அந்தச் சிறிய லேப்டாப்பின் திரையில் நான்கு பகுதிகளாகப் பிரிந்து காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
ஒரு பகுதியில் வெளியே உணவு அருந்த வரும் இடத்தில் நடந்த நிகழ்வும், இன்னொரு பகுதியில் காபி குடிப்பதற்கான கபே முறையில் அமைக்கப்பட்ட இடத்தில் நடந்த நிகழ்வும், இன்னொரு பகுதியில் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவியின் பதிவும் நான்காவதாக ஸ்டோர் ரூமில் நடந்த பதிவும் திரையில் தெரிந்தது.
சற்று நேரத்திலேயே அந்த ஃபுட்டேஜில் வேலை செய்து கொண்டிருந்த அபர்ணாவின் உருவம் அவனுடைய கண்களுக்குத் தென்பட்டு விட கலங்கிப் போனான் அவன்.
இரண்டு நாட்களில் மொத்தமாக மாறிப் போயிருந்த அவளுடைய தோற்றத்தைக் கண்டு இவனுக்கோ உடலும் உள்ளமும் பதறியது.
‘என் கண்மணி என்னவெல்லாம் கஷ்டப்பட்டாளோ..’ என எண்ணி அதிர்ந்து அடங்கியது அவனுடைய உடல்.
பல நாள் பட்டினி கிடந்தவன் போல திரையில் தெரிந்த அவளையே இமைக்காது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் குரு.
“அவ இங்க கடைசியா வொர்க் பண்ணின டேட்ல நடந்த ஃபுட்டேஜை போடு..” என குரு உத்தரவிட்டதும் அன்றைய நாள் நடந்த சம்பவங்கள் திரையில் ஓடத் தொடங்கின.
அன்றைய நாள் ஸ்டோர் ரூமிற்குள் அபர்ணா நுழைய அதன் பின்னாலேயே சுரேஷ் அதற்குள் நுழைவது தெரிந்தது.
பார்த்துக் கொண்டிருந்த குருவின் தாடை இறுகியது.
அங்கே நுழைந்த சுரேஷ் அவளுடைய வழி மறித்து எதுவோ பேசுவதும், அவள் கோபமாகப் பேசியதும், அவளுடைய கரத்தைப் பிடித்து இழுத்து அவளை சுவற்றோடு சாய்த்து முத்தமிட முயன்றதும், திரையில் ஒளிபரப்பாக என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வுச் சுழலுக்குள் தள்ளப்பட்டான் குரு.
ஐயோ என் கண்ணம்மா எனக் கதறியது அவன் மனம்.
வெகு சிரமப்பட்டு அவனைத் தள்ளிய அபியோ கதறி அழ, அவனோ மேலும் அவளை நெருங்கி அவளுடைய ஆடையைப் பிடித்து இழுத்து கிழிக்க முயற்சிக்க ஒரு நொடி பயந்து போனவள் அடுத்த கணமே அவனை அறைந்து விட்டு கண்ணீரோடு அங்கிருந்து வெளியே ஓடிச் செல்வதை காணொளியில் கண்டவனின் இதயம் பிளவு பட்டது.
அவள் அப்படியே அந்தக் கடையை விட்டு அழுதவாறே ஓடிவிட, சற்று நேரத்தில் வெளியே வந்த சுரேஷ். அவள் திருடியதாக கூறி விட்டு தன்னுடைய அடுத்த வேலையை பார்க்கப் போய் விட்டிருந்தான்.
“ஆஃப் பண்ணுங்க..” என்ற குருவின் விழிகளோ கலங்கிச் சிவந்து போயின.
அங்கே நின்ற வேலை ஆட்களிடம் “அதற்கு பிறகு அவங்க இங்கே வரவே இல்லையா..?” எனக் கேட்க அவர்களோ இல்லை என்க அவனுக்கோ உள்ளம் மருகியது.
கால்களில் ரத்தம் வழிய “என்ன மன்னிச்சிடுங்க தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க..” எனச் சுவற்றோடு ஒன்றியவாறு கதறிக் கொண்டிருந்தவனை வெறியோடு பார்த்தவன் அவளைத் தொட்ட கரத்தை எடுத்து பின்பக்கமாக கொண்டு போய் உடைத்து விட வலியில் அலறினான் சுரேஷ்.
“த்தூ.. உன்னை நம்பித் தானே இந்த கடையில வேலைக்கு சேர்ந்தா… அவகிட்ட போய் தப்பா நடந்திருக்கியே பொறுக்கி.. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னையும் இந்தக் கடையையும் சேர்த்து கொளுத்துவேன்டா.. ப்ளடி ஃ…..*****” எனத் திட்டியவன், அந்த சிசிடிவி ஃபுட்டேஜை தன்னுடைய அலைபேசியில் பதிவேற்றிக் கொண்டான்.
கைகள் உடைந்து அலறிய வண்ணம் தரையில் கிடந்தவனை இன்னும் நான்கு மிதி மிதித்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டவன்,
“இதற்கான தண்டனையை நீ அனுபவிச்சே ஆகணும்..” எனக் கூறிவிட்டு வேகமாக அந்தக் கடையை விட்டு வெளியே வந்தவனுக்கு இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் அவளை எங்கே சென்று தேடுவதென்றே தெரியவில்லை.
‘ஒரே ஒரு நம்பிக்கையாக இங்கே தேடி வந்தால் இங்கேயும் அவளுக்கு அநீதி அல்லவா இழைக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து எத்தனை வலிகளைத்தான் அவள் தாங்குவாள்..?
என்னை நம்பி வந்தவளை நானும் காயப்படுத்தி மனதை நோகடித்து அனுப்பிவிட வீட்டிற்கும் செல்ல முடியாமல் வேலை பார்த்து தன்னுடைய வாழ்க்கையை நடத்தலாம் என்ற நம்பிக்கையோடு வந்தவளுக்கு இங்கேயும் பிரச்சனை அல்லவா ஏற்பட்டிருக்கிறது.
பாவம் எங்கே போனாளோ..
எங்கே தங்கி இருக்கிறாளோ..
யாரும் உதவி செய்தார்களா..? இல்லை இவனைப் போல கயவர்களின் கரத்தில் சிக்கிக் கொண்டாளா..?
ஐயோ! அப்படியெல்லாம் இருக்கக்கூடாது..
அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்கவே கூடாது..’ எனப் பதறியது அவனுடைய மனம்.
நேரடியாக மட்டக்களப்பு காவல் நிலையத்தை நாடிச் சென்றவன் அவளுடைய புகைப்படத்தைக் காட்டி கண்டுபிடித்து தரும்படி கூற காவல்துறை அதிகாரிகள் மூலமாகவும் அவளைத் தேடும் வேட்டை அதிகரித்தது.
அந்த ரெஸ்டாரண்டுக்கு அருகே இருக்கும் கடைகள் மற்றும் வீதியில் போய் வருபவர்களை எல்லாம் நிறுத்தி அபியைப் பற்றி விசாரித்தவனுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.
விசாரித்த அனைவரும் ஒன்று போல தெரியாது எனக் கூறி மறுத்து விட அந்த இரவு நேரத்தில் தலையில் கை வைத்த படி அப்படியே நின்று விட்டான் குரு.
எங்கே சென்று தேடுவது..?
எப்படிக் கண்டுபிடிப்பது..?
கையில் கிடைத்த வைரத்தை தொலைத்து விட்டு இப்போது வீதி வீதியாக அலையும் தன்னையே சபித்துக் கொண்டான் அவன்.
அன்றைய நாள் முழுவதும் ஒவ்வொரு வீதியாக அவளைத் தேடி அலைந்தவனுக்கு சோர்வு தொற்றிக் கொண்டது.
அருகே உள்ள கடைகளின் சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ்களைப் பார்த்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என முயற்சி செய்தவன் அந்த இறுதிக் கட்ட முயற்சியும் தோற்றுப் போக தவித்துப் போனான்.
காவல் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் அவர்களோ தேடிக் கொண்டுதான் இருக்கிறோம் என்ற பதிலைத் தவிர வேறு எந்த பதிலையும் கொடுக்க மறுத்தனர்.
அங்கே சில ஏஜன்சிகளை தொடர்பு கொண்டு பணத்தை அள்ளி இறைத்தவன் அவளுடைய புகைப்படத்தை காட்டி கண்டுபிடித்து தரும்படி கூற அந்த முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது.
கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் அங்கேயே தங்கி தன்னுடைய தேடலைத் தொடங்கியவன் நிறுத்தாது நீடித்துக் கொண்டே போக மூன்றாவது நாள் அவனுக்கு மனம் தளர்ந்து போனது.
கிட்டத்தட்ட அந்த மாவட்டம் முழுவதையும் அலசி ஆராய்ந்து விட்டான்.
எங்கே தான் போனாள்..?
என்ன ஆனாள் எதுவும் புரியவில்லை.
ஒருவேளை வேறு ஏதாவது மாவட்டத்திற்கு சென்றிருப்பாளா..?
எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் தெரியவில்லையே..
உடைந்து போனான் குருஷேத்திரன்.
‘எங்கே மனம் உடைந்து போய் அவளும் தற்கொலையை விரும்பி விட்டாளோ..’ என எண்ணிப் பயந்தவன் அன்றிலிருந்து ஒவ்வொரு நாட்களும் தற்கொலை என்ற செய்தி வந்தாலே நடுங்கிப் போய்விடுவான்.
அந்த இடத்திற்குச் சென்று கதறி அழுவதும் பின்பு அது அவள் இல்லை எனத் தெரிந்து நிம்மதியுடன் திரும்பி வருவதுமாக கழியத் தொடங்கின அவனுடைய நாட்கள்.
மூன்று நாட்கள் ஐந்து நாட்களாக மாறின.
ஐந்து நாட்கள் பத்து நாட்களாக மாறின.
10 நாட்கள் அரை மாதமாக மாறிப் போக அங்கேயே தங்கி இருந்து அவளைத் தேடித்தேடி சோர்ந்து போனவனுக்கு முகம் முழுவதும் தாடி நிறைந்து வளர்ந்திருந்தது.
அனைத்தையும் அப்படியே கொழும்பில் விட்டு விட்டு வந்தவனுக்கு இதற்கு மேல் இங்கே இருக்க முடியாது என்ற நிதர்சனம் முகத்தில் அறைய தளர்ந்துபோன மனதோடு கொழும்பு நோக்கி செல்லத் தொடங்கினான் அவன்.
இந்த 15 நாட்களும் அவளை கண்டுபிடிப்பதற்காக அவன் போராடிய போராட்டத்தை வார்த்தைகளால் கூறிவிட முடியாது.
ஒவ்வொரு நாளும் பதைபதைத்துத் துடி துடித்து நொந்து போய் விட்டான் அவன்.
எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அவளை அழைத்து சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அழியத் தொடங்கியது.
ஏமாற்றத்தோடு ஒரு அவன் கொழும்பு சென்ற அடுத்த நாளே அவனைத் தேடி அபர்ணாவின் மொத்த குடும்பமும் வந்து நின்று விட திணறிப் போனான் குருஷேத்திரன்.
அவர்களுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாது அவன் இருந்த தவிப்பில் அவர்களுடைய அலைபேசி அழைப்பை ஏற்காமல் போய்விட அவன் கொழும்பு வந்து சேர்ந்ததும் அவனைத் தேடி அவனுடைய வீட்டிற்கே வந்திருந்தனர் அபர்ணாவின் குடும்பத்தினர்.
அழுகையோடும் கதறலோடும் அபர்ணாவின் அன்னையும், தந்தையும் கேட்ட கேள்விக்கு பதில் கூற முடியாது முதல் முறையாக தலைகுனிந்து நின்றான் அவன்.
அவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது..?
அவள்தான் எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லையே..!
உள்ளுக்குள் ஏதோ உடைந்து நொறுங்குவதைப் போல இருக்க தன்னுடைய அத்தனை சோகத்தையும் அடக்கி வைத்துக் கொண்டு கலங்கி விடுவேன் என்ற விழிகளை மிகச் சிரமப்பட்டு திறந்து மூடி சமாளித்துக் கொண்டு இரும்பென நின்றிருந்தான் அவன்.
“என்னோட மகள் எங்க..? சொல்லு.. அவள நீ என்ன பண்ணின…? பாவி என்னோட பொண்ண என்னடா பண்ணின..? உனக்குக் கல்யாணம் பண்ண வேற பொண்ணு வேற பாத்துட்டேன்னு கேள்விப்பட்டேன்.. அப்போ எதுக்குடா எங்க பொண்ண கல்யாணம் பண்ணின..?
நாங்களா உன்னத் தேடி வந்தோம்..? நீதானே எங்களத் தேடி வந்த கல்யாணம் பண்ணியே தீருவேன்னு ஒத்த கால்ல நின்ன… செல்ல மகளா வளர்த்த என்னோட பொண்ணு இப்போ எங்க போச்சுன்னு தெரியலையே..! இன்னொரு கல்யாணம் பண்றதுக்காக நீதான் அவள ஏதோ பண்ணிட்ட… மரியாதையா சொல்லு என்னடா பண்ணின..?” என அவனுடைய சட்டைக் காலரை பிடித்து பத்மா கதறியழ அவனோ அந்த இடத்தை விட்டு அசையவும் இல்லை.. அவரை விலக்கி விடவும் இல்லை.
ஒட்டுமொத்த சோகத்தையும் அடக்கிக் கொண்டு அப்படியே அமைதியாக நின்றிருந்தான் அவன்.
அவனுக்கு ஆதரவாக ஓடி வந்த காவலாளிகளை தன்னுடைய ஒற்றைப் பார்வையில் தள்ளி நிறுத்தியவன் இறுகிப்போய் நின்றான்.
“தெ.. தெரியாது..” என அந்த இடமே அதிரும் வண்ணம் அலறினான் குருஷேத்திரன்.
“நீங்… நீங்க எப்படித் துடிக்கிறீங்களோ அதே மாதிரிதான் நானும் இப்போ துடிச்சுகிட்டு இருக்கேன்… ஒவ்வொரு நாளும் அவளைத் தேடி நாய் மாதிரி ஒவ்வொரு ஊருக்கா அலஞ்சிக்கிட்டு இருக்கேன். அவ எங்க இருக்கான்னு எனக்கே தெரியல.. என்னால கண்டுபிடிக்கவும் முடியல..” என்றவன், உள்ளே சென்று தான் விளம்பரம் கொடுத்த பத்திரிகை எல்லாத்தையும் அள்ளி வந்து வெளியே போட்டவன்,
“இதோ ஒவ்வொரு நாளும் அவளைப் பத்தி நியூஸ் பேப்பர்ல போட்டுக்கிட்டுதான் இருக்கேன்… அவளை சீக்கிரமாவே கண்டுபிடிச்சிடுவேன்.. தயவு செஞ்சு பயப்படாதீங்க… அவளுக்கு எதுவுமே ஆகியிருக்காது.. கூடிய சீக்கிரமே அவளைக் கொண்டு வந்து உங்க முன்னாடி நிறுத்த வேண்டியது என்னோட பொறுப்பு..” எனத் தொண்டை அடைக்க கூறியவனை வெறித்துப் பார்த்தார் பத்மா.
“சீ.. அசிங்கமா நடிக்காத.. என்னோட பொண்ண நீ தேடுறேங்கிறத நான் நம்பனுமா..? இதெல்லாமே நடிப்பு… நீதான் அவளை என்னவோ பண்ணிட்ட… இன்னொரு கல்யாணம் பண்றதுக்காக அவளை இங்க இருந்து துரத்தி விட்டுட்டு இப்போ நல்லவன் மாதிரி அவளை காணோம்னு பத்திரிகையில போட்டுட்டு இருக்கியா..? உன்ன சும்மா விடமாட்டேன்டா…
காலேஜ் கூட முடிக்காத பொண்ண நீ கேட்டேன்னு உன்னை நம்பி கட்டி வச்சேன்ல்ல என்ன செருப்பாலேயே அடிக்கணும்… வீட்டை விட்டு வெளியே எங்கேயுமே போகாத பொண்ணு இப்போ எங்க போய் கஷ்டப்படுறாளோ என்ன பண்றாளோ..!” என உடைந்து அழுதார் பத்மா.
அவரைத் தாங்கிக் கொண்டாள் சாதனா.
அவரோ வேகமாக சாதனாவின் கரத்தை விலக்கிவிட்டு குருவை நெருங்கி வந்து கையெடுத்துக் கும்பிட்டவர்,
“ஐயா சாமி நீங்க பணக்காரங்க.. உங்க கூட மோதுற அளவுக்கு எங்ககிட்ட சக்தி கிடையாதுயா.. நீ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோ.. எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நாங்க பிரச்சனையும் பண்ணவும் மாட்டோம்… ஆனா எங்க பொண்ண மட்டும் எங்களுக்கு கொடுத்துரு ராசா…
அ… அவ பக்கத்துல இருக்க கடைக்கு கூட போனது கிடையாது… அவளுக்கு எதுவுமே தெரியாது… சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் எங்க கைக்குள்ளையே பொத்தி வச்சு வளர்த்தோம்… 15 நாளா அவளைக் காணாம சோறு தண்ணி இல்லாம கிடக்கிறேன்யா… அவள பாக்கணும்ங்கறதுக்காகதான் இந்த உசுர கையில பிடிச்சுட்டு நிக்கிறேன்… இல்லன்னா இந்நேரத்துக்கு என்ன பொதச்ச இடத்தில புல்லு முளைச்சிருக்கும்..
ஐயா சாமி எங்களுக்கு இந்த பங்களா காசு பணம் இது எதுலயுமே ஆசை கிடையாது… நாங்க எல்லாம் அன்புக்கு மட்டும்தான்யா அடிமை… எங்க பொண்ண கொடுத்துடு ராசா… உன்னோட வழிக்கே வரமாட்டோம்..
நீ இன்னொரு கல்யாணம் பண்ணி நல்லா வாழ்ந்துக்கோ… என் பொண்ண நான் கடைசி வரைக்கும் பார்த்துப்பேன்… அவளை மட்டும் என்கிட்ட கொடுத்திடு..” என்றவர் அபர்ணாவின் தந்தை வைத்திருந்த பணக்கட்டுகளை அள்ளி அவனுடைய காலடியில் வைத்தவர்,
“இதோ நீ எங்க வீட்டுக்காக கொடுத்த காசு… கடன் கட்றதுக்கு கொடுத்த காசு எல்லாத்தையும் கொண்டு வந்துட்டேன்… வீடு போனா போகுது… நீ தந்த எதுவுமே எங்களுக்கு வேண்டாம்.. நீ கொடுத்த எல்லாத்தையும் தந்துட்டேன்… நான் கொடுத்த என்னோட பொண்ண மட்டும் என்கிட்ட திருப்பி கொடுத்துருயா..” என பத்மா அழுதவாறே அவனிடம் கையேந்திக் கேட்க,
இவனுக்கோ கட்டுப்பாடுகள் யாவும் தளர்ந்தன.
உடல் அதிர்ந்து அதிர்ந்து நடுங்கியது.
பேச முடியாமல் விழிகள் கண்ணீரால் நிறைய,
“எனக்கு ச.. சத்தியமா தெரியாதும்மா…” என உதடுகள் துடிக்க பத்மாவிடம் கூறினான் அவன்.
அவன் தெரியாது என்றதும் ஆக்ரோஷமாக அவனைப் பார்த்தவர் வாசலில் இருந்த மண்ணை அள்ளி அவன் மீது எறிந்து விட்டு,
“சத்தியமா சொல்றேன் நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. நாசமாதான்டா போவ… வயிறு எரிஞ்சு சொல்றேன்… என் பொண்ணு ஒரு துளி கண்ணீர் விட்டா கூட அதுக்கான மொத்த வலியையும் நீ அனுபவிச்சே தீரணும்…
கடவுள் இருக்கிறது உண்மையா இருந்தா நீ தினம் தினம் துடிச்சுக் கதறணும்..” என மண்ணை அவன் மீது அள்ளி வீசிவிட்டு வார்த்தைகளைக் கொட்டியவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார் அபர்ணாவின் தந்தை.
விக்கித்து போய் நின்று விட்டான் குரு.
அவனுடைய இதழ்களோ அழுகையில் வளைந்தன.
“என்னோட வாழ்க்கை நல்லா இருந்ததா சரித்திரமே இல்லையேம்மா… அது நாசமா போய் பல வருஷம் ஆச்சே.. இந்தப் பாவி துர்திஷ்டசாலிம்மா….” என்றவனுக்கு அழுகையில் உடல் குலுங்கத் தொடங்கியது.