அவன் இல்லை என்றால் உயிர் வாழவே முடியாது என்றல்லவா கூறினாள்.
ஆனால் சாதாரண உடலுறவு பூர்த்தியாகவில்லை என்றதும் தன்னை வேண்டாம் எனத் தூக்கி எறிந்து விட்டுச் சென்று விட்டாளே!
நான் ஏதாவது பிழை செய்து அந்தப் பிழையின் நிமித்தம் தன்னை வெறுத்து ஒதுக்கினால் கூட அவனுடைய மனம் சமாதானம் அடைந்திருக்கும்.
ஆனால் எந்தப் பிழையும் செய்யாது தன்னுடைய சக்தியை மீறிய விடயத்திற்காகத் தன்னை குறை கூறி ஒதுக்கி விட்டுச் செல்லும் காதலியை நினைத்து அவனுக்கு மனம் தாளவில்லை.
இவ்வளவுதானா காதல்..?
இவ்வளவுதான் அவன் மீது அவள் வைத்திருந்த அன்பா..?
பெரும் வலியோடு வீடு வந்து சேர்ந்தவனுக்கு விழிகளில் இருந்து நீர் வழிவது நின்றபாடே இல்லை.
எப்படியோ எந்த விபத்தும் இன்றி வீடு வந்து சேர்ந்தவன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன்னுடைய அன்னையைக் கண்டதும் முழுவதும் நொறுங்கிப் போனான்.
அவரோ அழுது முகம் வீங்கிப் போய் சட்டையை புறப்பக்கமாக மாற்றிப் போட்டுக்கொண்டு ஏதோ பிச்சைக்காரனைப் போல வந்து நின்ற தன் மகனைக் கண்டு அதிர்ந்து போனவர்,
“என்னாச்சு குரு..?” எனப் பதறிப்போய் கேட்க,
அக்கணம் அவனுக்கோ எதையும் மறைக்கத் தோன்றவில்லை.
உள்ளம் முழுவதும் நிறைந்திருந்த வேதனையில் “நான் லவ் பண்ண பொண்ணு என்ன வேணாம்னு சொல்லிட்டாம்மா..” என உடைந்து போய் உண்மையைக் கூறியிருந்தான் அவன்.
ஆறுதல் தேடி தோள் சாய்ந்து அழுவதற்கு அவனுக்கு அவனுடைய அன்னையைத் தவிர வேறு யாரும் இல்லை அல்லவா.
தேவியோ திகைத்துப் போனார். தன்னுடைய மகன் காதலிக்கிறான் என்பதே அவருக்கு அதிர்ச்சியாக இருக்க அதில் அந்தக் காதல் பாதியிலேயே முறிவு அடைந்து விட்டது என்பதை அறிந்ததும் பெரும் திகைப்பாக இருந்தது அவருக்கு.
மகனின் வேதனையை காணச் சகிக்காது அவனை மெல்ல சமாதானம் செய்ய முயன்றார் அவர்.
“வேணாம்னு சொல்ற அளவுக்கு என்னப்பா ஆச்சு முதல்ல யார் அந்தப் பொண்ணுன்னு சொல்லு..?” என அவர் அவனுடைய காதலியைப் பற்றி விசாரிக்க,
“விஸ்வநாதன் அவங்களோட பொண்ணு தாரா… நானும் அவளும் ரொம்ப மாசமா லவ் பண்ணினோம் ஆனா இப்போ சின்ன பிரச்சனைல அவ என்ன வேணாம்னு சொல்லிட்டா..” என அவன் வேதனையோடு கூற,
“அட நம்ம விஸ்வநாதனோட பொண்ணுதானா..? நம்ம பிஸ்னஸ் பார்ட்னர்தானே அவங்க. நீ எதுக்கும் கவலைப்படாத நான் அவங்ககிட்ட பேசுறேன்..” என்ற அன்னையைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்,
“வேணாம்மா இத விட்ருங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு… நான் கொஞ்ச நேரம் தனியா இருக்கணும்மா… நீங்க யார்கிட்டயும் பேச வேண்டாம்..” என்றவன் கண்ணீரை துடைத்துக்கொண்டு அழுகையை அடக்கிய வண்ணம் தன்னுடைய அறையை நோக்கிச் சென்றுவிட அவருக்கோ வேதனையில் உள்ளம் மருகியது.
அவன் அறைக்குள் சென்ற அடுத்த நொடியே விஸ்வநாதன் வீட்டிற்கு அழைப்பை எடுத்தவர்,
“அண்ணா உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா..?” என தேவி கேட்க,
“சொல்லுமா என்ன விஷயம்..?” எனக் கேட்டிருந்தார் விஸ்வநாதன்.
“என்னோட பையனும் உங்க பொண்ணும் சில மாதங்களா லவ் பண்றாங்களாம்.. எனக்கே இப்பதான் விஷயம் தெரிய வந்துச்சு… ஏதோ ரெண்டு பேருக்கும் இடையில சின்ன பிரச்சனை ஆகி உங்க பொண்ணு என்னோட பையன வேணாம்னு சொன்னதா இவன் வந்து இங்க புலம்பிக்கிட்டு இருக்கான்… முடிஞ்சா என்னன்னு பேசுங்க அண்ணா… இல்லனா உங்க பொண்ணோட ஃபோன் நம்பரை எனக்கு அனுப்பி வைங்க நான் அவ கிட்ட பேசுறேன்..” என தேவி கூறியதும் விஸ்வநாதனுக்கு மகிழ்ச்சியில் உள்ளம் பூரித்துப் போனது.
தன்னுடைய பணத்தை விட அதிக பணத்திற்கு சொந்தக்காரரான தேவியின் மகனை திருமணம் செய்தால் தங்களுக்கு லாபம்தான் என எண்ணிக் கொண்டவர்,
“சரிமா இதோ இப்பவே அனுப்புறேன்… நானும் என் பொண்ணுகிட்ட பேசுறேன்… நீ மாப்பிள்ளைகிட்ட கவலைப்பட வேண்டாம்னு சொல்லு..” எனக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவர் அடுத்த கணமே தாராவின் அலைபேசி இலக்கத்தை தேவிக்கு அனுப்பினார்.
தன்னுடைய மகளும் தேவியின் மகனும் திருமண பந்தத்தில் இணைந்தால் இன்னும் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் பட்டியலில் தன்னுடைய பெயரும் இடப்படித்து விடும் என எண்ணி பூரித்துப் போனவருக்கு மகிழ்ச்சியில் கால்கள் தரையில் நிற்க மறுத்தன.
அதே கணம் கோபத்தோடு அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் தாரா. அவளைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சியோடு,
“ஸ்வீட்டி இங்க வாம்மா.. நல்ல விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டியே… நீயும் நம்ம பிஸ்னஸ் பார்ட்னர் தேவியோட மகனும் ரொம்ப நாளா லவ் பண்றீங்களாமே..? இப்பதான் அந்த பையனோட அம்மா என்கிட்ட பேசினாங்க.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனையோ எனக்குத் தெரியாது… சீக்கிரமா அதை சரி பண்ணிடுங்க.. ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது எங்க பொறுப்பு..” என அவர் மட்டற்ற மகிழ்ச்சியோடு கூற இவளுக்கோ வெறுத்துப் போனது.
“டாடி ப்ளீஸ் ஸ்டாப் இட்… உண்மை தெரியாம பேசாதீங்க.. எனக்கு அவன் வேணாம்… அவன மாதிரி ஒருத்தனை என்னால கல்யாணம் பண்ணிக்கவே முடியாது..” என கோபத்தில் கத்தி இருந்தாள் அவள்.
“என்னடாம்மா சொல்ற.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணதா சொன்னாங்களே..!” என அவர் திகைப்போடு கேட்க,
“ஆமாப்பா லவ் பண்ணினேன்தான். இல்லைன்னு சொல்லல பட் அவன் ஒரு ஆம்பளையா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு லவ் பண்ணி இருக்கணும்… அவனை மாதிரி ஒரு பொம்பளைய போய் இத்தனை மாசமா லவ் பண்ணிட்டு நானே ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்… தயவு செஞ்சு இனி அவனைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க..
எனக்கு மாப்பிள்ளை பாக்குறத விட்டுட்டு அவனுக்கு போய் மாப்பிள்ளையை பார்க்கச் சொல்லுங்க… அவன் எல்லாம் ஆம்பளையே கிடையாது.. எனக்கு என்னோட வாழ்க்கைதான் முக்கியம்… இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் பார்த்து பாழும் கிணத்தில விழுறதுக்கு நான் தயாரா இல்லை..” என அவள் சீறி விட்டுச் சென்றுவிட மகள் கூறிய வார்த்தைகளின் வீரியத்திற்கு பொருள் உணர்ந்தவரோ குரு ஆண்மையற்றவன் என்ற முடிவுக்கு வந்து விட்டிருந்தார்.
தன்னுடைய தந்தையோடு பேசிவிட்டு சீற்றத்தோடு தன்னுடைய அறைக்குள் சென்று தொப்பென அங்கிருந்த கட்டிலில் அமர்ந்தவள் தன்னுடைய அலைபேசியில் புது எண்ணில் இருந்து அழைப்பு வரவும் புருவங்களை சுருக்கியவாறு அந்த அழைப்பை ஏற்று எரிச்சலோடு காதில் வைத்தாள்.
“ஹலோ..”
“ஹலோ எப்படிம்மா இருக்க..? நான் குருவோட அம்மா பேசுறேன்..” என்றதும் இவளுக்கோ தலைவலி அதிகரித்தது.
“என்ன விஷயம் சொல்லுங்க..” என பட்டுக் கத்தரித்தாற் போல பேசினாள் அவள்.
அவளுடைய பேச்சில் தேவியின் முகமோ சுருங்கியது.
“இல்லம்மா உன் கூட ஏதோ சண்டைன்னு என்னோட பையன் ரொம்ப நேரமா அழுதுகிட்டே இருக்கான்.. பார்க்கவே பாவமா இருக்கு… என்ன சண்டையா இருந்தாலும் பேசிடுமா… அவன் வலி தாங்க மாட்டான்..” எனத் தன் மகனுக்காக அவர் பரிந்து பேச,
“இப்போதான் புரியுது அவன் ஏன் இப்படி பொம்பளை மாதிரி பிஹேவ் பண்றான்னு.. கொஞ்சமாவது ஆம்பள மாதிரி நடந்துக்க கத்துக் கொடுங்க… எப்போ பாரு கெஞ்சுறதும் பொண்ணுங்க மாதிரி அழுறதும் இவனுக்கு எல்லாம் எதுக்கு ஆம்பள பேரு..? பேசாம பேர மாத்தி ஏதாவது பொம்பள பேரா வைக்கச் சொல்லுங்க… பேர்ல மட்டும் இல்ல குடும்பம் நடத்துறதுலையும் உங்க மகன் உதவாக்கரைதான்… அவன மாதிரி ஒருத்தனை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது..
அவன பத்தி பேசுறதா இருந்தா இனிமே எனக்கு கால் பண்ணாதீங்க… எனக்கும் அவனுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை..” எனக் கத்திவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு வெறுப்பாக இருந்தது.
‘இடியட் இவ்வளவு நாளும் அவங்க அம்மாகிட்ட லவ்வ சொல்ல முடியலன்னு நடிச்சுக்கிட்டு இருந்தவன் இப்போ நான் வேண்டாம்னதும் எல்லாருக்கும் கால் பண்ணி லவ்வ பத்தி சொல்லிட்டானா..? தேங் காட் இப்பவாவது அவனைப் பத்தி உண்மை தெரிஞ்சதே..’ என எண்ணி நிம்மதிப் பெருமூச்சு விட்டவள், அதன் பின்னர் குருவைப் பற்றிய எண்ணங்களை சிந்திப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டிருந்தாள்.
தேவிக்கோ தாரா பேசிய பேச்சில் கோபம் உச்சத்தை அடைந்திருந்தது.
வேகமாக தன்னுடைய மகனின் அறையை நோக்கிச் சென்றவர் சற்று முன்னர் தாராவோடு பேசிய அலைபேசி அழைப்பு ரெக்கார்ட் ஆகி இருப்பதை உணர்ந்து அதனை அவனுக்கு போட்டுக் காண்பிக்க ஏற்கனவே வேதனையில் இருந்தவன் தாரா பேசிய வார்த்தைகளைக் கேட்டு மரித்துப் போனான்.
“என்னடா இது வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கா…? இப்படி ஒரு அடங்காப்பிடாரியத்தான் லவ் பண்ணியா..? இவளோட மனசுல இவ என்ன நெனச்சுக்கிட்டு இருக்கா..? இப்பவே வா என்னன்னு கேட்கலாம்… எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட பையன பார்த்து பொம்பளைன்னு சொல்லி இருப்பா..? அவள நான் சும்மா விடப் போறதில்ல… நீ அம்மா கூட வா..” எனத் தேவி கோபத்தில் அழைக்க,
“அவ சொல்றது சரிதான் என்னால முடியல… நான் ஆம்பளையே கிடையாதுதான்மா..” என இவன் விடயத்தை போட்டு உடைக்க சில நொடிகள் இடிந்து போய் அவனைப் பார்த்தவர் என்ன பேசுவது எனப் புரியாது அசைவற்று நின்றிருந்தார்.
எல்லை மீறிப் பழக முயன்றதை திட்டுவதா..?
இல்லை தன் மகனுக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பதை எண்ணி கவலை கொள்வதா..?
இல்லை கேவலமாக பேசும் தாராவின் வாயை அடைப்பதா..? என மனம் வேதனையில் மருக எந்த முடிவும் எடுக்காது அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினார் தேவி.
அந்த நாள் முழுவதும் அன்னையும், மகனும் பேசிக்கொள்ளவே இல்லை.
இரவு வெகு நேரம் கவலையில் ‘ஆண்டவா என்னோட மகனுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது…’ என எண்ணினார்.
தன்னுடைய கைக்குள்ளேயே வைத்து மென்மையாக வளர்த்ததன் விளைவுதான் இதுவோ என எண்ணிக் கலங்கியவர், நாளை அவனை வைத்தியரிடம் அழைத்துச் சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெறலாம் என்ற முடிவை எடுத்தார்.
குருவோ உடல் அளவிலும் மனதளவிலும் மிகவும் நொந்து போய் இருந்தான்.
இரவு முழுவதும் அவனுக்கு தூக்கம் ஓடி ஒளிந்து மறைந்திருந்தது.
அடுத்த நாள் காலையில் தேவி எதுவும் நடவாதது போல தன்னை ஆஃபீஸில் விட்டு விடும்படி கூற இவனும் அமைதியாக காரில் ஏறியவன் தன்னுடைய அன்னையை அழைத்துக் கொண்டு தங்களுடைய அலுவலகத்திற்குச் சென்றான்.
அங்கே சென்றதும் அங்கே இருப்பவர்கள் எல்லாம் குருவைப் பார்த்து எதையோ கிசுகிசுத்துக் கூறிச் சிரிக்கத் தொடங்க தேவிக்கோ புருவங்கள் உயர்ந்தன.
குருவும் அவர்கள் தன்னைப் பார்த்துதான் எதையோ கேலி செய்து சிரிக்கிறார்கள் என்பது புரிந்து போக முகம் கசங்கியவனாய்,
“அம்மா நான் வீட்டுக்கு போறேன்..” எனக் கூற,
“ஒரு நிமிஷம் நில்லுப்பா..” என்றவர்,
“இங்கு என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு..” எனச் சத்தமாகக் கேட்க,
“நத்திங் மேடம்..” என்ற கூட்டமோ நொடியில் அமைதியாகிப் போனது.
“நீ உள்ள வாப்பா..” என தன்னுடைய கேபினை நோக்கி குருவை அழைத்துக் கொண்டு தேவி முன்னேற,
“இப்பதான் விஸ்வநாதன் சார் விஷயத்தை சொல்லிட்டுப் போனாரு.. நம்ம தேவி மேடமோட பையனுக்கு ஆண்மையே இல்லையாமே… பொம்பளைன்னு வேற சொல்றாங்க.. உண்மையா இல்லையான்னு தெரியல..”
“விஸ்வநாதன் சாரோட பொண்ணு நம்ம தேவி மேடமோட பையனை வேணாம்னு சொல்லிட்டாங்களாம்.. விஸ்வநாதன் சார் பொய் சொல்லி இருக்க மாட்டாரு…”
“அந்தப் பையன் பொம்பளைன்னு சொன்னா யோசிக்க வேண்டிய விஷயம்தான்.. கொஞ்சம் அதட்டிப் பேசினாக் கூட அழுதுருவான்பா என இன்னொருவர் கூறிச் சிரிக்க,
“இதுக்குத்தான் சொல்றது ஒரு ஆம்பள இருந்து வளக்குற மாதிரி பையன வளர்க்க முடியாதுன்னு… பொம்பள வளர்த்தா பொம்பள மாதிரிதானே அந்தப் பையனும் வளருவான்…”
என வழியில் மூவர் நின்று பேசிக் கொண்டிருக்க தேவியின் முகமோ வலியிலும் கோபத்திலும் சிவந்தது.
குருவோ அடுத்த நொடியே தன் அன்னையிடம் கூடக் கூறாது வேகமாக அந்த அலுவலகத்தை விட்டு வெளியேறியிருந்தான்.
எங்கேயாவது சென்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல இருந்தது.
அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது போக வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நேராக காரை எடுத்துக்கொண்டு யாரும் இல்லாத வீதியில் சென்று காரை நிறுத்தியவன் ஸ்டேரிங்கில் கவிழ்ந்து படுத்துக்கொண்டான்.
அவன் ஆண்மகன் அல்ல என்று அனைவருக்கும் தெரிந்து விட்டது.
‘இனி பார்க்கும் நேரம் எல்லாம் அவர்கள் தன்னை கேலி செய்வார்களே..!’ என எண்ணிக் கலங்கியவன் கிட்டத்தட்ட பத்து மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்கு செல்லாமல் அங்கேயே நின்றிருந்தான்.
இருள் சூழத் தொடங்கவும் தன்னுடைய அன்னையும் வேதனையில் இருப்பார் என்பதை உணர்ந்து தன் வலியை மறைத்துக் கொண்டு காரை செலுத்தத் தொடங்கியவன் வீதியில் ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு துடித்துக் கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றைக் கண்டதும் பதறி தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அதனை நோக்கி ஓடினான்.
பாவம் அந்த நாய்க்குட்டியின் உடல் முழுவதும் உதிரம் கசிந்திருக்க வலியில் துடித்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்து உள்ளம் உருகிப் போனவன் அந்த நாய்க்குட்டியைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு மிருக வைத்தியசாலையை நோக்கிச் செல்ல அவன் அங்கே செல்வதற்குள் அவனுடைய மடியிலேயே உயிரை விட்டிருந்தது அந்தச் சிறு நாய்க்குட்டி.
சுருக்கென இதயத்துக்குள் ஒரு வலி.
அந்தச் சிறு உயிரைக் காப்பாற்ற முடியவில்லையே என எண்ணிக் கலங்கியவன் அந்த நாய்க்குட்டியுடனேயே தங்களுடைய வீட்டிற்கு வந்து தோட்டத்திற்குள் அந்த நாய்க்குட்டியை புதைத்து விட்டு கை கால்களை வெளியே இருந்த நீர்க் குழாயில் அலம்பி விட்டு உள்ளே வந்தவன் களைப்போடு “அம்மா…” என அழைத்தான்.
எப்போதும் அவன் வரும்போது வரவேற்பறையில் இருந்து அவனை வரவேற்று உபசரிப்பவர் இன்று அந்த இடத்தில் இல்லாது போக அவனுக்கு புருவங்கள் சுருங்கின.
அவருடைய அறையில் இருப்பார் போலும் என எண்ணிக்கொண்டவன் தேவியின் அறையை நோக்கிச் சென்று கதவைத் திறக்க அங்கே கழுத்தில் கயிற்றைமாட்டி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் அவனுடைய உயிரிழந்த அன்னை.
“ம்ம்மாஆஆஆஆஆஆஆ ஐயோஓஓஓஓஓ அம்மாஆஆஆஆ..” என்று அலறினான் தேவியின் மகன்.
💜🔥💜
80 star ⭐ ratings வந்தால் இன்னைக்கு இன்னொரு எபிசோட் உண்டு..
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 154
No votes so far! Be the first to rate this post.
Post Views:1,479
2 thoughts on “59. நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”
Malar
Devi ma 😔😔😔
Vishwanath un ponnu nadanthu kitta vitham sariya apa
Atha ketka mattiya da domer thalaiya 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈
Devi ma 😔😔😔
Vishwanath un ponnu nadanthu kitta vitham sariya apa
Atha ketka mattiya da domer thalaiya 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈
Avasarapattu ippidi guruva thaniya vittuttu poiteengaley amma