16. நேசம் நீயாகிறாய்!

5
(7)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

 

நேசம் 16

 

விடியலின் பூரிப்பில் பரவசம் கொண்ட பட்சிகளின் இன்னிசை கானம், பாரில் பரந்தொலித்த காலைப்பொழுது அது.

தோட்டத்தில் மலர்ந்த வண்ண மலர்களை வாஞ்சையோடு பார்த்திருந்தாள் தேன் நிலா. ராகவ்வின் நினைவில் தத்தளித்த மனதை வேறு பக்கம் திசை திருப்ப, மலர் கொய்து மாலை தொடுக்கத் துவங்கினாள்.

“தேனுஊஊ” என்ற மழலை மொழியில் தலை தூக்க, மான் குட்டியாய் துள்ளி வந்து அவளருகில் அமர்ந்து கொண்டாள் ப்ரீத்தி.

“ரேஷ்மாவுக்கு சுகமில்லை. ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வர்றோம்” என்று அவளைக் கொண்டு வந்து விட்ட மாதவன் சொல்ல, “சரிண்ணா! நான் பாப்பாவை பார்த்துக்கிறேன்” என தலையசைத்தாள்.

“பாய் அப்பா” டாட்டா காட்டி தந்தையை வழியனுப்பி வைத்தவள், “மாமா எங்கே?” என்று தேடினாள்.

அவள் பதில் சொல்வதற்குள், “ஹேய் ப்ரின்சஸ்” என ஓடி வந்த ராகவ் அவளைத் தூக்கிக் கொள்ள, “குட் மார்னிங்” அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் சின்னவள்.

“ஸ்வீட் மார்னிங் செல்லம். சாப்பிட்டியா?” என்று கேட்டவாறு உள்ளே செல்ல, மாலை செய்து முடித்தவள் அதை மரகதத்திடம் கொடுத்து விட்டு உணவு பரிமாறச் சென்றாள்.

ப்ரீத்தி மேசை மீது அமர்ந்து கொள்ள, அவளுக்கு ஊட்டி விட்டான் ராகவ். அவன் தனக்கு ஊட்ட மாட்டானா? நொடிப்பொழுதில் ஒரு வித ஏக்கம் படர்ந்தது, மனையாளின் மனதில்.

அதைக் கண்டு கொண்டாளோ என்னவோ, “தேனுவுக்கும் ஊட்டி விடுங்க மாமா” என்று ப்ரீத்தி சொல்ல, “இல்ல பாப்பா அவ அப்பறம் சாப்பிடுவா” என்றவனுக்கு, ஊட்டினால் ஏதாவது சொல்வாளோ என்ற எண்ணம்.

‘எனக்கு ஒரு வாய் ஊட்டி விட உங்களுக்கு கசக்குதுல்ல. அந்தளவுக்கு வேண்டாதவளா மாறிட்டேனா?’ உள்ளுக்குள் குமுறித் தீர்த்தாள் தேனு.

“எனக்கு எதுக்காக ஊட்டி விடறீங்க?” அக்கா மகளின் கேள்விக்கு, “உன் மேல உள்ள பாசத்தினால் பாப்பா” சட்டென பதிலளித்தவன் அடுத்து வரும் கேள்விக்குத் தயாராய்த் தான் நின்றான்.

அவ் எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் “அப்போ தேனு மேல பாசம் இல்லையா?” எனும் வினா அவனைத் தாக்க,

“இதென்ன கேள்வி டா? தேனு மேல ரொம்ப பாசம். அவ உன் அத்தை இல்லையா?” என்றவாறு அவளுக்கு ஊட்டப் போக, ப்ரீத்தியின் முன்பு சண்டையிடாமல் வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

“ஹை சூப்பர் சூப்பர்” தனது எண்ணம் ஈடேறிய மகிழ்வில் கை கொட்டிச் சிரித்தது குட்டி வாண்டு.

“நான் பாட்டி கிட்ட போயிட்டு வர்றேன்” என்றவாறு சாப்பிட்டு முடித்து ஓட, “எனக்கு ஊட்டி விட மாட்டியா?” எனக் கேட்டான் கணவன்.

“ஹலோ சார்! ப்ரீத்தி போயாச்சு. சோ நடிப்பை நிறுத்துங்க” என்று அவள் கூற, “நிறுத்த முடியாதே. நீ ஊட்டி விடலனா ப்ரீத்தியைக் கூப்பிட்டு சொல்லிடுவேன்” ப்ரீத்தியை அழைக்க வாயெடுக்க,

“ஸ்ஸ்! வேண்டாம் வேண்டாம். நான் ஊட்டி விடறேன்” அவனுக்கு நிறையவே அள்ளிக் கொடுக்க, “ஏய் போதும் போதும்” என கத்தினான் அவன்.

“ரொம்ப அடம்பிடிச்சா இப்படி தான் நடக்கும். வாயை அடைச்சு விட்றுவேன்” க்ளாஸில் தண்ணீர் ஊற்றி டொம்மென்று வைத்து விட்டுச் செல்ல,

“ஏன் இந்தக் கொலவெறி?” என்றவாறு தண்ணீரை அருந்தினான் ராகவ்.

அவன் அறைக்குச் செல்லும் போது கூந்தலை சீவிக் கொண்டிருந்தாள் தேனு. இடை வரை நீண்ட அடர்த்தியான முடி அவளுக்கு. கதவில் சாய்ந்தவாறு அவள் முடி சீவுவதைப் பார்த்தவாறு நிற்க,

“என்ன பார்க்கிறீங்க?” கண்ணாடி வழியே அவனைப் பார்த்துக் கேட்க, “முடி அழகா இருக்குன்னு பார்த்தேன். அதுவும் பார்க்க கூடாதா?”

“உங்க லவ்வருக்கு முடி நீளமா இருக்குமா?” அவளின் கேள்வியில், “எதுக்கு அந்த பேச்சை இழுக்குற?” என முறைத்தான்.

“சொல்லுங்களேன்”

“என் லவ்வரை மாதிரி ட்ரை பண்ணி நீயும் அவளைப் போல மாறி என் மனசுல இடம் பிடிக்கப் போறியா?” அவன் கேட்டதில் முறைத்துப் பார்த்து, “நான் எதுக்கு ட்ரை பண்ணனும்? எப்போவும் நான் உங்க லவ்வராக முடியாது. நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க” என்று ஒற்றைப் பிடியில் நிற்க,

“எஸ்! அவளுக்கு ரொம்ப நீளமான முடி. உன்னை விட நீளமா இருக்கும். முட்டியை விட கொஞ்சம் உயரமா இருக்கும் தெரியுமா? அவ நடக்கிறதைப் பார்க்கவே அவ்வளவு அழகு” ரசனையுடன் நினைவு கூர்ந்தான் ராகவ்.

சடுதியில் முகத்தில் பூத்த அழகிய புன்னகையும் மலர்ச்சியும் அப்பெண் மீது எத்தகைய நேசத்தை அவன் வைத்திருந்தான் என்பதை உணர்த்தப் போதுமாக இருந்தது.

“இன்னமும் அந்தப் பொண்ணை லவ் பண்ணுறீங்களா?”

“நீ கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாச்சு. அந்த டாபிக்கை திரும்பத் திரும்ப பேசி சண்டை போட வேண்டாம்னு நினைக்கிறேன். புரிஞ்சுக்கோ” என அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் ஹாஸ்பிடல் செல்லும் போது, ப்ரீத்தி அலைபேசியுடன் வந்து “மாமா, அத்தை வாங்க செல்ஃபி எடுக்கலாம்” என்று அழைக்க, இருவரும் மறுக்காமல் அவளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

“இப்போ நீங்க ரெண்டு பேரும் இருங்க. நான் ஃபோட்டோ எடுக்கிறேன்” என்று ப்ரீத்தி சொல்ல, “சரிடா எடு” மனையாளுடன் இணைந்து நின்றான் ராகவ்.

“உங்களுக்கு போஸ் கொடுக்கவே தெரியல மாமா. எங்கப்பா கிட்ட சொன்னா அம்மா கழுத்தில் கை போட்டு மாஸ்ஸா போஸ் தருவார்” அலுத்துக் கொண்டாள் சின்னவள்.

“ஹாஸ்பிடல் போக டைம் ஆகுது. சீக்கிரம்” என்று அவசரப்படுத்தியவன் அவளது கழுத்தில் கை போட, கூச்சத்தில் நெளிந்தாள் அவள்.

“எதுக்கு தேனு நெளியுற? நேரா இரு” என ப்ரீத்தி சிரிக்க, “எனக்கு கூச்சமா இருக்கு. கழுத்தில் பட வைக்காதீங்க” என்று அவள் சொல்லியும் கையை எடுக்காதவனை அவள் முறைக்க, ப்ரீத்தி ஃபோட்டோ எடுத்துக் கொண்டாள்.

“முறைச்சாலும் நல்லா தான் இருக்கு. அதை எங்க ரெண்டு பேர் ஃபோனுக்கும் அனுப்பி வை. நான் கிளம்புறேன் ப்ரின்சஸ்” என ப்ரீத்தியின் கன்னத்தில் முத்தமிட்டுச் சென்றான்.

“உனக்கு முத்தம் தர மாட்டாரா தேனு?” ப்ரீத்தியின் கேள்வியில் அன்றொரு நாள் கன்னத்தில் முத்தமிட்டது நினைவில் உதித்தது.

அதனை நினைக்க இப்போதும் முகம் சிவந்து போக, “எங்கப்பா ஆஃபிஸ் போகும் போது எனக்கு விளங்காம அம்மாவுக்கும் கிஸ் பண்ணிட்டு போவார். ஆனா நான் சில வேளை பார்த்துடுவேன்” ப்ரீத்தியின் நகைப்பில் அவளும் இணைந்து கொண்டாள்.

ஆனால் மனமோ மகிழ்வை முற்றிலும் தொலைத்திருந்தது. அன்று முத்தமிட்டான் தான். ஆனால் அன்பாக அல்லவே?! அவள் ஏதோ சொல்லப் போய் அதை நிரூபிப்பதாய் முத்தமிட்டான்.

வெளியில் செல்லும் போது அக்கறையோடு ஒரு முத்தம், வீட்டுக்கு வந்ததும் எதிர்பார்ப்போடு ஒரு முத்தம், அன்போடு இழைந்து அவன் தந்ததில்லையே?!

அவன் தரவில்லை என்று யோசித்தவள், தானும் அவனுக்கு வழங்கியதில்லை என்பதை யோசிக்கவில்லை, அத்தோடு அப்படிப்பட்ட சுமுகமான உறவு இருவருக்கு நடுவில் இல்லை என்பதையும் தான்.

அதிலிருந்து மீண்டு வந்தவளோ ப்ரீத்தியுடன் கதையளந்து தன் எண்ணத்தை திசை திருப்ப முயன்றாள். ப்ரீத்தியை இரவு வந்த மாதவன் அழைத்துச் செல்ல, அவளைத் தனிமை சூழ்ந்து கொண்டது.

நேரம் மணி எட்டைக் கடந்தது. ராகவ் இன்னும்‌ வரவில்லையே என நினைத்தவள், வாட்சப்பில் நுழைந்து ஸ்டேட்டஸ் பார்க்கலானாள். அவளது நண்பியொருத்தி தனது கணவனோடு ஸ்டேட்டஸ் வைத்திருக்க, காலையில் ப்ரீத்தி எடுத்து அனுப்பிய புகைப்படம் நினைவுக்கு வந்தது.

அதை அவனுக்கும் அனுப்பி இருப்பாள். ஆனால் அவன் ஸ்டேட்டஸ் வைக்கவில்லை. அவன் என்று தான் தனது போட்டோவை ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறான் என சிந்தனையில் ஆழ்ந்த போது, உள்ளே வந்தான் ராகவேந்திரன்.

“என்ன யோசனை?” எனும் கேள்வியோடு அமர, “என் போட்டோவை ஏன் ஸ்டேட்டஸ் வெச்சதே இல்ல?” தன்னை மறந்து பட்டெனக் கேட்டாள்.

“ஏன் வைக்கனும்?”

“நானும் நீங்களும் புருஷன் பொண்டாட்டி தானே?”

“பெயருக்கு மட்டும். ஆனால் உண்மையா அப்படி வாழவில்லையே. இன்னியோட உனக்கு தந்த டைம் முடியுது‌. அப்பறம் கண்டிப்பா போடுறேன்”

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவள், “அப்படின்னா நான் உங்க கூட வாழுவேன்னு நெனக்கிறீங்களா?” எனக் கேட்க,

“வாழ தானே கல்யாணம் பண்ணிக்கிறது? சந்தோஷமா ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு வாழனும்” என்று விடையளித்தான்.

சற்று யோசித்தவள், “உங்களுக்கு நான் வேண்டாம்” வெடுக்கென்று கூற, “நிலா ப்ளீஸ்! நானே ஆயிரத்தெட்டு டென்ஷன்ல இருக்கேன். தயவு செஞ்சு இரிடேட் பண்ணாம போயிடு” ஏற்கனவே குழம்பிப் போயிருந்த மனம் அவள் பேச்சில் கொந்தளிக்கத் துவங்கிற்று.

“நான் சொல்லுறது உண்மை. உங்களுக்கு நான் செட்டாக மாட்டேன் தெரியுமா? நானும் நீங்களும் ஒத்து வர மாட்டோம்” என்று அவள் சொன்னதையே சொல்ல, “ஜஸ்ட் ஷட் அப்” ஆக்ரோஷமாகக் கத்தினான் கணவன்.

“என்ன தான் டி வேணும்? வேணாம்னு சொன்னாலும் கேட்காம அதையே பேசி பேசி சாகடிக்கிற? செட்டாக மாட்டோம், ஒத்து வர மாட்டோம்னு இன்னுமே என்னை வேண்டாதவனா தான் பார்க்கிறல்ல.

வேற யாரையாவது கட்டிக்கிட்டு சந்தோஷமா இருந்திருக்கலாம்னு நெனக்கிற போல. அந்தளவுக்கு உனக்கு என் மேல வெறுப்பா இருக்கா?” தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டான் ராகவ்.

“என்னங்க” பதறிப் போய் அவனருகே வந்தாள்.

“நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. என்னுடனான கல்யாணத்தை ஏத்துக்கிட்டு வாழலாம்னு எப்போவாவது உன் மனசை மாத்திக்க ட்ரை பண்ணிருக்கியா?”

அவனது கேள்விக்கு என்னவென்று பதிலளிப்பாள்? அப்படி யோசித்தது இல்லையே. யோசிக்கும் அளவுக்கு சூழ்நிலையும் அமையவில்லை.

கல்யாணத்தின் போது அவன் காணாமல் போன பிரச்சினை முடிய, தனுஜாவின் வருகை புதுப் பிரச்சினையைக் கிளப்பி விட்டது. அவனது காதல் விவகாரத்தின் பின் அவன் தனக்கானவன் என்பதை துளியும் யோசிக்கவில்லை.

“எனக்கு பதில் வேணும். எனக்காக யோசிச்சு இருக்கியா இல்லையா?” அவன் கூர்மையாகக் கேட்க, இல்லை எனத் தலையசைத்தாள்.

அடுத்து அவன் கூறிய வார்த்தைகள் மனையாளை, சிலையென சமைய வைத்தன.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-20

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!