நெருக்கம் – 54
உடல் இறுகி அடங்காத ஆத்திரத்தோடு தன்னை அழைத்துக் கொண்டு முன்னே நடக்கும் குருஷேத்திரனைக் கண்டு பயந்து போனாள் அபர்ணா.
வேண்டுமென்றா தவறு செய்திருப்பார்கள்..?
ஏதோ தெரியாமல் செய்த தவறுக்கு அவர்களுடைய தலையை அடித்து உடைத்து விடுபவன் போல நடந்து செல்பவனைக் கண்டு பயந்தவள் மெல்லிய குரலில்,
“ப்ளீஸ் குரு.. ஏதோ தெரியாம பண்ணிட்டாங்க… எதுவும் பிரச்சினை பண்ணாதீங்க… விட்ருங்க..” எனக் கெஞ்ச,
சட்டென விழிகளில் எரியும் கனலோடு அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“தெரியாம பண்ணிட்டாங்களா..? இத்தனை மாசமா இவனுங்க சொன்னத நம்பி என்னோட வைரத்தையே தொலைச்சிட்டேனே… உன்னை எப்படி எல்லாம் தேடித் தவிச்சேன்னு தெரியுமா..? எல்லாமே இவனுங்களாலதானே. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு இந்த ஹாஸ்பிடலையே இழுத்து மூடினாதான் சரியா இருக்கும்..” எனப் பல்லைக் கடித்தவாறு கூறியவன் அவளை அழைத்துக்கொண்டு நேரே அந்த வைத்தியரின் முன்பு சென்று நின்றான்.
அனுமதி வாங்காமல் தன்னுடைய அறைக் கதவை தள்ளித் திறந்து கொண்டு யார் வருவது என சீற்றத்தோடு நிமிர்ந்து பார்த்த வைத்தியரோ அங்கே வெட்டிவிடும் பார்வையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்த குருஷேத்திரனைக் கண்டு விக்கித்துப் போனார்.
அதுவும் நிறைமாத வயிற்றோடு அவனுடைய மனைவியை அவன் அழைத்து வந்திருப்பதைக் கண்டதும் அவருக்கோ உடல் நடுங்கத் தொடங்கி விட்டது.
தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டது என எண்ணிப் பயந்து போனவர் நெற்றியோரம் வியர்வை அரும்பத் தொடங்கி விட வியர்வையைக் கூடத் துடைக்க முடியாது பயத்தில் எழுந்து நின்றார்.
குருவோ வேகமாக அவரை நெருங்கி வந்தவன் தன்னுடைய கரத்தில் இருந்த ரிப்போர்ட்டை அவரின் முன்பு தூக்கி விசிறி அடித்தான்.
அவன் எறிந்த வேகத்தில் அந்த ரிப்போர்ட்டோ அவர் மேல் பட்டு கீழே விழ பதறிப் போனவர் எதுவுமே தெரியாததைப் போல “எ… என்ன ஆச்சு மிஸ்டர் குரு…? எதுக்காக இவ்வளவு கோவமா வந்திருக்கீங்க..?” எனத் தடுமாறியவாறு கேட்க இவனுக்கோ ஆத்திரம் இன்னும் அதிகரித்தது.
“யு ப்ளடி…. ***** நான் எதுக்காக வந்து இருக்கேன்னு உனக்குத் தெரியாதா…?” என அவன் வார்த்தைகளை அழுத்திப் பேச தடுமாறிப் போனார் அவர்.
அவரின் அமைதியில் கொதித்து எழுந்தவன் அடுத்த கணம் அந்த மேஜை மீது தன்னுடைய கரத்தை ஓங்கித் தட்டி,
“ஏய்… நான் எதுக்காக இங்க வந்திருக்கேன்னு உனக்குத் தெரியாதான்னு கேட்டேன்…” என மீண்டும் வார்த்தைகளை அழுத்திப் பேச பயந்துபோனவர்
உண்மையை ஒத்துக் கொள்ளவும் முடியாது அவன் கேட்பதற்கு பதில் கூறவும் முடியாது திகைத்துப் போனார்.
அபர்ணாவுக்கோ அந்தப் பெண்மணி படும் அவஸ்தையைக் கண்டு பாவமாகிப் போனது.
அதட்டி மிரட்டி கர்ஜித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய கணவனின் கரத்தை மெல்லப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள்,
“ப்ளீஸ் குரு… பாவமா இருக்கு… அவங்க ரொம்ப பயந்துட்டாங்க.. விட்ருங்க..” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெல்ல முனகினாள்.
“இந்த விஷயத்துல நீயே சொன்னாலும் என்னைத் தடுக்க முடியாது அபி…” என்றவன் தன் கரத்தை அவளுடைய கரத்தில் இருந்து விடுவித்துவிட்டு
அந்த வைத்தியரை நெருங்கி வந்தவன்,
“என்னோட மனைவியால குழந்தையே பெத்துக்க முடியாது.. அவளோட கருப்பை குழாய் ரெண்டுலையும் அடைப்பு இருக்குன்னு எதுக்காக பொய் சொன்ன..? ட்ரீட்மென்ட் பண்ண முடியாதுன்னு நீ சொன்னத அப்படியே நம்பினேனே சே.. டாக்டர்னா கடவுளுக்கு சமம்.. அப்படிப்பட்ட உயர்ந்த தொழிலை செய்ற நீ இவ்வளவு கேர்லெஸ்ஸா வேலையை செஞ்சுருக்கியே… உனக்கு வெக்கமா இல்லையா..? எதுக்காக என்னோட மனைவி பத்தி இல்லாததை சொன்ன..?” என்றவன் ஆத்திரம் தீராது அவருடைய கழுத்தையே இறுகப் பற்றி விட அபர்ணாவோ பயந்து போனாள்.
அபர்ணாவை விட பயந்து போனார் அந்த வைத்தியர்.
அவனுடைய கரம் கொடுத்த அழுத்தத்தில் கண்ணீர் வழிய திணறிப் போய்,
“நான் வேணும்னே பண்ணல.. தா…. தாராதான் அப்படி பண்ண சொன்னா… அதனாலதான் பொய்யான ரிப்போர்ட் கொடுத்தேன்…” என அவர் அழுதவாறே பயத்தில் அனைத்து உண்மையையும் உளறிவிட இப்போது மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து அவரை விடுவித்தான் குரு.
இவ்வளவு நேரம் வரை கவன ஈனத்தால்தான் மெடிக்கல் ரிப்போர்ட் பிழையாக வந்துவிட்டது என எண்ணிக் கொதித்துக் கொண்டிருந்தவனுக்கு இது திட்டமிட்ட சதி எனத் தெரிய வந்ததும் ஒட்டுமொத்த உடலும் கோபத்தில் நடுங்க ஆரம்பித்துவிட்டது
“வாட்..?” நம்ப முடியாது அந்த அறை அதிரும் வண்ணம் கர்ஜித்தான் அவன்.
அபர்ணாவோ விக்கித்துப் போனாள்.
வேண்டும் என்றே தன்னுடைய ரிப்போர்ட்டை மாற்றிக் கூறியிருக்கிறார்களா..?
அதிர்ந்து போனவளுக்கு விழிகள் கலங்கி கண்ணீர் வழியத் தொடங்கியது.
நான் இவர்களுக்கு என்ன பாவம் செய்தேன்…?
எதற்காக எனக்கு இப்படி ஒரு பாவத்தை செய்தார்கள் என எண்ணி வேதனையில் ஆழ்ந்து போனாள் அவள்.
“சா… சாரி… சாரி என்ன மன்னிச்சிடுங்க… அன்னைக்கு நீங்க ஹாஸ்பிடல் வந்தப்போ தாரா மேடமும் இங்கதான் இருந்தாங்க..” என அவர் தடுமாறியவாறே கூற அப்போதுதான் இது தாராவின் கணவருடைய மருத்துவமனை என்பதே அவனுடைய நினைவில் வந்தது.
“அ…அவங்கதான் அன்னைக்கு நீங்க எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டாங்க… உங்க விஷயத்தை பத்திப் சொன்னதும் உங்க மனைவியால கு.. குழந்தையை பெத்துக்க முடியாது அப்படின்னு சொல்லுங்கன்னு அவங்கதான் சொன்னாங்க.. அ… அப்படி சொன்னா ப.. பத்து லட்சம் பணம் தர்றதா சொன்னாங்க… குடும்பத்துல ரொம்ப பணக்கஷ்டம் அதனால வேற வழி இல்லாம உங்ககிட்ட பொய்யான ரிப்போர்ட்டைக் கொடுத்துட்டேன்… ப்ளீஸ்.. சாரி… ப்ளீஸ் என்ன எதுவும் பண்ணிடாதீங்க… பொ.. பொண்ணுங்கள அடிக்கிறது த.. தப்பு என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ்..” என அவர் கூறி முடித்த அடுத்த கணம் பளார் என அவருடைய கன்னத்தில் ஓங்கி விட்டிருந்தான் ஒரு அறை.
“பொண்ணுங்களை அடிக்கிறதுதான் தப்பு… ஆனா உன்ன மாதிரி ஒரு பணத்தாசை பிடிச்ச பேய அடிக்கிறதுல தப்பே கிடையாது..” என்றவன்
“நீ பண்ண தப்புக்கு தண்டனையா நீயே உன்னோட வேலையை நீயே ரிசைன் பண்ணிட்டு போயிடணும்… இல்லன்னா நான் உன்ன ரிசைன் பண்ண வைப்பேன்…” என அதிரடியாக அந்த அறையே அதிரும் வண்ணம் கர்ஜித்தவன் அழுது கொண்டிருந்த தன்னவளை நோக்கித் திரும்பினான்.
அவ்வளவு நேரமும் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தவனுக்கு அழுது கரைந்து கொண்டிருந்த தன்னவளைக் கண்டதும் மனம் பிசைந்தது.
சட்டென அவளை நெருங்கி அணைத்துக் கொண்டவன் “அபி… எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்மா… நீ எதுக்கும் கவலைப்படாதே…” என அவளுடைய கூந்தலை வருடி முதுகைத் தடவி விட,
“ஏன்…? ஏன் இப்படி பண்ணாங்க..? நான் அவங்களுக்கு எந்த பாவமும் பண்ணலையே… இவங்கள முன்னாடி நான் பார்த்தது கூட இல்லை… யாரோ ஒரு பொண்ணு எதுக்காக என்னோட வாழ்க்கைல இப்படி எல்லாம் பிளே பண்ணணும்..?” என அவள் அழுது துடிக்க,
“அவ என்னோட எக்ஸ் லவ்வர்..” என்றிருந்தான் அவன்.
சடாரென அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அபர்ணா.
தாரா என்ற பெயரை எங்கோ கேள்விப்பட்டிருப்பது போலத் தோன்றியதற்கான காரணம் அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.
மீண்டும் தன்னை நினைத்து கழிவிரக்கம் பொங்க தேம்பித் தேம்பி அழுதவள் அவனுடைய கரத்தை தட்டி விட்டாள்.
“ப்ளீஸ் அபி டோன்ட் கிரை..” என்றவன் அவளைத் தோளோடு அணைத்தவாறு அந்த இடத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்ல அறை வாங்கிய அந்தப் பெண்மணிக்கோ தலை சுற்றுவது போல இருந்தது.
அதைவிட அவமானம் அதிகரிக்க வேலையை விடுவதா என எண்ணி கலங்கிப் போனார் அவர்
வேலையை விடவில்லை என்றால் குருவின் பண பலம் தன்னை வேலையை விட்டு விரட்டி அடிக்கச் செய்யும் என்பதை உணர்ந்தவருக்கு தாராவின் மீது கோபம் கோபமாக வந்தது.
அடுத்த கணமே தாராவுக்கு அழைப்பு எடுத்தார் அவர்.
எத்தனையோ முறை முயன்றும் அவள் அவருடைய அலைபேசி அழைப்பை ஏற்காது போக இவருக்கோ தலை விறைத்தது.
பணத்திற்காக ஆசைப்பட்டு இந்த வேலையை இழந்து விடுவோமோ என எண்ணிப் பயந்து போனார் அவர்.
இந்த வேலையை வைத்துத்தானே எவ்வளவோ பணத்தை இதுவரை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார்.
இதுவும் இல்லை என்றால் முதலுக்கே மோசமாகி விடுமே என்றவர் மீண்டும் தாராவுக்கு அழைத்து அவள் ஏற்காது போக ஏமாற்றத்தில் பயந்து சோர்ந்து போனார்.
சற்று நேரத்திலேயே அவருடைய அலைபேசிக்கு அவர் குருவிடம் தான் செய்த தவறை ஒப்புக்கொண்ட வாய்ஸ் ரெக்கார்டிங் ஒலிப்பதிவாக வர குரு தான் இதனை அனுப்பி இருக்கிறான் என்பதை உணர்ந்து பதறிப் போனார் அவர்.
“இன்னைக்குள்ள நீ வேலைய ரிசைன் பண்ணலைன்னா இந்த ஆடியோவை ரிலீஸ் பண்ணிடுவேன்.. அசிங்கப்படுத்தி உன்னை வேலையை விட்டு துரத்தி அடிப்பேன்… இந்த குரு கூட பகைச்சுக்கிட்டா என்ன நடக்கும்னு அனுபவிக்க ரெடியா இருந்தீன்னா நீ வேலையை கண்டினியூ பண்ணலாம்…” என அவனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்றும் வந்திருக்க அவ்வளவுதான் இடிந்து போனார் அந்தப் பெண்மணி.
இதற்கு மேலும் அந்த வேலையைத் தொடர அவருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?
அழுதவாறே வேலையை ரிசைன் செய்வதற்கு தயாரானார் அவர்.
அபியை அழைத்து வந்து தன்னுடைய வீட்டில் விட்டவனுக்கு கோபத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.
தன்னுடைய வாழ்க்கையில் முடிந்து போன அத்தியாயமாக இருந்தவள் இப்போது மீண்டும் எதற்காக தலை காட்டுகின்றாள்..?
எதற்கு அபியின் மெடிக்கல் ரிப்போர்ட்டை மாற்றி வைக்க வேண்டும்..?
அவளுடைய கயிற்றுக்கு ஆடும் பொம்மலாட்ட பொம்மை போல இந்தக் குருஷேத்திரனை நினைத்து விட்டாளா..?
“அபி நீ ரெஸ்ட் எடு… எனக்கு ஒரு வேலை இருக்கு… அதை முடிச்சுட்டு வரேன்..” எனக் கூறியவன் கோபத்தோடு தாராவை சந்திப்பதற்காகச் செல்லத் தயாராக,
அபர்ணாவோ “இப்ப எங்க போறீங்க..? உங்களோட எக்ஸ் லவ்வரை பாக்கப் போறீங்களா..?” சீறினாள்.
“ஆமாடி அவளைத்தான் பார்க்க போறேன்… எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட வாழ்க்கைலயே விளையாடி இருப்பா…”
“இதோ பாருங்க ரிப்போர்ட் பொய்யோ இல்லையோ… குழந்தை பெத்துக்க முடியும்னா என்ன கூடவே வச்சிருப்பீங்க.. இல்லைனா என்ன விரட்டி விட்டுருப்பீங்க அவ்வளவுதானே..? இந்த ரிப்போர்ட் பொய்யா இருந்ததாலதானே உங்களோட மனசுல இருந்த உண்மை என்னன்னு எனக்குத் தெரிய வந்துச்சு..”
“ப்ச்.. இந்த ரிப்போர்ட் மாறலைன்னா நமக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது அபி..”
“உங்க மனசுல தப்ப வச்சுட்டு ரிப்போர்ட்ட மட்டும் காரணம் சொல்லாதீங்க குரு..
உங்க லவ்வர் உங்க மேல குறை இருக்குன்னு சொல்லிட்டு உங்களை விட்டுட்டு போய்ட்டான்னு இத்தனை வருஷமா வருத்தப்பட்டுக்கிட்டு இருக்கீங்கல்ல..? இதே தப்பத் தானே நீங்க எனக்கு பண்ணி இருக்கீங்க… என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு என்னோட குறைய காரணம் காட்டி என்ன வேணாம்னு விட்டுட்டுப் போன நீங்களும் உங்களோட எக்ஸ் லவ்வரும் ஒன்னுதான்.. அவங்க தப்புன்னா நீங்களும் தப்புதான்.. இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமான மனுஷங்க இந்த பணக்காரங்கதான்னு இப்போதான் புரிஞ்சுகிட்டேன்…” என வெறுப்போடு கூறியவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட,
அந்த வரவேற்பு அறையில் இருந்த பெரிய கண்ணாடி மேசையைத் தூக்கி தரையில் போட்டு உடைத்தான் குரு.
“ஆஆஆஆஆ ஷிட்…” என்றவனின் அலறல் சத்தம் அந்த வீடு எங்கும் எதிரொலித்தது.
🔥💜💜🔥
Past la enna achu avanuku