனிடமே கெஞ்சி விட்டாள் அபர்ணா.
“சரி..” என்றவன் அவள் கூறியதும் சற்றே தள்ளி அமர்ந்து விட நிம்மதிப் பெரு மூச்சை வெளியேற்றியவள் நன்றாக ஜன்னலோரம் இன்னும் ஒட்டி அமர்ந்தவாறு வெளியே வீதியை வெறிக்கத் தொடங்கினாள்.
எப்போது இந்தப் பயணம் முடியும் என்றிருந்தது அவளுக்கு,
அப்படியே அவனுடைய எந்த தொந்தரவும் இல்லாது போய்விட அந்த நிம்மதியில் தன்னை மறந்து கண்ணசந்து விட்டாள் அவள்.
அக்கணம் அவனுடைய ஒற்றைக் கரமோ சற்றே உயர்ந்து அவளுடைய ஒரு பக்க மார்பை பிடித்து வருடத் தொடங்க “ஐயோ..!” என்ற அலறலோடு பதறி எழுந்தவள் அதன் பின்னர் அந்த இருக்கையில் இருக்கவே இல்லை.
நடுங்கிப் போனாள் அவள்.
“என்னாச்சும்மா..?” என அந்த இருக்கைக்கு எதிராக இருந்த இருக்கையில் இருந்த ஒரு பெரியவர் கேட்க,
“ஒன்றுமில்லை..” என அழுகையோடு கூறியவள் தன்னுடைய பையை மட்டும் அந்த இருக்கையில் வைத்து விட்டு சற்று தள்ளி வந்து எழுந்து நின்று கொண்டாள்.
ஏனைய இருக்கைகள் யாவும் நிறைந்து போயிருந்தன.
‘இந்தக் கேடு கெட்டவனுக்கு அருகே அமர்வதை விட எவ்வளவு தூரம் செல்வதாக இருந்தாலும் நின்று கொண்டே பயணித்து விடலாம்..’ என எண்ணியவள் இருக்கையில் அமர மறுத்து நின்று கொண்டே தன்னுடைய மீதிப் பயணத்தை தொடர்ந்தாள்.
அடக்க முடியாமல் அழுகை பீறிட்டது.
பேருந்தின் வேகத்திற்கு நிற்க முடியாமல் அங்கும் இங்கும் ஆடி அசைந்து விழப்போனவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் சரசரவென வழிந்தது.
இங்கேயே கதறி அழுது விட வேண்டும் போல இருக்க,
நிற்க முடியாமல் கம்பியைப் பிடித்த வண்ணம் தள்ளாடித் தள்ளாடி நின்றவளை நெருங்கி வந்த கண்டக்டரோ ஒரு பெண்ணின் அருகே அவளுக்கு இருக்கையை ஒதுக்கிக் கொடுக்க நன்றியோடு அவரைப் பார்த்தவள் தன்னுடைய பையை எடுத்து வந்து அந்த பெண்ணின் அருகே அமர்ந்து கொண்டாள்.
மனம் சுக்குநூறாக நொறுங்கிப் போயிருந்தது.
அந்தக் கேடு கெட்டவன் தொட்ட இடங்கள் யாவும் அருவருப்பைக் கொடுக்க இக்கணமே ஆடை மாற்றி குளிக்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு,
வேறு வழி இல்லை அவள் நினைத்த எதையும் இப்போது செய்யும் நிலைமையில் அவளும் இல்லை.
எல்லா கஷ்டங்களையும் தாங்கித் தான் ஆக வேண்டும் என எண்ணிக்கொண்டவள் தன்னுடைய விழிகளை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.
இப்போதெல்லாம் யார் பார்த்தாலும் பரவாயில்லை என்று அனைவரின் முன்பும் அழுது விடும் அவளுடைய நிலையை அவளே வெறுத்தாள்.
குரு தன்னைத் தொட்ட இடங்களில் எல்லாம் இன்னொருத்தன் அவளைத் தொட்டது கோபத்தையும் அருவருப்பையும் உண்டாக்கியது.
என்னுடைய அனைத்தும் அவன் ஒருவனுக்கு மாத்திரமே என எண்ணிக்கொண்டவள் சட்டெனத் தன் மனம் போகும் போக்கை நினைத்து திகைத்துப் போனாள்.
தனக்கு இவ்வளவு கேடு செய்த அவனைப் பற்றி இன்னுமா சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
ஐயோ வென்றானது அவளுக்கு,
இனி என்ன நடந்தாலும் குரு என்ற ஒருவனைப் பற்றி சிந்திக்கவே கூடாது என எண்ணிக் கொண்டவள் தன் மடியில் இருந்த சிறிய பையை பத்திரப்படுத்திக் கொண்டாள்.
இனி வரப்போகும் நாட்களில் அந்த பைக்குள் இருக்கும் சொற்ப பணம்தான் அவளுக்கு உதவப் போகின்றது.
சில மணி நேரங்களில் அவளுடைய பயணம் முடிவுக்கு வர மட்டக்களப்பு மாவட்டத்தை வந்து சேர்ந்திருந்தாள் நம் நாயகி அபர்ணா.
அங்கே இருந்து ஆட்டோ ஒன்றை பிடித்தவள் சுரேஷின் முகவரியைக் காட்டி அங்கே செல்லும்படி கூற அந்தச் சாரதியோ அவள் கூறிய இடத்திற்கு அவளை அழைத்துச் செல்லத் தொடங்கினார்.