🤎 *நேசம் நீயாகிறாய்!* 🤎
நேசம் 01
“ஸ்னேஹமோ ப்ரேமமோ
ஈடிலா நேயமோ..” துள்ளலுடன் பாடியவாறு செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் ஒருத்தி.
தன் தோட்டத்தில் பூச்செடிகள் நடுவதே அவள் வேலை. தினமும் அவற்றைப் பராமரித்து வளர்ப்பதிலேயே நேரங்கள் கழியும்.
நீர் பாய்ச்சி முடித்தவள் வீட்டுத் தோட்டத்தின் நடுவில் வீற்றிருந்த பலகை பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
அவள் தேன் நிலா!
வயது இருபத்தி நான்கு. சாதாரண நிறம், கருகருவென்ற சுருள் முடி அவளை அழகு செய்திடும்.
சுகுமாரன், சுசீலா தம்பதியினரின் புதல்வி அவள். படிப்பில் ஆர்வம் இல்லாததால் ப்ளஸ் டூ வரை படித்து விட்டு வீட்டில் இருக்கிறாள்.
தையல் அவளுக்குக் கை வந்த கலை. அக்கம் பக்கத்தவர்களுக்கு சொற்ப தொகைக்கு தைத்துக் கொடுப்பாள். அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் பூச்செடிகள் வாங்கி நட்டு தோட்டத்தை அழகுபடுத்துவாள்.
தந்தை சுகுமாரன் வங்கியில் கணக்காளராகப் பணி புரிகிறார். சுசீலா இல்லத்தரசி. தேன் நிலாவிற்கு துருவன் என்று ஒரு தம்பி. அவளை விட இரண்டு வருடங்கள் இளையவன், ஆர்.வி கம்பனியில் பி.ஏவாக வேலை செய்கிறான்.
“ஏய் தேனு” கோபமாக வந்த சுசீலாவின் குரலில், அடித்துப் பிடித்து உள்ளே ஓடியவள் தாயின் முன் நிற்க,
“சாப்பிட்ட மேசையை இப்படித் தான் வைப்பியா? பொம்பளைப் பிள்ளையா பொறுப்பா இருக்க வேண்டாமா?” என கேட்டவாறு மேசையைத் துடைத்து சுத்தம் செய்தார் சுசீலா.
“சுத்தம் பண்ணனும்னு தான் நெனச்சுட்டு இருந்தேன். மல்லிகைப்பூ வாசனை வந்ததும் வெளியே ஓடிட்டேனா மறந்துருச்சு” தலையில் தட்டிக் கொள்ள,
“மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச..” பாடிக் கொண்டு வந்தான் துருவன்.
“பவுடர் கொஞ்சம் எடுத்து உன் முகத்துல பூச” அங்கிருந்த டப்பாவை எடுத்து பவுடரை அவனது முகத்தில் பூசி விட,
“அம்மா! நான் சும்மா தானே இருந்தேன். பார்த்தீங்களா என்னை நோண்டி விடறா” தாயிடம் குற்றப் பத்திரிகை வாசித்தான் அவன்.
“சும்மா இருடி. அவனை நோண்டாம உனக்கு பொழுது போகாதா?” அவளைத் திட்டினார் சுசீலா.
“என் பொண்ணை யாரு திட்டுறது?” எனக் கேட்டவாறு வந்தார் சுகுமாரன்.
“ப்பா! அவனை மட்டும் கொஞ்சிட்டு என்னை வஞ்சிட்டே இருக்காங்க. அம்மா இப்படித் தான்” தந்தையிடம் மூக்கை உறிஞ்சினாள் மகள்.
“உங்கம்மா வையுற அளவுக்கு நீ என்னடா பண்ணுன?” தோள்பையை கழற்றி வைத்தவாறு சோஃபாவில் சோர்வுடன் அமர்ந்தார்.
“என் மூஞ்சுல பவுடரை அப்பி விட்டுட்டா” என துருவன் கூற, “அவனை அழகாக்க தானே பண்ணுனேன். நல்லதுக்குக் கூட காலமில்ல” பெரிதாக சலித்துக் கொண்டாள் அவள்.
“வீட்டுல இந்த கூத்து ஓகே. போற இடத்தில் கிறுக்குத் தனம் பண்ணாம இருந்தா சரி” என்றார் சுசீலா.
“எங்கே போகப் போறா எதிர் வீட்டுக்குத் தானே? ஆனாலும் உன் மாமியார் ஸ்ட்ரிக்ட்கா. எதற்கும் பத்திரம்” என துருவன் எச்சரிக்கை விடுத்தான்.
“போடா நீ வேற. கல்யாணமே வேணாங்குறேன் இதுல நிச்சயதார்த்தம் ஒன்னு தான் குறை” வாய்க்குள் முணுமுணுத்தாள் தேன் நிலா.
“என்னடா சொன்ன?” சுகுமாரன் அன்போடு கேட்க, “இல்லப்பா. என் மாமியார் ரொம்ப ஸ்வீட்னு சொல்ல வந்தேன்” என அறையினுள் நுழைந்து கொண்டாள்.
எதிர்வீட்டைப் பார்த்தவளுக்கு சென்ற வாரம் அந்த வீட்டில் வாழும் ஆடவனுக்கும் தனக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவுக்கு வந்தது.
அவளைப் பொறுத்தவரை அது விருப்பமில்லாத திருமணம். ரஷ்யாவில் மெடிசின் படிக்கச் சென்ற ராகவேந்திரனை அவளுக்கு சற்றும் பழக்கமில்லை. அப்படியிருக்க ஒன்றும் அறியாமல் எப்படி வாழ்க்கை நடாத்துவது என்பது அவளின் எண்ணம்.
அவள் எதிர்வீட்டைப் பார்த்திருக்க, நிச்சயதார்த்த புகைப்படத்தில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
தேன் நிலாவுக்கு வருங்காலத் துணைவனாக நிச்சயிக்கப்பட்டவன்.
ராகவ் எனும் ராகவேந்திரன்.
அந்த வீட்டில் அன்னியோன்யமாக வசிக்கும் குடும்பம் பாஸ்கருடையது. ஆர்.வி எனும் மோட்டார் வாகன கம்பனியின் எம்.டி அவர். மனைவி ரேவதி. மூத்தவள் ரேஷ்மா மாதவனை திருமணம் செய்துள்ளாள். அவர்களுக்கு ஐந்து வயதில் ப்ரீத்தி எனும் மகள்.
ரேஷ்மாவை விட நான்கு வருடங்கள் இளையவன் ராகவேந்திரன். அவன் இப்போது டாக்டராக, அந்த ஊரில் பணியாற்றுகிறான்.
சுகுமாரன் இதே வீட்டில் பிறந்து வளர்ந்தவர். பாஸ்கர் குடும்பம் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னால் பெங்களூரில் இருந்து வந்து குடியேறினர்.
பாஸ்கர் மற்றும் சுகுமாரன் நட்பில் இணைய, பெண்களும் அவ்வாறே நட்புக்கரம் நீட்டினர். ரேஷ்மாவுக்கு தன்னை விட எட்டு வருடங்கள் இளைய தேனுவைப் பிடித்து விட, அவளோடு பழகினாள். ப்ரீத்திக்கு தேன் நிலா என்றால் உயிர்.
ஆனால் அவளுக்கு ராகவேந்திரன் என்றால் தூரத்துப் பச்சை. அவன் வந்த சில நாட்களிலேயே ரஷ்யாவுக்கு படிக்கச் சென்று விட்டான்.
வருடம் ஒருமுறை லீவுக்கு வருவான். அவளது தந்தையோடு உரையாடுபவன் அவளை ஏறெடுத்தும் பார்த்ததில்லை.
“ரஷ்ய ரோஸ் மில்க்! ரொம்பத் தான் பண்ணுறான். ஒரு பார்வை பார்த்தா, கொஞ்சமா ஸ்மைல் பண்ணுனா கொறஞ்சா போயிடுவான்?” அவனைத் திட்டித் தீர்ப்பாள் இவள்.
வீதியில் இறங்கி நடக்கையில் முதல் முறை காணும் ஒருவனே சிரித்தோ, நம்பர் கேட்டோ வழியும் காலத்தில், இத்தனை வருடமாக அறிந்தாலும் முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல் இருப்பவனை வித்தியாசமாகத் தான் பார்த்தது அவள் மனம்.
அப்படியிருக்கையில் சென்ற மாதம் அவன் வீட்டினர் வந்து பெண் கேட்டிருந்தனர்.
“நல்ல சம்பந்தம். அதுவும் நம்ம பொண்ணு நம்ம கண்ணு முன்னாடியே இருக்கப் போறா. வேற என்ன வேண்டும்?” வயது மறந்து துள்ளிக் குதித்தார் சுகுமாரன்.
“ஆமாங்க. எங்கே போகப் போறாளோனு பயந்துட்டே இருந்தேன். ஆனால் அந்த கவலையே இல்லாமல் ஆச்சு. மனசுக்கு நிறைவா இருக்குங்க” சுசீலாவின் முகத்தில் மகிழ்ச்சி மழையெனப் பொழிந்தது.
“ஆனால் பொண்ணு சம்மதம் முக்கியம் சுசீ” என்றவர், “உனக்கு இதுல சம்மதமா தேனு?” தவிப்புடன் மகளை நோக்கினார்.
“அக்கா! வேண்டானு சொல்லிடாத. ராகவ் அண்ணா ரொம்ப நல்லவர். பார்க்க அழகா இருக்கார். குணமும் பர்பெக்ட். ஓகே சொல்லு” துருவனுக்கோ ராகவ் என்றால் அவ்வளவு பிடிக்கும் என்பதால் அக்காளை ஊக்கப்படுத்தினான்.
அவளுக்கோ நாலாபக்கமும் யோசனை சுழன்றது. இவனைப் பற்றி என்ன தெரியும், பெயரையும் வயதையும் தவிர. பழகியே பாராமல் தலையாட்டுவதா?
தனக்குப் பிடித்த ஒருவனையே திருமணம் செய்ய வேண்டும் என்பது அவளது ஆசை. ஆனால் இவன் தனக்குப் பிடித்தவனா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. அவளது ஆசைகள் அவனோடு என்றும் பொருந்தாது.
“அப்பா கிட்ட மறுக்க முடியாது. டேரக்டா ராகவ் கிட்டயே பேசிக்க வேண்டியது தான்” என்றவளையே மூவரும் பார்த்திருந்தனர்.
“ஓகே சொல்லிடவா டா?” சுகுமாரன் ஆசையாகக் கேட்ட போது அவளால் மறுக்க இயலவில்லை.
“ஓகே. எனக்கு சம்மதம் பா” கண்களை மூடித் திறந்தாள் பெண்.
“தாங்க் யூ! தாங்க் யூ செல்லம்” அவளது கைகளைப் பிடித்தவர் பாஸ்கரிடம் விடயத்தைச் சொல்ல ஓடினார்.
அடுத்த நாளே அவர் வீட்டாட்கள் வந்து விட்டனர்.
“நீ எனக்கு மருமகளா வரப் போறதுல ரொம்ப சந்தோஷம்” அவள் நெற்றியில் விபூதி பூசினார் மரகதம்.
எவ்வளவு அன்போ அவ்வளவு கண்டிப்பும் நிறைந்தவர் மரகதம்.
ராகவேந்திரன் நிச்சய நாளன்று வருவதாகக் கூறினார். அனைத்தும் மளமளவென்று நடப்பது போன்ற எண்ணம் அவளுக்கு. ராகவ்வுடன் பேசலாமா வேண்டாமா என போராட்டம் நடாத்தியே நிச்சயதார்த்த நாளும் வந்தது.
நிச்சயதார்த்தத்தின் போது வேஷ்டி சட்டை அணிந்து வந்திருந்தான். வேண்டாம் எனும் மனநிலையில் பார்த்ததாலோ என்னவோ அவளுக்கு அவன் மீது கவனம் செல்லவில்லை.
அவன் ஒரு பார்வை பார்த்தானே அன்றி புன்னகைக்கக் கூட இல்லை. இவளும் அதற்கு மேல் பார்க்கவில்லை.
‘இந்த சிடுமூஞ்சி சிவராமன் எனக்கு வேண்டவே வேண்டாம்’ மனதினுள் கூக்குரலிட்டாள் அவள்.
அவனிடம் எப்படிச் சொல்வது என்று யோசிக்க, அதற்கான சந்தர்ப்பம் அன்று அமையவில்லை. அவன் பேசவும் இல்லை. தானே வழிய வந்து பேசவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் எனும் நிலையும் வந்து விட்டது.
“மச்சி” எனும் அழைப்போடு உள்ளே வந்த மீராவைக் கண்டு சற்றே ஆசுவாசமானாள் தேன் நிலா.
அவள் மனம் விட்டுப் பேசும் ஒரு ஜீவன். தயக்கமின்றி சகலதையும் பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் அப்படியொரு உறவோ நட்போ இருக்கும் அல்லவா?
“வா மச்சி. என் ஆதங்கத்தைக் கொட்ட யாரும் இல்லையானு புலம்பிட்டு இருந்தேன். கரெக்டா வந்துட்ட”
“உன் புலம்பலைக் கேட்கவா வந்தேன்? என் டார்லிங்கை சைட்டடிக்க வந்தேன்” என்றவள் மீரா,
சுகுமாரனின் ஒரே தங்கை சுலோச்சனாவின் மகள்.
இரண்டு தெரு தாண்டி வாழ்கிறார்கள். மீரா துருவனை விட ஒரு வருடம் இளையவள். இருவருக்கும் பள்ளிக்காலம் முதல் காதல் பூ பூத்திருந்தது. இதை வீட்டினர் அறிந்தாலும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.
“அப்படினா என் கூட பேச நேரம் இல்லை தானே? போ போயிடு” என தேனு முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ள,
“சும்மா சொன்னேன் மச்சி. நாம ரெண்டு பேரும் பெஸ்ட்டு ஃப்ரெண்ட்ஸ்ல? சொல்லு சொல்லு என்ன விஷயம்? ரஷ்ய பீஸ் என்ன சொல்லுது?” என ஆவலுடன் வினவினாள் மீரா.
“சொல்லுறதை விட்டு சின்ன சிரிப்பு கூட இல்லை. இவனை யாரு டாக்டராக்கினாங்களோ? போயும் போயும் எங்கப்பாவுக்கு ஆளே இல்லாம இந்த உம்மணா மூஞ்சியைப் பிடிச்சிருக்கார்” புலம்பித் தள்ளினாள் அவள்.
“மாமாவைப் பற்றி என்னை விட உனக்கு தெரியுமே. அவர் உனக்காக எதைத் தெரிவு செஞ்சாலும் அது பெஸ்டா தான் இருக்கும். அதை நீயும் ஏத்துக்குறல்ல?” எனக் கேட்க,
“ஏத்துக்கிறேன் மச்சி. ஆனாலும் இது வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையா? என் எண்ணங்களுக்கு ஏத்த மாதிரி அவர் இல்லைங்குறது மட்டுமே மனசுல ஓடிட்டு இருக்கு. அப்படி இருக்கும் போது என்னால வேற எதையும் யோசிக்க முடியல” தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தாள்.
“அவர் ஒன்னும் கெட்டவர் இல்ல. எந்த தப்பான பழக்கமும் கிடையாது. நான் அறிந்தவரை எந்த குற்றமும் சொல்லுற மாதிரி இல்லை”
“நான் அவரை குற்றம் சொல்லல மீரு. நான் எவ்ளோ பேசுவேன்னு உனக்கே தெரியும்ல? ஆனா அவரு பேசி பார்த்ததே இல்லை. எங்கப்பா கூட பேசும் போது ஒட்டுக் கேட்டிருக்கேன். ம்ம், ஓகே, சூர் என்றதை விட தேவைக்கு அதிகமா பேசுனதே இல்ல” என்றவளது மனம் அவன் முகத்தை நினைவுபடுத்திப் பார்த்தது.
“நீ ரொம்ப கன்பியூஸ் ஆகிருக்க மச்சி. பொறுமையா நின்னு நிதானமா யோசி. உனக்கே எல்லாம் புரியும்” என்றவாறு எழுந்து சுசீலாவைத் தேடிச் சென்றாள்.
ஒன்றல்ல ஓராயிரம் முறை யோசித்தாலும் அவளுக்கு ராகவேந்திரன் வேண்டாம் என்றே தோன்றியது.
நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பார்த்தாள். அவன் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை.
“வாழ்க்கை முழுக்க சிரிக்காமலே வாழ என்னால முடியாது” என யோசித்தவளோ ஒரு முடிவுக்கு வந்தவளாய், அவனுக்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினாள்.
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ப்ளீஸ் இதை நிறுத்திடலாமா?”
அடுத்த நிமிடமே ப்ளூ டிக் விழுந்தது. எனினும் பதில் வராததில் படபடத்தது அவளிதயம்.
தொடரும்….!
ஷம்லா பஸ்லி
2024-11-06