42. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.8
(112)

நெருக்கம் – 42

இடம் பொருள் ஏவல் அனைத்தும் மறந்து தன் சுயம் தொலைத்து அபிக்காக தவியாய் தவித்துக் கொண்டிருந்தான் குருஷேத்திரன்.

அவனுடைய இரும்பு கரத்தின் அழுத்தத்தில் மாதவனின் கழுத்து எலும்புகளோ உடைந்து விடும் போல இருக்க அவனிடமிருந்து விடுபட முயன்றவனோ குருவின் கரத்தை தன்னிலிருந்து அகற்றப் போராடினான்.

இதற்கு மேலும் அழுத்தினால் அவனுடைய குரல்வளை உடைந்து விடும் என்பதை உணர்ந்து தன்னுடைய கரத்தை விடுவித்த குருவோ,

“மரியாதையா சொல்லிரு என்னோட அபி எங்க..?” எனக் கேட்க கழுத்தைப் பிடித்தவாறு இருமினான் மாதவன்.

அக்கணம் குருவைப் பார்த்து அதீத கோபம் அவனுக்குள் எழுந்தது.

அந்தச் சிறு பெண்ணை குழந்தை பெற முடியாத காரணத்தால் வீட்டை விட்டு துரத்திய மகான்தானே இவன்..?

இப்போது வந்து ஏதோ நல்லவன் போல அவளைக் காணவில்லை என்று நடிக்கிறானே..

சே..! என்ன ஆண் இவன் என்ற வெறுப்பு அவனுக்குள் தோன்றியது.

அன்று அபர்ணா அழுத அழுகையையும் அவள் துடித்த துடிப்பையும் வீடு வரை சென்று வீட்டுக்குள் நுழைய முடியாமல் எங்கே போவது எனத் தெரியாது அலைபாய்ந்து கொண்டிருந்த நிலையையும் நினைவில் கொண்டு வந்தவனுக்கு அவளைப் பற்றி இவனிடம் சொல்ல வேண்டும் எனத் தோன்றவே இல்லை.

இனியாவது அந்தப் பெண் நன்றாக இருக்கட்டும் என எண்ணியவன் “சத்தியமா எனக்குத் தெரியாது…” என மீண்டும் பொய்தான் கூறினான்.

குருவோ கொதித்துப் போனான்.

அவனுக்கு அக்கணம் அபி வேண்டும்.

அவள் எங்கே இருக்கிறாள் எப்படி இருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்தாக வேண்டும்.

அபி பற்றி அவனுக்குக் கிடைத்த ஒரே ஒரு சிறுகுறிப்பு இந்த மாதவன்தான்… இவனும் தெரியாது எனக் கூறினால் அவன் என்னதான் செய்வான்..?

உடலில் உள்ள அத்தனை பாகங்களும் அவளை நினைத்து நடுங்கத் தொடங்கி விட இன்னும் மூர்க்கன் ஆகிப் போனான் அவன்.

ஆத்திரத்தோடு மாதவனை அவன் இன்னும் நெருங்க அக்கணம் அவனுடைய அலைபேசி ஒலித்தது.

காவல்துறை அதிகாரியின் என்னிலிருந்து அழைப்பு வருவதைக் கண்டதும் தாமதிக்காது உடனே அழைப்பை ஏற்றவன்,

“ஹலோ.. அ…. அபி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சுதா…?” என பரபரப்புடன் கேட்க,

“சார் உங்க பொண்டாட்டிக்கு ஒரு 22 இல்லன்னா 23 வயசு இருக்குமா..?” என அவர் கேட்க,

“ஆமா அவளுக்கு 22 வயசுதான்.. அவளப் பத்தி ஏதாவது தெரிஞ்சுதா..?” என மீண்டும் வேகமாக விசாரித்தான் அவன்.

“சாரி சார்.. இங்க ஒரு டெட் பாடி கிடைச்சிருக்கு.. சூசைட் கேஸ்.. தன்னோட புருஷன் வீட்டை விட்டு விரட்டி விட்டதால தன்னோட பிறந்த வீட்டுக்கும் போக முடியாம புருஷன் வீட்டிலையும் வாழ முடியாம இங்க ஸ்டார்கோல்ட் லாட்ஜ்ல ரூம் எடுத்து ஸ்டே பண்ணிட்டு அங்கேயே நேத்து நைட் தூக்கு மாட்டி அந்த பொண்ணு இறந்து போயிருக்கு… லெட்டர் வேற எழுதி வச்சுட்டு செத்துப் போய் இருக்கா.. சின்ன பொண்ணு சார்.. நீங்க வந்து அது உங்களோட மனைவியான்னு..” அவர் கூறி முடிப்பதற்கு முன்னரே குருஷேத்திரனின் கரத்தில் இருந்த அலைபேசி நழுவித் தரையில் விழுந்தது.

நடுங்கிப் போனான் அவன்.

தலை சுற்றுவதைப் போல இருக்க தன்னை சமாளிக்க முடியாது அப்படியே சரிந்து அந்த வீதியில் அவன் விழுந்து விட அவனைப் பார்த்துக் கொண்டே நின்ற மாதவனோ பதறிப் போனான்.

“ஐயோ என்னாச்சு சார்..?” என பதறியவாறு தரையில் விழுந்தவனைப் பிடித்து எழுப்ப முயற்சிக்க அவன் உடலோ கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தது.

“நோ…. நோ….. நோ…. அது அபி இல்ல… அது என்னோட அபி இல்லை.. அது என் அபிஇஇ இல்ல… அது வேற யாரோஓஓ.. அது என்னோட அபி இல்ல..” என தலையைப் பிடித்துக் கொண்டு வார்த்தைகளை உருப்போட்டுக் கொண்டிருந்த குருஷேத்திரனைப் பிடித்து உலுக்கினான் மாதவன்.

“சார் பதட்டப்படாதீங்க… மூச்சு விடுங்க… தயவு செஞ்சு முதல்ல மூச்சை நல்லா இழுத்து விடுங்க… என்னைப் பாருங்க சார்… நான் பேசுறது புரியுதா..?” என கிட்டத்தட்ட பைத்தியக்காரனைப் போல புத்தி பேதலித்து உளறிக் கொண்டிருந்த குருஷேத்திரனைப் பார்த்துக் கேட்டவாறு அவனைப் பற்றி உலுக்கினான் மாதவன்.

அவன் உலுக்கிய வேகத்தில் அதிர்ந்து அவனைப் பார்த்தவன் அடுத்த கணம் மின்னலெனப் பாய்ந்து தன் காரை நோக்கி ஓட மாதவனுக்கோ அவனைப் பார்த்து பாவமாகிப் போனது.

இவ்வளவு துடிப்பவன் எதற்காக அந்தப் பெண்ணை வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் எழாமல் இல்லை.

குருவோ அடித்துப் பிடித்து கார்க் கதவைத் திறந்து காரில் ஏறியவன் காரை ஸ்டார்ட் செய்த நொடி அதுவோ ஸ்டார்ட் ஆக மறுத்து சீறி அடங்கியது.

“டாமிட்.. கமான்..” என கத்தியவன் மீண்டும் மீண்டும் அதற்கு உயிர் கொடுக்க முயல காரோ அவனுடைய இக்கட்டான சூழ்நிலையில் அவனைக் கைவிட்டு விட்டு ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்பதைப் போல உறக்க நிலைக்குச் சென்று விட துடித்துப் போனான் அவன்.

அடுத்த கணம் அவனுடைய கரமோ கோபத்தோடு ஸ்டேரிங் வீலில் ஓங்கிக் குத்த படார் என்ற சத்தத்தோடு ஸ்டேரிங் ஒரு பக்கமாக உடைந்து திரும்பியது.

போலீஸ் சொன்ன இடத்துக்கு விரைந்து செல்ல வேண்டும் அங்கே இருப்பது தன்னுடைய அபி இல்லை என உறுதி செய்ய வேண்டும் அது மட்டுமே அவனுடைய மனதில் ஓடிக் கொண்டிருக்க காரை விட்டு வெளியே வந்தவன் அங்கே நின்ற மாதவனின் ஆட்டோவைக் கண்டதும் மீண்டும் மாதவனை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.

“ஸ்டார் கோல்ட் லாட்ஜுக்கு வண்டி எடு ப்ளீஸ்… நீ எவ்வளவு கேட்டாலும் தர்றேன்… என்ன அங்க கூட்டிட்டுப் போ…” என குரு கெஞ்சி நிற்க ஆட்டோ சாவியை எடுப்பதற்காக தன்னுடைய பாக்கெட்டினுள் கை வைத்தான் மாதவன்‌

அவன் இன்னும் ஆட்டோவை எடுக்காமல் இருப்பதைக் கண்ட குருவுக்கோ இன்னும் பதற்றம் கூடியது.

அவன் பணத்திற்காகத் தான் தயங்கி நிற்கிறான் எனத் தவறாக எண்ணியவன் தன்னுடைய பாக்கெட் மற்றும் பர்சில் இருந்த ஏடிஎம் கார்ட் பணம் அனைத்தையும் அப்படியே அள்ளி எடுத்து மாதவனின் கையில் திணித்து,

“தயவு செஞ்சு வண்டிய எடேன்…” எனக் கெஞ்சத் தொடங்கிவிட “இதோ சார்..” என்றவன் அவன் கொடுத்த அனைத்தையும் அவனுடைய கையில் திணித்துவிட்டு வேகமாக சென்று ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்.

மாதவன் திருப்பிக் கொடுத்த அவனுடைய கார்ட் பணம் அனைத்தும் அப்படியே கீழே விழுந்தது.

அவற்றை எடுத்து வைக்கும் எண்ணம் கூட இல்லாமல் அந்த ஆட்டோவினுள் ஏறி அமர்ந்தவனுக்கு இதயம் தொண்டைக்குள் வந்து துடித்துக் கொண்டிருந்தது.

இதுவரை அவன் ஆட்டோவில் ஏறியதே இல்லை.

ஆனால் இப்போது இருக்கும் நிலையை எண்ணி அவன் கவலைப்படும் நிலையிலும் இல்லை.

மனம் கொஞ்சம் கொஞ்சமாக மரணித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவனுக்கு அதை மீண்டும் உயிர்ப்படையச் செய்ய வேண்டும் எனில் அவனுடைய அபி வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது.

மாதவனோ ஸ்டார் கோல்ட் லாட்ஜை நோக்கி வேகமாகச் செல்ல அந்த இடத்தை நெருங்க நெருங்க இவனுக்கோ உடல் உதறியது.

அதுவும் அந்த போலீஸ் கூறிய அனைத்தும் தன்னுடைய அபியுடன் பொருந்திப் போவதை நினைத்துத்தான் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

22 வயது பெண் அதுவும் கணவனால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட பெண் என்றதுமே இவனுக்கு தலை கிறுகிறத்துப் போனது.

வீட்டுக்குப் போக முடியாமல் லாட்ஜ் ஒன்றினுள் ரூம் எடுத்து அங்கேயே தற்கொலை பண்ணி விட்டாளா..?

நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கியது.

ஆயிரம் நபர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக வந்து அவனுடைய உடலில் ஊசி ஏற்றுவதைப் போன்ற வலியை அக்கணம் அனுபவித்தவன் தன் நெஞ்சத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

“சே சே இல்ல.. அபி ஒன்னும் அவ்வளவு கோழை கிடையாது.. அவ சூசைட் பண்ணி இருக்கவே மாட்டா.. இது வேற யாரோ.. இது வேற யாரோ..” வாய்விட்டுப் புலம்பினான் அவன்.

மாதவனுக்கோ அந்த டெட் பாடி அவனுடைய மனைவி இல்லை எனக் கூறி விடலாமா என்றிருந்தது.

அவன் படும் பாட்டையும் துடிப்பையும் காணச் சகியாது இன்னும் வேகமாக தன்னுடைய வாகனத்தை செலுத்தினான் அவன்.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ஹோட்டலை வந்தடைந்தது மாதவனின் ஆட்டோ.

அந்த அரை மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக செத்திருந்தான் குருஷேத்திரன்.

மிகவும் துவண்டு தொண்டை காய்ந்து அவன் அணிந்திருந்த ஷர்ட் முழுவதும் வியர்வையால் நனைந்து கலைந்த தலைமுடியோடு வேகமாக ஆட்டோவில் இருந்து இறங்கியவனைப் பார்த்தால் ஏதோ கூலித் தொழிலாளியைப் போலத்தான் தெரிந்தது.

இவன்தான் இலங்கையின் மிகப்பெரிய பணக்காரன் எனக் கூறினால் கூட அக்கணம் அதை யாருமே நம்பப் போவதில்லை.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தற்கொலை நடந்த அறை இலக்கத்தைக் கேட்டு அறிந்து கொண்டவன் வேகமாக அந்த அறையை நோக்கி ஓடிச் சென்றான்.

அவன் பின்னால் மாதவனும் அவனுடன் சென்றான்.

காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அதிவேக வாகனத்தைப் போல அந்த ஹோட்டலுக்குள் ஓடிச் சென்றவன் அந்தக் குறிப்பிட்ட அறையை நெருங்கியதும் சட்டென நின்றான்.

அந்த அறையின் வாயிலில் நின்ற காவலர்களும் சில பத்திரிகைக் காரர்களும் இவன் வருவதைக் கண்டதும் வழிவிட்டு நகர இவனுக்கோ அதற்கு மேல் கால்கள் நகர மறுத்தன.

நெஞ்சம் நடுங்கியது.

இதயம் கொஞ்சம் கொஞ்சமாக தன் துடிப்பை நிறுத்தி விடும் போல இருந்தது.

நெற்றியோரம் நரம்புகள் விண் விண் என்று தெறிப்பது போல வலிக்க ஒற்றை விரலால் தன் நெற்றியை அழுத்தித் தேய்த்து கொண்டவனின் விழிகள் இதுவரை எப்போதும் இல்லாத பயத்தை வெளிக்காட்டியது.

அருகே நின்ற மாதவனின் தோளை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டான் அவன்.

குருஷேத்திரன் வந்ததைக் கண்ட போலீஸ் அதிகாரியோ,

“சார் வாங்க இது உங்க பொண்டாட்டியான்னு பாருங்க.. நாக்கு வெளில வந்து முகம் வீங்கி கண் பிதுங்கினதால எங்களால முகத்தை சரியா அடையாளம் காண முடியலை..” என அவர் தன் கடமையை செய்வதாக நினைத்து மேலும் அவனுடைய நெஞ்சில் இடியை இறக்க அப்படியே தொய்ந்து கீழே விழுந்து விடுபவன் போல நின்றவனைத் தாங்கிக் கொண்டான் மாதவன்‌

“எ..‌ என்னால முடியாது.. என்னால முடியாது… நா.. நான் பார்க்க மாட்டேன் நா.. நான் பார்க்க மாட்டேன்… ஐயோ அபிஇஇஇஇஇ…” என அவன் கதறி அழத் தொடங்கி விட திகைத்துப் போனார் அந்த காவல் அதிகாரி.

“சார் நீங்க பார்த்து அடையாளம் சொன்னாதான் எங்களால அடுத்த நடவடிக்கையை செய்ய முடியும்… உங்களோட நிலைமை புரியுது.. இது வேற பொண்ணா கூட இருக்கலாம் இல்லையா..? அப்படி இருந்தா இந்த பொண்ணோட பேரன்ஸை கண்டுபிடிச்சு நாங்க அவங்களுக்கு தகவல் கொடுக்கணும்… கொஞ்சம் வந்து பாத்திருங்க சார்…” என்றார் அவர்.

“ஏய் முடியாதுன்னு சொல்றேன்ல என்.. என்னால பார்க்க முடியாது..” என்றவனின் தைரியம் அக்கணம் ஒட்டுமொத்தமாக சிதைந்து போயிருந்தது.

எங்கே அது அபியாக இருந்தால் அக்கணமே அவனுடைய உயிர் அங்கேயே மாண்டு போய்விடும்.

அவனால் சத்தியமாக அப்படி ஒரு நிலையில் தன்னவளைக் காணவே முடியாது என்பதை உணர்ந்தவன் பித்துப் பிடித்தவன் போல அப்படியே அந்த இடத்தில் அசைய மறுத்து நின்றிருந்தான்.

💜🔥💜

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 112

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!