செந்தமிழ் 2
அவளின் முன் வந்து நின்றான் இனியன். அவனுக்கு முப்பத்தி எட்டு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகான ஆண்மகன் தான் அவன். உடற்பயிற்சி செய்து திடகாத்திரமான உடல் கட்டமைப்பு வேறு.
அவனின் முன் அவள் குழந்தை போல தான் தெரிந்தாள். அவனின் இந்த அழகை கூட அவள் ரசிக்கவில்லை. ரசிக்கவும் அவளுக்கு தோன்ற வில்லை.
பக்கத்து வீட்டு பெண் கூட கேட்டு இருக்கிறாள், “என்ன உங்க புருஷன் மேல தான் இந்த தெருவே சைட் அடிக்கிது, அப்போ நீங்க பார்த்துகிட்டே இருப்பிங்க போல”, என்று அவள் அன்று பேசியத்திற்கு, “அவரு கூட இருந்தா அவரை பார்க்கவே வேணாம்னு தோணும்”, என்று மனதில் நினைத்து கொண்டு அவளுக்கு முன்புறுவல் மட்டும் செய்து விட்டு கடந்து விட்டாள்.
“என்ன டி பசங்களலாம் எனக்கு எதிரா திருப்பி விடறியா?”, என்று அவன் கேட்க, “எனக்கு வேற வேலை இல்லையா உங்களுக்கு எதிரா பசங்கள திருப்பி விட்டு நான் என்ன சாதிக்க போறேன்?”, என்று அவளும் சளைக்காமல் பதில் அளித்தாள்.
“வர வர வாய் ரொம்ப அதிகம் ஆகிருச்சு உனக்கு”, என்று அவன் அவளை பார்த்து கொண்டு சொல்லவும், “உங்களுக்கு ரொம்ப கம்மி ஆகிட்டு இருக்கோ? என்னைக்காச்சு பசங்க கிட்ட சிரிச்சு பேசிருக்கீங்களா? பேருல மட்டும் இனியனு இருந்தா பத்தாது… கொஞ்சமாச்சு பேச்சுலயும் இருக்கனும்… பணத்துக்கு பின்னாடி ஓட்றது தப்பு இல்ல ஆனா பாசத்தை மறக்க கூடாது”, என்று அவள் பேசிவிட்டு நகர போக, அவளின் கையை அழுந்த பற்றினான்.
அவளோ கையை விடுவிக்க போராட, “என்ன டி மாமியார் சப்போர்ட்ன்னு இவளோ துள்ளுறியா?”, என்று அவன் பற்களை கடித்து கொண்டு கேட்க, அவனின் கையில் இருந்து அவளின் கையை விடுவித்து கொண்டவள், அவனின் முகம் பார்த்து, “எனக்கு யாரும் ஆதரவு தரணும்னு அவசியம் இல்ல… நானே எனக்காக பேசிப்பேன்”, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
அவனிற்காக காலை உணவை எடுத்து வைத்து விட்டு, மதிய உணவையும் பேக் செய்து வைத்திருந்தாள்.
அவனோ சாப்பிட வந்து அமர்ந்தவன், சாப்பிட்டு விட்டு, “நான் கிளம்புறேன்… சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு எங்க ஆபீஸ் பார்ட்டி… ஏழு மணிக்கு ரெடியா இரு”, என்று அவன் சொல்லவெல்லாம் இல்லை, நீ வந்து ஆக வேண்டும் என்கிற கட்டளை தான்.
“நான் எதுக்கு இந்த மாறி விழாக்கெல்லாம் வரணும்?”, என்று அவள் மறுகேள்வி கேட்க, “எனக்கு அவார்ட் தராங்க டி கொஞ்சமாச்சு நான் சொல்றதுக்கு சரினு கேள்வி கேட்காம என்னைக்காச்சு சொல்லிருக்கியா?”, என்று அவன் சிடுசிடுத்தான்.
“நான் ஆறு அறிவு உள்ள மனுஷி, நீங்க சொல்றதுக்குலாம் கேள்வியே கேக்காம தலையாட்ட தஞ்சாவூர் பொம்மை இல்ல”, என்று சொல்லவும், அடுத்த வார்த்தை அவன் பேசும் முதல், “டேய் உனக்கு தான் நேரம் ஆச்சுல கிளம்பு டா… அவ ஏழு மணிக்கு தயாராகி இருப்பா”, என்று பொன்னம்மாள் சொல்லவும் தான் கிளம்பினான்.
அவன் கிளம்பியவுடன், “நீ அவன் கிட்ட பேசி உன் நேரத்தை விரயம் ஆக்காத மா… அவன் என்னோட பையனே இல்ல.. பத்து வருஷம் ஆச்சு அவன் என்கிட்டயே நல்லா பேசி”, என்று அவர் புலம்ப, அவரின் மனதை உணர்ந்தாள் செங்கனி.
“பணம் பத்தும் செய்யும் அத்தை… அதே மாறி தான் உங்க புள்ளையும் இப்போல்லாம் பணம், புகழ்னு அதுக்கு அடிமையா ஆகிட்டாரு”, என்று அவள் சொல்லவும், “ஆமா மா உனக்கு நினைவு இருக்கா நீ முதல் முறை கயலை சுமந்துட்டு இருந்தப்போ அவன் உன்ன எவளோ நல்லா பார்த்துகுட்டான்”, என்று அவர் சொல்லவும் அவளின் நினைவுகளும் அந்த ஒரு நினைவிற்கு சென்றது.
அவள் ஆறு மாத கருவை சுமந்து கொண்ட தருணம் அது…
முதல் முறை கர்ப்பம் என்பதால் அனைவருக்குமே மகிழ்ச்சி தான்.
அப்போது தான் அவள் சிலப்பதிகாரத்தை அவளின் சிசுவிற்கு சொல்லிக்கொண்டு இருந்தாள்.
“என்ன குழந்தைக்கும் தமிழ் சொல்லிக் கொடுக்குறியா இப்பவே?”, என்று கேட்டுக்கொண்டே அறையினுள் நுழைந்தான் இனியன்.
“ஏன் சொல்லிக் கொடுக்க கூடாதா?”, என்று அவள் கேட்கவும், “அப்படி எல்லாம் இல்லையே… என் செங்கனி மாறி என் பொண்ணும் தமிழ் பற்று உடையவளா இருந்தா எனக்கு பெருமை தான்”, என்று சொல்லிக்கொண்டே அவன் வாங்கி வந்த பிரியாணி பொட்டலத்தை நீட்டினான்.
“எனக்கா?”, என்று அவள் கேட்டுக்கொண்டே பொட்டலத்தை அவள் திறந்து சாப்பிட ஆரம்பித்து விட்டாள். “அது என்ன பொண்ணுன்னு சொல்றிங்க? பையனா இருந்தா என்ன பண்ணுவீங்க?”, என்று அவள் சாப்பிட்டு கொண்டே கேட்க, “அப்போ அடுத்து பொண்ணுக்கு முயற்சி செய்ய வேண்டியது தான்… எனக்கு பொம்பள பிள்ளை ரொம்ப பிடிக்கும் டி”, என்று சொல்லிக்கொண்டே அவளின் காலை பிடித்து விட்டான்.
“ஐயோ நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க?”, என்று அவள் சொல்லவும், “இதுல என்ன டி இருக்கு நீ என் குழந்தைய சுமக்குற நான் உன்னை சுமக்குறேன்”, என்று இனிக்க இனிக்க பேசினான்.
“உங்களுக்கு அத்தை சரியா தான் பேரு வச்சிருக்காங்க.. தமிழினியன்னு நல்லா இனிமையா பேசுறிங்களே”, என்று சொல்லவும் இருவரும் நெற்றி முட்டி சிரித்தனர்.
சட்டென சுதாகரித்து கொண்டு நிகழ் காலத்திற்கு வந்து விட்டாள்.
அன்றைக்கு இனிமைக்கே இலக்கணமாக திகழ்ந்தவன் தான், இன்று இனிமை என்றால் என்ன என்று கேட்கும் நிலையில் இருக்கிறான்.
பாசத்தை துறந்து பணத்தை வைத்து என்ன செய்து விட முடியும்?
“அவரே ஒரு நாள் மாறுவார் அத்தை அது வரைக்கும் காத்துகிட்டு இருக்க வேண்டியது தான்”, என்று சொல்லி அவள் செல்லும் போது, “கனி அதான் பசங்க எல்லாம் ஓரளவு வளந்துட்டாங்களே மா…நீ இப்போ வேலைக்கு போகலாமே”, என்று அவளது மாமியார் சொல்லவும், “இல்ல அத்தை வேணும்னா வீட்லயே பாடம் சொல்லி கொடுக்கலாம் ஆனா தமிழ் எல்லாம் இப்போ யாரு படிக்கிறா? நானே உங்க மகன் கிட்ட சண்டை போட்டு தான் மொழி பாடத்தை எடுக்க வச்சிருக்கேன்… இல்லனா அவரும் பிரெஞ்சு, ஹிந்தினு போற்றுப்பாரு”, என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டாள்.
அவளின் அறைக்கு வந்தவள், அவளின் புத்தக அலமாரியில் இருந்து அவளுக்கு என்றும் பிடித்த பாரதியார் கவிதைகளை தான் எடுத்தாள்.
எப்போது படித்தாலும் திகட்டாத வரிகள் எப்படி ஒரு மனிதனால் இப்படி சிந்திக்க முடியும் அதுவும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே இவ்வளவு முற்போக்கு சிந்தனையுடன் ஒரு மனிதர் வாழ்ந்து இருக்கிறார் என்றால் எப்படி பட்ட மாமனிதர் அவர்.
“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”
என்று அன்றே பாடியவர் பாரதி. இந்த வரிகளில் தான் முதன் முதலில் அவளுக்கு தமிழின் மீது பற்றே வந்தது. அன்றில் இருந்து பாரதியின் கவிதைகளை தேடி தேடி படித்தாள்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்..”
என்று அவர் பாடியது எத்தனை உண்மையானது என்று அவள் தமிழை கற்க கற்க அவளுக்கு புரிந்தது. அதுவும் இந்த வரிகளை பாடியது ஒன்றும் தமிழ் மொழி மட்டும் தெரிந்த புலவர் அல்லவே!
பாரதி தாய்மொழியாகிய தமிழைத் தவிர, ஆங்கிலம், பிரெஞ்சு, சமஸ்கிருதம், தெலுங்கு,இந்தி முதலிய மொழிகளையும் நன்கு கற்று தேர்ந்து இருந்தார்.
அவரே இப்படி ஒரு வரி எழுதுகிறார் எனில் தமிழ் எத்தனை இனியது என்ற ஆர்வத்தில் தான் தமிழை தேர்ந்து எடுத்து படித்தாள்.
உண்மையாக சொல்லவேண்டும் என்றால் அவளுக்கு இனியனை முதன் முதலில் பிடிக்க காரணமே தமிழ் தான்.
அவனின் பெயரில் உள்ள தமிழிற்காகவே தான் அவனை அவளுக்கு முதன் முதலில் பிடித்தது. பின்பு தான் அவனின் பண்பு.
இன்றும் அதே கவிதைகளை வசித்து கொண்டிருந்தாள். அவளுக்கு திகட்டவே இல்லை.
பின்பு மணியை பார்த்தாள், ஒரு மணி என்று காட்டியது. அவளுக்கு தான் தமிழ் படிக்க துவங்கிவிட்டால் நேரம் போவதே தெரியாதே!
மதிய உணவை சாப்பிட்டவள், சற்றே கண் அயர்ந்தாள்.
அவள் எழும் போது மணி மூன்று இருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளின் குழந்தைகள் வேறு வந்து விடுவார்கள். இரவு உணவும் மூவருக்கும் சமைக்க வேண்டும் என்பதால் எழுந்து முகத்தை அலம்பி விட்டு, முதலில் இஞ்சி, ஏலக்காய் தட்டி டீ போட்டு பிளாஸ்கில் வைத்தவள், அப்படியே அவர்களுக்காக பச்சைப்பயிறு சுண்டலும் செய்து வைத்தாள்.
அவளின் மாமியாரும் அவரின் உறக்கம் களைந்து வந்த உடன், “இந்தாங்க அத்த”, என்று அவரிடம் ஒரு கப்பில் டீயும் ஒரு கிண்ணத்தில் சுண்டலும் கொடுத்தாள்.
அதே சமயம், “அம்மா”, என்று கத்திகொண்டே அவளின் இரு குழந்தைகளும் உள்ளே வந்தனர்.
“என்ன இன்னைக்கு என்ன ஆச்சு?”, என்று அவள் கேட்கவும், இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பள்ளியில் நடந்ததை கூற துவங்கினர்.
தினமும் பள்ளியில் நடப்பதை அவளிடம் சொல்ல பழக்கி வைத்து இருந்தாள். இப்பொது இருக்கும் பெற்றோருக்கு தான் குழந்தைகளிடம் செலவிட நேரமே இல்லையே!
ஆனால் செங்கனி தினமும் எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்களின் தினசரி பள்ளி நிகழ்வுகளை தெரிந்து கொண்டு தான் தூங்குவாள்.
அப்போது தானே பிள்ளைகளுக்கும் பெற்றோர்களின் மீது நம்பிக்கையும் வரும். அதை உணர்ந்து செயல் படுத்தினாள் செங்கனி.
“அம்மா இன்னைக்கு என் கிளசஸ்ல ஒரு பையன் டீச்செர்க்கு போய் காதல் கடிதம் கொடுத்தான் மா”, என்று கயல் சொல்லவும், பொன்னம்மாள் குடித்து கொண்டு இருந்தா காபியை துப்பியே விட்டார்.
“அடி ஆத்தி இப்போ எல்லாம் டீச்சரக்குலாம் காதல் கடிதம் கொடுக்குறானுங்கள என்ன? அதுவும் பன்னெண்டு வயசுல”, என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க, “காலம் மாறிடுச்சு அத்தை… இப்போ எல்லாம் வாத்தியாருங்க தான் பிள்ளைங்களை பார்த்து பயப்படறாங்க… என்ன செய்றது”, என்று அவளும் சொல்ல, இப்படியே அவர்களின் மாலை நேரம் கடந்தது.
இரவு உணவிற்கு பிள்ளைகள் கேட்டதற்காக செட் தோசையும் வடகறியும் செய்து வைத்து விட்டு இருந்தாள்.
“இரண்டு பேறும் சண்டை போடாம சமத்தா இருக்கனும்… அப்பத்தாக்கு தொந்தரவு கொடுக்க கூடாது”, என்று பிள்ளைகளுக்கு அறிவுரை கூறி இருக்கும் போதே, உள்ளே நுழைந்து இருந்தான் இனியன்.
“பார்ட்டிக்கு ரெடி ஆகலையா?”, என்று அவன் கேட்க, “அப்பா அம்மா தயாரா தான் இருகாங்க”, என்று கயல் சொல்லவும், “புடவைலயா பார்ட்டிக்கு வருவ?”, என்று கேட்கவும், “ஏன் புடவைக்கு என்ன குறைச்சல்? அம்மா அழகா தாங்க நிற புடவைல தேவதை மாறி தான் இருகாங்க”, என்று அச்யுத் சொல்லவும் சலிப்பாக தலையை ஆட்டி கொண்டு, “பிப்ட்டின் மினிட்ஸ்ல ரெடி ஆகி வரேன்”, என்று அவர்களின் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
அடுத்த இருபது நிமிடங்களில் இருவரும் அவனின் அலுவலக விழாவிற்கு கிளம்பி இருந்தனர்… “அங்கு என்ன வச்சிருக்காரோ? முருகா நீ தான் என்ன காப்பாத்தனோம்”, என்று மனதில் கோரிக்கை வைக்கவும் அவள் தவற வில்லை.
அலுவலக விழாவில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை எல்லாம் தாங்குவாளா செங்கனி?
Super sis