கடையில் வேலை செய்த அயர்வோடு வீட்டிற்கு நடந்து வந்த சோர்வும் அபர்ணாவை ஒட்டிக்கொள்ள குருவோடு பேசிப் போராடுவதற்கு தெம்பற்று தரையில் படுத்துக் கொண்டாள் அவள்.
இனி நமக்குள் எதுவும் இல்லை என்பதை பேசிப் புரியவைத்து அவனை இங்கிருந்து அனுப்பி விடலாம் என எண்ணி அவனை அழைத்து வந்தால் அவனோ ஏதோ காவியக் காதலனைப் போலத் தன்னை விட்டுப் போக மாட்டேன் என்றல்லவா அடம்பிடிக்கின்றான்.
அலுத்துப்போனது அவளுக்கு.
அவனோடு சேர்ந்து வாழ்வதற்கு மட்டுமல்ல அவனோடு செல்வதற்குக் கூட அவளுக்கு சிறிதளவும் ஈடுபாடு இல்லை.
இனி இவனிடம் பேசுவது வீண் என எண்ணித்தான் அவள் தரையில் படுத்துக்கொள்ள ஏதோ உயிருக்குயிராக காதலித்து தன்னை மணந்து கொண்ட கணவனைப் போல அவன் தன்னைத் தூக்கிப் பாயில் கிடத்தியதும் பின் தன்னை அணைத்துப் பிடித்துக் கொண்டதையும் கண்டு எரிச்சலுற்றாள் அவள்.
அடுத்த சில நொடிகளிலேயே அவன் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட வெறுப்போடு அவனுடைய கரத்தை தட்டிவிட்டவளுக்கு தலை வலிக்கத் தொடங்கியது.
இந்த வாழ்க்கை வேண்டும் என அவள் கெஞ்சி அழும் போதும் அவனுக்காக அழுது ஏங்கும் போதும் செவிடனைப் போலத்தானே இருந்தான் இவன்.
அன்று தன்னை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டு இப்போது வந்தால் மட்டும் நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா..?
எந்தத் தவறும் செய்யாத என்னை என்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக பாழாக்கி விட்டு இப்போது வந்து நின்றதும் நான் மனம் இறங்கி விட வேண்டுமா..?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என தன் மானத்தை அடகு வைத்து விட வேண்டுமா..?
என்ன நியாயம் இது..?
இதுவே நான் இந்தத் தவறு எல்லாம் செய்து விட்டு அவனை வேண்டாம் என விலக்கிவிட்டு இன்னொரு கல்யாணம் செய்வதாக முடிவு எடுத்தால் சும்மா விட்டு விடுவார்களா..?
வேசி என்றல்லவா பட்டம் கட்டுவார்கள்..
இந்தச் சபிக்கப்பட்ட உலகத்தில் ஆண்களுக்கு ஒரு நியாயம் பெண்களுக்கு ஒரு நியாயம் தானே.
அவனுக்கு அருகே படுத்திருப்பதே எரிச்சலை மூட்டியது.
அவன் வீட்டை விட்டு துரத்திய பின்னர் வெளியே வந்து அவள் அனுபவித்த ஒவ்வொரு வலியும் ஒவ்வொன்றாக நினைவில் வர விழிகளில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
வேகமாக எழுந்து சென்றுவிட வேண்டும் போலத்தான் இருந்தது அவளுக்கு.
ஆனால் முன்பு போல படுத்ததும் அவளால் எழுந்து விட முடியாது. மிகச் சிரமப்பட்டுத் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்வதற்குள் அவளுக்குப் போதும் போதும் என்றாகிவிடும்.
இப்பொழுது அவள் எழுந்து கொள்ள முயன்றால் தூங்கிக் கொண்டிருந்தவன் கண்டிப்பாக எழுந்து விடுவான் என எண்ணியவள் வேறு வழியின்றி அமைதியாக படுத்துக் கொண்டாள்.
உடலின் சோர்வு அவளையும் சற்று நேரத்தில் உறக்கத்திற்குள் தள்ள ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள் அபர்ணா.
****
மதிய நேரத்தில் உறங்கியவன் தன் தூக்கம் கலைந்து எழுந்து கொள்ளும் போது நேரமோ மாலைப் பொழுதைக் கடந்திருந்தது.
அவள் இன்றிய பொழுதுகளில் தன் தூக்கத்தை தொலைத்து தவித்துக் கிடப்பவன் அவள் கிட்டிய சந்தோஷத்தில் இழந்த மொத்த தூக்கத்தையும் அன்றே தூங்கி விடுபவனைப் போலத்தான் பல மணி நேரங்களாக தூக்கத்தை தழுவி இருந்தான்.
தன் விழிகளைச் சுழற்றியவாறு எழுந்து அமர்ந்து கொண்டவன் சற்றுத் தள்ளித் தரையில் அமர்ந்து சோறையும் தேங்காய் சம்பளையும் உண்டு கொண்டிருந்த தன் மனைவியைக் கண்டதும் வேதனையில் முகம் கசங்கியது.
தன் வீட்டில் தினமும் பதினாறுக்கு மேற்பட்ட கறி வகைகள் சமைக்கப்படுகின்றதே..
தன் வீட்டில் வேலை செய்பவர்கள் கூட வெறும் தேங்காய்ச் சம்பளோடு உணவு உண்பது இல்லையே..
என் கண்மணி இதைத்தான் உண்கிறாளா..?
மனம் பிசைந்தது.
“அபி கொஞ்சம் வெயிட் பண்றியா..?”
“எதுக்கு..?”
“உனக்குப் புடிச்ச சாப்பாடு ஏதாவது வாங்கிட்டு வந்துர்றேன்…” என தன்னுடைய பர்சை எடுத்துக் கொண்டு எழுந்து கொண்டவனை வெறித்துப் பார்த்தவள்,
“நீங்க இங்க இருந்து கிளம்பினாலே எனக்கு நிம்மதியா இருக்கும்..” என்றாள்.
அவனுக்கோ முகம் மாறிப் போனது.
“இதோ பார்டி நீ இல்லாம நான் இந்த இடத்தை விட்டு நகர்றதா இல்ல..” என அவன் ஆணித்தரமான குரலில் கூறியதும் தன்னுடைய உணவுத் தட்டை அப்படியே தரையில் வைத்தவள் சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணை கேனைத் தன் கையில் எடுத்து அதை தனக்கு மேல் ஊற்ற முயல விக்கித்துப் போனான் அவன்.
“அபிஇஇஇஇ…”
“அங்கேயே நில்லுங்க…”
“ஏய் முட்டாளாடி நீ..?” என அவன் அதிர்ந்து போய் அவளுடைய கரத்தில் இருந்த கேனைப் பறித்து எடுப்பதற்கு முதல் அவளுடைய உடலில் அது முழுவதுமாக ஊற்றப்பட்டிருந்தது.
“ஓஹ் ஷிட்…” எனப் பதறினான் அவன்.
அவளோ தீப்பெட்டியைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டவள், “இப்பவே நீங்க இந்த வீட்டை விட்டுப் போகலைன்னா என்னை நானே கொழுத்திப்பேன்.”. என்றிருக்க,
நடுங்கிப் போனான் குருஷேத்திரன்.
“அபி ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்.. முதல்ல அந்தத் தீப்பெட்டியை என்கிட்ட கொடு..” என அவன் அவளை மேலும் நெருங்க முயற்சிக்க,
தன் கரத்தில் இருந்த தீப்பெட்டியைத் திறந்து தீக்குச்சியை வெளியே எடுத்தவள்
“இன்னும் ஒரு அடி நீங்க பக்கத்துல வந்தா கொழுத்திடுவேன்..” என அவள் மிரட்ட இவனுக்கோ உள்ளம் நொறுங்கிப் போனது.
“நா… நான் போறேன்..” என சட்டென கூறியிருந்தான் அவன்.
“அவுட்…” சீறினாள் அவள்.
“தயவு செஞ்சு எந்தத் தப்பான முடிவும் எடுத்துடாத அபி.. எவ்வளவோ கஷ்டத்தைத் தாண்டி இவ்வளவு தூரம் வந்து சொந்தக் கால்ல நிக்கிற நீ இப்படிலாம் பண்ணலாமாடி…? இப்போ நீ எடுக்குற முடிவு கொஞ்சம் கூட சரியில்ல…” என அவன் தடுமாறிய குரலில் கூற,
“இல்ல ஒருத்தி எவ்வளவு கஷ்டத்தைத்தான் தாங்குவா..? எதுக்குனே தெரியாம ஒரு கல்யாணம்..! என்ன வாழ்க்கை வாழ்றோம்னு தெரியாமயே உங்க கூட வாழ்ந்தேன்… குழந்தை பெத்துக்க முடியாதவன்னு வீட்டை விட்டு விரட்டி விட்டீங்க… இப்போ மறுபடியும் வந்து நீதான் வேணும் வான்னு சொன்னா நான் வந்துடணுமா..? இல்ல எனக்கு எதுவுமே புரியல.. நீங்க என்னதான் நினைச்சுகிட்டு இருக்கீங்க…? என்னோட உணர்வுகளை அடியோடு கொன்னுட்டு நான் உங்க மேல வச்சிருந்த காதலை அப்படியே அழிச்சிட்டு இப்போ வந்து வான்னு சொன்னா எப்படி முடியும்..? உங்களைப் பார்த்தாலே வெறுப்பா இருக்கு…
எல்லா கசப்புகளையும் மறந்து நானும் என் குழந்தையும் தனியா வாழலாம்னுதான் என்னோட எல்லா அடையாளத்தையும் மறைச்சிட்டு இங்க வாழ்ந்துட்டு இருக்கோம்… இங்கேயும் வந்து தொல்லை பண்ணினா வேற என்னதான் பண்றது..? இதுக்கு மேல என்னால வேற எங்கேயும் ஓடி ஒழிய முடியாது குரு.. ஒன்னு நீங்க இந்த வீட்டை விட்டு போகணும்… இல்லனா நான் இந்த உலகத்தை விட்டுப் போய்டுவேன்… இதுக்கு மேல எனக்கு போராடுறதுக்கு தெம்பு கிடையாது..” என அவள் கூறி முடிக்க விழிகளில் வழிந்த கண்ணீரோடு அக்கணமே அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியே சென்றிருந்தான் குருஷேத்திரன்.
அவன் வீட்டை விட்டு வெளியேறிய அடுத்த நொடியே வீட்டின் கதவை வேகமாகச் சென்று உள் பக்கத்தால் பூட்டிக் கொண்டவள் அதன் மேலேயே சாய்ந்து விழிகளை மூடி நின்று விட்டாள்.
அவளுடைய கரங்கள் தன் வயிற்றில் உதைத்துக் கொண்டிருந்த குழந்தையின் மீது ஆதரவாய்ப் படிந்தது.
“சாரி சாரி பட்டு.. அம்மா உங்களையும் கொழுத்திடுவேன்னு பயந்துட்டீங்களா..? இல்லடா அப்படியெல்லாம் எதுவுமே பண்ண மாட்டேன்… அம்மா உங்களை ரொம்ப ரொம்ப பத்திரமா பார்த்துப்பேன்.. இதெல்லாம் சும்மா.. நீங்க சமத்தா தூங்கணும் சரியா பயப்படக்கூடாது..” எனத் தன் அழுகையை அடக்கிய குரலில் தன் குழந்தைக்குத் தைரியம் ஊட்டுவதாக நினைத்து தன்னையே தைரியப்படுத்திக் கொண்டவளின் உடலின் நடுக்கம் மறைய மறுத்தது.
சற்று நேரம் அப்படியே குழந்தையோடு பேசித் தன்னை திடப்படுத்திக் கொண்டவள் ஆடை முழுவதும் இருந்த மண்ணெண்னையைக் கண்டு முகம் சுளித்தாள்.
தன் ஆடைகளை எல்லாம் கழற்றி ஒரு பக்கெட்டில் எடுத்துக் கொண்டவள் மார்புக்கு குறுக்காக ஒரு நீளப்பாவாடையை கட்டிவிட்டு அந்தப் பக்கெட்டை தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் பின்னே இருந்த கிணற்றை நோக்கி செல்லத் தொடங்க,
அவளுடைய வீட்டிற்கு வெளியே நின்றிருந்த உயர்ந்த மரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான் குரு.
அவனைப் பார்த்ததும் பதறிப் போனாள் அவள்.
சட்டென கிணற்றை நோக்கி அவள் வேகமாக நடக்கத் தொடங்க அவளைக் கண்ட நொடி அவனும் வேகமாக எழுந்து அவர் அருகே ஓடி வந்தான்.
“என்ன வேணும் அபி..? நான் ஏதாவது பண்ணணுமா..? அதக் கொடு..” என அவளுடைய கரத்தில் இருந்த அழுக்குத் துணிகளை வாங்க முயற்சிக்க,
“தயவு செஞ்சு இங்கிருந்து போய்த் தொலைங்களேன்..” எனக் கத்தி விட்டிருந்தாள் அவள்.
“ஏ.. ஏன்டி..? ஏன்… எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுக்க மாட்டியா..?” என உடைந்து போன குரலில் அவன் கேட்க,
தன் கரத்தில் இருந்த பக்கெட்டை அவன் மீது கோபமாக விட்டெறிந்தாள் அபி.
அவள் விட்டெறிந்த வேகத்தில் அவன் மார்பில் பட்டு அவளுடைய அழுக்குத் துணிகள் யாவும் அவன் மீது விழ,
“உங்கள மாதிரி ஒரு சுயநலவாதி கூட செத்தாலும் நான் சேர்ந்து வாழ மாட்டேன்..” எனக் கூறிவிட்டு அவள் கிணற்றை நோக்கி நடக்கத் தொடங்கி விட இவனுக்கோ செருப்பால் அடித்தது போல இருந்தது.
எங்கே அழுது விடுவோமோ என எண்ணி அஞ்சியவன் விழத் துடித்த கண்ணீரை விழிகளை மூடித் திறந்து கட்டுப்படுத்தியவாறு தன்னுடைய மூச்சை ஆழ உள்ளிழுத்து வெளியே விட்டான்.
தன் காலடியில் கிடந்த அவளுடைய அழுக்கு ஆடைகளை தன் கரங்களில் அள்ளி எடுத்துக் கொண்டவனுக்கு முகம் கசங்கியது.
அவள் தன்னை முற்று முழுதாக வெறுத்து விட்டாள் என்ற நிதர்சனம் புரிய இனி என்ன செய்து அவளுடைய மனதை மாற்றப் போகிறோம் எனத் தெரியாது திகைத்துப் போயிருந்தான் அவன்.
தன்னை நினைத்து கழிவிரக்கம் பொங்க சிந்தித்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் மெல்ல மெல்ல கிணற்று வாளியை கிணற்றுக்குள் தூக்கிப்போட்டு தண்ணீரை அள்ள முயன்று கொண்டிருந்த தன் மனைவியைக் கண்டதும் உயிர் போய்விடும் போல அவன் உள்ளமும் உடலும் ஒரு சேரப் பதறியது.
“ஓ காட் இவ ப்ரக்னண்டா இருக்கான்னு இவளுக்கு கொஞ்சமாவது தெரியுமா இல்லையா..? இந்த வேலை எல்லாம் இவளால எப்படி பண்ண முடியும்..?” எனப் பதறியவன்,
அடுத்த கணமே அவள் திட்டியதெல்லாம் மறந்துவிட்டு வேகமாக ஓடிச் சென்றவன் அவளுடைய கரத்தில் இருந்த கிணற்று வாளியைப் பறித்து எடுத்தான்.
அவளுக்கோ வெறுத்துப் போனது.
அந்தக் கிணற்றில் எப்படித் தண்ணீர் அள்ளுவது எனத் தெரியாது திணறியவன் ஒருவாறாக தானே அதைப் புரிந்து கொண்டு மெல்ல மெல்ல கிணற்று நீரை எப்படி அள்ளி வெளியே எடுப்பது எனக் கற்றுக் கொண்டவன் அடுத்த சில நிமிடங்களில் வேகமாக நீரை அள்ளி அவளுக்காக இறைக்கத் தொடங்கினான்.
பெருமூச்சோடு தன் தலையில் கை வைத்தபடி ஆடைகள் கழுவும் கட்டில் அமர்ந்து கொண்டாள் அவள்.
என்ன சொன்னாலும் இவன் கேட்க மாட்டான் என்பது புரிய எரிச்சலோடு அமர்ந்திருந்தவளுக்கு அங்கே இருந்த பெரிய வாளி முழுவதும் நீரை இறைத்துக் கொடுத்துவிட்டு,
“இது போதுமாடி..? இல்லன்னா இன்னும் அள்ளி இறைக்கவா…?” எனக் கேட்டவனைப் பொருள் விளங்கா பார்வை பார்த்தாள் அவள்.
அவளுடைய பார்வையை சந்திக்க முடியாது தன்னுடைய விழிகளைத் தாழ்த்தியவனுக்கு அவளுடைய வெண்ணிற கழுத்தும் வெற்றுத் தோள்களும் வீங்கிய அவளுடைய மார்புகளை மறைத்திருந்த மெல்லிய பாவாடையும் கண்ணில் பட்டுவிட தன்னை மறந்து அவற்றை ரசனையாக வருடத் தொடங்கிய தன்வழிகளுக்கு தடா போட்டவன் பெருமூச்சோடு திரும்பி நின்று கொள்ள அவனுடைய பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து சிவந்து போனவள் சட்டென தன் கூந்தலை விரித்துவிட்டு தன்னுடைய வெற்றுத் தோள்களை மறைத்துக் கொண்டாள்.