தாராவின் வீட்டில் இருந்து வரும்போது வேலை சம்பந்தமாக முக்கியமான அழைப்பு ஒன்று வந்திருந்ததால் அபர்ணாவை பத்திரமாக தன்னுடைய வீட்டில் விட்டவன் அவளைப் பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு தன்னுடைய ஆஃபீஸிற்குச் சென்றிருந்தான்.
சில நாட்களாக விடுபட்டிருந்த வேலைகள் அனைத்தும் இன்றே செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட வேக வேகமாக வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தவன் வீடு திரும்ப இரவு நெருங்கி இருந்தது.
காரில் சென்று கொண்டிருக்கும் போதே அவனுடைய இதழ்கள் காலையில் நடந்த விடயங்களை நினைத்து புன்னகையில் விரிந்தன.
அபர்ணா தனக்காகப் பேசியதும் தன்னை காதலிக்கிறேன் என்றதும் தன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என தாராவிடம் எச்சரித்ததும் அவனுடைய காதுகளில் ஒலித்து அவனை சிலிர்க்கச் செய்தன.
தன் மேல் உள்ள கோபம் எல்லாம் அவளுக்குக் குறைந்து விட்டது என்ற எண்ணமே இன்னும் அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்த இக்கணமே அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போல எழுந்த எண்ணத்தை அடக்கிக் கொண்டவன் காரை இன்னும் வேகமாகச் செலுத்தினான்.
அரை மணி நேரத்தில் வீட்டை வந்தடைந்தவன் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி அவனுடைய அறைக்குள் வர அவனுடைய அறையில் இருந்த சோபாவில் முதுகுக்கு தலையணையை வைத்து சாய்ந்து அமர்ந்தவாறு புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள் அபர்ணா.
அவன் வந்த வேகத்தில் ஒரு கணம் படிப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் அமைதியாக புத்தகத்தைப் பார்க்கத் தொடங்க,
அவனோ “அபிம்மா சாரிடி இப்போதான் வேலை முடிஞ்சுது.. நீ ஓகே தானே..?” என அவள் அருகே வந்து அவளுடைய தலைமுடியைக் கோதிவிட்டவாறு கேட்டான்.
அவனுடைய கரத்தை வேகமாகத் தட்டிவிட்டவள் “நான் ஓகேதான்..” என தன்னுடைய பதிலை முடித்து இருந்தாள்.
அவள் தன்னுடைய ஸ்பரிசத்தை ஒதுக்கி விட்டதும் அவனுக்கு முகம் வாடிப்போனது.
நிதானமாக தன்னுடைய புத்தகத்தை மூடி வைத்தவள் “எஸ்..” என்றாள்.
பெரிய வயிற்றோடு அமர்ந்திருந்தவளுக்கு சட்டென எழுந்து கொள்ள முடியாது போக அவளுடைய கரத்தைப் பற்றி அவள் எழுவதற்கு உதவி செய்தான் குரு.
சோபாவின் அருகே இருந்த சிறிய பையை எடுத்துக் கொண்டவள் “நான் சொன்னத பண்ணிட்டேன்… இப்ப நான் என் வீட்டுக்கு போகலாம்ல..?” எனக் கேட்க அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது.
‘மீண்டும் ஒரு பிரிவா..?
ஐயோ நான் செத்தே போய் விடுவேன்’ என தன் மனதிற்குள் நினைத்துப் பதறியவன்
“என்னடி சொல்ற..? எனக்குப் புரியல..” என புரியாத குரலில் கேட்டான்.
“நீங்க ஆசைப்பட்டதை செஞ்சு முடிச்சிட்டேன்.. நீங்க ஆம்பளைன்னு நிரூபிக்கிறதுக்காகத்தானே அவ்வளவு கஷ்டப்பட்டு என்னை கர்ப்பம் ஆக்குனுங்க… இதோ யாருக்கு நீங்க நிரூபிக்கணும்னு நினைச்சீங்களோ அவ முன்னாடியே வந்து நீங்க ஆம்பளதான்… இது உங்க குழந்தை தான்னு சொல்லிட்டேன்… இப்போ சந்தோஷமா..? நீங்க நினைச்சது நடந்துருச்சா..?” எனக் கேட்டவள் அந்த சிறிய பையைத் தன் கரத்தில் எடுத்துக் கொண்டாள்.
“இதுல என்னோட காலேஜ் சம்பந்தப்பட்ட சர்டிபிகேட்ஸ் இருக்கு.. இதை மட்டும் எடுத்துக்கிறேன் குரு… சரி இதுக்கு மேல உங்க கிட்ட பேசுறதுக்கு எனக்கு எதுவும் கிடையாது.. நான் எங்க வீட்டுக்கு கிளம்புறேன்..” என்றவள் தன்னுடைய ஒற்றைக் கரத்தைத் தன் வயிற்றில் வைத்தவாறு மற்றைய கரத்தில் சிறிய பையுடன் அந்த அறையை விட்டு வெளியேறத் தொடங்கி விட பதறிவிட்டான் அவன்.
“ஏய்.. எ.. என்ன அபி இது..? எ.. என்ன விட்டுப் போகாதடி..”
“இதுக்கு மேல என்னால உங்களுக்கு எந்த உபயோகமும் கிடையாது குரு… நீங்க ஆசைப்பட்டதை உங்களோட முன்னாள் காதலிக்கு முன்னுக்கு நிரூபிச்சாச்சு.. இதுக்கப்புறம் நான் எதுக்கு..? இல்ல இன்னும் வேற யாருக்காவது ப்ரூஃப் பண்ணனும்னு ஆசைப்படுறீங்களா..? சொல்லுங்க… அவங்ககிட்டயும் வந்து சொல்லிடுறேன்..” என உணர்வுகள் தொலைத்த குரலில் அவள் கூற வேகமாக அவளை நெருங்கி வந்து அவளுடைய தோள்களை அழுத்தமாகப் பற்றித் தன் முகத்தை பார்க்கச் செய்தவன்,
“போதும் அபி… நான் கேட்டனா. தாராகிட்ட வந்து இப்படி எல்லாம் பேசு அப்படின்னு நான் கேட்டனா..? நீ தானடி கேட்ட.. அதனாலதானே உன்னை அவகிட்ட கூட்டிட்டுப் போனேன்…
இப்பவும் சொல்றேன் அபி… எனக்கு யாருக்கும் எதையும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல… முன்னாடி நான் அப்படி நினைச்சது உண்மைதான்.. ஆனா இப்போ என்னோட மனசுல அந்த எண்ணமே இல்லடி.. நான் உன்ன மறுபடியும் கூட்டிட்டு வந்தது குழந்தைக்காகவோ ஊருக்காகவோ அவளுக்காகவோ இல்ல… எனக்காக.. எனக்காக மட்டும்தான் உன்னை மறுபடியும் கூட்டிட்டு வந்தேன்…
ஏன்னா என்னோட மனசு முழுக்க நீ மட்டும் தான் அபி இருக்க… என்னால உன்னைத் தவிர வேறு எதையும் நினைச்சுக் கூடப் பாக்க முடியல.. நீ இல்லாத இந்த ஒன்பது மாசமும் நான் தவிச்ச தவிப்பும் துடித்த துடிப்பும் வார்த்தைகளால சொல்ல முடியாது.. மறுபடியும் என்னத் தண்டிச்சிட்டு போயிடாத..”
“தண்டிக்கிறேனா..? நான் எப்போ உங்களைத் தண்டிச்சேன்..? நான் உங்களுக்கு இதுவரைக்கும் எந்த அநியாயமும் பண்ணவே இல்லையே… இப்ப வரைக்கும் உங்க மனசு நோக நான் பேசுனது கிடையாது…
நானும்தான் உங்களை காதலிக்கிறேன்.. இப்பவும் அதே காதல் இருக்கு.. என்ன பொறுத்த வரைக்கும் காதல் வந்தா வந்ததுதான்… ஒருத்தங்க எவ்வளவு காயப்படுத்தினாலும் கூட அதே காதல் மனசுல இருக்கத்தான் செய்யும்… உங்க மேல இருந்த காதல் அப்படியேதான் இருக்கு.. ஆனா அதுக்கு உணர்வுகள கொடுக்க நான் விரும்பல.
உங்கள காயப்படுத்தாம கஷ்டப்படுத்தாம வாழனும்னு நினைக்கிறேன்… நான் எங்க அம்மா கூட இருக்கிறதுதான் நல்லது.. என்ன மறந்துடுங்க..
குழந்தையை பாக்கணும்னா வந்து பாருங்க… குழந்தை வளர்ந்ததுக்கு அப்புறமா கொஞ்ச நாள் உங்க கூட வெச்சி இருக்கிறதுன்னாலும் நான் கொடுப்பேன்… ஆனா நானும் நீங்களும் மறுபடியும் சேர்ந்து வாழ்றது நடக்காது..” உறுதியாக தன்னுடைய முடிவை கூறினாள் அவள்.
“ஏன் ஏன் நடக்காது..? அதெல்லாம் நடக்கும்… நானும் உன்ன லவ் பண்றேன்.. நீயும் என்ன காதலிக்கிற.. அப்புறம் என்னடி.? ஏன் இந்த முடிவு..? எதுக்காக என்ன அவாய்ட் பண்ணிட்டு போகணும்னு நினைக்கிற..? நான் பண்ணதெல்லாம் தப்புதான் இல்லைன்னு நான் சொல்லவே இல்லையே. கூடவே இருந்து தண்டனை கொடு… என்னத் திட்டு அடிச்சுக்கோ… என்ன வேணாலும் பண்ணு.. ஆனா என் கூடவே இரு..” இறைஞ்சினான் அவன்.
“சாரி குரு… எனக்கு யாரையும் கஷ்டப்படுத்தறதுல விருப்பம் இல்ல… பழிவாங்குறதுல அப்படி என்ன சந்தோஷம் கிடைச்சிடப் போதுன்னு நினைக்கிறீங்க..? நீங்க கஷ்டப்பட்டா நானும் தான் கஷ்டப்படுவேன். நடந்து முடிஞ்சதெல்லாம் நீங்க சொல்லும் போது உங்களுக்காக எவ்வளவு வருத்தப்பட்டேன்னு தெரியுமா..? நீங்க எனக்கு பண்ண அநியாயத்தை எல்லாம் மறந்து உங்களை ஹக் பண்ணி ஆறுதல் சொல்லும் வரைக்கும் நான் நானாகவே இல்ல…
என்னால முடியல… நான் ரொம்ப பலவீனமானவ.. பாசம் வச்சுட்டா அவங்கள என்னால காயப்படுத்த முடியாது… அப்படியே அவங்க காயப்பட்டாலும் அந்த வலி எனக்குத்தான் அதிகமா இருக்கும்… இப்பவும் நீங்க நல்லா சந்தோஷமா இருக்கணும்னுதான் நினைக்கிறேன்…” என்றாள் அவள்.
“ஐயோ…. நீ இல்லாம நான் எப்படி சந்தோஷமா இருப்பேன்..? என்னோட மொத்த சந்தோஷமும் இப்போ நீ மட்டும் தான் அபி..”
“ஆனா எனக்கு என்னோட மன நிம்மதியும் முக்கியம் தானே குரு.. ஒவ்வொரு தடவையும் உங்களோட முன்னாள் காதலிக்கு ப்ருஃப் பண்றதுக்காக என்கிட்ட வந்து ஒன்னா இருந்தீங்கன்னு நினைக்கும் போதெல்லாம் வலிக்குது..
என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு ரிப்போர்ட் வந்ததும் அவளுக்கு நிரூபிக்கறதுக்காக என்ன வீட்டை விட்டு துரத்திட்டு இன்னொரு கல்யாணத்துக்கு ரெடியா இருந்தீங்க.. அத நினைக்கும் போதெல்லாம் செத்து செத்துப் பிழைக்கிறேன் குரு…
இத்தனை மாசமா நான் தனியா இருந்து எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கேன்… எத்தனை வேதனைப்பட்டு இருப்பேன்..? ஒவ்வொரு நாள் இரவும் உங்களுக்கு ஏன் என் மேல காதல் வரலைன்னு எவ்வளவு தவிச்சிருப்பேன்… எனக்கு நீங்க பண்ணதெல்லாம் அநியாயம் குரு..
இப்போ உங்களுக்கு நிஜமாகவே என் மேல காதல் வந்திருந்தாலும் அந்தக் காதல ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் மறந்து வாழுற நிலைமைல நான் இல்லை.” என மென்மையாக ஆர்ப்பாட்டம் இல்லாத குரல் எடுத்துக் கூறினாள் அபர்ணா.
அந்த மென்மையான குரலுக்கு உடலை உலுக்கும் சக்தி இருக்கிறது என்பதை அக்கணம் உணர்ந்து கொண்டான் அவன்.
அவள் கோபப்பட்டு கத்தினாலோ திட்டினாலோ அடித்தாலோ கூட வாங்கிவிட்டு அமைதியாக இருந்துவிடலாம் ஆனால் எந்தவிதமான கோபதாபமும் இன்றி மென்மையாக பேசுபவளை என்ன செய்வது..?
ஆத்திரக்காரனுக்குத்தான் புத்தி மட்டு என்பர்.
ஆனால் இவ்வளவு நிதானமாக தன்னுடைய கருத்துக்களை முன் வைப்பவளிடம் பேச முடியாது திகைத்துப் போய் நின்றிருந்தான் அவன்.
“அபி….”
“வேணாம் குரு.. ப்ளீஸ்..”
தவித்துப் போனான் அவன்.
‘நான் ஆம்பளைன்னு நிரூபிக்கறதுக்காகத் தானே இதெல்லாம் பண்ணினேன்னு கோபப்படுற..? நான் வேணும்னா நான் ஆம்பளையே இல்லைன்னு நியூஸ்ல லைவ்வா சொல்லிடவா..
எனக்கு என்னப் பத்தி யாரும் கேவலமா பேசினாலும் யார் என்ன நினைச்சாலும் இப்போ கவலையே இல்லை.. எனக்கு நீ மட்டும் போதும் அபி.. சொல்லு நான் அப்படிப் பண்ணவா..?”
“அப்படி செஞ்சா நீங்க பண்ணதெல்லாம் இல்லைன்னு ஆயிடுமா..? என்னோட வலி எல்லாம் காணாம போயிடும்னா தாராளமா பண்ணுங்க..” என்றாள் அவள்.
மீண்டும் பேச முடியாது திணறிப் போனான் அவன்.
இதற்குத்தான் ஒரு காரியத்தை செய்வதற்கு முதல் ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும் என பெரியவர்கள் கூறுகின்றார்களோ..?
ஒரு தவறை செய்துவிட்டு அவன் எத்தனை துடிக்கின்றான்.
இப்போது திருந்தியும் கூட தன்னை நியாயப்படுத்த முடியாது கையாலாகாத நிலையில் அல்லவா நிற்கின்றான்.
என்ன செய்து அவளைத் தேற்றுவது..?
தலை வலிப்பது போல இருக்க தன் தலையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு தாங்க முடியாத வலியோடு விழிகளை மூடிக்கொண்டான் குரு.
விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து விடும் போல இருந்தது அவனுக்கு.
அவன் தாங்கொண்ணாத வலியோடு தலையைப் பற்றிக் கொண்டதும் பதறியவள் அவனை நெருங்கி,
“என்னாச்சு தைலம் எடுத்துத் தரட்டுமா..?” எனக் கேட்டவாறு அவனுடைய தலையை ஒற்றைக் கையால் அவள் வருட அவ்வளவுதான் அந்த அன்பில் மொத்தமாக உடைந்து போனவன் அவளை இழுத்து இறுக்கமாக அணைக்க முயன்று பின் அவளுடைய மேடிட்ட வயிறு தடுக்கவும் அவளின் பின்புறம் சென்று தன் உடலோடு இறுகணைத்து அவளுடைய கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
“செத்துடணும் போல இருக்குடி… ஆனா எங்க அம்மா தற்கொலை பண்ணிட்டு என்ன அநாதையா விட்டுப் போன மாதிரி நானும் என்னோட குழந்தையும் உன்னையும் விட்டுட்டுப் போக மாட்டேன்…
வேதாளம் மாதிரி மறுபடியும் மறுபடியும் உன்கிட்ட வந்து நிற்பேன் அபி… என்னோட முயற்சியை கைவிடவே மாட்டேன்… உன்னையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..” என்றவனை விட்டு அவள் விலக அவனோ அவளை விடாது அவளுடைய கன்னங்களைத் தாங்கிக் கொண்டவன் அளவற்ற காதலோடு அவளுடைய கன்னத்தில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.