அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 98🔥🔥

5
(5)

பரீட்சை – 98

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

உன் உன்னதமான 

காதல் மேல் 

என்னையும் 

அறியாமல்..

உளமாற காதல் 

கொண்டேனடா..

 

அந்த உண்மை 

காதலுக்கு 

உரிய பெண்ணாய்

இந்த பேதை 

இல்லையே என

ஏங்கி ஏங்கி 

தவிக்கிறேனடா..

 

விளையாட்டாய் உன் 

வாழ்வில் வந்தவள்

உன் உள்ளத்துள்

நுழைவதற்கு

வழி தெரியாமல்

உன்னின்று

விலகி 

நிற்கிறேனடா..

 

என் உயிரான 

உயிரே..!!

 

######################

 

உயிரான உயிரே..!!

 

“நீங்க தான் ஏதேதோ செஞ்சு அந்த நித்திலாவையே போலீஸ் ஸ்டேஷன்ல சரண் செத்ததை பத்தி பொய் சாட்சியே சொல்ல வச்சிட்டிங்களே..”  

 

ராம் புன்னகைத்தபடி சொல்ல மெலிதாய் இதழ் விரித்த அருண், “ம்ம் ம்ம்.. அப்படி செய்யறதை தவிர அவளுக்கு வேற வழி இருக்கல.. அவளுக்கு நான் வேற எந்த ஆப்ஷனும் விட்டு வைக்கல.. இப்பவும் ஒவ்..வொரு ஸெக்க..ண்ட்டும் அவ என்னை நினைச்சு பயந்து கிட்டு தான் இருப்பா..”

 

கண்களை இடுக்கி நித்திலாவின் உருவம் மனதில் தோன்றிய அந்த நொடி ஒரு குரூரமான பார்வையோடு சொன்னான்..

 

அவன் சொன்னதை கேட்ட ராம் சிறிது குழப்பம் அடைந்தான்.. “அப்படின்னா நாங்க எல்லாம் அந்த மலையிலிருந்து கிளம்பி வந்த அப்புறம் நீங்க நித்திலாவை மீட் பண்ணீங்களா?” குரலில் சிறிதும் குழப்பம் அகலாமல் கேட்டான் ராம்..

 

குறுநகையோடு வேகமாக மேலும் கீழுமாய் தலையாட்டிய அருண் “ஆமா.. அப்படி இல்லன்னா நித்திலா அவ வாயால போலீஸ் ஸ்டேஷன்ல வந்து அப்படி ஒரு கதை சொல்லி இருப்பான்னு நினைக்கறீங்களா?”

 

கேட்டவனை வியப்போடு பார்த்தான் ராம்.. “ப்ளீஸ்.. அங்க என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காம எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு.. அங்க என்னதான் நடந்துச்சுன்னு சீக்கிரம் சொல்லுங்களேன்”

 

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அங்கு என்ன நிகழ்ந்தது என்று அறிந்து கொள்ளும் பேராவலோடு கேட்டவனை பார்த்து அழகாய் சிரித்தான் அருண்..

 

“சொல்றேன்.. நிச்சயம் சொல்றேன்.. சொல்லாம நான் எங்கேயும் போறதா இல்ல… எல்லாத்தையும் சொல்லிட்டு உங்க முகத்தில் இருக்கிற நிம்மதியை பார்த்த அப்புறம் தான் நான் போவேன்..”

 

இறப்பை எதிர் நோக்கி இருக்கும் அவன் குரலில் விரக்திக்கு பதிலாக சந்தோஷமே நிரம்பி இருந்ததை உணர்ந்த ராமின் கண்ணுக்கு அவன் ஒரு வினோதமான பிறவியாகவே தெரிந்தான்..

 

“ஆக்சுவலா நீங்க அன்னைக்கு அந்த மலையில் இருந்து கீழே விழுந்தப்போ எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகமும் வரல.. உங்களோட டெட்பாடி கிடைக்கலன்னும் சரணோட டெட்பாடி தான் கெடைச்சுதுன்னும் போலீஸ் வந்து சொன்னப்ப தான் எனக்கு சந்தேகம் வந்துச்சு.. அப்பறம் நித்திலாவும் விஷ்வாவும் போலீஸ் ஸ்டேஷன்ல வந்து சரண் செத்துப் போனது பத்தி சாட்சி சொல்லும் போது தான் ஏற்கனவே எனக்கு நீங்க மலை மேலருந்து விழுந்தப்ப வேணும்னே குதிச்ச மாதிரி தோணினது சந்தேகத்தை அதிகமா ஆக்கிச்சு.. இல்லேன்னா இந்நேரம்..” அதற்கு மேல் சொல்ல முடியாமல் இழுத்தபடி நிறுத்தினான் ராம்.. 

 

“தெரியும்.. அப்படி இல்லன்னா இத்தனை நேரம் நான் பரலோகத்துக்கு போயிட்டேன்னு நீங்க எல்லாரும் முடிவு கட்டி இருப்பீங்க.. அதானே..?” புன்னகை முகம் மாறாமல் கேட்டான் அருண்..

 

“ஆமா.. நீங்க சொல்றது சரிதான்.. ஏன்னா  நீங்க அவ்வளவு  ஹைட்லருந்து குதிச்சு கீழ விழுந்திட்டு இருந்தப்போ கிட்டதட்ட 20 அடிக்கு மேல நீங்க கைல தாலியோட தேஜூவை பார்த்துக்கிட்டே விழுந்ததை ரொம்ப தெளிவா நாங்க பார்த்தோம்.. ஆனால் 20 அடிக்கு அப்புறம் ஒரே பனி மூட்டமா இருந்தது.. அதுக்கு அப்புறம் நீங்க எங்க விழுந்திங்கன்னு கூட எங்களுக்கு தெரியல.. ஆனா அவ்வளவு உயரத்திலிருந்து நீங்க தெரியாம தடுமாறி விழுந்திருந்தாலும் சரி.. இல்லை யாராவது புடுச்சு தள்ளி விழுந்து இருந்தாலும் சரி.. இல்ல நீங்களா குதிச்சு விழுந்து இருந்தாலும் சரி… ஏதாவது ஒரு பாறை மேல விழுந்திருந்தீங்கன்னா நீங்க உயிர் பிழைக்கறதுக்கு ரொம்ப குறைவான வாய்ப்பு தான் இருந்திருக்கும்ன்னு நாங்க முடிவே பண்ணிட்டோம்.. ” தான் ஏதோ மிகவும் தவறாக பேசி விட்டது போல் தலையை குனிந்து கொண்டான் ராம்..

 

“நீங்க எல்லாம் நான் ஏதோ ஒரு பாறையில என்னோட தலை மோதி மண்டை சிதறி செத்துப் போய் இருப்பேன்னு நினைக்கணும்னு தானே கஷ்டப்பட்டு அந்த பனிமூட்டத்தையே உருவாக்குனோம்.. அப்புறம் அவ்வளவு கஷ்டப்பட்டதுக்கு யூஸ் இல்லாம போனா எப்படி?” விஷம சிரிப்போடு கேட்டான் அருண்..

 

“என்னது பனி மூட்டத்தை உருவாக்கினீங்களா?” புரியாமல் கேட்டவனை பார்த்து மெலிதாய் இதழ் விரித்தான் அருண்..

 

“அது.. நீங்க எல்லாம் அப்போ ரொம்ப எமோஷனலா இருந்தீங்க.. அதனால உங்களுக்கு தெரியல.. ஒரு 100 மீட்டர் அந்த மலையிலேயே தள்ளி போய் எட்டி பார்த்திருந்தீங்கன்னா பனியே இருந்திருக்காது.. அந்தப் பனிமூட்டம் செயற்கையா செட் பண்ணது.. இந்த விஷ்வாவும் வைஷுவும் ஜர்னலிஸ்ட்ஸா இருந்ததுனால எனக்காக அவங்க செஞ்ச ஒரு உருப்படியான வேலை அது.. ரெண்டு பேருமே மீடியா பசங்க.. விஸ்காம் படிச்சவங்க.. அவங்களுக்கு ஃபேக்கா எப்படி பனிமூட்டத்தை உருவாக்கறது.. மழை பெய்ய வைக்கறது.. சினிமால மலை மேலருந்து பள்ளத்துல விழுந்து சாகற மாதிரி எப்படி எல்லாம் சூசைட் இல்லைனா கொலை சீன் எல்லாம் ஷூட் பண்றாங்க.. இந்த டெக்னிக் எல்லாம் நல்லாவே தெரிஞ்சிருந்தது.. அந்த ஸ்கில்ஸை எல்லாம் நான் யூஸ் பண்ணிக்கிட்டேன்.. ரெண்டு பேரும் அத்தனையும் தப்பே இல்லாம சரியா பண்ணி முடிச்சாங்க… அந்தப் பனி மூட்டத்துக்கு கீழே ஒரு நெட்ல தான் நான் விழுந்தேன்.. உண்மைய சொன்னா அதுவரைக்கும் எனக்கு தொந்தரவா தெரிஞ்சவங்க இந்த விஷயத்துக்காக எனக்கு எல்லா விதத்திலயும் ஹெல்ப் பண்ணினப்போ இவங்களை நான் சந்திச்சது பிளசிங் இன் டிஸ்கைஸ்னு தோணுச்சு” 

 

முதல் முறையாக வைஷூவின் பக்கம் கனிவான பார்வையை செலுத்தி ஒரு குறுநகையோடு  சொன்னவனை தன் விழியை விரித்து நம்ப முடியாமல் பார்த்தாள் வைஷு..

 

ஓடி வந்து அவன் இரு கன்னங்களையும் தன் கைகளால் கிள்ளிய வைஷு குழந்தை போல் குதித்துக் கொண்டு “இது போதும் சார்… எப்பவுமே என்னை கோவமா பாக்குற நீங்க இப்ப பாத்தீங்களே ஒரு பார்வை.. அப்படியே மனசுல ஒட்டிக்கிச்சு சார்.. இந்த ஒரு பார்வை போதும் சார் எனக்கு” 

தன் கன்னங்களை கிள்ளிக்கொண்டிருந்த அவள் கைகளையும் முகத்தையும் நோக்கி தன் பார்வையை செலுத்தி முறைத்தான் அருண்..

 

அவன் பார்வை மாறியதை புரிந்து கொண்டவள் சட்டென தன் கைகளை விலக்கி கொண்டாள்.. “ஒரு செகண்ட் தான்.. அதுக்குள்ள பழைய ஃபார்ம்க்கு போயிட்டீங்களா? இனிமே நீங்க இப்படியே இருங்க சார்.. எனக்கு ஒன்னும் கவலை இல்லை.. நீங்க இப்போ என்னை அன்பா பார்த்து சிரிச்சீங்க இல்ல..? அதை என் மனசுல ஃபோட்டோ புடிச்சுக்கிட்டேன்.. இனிமே நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அது என் மனசை விட்டு போகவே போகாது..”

 

சொன்னவளின் தலையில் தன் கையால் லேசாக தட்டினான் அருண்.. “ஏ லூசு.. போ.. உருப்படியா வேற ஏதாவது வேலை இருந்தா பாரு.. அதெல்லாம் இன்னும் பத்து நாள்ல ஹேன்ட்ஸம்மா சிக்ஸ் பேக்கோட ஏதாவது ஒரு ஆக்டரை இண்டர்வியூ பண்றதுக்காக பார்த்தா என்னோட இந்த ஃபோட்டோ எல்லாம் இருக்கிற இடம் தெரியாம அழிஞ்சு போயிடும்..” 

 

அவனை அதற்கு மேல் ஒரு நொடி பார்த்திருந்தால் அவனை இறுக்கி அணைத்தபடி கதறி அழ ஆரம்பித்து விடுவாள் என அறிந்தவள் சட்டென தலையை திருப்பிக் கொண்டு அவனுக்கு ஏதோ ஆரஞ்சு பழச்சாறு கலப்பது போல் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொண்டு கத்தி எடுத்து வெட்ட ஆரம்பித்து விட்டாள்.. கலங்கிய தன் கண்களை அவனுக்கு தெரியாமல் துடைத்துக் கொண்டாள் பேதை அவள்..

 

“அவ கெடக்குறா கிராக்கு.. விடுங்க.. நான் கீழ குதிச்ச அப்புறம் நீங்க இருந்த இடத்துல ஒரு ஆளு மிஸ் ஆகி இருப்பாங்களே? தேடி இருப்பீங்களே..”

கேட்டவனை நோக்கி ஒரு அர்த்தமுள்ள சிரிப்பை உதிர்த்தான் ராம்..

 

“அப்பவே நாங்க கிளம்பும்போது வைஷுவை தேடினோம்.. விஷ்வா கிட்டயும் கேட்டேன்.. அவனுக்கும் தெரியலன்னு சொல்லி சாதிச்சிட்டான்… நல்ல நம்பிக்கையான ஆளுங்க தான் ரெண்டு பேரும்..” வைஷூவை பார்த்தபடி சொன்னான் ராம்..

 

“அது என்னவோ உண்மைதான்.. வைஷு கீழ நான் நெட்ல விழுந்த இடத்திலிருந்து என்னை கார்ல பிக்கப் பண்ணிக்குறதுக்கு தான் அங்கே இருந்து வந்தா.. என்னோட இருந்து என்னை பார்த்துக்கிட்டது வைஷூன்னா மலை மேல நித்திலாவும் சரணும் மட்டும் தன்னோட இருக்கிற மாதிரி பார்த்துக்கிட்டது விஷ்வா..” 

 

அவன் சொன்னது அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது அருணுக்கு.. விஷ்வா நிலவழகன், சின்ன பையன் எல்லோரையும் அங்கிருந்து துரத்தி விடுவதிலேயே குறியாய் இருந்தது.. அதன் பிறகு இருவரையும் ஏதோ சொல்லி காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பியது இதற்கெல்லாம் என்ன காரணம் இப்போது புரிந்தது ராமுக்கு..

 

“இந்த விஷ்வாவும் வைஷூவும் நம்ப முடியாத அளவுக்கு வேலை பண்ணி இருக்காங்க.” என்று வியந்து போனான் ராம்..

 

“ஆமா.. பாக்குறதுக்கு தான் ரெண்டும் அரை லூசு மாதிரி இருக்கு.. ஆனா செய்யற வேலை எல்லாம் ரொம்ப பக்காவா இருந்துச்சு.. ஆக்சுவலா எனக்கு அன்னிக்கு முந்தின நாளிலிருந்து லேசா தலை பின் பக்கம் வலிக்க ஆரம்பிச்சுடுச்சு.. அதை இந்த கிறுக்கி கிட்ட சொன்னப்போ உடனே ஹாஸ்பிடலுக்கு போகணும்னு அடம் பிடிச்சா.. இந்த பிளான் எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம்னு ஒரே பிடிவாதம்.. ஹாஸ்பிடல்க்கு ஒரு வாட்டி போனேனா நான் திரும்புவேனான்னு எனக்குள்ள ஒரு சந்தேகம் இருந்தது.. அதனாலதான் இதை முடிச்சிட்டு தான் ஹாஸ்பிடலுக்கு வரணும்னு நான் ரொம்ப பிடிவாதமா இருந்தேன்..” 

 

“சத்தியமா சொல்றேன்.. உங்க வில்பவர் யாருக்குமே வராது.. ரெண்டாவது முறையா உங்க தலையில் அடிபட்டு இருக்குன்னா உங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்..? அத்தனையும் தாங்கிக்கிட்டு தேஜூவுக்காக இவ்வளவு தூரம் செஞ்சி இருக்கீங்க.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..”

 

“ஆனா வைஷு என்னை ஒவ்வொரு நிமிஷமும் பத்திரமா பாத்துக்கிட்டா.. என் முகத்தில சின்ன சுளிப்பு தெரிஞ்சா கூட பதறி போயிட்டு இருந்தா.. அரை கிறுக்கி.. இப்பவும் பாருங்க.. என்னை விட்டு இந்த பக்கம் அந்த பக்கம் அசையாம கூடவே இருக்கா.. இப்ப கூட விஷ்வாவை பாக்க முடிவு பண்ணிட்டாளே தவிர என்னை விட்டுட்டு போக அவ தயங்கினா.. நான்தான் அவனுக்கு முன்னாடி சொல்லி வச்சதுனால அவன் அந்த ஹோட்டலுக்கு வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பான்னு எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்லி அனுப்பி வச்சேன்.. அனுப்பி வெச்சது நல்லதா போச்சு… இல்லைன்னா உங்களை மீட் பண்ணி மனசு விட்டு இவ்வளவும் பேசி இருக்க முடியாது”

 

“அருண்.. வைஷு பார்க்கத்தான் விளையாட்டுத்தனமா இருக்காங்க.. எவ்வளவுக்கு எவ்வளவு விளையாடுற மாதிரி இருக்காங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு சீரியஸாவே இருக்காங்களோன்னு எனக்கு தோணுது..” ராம் சொல்ல அவன் சொன்னதை மறுத்து இல்லை என்பது போல் தலையாட்டினான் அருண்..

 

“எனக்கு தெரிஞ்சு அப்படி எல்லாம் ஒன்னும் இருக்காது.. இப்ப பாருங்க.. நான் போனப்புறம் ரெண்டு பேரும் மறுபடியும் அவங்க பத்திரிகை ஆஃபீஸ்க்கு போயிட்டாங்கனா வேற கேஸ்ல மூழ்கி போய் இப்ப நடந்ததெல்லாம் சும்மா ஒரு கதை மாதிரி தான் தெரியும் அவங்களுக்கு.. இந்த நிமிஷம் அவங்களை என் கடைசி நாட்கள் ரொம்ப அஃபெக்ட் பண்ணி இருக்கு.. இன்னும் ஒரு ஒரு மாசம் கழிச்சு வேற ஏதாவது கேஸ் வந்ததுன்னா இதை சுத்தமா மறந்துடுவாங்க..”

 

“எனக்கு என்னமோ அப்படி தோணல அருண்..” என்றவன் அருணுக்கு மட்டும் கேட்பது போல் ரகசியமாய் “அதுவும் வைஷுவை பாத்தா எனக்கு அப்படி தோணவே இல்லை.. உங்க விஷயத்துல அவ ரொம்ப சீரியஸா இருக்கிற மாதிரி தான் இருக்கு..” என்று சொன்னான் வைஷூவை பார்த்துக்கொண்டே..

 

வைஷூக்கோ கண்களில் அருவி போல் நீர் பெருகிக்கொண்டே இருக்க இவர்கள் பேசுவது எதுவுமே காதில் விழவில்லை அவளுக்கு.. அவர்கள் புறமிருந்து எதிர்புறமாய் திரும்பி அழுது கொண்டே அவனுக்கு பழச்சாறு கலந்து கொண்டிருந்தாள்..

 

தொடரும்..

 

 

 

 

.. 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!