இதயம் – 11
அன்றைய நாள் அவளிற்கோ சந்தோசம் தாழவில்லை. விக்ரமின் பார்வை தன் மீது விழும் போது அவள் அடைந்த ஓர் இனம் புரியாத உணர்வை வார்த்தைகளால் வடிக்கவே முடியாது எனலாம்.
அவளின் நான்கு வருட காதலை ஒரே நாளில் அவனிடம் கொட்டி விடும் வேகம் அவளுள் ஆனால் தன்னை அடக்கிக் கொண்டாள்.
எப்போது வீட்டுக்குச் சென்று ஒரு பாட்டை போட்டு ஆடலாம் என்ற மனநிலையில் அன்றைய நாள் அவள் பல்கலைக் கழகத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்பி இருந்தாள். சிறிது தூரம் நடந்து சென்றவள் முன்னே வந்து தனது பைக்கினை நிறுத்தி இருந்தான் விக்ரம்.
திடீரென தன் முன்னால் எவனோ வந்து வண்டியை நிறுத்தவும் “டேய் அறிவில்லையா?” என விரல் நீட்டி ஏசியவள் இதழ்களோ பைக்கில் இருந்த படியே தலைக் கவசத்தை கழற்றியவனைக் கண்டு பசைப் போட்டதைப் போல மூடிக் கொள்ள மாறாக விழிகளோ அகல விரிந்துக் கொண்டன.
அவளின் திகைத்த தோற்றத்தில் இதழ்களுக்குள் சிரித்துக் கொண்டவன் “ என்ன இப்படியே நிக்கிறதா ஐடியாவா?” என்றான் தலையைக் கோதிக் கொண்டே….
முதலில் அவளுக்கே அவனைப் பற்றி நினைத்துக் கொண்டு இருப்பதால் இல்யூஷன் தோன்றுகிறதோ என விழிகளை நன்றாக கசக்கிவிட்டு பார்த்தவளுக்கு இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டு இருந்த விக்ரம் தெரிய அவ்வளவு தான் வார்த்தைகள் வெளியில் வர மறுத்தன.
அவனோ மறுபடியும் “எவ்வளவு நேரம் இப்படியே வெயிட் பண்ண போற வந்து ஏறு” என்றதும் “வாட்? நா…நான் எப்படி உங்ககூட?” என்றவளை “ஹெல்மெட்டை போட்டுட்டு ஏறு சொல்றேன்” என்றிட….
அவளுக்கோ தயக்கம்.
அவள் காதலித்தவன் தான் சட்டென அவனின் நெருக்கம் அவளுக்கு வெட்கத்தை கொடுக்க அவனோ “தென் ஓகே ஆட்டோல வா. நான் என்னோட வீட்டுக்கு வழியை சொல்றேன்” என்றிட…..
அவன் சொன்ன பின் பாதியை கேட்காத அவள் மனதோ “இப்போ ஒவர் பெர்போமன்ஸ் பண்ணி பைக் ரைட் போறதை வேஸ்ட் பண்ண போறியா முட்டாள்?” எனக் கடிய அவசரமாக அவனிடம் “ஆட்டோ எல்லாம் வேணாம் உங்க கூடவே வரேன்” என்றிருந்தாள் தட்டுத் தடுமாறி…
அவனும் அவளிடம் தலைக் கவசம் ஒன்றை நீட்ட வேகமாக அதைப் போட்டுக் கொண்டு இப்போது பைக்கை பார்த்தவளுக்கு அதிர்ச்சி.
அவன் வைத்திருந்ததோ பல்சர் பைக்.
பல்சர் என்றால் சொல்லவும் வேண்டுமா? பின் இருக்கை உயரமாக இருக்க அதில் ஏறி அமர்வது ஒரு புறம் கடினம் என்றால் அதில் அமர்ந்து செல்பவர்கள் ஓட்டுபவரின் மீது முற்றிலுமாக மேனி உரச செல்ல வேண்டிய நிலை தான்.
கற்பனையில் அவனுடன் என்னவோ எல்லாம் யோசித்து இருக்கின்றாள் ஆனால் இன்றோ அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ ஆரம்பிக்க இந்த நிலையில் எப்படி என்ற வெட்கம் அவளுள்.
அப்படியே அதிர்ந்து ஏதோ யோசித்துக் கொண்டே நின்று இருந்தவளை ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு திரும்பியவன் ஏற முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றாள் என நினைத்து “அபி” என்று அழைத்து அவளின் கவனத்தை கலைத்து இருந்தான்.
“ஹான்” என்று மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்து “ஸ்டேண்ட்ல காலை வச்சு ஏறு” என்று சொல்ல…
“மிஸ் பண்ணிடாத அபி… நீ கொடுத்து வச்சவ தான்” என்று உள்ளுக்குள் நினைத்து மகிழ்ந்தவள் வெளியில் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு ஸ்டாண்டில் காலை வைத்து ஏற முயற்சி செய்தாள். ஆம் முயற்சி தான் அவளால் உண்மையிலேயே ஏற முடியாமல் போக….
“மேடம்… என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அழைத்தவன் பாலன்ஸ் இல்லாமல் உங்களால எப்படி ஏற முடியும் சோ என் சோல்டரைப் பிடிச்சிட்டு ஏறுங்க” என்றிட….
அவளுக்கோ மயக்கம் வராத குறை தான். என்ன இவன் இப்படி எல்லாம் பேசுகின்றான் என…
இதற்கு மேல் மறுத்தால் அவ்வளவு தான் முதலுக்கே மோசமாகி விடும் என நினைத்தவள் அவனின் தோளைப் பற்றி பிடித்து அவன் சொன்னதைப் போல ஏறி பின்னால் அமர்ந்து விட்டாள்.
உள்ளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி. முதலில் இது கனவு தானோ என்று வேறு தன்னை பின்னால் இருந்த படியே கிள்ளியும் பார்த்துக் கொண்டாள்.
அவள் கிள்ளியது அவளுக்கே வலித்து இருக்க வேண்டும் ஆனால் அவளின் முகத்திலோ வலிக்கான சாயல் கொஞ்சமும் இல்லை. மாறாக அவளின் இதழ்களிளோ மென் புன்னகையே மீதம் இருக்க “ஆர் யூ ஓகே?” என்ற அவனது கேள்வியில் “ஓகே” என அவளையும் மீறி ஒலித்த அவளது குரலில் மென்மை கலந்த வெட்கமே இருந்தது.
அவளோ, ஹேண்டில் பாரை இறுக்கமாக பற்றிக் கொள்ள அவனும் வண்டியை எடுத்து இருந்தான்.
இருவருக்கும் இடையில் அமைதி மட்டுமே ஆட்சி புரிந்துக் கொண்டு இருந்தது.
“என்னை ஏற வைக்க என்னவோ எல்லாம் பேசினார் இப்போ சைலண்ட் ஆஹ் வர்றாரே! எனத் தனக்குள் கேள்வி எழுப்பியவள் இது சரிபட்டு வராது நாமளே ஆரம்பிக்கலாம் என்று குரலை செருமிக் கொண்டே சார் நாம எங்க போறோம்?” என்று கேட்டு விட….
ஒரு கணம் தன் வேகத்தை குறைத்து பின் சாதாரணமாக “நான் முதலே சொல்லிட்டேன்” என்றான்.
விழி விரிய தன்னை மறந்து கையை எடுத்து நெற்றியை தேய்த்துக் கொண்டு “சொதப்பிட்ட அபிநயா” என்று மனதிற்குள் அவள் சொல்லிக் கொண்ட அதே கணம் அவனும் வேகத்தை கூட்டி இருக்க அதே வேகத்தில் மொத்தமாக அவன் மேல் சரிந்து விட்டாள் பெண்ணவள்.
அவனுக்கோ பேரதிர்ச்சி.
இப்படி நடக்கும் என்று அவனும் நினைக்கவில்லை அல்லவா! அவளுக்கோ நிலமை மோசமாகி விட்டது வெட்கம் ஒரு புறம் வேறு இன்னொரு புறம் அவன் என்ன நினைத்து இருப்பான் என்ற எண்ணம். அவனும் வேகத்தை குறைத்து சாலையின் ஓரமாக பைக்கை நிறுத்த…
அவளோ அவனது வாசத்தை விழிகளை மூடி உள்வாங்கிக் கொண்டு இருந்தாள்.
அவனும் ஆண் தானே! முதல் பெண் ஸ்பரிசம். அவளின் தேகத்தை மொத்தமாக உணர்ந்துக் கொண்டவனுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு. தன்னை நிலைப் படுத்திக் கொண்டு குரலை செறுமியவன் “அபி” என்று இருந்தான்.
அவளுக்கு எங்கே அதெல்லாம் விளங்கும் அவள் தான் மொத்தமாக அவனின் வாசனையில் கிறங்கி போய் அவனின் பின்னால் சாய்ந்து அவனை தனது இரு கைகளாலும் இறுக அணைத்துக் கொண்டு இருந்தாளே!
அவனுக்கோ இதற்கு மேல் பொறுமை இல்லை. அவளின் இந்த நிலை தான் திடீரென வேகத்தை கூட்டியதால் பயந்து விட்டாளோ என எண்ணியவன் அவளின் கைகளை அவனாகவே பிரித்து விட்டு “ஆர் யூ ஓகே அபி” என்று பதறியவாறு கேட்டு இருந்தான்.
“ஹையோ! இதை மட்டும் கேட்டு என்னோட கனவை கலைச்சு விளையாடிட்டு இருக்கானே!” என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டே வெளியில் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு “நவ் ஓகே” என்றிருந்தாள். அவளின் முகப் பாவனையில் அவனுக்கே குற்ற உணர்வாகிப் போக “சாரி அபி” என்க…
அவளுக்கே மன்னிப்பு கேட்டு நிற்கும் அவனை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணம் தோன்றி விட்டது. எந்த ஆண்மகனும் இச் சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள் மத்தியில் அவன் புதிதாகத் தெரிந்தான்.
அவளின் அமைதியில் மேலும் குற்ற உணர்வில் தவித்தவன் “நீ இறங்கு அபி இன்னும் கொஞ்சம் தூரம் தான் ஆட்டோல வா” என்றவன் அவளை பக்கவாட்டு கண்ணாடியினூடு பார்க்க….
அவளோ, “ஆத்தி… கொஞ்சம் கூட மைண்ட் வாய்ஸ்ல பேச விடுறானா? ச்சே… என உள்ளுக்குள் செல்லமாக அவனை திட்டியவள் இல்ல வேணாம் அம் ஓகே சோ போகலாம் நான் தான் ஒழுங்கா பாலன்ஸ் பண்ணிக்கல சாரி” என்றவள் சற்று பின்னால் தள்ளி அமர்ந்தவள் இந்த முறை இறுக்கமாக ஹேண்டில் பாரை பிடித்துக் கொண்டாள்.
அதன் பின் அவனும் மென் புன்னகையுடன் பைக்கினை செலுத்தி இருந்தான்.
இந்த முறை வெகு நிதானமாக பைக்கினை செலுத்தி இருந்தான் அவன்.
சும்மாவே அவன் மேல் பைத்தியம் பிடிக்காத குறையாக அவனை ரசித்துக் கொண்டு திரிபவள் அவள். இப்போது சொல்லவும் வேண்டுமா? பின்னால் இருந்த படி அவனை உச்சி முதல் பாதம் வரை அணு அணுவாக ரசிக்கத் தொடங்கி விட்டாள்.
ரசித்தாள் அவனின் உள்ளும் புறமும் தித்தித்தது பெண்ணவளுக்கு…
இப்படி ஒருவன் இல்லை என அவள் நினைத்து இருக்க இன்றோ அவளின் மூச்சுக் காற்று படும் தூரத்தில் அவன் மொத்தமாக இருக்கின்றானே! சற்று முன் அவனின் ஸ்பரிசம் அவனுக்கே உரித்தான பிரத்தியேக வாசமும் அவளுள் இன்னுமே காதல் பித்தை ஏற்றி விட்டு இருந்தது.
அவனையே பார்த்த படி அவனுடனான அந்த தருணத்தை ஆழ்ந்து அனுபவித்த படி அவள் இருக்க இப்போது அவன் பைக்கை நிறுத்தியது என்னவோ அவனின் வீட்டிற்கு முன்னே தான்.
அவனோ, “அபி பாலன்ஸ் பண்ணி இறங்கு” என்றிட…
“நான் ஆட்டோல எல்லாம் போகலை உங்களோட வரேன்” என்று முதல் கூறிய அதே பதிலை சொல்ல…
அவனுக்கோ அவளின் தோரணையில் சிரிப்பு வந்துவிட… “என்ன பகல் கனவா?” என்று கேட்டே விட்டான்.
அவளுக்கோ தூக்கி வாரிப் போட… அப்போது தான் சுற்றிலும் பார்த்தாள். அவளின் வீட்டுக்கு அடுத்த தெருவே அது.
“என்னோட வீடு அடுத்த தெரு தான் அங்க கொண்டு போய் என்னை விட்டுருங்க” என்று அவள் சொல்ல….
“ஓஹோ… அப்போ இப்போ கூட எதுக்கு நாம வந்தோம்னு தெரியலையா?” என்று கேட்க….
அவனை ரசித்துக் கொண்டு வந்தவள் எங்கே அதெல்லாம் யோசித்தாள் “இல்லை எதுக்கு வந்தோம் இங்க?” என்றவளுக்கு “உன்னோட அம்மா அப்பா என சொல்ல வந்தவன் என்ன நினைத்தானோ மாமா அத்தை எல்லாம் என்னோட வீட்ல தான் இருக்காங்க நம்ம கல்யாணம் பத்தி டிஸ்கஸ் பண்றாங்க என்றவன் தொடர்ந்து உன்னை அவங்க தான் யுனிவர்சிட்டில இருந்து வர்றப்போ கூட்டிட்டு வர சொன்னாங்க” என்றவன் புருவத்தை வருடிய படி வீட்டை காட்ட….
அப்போது தான் தன் புத்தியிலேயே உரைத்தது.
அவசரமாக இறங்கிக் கொண்டவள் ஏதோ நினைவு வந்தவளாய் தலைக் கவசத்தை கழட்டி விட்டு அவனிடம் கொடுத்தவள் “ஹேப்பி மென்ஸ் டே” என அவனை நோக்கி தன் வலக் கரத்தினை நீட்டி இருந்தாள்.
சற்றும் தாமதிக்காமல் அவளின் வலக் கரத்தோடு தன் வலக் கரத்தை கோர்த்து “தேங்க்ஸ்” என்றான் மென் புன்னகையுடன்….
தனது பையில் இருந்த அவளது பேனையினை எடுத்து நீட்ட… அவனும் அதை வாங்கிக் கொண்டே “எல்லாரும் டீச்சர்ஸ் டேய்க்கு விஷ் பண்ணுவாங்க பட் யூ ஆர் டிஃபரண்ட்”
“அதான் இன்னைக்கு டீச்சர்ஸ் டே இல்லையே! என்றவள் தொடர்ந்து அப்பாவுக்கு கிஃப்ட் ரெடி பண்ணி வச்சு இருக்கேன் பட் இப்போ உங்களுக்கும் விஷ் பண்ணி ஏதாச்சும் கொடுக்கணும்னு தோணிச்சு” என்றாள் தயங்கிய படி….
“ஐ லவ் இட்” என்றான் வீட்டை நோக்கி நடந்த படி… அவனின் அருகில் நடந்து வந்துக் கொண்டு இருந்தவள் நடையோ சட்டென அவனது வார்த்தைகளில் தடைபட அவனோ “ ஐ லவ் யுவர்” என்று அவன் வார்த்தைகளை கோர்க்கும் போதே அவளுக்கு இதயம் படபடக்க ஆரம்பித்து விட கடைசியில் அவனது பென் என்ற வார்த்தையில் சப்பென்று ஆகி விட்டது அவளுக்கு….
அவனும் மென் சிரிப்புடன் உள்ளே செல்ல அபிநயாவைக் கண்ட ஆழினியோ உள்ளே இருந்து அவளை நோக்கி அணைக்க ஓடி வர “அக்கா வெயிட் வெயிட்” என்று சட்டென இரு அடிகள் பின்னால் சென்று விட்டாள்.
அவளின் பதற்றமான குரலில் ஆழினி மட்டும் அல்ல விக்ரம் உட்பட ஹாலில் கூடி இருந்த அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க சங்கடமாக அனைவரையும் பார்த்து சிரித்து வைத்தவள் “ ஃப்ரெஷ் ஆகலை என்றவள் தொடர்ந்து லேப் எல்லாம் போனேன் சோ இன்ஃபெக்ஷன் ஆகலாம் அதான்” என்று சொல்ல…
இப்போது அவளின் பேச்சில் அதிர்ந்தது என்னவோ சாரதாவும் வைத்தியநாதனும் தான்.
ஆம், அவள் தான் வீட்டுக்கு வந்தவுடனே தொலைக்காட்சியை பார்த்து விட்டு பின் சமையலறையில் எதையாவது எடுத்துக் கொரித்துக் கொண்டு இருப்பவள் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ளவே தாமதம் ஆகுமே!
“குட் ஹாபிட்” என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டவன் அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்து விட்டு சென்று இருக்க… “அச்சோ வாத்தி நம்பிருச்சு போலயே இட்ஸ் ஓகே மெயின்டெய்ன் பண்ணுவோம்” என்று உள்ளே நினைத்துக் கொண்டவள் ரித்விக் எங்க அக்கா” என்று பேச்சை மாற்றி இருந்தாள்.
“தூங்கிட்டு இருக்கான் அபிநயா எழுப்பிடாத”
“ஹும் பட் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அக்கா”
“சத்தம் போடாமல் வா பார்த்திட்டு வரலாம்” என்று ஒரு அறைக்குள் அவளை அழைத்து சென்று இருந்தாள் ஆழினி.
தூங்கிக் கொண்டிருந்த ரித்விக்கை பார்த்தவள் “அதுக்குள்ள வளர்ந்துட்டானே அப்படியே அண்ணா மாதிரி இருக்கான் என்றவள் ஆழினியின் முறைப்பில் உண்மையை சொன்னேன் அக்கா அதுக்கே இப்படியா?” என்றாள் புன்னகைத்த படி…
அதெல்லாம் இருக்கட்டும் அப்புறம் “பைக் ரைட் எல்லாம் எப்படி?” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கேட்க….
வெட்கச் புன்னகையுடன் முகத்தை இரு கைகளாலும் மூடிக் கொள்ள… “வெட்கப் படுற அளவுக்கு என்னடி ஆச்சு?”
Semma dr today ud
Thank you dear 🥰❤️
Try pannu Abi superb a irukum 😇😇😍😍🤣😅😅😅😅😅