பரீட்சை – 100
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன்னையும்
என்னையும்
ஒன்றாக
விடாமல்
பிரித்து
வைத்து
சிரித்த
சதிகாரர்கள்
நிம்மதியாய்
வாழ்ந்துவிட
என்
நிழலும்
அனுமதிக்காது..
நரக வேதனை
என்பது
என்னவென்று
அவர்களுக்கு
நேரில் காட்டுவேனடி
என் நெஞ்சில்
நிறைந்தவளே..
########################
நெஞ்சில் நிறைந்தவளே..!!
சரண் சொன்னதை கேட்ட நித்திலாவுக்கோ அவனைக் கொலை செய்யும் அளவு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது..
“எவ்வளவு சாதாரணமா சாரி சொல்றே..நீ..? இப்ப கூட உன் உயிர் போயிட போகுதேன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேனேடா நான்.. ஆனா நீ எவ்வளவு கூலா எனக்கு இப்படி ஒரு பச்சை துரோகத்தை பண்ணி இருக்கே.. நான் செத்துப் போய் நீ நல்லா வாழணுமா? முடியாது.. நீயும் செத்துப் போ.. உன்னையும் கொன்னுடறேன்..” என்று ஆவேசமாய் அவன் கழுத்தை பிடித்து நெறித்தாள் நித்திலா..
சரண் அவள் கையைப் பிடித்து தன்னிடம் இருந்து விலக்கி தள்ளிக் கொண்டு இருந்தான்..
அவர்கள் பேசியதை கேட்ட அருண் இன்னும் சுத்தமாக சிரித்தான்.. “டேய்.. சரண்.. இந்த மாதிரி ஒரு காமெடி ஷோவை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லடா.. உன்கிட்ட அஞ்சு கோடி கொடுப்பேன்னு நான் சொன்னதை நம்பி நீ அவளை போட்டு தள்ள பாத்தியா? ஆமா.. உனக்கு கடவுள் மூளையில அறிவுன்னு ஒன்னை வைக்கவே இல்லையா? எனக்கும் என் அஸ்வினிக்கும் நீ எவ்வளவு கொடுமை எல்லாம் பண்ண? என்னை மலை மேலருந்து விழ வெச்ச.. என் அஸ்வினியை அவ்வளவு கொடுமை படுத்தினே.. என் கையாலேயே அவ கழுத்துல நான் கட்டுன தாலியை அறுக்க வச்சியே டா… நான் மலை மேலே இருந்து கீழே விழறதை அவளை பார்க்க வெச்சு எவ்வளவு துடி துடிக்க வச்ச? இவ்ளோ கொடுமை பண்ணின உனக்கு நான் அஞ்சு கோடி கொடுக்கிறேன்னு சொன்னவுடனே எப்படிடா நம்புன..? ரொம்ப பச்ச புள்ளையா இருக்கியே தம்பி.. இப்ப என்னன்னா.. எங்களுக்கு இவ்வளவு கொடுமை பண்ண உன்னை நான் அப்படியே சும்மா விட்டுட முடியுமா? நித்திலா தான் எங்களுக்கு எதிரா பிளான் போட்டா.. அவ சொன்னதை கேட்டு தான் நீ இதெல்லாம் பண்ண.. இல்லன்னு சொல்லல.. அதுக்காக உன் மேல தப்பே இல்லன்னு ஆயிடுமா? அவ சொன்னாங்கறதுக்காக மனசாட்சியே இல்லாம அதை எக்ஸிக்யூட் பண்ணது எல்லாம் நீ தானே..? அப்போ அவளோட சேர்த்து உனக்கும் தண்டனை கிடைக்கணும் இல்ல? நீ எங்க ரெண்டு பேரையும் கொல்லணும்னு நெனச்சே.. ஆனா நாங்க ரெண்டு பேருமே உயிரோட இருக்கோம்.. அதனால நீ அட்டெம்ட் டு மர்டர் கேஸ்ல உள்ள போன.. ஆனா அந்தக் கொடுமையை நீ பண்ணதனால நாங்க செத்துப் போகலைன்னாலும் எங்களுக்கு நடுவுல இருந்துதே.. அழகான காதல்.. அதை கொன்னு புதைச்சிட்டியேடா.. உன்னை எங்க காதலை கொன்ன அந்த மர்டர் கேஸ்ல மொத்தமா உள்ள தள்ள முடியல.. ஆனா அதுக்கு பதிலா இப்போ நித்திலா மர்டர் கேஸ்ல நிரந்தரமா உன்னை உள்ள அனுப்பப் போறேன்.. ஜெயிலியே கெடந்து சாவுடா நாயே..” என்று தன் காலால் அவனை ஓங்கி எட்டி உதைத்தான் அருண்..
“அருண் விளையாடாதே.. ஆமா.. நான் தான் நித்திலாக்கு ப்ரேக் ஃபாஸ்ட்ல விஷம் கலந்து கொடுத்தேங்கறதுக்கு உன்கிட்ட என்ன சாட்சி இருக்கு? போலீஸ்கிட்ட போய் நீ சொன்னா அவங்க அதை அப்படியே நம்பிருவாங்களா?” என்று திமிராய் கேட்க மறுபடியும் அவனை பார்த்து ஏளனமாய் சிரித்தான் அருண்..
“நீ எவ்வளவு பெரிய முட்டாள்னு அப்பப்ப நிரூபிச்சுக்கிட்டே இருக்கடா.. எந்த சாட்சியும் இல்லாம உன்னை ஒரு வேலை பண்ண சொல்லறதுக்கு என்னையும் உன்னை மாதிரி ஃப்யூஸ் போன பல்ப்னு நெனைச்சியா?.. இந்த ட்ரெய்லரை கொஞ்சம் பாருடீ.. அப்புறம் தெரியும் உனக்கு நான் என்ன சொல்ல வந்தேன்னு..” என்று சொன்னவன் தன் கைபேசியில் ஒரு காணொளியை ஓட விட்டான்..
அதில் நித்திலாவின் சிற்றுண்டியில் சரண் விஷப்பொடியை கலப்பது தெளிவாக பதிவாகியிருந்தது..
“அடப்பாவி.. இப்படி என்னை ஏமாத்திட்டியே.. ஏன்டா இப்படி என்னை நம்ப வெச்சு துரோகம் பண்ண?” என்று எழுந்து ஓடி வந்து அருணின் சட்டையை சரண் பிடிக்க சட்டையில் இருந்து அவன் கையை விலக்கிய அருண் “அடச்சே.. ஏமாத்தறது.. துரோகம் பண்ணறது பத்தி எல்லாம் நீ பேசக்கூடாது.. எங்களுக்கு எவ்வளவு கெட்டது பண்ணினாலும் உனக்கு எப்பவுமே ஒரு நல்ல ஃப்ரெண்டா தானோடா இருந்தா நித்திலா..? அவளையே உன் லாபத்துக்காக கொல்ல துணிஞ்சிட்டே நீ.. ஏமாத்தறதை பத்தியும் நம்ப வெச்சு துரோகம் செய்யறதை பத்தியும் நீ பேசுறியா? கொன்னுடுவேன் உன்னை..” முறைப்புடன் சொன்னவனை பயத்தோடு பார்த்தான் சரண்..
“சரி.. உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்.. மலை மேலிருந்து என்னை விழ வெச்சு சாகடிக்கறதுக்கு ஐடியா போட்டு கொடுத்தது நித்திலா.. எனக்கு அவளும் அதே மாதிரி சாகணும்னு வெறி இருக்கு.. அதே சமயம் அவ போட்டுக் கொடுத்த பிளான் படி என்னை கீழே விழ வச்சது நீ.. அதனால நீயும் அப்படி மலை மேலிருந்து கீழே விழுந்து சாகறதை பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு.. ஆனா உங்களை பாத்தாலும் பாவமா இருக்கு.. அதனால உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு சாய்ஸ் கொடுக்கிறேன்.. உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் கண்ணு முன்னாடி இன்னொருத்தர் மலை மேலே இருந்து கீழே விழணும்.. அது யாருன்னு நீங்களே டிசைட் பண்ணிக்கோங்க.. டேய் சரண்.. எனக்கு தெரியும் நீ எப்படியும் உன் உயிரை விட துணிய மாட்டே… எப்படியாவது உன்னை நீயே காப்பாத்திக்கணும்னு தான் நினைப்பே.. அதனால நீ என்ன பண்ற..? இவளை அப்படியே இழுத்துட்டு போய் அவ உயிரோட இருக்கும்போதே இந்த மலை மேல இருந்து கீழ புடிச்சு தள்ளி விடறே.. அப்படி நீ செஞ்சனா நீ அவளை கீழே புடிச்சு தள்ளுன அடுத்த நிமிஷம் நான் இந்த வீடியோவை டெலிட் பண்ணிடறேன்.. இது என் அஸ்வினி மேல சத்தியம்..”
அவன் சொன்னதைக் கேட்ட சரண் நித்திலா பக்கம் திரும்ப நித்திலாவோ “டேய் வேணாம்டா.. நான் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல செத்துப் போக போறேன்.. ஏற்கனவே எனக்கு விஷம் கொடுத்துட்டே.. மறுபடியும் ஒரு தப்பு பண்ணாதே.. நான் இப்படியே அமைதியா செத்துப் போறேன்.. விட்டுடு என்னை.. ப்ளீஸ்..” என்று நித்திலா கெஞ்ச தொடங்கினாள்..
அதை கேட்ட சரண் “நானும் அதான் சொல்றேன் நித்திலா.. நீ எப்படியும் வெஷம் சாப்பிட்டே.. இன்னும் கொஞ்ச நேரத்துல சாகப் போறே.. இந்த மலை மேல இருந்து நீ விழறதுனால எதுவும் மாற போறதில்லை.. எப்படி இருந்தாலும் உன் உயிர் போக போகுது.. ப்ளீஸ்.. நித்திலா.. எனக்காக நீயே இங்கருந்து குதிச்சுடு.. எனக்கு எந்த வேலையும் வெக்காம நீயாவே குதிச்சுட்டா நான் உன்னை கொடூரமா இங்கருந்து பிடிச்சு தள்ளி கொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.. நானாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போறேனே..” என்று அவளாகவே தற்கொலை செய்து கொள்ள அவளை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தான்..
“ஓ.. டேய் சரண்.. நீ பயங்கர ஸ்மார்ட் டா.. நீ அப்படி நித்திலாவை கன்வின்ஸ் பண்ண பாக்குறியா? ஆனா இந்த விஷத்தினால ஒருவேளை சாகாம நித்திலா தப்பிக்க முடியும்னு நான் சொன்னா.. அப்போ அவ நீ சொல்றதுக்கு ஒத்துப்பாளா?” அவன் யோசிப்பது போல் பாவனை செய்ய நித்திலாவோ அருணை திரும்பி பார்த்தவள் “என்ன சொல்ற அருண்?” என்றாள் கண்களில் சிறிது ஆவல் மின்ன..
“அது ஒன்னும் இல்ல நித்திலா.. காலையில சரண் உனக்கு ஒரு விஷம் கொடுத்தான் இல்ல.. அந்த விஷத்தோட ஆன்ட்டி டோட் அதாவது விஷ முறிவு மருந்து என்கிட்ட இருக்கு.. இங்க பாரு..” என்று மருந்து அடைத்த ஒரு சிறு குப்பியை எடுத்து அவளுக்கு முன் காட்டினான்..
“இப்ப இந்த மருந்தை நான் உனக்கு கொடுத்தேன்னா உன் விஷம் முறிஞ்சு போயிடும்.. அப்புறம் நீ சாகவே மாட்டே.. ஆனா இந்த மருந்து நான் உனக்கு ஃப்ரீயா எதுக்கு கொடுக்கணும்..? இந்த மருந்தை நான் உனக்கு கொடுக்கணும்னா நீ எனக்கு ஏதாவது செய்யணுமே..
அருண் சொல்ல நித்திலாவோ சிறிதும் பொறுமை இல்லாமல் “என்ன செய்யணும்? சொல்லு.. சொல்லு.. நீ என்ன செய்ய சொன்னாலும் செய்யறேன்.. என்ன செய்யணும்..? சொல்லு அருண்..” என்று படபடவென கேட்டாள்..
“அதைத்தான் நான் முன்னாடியே சொல்லிட்டேனே நித்திலா.. உங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் இந்த மலை மேல் இருந்து கீழே விழணும்.. இன்னொருத்தர் அதை பாக்கணும்.. இந்த மலை மேல இருந்து சரணை கீழ புடிச்சு தள்ளிவிடு.. உனக்கு இந்த மருந்தை கொடுத்துடறேன்..” என்று அருண் சொல்ல நித்திலா சரண் பக்கம் திரும்பினாள்..
ஒரு கையில் சரண் நித்திலாவுக்கு விஷம் கொடுத்த காணொளி அடங்கிய கைபேசியையும் ஒரு கையில் விஷமுறிவு மருந்தையும் வைத்துக்கொண்டு இரண்டையும் இருவருக்கும் எதிரே ஆட்டிக் கொண்டு இருந்தான் அருண் வாய் நிறைய புன்னகையுடன்..
“பார்க்கலாம்.. யாரு கீழே விழப் போறா? யார் அதை பாக்க போறான்னு..” என்று சொல்லிக் கொண்டே நின்று கொண்டிருந்தவனை கவனிக்காது நித்திலாவும் சரணும் ஒருவரை ஒருவர் நோக்கி ஓடிவந்து ஒருவரை ஒருவர் பிடித்து மலை முகட்டிற்கு தள்ளிக் கொண்டு சென்றனர்.. மலைமுகட்டில் இருவருக்கும் இடையே பெருத்த போராட்டம் நிகழ்ந்தது..
இறுதியாக நித்திலா தன் பலம் மொத்தத்தையும் கூட்டி சரணை மலை மேலிருந்து பிடித்து தள்ளி இருந்தாள்.. அந்தப் பக்கம் விழ இருந்த சரணை தன் ஒற்றை கை கொண்டு பிடித்தான் அருண்..
தன்னை பள்ளத்தாக்கில் விழ விடாமல் அருண் பிடித்ததை உணர்ந்த சரண் “அருண்.. தேங்க்ஸ் அருண்.. என்னதான் நித்திலா என்னை கீழ புடிச்சு தள்ளுனாலும் நீ என் கையை புடிச்சு காப்பாத்திட்ட.. ரொம்ப தேங்க்ஸ்.. ப்ளீஸ்.. அப்படியே என்னை மேல தூக்கி காப்பாத்திடு.. நான் காலம் முழுக்க உனக்கு அடிமையா இருக்கேன்..” என்று நா தழுதழுக்க கெஞ்சினான்.. அழுதான்..
அருண் அந்த இடமே அதிரும்படி சத்தமாக சிரித்தவன் “உனக்கு அறிவே வராதாடா? இப்பதானே என்னை நம்பி இவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்ட? மறுபடியும் என்னை நம்புறே.. நான் உன் கையை புடிச்சது காப்பாத்தறதுக்கு இல்ல.. வாட்ச் மீ..” என்று சொல்லி அவன் கையை அங்கிருந்து ஒரு பாறையின் மேல் வைத்து பிடித்துக் கொள்ள வைத்தான்..
சரணும் அந்தப் பாறையை இறுக பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தான்..
சரண் முகத்துக்கு அருகே குனிந்த அருண் “டேய் சரண்.. இந்த சீனை ஏற்கனவே எங்கேயோ பார்த்த மாதிரி உனக்கு ஞாபகம் இல்லை..? ஞாபகப்படுத்திக்கணும்.. ஏன்னா அன்னைக்கு என்ன நடந்ததோ அதுதான் இப்பவும் நடக்க போகுது..” மிரட்டலாய் சொல்ல சரண் முகமோ பயத்தில் வெளிறி போனது..
தொடரும்..