🤎 நேசம் நீயாகிறாய்!
நேசம் 09
காரில் சென்று கொண்டிருந்த தேன் நிலாவின் உள்ளம் துள்ளிக் குதித்து தாளம் போட்டது என்றால் நிச்சயம் இல்லை.
மஞ்சள் வர்ண சாரியில் வந்தவளை முறைத்துப் பார்த்தவாறு கார் ஓட்டினான் கணவன்.
சண்டைக்குக் குறைவில்லையே இவர்களது வாழ்வில். வரும் போது கூட சிறிதாய் சண்டையொன்று வெடித்தது.
கறுப்பு நிற ஷர்ட் அணிந்த ராகவ், அவளுக்காக கறுப்பு வர்ண சாரியைக் கொடுக்க, “நான் இதைப் போட மாட்டேன்” என்றாள் அவள்.
“ஏன் முடியாது?” அவள் முகத்தைக் கேள்வியாக ஏறிட்டான்.
“காலையில் நான் ப்ளூ கலர் சாரி உடுத்ததை பார்த்தும் நீங்க வேற கலர் தானே போட்டீங்க. அதனால நீங்க சொல்லுறத நானும் பண்ண முடியாது” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் தேனு.
“வாயைத் திறந்து சொன்னியா? சொல்லி இருந்தா கண்டிப்பா போட்டிருப்பேன். வாயைத் திறந்தா மேடம் வாயில் முத்து கொண்டிருமோ?” அவளது பிடிவாதத்தில் கோபம் சொட்டாய் துளிர் விடலானலு.
அதை அறியாதவளோ “சொல்லவே வேணுமா? உங்களால புரிஞ்சுக்க முடியாதா?” எனக் கேட்க,
“அதை விடு. இப்போ உன்னால நான் தந்ததை கட்டிக்க முடியுமா முடியாதா?” என்று முடிவாகக் கேட்டான்.
“முடியாதுங்க” என சட்டென சொல்லி அவன் முகபாவனையைப் பார்த்தவள், கட்டிலில் இருந்த பிடவையை எடுக்க எத்தனிக்க, அதற்கு முன் அவன் அதைக் கையில் எடுத்திருந்தான்.
“குடுங்க”
“முடியாதுன்னு சொல்லிட்டல்ல. இனி அது உனக்கு வேண்டாம்” அதனை எடுத்து தனது கப்போர்ட்டில் போட்டு மூடினான்.
தான் ஆசையாக எடுத்த பிடவையை அவள் மறுத்தது கோபத்தையும், கூடவே கவலையையும் கொடுத்தது ஆடவனுக்கு.
“நான் விளையாட்டுக்கு சொன்னேன். அதைத் தாங்க. நான் கட்டிட்டு வர்றேன்” அவனது கோபம் அவளை வதைத்தது.
“உனக்கு எது விளையாட்டு இல்லனு சொல்லு. கல்யாணமே விளையாட்டா தான் இருக்கு. இதுல நீ கட்டுவேனு நெனச்சு வாங்கிட்டு வந்தது என்னோட முட்டாள்தனம்” எவ்வளவு முயன்றும் அவனால் தன் முக மாறுதலைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவனைக் கஷ்டப்படுத்தியாக அவள் நெஞ்சம் உறுத்த “ராகவ்…!” என்றழைத்தாள்.
“உன் எண்ணத்தை நான் நிறைவேற்றாதப்போ என் ஆசையை மட்டும் ஏன் நிறைவேற்றனும்னு நெனச்சுட்டல்ல. ஓகே. உனக்குப் பிடிச்ச ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு வா” என வெளியேறி விட்டான்.
அவன் சென்ற பிறகும் சரி, வேற்றுடை மாற்றி காரில் அமர்ந்த பின்னும் சரி அவளுக்கு மனம் குமைந்தது.
“காலையில் மனசால நெனச்சேனே தவிர சேம் கலர் ட்ரெஸ் பண்ணுவோமானு அவர் கிட்ட சொல்லலயே. அதை இப்போ தப்பு மாதிரி சொல்லிக் காட்டி அவர் தந்ததை மறுத்தது தப்பு தானே” என குற்றவுணர்வில் நொந்து போனாள்.
சட்டென்று ப்ரேக் போட்டு வண்டி நிற்க அவனைப் புரியாமல் பார்த்தாள்.
“எதுக்கு இப்போ முகத்தை இப்படி வெச்சுட்டு வர்ற?” என்று அவன் வினவ, “ஒன்னும் இல்லை” என வேறு புறம் முகம் திருப்பினாள்.
“வெளியே வந்தது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கனும்னு தான். இப்படி முகத்தை தூக்கிட்டு இருந்தா ஒரு அர்த்தமும் இல்லை” சற்று கடுமையுடன் சொல்ல,
“இதோ சிரிச்சுட்டேன். போதுமா?” வாயைக் காது வரை இழுத்து வைத்து இளிக்க, “டூத் பேஸ்ட் எட் நடிக்க போற மாதிரி முப்பத்திரண்டு பல்லையும் காட்டுறே” இம்முறை சிரிப்போடு காரை எடுக்க, அவளுக்கோ கடுப்பானது.
“ரஷ்யாவுக்கு போய் என்னத்த படிச்சீங்களோ கிண்டல் கேலியை அதிகமாவே கத்துக்கிட்டு வந்திருக்கீங்க”
“ரஷ்யாவில் அதெல்லாம் கத்து தர மாட்டாங்க. அங்கே எனக்கு பேச யாரும் இல்லை. தமிழ் பேசுறவங்க ரொம்ப குறைவு. தனு மட்டும் கொஞ்சம் பேசுவா” என புன்னகைத்தான்.
“யாரந்த தனு? அந்த தனுஜாவா?” அவளுக்கு ஏனோ அந்தப் பெயரைக் கேட்கவே கசந்தது.
“எஸ்! உன் கிட்ட சொன்னேனே. கல்யாணத்திற்கு வர முடியாம போச்சு. கூடிய சீக்கிரமே ஒரு நாள் வீட்டுக்கு வருவா”
“நானும் வெயிட்டிங். அந்த மூஞ்சை பார்க்கனும். உங்களை லவ் பண்ணி இருக்காளாமே. கண்டிப்பா பார்க்கனும்” என்று சொல்ல, அவளை மேலிருந்து கீழாகப் பார்த்து வைத்தான்.
பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு அவளை அழைத்துச் சென்றான் ராகவ்.
“சாப்பிடனும்னா இவ்ளோ தூரம் வரனுமா என்ன? நம்ம வீட்டு பக்கத்தில் நிறைய ஹோட்டல் இருக்கே” அவள் கேட்கவும், “அந்த ஹோட்டலும் இதுவும் ஒன்னில்ல. இங்கே வித்தியாசமா இருக்கும். எல்லா இடமும் சுற்றிப் பார்” என்க அவளும் சுற்றிலும் பார்வையை சிதற விட்டாள்.
சுவரில் உணவு வகைகளின் ஓவியம் வரையப்பட்டு வர்ண விளக்குகள் அலங்கரிக்க அவ்விடமே ரம்மியமாக இருந்தது.
அவரவருக்குப் பிடித்ததை ஆர்டர் செய்து இருவரும் அமர, ராகவ்வின் பார்வை ஒரு முறை அவ்விடம் முழுவதையும் சுற்றிச் சுழன்றது.
“நீ இந்தப் பக்கம் வா” என அவன் எழுந்து தனது இருக்கையைக் காட்ட, “இந்த ப்ளேஸ் நல்லாருக்கு. இங்கேயே இருக்கேனே” என்றாள் அவள்.
“விதண்டாவாதம் பண்ணவும் ஒரு அளவு இருக்கு. கூப்பிட்டு வரலனா அவ்ளோ தான்” அவனுக்கு கடுகடுத்தது.
“என்ன பண்ணுவீங்க?”
“தூக்கி இந்தப் பக்கமா வைப்பேன். உன்னால கத்தவும் முடியாது. பார்க்கிற எல்லாரும் வைஃபை கால் தரையில் படாம தாங்கு தாங்குனு தாங்குறானேனு என்னைத் தான் புகழுவாங்க. எப்படி வசதி?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க,
“ரஷ்யாக்காரனுக்கு ரொம்பத் தான் வாய். இவன் ரெண்டு வார்த்தை பேச ரெண்டு மணி நேரம் யோசிப்பானு நெனச்சேன். ரேடியோ கணக்கா பேசித் தள்ளுறான்” சத்தமாகவே அவள் புலம்ப, அவன் காதிலும் தெளிவாய் விழுந்தது.
“தப்பு கணக்கு போடுறது நீ. அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இப்போ வந்து இங்கே உட்கார். இல்லனா உனக்கு எதிர்ல இருக்கிற பையன் உன்னைப் பார்த்து சைட் அடிச்சுட்டே இருப்பான்”
அவன் கூறியதைக் கேட்டு எதிரில் பார்வையைச் செலுத்த, அடுத்த மேசையில் அமர்ந்திருந்தவனின் பார்வை தன்னைத் தீண்டுவதைக் கண்டு வெடுக்கென எழுந்தாள்.
இருவரும் இடம் மாறி அமர்ந்து கொள்ள, “இதை முதல்ல சொல்லி இருக்கலாமே” அவன் முகத்தை நோக்க,
“எல்லாம் உனக்கு விளக்கம் சொல்லனுமா? நான் எதையாவது சொல்லும் போது அதில் ஒரு காரணம் இருக்கும்னு நீ புரிஞ்சுக்கனும் நிலா. மத்தவங்க முன்னாடி நான் எதையாச்சும் சொன்னால் நீ சண்டை போடுற மைண்ட்ல கேள்வி கேட்டு என்னை அவங்க முன்னால அவமானப்பட விடுவியோனு யோசனையா இருக்கு” என்று அவன் சொல்ல திகைத்துப் போனாள் நிலா.
“இ..இல்லை. நான்..” என பேச வந்தவளுக்கு அவன் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியவில்லை.
அவன் சொல்வது முற்றிலும் உண்மை அல்லவா? இத்தனை நாளாக தான் நினைத்தது போல் அவன் இல்லை என்று எண்ணியவளுக்கு முதல் முறையாக, அவன் நினைப்பது போல் தான் இல்லையோ என்று தோன்றியது.
ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணி வரவும் இருவரும் சாப்பிட்டனர். பக்கத்து மேசையில் இருந்த ஜோடி சிரித்தவாறு கொஞ்சிக் கொஞ்சி ஊட்டி விடுவது தெரிந்தது.
தேன் நிலாவின் பார்வை அவர்களைத் தழுவி விட்டு ராகவ் மீது ஒரு வித ஏக்கத்துடன் படிந்தது. தனக்கு வருபவனோடு அன்பொழுக ஊட்டி மகிழ வேண்டும் என்பது அவளது நெடுநாள் அவா.
எனினும், அவையெல்லாம் நிறைவேறாமல் வெறும் ஏக்கங்களாகவே கரைந்து போவது ஏனோ?
நொடிப்பொழுதில் கலங்கி நின்றாள் காரிகை.
அவனோ தன் பாட்டில் சாப்பிட்டாலும் பக்கத்து மேசையில் நடந்ததைக் கண்டவனுக்கும் உள்ளத்தில் அவ்வாசை ஏக்கமாய் கறை படிந்தது.
ஆசைகள் இருவருக்கும் இருந்தன. எனினும் அவற்றை வெளிப்படுத்தி தீர்த்துக் கொள்ளாமையே பெரும் பிரச்சினையாகிப் போனது.
சாப்பிட்டு குளிர் பானம் அருந்தியவளோ, “நீங்க குடிக்கலயா?” என்று கேட்க, “நைட்ல கூல் குடிக்க மாட்டேன்” என சாய்ந்து அமர்ந்தான்.
“டாக்டர் சார் கவனமா தான் இருக்கீங்க. நம்மளுக்கு அதெல்லாம் செட்டாகாது. காணுற நேரம் குடிச்சிடுவோம்” என குடித்து முடித்தாள்.
“நெஜமாவே இந்த ஹோட்டல் அழகா இருக்குங்க. என்னை ஒரு ஃபோட்டோ எடுத்து கொடுங்க” அலைபேசியை அவள் நீட்ட, அதை வாங்கியவனோ விதவிதமாக போஸ் கொடுத்தவளை ஃபோட்டோ எடுத்துத் தள்ளினான்.
காரினுள் சென்று அமர்ந்ததும், அவனே பாட்டு போட்டவாறு காரைச் செலுத்தினான்.
“அதிசயமா பாட்டு போட்டிருக்கீங்க?” அவனுக்குப் பிடிக்காதே என்று அதிசயிக்க,
“எனக்குப் பிடிக்காது தான். ஆனால் இப்போ உன்னையும் சேர்த்து யோசிக்க வேண்டிய நிலை எனக்கிருக்கு. வரும் போது எனக்காக போடல. போறப்போ உனக்காக போடுறேன். தட்ஸ் இட்” தோளைக் குலுக்கினான் ராகவ்.
“அவ்ளோ கஷ்டப்பட்டு எனக்காக ஒன்னும் செய்யனும்னு நான் எதிர்பார்க்கல” அவனுக்குப் பிடிக்காததை செய்ய வேண்டாமே என்ற எண்ணத்தில் அவள் கூற,
“கஷ்டப்பட்டு செய்றேனோ இஷ்டப்பட்டு செய்றேனோ, செய்ய வேண்டியத நான் கண்டிப்பா செய்வேன். நீ வாயை மூடிட்டு வர்ற வழியைப் பார்” பொங்கி வந்த கோபத்தை அவனால் அடக்க முடியவில்லை.
அவனும் அமைதியாக இருக்க வேண்டும், சகஜமாக பேச வேண்டும் என்று தான் நினைக்கிறான். ஆனால் இவள் கோபத்தைத் தூண்டும் படி பேசுகிறாளே என ஆயாசமாக வந்தது.
“உங்களுக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது? நீங்க கோபப்பட்டு பார்த்ததே இல்லை” சிறு அச்சத்தோடு அவள் கேட்க,
“நான் ஒன்னும் கோபக்காரன் கிடையாது. ஆனால் நீ தேவையில்லாம பேசி கோபப்பட வைக்கிற” காரை வேகமாகச் செலுத்தினான்.
“உண்மை தாங்க. நான் உங்க வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது. உங்களை கோபப்படுத்துறேன். கஷ்டப்பட வைக்கிறேன்” குற்றவுணர்வோடு பிதற்றினாள் தேன் நிலா.
“உனக்கு என்ன பதில் வேணும்?” அவள் பேச்சில் கோபம் பெருக்கெடுத்தது அவனுக்கு.
“நான் சொன்னது உண்மை தானே?” தேவையில்லாமல் பேசி அவனை கஷ்டப்படுத்துகிறோமோ எனும் எண்ணத்தில் கேட்டாள்.
“ஆமா உண்மை தான். நீ என் வாழ்க்கையில் வந்திருக்க கூடாது. அன்னிக்கு தாலி கட்டுற நேரம் வராமல் நான் எங்கயாச்சும் போயிருக்கனும். அங்கே தப்பு பண்ணிட்டேன். அதைப் பண்ணியிருந்தா இந்த வேண்டாத கல்யாணம் நடந்திருக்காது. இந்த மாதிரி சண்டை பிடிச்சு சாகவும் தேவையில்லை” ஆக்ரோஷமாக சீறினான் கணவன்.
அவன் இல்லை என்று சொல்வான் என எதிர்பார்த்தாள். அதற்கு மாறாய் ஆம் என்றதும் மொத்தமாய் சிதைந்து போனது உள்ளம்.
வீடு வந்ததும் அவளைப் பார்த்து, “இப்போ உனக்கு சந்தோஷமா? என் வாயாலேயே இப்படி சொல்ல வெச்சிட்டல்ல. சந்தோஷமா இரு” என விருட்டென வெளியேறினான்.
அவன் கோபத்தில் கதிகலங்கியவளுக்கு சகலமும் உறைந்திருக்க, “ரா..கவ்” என்று அழைத்தது காற்றோடு கரைந்து போனது.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-11-17