இனியன், கயல் மற்றும் அச்யுதுடன் அமர்ந்து இருந்தான்!
கயல் மூன்றாம் வருடம் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்து கொண்டு இருக்க, அச்யுத் அவன் நினைத்த படியே, பிஏ தமிழ் லிட்ரேச்சர் தான் எடுத்து இருந்தான்.
“அப்பா அம்மா வரும் போது கரெக்டா ஷூட் பண்ணனும்… வீடியோ எடுக்க ரெடியா இருங்க”, என்று அச்யுத் சொல்ல, “ஆமா நேத்து அவங்களோட நிறைய காத்தாடிகள் கண்டிப்பா கனி பிஎச்டி வாங்குறத வீடியோ எடுத்து போடுங்கனு சொன்னாங்க”, என்று கயலும் கூறினாள்.
ஆம் இன்று கனி முனைவர் பட்டம் பெரும் நாள்!
எம்ஏ, எம்எட் பிறகு இனியனே கனியை பிஎச்டி படிக்க சொல்ல, அவளும் சம்மதித்தாள்.
இப்போது அவர்களின் சேனலில் கிட்டத்தட்ட இருப்பது லட்சம் பேர் இருந்தார்கள்!
சிறு விதையாக அவர்கள் விதைத்தது இன்று பெரிய மரமாக மாறி நின்று இருந்தது!
“அடுத்து முனைவர் பட்டம் பெறுபவர், முனைவர் செங்கனி தமிழினியன்”, என்று அழைக்க, அங்கு விருந்தினரிடம் இருந்து அவளின் பட்டத்தை பெற்று கொண்டாள் செங்கனி!
“முனைவர் செங்கனியை ஒருசில வார்த்தைகள் பேச அழைக்கிறோம்”, என்று சொல்லிவிட்டு விழா தொகுப்பாளர் நகர்ந்து கொண்டார்.
மேடையின் முன் நின்றாள் செங்கனி!
அன்று முதல் மேடையில் ஏறுவதற்கு நின்றவள், இன்று உலக மேடை அத்தனையையும் ஏறி இருந்தாள்!
அவள் செல்லாத நாடே கிடையாது என்கிற அளவுக்கு தமிழ் பேச்சு என்றால் அவள் தான் என்று உரைக்கும் அளவுக்கு பிரபலமும் கூட!
பட்டிமன்றம், மேடை பேச்சு என்று இருந்தாலும், இன்று அவள் ஒரு ஆசிரியை தான்!
அரங்கமே அவளை தான் நோக்கியது!
“அனைவருக்கும் வணக்கம்!
இந்த நாளை நான் ஒருபோதும் எண்ணியதில்லை!
இந்த முனைவர் பட்டம் வெறும் துவக்கமே! இன்றும் நான் ஒரு மாணவியாக தான் உணருகிறேன்!
கற்று கொண்டே இருக்க வேண்டும்! நான் கல்லாதது உலகளவு இருக்கும் போது, எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறுவது பேதைமை அல்லவா!
ஆனால் இந்த சிறு வெற்றியை என் இரண்டு அன்னைகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்! ஆம் இரண்டு அன்னை தான், என்னை ஈன்றவர் ஒரு அன்னை என்றால், எனை அன்னைக்கு பிறகு அன்னையாய் மாறி எனக்கு என்றும் உறுதுணையாய் நின்ற என் மாமியாரும் கூட ஒரு அன்னை தான்!
அவர் இல்லையேல் நான் இல்லை! இன்று அவர் என்னுடன் இல்லை என்று நான் நினைக்கவே இல்லை! எப்போதும் என்னுடன் தான் அவர் இருக்கிறார்! என் மூச்சில், என் தமிழில் கலந்து, எனக்கு உறுதுணையாய் என்றும் இருக்கிறார்!
அடுத்து நான் பெற்ற மாணிக்கங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்!
நான் முதுகலை படிக்க துவங்கியது முதல், எனக்கு உறுதுணையாக இருந்த இரண்டு தூண்கள் அவர்கள் தான்!
அடுத்து என்னுடைய அணைத்து யூட்யூப் ரசிகர்கள், மாணவ செல்வங்கள், என்னுடன் பணிபுரியும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் நன்றி!
இவ்வளவு தான் நான் நன்றி கூறவிருக்கும் நபர்!
என் கணவனுக்கு நான் நன்றி உரைக்க மாட்டேன்!
எனக்கே நான் எப்படி நன்றி உரைக்க முடியும்? என்னில் பாதி அவர், அவரில் பாதி நான்! என்றைக்குமே என்னை நிழலாய் தொடர்ந்து, நான் துவளும் சமயம் என்னை ஊக்குவித்த என்னவருக்கு நன்றி என்று உரைத்தால் அது என்றைக்குமே பத்தாது!
என்னவன் என்று கூறுவதை விட, என் தாயுமானவன், என் அனைத்துமானவன், என்னவன்!
இதை எல்லாம் தாண்டி, நான் நேசிக்கும் தமிழை அவன் பெயரில் சுமப்பவன்!
நான் இதற்கு பிறகும் ஆசிரியையாய் இருக்க தான் விரும்புகிறேன்!
என் தமிழை கற்று, மேலும் மேலும் இந்த உலகிற்கு அதை அனைவரிடமும் கொண்டு செல்ல விரும்புகிறேன்!
என்றைக்கும் இந்த செங்கனியின் மனதில் செந்தமிழ் இருக்கும்!
செந்தமிழின் செங்கனியாக! தமிழினியனின் இனியமையான கனியாக எப்போதும் உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன்!
வாழ்க தமிழ் என்று முடிக்க விரும்பவில்லை!
தமிழ் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது! நாம் தான் அதை அழித்து கொண்டு வருகிறோம்!
அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்! தமிழ் மொழியை மறவாதே!
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க! தமிழ் செழிக்க!”,
என்று அவள் முடித்ததும் அங்கிருந்த அனைவரும் கைதட்ட, கனிக்கோ பொன்னம்மாளின் நிழல் அவளை பார்ப்பது போல் தோன்றியது!
அவளும் கீழே இறங்க, “அம்மா”, என்று இரு பிள்ளைகளும் கட்டிக்கொள்ள, இனியனும் அவளுக்கு கை குலுக்கி அவனின் வாழ்த்துக்களை கூறினான்.
அப்போது அங்கே வந்த ஒரு வெள்ளைக்கார பெண், “கனி இது தான் உன்னுடைய புருஷனா?”, என்று தமிழில் கேட்க, “யாரு இது அம்மா?”, என்ற கயலிடம், “இவங்க கிளாரா… வெளிநாட்ல இருந்து வந்து தமிழை பத்தி ஆராய்ச்சி பன்றாங்க”, என்று அவள் சொன்னதும், “வெளிநாட்டு காரங்களாம் வந்து தமிழை கத்துக்குறாங்க… நம்ப மக்கள் தான் தமிழ் வேண்டாம்னு சொல்ராங்க”, என்று சலிப்பாக தலை ஆட்டினான் அச்யுத்!
அடுத்து கிளாராவிற்கு அவளின் குடும்பத்தை அறிமுகம் செய்து வைத்தாள்.
இனியனோ கிளாராவிடம் அவனின் கேமராவை கொடுத்து புகை படம் எடுக்க சொல்ல, அவர்கள் நால்வரின் புகைப்படமும் அழகாக எடுக்க பட்டது!
செங்கனி என்றும் செந்தமிழை உயர்த்துவாள் என்று நினைத்து, நாமும் தமிழோடு விடைபெறுவோம்!
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க! தமிழ் செழிக்க!
இந்த கதை உலகத்தில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் சமர்ப்பணம்!
Wow super and happy ending sis
Lovely