41. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.8
(108)

நெருக்கம் – 41

அபியின் வீட்டில் இருந்து அழைப்பு வருகின்றது என்றதும் ஏதோ ஒரு விதமான புத்துணர்வு அவனை சூழ்ந்து கொண்டதைப் போலத்தான் அவனுக்குத் தோன்றலானது.

அதேநேரம் நெஞ்சுக்குள் ஒரு விதமான படபடப்பும் இதயத் துடிப்பின் அதிகரிப்பும் அவனைத் திகைக்கவும் செய்தது.

விந்தைதான்.

அனைத்து விதமான உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு அவளைப் பற்றி அறியும் ஆர்வத்தில் “ஹலோ..” என்றான் குருஷேத்திரன்.

“மாப்பிள எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா..?” என்ற பத்மாவின் குரலில் இவனுக்கோ வியப்பு மேலோங்கியது.

நான் செய்த காரியத்திற்கு என்னை இவர்கள் திட்டவல்லவா வேண்டும்.?

எந்தவிதமான கோபதாபமும் இன்றி நலம் விசாரிக்கும் அபர்ணாவின் அன்னையை எண்ணி வியந்தவன் “நான் நல்லா இருக்கேன்..” என அவருக்கான பதிலைக் கொடுத்தான்.

அவனுடைய தடித்த அதரங்களோ அபர்ணாவைப் பற்றிக் கேள்வி எழுப்புவதற்காக அசையத் துடித்தன.

“நல்லது தம்பி.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..” என்றவர் தயங்க,

“சொல்லுங்க ஆன்ட்டி..” என ஊக்கினான் அவன்.

“என்னோட மூத்த பொண்ணு பிரச்சனை உங்களுக்கு நல்லாவே தெரியும்ல… அவ இப்போ எல்லாத்தையும் வேணாம்னு உதறிட்டு எங்க வீட்டுக்கு வந்துட்டா… மனசு உடைஞ்சு போய் வந்திருக்க அவள சமாதானம் பண்ணவே போதும் போதும்னு ஆயிடுச்சு தம்பி… இப்போதான் நாங்க கொஞ்சம் நார்மலுக்கு வந்திருக்கோம்.. அதனாலதான் இந்த ரெண்டு நாளும் பாப்பா கூட பேசவே முடியல..” என்றதும் திகைத்தான் அவன்.

“எப்பவும் அவளே காலைல சாயந்திரம் நைட்னு கால் பண்ணிருவா ஆனா அவளும் மூணு நாளா எனக்கோ அவருக்கோ கால் பண்ணிப் பேசவே இல்ல… ஒருவேளை நான் பண்ணலைன்னு என் மேல கோபமா இருக்காளோ தெரியல…

காலைல அவளோட நம்பருக்கு கால் பண்ணிப் பார்த்தேன்… எந்த ரெஸ்பான்ஸ்ஸும் கிடைக்கல மாப்பிள்ள.. அவளோட ஃபோன் ரிங் போகுதே இல்ல.. ஸ்விட்ச் ஆஃப்னு வந்துச்சு… அதான் அபி எப்படி இருக்கான்னு உங்ககிட்ட கேட்கலாம்னு உங்க நம்பருக்கு கால் பண்ணினேன்..

முடிஞ்சா அவகிட்ட கொஞ்சம் ஃபோனைக் கொடுக்குறீங்களா மாப்பிள்ள..?” என நிதானமாகக் கூறிக் கொண்டிருந்த பத்மாவின் வார்த்தைகளில் அவனோ ஆணி அடித்ததைப் போல அசைய மறந்து அப்படியே உறைந்து போனான்.

அலைபேசியைப் பிடித்திருந்த அவனுடைய இரும்புக் கரமோ கிடுகிடுவென நடுங்கத் தொடங்கியது.

இவர் என்ன கூறிக் கொண்டிருக்கிறார்..?

அபர்ணாவைப் பற்றி என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்..?

அவள் அங்கே தானே சென்றாள்..!

இன்றோடு அவள் சென்று மூன்று நாட்கள் முடிந்து போனதே..

இப்போது அவளைப் பற்றி என்னிடம் விசாரித்தால் என்ன அர்த்தம்..?

‘ஓ மை காட் அப்போ அபி அவளோட வீட்டுக்குப் போகவே இல்லையா..? நோ… நோ… நோ… ஷிட்… அப்போ அவ எங்க போனா..? அவளுக்கு வேற எங்கேயும் போகத் தெரியாதே… அவளுக்கு வேற எதுவுமே தெரியாதே…!’

நொடியில் அவன் உடலும் உள்ளமும் பதறிப் போக,

“ஆன்ட்டி என்ன சொல்றீங்க அபி அங்க வரலையா..?” என இவன் பதற்றத்தோடு கேட்டு விட அவருக்கோ இவனுடைய கேள்வியில் அதிர்ச்சி மேலிட்டது.

“ஐயோ என்ன மாப்ள சொல்றீங்க..? அபி இங்க வந்தாளா..? எப்போ வந்தா..? அவ இங்க வரவே இல்லையே… அங்க இருந்து எப்போ கிளம்பினா..? இப்போதான் கிளம்பினாளா..?” எனப் பதறியபடி விசாரித்தார் பத்மா.

இவனுக்கோ தலை விறைப்பது போல இருந்தது.

தன்னுடைய கரத்தின் நடுக்கத்தை நிறுத்த முடியாமல் அலைபேசியை இறுக்கிப் பிடித்தவன் என்ன பதில் கூறுவது எனத் தெரியாது திகைத்து நிற்க,

“மாப்ள என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.. எ… என்னோட பொண்ணு எங்க..? அவளை தனியா அனுப்பினீங்களா..? ஐயோ அவளுக்கு அங்கிருந்து எங்க வீட்டுக்கு வர்றதுக்கு வழி கூட தெரியாதே… என் பொண்ணு எங்க..?” என அவர் பதறி அழவே தொடங்கிவிட,

தன்னுடைய குரலை செருமி சரிப்படுத்தியவன்,

“ஆன்ட்டி ரிலாக்ஸ்… இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ட்ரைவர் கூட கி.. கிளம்பினா… இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க வீட்டுக்கு வந்துருவா.. நீங்க டென்ஷன் ஆகாதீங்க… கார் ரிப்பேர் ஆயிடுச்சு போல.. நான் பாத்துட்டு உங்களுக்கு கா.. கால் பண்றேன்..” எனக் கூறிவிட்டு அவர் அடுத்த கேள்வி கேட்பதற்கு முன்பு அழைப்பைத் துண்டித்தவன் தலையில் கையை வைத்தபடி அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டான்.

அவனுடைய இதயமோ உடலை விட்டு வெளியே எகிறிக் குதித்து விடுவது போல துடித்துக் கொண்டிருந்தது.

தன் தலையைப் பிடித்தவாறு சிந்திக்க முடியாது சில நொடிகள் அசைவற்று சோபாவில் அமர்ந்திருந்தவன் சடாரென திகைத்து நிமிர்ந்தான்.

அன்று ஒருநாள் அவளுடைய அனுமதி இன்றி தாராவின் மேலிருந்த கோபத்தில் அவளோடு வன்மையாக அவன் கூடிவிட அந்த வன்மையைத் தாங்க முடியாது வீட்டை விட்டு சென்றவள் அவளுடைய வீட்டிற்கும் செல்லாமல் வெளி வாயிலில் வைத்திருந்த சிறிய புதர் செடிகளுக்குள் மறைந்து அமர்ந்து அழுது கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தவனுக்கு உடல் ஒரு கணம் விதிர்விதிர்த்துப் போனது.

இம்முறையும் வீட்டிற்குச் செல்லாமல் அங்கே தான் இன்னும் அமர்ந்து கொண்டிருக்கிறாளா..?

ஐயோ…!!

மூன்று நாட்கள் ஆகிவிட்டனவே எனப் பதறியவன் அடுத்த கணம் மின்னலென வாயிலை நோக்கி வேகமாக பாய்ந்து ஓடினான்.

அவன் ஓடும் வேகத்தைக் கண்ட வேலையாட்களோ பதறிப்போய் என்னவோ ஏதோ என அவனுக்குப் பின்னாலேயே ஓடி வர,

கிட்டத்தட்ட கதவை உடைத்து விடுபவன் போல ஓடி வந்த அவனைக் கண்டு பயந்து போய் வேகமாக அந்த பெரிய கேட்டை திறந்து விட்டார் வாட்ச்மேன்.

இவனோ வியர்வை வழிய வெளியே ஓடி வந்தவன் ஒவ்வொரு புதர் செடியையும் வேக வேகமாக விலக்கிப் பார்க்க அவனுக்குப் பின்னே வந்தவர்கள் யாவரும் குழம்பிப்போய் அவனையே பதற்றத்தோடு பார்த்தவாறு நின்றிருந்தனர்.

“அபிஇஇஇஇஇ…. அபீஈஈஈஈஈஈ…” என அழைத்தவாறு பதறித் துடித்து அங்கு வாயிலின் இருபுறமும் வைக்கப்பட்ட செடிகளுக்கு மத்தியில் அவளைத் தேடி அலைந்தவன் அங்கே எங்கேயும் அவள் இல்லை என்றதும் தொய்ந்து போனான்.

கால்கள் பலமிழந்து நடுங்கத் தொடங்கின.

அவனுடைய மனம் முழுவதும் நிறைந்திருந்தது ஒரே ஒரு கேள்விதான்.

அபி எங்கே..?

அவள் எங்கே…?

என்னவள் எங்கே…?

அலறிய மனதிற்கும் பதறிய உடலுக்கும் சமாதானம் செய்ய முடியாது அவன் கிட்டத்தட்ட தன் நிலை மறந்து தன் உயரம் மறந்து ஒவ்வொரு புதர்ச் செடிகளையும் தேடிப் பார்த்துவிட்டு அங்கே அவள் இல்லை என்றதும் தொய்ந்து போய் அந்த மதில் சுவரோடு சாய்ந்து நின்று விட,

அவன் பின்னால் ஓடி வந்த வேலையாட்களில் ஒருவனோ தயக்கத்தோடு நெருங்கி வந்து,

“சார் என்ன ஆச்சு..? ஏதாவது பிரச்சனையா..? எல்லாரும் உங்களையே பார்த்துக்கிட்டு இருக்காங்க… உள்ள வாங்க சார்..” என அழைத்தான்.

அப்போதுதான் தான் வீதியில் நிற்பதையும் வாகனங்களை நிறுத்தி விட்டு ஆங்காங்கே நின்று சிலர் தன்னையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டவனுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை.

அக்கணம் மரியாதை கௌரவம் அனைத்தும் மறந்து தான் போனது அவனுக்கு.

மீண்டும் அவனுடைய மனம் அவள் எங்கே என்ற கேள்வியில்தான் வந்து நின்றது.

அடுத்த கணமே காவல் துறையில் மிகப்பெரிய அதிகாரி ஒருவருக்கு அழைப்பை எடுத்தவன் அபர்ணாவைக் காணவில்லை என்ற விடயத்தைக் கூறிவிட்டு அவளுடைய புகைப்படத்தை அவருடைய எண்ணுக்கு அனுப்பி வைத்தான்.

தன்னுடைய வீட்டில் வேலை செய்த ஆட்கள் அனைவரையும் அழைத்து அருகே உள்ள இடங்களில் எல்லாம் அபர்ணாவை எங்காவது யாரேனும் பார்த்தார்களா என விசாரிக்கும்படி அனுப்பி வைத்தவன் இன்னும் சிலரை ஆட்டோ சாரதி மற்றும் பேருந்து நிலையம் போன்றவற்றிலும் விசாரிக்கும்படி அனுப்பி விட்டு வீட்டுக்குள் வந்து அமர்ந்தவனுக்கு இன்னும் உடலின் நடுக்கம் நின்றபாடு இல்லை.

தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

எங்கே தன்னை மறந்து தன்னிலை இழந்து கதறி விடுவோமோ என பயந்து போனான் அவன்.

அவன் அவனாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டவன் சற்று நேரம் தன்னை அமைதிப் படுத்த படாதபாடு பட்டுப்போனான்.

இவ்வளவு பதற்றம் தன்னை நிதானம் இழக்க செய்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டவன் மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியேற்றிவிட்டு தன்னுடைய அலைபேசியில் சிசிடிவி ஃபுட்டேஜை எடுத்தவன் அன்றைய தினம் அபர்ணா சென்ற நேரத்தை கணித்து அந்த காணொளியை பார்க்கத் தொடங்கினான்.

அதில் அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறிய அபர்ணாவோ ஆட்டோ ஒன்றில் எறிப் பயணிப்பதைக் கண்டதும் அவனுடைய விழிகள் விரிந்தன.

சட்டென அப்படியே அந்த காணொளியை நிறுத்திவிட்டு அவள் சென்ற ஆட்டோவின் இலக்கத்தை மனதில் பதிய வைத்தவன் அடுத்த நொடியே அந்த ஆட்டோ சாரதி பற்றி விசாரிக்கத் தொடங்கினான்.

அவனிடம் கொட்டிக் கிடக்கும் பணமோ அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஆட்டோவின் சாரதி பெயர் மாதவன் என்பது தொடக்கம் அவனுடைய முழு விபரங்கள் வரை அனைத்து விடயங்களையும் அவனுக்குத் தெரியப்படுத்த மாதவனின் வீட்டு முகவரியை பெற்றுக் கொண்டவன் தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு நேரே அங்கே சென்றான்.

தன்னுடைய வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த மாதவனுக்கோ விலை உயர்ந்த காரொன்று தன்னுடைய வீட்டின் வாயிலில் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது.

ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கியவன் அந்தக் காரை நெருங்கிச் செல்ல நொடியில் கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தவன் தன் கரத்தில் இருந்த புகைப்படத்தை அவரிடம் காட்டி,

“இந்த போட்டோல இருக்க பொண்ண எங்கே இறக்கி விட்டீங்க..?” என அழுத்தமாகவும் வேகமாகவும் கேட்க திணறிப் போனான் மாதவன்.

அந்தப் புகைப்படத்தை பார்த்ததுமே அது அபர்ணா என்பதை புரிந்து கொண்டவருக்கு இவனிடம் அவளைப் பற்றி கூறலாமா வேண்டாமா என்ற எண்ணமே அவருக்குள் எழுந்தது.

“நீங்க யாரு..? இந்த பொண்ணு யாருன்னு எனக்குத் தெரியலையே..” என மாதவன் கூற

அடுத்த நொடி அவருடைய கழுத்தைப் பற்றி இறுக்கியவன் நிலத்திலிருந்து அரை அடி தூரத்திற்கு மாதவனைத் தூக்கி இருந்தான்.

“இவ என்னோட பொண்டாட்டி.. உன்னோட ஆட்டோவுலதான் வந்துருக்கா.. அவ எங்கன்னு மட்டும் எனக்கு தெரியலன்னா உன்ன மட்டும் இல்ல உன்னோட குடும்பத்தையே கொழுத்திடுவேன்.. மரியாதையா சொல்லு.. அவளை எங்கே இறக்கிவிட்ட..? இல்லன்னா நீ தான் அவளை ஏதாவது பண்ணிட்டியா… சொல்லுடா..? சொல்லு அவ எங்க..? சொல்லு…” என குரு கத்த பயந்து போனான் மாதவன்.

குருவின் விழிகளோ நனைந்து போயின.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 108

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “41. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!