மருத்துவர் வெளியே வந்து ராஜசேகரனுக்கு மைல்ட் அட்டாக் என்றிட வேல்விழி இன்னும் அழுது விட்டாள். ஒன்னும் பிரச்சனை இல்லை ஆஞ்சியோ பண்ணி ஸ்டண்ட் வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணிட்டோம். அதற்கான வேலைகள் தான் நடக்குது யாரும் பயப்பட வேண்டாம் என்று கூறி விட்டு சென்றார்.
வேல்விழி நீ கல்யாணப்பொண்ணுடா இப்போ இங்கே இருக்க வேண்டாம் அப்பாவுக்கு ஒன்றும் ஆகாது நீ வீட்டுக்கு போத்தா என்றார் வடிவுடைநாயகி. எப்படி அப்பத்தா என் அப்பாவை விட்டுட்டு நான் போவேன் என்னால முடியாது என்று அழுதவளிடம் அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. நீ இப்போ இன்னொரு வீட்டோட மருமகள் உன் அப்பாவுக்கு நாங்க எல்லோரும் இருக்கோம் அவனுக்கு ஒன்றும் ஆகாது என்றவர் ரேணுகாவை அழைத்து ரேணு நீ தான் இப்போ ராஜியோட இடத்தில் இருந்து அவளுக்கு எல்லாம் செய்யனும். நானும், நரேந்திரனும் ராஜி கூட இங்கே இருக்கோம். நீயும், தாத்தாவும் இவங்களோட போங்க என்றவர் தெய்வானை நீயும் கூடப் போ என்று மகளையும் அனுப்பி வைத்தார்.
வேல்விழி எவ்வளவோ மறுத்தும் அவளை வடிவுடைநாயகி அனுப்பி வைத்தார். அவள் அழுது கொண்டே தான் வீட்டிற்கு சென்றாள்.
அம்மா எங்கே போக என்ற ரேணுகாவிடம் நம்ம வீட்டுக்குத் தான்டி அங்கே தானே முதல்ல போகனும் அதானே முறை என்ற தெய்வானை வேல்விழியை தன் தோளில் சாய்த்துக் கொண்டவர் அழாதடா தங்கம். ஒரு வீட்டுக்கு மருமகள் வந்த அன்னைக்கே கண்ணீர் வடிக்க கூடாது. உன்னோட வலி எல்லோருக்குமே புரியும் ஆனாலும் நீ அழுது உன்னோட பலவீனத்தை மத்தவங்களுக்கு காட்டக் கூடாது. அப்படி நீ அழுதால் உன்னை அழ வைக்க நினைச்சவங்க ஜெயிச்ச மாதிரி ஆகிரும் என்றவர் அவளது கண்களைத் துடைத்து விட்டார்.
அத்தை சொன்னதை தான் பாப்பா நானும் சொல்லுறேன். உன்னை அழ வைக்கனும்னு நினைக்கிறவங்க முன்னாடி நீ சிரிக்கனும். அப்போ தான் அவங்களுக்கு உன்னைப் பார்க்கும் போது பயம் வரும். பயம்வர வைக்கனும் என்றான் சுரேந்திரன். ரத்னவேல் எதுவுமே பேசவில்லை. அவனுக்கு என்ன பேசுவது என்று ஒன்றும் புரியவில்லை. தன் அத்தை திடீரென்று தன் கழுத்தில் மாலையிட்டு மணமகன் ஆக்கியதே அவனுக்கு விளங்கவில்லை. அவனுக்கு வேல்விழி மீது எந்த உணர்வும் இதுவரை இருந்ததில்லை. அவளை எப்படி என்று பலவாறு யோசித்தான். முதலில் அவன் மனதில் இருந்த ஒரே விசயம் இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம். பதினைந்து வயது வித்தியாசம் இதுவே பெரிய குறை என்று நினைத்தான்.
வீடு வந்து சேர்ந்தவுடன் ரேணு போயி ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா என்றார் தெய்வானை.
வாசலில் கார் வரும் சத்தம் கேட்ட வெற்றிமாறன் தன் கோபத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு வெளியே வர ரேணுகாவும், தெய்வானையும் ரத்னவேல், வேல்விழி தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து வந்தனர். வேலு வாம்மா என்று வேல்விழியை பூஜை அறையில் விளக்கு ஏற்ற சொன்னார் தெய்வானை. வேல்விழி அமைதியாக விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டவள் தன் கணவனுடன் துரைப்பாண்டியன், தில்லைநாயகி இருவரின் காலில் விழ துரைப்பாண்டியன் நல்லா இரும்மா என்றவர் அவளுக்கு திருநீறு பூசிவிட்டு இரண்டுபேரும் நூறு வருசத்திற்கு சந்தோசமா இருக்கனும் என்றார். அடுத்ததாக தெய்வானையின் காலில் விழுந்தனர். பிறகு வேல்விழி மட்டும் தன் அண்ணன், அண்ணியின் காலில் விழுந்தாள்.
ரேணு பால், பழம் கொண்டு வா என்று தெய்வானை கூறிட ரேணுகாவும் எடுத்து வந்தவள் இருவருக்கும் பால், பழம் கொடுத்திட அமைதியாக சாப்பிட்டனர். வெற்றிமாறனை முறைத்துக் கொண்டே வேல்விழியே வாழைப்பழத்தை ரத்னவேலுவிற்கு ஊட்டி விட்டாள். சித்தப்பா நீங்களும் அவளுக்கு ஊட்டி விடுங்க என்று ரேணு கூறிட அவனும் அவ்வாறே செய்தான்.
சரிம்மா வேலு நீங்க போயி கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க என்று தெய்வானை இருவரையும் அனுப்பி வைத்தவர் ரேணு இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வேண்டாம் அவள் ஏற்கனவே நொந்து போயி இருக்கிறாள் மேலும் நாம என்ற தெய்வானையிடம் புரியுது அத்தை என்றான் சுரேந்திரன். நாங்க ஹாஸ்பிடல் போறோம் என்றவன் ரேணு மட்டும் இருக்கட்டும் அத்தை நீங்களும், ரேணுவும் கொஞ்சம் பாப்பாவை பார்த்துக்கோங்க என்றவன் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றான்.
அறைக்குள் நுழைந்தவுடன் மாலையைக் கழற்றி வீசியவள் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். அவளை சமாதானம் செய்யலாமா, வேண்டாமா என்ற யோசனையுடனே நின்று கொண்டிருந்தான் ரத்னவேல். வேல்விழி என்றவனை நிமிர்ந்து பார்த்தவள் எனக்கு நல்லாவே புரியுது உங்களுக்கும் என்னை பிடிக்காது. எனக்கும் உங்களை பிடிக்காது நமக்குள்ள நடந்த இந்த கல்யாணத்தை என்னால கல்யாணமா ஏத்துக்கவும் முடியாது அதனால ப்ளீஸ் என்றவள் இன்னும் அழ ஆரம்பித்தாள்.
அவன் எதுவும் சொல்லாமல் அவள் வீசி எறிந்த மாலையை சுவற்றில் இருந்த ஆணியில் மாட்டியவன் எனக்கு உன்னை பிடிக்காதுனு யாரு சொன்னது என்றான். உன்னை பிடிக்கும் ஆனால் உன்னை என்னோட மனைவியா என்னால இப்போதைக்கு ஏத்துக்க முடியாது அது என்னமோ உண்மை தான். இந்த கல்யாணம் நமக்கு பிடித்து நடந்துச்சோ பிடிக்காமல் நடந்துச்சோ நடந்திருச்சு. அதை மாற்ற முடியாது. எந்த பொண்ணுக்குமே இரண்டாம் தாரமா ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறது பெரிய வலி தான் என்னால உன்னை புரிஞ்சுக்க முடிகிறது. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு என்றவன் அறையை விட்டு கிளம்பினான்.
தரையில் ஒரு மூலையில் தன் உடலைக் குறுக்கிக் கொண்டு படுத்து அழுது துடித்தாள் வேல்விழி. ஒரு பக்கம் தன் திருமணம் இப்படி ஒரு சூழ்நிலையில் நடந்து விட்டது , இன்னொரு பக்கம் தந்தையின் உடல்நிலை, இன்னொரு பக்கம் இனி தினம் தினம் வெற்றிமாறனை பார்க்க வேண்டும். அவனுடன் காதல் என்று எங்கும் சுற்றிடவில்லை தான் ஆனாலும் ஒரு வாரம் என்றாலும் தான் கல்யாணம் செய்யப் போகும் வருங்கால கணவன் என்று நினைத்த அந்த நினைப்பு அவளை வாட்டியது.
அவனை அவ்வாறு நினைத்ததை எண்ணி துடித்தாள். கயல்விழி அவள் தன் தங்கை ஆனால் சொந்த அக்காவின் வாழ்க்கையை எப்படி அவளால் கெடுக்க முடிந்தது. அந்த இரண்டு துரோகிகளை எதிர் கொள்ளப் போவது பற்றிய பயம் தான் அவள் மனதை ரணப்படுத்தியது.
வெற்றிமாறன் தன் அம்மாவையும், தங்கையையும் பார்த்திட அவர்கள் இருவரும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஏன்டி அவள் பட்டினியா இருக்கிறாள் போயி சாப்பிடக் கூப்பிடு என்ற தெய்வானையிடம் சரிங்கம்மா என்று ரேணுகா கிளம்பினாள். சித்தப்பா என்ற ரேணுவிடம் சொல்லு ரேணு என்றான் ரத்னவேல். நீங்களும், வேல்விழியும் சாப்பிட வாங்க என்றதும் சரி என்றவன் தன்னறைக்குச் சென்றான்.
வேல்விழி சாப்பிட வா என்றவனை அவள் முறைத்திட என்ன என்று பார்த்திட அவனது கை அவளது தோள்பட்டையில் இருந்திட பட்டென்று தன் கையை எடுத்து விட்டான். எனக்கு பசி இல்லை என்றவளிடம் பொய் சொல்லாதே எழுந்திரு என்றான். சொல்றேன்ல எனக்கு வேண்டாம் என்றவளின் கையைப் பிடித்து எழும்ப வைத்தவன் உனக்கு என்னடி பிரச்சனை. யாரு மேலையோ உள்ள கோபத்தை சாப்பாட்டு மேல காட்டுற எந்திரி என்றவன் அவளை இழுத்துச் சென்றான். கதவைத் திறந்தவுடன் அவள் அமைதியாக நடந்து வந்தாள்.
என்னம்மா ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு போ போயி முகத்தைக் கழுவு என்று தெய்வானை கூறிட அவள் சென்று முகத்தைக் கழுவி விட்டு வந்தவள் அமைதியாக சாப்பிட அமர்ந்தாள். விஜயலட்சுமி கயல் வா சாப்பிட என்று தன் மகளை அழைத்து வந்தார். வெற்றிமாறனையும் அவர் வற்புறுத்தி அழைத்து வந்து சாப்பிட அமர வைத்தார்.
அனைவரும் அமர்ந்திருக்க வேல்விழிக்கு சாப்பாடு தொண்டைக்குள் இறங்கவே மாட்டேன் என்று இம்சித்தது. அவள் கஷ்டப்பட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வெற்றிமாறன் குனிந்த தலை நிமிரவே இல்லை. வேல்விழியை வெறுப்பேற்ற நினைத்த கயல்விழி வெற்றிமாறனின் இலையில் சேர்ந்து உணவு உட்கொண்டாள். அதுவே அவனுக்கு எரிச்சலாக இருந்த்து. அதோடு விடாமல் கயல்விழி அவனுக்கு உணவை ஊட்டி விட வர அவனுக்கு இருந்த கோபத்தில் அனைவரும் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் பட்டென்று சாப்பாட்டு கையுடன் அவளை அறைந்து விட்டு இலையை தட்டிவிட்டு எழுந்து சென்றான்.
அதைக் கண்ட ரேணுகா க்ளுக்கென்று சிரித்து விட்டாள். வேல்விழியின் மனதில் தன் அத்தையும், அண்ணனும் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வர இந்த முறை கயல்விழியை வெறுப்பேற்ற நினைத்து ரத்னவேலிற்கு உணவை ஊட்டி விட வர அவளை ஒருமுறை பார்த்தவன் அமைதியாக அவள் கொடுத்த உணவை சாப்பிட்டான். சித்தப்பா நீங்களும் அவளுக்கு ஊட்டி விடுங்க என்று ரேணுகா கூறிட ரத்னவேலுவும் அவளுக்கு ஊட்டி விட்டான். அவள் அமைதியாக சாப்பிட்டாள்.
கயல்விழி மட்டும் இல்லாமல், விஜயலட்சுமி, கதிரேசன், தில்லைநாயகியும் வெந்து நொந்து போயினர். சாப்பிட்டு முடித்த பிறகு இரவு சடங்கிற்கு ரேணுகா வேல்விழியை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.
வேலு என்ற ரேணுவிடம் சொல்லுங்க அண்ணி என்றாள் வேல்விழி. இந்த கல்யாணம் உனக்கு பிடிக்கவே இல்லை சித்தப்பாவுக்கு நீ சாப்பாடு ஊட்டினது கூட கயல்விழியை வெறுப்பேத்தி பார்க்கத் தான்னு எனக்கும், அம்மாவுக்கும் நல்லாவே தெரியும்டி என்றவள் உன்னை உடனே இந்த வாழ்க்கையை ஏத்துக்கோனு நான் சொல்ல மாட்டேன் ஆனால் ஒன்றே ஒன்று தேன்மொழி பண்ணிட்டு போன துரோகமே சித்தப்பாவால இன்னும் தாங்க முடியலை அவரை நீ எந்த சூழ்நிலையிலும் விட்டுறாதடி அவர் பாவம் என்றாள் ரேணுகா.
கவலைப் படாதிங்க அண்ணி உங்க சித்தப்பாவை டைவர்ஸ் பண்ணிட்டு நம்ம வீட்டோட வேண்டும் என்னால் இருப்பேன் அக்கா எடுத்த பெயரை நான் எடுக்க மாட்டேன் என்னை நம்பலாம் என்றவள் தெய்வானை கொடுத்த பால் சொம்புடன் தன்னறைக்கு சென்றாள்.
ரத்னவேல் தனது படுக்கையை கீழே விரித்துக் கொண்டு இருந்தான். அவனிடம் பால் சொம்பை நீட்டியவள் நீங்க மெத்தையிலே தூங்குங்க நான் கீழே படுத்துக்கிறேன் என்று தரையில் படுத்துக் கொண்டாள். அப்பறம் இந்த அறையில் நீங்கள் யாரோ நான் யாரோ. இந்த அறையை விட்டு வெளியே போனால் நாம ரொம்ப அந்நியோன்யமான கணவன் மனைவி என்றவள் இதை மறக்காதிங்க என்று கூறி விட்டு படுத்துக் கொண்டாள்.
பாலை கீழே ஊற்றி விட்டு அவனும் அமைதியாக படுத்துக் கொண்டான். அவள் சொல்லிய இதே வார்த்தைகள் ஆனால் வேறு விதமாக அவன் வாழ்வில் இதே நாளில் அவள் சொல்லி கேட்ட நினைவுகள் இம்சிக்க மெல்ல கண்ணை மூடினான். வேல்விழியின் விசும்பல் சத்தம் அவனை ஏதோ செய்ய என்னாச்சு ஏன் அழுதுகிட்டு இருக்க என்றிட என்னோட போன் நான் எடுத்துட்டு வரலை என் அம்மாகிட்ட பேசனும் என்றாள். இதற்குத் தானா இந்தா என்று தனது மொபைலை அவளிடம் நீட்டினான்.
….தொடரும்…