64 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥

4.8
(123)

நெருக்கம் – 64

ஒரு நொடி அவனுடைய முத்தத்தில் அமைதியாக நின்றவள் பெருமூச்சோடு அவனை விட்டு விலகி தலைவலி தைலத்தை எடுத்து வந்து அவனிடம் கொடுக்க “என்னோட மொத்த வலிக்கும் ஒரே மருந்துதான்… அது நீ மட்டும் தான்..” என அவன் கூற அவளோ சட்டென சிரித்து விட்டாள்.

“அப்படியே பழம் மாதிரி பேசுறீங்க..” என அவள் சிரித்தவாறு கூற அவனுக்கோ அந்த சிரிப்பில் தலை சுற்றிப் போனது.

கனிந்த மாதுளம் பழம் வெடித்து உள்ளே அதன் முத்துக்கள் தெரிவது போல அவளுடைய சிவந்த இதழ்கள் வெடித்து உள்ளே வெண்ணிற பற்கள் தெரியும் அழகை இமை சிமிட்டாமல் ரசித்தான் அவன்.

காதல் வந்தால் பித்தம் கூடிவிடும் போலும்.

மெல்ல தன்னுடைய ஒற்றை விரலை அவளை நோக்கி நீட்டியவன் விரிந்த அவளுடைய செவ்விதழ்களை அழுத்தமாய் வருடிவிட சட்டென விலகி நின்றாள் அவள்.

“உங்க கூட பேசிப்பேசியே டயர்ட் ஆயிட்டேன்… நைட் ரொம்ப நேரம் ஆகுறதுக்கு முன்னாடி நான் கிளம்பனும்…” என்றாள் அவள்.

“ஒரே ஒரு தடவை மன்னிச்சா என்னடி குறைஞ்சா போயிருவ..?”

“எனக்கு உங்க மேல கோபமே கிடையாது.. கோபம் இருந்தா தானே மன்னிக்கணும்..? என்னோட வலிகள என்னால மறக்க முடியல அவ்வளவுதான்..”

வெளியே மழையோ சோவென பெய்யத் தொடங்க,

அவனோ அவளுடைய கரத்தைப் பிடித்து “என் கூட வா…” எனக் கூறி பல்கனிக்கு அழைத்துச் செல்ல அவனுடன் மெல்ல மெல்ல நடந்து சென்று பல்கனிக்கு வந்தவள் கொட்டும் மழையை ரசித்துப் பார்த்தாள்‌

அவளின் பின்னால் நெருங்கி நின்று அவளுடைய மேடிட்ட வயிற்றின் மீது தன் கரத்தைப் பாதுகாப்பு கவசம் போல மெல்ல வைத்தவன்,

“டேய் கண்ணா உங்க அம்மாகிட்ட சொல்லுடா… அப்பா ஏதோ யோசிக்காம தப்பு பண்ணிட்டாரு… இனிமே அப்படி பண்ண மாட்டாரு… அப்பாவ மன்னிச்சு ஏத்துக்க சொல்லி உங்க அம்மா கிட்ட சொல்லு..” என்றான் குரு.

“உங்க அப்பா என்ன சின்னப் பையனா..? யோசிக்காம தப்பு பண்றதுக்கு..? அரைக்கிழவன் வயசாகுது.‌. அப்படியெல்லாம் ஏத்துக்க முடியாதுன்னு உங்க அப்பாகிட்ட நீயே சொல்லிடுடா பட்டுப் பையா..”

“வாட்..? அரைக்கிழவனா..? நான் உனக்கு அரைக்கிழவனா..?” எனத் தன் கையணைப்பில் நின்றவளின் முகத்தைப் பார்க்கச் சொல்லி அவளைத் தன் புறம் திருப்பியவன் “என்ன பாத்தா அரைக்கிழவன் மாதிரியா தெரியுது..?” என அவன் கேட்க அப்போதுதான் உளறி விட்டோம் என்பதை புரிந்து தன்னுடைய நாக்கை மடித்து கடித்துக் கொண்டவள்,

“பின்ன இல்லையா..? 38 வயசாச்சுன்னா அரைக்கிழவன்தானே இன்னும் ரெண்டு வருஷத்துல 40 வயசு ஆகப் போகுது… கன்ஃபார்ம் நீங்க அரைக் கிழவன்தான்…” என அவள் கூற

“அட போடி இப்பவும் கெத்தா அழகா யங்கா இருக்க என்னப் பார்த்து அரைக்கிழவன்னு சொல்றதெல்லாம் டூ மச்..” என்றவன் அப்படியே பேசிப் பேசி மெல்ல மெல்ல அவளுடைய மனநிலையை மாற்ற முயன்று கொண்டிருந்தான்.

“கல்யாணம் பண்ண புதுசுல எல்லாம் மனசுக்குள்ள உங்களை அரைக்கிழவன்னு சொல்லித்தான் திட்டுவேன் தெரியுமா..? ரொம்ப ஜாலியா இருக்கும்..” என சிரித்தவாறு கூறினாள் அபர்ணா.

அந்தக் கபடமற்ற அழகிய சிரிப்பில் அவனுக்கு உள்ளே வலி எடுத்தது.

அவன் அவளைத் திருமணம் செய்த போது துருதுருவென சிரிப்போடு துள்ளித் திரியும் கல்லூரிப் பெண்ணாக மகிழ்ச்சியை மட்டுமே தத்தெடுத்து தன்னுடன் வைத்திருப்பவளாக அல்லவா இருந்தாள்..?

தன் கையில் வந்து சேர்ந்ததும் தான் அவளுக்கு கண்ணீர் பரிசாகக் கிடைத்துவிட்டது போலும் என எண்ணிக் கலங்கினான் அவன்.

“அம்மாவும் என் கூட கோபமா இருக்கா… நீயும் என் கூட கோபமாதான் இருக்கியா கண்ணா..? அதனாலதான் அப்பா கையில உதைக்கவே மாட்டேங்குறியா…?” என ஏக்கத்தோடு அவன் கேட்ட கணம் அவனுடைய கரத்திலேயே வயிற்றுக்குளா சமர்த்தாக இருந்த குழந்தை எட்டி உதைக்க அவ்வளவுதான் பூரித்துப் போனான் குரு.

“ஹேஏஏஏஏஏ அபி…. குழந்தை உதைச்சான்டி… இதோ மறுபடியும் உதைக்கிறான்…. மறுபடி உதைக்கிறான்…. ஹேய் நீ ஃபீல் பண்றியா..? ஓ மை காட் என்னால நம்பவே முடியல… இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் இத ஃபீல் பண்றேன் அபி…” என்றவனுக்கு விழிகள் கலங்கி குரல் அடைத்துப் போனது.

அவளும் அதை உணர்ந்தது போல அமைதியாக விழி மூடி நின்றாள்

“என் பையனுக்கு என் மேல கோபமே இல்லை.. அதைத்தான் நல்லா உதைச்சு எனக்கு புரியும்படி சொல்றான்..” என கரகரப்பான குரலில் அவன் கூற அவளுக்கோ அந்த நொடி சற்றே நெகிழ்ச்சியாக இருந்தது.

சற்று நேரம் குழந்தையின் அசைவை உணர்ந்தவாறு விழி மூடி அப்படியே நின்றான் குரு.

குழந்தைக்கும் அவனுக்கும் இடையேயான நெருக்கத்தை குழப்ப விரும்பாதவள் அப்படியே அமைதியாக நின்றாள்.

சற்று நேரத்தில் மழையின் சாரல் மெல்ல அவர்களின் மீதும் தெறிக்க “மழைல நனையாத அபி உள்ள வா..” என்றவன் அவளை அழைக்க அவளுக்கோ சுரீர் என்ற வலி வயிற்றுக்குள் எழுந்தது.

எழுந்த வேகத்திலேயே அது அடங்கி விட அச்சத்தோடு அவனுடைய கரத்தை இறுகப் பற்றிக் கொண்டவள் திகைத்துப் போனாள்.

அவள் தன் கரத்தைப் பற்றியதும் என்னவோ ஏதோ எனப் பதறிப் போனவன்

“என்னாச்சு அபி..? ஏதாவது பண்ணுதா..? நீ ஓகே தானே..?” எனப் பதறிப் போய் கேட்க,

“யா ஐ.. ஐ அம் ஓகே..” என மெல்ல முனகினாள் அவள்.

“சரிம்மா வா நீ படுத்துக்கோ..” என அவன் அழைக்க,

“ப்ச்… நான்தான் உங்ககிட்ட ஆல்ரெடி சொல்லிட்டேனே.. நான் எங்க வீட்டுக்குப் போகணும்… ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க..?” என்றவள் அவனுடைய கரத்தை தட்டி விட்டு பல்கனியில் இருந்து வெளியேற முயன்ற கணம் மீண்டும் அவளுக்கு சுரீர் என்ற வலி அடி வயிற்றில் இருந்து தோன்ற அவளுடைய கால்களோ நடக்க முடியாமல் தடுமாறத் தொடங்கின.

“ம்மாஆஆஆ..” என தனக்குள் மெல்ல முனங்கிக் கொண்டவள் அப்படியே நின்றுவிட இவனுக்கோ அச்சம் பிறந்தது.

“ஹேய் அபிஇஇ.. என்னடி வலி வந்துருச்சா..?” எனப் பதறிப் போய் அவள் அருகே வந்தவன் விழிகளை மூடியவாறு நின்றவளின் கரங்களைப் பிடித்து,

“என்ன பண்ணுது அபிம்மா..? ஹாஸ்பிடல் போகலாமா..?” எனக் கேட்க,

“ஸ்ஸ்… டெலிவரிக்கு இன்னும் டைம் இருக்குங்க.. பத்து நாள் இருக்கு.. இது சாதாரண வலிதான் போல..” என்றாள் அவள்.

“வாட் சாதாரண வலியா..? ஓ மை காட் அப்போ உனக்கு வலிச்சுதா..? என்கிட்ட சொல்லவே இல்ல… ஹாஸ்பிடல் போகலாம்மா.. ரிஸ்க் எடுக்க முடியாது…” என அவன் அவளைத் தூக்க முயன்ற கணம்,

“ஐயோ நான்தான் சொல்றேன்ல டெலிவரிக்கு இன்னும் டைம் இருக்கு…” என்றவள் அதைகா கூறி முடிப்பதற்கு முன்னரே அடுத்த வலியில் அலறிவிட அந்த அலறலில் துடித்துப் பதறியவன் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

“கண்ணம்மா கொ… கொஞ்சம் பொறுத்துக்கோடா…” என அவளை அணைத்துப் பிடித்து சமாதானம் செய்தவனுக்கு இதயம் பலமாகத் துடிக்கத் தொடங்கியது.

வலி அடங்கி அவள் அலறியதை நிறுத்தியதும் இவனுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து விட்டிருந்தது‌.

அதன் பின்னர் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாது தன் ஃபோனை எடுத்து அபியின் வீட்டிற்குத் தகவலை தெரிவித்து விட்டு அவளை வேகமாக தூக்கியவன் தன்னுடைய காரை நோக்கி விரைந்து சென்றான்.

“ப.. பயமா இருக்குங்க.. வ.. வலிக்குமா..?” என அபி பயந்து போனவளாய் கேட்க இவனுக்கோ தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது.

இப்போது வலிக்கும் எனக் கூறுவதா..?

வலிக்காது எனக் கூறுவதா திணறினான் அவன்.

பிள்ளை பேறு வலி என்பது ஒன்றும் சாதாரண விடயம் அல்லவே.

“பயப்படாத அபி உன் கூட நான் இருப்பேன்.. நீ நம்ம பையன் நம்ம கிட்ட வரப்போறான்னு மட்டும் மனசுல நினைச்சுக்கோ… வேற எதைப்பத்தியும் நினைச்சு டென்ஷனாகாத கண்ணம்மா… எல்லாம் நல்லபடியா நடக்கும்..” என்றவன் காரை மின்னல் விரைவில் செலுத்த சற்று நேரம் விழி மூடி சாய்ந்து அமர்ந்திருந்தவள் அடுத்த வலியில் இன்னும் சத்தமாக அலற இவனுக்கோ கத்தியை எடுத்து தன் உடலில் சொருகியதைப் போலத்தான் வலித்தது.

அவள் அனுபவிக்கும் வலிகளை கடவுள் தனக்குக் கொடுத்தால் கூட மிகவும் சந்தோஷமாக வாங்கிக் கொள்வானே,

அவனவள் துடிப்பதை காண முடியாது இறுகிப்போனவன் சற்று நேரத்தில் வைத்தியசாலையை அடைந்து அவளை உள்ளே தூக்கிச் செல்ல அடுத்தடுத்த வேலைகள் வைத்தியர்களாலும் தாதிகளாலும் வெகு சீக்கிரத்தில் முன்னெடுக்கப்பட்டன.

அவர்கள் வைத்தியசாலையை வந்தடைந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் அடித்துப் பிடித்து அங்கே வந்து சேர்ந்தது அபர்ணாவின் குடும்பம்.

வெளியே தனியே நின்று தவித்துக் கொண்டிருந்தவன் அபர்ணாவின் குடும்பம் வந்ததும் வேகமாக அவர்களை நெருங்கிச் சென்று பின் தயங்கி ரகுநாத்தை நெருங்கியவன்,

“எ… எதுவும் ஆகாதுல்ல அங்கிள்..? என..க்கு பயமா இருக்கு.. ஐ கான்ட் கன்ட்ரோல் மை செல்ப்…” எனக் கண்ணீரோடு கூற அவருக்கோ உள்ளம் உருகிப் போனது.

அவ்வளவு நேரமும் தன் மகளை எண்ணி பதைப்பதைபோடு நின்ற பத்மாவோ குரு கேட்ட கேள்வியில் மனம் இறங்கினார்.

“ஒன்னும் ஆகாது தம்பி.. பயப்படாதீங்க… உங்க பையனும் என்னோட பொண்ணும் ரொம்ப நல்லா இருப்பாங்க..” என்றார் அவர்.

“ப்ளீஸ்மா ப்ரே பண்ணிக்கோங்க..” என அவரிடம் கூறியவன் தானும் விழிகளை மூடி தான் வணங்காது விட்ட கடவுள்களை எல்லாம் மீண்டும் அழைத்து தன் மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் வேண்டுதலை வைத்தான்.

சற்று நேரத்தில் அனைவரையும் பதைபதைக்க வைத்து விட்டு அழுகையோடு இந்த உலகத்தை வந்து சேர்ந்திருந்தான் குருஷேத்திரனின் மகன்.

அப்பப்பா அதற்குள் எத்தனை அவதிப்பட்டு விட்டான் குரு.

தாதியோ குழந்தையை சுத்தப்படுத்திவிட்டு அபர்ணாவின் அருகே குழந்தையை படுக்க வைக்க வேகமாக உள்ளே நுழைந்து தாயையும் குழந்தையையும் கண்டவனுக்கு உடலின் நடுக்கம் இன்னும் அதிகரித்துத்தான் போனது.

முதலில் தன்னவள் நலமாக இருக்கிறாளா என விழிகளால் வேகமாக ஆராய்ந்தவன் சோர்வுடன் படுத்திருந்தவளைப் பார்த்து கலங்கி விட்டான்.

“ரொம்ப வலிச்சுதா பேபி, இப்போ நீ ஓகே தானே..? இப்பவும் வலிக்குதா..?” என அவன் கேட்க இல்லை என்றாள் அவள்.

ஏற்கனவே கலங்கிப் போய் நிற்பவனை இன்னும் கலவரப்படுத்த விரும்பவில்லை அபர்ணா.

படுக்கையில் படுத்திருந்தவளை மெல்லக் குனிந்து தன்னோடு வாரி அணைத்துக் கொண்டவன் அவளுடைய நெற்றியிலும் கன்னத்திலும் முத்தம் பதித்துவிட்டு “நா.. நான் ரொம்ப பயந்துட்டேன்டி…” என்க, அவளுடைய விழிகளோ அவனுடைய விழிகளைத்தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.

அதன் பின்னரே தன்னுடைய குழந்தையைப் பார்த்தான் குரு.

அப்படியே அவனை உரித்து வைத்தாற் போல பிறந்திருக்கும் மகனைக் கண்டு உள்ளமும் உடலும் சிலிர்த்து அடங்கியது.

“அ.. அபி நம்ம பையன்டி நம்ம பையன்..” என்றவனின் குரல் தழுதழுத்தது .

குழந்தையை தூக்க முயன்று பின் அஞ்சி அவளுடைய முகத்தைப் பார்த்தவன்,

“எனக்கு எப்படிக் குழந்தையை தூக்கணும்னு தெரியாதே..” எனதீ தவிக்க,

அவளோ “அம்மா…” என வாயிலில் நின்ற தன்னுடைய அன்னையை உள்ளே அழைத்தாள்.

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக வந்து குழந்தையைப் பார்த்த பின்பு தன்னுடைய அன்னையிடம் “ம்மா குழந்தைய எப்படித் தூக்கணும்னு அவருக்கு சொல்லிக் கொடுங்க… அவரோட கைல குழந்தையை குடும்மா..” என அவள் கூற பத்மாவோ எப்படி என்பது போல தான் வைத்திருந்து காட்டியவர் அதன் பின்னர் அவனுடைய கரத்தில் குழந்தையைக் கொடுக்க குழந்தையை ஏந்திய மறுகணமே தான் புதிதாக பிறந்ததைப் போல உணர்ந்தான் அவன்.

வார்த்தைகளால் வடிக்க முடியாத உணர்வு அது.

உடல் முழுவதும் புல்லரித்தது.

அளவற்ற பாசத்தை தேக்கி மூச்சடக்கி மெல்ல முத்தமிட்டவனுக்கு விழிகள் சிவந்து கலங்கின.

சாதனாவோ ஆசையாக குழந்தையை வாங்கி முத்தமிட்டு திருப்தி கொண்டவள் மீண்டும் குருவின் கரத்திலேயே குழந்தையைக் கொடுக்க தனி உலகத்துக்குள் தன் குழந்தையோடு நுழைந்து கொண்டான் அவன்.

உள்ளே வந்த தாதியோ “குழந்தைக்கு பால் கொடுங்க…” எனக் கூற சாதனாவும் ரகுநாத்தும் வெளியே சென்றனர்.

பத்மாவோ அபியின் ஆடையை நெகிழ்த்த குருவின் முன்பு தன்னுடைய ஆடையை நெகிழ்த்தும் தன் அன்னையை எப்படி நிறுத்துவது எனத் தெரியாது தடுமாறினாள் அவள்.

அவனுக்கும் அதே தடுமாற்றம்தான்.

வெளியே செல்லலாம் என்றால் அவனுடைய கரத்தில் அல்லவா குழந்தை இருக்கிறது.

குழந்தையை கொடுத்து விட்டு சென்றால் ஏதேனும் தவறாக நினைத்து விடுவார்களோ என எண்ணியவன் அவளைப் பாராது தன்னுடைய மொத்த பார்வையையும் குழந்தை மீது மட்டுமே செலுத்தினான்.

“தம்பி குழந்தையைக் கொடுங்க..” என பத்மாவோ அவனிடமிருந்து குழந்தையை வாங்கியவர் அபியின் மடியில் படுக்க வைத்து குழந்தை பால் குடிப்பதற்கு ஏதுவாக வசதி செய்ய குழந்தையைக் கொடுத்த மறுகணமே அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தான் குரு.

அப்போதுதான் நிம்மதி பெரு மூச்சை வெளியேற்றினாள் அபி.

🔥💜🔥

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 123

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “64 . நெருப்பாய் நின் நெருக்கம் 🔥”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!