தேடி தேடி தீர்போமா..!
அத்தியாயம் 01
கிழக்கே உதிக்கும் சூரியன் தன் பணியைச் செயலாற்ற ஆரம்பிக்கும் முன்னமே, உன்னை விட நாங்கள் தான் விரைவாக செயல்படுவோம் என்று சூரியனுக்கே டஃவ் கொடுக்கும் வகையில் அந்த மிகப்பெரிய அரண்மனை போல் இருக்கும் வீட்டில் நடந்து கொண்டிருந்தன வேலைகள்.
“அண்ணே அந்த தோரணத்தை சீக்கிரம் கட்டிட்டு வாழை இலையை எடுத்துட்டு போங்க.. அப்பா நீங்க என்ன செய்றீங்க சமையல் எல்லாம் முடிஞ்சிட்டான்னு பார்த்தீங்களா.. அம்மா குழம்புல உப்பு பத்தல கொஞ்சமா போடுங்க நான் பாட்டியை பார்த்துட்டு வாரேன்..” என்று அங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை சொல்லிக் கொண்டே தன்னுடைய கையில் உள்ள பூஜை கூடையை சாமி அறையில் வைத்து விட்டு ஏற்கனவே துடைத்தத் தரையை தன்னுடைய தாவணி பாவாடையால் துடைக்கும் அளவு இழுப்பட தன்னுடைய வெள்ளிக் கொலுசு அணிந்த மென் பாதங்களை பூமிக்கும் வலிக்காத அளவு பாட்டியின் அறை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அந்த காரிகை.
“டேய் எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னோட வண்டியிலேயே வந்து இடிப்ப..” என்று முட்டிவரை ஒரு ஷார்ட்ஸ் தொப்புள் தெரிந்தும் தெரியாத அளவு ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட் விரித்துவிட்ட கூந்தல் அலையலையாக வீச கண்ணில் மாட்டும் கூலிங் கிளாஸை தலையின் மேல் சொருகிக்கொண்டு இடது கையால் ஒருவனின் தலைமுடியை கொத்தாகப் பிடித்து வைத்துக்கொண்டு வலது கையால் அவனை மிரட்டி கொண்டிருந்தாள் அந்த மாடர்ன் மங்கை போல் இருக்கும் அவ்வூரின் கிராமத்து அழகி.
சற்று நேரத்திற்கு முன்பு தன் தோழியை பார்க்க தன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இந்த அழகியை ரோட் சைட் ரோமியோ ஒருவன் ‘தேவதை ஒன்று செல்கிறதே’ என்று இவளை பார்த்தபடியே வர இவளும் நேராக வர நடந்தே முடிந்தது அச்சம்பவம்.
ஆம் விட்டான் வண்டியை அவள் வண்டியோடு.
விடுவாளா அவள்.
அரை மணி நேரம் ஆகியும் அந்த ரோட் சைட் ரோமியோவை வைத்து செய்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் லலிதா சுருக்கமாக லல்லு என்று அழைப்பார்கள்.
அழகிய தேவதை அதே நேரம் அழகுக்கேற்ற திமிரும் கூடவே இருக்கும்.
“பியூட்டி இங்க பாருங்க தெரியாம இடிச்சிட்டேன் என்னை விட்ருங்க..” மீண்டும் ஒரு அரை அவனது கன்னத்தில் விழுந்தது.
“யாரை பார்த்து பியூட்டின்னு சொல்ற ராஸ்கல்..” என்றாள் அவள்.
அடி வாங்கியவனது காது கொயின்ங் என்று சத்தம் வர கன்னத்தை தேய்த்துக்கொண்டு,
“அம்மா தாயே பத்திரகாளி பார்க்க தேவதை மாதிரி இருக்கியேன்னு உன்ன பாத்துட்டு வந்து தெரியாம மோதிட்டேன் இனி உன் பக்கம் தலை வைச்சு கூட படுக்க மாட்டேன் தாயே விட்டுடு..” என்று அவள் காலை பிடித்து கெஞ்சினான் இந்த ரோட் சைடு ரோமியோ.
இவளும் கொஞ்சம் மனம் இறங்கியவள் வண்டியை இடித்ததற்கு என்று அவனிடம் 2000 அபராதமாக வாங்கியவள் அவனை விட்டுவிட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த கிராமத்து அழகி.
“ஆத்தி பார்க்க தேவதை மாதிரி இருக்காலேன்னு நினைச்சது தப்பு வண்டிய இத்துனூண்டு இடிச்சதுக்கே இந்த வரத்து வராளே இவளை இடிச்சிருந்தா எனக்கு இங்க சமாதியே கட்டிருப்பா..” என்று வாய்விட்டு புலம்பியவன் அவள் போன திசையை நோக்கி இரு கரம் கூப்பி கும்பிட்டவன் தலை தெரிக்க ஓடி விட்டான் அந்த இடத்திலிருந்து.
அந்த வீட்டில் பெரியக் கதவைத் திறந்து கொண்டு தன்னுடைய மீன் போன்ற விழிகளால் அந்த அறை முழுவதும் தன்னுடைய பாட்டியை தேடினாள் மீனு என்ற மீனாட்சி.
சற்று நேரத்தில் அவளுடையத் தேடலுக்கு பயனாகத் தன்னுடைய மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறே அவள் அருகில் வந்த அவளது பாட்டியோ,
“மீனு கண்ணு வேலையெல்லாம் நல்லபடியா நடக்குதா..” என்று கேட்டார். மீனுவும்,
“என் செல்லப் பாட்டி நீங்க கவலையே படாதீங்க எல்லா வேலையும் நல்லாவே நடந்துகிட்டு இருக்கு இப்பதான் நான் பார்த்துட்டு வரேன்..” என்று சொன்னாள். என்றுமே இல்லாமல் இன்று பாட்டியின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிய மீனுவோ,
“என்ன பாட்டி இத்தனை வருஷம் கழிச்சு மகளைப் பார்க்க போறேன்னு அவ்ளோ சந்தோஷமா உனக்கு..” என்று பாட்டியின் கன்னத்தைக் கிள்ளி கேட்க, பாட்டியின் வதனத்திலோ அழகிய புன்னகையுடன் இரண்டு சொட்டு கண்ணீரும் சிந்தியது. ஆனாலும் அந்த வயதான பெண்மணியின் முகத்திலோ வருத்தத்தை மீறிய ஆனந்தம் தன்னுடைய மகளை பார்க்க போகிறோம் என்று.
“பாட்டி நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா..?” என்க, பாட்டியும் கேள் என்று சொல்ல,
“ஏன் பாட்டி நம்ம வீட்டுல நீங்க காதலிச்சு தான் கல்யாணம் பண்ணீங்க.. அம்மாவும் அப்பாவும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணாங்க.. அப்படி இருக்கும்போது அத்தையோட காதலை மட்டும் ஏன் நீங்க ஏத்துக்கல..?” என்று கேட்டாள்.
அதற்கு பாட்டியோ நீண்ட பெருமூச்செறிந்தவர்,
“உன்கிட்ட நான் என்னன்னு சொல்றதுமா உங்க தாத்தாவும் சரி உங்க அப்பாவும் சரி யாருமே காதலுக்கு எதிரி கிடையாது.. உங்க அத்தைக்கும் எல்லா சுதந்திரமும் இருந்தது.. ஆனா அவ காதலிச்ச ஆள்தான் சரியில்ல.. இங்க யாருக்குமே பிடிக்கல உங்க மாமாவ.. யாருக்குமே பிடிக்கவும் பிடிக்காது.. அவன் நல்லவனே கிடையாது ரொம்ப கெட்டவன் அவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது.. அப்படி இருக்கறதுனால தான் நம்ம பொண்ணோட தேர்வு தப்பாக இருக்கிறதேன்னு நினைச்சுதான் வீட்ல எதிர்ப்பு தெரிவிச்சாங்க.. ஆனா உங்க அத்தை கட்டினால் அவனைத்தான் கட்டவேன்னு விடிஞ்சா அவளுக்கு கல்யாணம் ஆனா நைட்டோட நைட்டா எங்க எல்லாத்தையும் அவமானப்படுத்திட்டு அவன் கூட ஓடி போயிட்டா.. அதனால தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் அவ மேல அவ்வளவு கோபம் வந்தது.. அவ எங்க இருக்கான்னு கூட இவங்க தேட விரும்பல நான் போய் கேட்டாலும் உனக்கு மக வேணும்னா அப்படியே போயிடுனு உங்க தாத்தா சொல்லிடுவாரு அதனால நானும் எதுவுமே பேசாம அமைதியா இருந்துட்டேன்.. பத்து வருஷமா அவ என்ன ஆனான்னு கூட எங்களுக்கு தெரியாது.. இங்க இவங்களும் கோவமா தான் இருந்தாங்க, ஒரு நாள் அவளே தான் எனக்கு போன் பண்ணி பேசினா அதுக்கப்புறம் தான் அவ நல்லா இருக்கான்னு எங்க எல்லாருக்கும் தெரிஞ்சது.. அவளை கட்டிக்கிட்டவன் அவளை நல்லா பார்த்துக்கிறான்னு தெரிய வந்துச்சு.. கல்யாணத்துக்கு முன்னாடி அவன் எப்படி இருந்தானோ அதுக்கு ஆப்போசிட்டா அவன் மாறி இருக்கான்னு தெரிய வந்தது.. சரி நம்ம பொண்ணு எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா உன் தாத்தாவும் உங்க அப்பாவும் அவளை ஏத்துக்க ஆரம்பிச்சாங்க.. ஊருக்கு வர சொல்லி எத்தனையோ தடவை கூப்பிட்டாங்க ஆனா உங்க மாமாவுக்கு எங்க மேல உள்ள கோபம் மட்டும் போகவே இல்ல.. காதலிக்கும் போது எதிர்ப்பு தெரிவிச்சவங்க தானே அப்படின்னு அவரு ஊருக்கு வர ஒத்துக்கவே இல்ல.. ஏதோ கடவுள் புண்ணியத்துல இத்தனை வருஷத்துக்கு அப்புறம் மனசு இறங்கி உங்க அத்தையை ஊருக்கு அனுப்ப சம்மதிச்சி இருக்காரு.. அந்த கடவுளுக்கு நன்றி சொல்லியே ஆகணும்.. அதனால தான் அவ வர்றத திருவிழா மாதிரி கொண்டாடுவதற்கு எல்லாம் ஏற்பாடு செஞ்சுகிட்டு இருக்கோம்..” என்று தன் பேத்தியிடம் சொல்லியவர் கன்னத்தில் வழிந்த கண்ணீர் துளிகளை தட்டிவிட்டார்.
“பார்த்தீங்களா பாட்டி அந்த காதலுக்கு எவ்வளவு மகிமைன்னு.. கல்யாணத்துக்கு முன்னாடி அவ்வளவு கெட்டவரா இருந்த மாமாவ அந்த காதல் இப்போ எப்படி மாத்தி இருக்குன்னு.. கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்க பாட்டி நானும் காதலிச்சு தான் கல்யாணம் பண்ணிப்பேன்..” என்றாள் மீனு.
“இங்க காதலுக்கு யாரும் எதிர்ப்பு கிடையாதும்மா மீனு ஆனா தப்பானவனை தேர்ந்தெடுத்து அவங்க வாழ்க்கை பலியாகி விட கூடாதுன்னு தான் பெத்தவங்க ஆசைப்படுவாங்க.. காதலிச்சு கல்யாணமோ இல்ல வீட்ல பார்க்குற கல்யாணமோ அவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கணுமே என்ற ஒரு நல்ல எண்ணம் தான் பெத்தவங்க பயப்படுறது.. சரி எப்படியோ நீ தேர்ந்தெடுக்கிற பையன் தப்பானவனா இருக்க மாட்டான்னு இந்த பாட்டி நம்புறேன் அதே மாதிரி உன் மனசுக்கு எந்த ஒரு கெடுதலும் நடக்காது எல்லாம் நல்லதாகவே நடக்கும் மீனு..” என்ற பாட்டி அவள் தலையை ஆதுரமாக தடவி விட்டார்.
முத்துப்பள் தெரிய அழகான புன்னகையை சிந்தியவள் தன்னுடைய பாவாடையை பிடித்தவாறு அவ்விடம் விட்டு அகன்றாள்.
ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் பாட்டியின் ஆசை மகளோ பல வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தை தன்னுடைய சொந்த ஊரை பார்க்க போகிறோம் என்று ஆசையாக வந்தவர் அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் கேட்பார் இன்றி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் சித்ரா.