விஸ்வரூபனும், ராதிகாவும் தங்களை மறந்து காதல் அலையில் கால் நனைக்க,
இங்கு அனன்யாவோ, கண்ணீர் மழையில் நனைந்தாள்.
காரில் செல்லும் போதே எவ்வளவோ கட்டுபடுத்தியும் கண்ணீர் மட்டும் நிற்காமல் பொழிந்தது.
இது ஒரு விதமான பொஸஸுவ்னஸாக இருக்கலாம். தோழி மேல் வைத்த அதீத பாசம். அவளை விட்டு விலகணும் என்று நினைக்கும் போது இதயத்தில் ஒரு வலி உண்டானது.
பின்னே கிட்டத்தட்ட ஐந்தரை வருடமா குடும்பத்தை விட்டு பிரிந்து , அன்னிய மண்ணில் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருந்தது, அவர்களை இந்த அளவிற்கு நெருங்கிய உறவாக மாற்றியிருந்தது.
இதில் தங்களது நட்புக்கு இடையே நுழைந்தத தன்னுடைய பிரியமான மாமாவாக இருந்தாலும், அவளுக்கு வேதனையாகத் தான் இருந்தது.
தங்களது வீடு இருக்கும் பகுதியில் கார் நுழையவும், வேகமாக ஹேண்ட் பேகிலிருந்து, டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடைத்தாள்.
பிறகு லைட்டாக மேக்கப் செய்து கொண்டாள்.
வீட்டிற்குச் செல்லும் போது, தன்னை உற்சாகமாக காட்டிக் கொள்வதற்காக இவ்வளவு முஸ்தீபுகளை செய்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.
ஆனால் அவளது பாட்டியின் அன்புக்கு முன்பு அவளது முயற்சிகள் தோற்றுப் போயின…
அவளைக் கூர்ந்து பார்த்த ருக்குமணி,” என்னாச்சு அனு… எக்ஸாம் ஒழுங்கா பண்ணலையா? ” என்று வினவ.
” நல்லா பண்ணிருக்கேன் பாட்டி.”
கௌரியும் அப்போதுதான் ஹாஸ்பிடலில் இருந்து வந்திருந்தார். இனி அவருக்கு ஈவினிங் தான் அப்பாயின்மென்ட்.
அவரும் ஆராய்ச்சியாக அனன்யாவை பார்த்தபடியே, ” சரி வா அனு. சாப்பிடலாம்… ” என்று அழைத்தார்.
ருக்குமணி நேரத்திற்கு உணவு அருந்திவிடுவார். இல்லையென்றால் மகனும், பேரனும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.
இன்றும் மதிய உணவை முடித்தவர், ஓய்வெடுக்க செல்லாமல், எக்ஸாம் எழுத சென்ற பேத்திக்காக காத்திருந்தார்.
அவள் வந்ததும், அவளது வாடிய முகத்தைப் பார்த்தவர், அவளின் அருகிலேயே இருந்து உணவு உண்ண வைத்து கவனித்துக் கொண்டிருந்தார்.
தன்னை இருவர் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டு இருப்பதை அறியாதவள், தனக்குள்ளே மனதைக் குழப்பிக் கொண்டிருந்தவள், உணவை உண்ணாமல் கைகளால் அளந்துக் கொண்டிருந்தாள்.
” ரஞ்சிதம்… அம்மு ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குறா… ஏன் இன்னைக்கு அவளுக்கு பிடிச்சது எதுவும் செய்யலையா?” என்று தன் மருமகளை அழைத்து வினவினார்.
” அத்தை… அவ சொன்ன மெனு தான் இன்னைக்கு செய்ய சொன்னேன்.” என்றவர் அனுவைப் பார்க்க…
” ஆமாம் நீ தானே இன்னைக்கு உன் ஃப்ரெண்டை வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன். அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்று அலப்பறை செய்தீயே. ஏன் அவ வரலையா?” என்றார் ருக்குமணி.
” அது… அவளுக்கு திடீர்னு ஒரு வேலை வந்துடுச்சு. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா வீட்டுக்கு வரேன்னு சொன்னா.” என்று மெல்லிய குரலில் கூறினாள் அனன்யா.
ருக்குமணி ஒரே நொடியில் கண்டுக் கொண்டார். ” ஓ… அந்த மகாராணி வரலைன்னா விட்டுத் தள்ளு. நம்ம ஸ்டேட்டஸ்க்கு உன்னோட ஃப்ரண்ட்ஷிப் வெச்சுக்கவே அவளுக்கு தகுதித் கிடையாது. இதுல நீ கூப்பிட, கூப்பிட… ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குப்போக்கு தான் சொல்லிட்டு இருக்கா. சரியான திமிரு பிடிச்ச பொண்ணா இருப்பா போல. இதுக்கு போய் நீ கவலைப்படுவீயா?
இல்லை நம்ம குடும்பமே கால்ல விழுந்து, ஆரத்தி எடுத்து வீட்டுக்கு கூப்பிட்டா தான் வருவாளா. சரி உன்னோட ஃப்ரெண்டாச்சே நினைச்சா… எவ்வளவு கொழுப்பு… இனி அவளா இந்த வீட்டுக்கு வந்தாலும், என் முகத்துல அவ முழிக்கக் கூடாது.” என்றுக் கூற…
“பாட்டி… அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அவ என் ஃப்ரெண்ட்.” என்று வேகமாகக் கூறிய அனுவின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
” சரி… சரி… அழாத… உன் ஃப்ரெண்டை நான் ஓன்னும் சொல்லலை.” என்று தனது பேத்தியை கொஞ்சி, அவளை சாப்பிட வைத்தார்.
ருக்குமணி சொன்ன மாதிரியே, ஆரத்தி எடுத்து தான் ராதிகா இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கப் போவதை அப்போது அவர் அறியவில்லை. அது மட்டுமல்லாமல் ராதிகாவை, ருக்குமணி பார்க்கவே போவதில்லை.
கொஞ்சம் சாப்பிட்ட அனு, “போதும் பாட்டி. இதுக்கு மேல என்னால சாப்பிட முடியாது.” என்று விட்டு எழுந்து அவளது அறைக்குச் செல்ல…
ருக்குமணியும் பேத்தியை நினைத்து புலம்பிக் கொண்டே தனது அறைக்குச் சென்றார்.
கௌரி தான், தனது அண்ணியிடம் புலம்பிக் கொண்டிருந்தாள்.
” அண்ணி… இந்த அம்மாவை என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அனுவுக்கு செல்லங் கொடுத்தே கெடுக்கிறார். யாருன்னே தெரியாத பொண்ணை இப்படி பேசுறார்.”
” விடு கௌரி… இன்னைக்கு நேத்தா அவர் இப்படி இருக்கிறார். எப்பவுமே அப்படி தான். அவருக்கு அனுவா, ரூபனான்னு கேள்வி வந்தாலே, அனுவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. ஹும் நாளைக்கு ரூபனுக்கு கல்யாணம் பண்ணி வரப் போறவளை ஏதாவது சொல்லி கஷ்டப்படுத்திட்டா என்ன செய்யறதுன்னு தான் என் கவலையே.” என.
” அண்ணி…” என்ற கௌரி விக்கித்து நின்றாள்.
” ஹேய் கௌரி… நான் ஏதேதோ லூசு மாதிரி உளறுறேன். நீ எதையும் மைண்ட்ல ஏத்திக்காத. ரூபன் அவனோட மனைவியை அப்படி ஒன்றும் விட்டுக் கொடுத்திட மாட்டான். ” என்று அவளை சமாதானம் செய்தவர், அவரது வேலையைக் கவனிக்க சென்றார்.
வராத மருமகளோட கௌரவத்தை நினைத்து வருத்தப்பட்டவரே பின்னாளில் தனது மருமகளை வருத்தப்படுத்தப் போவதையும், யார் தன் மனைவியை விட்டுக் கொடுக்காமல் இருப்பான் என்று நம்பினாரோ, அவனே அவரது நம்பிக்கையை உடைக்க போவதையும் அப்போது அறியவில்லை அந்த அப்பாவி குடும்பத் தலைவி.
இன்றைய நாள் அவனுக்கு பொக்கிஷமான நாள். அந்தளவுக்கு ராதிகாவின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றி, அவளது எதிர்கால கனவுகளையெல்லாம் கேட்டு, என்ஜாய் செய்து இருந்தான்.
அவளை தஞ்சாவூருக்கு பஸ் ஏற்றிவிட்டு வீட்டிற்குள் வந்தவன், தனக்கு உணவு வேண்டாம் என்று ரஞ்சிதத்திடம் கூறிவிட்டு மாடிக்கு ஏற முயன்றான்.
” தம்பி… அனுவை சாப்பிட வர சொல்லு. மதியமும் ஒழுங்கா சாப்பிடலை. இப்பவும் வேண்டாம்னு சொல்லிட்டா. என்ன தான் அவளுக்கு பிரச்சனைன்னு சொல்ல மாட்டேங்குறா?”
” அது… இன்னும் இல்லை பா.” என்று மெதுவாகக் கூறினார்.
” மா… அவங்க சாப்பிடலைன்னா எனக்கு உடனே ஃபோன் பண்ண வேண்டியது தானே…”
” உனக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன். ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. “
” சாரி மா… என்னோட ஃப்ரெண்டோட வெளியே போயிருந்தேன். ரியல்லி சாரி மா.” என்றவன் ரஞ்சிதத்தின் கையைப் பிடித்து மன்னிப்புக் கேட்டான்.
” பரவால்ல விடு பா. நீ முக்கியமான கேஸ்ல இருப்பீயோ என்று நினைச்சேன். நீ போய் அவங்க ரெண்டு பேரையும் பாரு.”
” ம்… சரி மா…” என்றவன் அனுவின் அறைக்குள் நுழைய.
அவளோ தூங்குவது போல கண்களை இறுக மூடிக் கொண்டு இருந்தாள்.
” அனு… டோன்ட் ஆக்ட் லைக் ஸ்லீப்பிங். நீ முழிச்சிட்டு இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியுது. எழுந்திரு…” என்று விஸ்வரூபன் அதட்ட…
” தூக்கமா வருது மாமா… உங்களுக்கு என்ன பிரச்சினை” என்றாள் அனு.
” நீ எதுக்கு இப்போ சாப்பிடாமல் இருக்க? உன்னால பாட்டியும் சாப்பிடாமல் இருக்காங்க.”
“வாட்? பாட்டி சாப்பிடலையா? நான் தான் எனக்கு பசிக்கலை, சாப்பாடு வேண்டாம். நீங்க சாப்பிடுங்க பாட்டி என்று சொன்னேனே.” என்றவள் வேகமாக பாட்டியின் அறைக்குச் சென்றாள்.
” ஏன் பாட்டி இப்படி சாப்பிடாம இருக்கீங்க. உடம்பு என்னத்துக்காகும். நான் தான் மதியம் சாப்பிட்டதே ஒரு மாதிரியா இருக்குன்னு சொன்னேனே. சரி வாங்க பாட்டி. வந்து சாப்பிடுங்க.” என்றுக் கூற.
” நீ மதியம் சாப்பிட்ட லட்சணம் தான் தெரியுமே. அதுவுமில்லாமல் நைட்டு உன்னோட சாப்பிடாமல், நான் என்னைக்கு தனியா சாப்பிட்டுருக்கேன்.” என்ற ருக்குமணியின் பதிலில், குற்றவுணர்ச்சியில் தவித்தாள் அனன்யா.
” ஸாரி பாட்டி.” என்றவளின் கண்கள் கலங்க.
” சரி டா … இதுக்கு எதுக்கு நீ கண் கலங்குற? எல்லாம் உன்னோட ஃப்ரெண்டு அந்த தஞ்சாவூர்காரியால வந்தது. அவ வீட்டுக்கு வரலைன்னு தானே நீ அழுதுட்டு வந்த. இன்னைக்கு சொல்றது தான் அனு. அவப் பேச்சே இந்த வீட்ல வரக்கூடாது.” என்று ருக்குமணிக் கூற.
தனது பாட்டியை ஒரு பார்வை பார்த்தவன், அனன்யாவை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தான்.
அவனது பார்வை அவளை ஊடுருவ, அப்பொழுதுதான் தான் செய்த தவறை உணர்ந்தாள் அனன்யா. பாட்டிக்கு தான் எந்த அளவு முக்கியம்… தன் முகத்தில் சின்ன வாட்டம் இருந்தாலும், அவர் எவ்வளவு வருத்தப்படுவார். தன்னை யாராவது அழ வைத்தால் அவங்களை லேசில் விட்டு விட மாட்டார்.
அப்படியிருக்க… மதியம் ராதிகாவை பற்றிப் பேசிய விஷயத்தை மறந்து இருப்பார் என்று நினைத்தது எவ்வளவு பெரிய மூடத்தனம்.’ என்று நொந்துக் கொண்டிருந்தாள்.
அவளது யோசனையைத் தடை செய்வது போல, ” சீக்கிரமா சாப்பிடுங்க .” என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறி விட்டு விடுவிடுவென வெளியே சென்று விட்டான் விஸ்வரூபன்.
அவனது கோபத்தைப் பார்த்தே தனது தவறும் புரிந்தது. ‘ இனிமேல் அவர்களுக்கு இடையூறாக நான் இருக்க மாட்டேன்.’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டவள், பாட்டியுடன் உணவருந்த சென்றாள்.
” நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவன் எதற்கு?”
இனிமேல் தான் அவர்கள் இருவருக்கும் இடையில் நன்றாக நுழைய போகிறாள் அனன்யா.
இன்று…
தன் குடும்பத்தை வழியனுப்பி விட்டு உள்ளே வந்த ராதிகா தனியாக நின்று கொண்டிருந்தாள் . அவளது பார்வையோ, வாசல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தது.
திடீரென்று அவளது தோளில் ஒரு கை விழ…
திரும்பிப் பார்த்த ராதிகா, அங்கிருந்த கௌரியை” அம்மா… ” என்று அழைக்க.
” ராது… நான் என்னைக்கும், உனக்கு அம்மா தான். உனக்கு என்ன பிரச்சினைனாலும் சொல்லு. நான் பார்த்துக்கிறேன். இப்ப உள்ள வா.” என்ற கௌரி, அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.
” உன் லக்கேஜ்லாம் மாடில இருக்கு. இது என்னோட சேரி தான். இதைக் கட்டிக்கோ. ” என்று கவர் கூட பிரிக்காத காட்டன் சாரியை எடுத்துக் கொடுத்தார்.
” மா… ” என்று தயங்கிய ராதிகாவை,
” எதுவும் சொல்லாத… நீ போய் முதல்ல ஃப்ரெஷ்ஷப் ஆகிட்டு, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா.” என்று ரெஸ்ட் ரூம் பக்கம் அனுப்பினார்.
ஐந்து நிமிடத்தில் வெளியே வந்த ராதிகாவை அந்த அறையிலே கொஞ்ச நேரம் படுத்துக் கொள்ள சொன்னவர், ரஞ்சிதத்தை தேடிக் கொண்டு வெளியே சென்றார்.
அங்கே சென்றவர், வேலை செய்துக் கொண்டிருந்த வேலையாட்களை ஒரு பார்வை பார்க்க…
அவர்களோ ஒரு பார்வையிலே வெளியேறினர்.
” ஏன் அண்ணி? இப்படி பண்ணீங்க? ரூபன் தான் புரியாமல் கோபத்தில் பேசுறானா, நீங்களும் இப்படி இருக்கலாமா… கடைசியா அம்மா, உங்க மருமகளை விட்டுக் கொடுத்துடுவாங்களோ என்று நினைச்சு பயந்துட்டு, இப்போ அவங்க இல்லாத குறைக்கு நீங்களே இப்படி பண்ணிட்டீங்க. அம்மா மாதிரி நீங்களும் ஒரு சராசரி மாமியார் என்று நிரூபிச்சிட்டீங்க.
இந்த வீட்டுக்கு மருமகளாக வந்த முதல் நாளே அவள வருத்தப்பட வச்சிட்டீங்க. வீட்ல அவ மட்டும் தனியே நிற்குறதப் பார்த்தா எப்படி இருந்தது தெரியுமா? நம்ம அனு அவ வாழ்க்கையை தொலைச்சிட்டு, ஹாஸ்பிடல்ல நின்னு கதறுனாளே அது தான் ஞாபகத்துக்கு வந்தது.” என்ற கௌரி கண் கலங்கக் கூற.
” எனக்கு மட்டும் கஷ்டமா இல்லையா கௌரி. என் பையனை குறையா நினைக்கிறாங்களே. அவன் பட்ட கஷ்டம் நமக்கு தானே தெரியும்.” என்ற ரஞ்சித்தின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
” சரி அழாதீங்க அண்ணி. நடந்து முடிஞ்சதைப் பத்தி எதுவும் பேச வேண்டாம். ராதிகா அம்மா சொன்னதுக்கு அவ என்ன பண்ணுவா? அவங்களுக்கும் நம்ம அனுவோட குழந்தை என்று தெரியாதுன்னு வருத்தப்பட்டாங்க. இனிமேல் ராதிகா கிட்ட கோபத்தை காண்பீக்காதீங்க.” என்றாள் கௌரி.
” நீ சொல்றது சரிதான் கௌரி. வாழ வந்த மகாலட்சுமியை கஷ்டப்படுத்திட்டேன். சரி வா. இப்பவே போய் நான் மன்னிப்பு கேட்குறேன்.” என்றாள் ரஞ்சிதம்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அண்ணி. அவ தூங்கறா. ரூபனுக்கும், ராதிகாவிற்கும் இடையில் என்ன பிரச்சினை என்று தெரியலை. நாம தலையிடாமல் இருந்தாலே சரியாயிடும்.” என்றாள் கௌரி.
“அதுவும் சரி தான். என்ற ரஞ்சிதம் தனது தவறை உணர்ந்து, மருமகளிடம் அனுசரணையாக நடத்துக் கொண்டாள்.
இரவு எந்த வித பார்மாலிட்டிஸும் செய்யாமல் அவனது அறைக்கு அனுப்பி வைத்தார்.
உள்ளுக்குள் லப் டப், லப் டப் என்று இதயம் முரசடிக்க பயத்துடனே உள்ளே நுழைந்தாள்.
நல்லவேளை விஸ்வரூபன் அங்கில்லை.
பெருமூச்சு விட்டுக் கொண்டே அந்த அறையை சுற்றிப் பார்த்தாள்.
பிரம்மாண்டமான மாளிகைக்கு ஏற்ற மாதிரி, பெரிய அறை தான்.
ஒரு பெரிய கட்டில் நடுநாயகமாக இருக்க… ஒரு புற சுவரில் இருகதவுகள் இருந்தது.
‘டிரஸ் மாத்த வேண்டும் லக்கேஜ் எல்லாம் இங்கு தான் இருக்கிறது என்று கௌரி மா சொன்னாங்களே. எங்கே இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டே ஒரு கதவை திறந்துப் பார்த்தால் அது குழந்தைக்கான அறை. பிங்க் நிறத்தில் மெத்தை விரிப்பு, கார்ட்டன் எல்லாம் இருக்க. சுற்றிலும் உள்ள சுவர், கஃபோர்ட் எல்லாம் மிக்கி மவுஸ் வரைந்து, அந்த அறையே அழகாக இருந்தது.
அடுத்த கதவை திறக்க, அதுவோ டிரெஸ்ஸிங் ரூமுடன் கூடிய ரெஸ்ட் ரூம்.
உள்ளே சென்றவள் அங்கிருந்த அவளது லக்கேஜிலிருந்து, நைட் ட்ரெஸை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்று வந்தாள்.
வெளியே வந்தவளோ, விஸ்வரூபனுக்காக காத்திருந்தாள்.
அவனிடம் எப்படி பேசுவது. என்ன பேசுவது ஒன்றும் புரியாமல் டென்ஷனோடு இருக்க…
சற்று நேரம் கழித்து குழந்தையுடன் வந்தான் விஸ்வரூபன்.
அவன் வந்ததும் கட்டிலில் உட்கார்ந்து இருந்தவள் எழுந்திருக்க, அவனோ அவளை ஒரு பொருட்டாக நினைக்காமல் குழந்தையின் அறையில் நுழைந்து வேகமாக கதவை சாற்றினான்.
இப்போது மூடிய கதவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ராதிகா.
‘ நான் என்ன தவறு செய்தேன். உண்மையில கோபப்பட வேண்டியவள் நான் தான். காதலித்து விட்டு, வேறொருத்தி கழுத்தில் தாலிக் கட்டியதற்கு சட்டையைப் பிடித்து கேள்விக் கேட்க சகல உரிமை உள்ளவள், ஆனால் யாரைக் கேட்பது? உயிர்த்தோழியையா? இல்லை உயிரானவனையா? இரண்டும் அவளால் முடியாததால் தானே ஒதுங்கிப் போனேன்.’ என்று மனதிற்குள் குமுறியவள், இரவு முழுவதும் உறங்காமல் இருந்தாள்.
கதவை வேகமாக சாற்றியவனோ, குழந்தை லேசாக சிணுங்கவும் குழந்தையை தட்டிக் கொடுத்துக் கொண்டே அந்த மூடிய கதவை வெறித்துப் பார்த்தான்.
அந்த கதவுக்கு பின்னால் இருக்கும் பெண்ணவளின் மனதை புரிந்து தான் இருந்தான். அவள் கோபப்பட்டு தன்னை விட்டு விலக வேண்டும் என்று எண்ணினான்.
மனசாட்சியோ, ‘ அப்போ ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட?’ என்றுக் கேட்க. அவனுக்கு மண்டை வெடிப்பது போல் இருந்தது. இரவு முழுவதும் உறங்காமல் அவனும் விழித்தே கிடந்தான்.
மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து கீழே வந்திருந்தாள் ராதிகா.
இவள் வந்த சற்று நேரத்திலே விஸ்வரூபனும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே வந்தான்.
” மா… நான் வாக்கிங் போயிட்டு வரேன். அம்மு அவ ரூம்ல இருக்கா.” என்று குரல் கொடுத்து விட்டு சென்றான்.
” சரி பா.” என்றவர் குழந்தைக்கு கொடுப்பதற்காக பால் கலக்க…
அதற்குள் அழும் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆயா மா வந்தார்.
குழந்தையை தூக்க மனம் பரபரத்தாலும் அவன் சொன்னதைக் கேட்டு, இருந்தாள்.
அவளது பார்வையோ குழந்தையை நோக்கியே இருந்தது.
ஹாலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன், அவளது பார்வையை கண்டுக் கொண்டார்.
‘குழந்தையையும், ராதிகாவையும் சீக்கிரமே சேர்க்க வேண்டும். ‘ என்று எண்ணியவர், அதற்கான வழியையும் கண்டுக் கொண்டார்.
இன்றே விஸ்வரூபனிடம் பேச வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அதற்கு அவன் இடம் கொடுக்காமல் சீக்கிரமாகவே ஹாஸ்பிடலுக்கு கிளம்பி சென்று விட்டான்.
இப்படியே இரண்டு மூன்று நாட்கள் சென்றது.
ஒருநாள் காலை உணவை உண்டு கொண்டிருக்கும்போது வித்தியாசமான டேஸ்ட் ஆக இருக்க, ரசித்து சாப்பிட்டான்.
அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரஞ்சிதம்,” ராதிகா தான் செய்தா பா …” என்றுக் கூற…
வாயருகே எடுத்துட்டு போன உணவை கீழே போட்டவன் ரஞ்சிதத்தைப் பார்த்து முறைத்தான். அவன் கீழே போட்டதைப் பார்த்து ராதிகாவின் கண்கள் கண்ணீரை விட வா என்பது போல் இருக்க…
அவனோ, ” ச்சே… உங்க மருமக என்ன நினைச்சுட்டு இருக்கா… இப்படி வீட்டிலேயே வேலைப் பார்த்துட்டு ஜாலியா இருக்கலாம் என்று பார்க்குறாளா? பணத்தோட அருமை தெரிஞ்சா தானே. இல்லைன்னா இப்படி காலேஜுக்கு போகாமல் இருப்பாளா?” என்று வார்த்தைகளை கொட்ட…
ராதிகாவோ மனம் துடிக்க, அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.