10. நேசம் நீயாகிறாய்!

4.9
(10)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

 

நேசம் 10

 

உயிர்ப்பின்றி அறையினுள் வந்தவள் கண்டது என்னவோ பல்கோணியில் நின்று கொண்டிருந்தவனைத் தான்.

“என்னங்க” மென் குரலில் அழைக்க, “அதான் உனக்கு வேண்டிய பதிலைத் தந்து சந்தோஷப்படுத்திட்டேன்ல.‌ இன்னும் என்ன வேணும்?” கோபமாய்க் கேட்டான் ராகவ்.

அவளுக்கோ கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது. என்ன பேசுவது, அவனை எவ்வாறு சமாதானம் செய்வது என்று கொஞ்சமும் புரியவில்லை.

அவனுக்கும் தனக்கும் ஒத்து வரவில்லை. விருப்பமின்றி நடந்த திருமணம் தான் இதற்கு காரணம் என்று நினைத்தவளுக்கு, அவனுக்கு தன்னால் எவ்வித சந்தோஷத்தையும் கொடுக்க முடியவில்லையே என்ற எண்ணம்.

நடந்ததை ஏற்றுக் கொள்ளாமல் திருமணம் நிகழ்ந்திருக்கவே கூடாது என்று நினைக்கும் அவள் மீது அவனுக்குக் கோபமாய் வந்தது. அனைத்தையும் யதார்த்தமாக ஏற்றுக் கொள்ளாமல் விதண்டாவாதம் புரிகிறாளே என்பது அவனது எண்ணம்.

இரு எண்ணங்களும் முரண்பட்டுக் கிடக்க, அவை மோதலையும் முறுகலையுமே கொடுக்கலாயிற்று.

மேற்கொண்டு பேசினால் வேறு ஏதாவது கருத்து முரண்பாடு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சியவள் உடை மாற்றி விட்டு சோஃபாவிற்குச் செல்ல,

உள்ளே வந்தவன் அவள் மீண்டும் அதிலேயே தூங்கப் போவதைக் கண்டு பலமாக முறைத்தான்.

“நான் எதுவுமே பேசலங்க. இப்போ எதுக்கு சுடச்சுட பார்வையை வீசுறீங்க?” பாவமாகக் கேட்டாள் தேனு.

“நேற்று சோஃபாவில் படுத்து கழுத்து வலி வந்ததை மறந்துட்ட போல. அதில் தூங்காத” என்று கூற, “எனக்கு தரையில் தூங்கி பழக்கம் இல்லை. அதற்கு இந்த சோஃபாவே பரவாயில்லை” பெட்சீட்டை உதறியவாறு பதிலளித்தாள்.

“ஏய் அரை மெண்டல்! இவ்ளோ பெருசா கட்டில் இருக்கே. அதுல தூங்க சொல்லுறேன். அதில் தூங்கினேனு நான் காலால எட்டி உதைச்சிட மாட்டேன்” என வார்த்தைகளை பல்லிடுக்கில் சிறைப்படுத்தினான்.

“நீங்க உதைக்க மாட்டீங்க. ஆனால் நான் உதைப்பேன். தூங்கினா யாராச்சும் என்னை எழுப்பும் வரை முழிப்பு வராது. அதுக்குள்ள என்ன பண்ணாலும் எனக்கு தெரியாது” என்று அவள் சொல்ல,

“ஆமா! எனக்கு வலிக்க இவ கால் நூறு‌ கிலோ இருக்குமோ. கால் கிலோ கூட இருக்காது. இதுல சப்பைக்காரணம் ஒன்னு வேற” ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினான் காளை.

“உங்களுக்கு தூக்கம்னா போய் தூங்குங்க. நான் இங்கேயே..” என்றவளின் வார்த்தைகள் அத்தோடு தடைப்பட்டு நின்றன.

சோஃபாவில் அல்ல, ராகவ்வின் கைகளில் அல்லவா தவழ்ந்து கொண்டிருந்தாள் அவள்? பின் எங்கனம் பேச்சு வரும்?

பேசினால் சரிப்பட்டு வர மாட்டாள் என நினைத்து அவளை அலேக்காக தூக்கி கண்ணிமைப் பொழுதில் கட்டிலில் கிடத்தியிருந்தான்.

“ஆத்தீஈஈ” சற்று முன் நிகழ்ந்த அதிர்விலிருந்து இன்னமும் மீளாமல் வாயைப் பிளக்க, “பேசாம தூங்கு. ஒத்த வார்த்தை வரக் கூடாது” மிரட்டல் விடுத்து விட்டு மறுபுறம் சென்று சாய்ந்தான்.

அதற்கு மேல் பேசாமல் கண்களை மூடியவள் அடுத்த இரு நொடிகளில் உறக்கத்தைத் தழுவ, “சண்டைக்கோழி” என்று முணுமுணுத்தவாறு துயில் கொண்டான் ராகவ்.

மறுநாள் விடியலில் முதலில் உறக்கம் கலைந்தது தேன் நிலா தான். கண்களை சிமிட்டி தலை தூக்கியவளின் முகத்தில் ஒருவித குறுகுறுப்பு.

சட்டென கண்களை விரித்துப் பார்க்க, அவன் மார்பில் முகம் புதைத்திருந்தாள். வெடுக்கென எழுந்து கொள்ளப் போனவளால் அது முடியவேயில்லை. அத்தனை இறுக்கமாக அவளிடையை அழுத்திப் பிடித்தவாறு தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான் ராகவேந்திரன்.

விடுபடத் திமிறியும் அவளால் முடியாது போக, அப்படியே அவன் மார்பில் தலை சாய்த்திருந்தாள். சொல்லொணா உணர்வொன்று மனதை ஆட்கொண்டது.

சற்று நேரம் கழித்து எழுந்தவனுக்கோ தான் அவளை அணைத்திருப்பது புரிய, “அடக்கடவுளே! இவளைப் பிடிச்சுக்கிட்டது மட்டும் தெரிஞ்சுது அடுத்த ஆட்டத்தை ஆரம்பிச்சிருவா” என முனகியவாறு கரங்களை விலக்கி அவளுக்கு விளங்காமல் மெல்ல எழும்ப எத்தனித்தான்.

“இப்போ மட்டும் தெரியாதுனு நெனச்சுட்டீங்களா?” என்று இமை திறந்து கேட்டாள் அவள்.

“ஓஓ அப்போ தெரிஞ்சு போச்சா?” இளித்து வைக்க, “இதையே நான் பண்ணுனா என்ன பண்ணுவீங்க?” என்று பதில் கேள்வி விடுத்தாள்.

“சண்டை போட மாட்டேன். சாவகாசமா நானும் பதிலுக்கு அணைச்சிட்டு தூங்கிடுவேன். அவ்ளோ தான்” அவளைக் கீழ்க்கண்ணால் நோக்க,

“என்ன நெனச்சிட்டு இருக்கீங்க மனசுல?”

“நிச்சயமா உன்னை இல்லை”

“என்னை நினைக்கவும் தேவையில்லை. சும்மா பேச்சு வளர்க்காம நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்க” என முறைப்பை அள்ளி வீசினாள்.

‘கேள்’ என்பதாக தலையசைக்க, அவனைப் பார்த்தவாறு வினவினாள்.

“எதுக்கு என்னை ஹக் பண்ணுனீங்க?”

“ஹலோ மேடம். தூக்கத்தில் தெரியாம நடந்துருச்சு. நீ உதைச்சத நான் கேட்கலையே. அதே மாதிரி இதை நீயும் கேட்கக் கூடாது. என்னவோ நான் வேணும்னே பண்ணுன மாதிரி சீன் போடுற” அவளைப் பாராமல் பதிலுரைத்தான்.

“இல்லையே வேணும்னு பண்ண மாதிரி தான் இருந்துச்சு. அப்படினா ஓகே. ஆனால் மறுபடி தூங்கும் போது பில்லோவை நடுவில் வெச்சுட்டு துங்கனும். யாரு யார் பக்கத்தில் வர்றாங்கனு அப்போ புரியும்” தீவிரமாக அலசி ஆராய்ந்து அவள் சொல்ல,

“பெரிய முடிவு. போய் ஐநா சபையில் சொல்லு. பில்லோ சுவர் கட்டப் போற மூஞ்சைப் பார். பார்ப்போம் யார் அதை உடைக்கிறாங்கனு” என குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

நேரங்கள் மெல்லமாய் நகர, ஹாஸ்பிடல் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ராகவ். அவன் கண்ணாடி பார்த்து முடி சீவ, தேன் நிலா ஒரு கவுனை சிரத்தையுடன் தைத்துக் கொண்டிருந்தாள்.

அவனது ஷர்ட்டில் இருந்த பொத்தான் கழன்று கீழே விழ, “அச்சச்சோ” என அதைக் கையில் எடுத்தவன் வேறு ஷர்ட் எடுக்கப் போக, நடந்ததை அவதானித்தவளோ “இருங்க இருங்க” என ஊசியை எடுத்துக் கொண்டு வந்தாள்.

“எதுக்கு?” புரியாமல் அவன் கேட்க, “எப்போ பாரு என் கூட சண்டை போடுறீங்கள்ல. அதான் வாயைத் தச்சு விடப் போறேன்” என்றாள், ஊசியைக் காட்டியவாறு.

“வை திஸ் கொலவெறி?” அலறினான் ஆடவன்.

“பொத்தானைக் கொடுங்க தச்சு தரேன்” என்று சொல்ல, “வேற ஷர்ட் போட்டுக்கலாம்னு நெனச்சேன்” என தனது அபிப்பிராயத்தைக் கூறினாலும் ஷர்ட்டைக் கழற்றி நீட்டினான்.

“சின்ன பொத்தான், அதைப் பொருத்திக்கிறதை விட்டுட்டு ஷர்ட்டையே மாற்றனுமா?” என்று கடிந்து விட்டு பொத்தானைத் தைக்க,

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வை அவளைக் குறு குறுக்க வைத்திட, “எதுக்கு அப்படி பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.

“என் கண்ணு. நான் பார்ப்பேன். நீ பேசாம தச்சு குடு” என்றான் தன் பார்வையை மாற்றாமல்.

“நல்லா பேசுறீங்க. என் கண்ணால நான் பார்க்கப் போனா நீங்க ஓடுவீங்க” என்றவாறு ஷர்ட்டை நீட்ட, அதை அணிந்து விட்டு “நான் எங்கேயும் ஓட மாட்டேன். எங்கே ஓட வை பார்ப்போம்” என்று சவால் விட்டான்.

“இதோ பாருங்க” அவனை நெருங்கி வந்து கண்களை உற்றுப் பார்க்க, அவன் விழிகளும் அவளின் நயனங்களை ஆழ்ந்து நோக்கின.

படபடக்கும் அவளிமைகள் அவனிதயத்தில் கானமிசைக்க, அவன் விழிகளின்‌ கட்டியிழுக்கும் பார்வையில் ஈர்க்கப்பட்டது மலரவளின் மென்னிதயம்.

 

🎶 கண்ண காட்டு போதும்

நிழலாக கூட வாரேன்

என்ன வேணும் கேளு

குறையாம நானும் தாரேன் 🎶

🎶 நச்சுனு காதல கொட்டுற ஆம்பள

ஒட்டுறியே உசுர நீ நீ ..

நிச்சயமாகல சம்பந்தம் போடல

அப்பவுமே என் உசுரு நீ நீ 🎶

🎶அன்புல வெத வெதச்சி

என்ன நீ பறிச்சாயே ..🎶

 

இருவரும் ஒருவரை ஒருவர் மறந்து லயிக்க, “ஓட வைக்கல. இப்படி ஒட்டிக்க வைக்குற” தமக்கு இடையில் இருக்கும் நெருக்கத்தைச் சுட்டிக் காட்ட,

“நீங்க என்னமோ‌ மாயம் பண்ணுறீங்க. அந்த கண்ணுல என்ன இருக்கு?” விலகி நின்று கொண்டாள் அவள்.

“மாயமும் இல்லை மந்திரமும் இல்லை. அதில் ஒரு தந்திரம் இருக்கு. நீயே கண்டுபிடி” என கண்களைச் சிமிட்ட, “புதிர் போடுறதே உங்களுக்கு வேலையாப் போச்சுல்ல” முறுக்கிக் கொண்டாள் மாது.

“அதை விடு. உனக்குத் தந்த டைம்ல இன்னும் நாலு நாள் மீதமிருக்கு. ஞாபகம் இருக்குல்ல?” என்று கேட்டவன், “பொத்தானுக்கு ஒரு கருத்து சொன்னியே. அதை வாழ்க்கையோடவும் ஒப்பிட்டுப் பார்” எனக் கூற சற்று முன் சொன்னதை மனம் அசை போடலானது.

ஷர்ட்டை மாற்றாமல் பொத்தானை மட்டும் சரி செய்யக் கூறினாள். அப்படியென்றால் கிடைத்த வாழ்க்கையையும் மாற்றிப் போடவோ தவறென்று தூக்கிப் போடவோ தேவையில்லை. மாறாக, கழன்ற பொத்தானை பொருத்தியது போல் பிடித்தமின்மையை பிடித்தமாக மாற்றி மணவாழ்க்கையில் மனதைப் பொருத்திக் கொண்டால் யாவும் சரியாகி விடும் என்கிறானா?

“எக்ஸாட்லி! உன் நினைப்பு எதுவோ அதைத் தான் சொன்னேன். புரிஞ்சுருச்சுல்ல‌. இதைப் புரிஞ்சுக்கிட்டா நாலு நாள் கேப் கூட அதிகம்னு உனக்கே தோணும்” என்று புன்னகை பூத்தான்.

‘மனசுல இருக்கிறதை கண்டுபிடிக்கிற மாயவித்தையைக் கத்து வெச்சிருக்கான் மீசைக்காரன்’ அவனது மீசையைப் பார்த்து மறதினுள் பொரிந்து தள்ள,

“என் மீசை மேல எதுக்கு கண்ணு வைக்கிற?” என அவன் கேட்க, “அழகா இருக்கேனு பார்த்து ரசிச்சேன் போதுமா?” என்றாள்.

“அப்படியே ரசிச்சு பார்த்துட்டாலும். உனக்கெல்லாம் ரசனை உணர்வு இருக்கா?”

“உங்களுக்கு கொஞ்சமாச்சும் பொறுப்புணர்வு இருக்கா? ஹாஸ்பிடல் போக ரெடியாகிட்டு கடலை போடுறீங்க?” அவனை அனுப்பி விடுவதில் குறியாக இருந்தாள் மனைவி.

“கடலை போடுறது யார் கூட தெரியுமா? லவ்வர்ஸ் கூட. அப்படினா நாம லவ்வர்ஸ்னு சொல்லுறியா?” அவன் தலை சரித்துக் கேட்க,

“இல்லை. நாம கணவன் மனைவியும் இல்லை. புதுசா கல்யாணமான ஜோடியும் இல்ல. லவ்வர்ஸும் இல்ல” எங்கே எதையாவது சொன்னால் அன்று போல் முத்தம் தந்து விடுவானோ, இல்லையெனில் கட்டிப் பிடித்து விடுவானோ என்ற எண்ணத்தில் படபடவென பேசினாள்.

“இல்லைனு உன் வாய் சொல்லுது. ஆனால் கழுத்து நீ சொல்வதை பொய்னு நிரூபிக்குதே நிலா” அவளது தாலியைக் காண்பித்தவன் அவள் வாய் திறக்கும் முன் அணைத்து விடுவித்தான்.

“டேய் ரோஸ் மில்க்” என்று கத்த, “வர்றேன் ஹனி மூன்” என சிட்டாகப் பறந்திருந்தான் ராகவேந்திரன்.

“தாலியைக் காரணம் காட்டியே காரியம் சாதிக்கிறான்” என்று புலம்பிக் கொண்டவள் மரகதத்திற்கு சமையலில் உதவினாள்.

தைக்கும் துணிகளை எடுப்பதற்காக தனது வீட்டிற்குச் சென்றாள் தேனு. அவளைப் பார்த்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் முகம் திருப்பிய தம்பியைக் கண்டதும் அவளுக்கு யோசனை முகிழ்த்தது.

“டேய் இங்கே வா” என அவனை அழைத்து, “என் கிட்டே எதையாவது மறைக்கிறியா?” நேரடியாகவே கேட்டாள்.

அவனோ அக்காளின் முகத்தைப் பார்த்து விட்டு அமைதியாக நிற்க, “உன்னைத் தான் கேட்கிறேன் துருவா” என்றாள், சற்றே கடுமையாக.

அவளது கரங்களைப் பற்றிப் பிடித்து எதையோ சொன்னான் துருவன். அவன் சொன்னதைக் கேட்ட தேனு அதிர்ச்சியோடு நின்றாள்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-17

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!