நெருக்கம் – 60
தன் கண்முன்னே கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த உயிரற்ற தன்னுடைய அன்னையைக் கண்டு கதறித் துடித்தான் குருஷேத்திரன்.
ஏன் இப்படி..?
எதற்காக இந்த முடிவு..?
அவனால் நேர்ந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதுதான் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டாரோ..?
என்னைப் பற்றி கடுகளவு கூடவா சிந்திக்கவில்லை..?
என்னை அனாதையாகக் கதற விட்டு விட்டு அவர் மட்டும் நிம்மதியாக தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டது சரியா..?
தன்னுடைய அன்னையும் எனக்கு ஆண்மை இல்லை என நினைத்துத்தான் இந்த முடிவைத் தேடிக் கொண்டாரோ..?
என்னை அவர் கூடவே வைத்துக் கொண்டு அனைவரின் முன்பும் அவமானப்பட முடியாது என நினைத்தே தன்னை விட்டுச் சென்று விட்டாரோ..?
தந்தை இறந்த பின்பும் தனியாக தொழிலை நடத்தி தன்னைப் படித்து வளர்த்து விட்ட கௌரவப் பெண்மணி அல்லவா அவர்.
அந்தக் கௌரவப் பெண்மணிதான் அக்கணம் அவனுக்கு இடித்தது.
தன்னைவிட தன் கௌரவம் முக்கியம் என்றுதான் இந்த முடிவை எடுத்துவிட்டார் போலும்.
விம்மி வெடித்துக் கிளம்பியது அழுகை.
அந்த அறையே அதிரும் வண்ணம் கதறிக் கதறி அழுதான் அவன்.
“ஏ… ஏன்மா…? ஏன்…? நீங்களும் என்ன விட்டுட்டுப் போனீங்க..? நீங்க என்ன விட்டுட்டுப் போனா எனக்கு இங்க யாரும்மா இருக்கா..? இவ்வளவு நாளும் உயிரா நினைச்சு காதலிச்சவ வெறும் உடம்பு சுகம் கிடைக்கலைன்னு என்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி ஆம்பளையே இல்லைன்னு சொல்லி தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டா..
என்னோட உலகமே நீங்கதான்னு இருந்தேனே.. நீங்களும் என்ன அம்போன்னு விட்டுட்டுப் போனா நான் என்னம்மா செய்வேன்..? எனக்காக யாரும்மா இருக்கா.
ஏன்மா இப்படி பண்ணீங்க..? ஐயோ என்னால தாங்க முடியலையே… இதுக்கு என்னோட சோத்துல விஷத்தை வச்சு என்னை கொன்னுருக்கலாம்… நிம்மதியா செத்துப் போய் இருப்பேன்… இப்படி என்ன உயிரோடு கொன்னுட்டீங்களே…” எனக் கதறி அழுதவன் சட்டென தன்னுடைய அழுகையை நிறுத்தினான்.
“எப்ப பாத்தாலும் பொம்பள மாதிரி அழுதுகிட்டு ச்சை…” என தாரா திட்டிய வார்த்தைகள் அவனுடைய காதுகளில் மீண்டும் ஒலித்தன.
அதேபோல “அதட்டிப் பேசினா கூட அழுதுடுவான்.. அவன் எல்லாம் ஆம்பளையா..?” என இன்று அன்னையின் அலுவலகத்தில் பேசியவர்களின் குரலும் அவனுடைய காதுகளில் ஒலித்தன.
பொங்கி வந்த அழுகையை தனக்குள் விழுங்கிக் கொண்டான் அவன்.
மென்மையாக இருந்தால், நல்லதை சிந்தித்தால் உடைந்து போய் அழுதால் ஆண்மை இல்லை என்று விடுவார்களோ..?
அழக்கூடாது…
இனி நான் அழவே கூடாது..
அழ மாட்டேன் என உறுதியான முடிவை எடுத்தவனுக்கு தாயின் மரணம் ஆறாத ரணத்தைக் கொடுத்தது.
அனைத்து ரணங்களையும் தனக்குள் விழுங்கிக் கொண்டு இறுகிப் போனான் அவன்.
தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தன்னுடைய தாயின் உடலை கீழே இறக்கியவனுக்கு அன்னை இறந்ததைப் பற்றி யாரிடமும் சொல்லத் தோன்றவே இல்லை.
தன்னுடைய வலிகளைப் பகிர்ந்து கொள்வதற்கு இங்கே இருக்கும் யாரும் தகுதியானவர்கள் இல்லை என்ற முடிவுக்கு வந்தவன் தன்னுடைய அன்னையின் உடலை தன்னுடைய வீட்டுத் தோட்டத்திலேயே அடக்கம் செய்தான்.
காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் அன்னை இறந்த செய்தியை அறியப்படுத்தியவன் அதை அப்படியே தன்னுடைய பணத்தைப் பயன்படுத்தி வெளியே வராதபடி காரியத்தை முடித்தான்.
வீட்டை விட்டு வெளியே செல்வதையே மறந்தான்.
அவனுடன் பேச வந்தவர்களை இரும்பென இறுகிய குரலில் அதட்டிப் பேசி விரட்டி விட்டான்.
தன்னுடைய மென்மையை கடினப்பட்டு மறைத்துக் கொண்டான்.
வேலைக்காரர்கள் தொடக்கம் அவனை விசாரிக்க வந்த அலுவலக ஊழியர்கள் வரை அனைவரையும் தன்னுடைய நெருப்புப் பார்வையால் தள்ளி நிறுத்தினான்.
அவனுடைய மிரட்டலிலும் தீப் பார்வையிலும் அதிர்ந்து பயந்து கேலி பேசிச் சிரித்தவர்கள் எல்லாம் விலகி நிற்க அதையே தன்னுடைய ஆயுதமாக இறுகப் பிடித்துக் கொண்டான் குருஷேத்திரன்.
இந்த உலகில் இப்படி இருந்தால் மட்டும்தான் மரியாதை கிடைக்கும் என்பதை சில நாட்களில் புரிந்து கொண்டவன் அதன் பின்னர் மற்றவர்களின் முன்பு சிரிப்பதும் இல்லை. அழுவதும் இல்லை.
அன்னை எங்கே என கேட்டவர்களிடம் அவர் இந்தியாவிற்கு சென்று விட்டார் என முடித்துக் கொள்வான்.
அத்தனை தைரியமாக தந்தை இறந்த பின்பு தன்னை வளர்த்தவரை வாழத் தைரியமற்று தற்கொலை செய்து கொண்ட கோழையாக யாரிடமும் அறிமுகப்படுத்துவதற்கு அவன் விரும்பவே இல்லை.
அவனிடம் கொட்டிக் கிடந்த பணம் அவன் நினைத்ததை நடத்தி முடித்தது.
ஒவ்வொரு நாளும் தன்னை இரும்பாக மாற்றிக் கொண்டார்.
தெரிந்தவர் தெரியாதவர் என யாரைக் கண்டாலும் கவனத்திற் கொள்ளாது திமிராக நடந்து கொள்ள தன்னையே மாற்றிக் கொண்டான்.
பூஜை செய்வதை தவிர்த்தான் நெற்றியில் திலகம் வைப்பதை மறந்தான்.
தன் வாழ்க்கையில் இனி காதல் இல்லவே இல்லை என்ற முடிவை எடுத்தவன் தன்னுடைய அன்னை உருவாக்கிய தொழிலை வீழ்த்தி அவருடைய பங்கையும் எடுப்பதற்காக முயன்ற விஸ்வநாதனை அடித்தே விரட்டினான்.
கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்த தொழிலை முழுவதும் கற்று தன்னை தொழிலில் மூழ்கடித்துக் கொண்டவன் மன அமைதிக்காக ஓவியம் வரைய ஆரம்பித்தான்.
அடுத்து அவன் செய்ததெல்லாம் வெற்றிதான்.
நினைத்ததெல்லாம் சாதித்தான்.
தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான பணத்தை இன்னும் பல மடங்காக பெருக்கினான்.
ஆனால் அவனுக்குள் இருந்த நல்ல குருஷேத்திரன் மாண்டு போய் புதிதாக ஒரு அரக்கன் வெளியே வந்தான்.
அன்னை இறந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்பே தன்னுடைய நிலையைப் பற்றி அறிய வைத்தியரிடம் சென்றான்.
அங்கே அவனைப் பரிசோதித்த வைத்தியரோ அவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறி விட மேலும் அவனுடல் இறுகித்தான் போனது.
அவனுடைய மனநிலை மாற்றமும் பதற்றமான சூழ்நிலையும்தான் அன்று அவனால் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்பதை அவர் விளக்க புரிந்து கொண்டவன் அவர் கூறிய சில பரிந்துரைகளை பின்பற்றத் தொடங்கினான்.
வருடங்கள் கழிந்தன.
வாலிபப் பருவமும் கரைந்தது.
30 வயது தாண்டி 38 வயது வந்துவிட அவன் இன்னும் திருமணம் செய்யாததற்கான காரணம் அவனிடம் ஆண்மை இல்லை என்ற அதே பேச்சு தாராவால் மீண்டும் கசிந்து எழத் தொடங்கி விட அவற்றை முறியடித்து தான் ஆம்பளைதான் என நிரூபிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் அதன் பின்னர்தான் பெண்பார்க்கும் படலத்தை ஆரம்பித்தான்.
தேடித்தேடிப் பார்த்து அழகே உருவாக இருந்த அபர்ணாவை தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான்.
திருமணம் முடித்த முதல் நாளே எதுவும் செய்யாது விட்டால் எங்கே அவளும் தன்னிடம் ஆண்மை இல்லை என்று எண்ணி விடுவாளோ என்ற அச்சம் அவனை மதுவை நாட வைத்தது.
பழைய ரணங்கள் மறக்கும் வரை குடித்தவன் அன்றே அவளை மொத்தமாக ஆண்டு முடித்து இருந்தான்.
அதையே ஒவ்வொரு நாள் இரவும் தொடர் கதையாக மாற்றினான்.
இத்தனை வருடங்களாக ஆண்மை இல்லாதவன் பொம்பளை என அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்த ரணங்களைத் தரும் வார்த்தைகளை அவளோடு கூடும் நொடிகளில் மறந்து இன்பத்தை துய்த்தான்.
தன் வலிகளை மறக்கும் மருந்தாக அவளை மாற்றிக் கொண்டான்.
அனைத்தும் நன்றாகத்தான் போனது அவளை வைத்தியசாலை அழைத்துச் செல்லும் வரை.
அதன் பின்னர் அவளால் குழந்தை பெற்றுத் தர முடியாது என்றதும் மீண்டும் அவனுக்குள் ரணங்கள் கிளறத் தொடங்கின.
அதே வலியை மீண்டும் அனுபவிக்க வேண்டுமோ என மனதளவில் மிகவும் பயந்து போனான் குருஷேத்திரன்.
வெளியே தன்னை ஒரு மிருகமாக காட்டிக் கொள்ளும் அவனுக்குள் இருக்கும் மென்மையான இதயமோ அச்சத்தில் துவண்டு போனது.
அதன் விளைவு சற்றும் யோசிக்காது அபர்ணாவை வீட்டை விட்டு அனுப்பி விட்டு இன்னொரு திருமணத்தை செய்து கொள்ள முடிவெடுத்தான் அவன்.
அந்தோ பரிதாபம் அவனுடைய மனம் அபர்ணாவை மருந்தாக மட்டுமல்ல அவளைத் தன்னுடைய உலகமாக மாற்றிக் கொண்டதை அக்கணம் அறியாது போனான் அவன்.
அதன் பின்னர் அவன் காதலை உணர்ந்து அவளைக் கண்டுபிடிப்பதற்குள் பல மாதங்கள் கடந்து விட்டிருந்தன.
தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கூறி முடித்துவிட்டு அபர்ணாவின் முகத்தை வேதனையோடு பார்த்தான் குரு.
தாயின் நினைவில் அவனுடைய கரங்கள் நடுங்கின.
அவளுடைய விழிகளிலோ கண்ணீர் நிறைந்து கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.
பேச முடியாது திணறினாள் அபர்ணா.
வலியோடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் கன்னத்தில் மெல்ல தன்னுடைய ஒற்றைக் கரத்தை வருடுவது போல வைத்தவள் சில நொடிகள் அமைதியாக அழுதாள்.
தன்னவன் அனுபவித்த வேதனைகள் யாவும் அவளை நிலைகுலைய வைத்தன.
அவன் நடுங்கிய கரங்களால் அவளுடைய கண்ணீரை மெல்லத் துடைத்து விட்டான்.
சற்று நேரத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டவள்,
“உங்க நிலைமை எனக்குப் புரியுது… அந்த நிமிஷம் நீங்க எவ்வளவு வலிய அனுபவிச்சிருப்பீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது… ஏன் தெரியுமா..? ஏன்னா இப்போ அதே நிலைமைலதான் நான் இருக்கேன்..
தாரா உங்கள காதலிக்கவே இல்ல காதலிச்சிருந்தா செக்***** அவளுக்கு முக்கியமா தெரிஞ்சிருக்காது… நீங்க மட்டும் போதும்னு அவ உங்க கூடவே இருந்திருப்பா.. அவகிட்ட காதல் இல்லாததாலதான் உங்களை ஈஸியா தூக்கி எறிஞ்சிட்டு உங்க வாழ்க்கைய விட்டே போய்ட்டா…
நீங்களும் அதே மாதிரிதான் என் மேல உங்களுக்கு நிஜமான காதல் கிடையாது.. என் மேல் காதல் இருந்திருந்தா என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என்ன நீங்க அனுப்பி இருக்கவே மாட்டீங்க…. ஏன்னா உங்களுக்கு நான் மட்டும்தான் முக்கியமாக தெரிஞ்சிருப்பேன்..
தாரா உங்களுக்கு அநியாயம் பண்ணதுக்காக நீங்க எதுக்கு என்னோட வாழ்க்கையை நாசமாக்கினீங்க..? இதுல நான் எதுக்கு வீணா பலியாகினேன்..? நான் எதுவுமே பண்ணலையே… எந்தத் தப்புமே பண்ணலையே.. உங்க யாருக்கும் நான் துரோகமே பண்ணலையே… நீங்க என்னோட வாழ்க்கையை அழிச்சீங்க…. தாரா என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ட மாத்தி என்னோட சந்தோஷத்தை தொலையவச்சா… இப்பவும் சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒன்னுதான்..” என்றவளின் வார்த்தைகளில் விழிகளை இறுக மூடிக்கொண்டான் அவன்.
“உங்க கதையைக் கேட்டு எனக்கு அழுகையா வருது… உங்கள காதலிச்ச மனசு நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சி உள்ள துடியா துடிக்குது… உங்களை இறுக்கமாக ஹக் பண்ணி கவலைப்படாதீங்க உங்களுக்காக நான் இருக்கேன்னு சொல்லணும் போல தோணுது குரு.. ஆனா நான் சொல்ல மாட்டேன்.. என்னோட காதலுக்கு நீங்க கொஞ்சம் கூட தகுதியானவர் கிடையாது… இப்ப கூட உலகத்துக்கு காமிக்கிறதுக்கு ஒரு அழகான மனைவியும் நீங்க ஆம்பளைங்கறத நிரூபிக்கிறதுக்கு உங்களுக்கு ஒரு குழந்தையும் இருந்தா போதும்… அதுக்காகத்தானே என்னைக் கூட்டிட்டு வந்தீங்க…?” என அவள் விம்மலோடு கேட்க,
அவளை அடிபட்ட பார்வை பார்த்தான் அவன்.
இன்னுமா என்னுடைய காதல் உனக்குப் புரியவில்லை என்பதைப் போல அவனுடைய விழிகள் அவளிடம் இறைஞ்சின.
“இன்னொருத்திய காதலிச்சு அவ கூட ஒரே படுக்கைல ஒன்னா இருந்துட்டு என்கிட்ட எதுவுமே சொல்லாம என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கல்ல..? இது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா..?
சத்தியமா என்னால தாங்க முடியல குரு… நீங்க எப்படியோ தெரியாது… நான் உங்களை உயிருக்கு உயிரா நேசிச்சேன்… நீங்க இன்னொருத்தி கூட ஒனீனா இருக்க ட்ரை பண்ணீங்கன்னு தெரிஞ்சதுமே ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்…
நெஞ்செல்லாம் வலிக்குது குரு… என்னால தாங்கவே முடியல…. நீங்க சொன்னதெல்லாம் என்னால கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியல…
நீங்க என்னோட வாழ்க்கைல ஏன் வலியை மட்டும் எனக்கு கொடுத்துக்கிட்டே இருக்கீங்க..? அன்னைக்கு என்ன துரத்தி விட்டீங்க… இன்னைக்கு என்னால தாங்கவே முடியாத விஷயத்தை எல்லாம் சொல்லி என்ன அழ வைக்கிறீங்க… உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டத தவிர வேறு என்ன தப்பை நான் பண்ணிட்டேன்..? எ… என்னால தாங்க முடியலயே… ஐயோ…” என முகத்தை மூடிக்கொண்டு கதறியவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் அவன்.
அவள் கூறிய கோணத்தில் சிந்திக்க மறந்தவனுக்கு குற்ற உணர்ச்சியில் உள்ளம் குறுகுறுக்கத் தொடங்கியது.
💜
Interesting
Interesting sis