குரு அந்த நள்ளிரவு நேரத்தில் வீட்டை விட்டுக் கிளம்பியதும் சுமை ஏறிய உள்ளத்தோடு தன் வீட்டிற்குள் வந்து கதவைப் பூட்டிக் கொண்டவர் அபியின் அறைக்குள் நுழைந்தார்.
அங்கே அவளும் படுக்கையில் தூங்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டு அவளை நெருங்கியவர்,
“மாப்பிள்ளை எதுக்காக இந்த நேரத்துல வீட்ட விட்டுப் போறாரு.. நீ ஏதாவது சொன்னியா..?” என அவர் கேட்க, அவளுக்கு விழிகள் கலங்கின.
“நான்தான் நிம்மதி வேணும்னு அவரப் போக சொல்லிட்டேன்மா..” என குற்ற உணர்வோடு கூறினாள் அவள்.
“சரி அவர் போனதும் நிம்மதி கிடைச்சிடுச்சா..? நிம்மதி கிடைச்சா சந்தோஷமா படுத்துத் தூங்கி இருக்கலாமே.. எதுக்காக இப்படி கண்ணு கலங்கி மிட் நைட்ல எழுந்து உட்கார்ந்துருக்க..?” எனக் கேட்டார் அவர்.
“கஷ்டமா இருக்குமா..” என தன் மனதை மறையாமல் கூறினாள் அவள்.
“இதோ பாரு அபி மத்த அம்மா மாதிரி எவ்வளவு கஷ்டம்னாலும் புருஷன சகிச்சு அங்கதான் வாழணும்.. எவ்வளவு கொடுமை அனுபவிச்சாலும் அங்கதான் இருக்கணும் அப்படின்னு சொல்ற அம்மா நான் கிடையாது… எப்பவுமே என்னோட பொண்ணுங்க எனக்கு தேவதைங்கதான்.
அதே மாதிரி ஒருத்தர் திரும்பி மனம் வருந்தி மன்னிப்புக் கேட்ட அவரை மன்னிக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லடா பாப்பா.. ஒரு தடவை வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாம்தானே..?
இப்ப கூட நான் உன்னை கட்டாயப்படுத்தல.. உன்னோட வாழ்க்கைக்கான முடிவ நீதான் எடுக்கணும்.. அவ்ளோ பெரிய மனுஷன் உனக்காக கண்ணு கலங்கிப் பேசிட்டுப் போறத பாக்க மனசே தாங்கலடி.. உன்ன விட அவர் மேல நான்தான் கோபமா இருந்தேன்.. இப்போ என்னால அவர் மேல கோபப்படவே முடியல..”
“எனக்கு அவர ரொம்ப பிடிக்கும்மா.. ஏன்னா இன்னுமே நான் அவரை காதலிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.. ஆனா என்ன வேணாம்னு வீட்டை விட்டு அவர் போக சொன்னப்போ ஒடஞ்சு போயிட்டேன்மா.. சத்தியமா என்னால அதைத் தாங்கிக்கவே முடியல.. இப்போ வரைக்கும் ரொம்ப ஏமாற்றமா இருக்கு..”
“உன்ன அவர் வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்னு தெரிஞ்சதும் நாங்க எல்லாரும் ரொம்ப பயந்து போயிட்டோம்.. நீ இல்லாத நேரம் அவர் மேல நான் கோபத்துல மண்ணெல்லாம் தூக்கி எறிஞ்சு நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமாதான் போவேன்னு சாபம் எல்லாம் விட்டுட்டு வந்தேன்.” என்றதும் அதிர்ந்து போய் பார்த்தாள் அபர்ணா.
“ஆமாடி பின்ன எங்களுக்கு கோவம் வராதா..? திடீர்னு பொண்ண காணலைன்னு சொன்னதும் எங்களுக்கு எப்படி இருக்கும்..? அங்க போய் சண்டை போட்டுட்டு வந்தோம்.”
“அவர் உங்களைத் திட்டலயா.??”
“இல்ல தல குனிஞ்சு நின்னாரு..” என்றார் பத்மா.
அவள் காதல் கொண்ட மனமோ சட்டென அவனுக்காக பரிதாபம் கொண்டது.
“நீங்க எதுக்கு அவரைத் திட்டுனீங்க..? யாரக்கேட்டு அவருக்கு சாபம் போட்டிங்க..? அவர் மேல அவ்வளவு கோபத்தோட திரும்பி வந்ததுக்கு அப்புறம் கூட நானே இதுவரைக்கும் அவருக்கு சாபம் கொடுக்கல.. நீங்க ஏன் அப்படி எல்லாம் பண்ணீங்க..?” என அபர்ணாவோ கட்டுப்பாடு இழந்து கோபத்தோடு கேட்க அக்கணம் பத்மாவின் இதழ்களிலோ சிரிப்பு மலர்ந்தது.
“உன்னோட புருஷனுக்கு சாபம் போட்டுட்டேன்னு கோபம் வருதோ.? இவ்வளவு பாசத்த வச்சிட்டு உன்னால அவர விட்டுட்டு இருக்க முடியுமா பாப்பா..?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நீங்க யாரைக் கேட்டு மண்ணை அள்ளி அவர் மேல வீசினீங்க..? எதுக்கும்மா அப்படி எல்லாம் பண்ணீங்க..? என் மேல எவ்வளவு பாசம் இருந்திருந்தாலும் நீங்க இப்படி பண்ணி இருக்கவே கூடாது.. அவருக்கு இப்படி சாபம் விட்ருக்கவே கூடாது..” என அவள் அழுது விட அதிர்ந்து போனார் பத்மா.
“ஹேய் என்ன பாப்பா நீ அதெல்லாம் முடிஞ்சு போச்சு.. அவரும் மறந்துட்டாரு…. நீ அழாதே..”
“அவர் கிட்ட பேசுங்கம்மா… இப்பவே அவர்கிட்ட பேசுங்க.. நீங்க போட்ட சாபம் எல்லாம் பலிக்காதுன்னு சொல்லுங்க… ப்ளீஸ்…” என இவள் பதறிப் பதறிப் பேச,
“ஓகே டென்ஷன் ஆகாத பாப்பா.. நான் அவர்கிட்ட பேசுறேன்..” என்ற பத்மாவுக்கோ அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை அக்கணம் உணர்ந்து கொண்டவர் தன்னுடைய மகளின் வாழ்க்கை இப்படியே போய்விடாது என்ற திருப்தியில் மாப்பிள்ளையின் எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்த அழைப்பு சென்றதே தவிர அவன் அதை ஏற்கவே இல்லை.
“பாப்பா ரிங் போகுது.. பட் அவர் எடுக்கவே இல்லையே..”
என்ற பத்மாவின் முகமோ யோசனையில் சுருங்கியது.
அடுத்த கணமே வெளிய வைத்து குரு கூறிய அனைத்தையும் அவர் கூற பதறிப் போய் எழுந்து விட்டாள் அபர்ணா.
“என்னம்மா சொல்றீங்க..? இப்படி எல்லாம் சொன்னாரா..?” எனப் பதறியவளுக்கு அவன் கடைசி முத்தம் என்று கூறியது நினைவில் வர உள்ளம் நடுங்கிப் போனது.
ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவானோ என எண்ணியவள் அடுத்த நொடியே அவன் அப்படிப்பட்ட முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டான் என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
அவனுடைய அன்னை ஒரு தடவை தவறான முடிவு எடுத்ததால் அவன் எவ்வளவு வலியை அனுபவித்திருக்கிறான் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியுமே.
அதே வலியை எனக்கும் என் பிள்ளைக்கும் அவன் ஒருபோதும் கொடுக்க மாட்டான் என்பதை புரிந்து கொண்டவளுக்கு உடல் நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை.
“அம்மா எனக்கு மனசுக்கு கொஞ்சம் படபடப்பா இருக்குமா.. நான் இப்பவே அவரப் பாக்கணும்… நான் அங்க போயிட்டு வந்துடுறேன்..” என அவள் கிளம்ப முயன்ற கணம்,
“ஏய் பைத்தியமாடி உனக்கு? இப்ப மிட்நைட் ஆகுது.. அவராவது கார்ல போனாரு.. நீ என்னத்துல போவ..? இந்த டைம்ல ஆட்டோ புடிச்சு உன்னால போக முடியுமா..?” கண்டித்தார் பத்மா.
“ம்மா அப்பாவை எழுப்பி அவரோட பைக்ல என்ன கூட்டிட்டுப் போய் அவரோட வீட்ல விட சொல்லுமா.. ப்ளீஸ்.. எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு.. இப்படியே என்னால நிம்மதியா தூங்கவே முடியாது.. அவரப் பார்த்தாதான் மனசுக்கு ஆறுதலா இருக்கும்..” என்ற மகளின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டார் அந்தத் தாய்.
தான் பட்ட துயரங்களின் வலியால் அவனை ஏற்கவும் முடியாது அவனைப் பிரியவும் முடியாது மகள் தவிக்கின்றாள் என்பதை சரியாக உணர்ந்து கொண்டவர்,
“சரி வா அப்பாகிட்ட சொல்லி உன்ன கூட்டிட்டுப் போய் அங்க விட சொல்றேன்.. பாப்பா இங்கே இருக்கட்டும்.. அவன நான் பாத்துக்குறேன்.. நீ காலையில மாப்பிள்ளை கூட இங்க வந்துரு..” என்றவர் உறங்கிக் கொண்டிருந்த ரகுநாத்தை எழுப்பி அபர்ணாவை குருவின் வீட்டில் கொண்டு விடும்படி கூற அதிர்ந்து போனார் அவர்.
“இந்த நேரத்துல ஏன்..? மாப்பிள்ளை இங்கதானே தங்கினாரு..” என குழப்பமாகக் கேட்டவருக்கு சுருக்கமாக நடந்ததைக் கூறி முடித்தவர்,
“அவ பயப்படுறா அவளைக் கொண்டு போய் அங்க விட்டுட்டு வாங்க…” எனக் கூற,
மறுக்காது தன் மகளை அழைத்துக்கொண்டு அந்த நள்ளிரவில் தன்னுடைய பைக்கில் அவனுடைய வீட்டை நோக்கி செல்லத் தொடங்கினார் ரகுநாத்.
அவர்கள் குருவின் வீட்டை வந்தடைந்த போது ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது.
வேகமாக வெளியே நின்ற வாட்ச்மேனிடம்,
“குரு இங்கே வந்தாரா..?” எனக் கேட்க,
“ஆமா மேடம் சார் உள்ளதான் இருக்காரு..” எனக் கூறினான் வாட்ச்மேன்.
“சரி பாப்பா… அப்போ நீ உள்ள போ நான் கிளம்புறேன்..” என்ற தந்தையை “அப்பா நீங்களும் இங்கேயே ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு காலைல கிளம்பலாமே..” என அவள் கூற மறுத்துவிட்டார் அவளுடைய தந்தை.
“அங்கே உன்னோட அம்மா நான் வருவேன்னு காத்துக்கிட்டு இருப்பா.. நான் அங்க போய் சேரும் வரைக்கும் அவ தூங்கவே மாட்டா.. உனக்குத்தான் உன்னோட அம்மாவப் பத்தி நல்லா தெரியுமில்ல. நான் அங்கே கிளம்புறேன்.. நீ உள்ள போம்மா..” என்றவர் கிளம்பி விட அவளுடைய முகத்திலோ சிறு புன்னகை தோன்றி மறைந்தது.
வேகமாக அந்த வீட்டிற்குள் நுழைந்தவள் தங்களுடைய அறைக்குள் சென்று பார்க்க அங்கே குரு இல்லை.
குளியலறைக் கதவைத் தட்டிப் பார்த்தவள் அது தானாக திறந்து கொள்ள அங்கும் அவன் இல்லை என்பதை உணர்ந்து திகைத்துப் போனாள்
எங்கே போயிருப்பான்..?
மனம் வேதனை அடையும்போது ஓவியம் வரைவதாக கூறியிருக்கிறான் அல்லவா.?
ஒருவேளை ஓவியம் வரையும் அறையில் இருப்பானோ எனச் சிந்தித்தவள் தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து அந்த அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
‘ஒருவேளை படம் வரைந்து விடீஞு அப்படியே தூங்கிட்டாரா என்னவோ நான்தான் பதறிப் போய் வந்துட்டேனா..?’ என எண்ணியவாறு அந்த ஓவியம் வரையும் அறைக்குள் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் அங்கே தூங்காது தூரிகையை கரத்தில் வைத்துக் கொண்டு எதையோ வரைந்தவாறு அமர்ந்திருந்த குருவைக் கண்டதும் நிம்மதி அடைந்தாள்.
அவனுடைய முதுகிலிருந்து தன்னுடைய விழிகளை சற்று மேலே உயர்த்தியவள் அப்போதுதான் அங்கே அவன் வரைந்து கொண்டிருந்த ஓவியத்தைப் பார்த்தாள்.
அது முழுமை பெறாத அவள்..!!
அவளைத்தான் இந்த நள்ளிரவில் அவன் வரைய முயன்று கொண்டிருக்கிறானா?
ஏதோ விதமான ஒரு உணர்வு அக்கணமே அவளை ஆட்கொள்ள உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது
அப்படியே வலது புறம் தன் பார்வையை திருப்பியவள் திகைப்பூண்டை மிதித்தாற் போல உறைந்து போனாள்.
அவளால் அவளுடைய விழிகளை விலக்கவே முடியவில்லை.
வலது புறம் முழுவதும் அந்த இடத்தை ஓவியங்களால் நிறைத்திருந்தனர் அபியும் குருவும்.
எத்தனையோ ஓவியங்கள் அங்கே இருப்பதைக் கண்டு நம்ப முடியாமல் விழிகளை மூடித் திறந்து மீண்டும் அவற்றைப் பார்த்தாள் அவள்.
அவளுடைய மடியில் குரு படுத்திருப்பதைப் போல ஒரு ஓவியம்.
இன்னொன்று இருவரும் கடற்கரையோரமாக அமர்ந்து பேசுவது போல வரையப்பட்டிருந்தது.
இன்னொரு ஓவியத்திலோ படுக்கையில் அமர்ந்து தலையணை சண்டை போடுவது போல வரையப்பட்டிருந்தது.
அந்த ஓவியத்தில் இருந்த இருவரின் முகத்திலும்தான் எத்தனை மகிழ்ச்சி..!
அதைப் பார்த்தவளுக்கு விழிகள் கலங்கி கண்ணீர் விழிகளைத் தாண்டி வெளியே வந்து அவளுடைய கன்னத்தை நனைத்தன.
ஒன்றா ரெண்டா இன்னும் இன்னும் ஏராளமான ஓவியங்கள்.
முத்தமிடுவது போல,
அவன் அவளைக் காற்று கூட புக முடியாத அளவுக்கு இறுக்கி அணைப்பது போல,
அவளை உப்பு மூட்டை சுமப்பது போல
அவளுடைய இதழ்களில் அழுத்தமாக தன் இதழ்களை புதைப்பது போல
ஒவ்வொரு படங்களிலும் அவனுடைய விழிகளில் காதல் ததும்புவதைப் போல அவன் வரைந்திருக்க திக்கு முக்காடிப் போனவளுக்கு மூச்சு நின்றே போனது.
மீண்டும் அவள் மூச்சை உள்ளிழுக்கும் போது அது பெரும் கேவலாக வெளிப்பட அந்த சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன் அங்கே விக்கித்துப் போய் நிற்பவளைக் கண்டு இன்பமாய் அதிர்ந்தான்.
Sooooooooooo sweet epiiiiii ❤️❤️❤️❤️❤️❤️