21. நேசம் நீயாகிறாய்!

5
(6)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

நேசம் 21

 

ராகவ் யூ.எஸ் சென்று வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தன. என்றுமில்லாத அன்னியோன்யம் இருவரிடமும் இருந்தது. சண்டைகள் ஆயிரம் நடந்தன. ஆனால் விட்டுக் கொடுத்து நடந்ததால் யாவும் சமாதானத்தில் நிறைவுற்றன.

நாளை லிரிஷா மற்றும் நகுலின் திருமணம். அவள் அமெரிக்காவைச் சேர்ந்தவள் என்றாலும் நகுலின் சொந்த ஊர் கொடைக்கானல். எனவே அங்கு தான் திருமண வைபவம் நடைபெற இருக்கிறது.

“ட்ரெஸ் எல்லாம் எடுத்து வெச்சிட்டியா?” எனக் கேட்டவாறு வந்தான் ராகவ்.

அவன் முகத்தில் அப்பட்டமான களைப்பு. காலையில் எமெர்ஜன்சி கேஸ் என்று சென்றவன் வரும் போது மாலையாகி விட்டது.

“ஆமாங்க. இப்போவே போயாகனுமா? உங்களுக்கு வேற டயர்டா இருக்குற மாதிரி தோணுது?” உடைகளை மடித்து வைத்தபடி பதில் கொடுத்தாள் தேனு.

“இன்னிக்கு நைட் அங்கே வந்துருவேன்னு நகுலுக்கு வாக்கு கொடுத்துட்டேன். போகலனா கோபப்படுவான்” என்றவன் குளியலறைக்குள் புகுந்தான்.

அவன் வெளியில் வரும் போது அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் பெண்.

“புருஷன் பசியில் வாடிப் போய் வந்திருக்கான். சாப்பாடு எடுத்து வந்து ஊட்டுவோம்னு கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா? சுரணை இல்லாம உட்காந்திருக்க” தலை துவட்டிக் கொண்டு கேட்க,

“அச்சோ சாரிங்க. எடுத்து வர்றேன்” படக்கென எழுந்து கொண்டவளைப் போக விடாமல் இடைமறித்து நின்றான் ஆடவன்.

“பசிக்குதுன்னு சொல்லிட்டு வழி மறிச்சு நிற்பீங்க. அப்பறம் அதுக்கும் ஒரு குற்றச்சாட்டை முன் வைப்பீங்க. வழியை விட்டா போய் சாப்பாடு எடுத்து வருவேன்” என்றவளை அவன் மேலிருந்து கீழாகப் பார்த்து வைக்க,

“இப்போ என்ன தான் பிரச்சினை உங்களுக்கு? என்னை சுரண்டி விட்டு வேடிக்கை பார்க்கனுமா?” என்றதும் பக்கென சிரித்து விட்டான்.

“நல்ல வேளை நான் போலீஸ் ஸ்டேஷன் போகல. ஏன்னு பார்க்கிறியா? கொஞ்ச நேரத்துக்கு முன்னால பொறுப்புள்ள பொண்ணா சண்டையே இல்லாம பேசுனியா, என் வைப் தேன் நிலாவைப் போல வேற ஒரு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டானு நெனச்சு கம்ப்ளைண்ட் கொடுக்கலாம்னு டிசைட் பண்ணேன்” அடக்கப்பட்ட சிரிப்புடன் உரைக்க,

“உங்களுக்கு ரொம்பத் தான் குசும்பு. சண்டை போட்டா ஆர்கியூ பண்ணாதனு சொல்ல வேண்டியது, ஒழுங்கா பேசினா நக்கல் நயாகராவில் மூழ்கடிக்க வேண்டியது. உங்களுக்கெல்லாம் சண்டைக் கோழி மாதிரி பேசினா தான் சரிப்பட்டு வரும்” இடுப்பில் கை வைத்து முறைத்துப் பார்த்தாள் அவள்.

“உனக்கு அந்த சண்டைக் கோழி மோட் நெஜமாவே செமயா இருக்கும். ஆனால் இப்போ என்னால சண்டை போட முடியாது. சீக்கிரம் கிளம்பனும்ல. ரெடியா கிட்டு வர்றேன். போகலாம்”

“சும்மா இருந்தவளை சண்டைனு சொல்லி பேச வெச்சிட்டு பேச்சைப் பாரு. வாங்க சீக்கிரம்” எழுந்து சென்றவள் மரகதத்தோடு கதையளக்கத் துவங்கினாள்.

சிறிது நேரத்தில் அவன் வந்து விட, “கிளம்பலாமா?” எனக் கேட்டதும் அவள் தலையசைத்தாள்.

“போயிட்டு வர்றோம் அத்தை” மாமியாரிடம் சொல்ல, ராகவ்வும் அவரிடம் சொல்லிக் கொண்டு விடைபெற்றான்.

இருவரும் காரில் சென்றனர்‌. ராகவ் பாட்டை ஒலிக்க விட்டான்.

“உங்களுக்கு பாட்டு பிடிக்காதுனு சொல்லுவீங்க?”

“உனக்கு பிடிச்சிருக்குல்ல. என்ஜாய் பண்ணு. அன்ட் எனக்கு பிடிக்காது தான். ஆனால் இப்போ கொஞ்சம் பழகிக்கிட்டேன். சோ நோ ப்ராப்ளம்” என தோளைக் குலுக்கினான்.

“எனக்கும் பாட்டு வேணும்னு இல்ல ராகவ். பாட்டு கேட்காம ஏதாச்சும் பேசிட்டே போனா கூட நல்லாருக்கும்” என்று சீட்டில் சாய்ந்து கொள்ள, இருவருக்கும் அன்றொரு நாள் பாட்டு போடுவதற்காக நடந்த வாக்குவாதம் நினைவுக்கு வந்தது.

“பார்த்தியா நிலா? அன்னிக்கு நாம விட்டுக் கொடுக்காம சண்டை போட்டோம். இன்னிக்கு விட்டுக் கொடுத்து போறோம். இதான் வாழ்க்கை! விட்டுக் கொடுத்துப் போறது உறவுகளை இணைக்கிற ஒரு பாலமா இருக்கும்” என்றவன் தொடர்ந்து பேசினான்.

“ஆனால் எல்லா விஷயத்திலும் அப்படி இருக்கவும் கூடாது. நமக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை விட்டுக் கொடுப்புங்கிற பெயர்ல செய்யுறது சரினு சொல்லல. ஆனால் விட்டுக் கொடுத்துப் போறதால ஒன்னுமே ஆகப் போறதில்லனு இருக்கிற விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போறது தப்பில்ல. அது தேவையில்லாத மனஸ்தாபங்களைக் குறைக்கும்”

அவன் சொன்ன விடயங்கள் உண்மை அல்லவா? அன்று விட்டுக் கொடுக்காததால் மனஸ்தாபமும் மன அழுத்தமும் உருவானது. இன்று அதற்கு மாற்றமாக மனம் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போயிற்று.

“டாக்டர் சார் நல்லா க்ளாஸ் எடுக்கிறீங்க. ஆனால் யாவும் உண்மை” புன்னகையோடு அவன் தோள் சாய்ந்தாள்.

கொடைக்கானலை அடையும் போது இரவானது. அங்கிருந்த ரெசார்ட்டில் அனைவரும் தங்கியிருந்தனர்.

“வாங்க தங்கச்சி. ஹேய் வாடா” ராகவ்வை அணைத்துக் கொண்டான் நகுல்.

“நான் இவங்க கூட போயிட்டு வர்றேன். நீ லிரி கூட போய் இரு” என்று ராகவ் சொன்னதும், லிரிஷா வந்து தேனுவை அழைத்துச் சென்றாள்.

அறையினுள் நுழைந்த தேனுவுக்கு அங்கிருந்த தனுஜாவைக் கண்டதும் என்னவோ போலானது. அவள் முகத்தைப் பார்க்கவும் ஒரு மாதிரியிருக்க, கடினப்பட்டு புன்னகையை வழங்கி விட்டு அமர்ந்து கொண்டாள்.

‘இந்த தனுஜா வருவானு நான் கனவா கண்டேன்? என்னை அம்போனு விட்டு போயிட்டான் இந்த ரஷ்யாக்காரன். இப்போ என்ன செய்யுறது?’ என உள்ளுக்குள் புகைந்தவளுக்கு அங்கு சாதாரணமாக இருக்க முடியவில்லை.

இரவு அவர்களோடு தங்க வேண்டி வருமோ என அஞ்சினாள். அவளுக்கு அழைப்பு விடுத்த ராகவ், “லிரி கூட ஸ்டே பண்ணுறியா?” என்று கேட்க, வேண்டாம் என்று சொல்லத் தான் தோன்றியது.

இருந்தாலும் அவன் நண்பர்களோடு இன்றைய நாளைக் கழிக்கட்டுமே எனும் எண்ணத்தில், “சரி” என பதில் கூறினாள்.

சோர்ந்து போன முகத்தோடு நிற்கும் போது, “என்னாச்சு தேனு?” என்று லிரி கேட்க, “ஒன்னும் இல்ல”என தலையசைத்தாள்.

இத்தனைக்கும் தனுஜா அங்கிருந்தாளே தவிர, எதுவும் பேசவில்லை. லிரிஷாவோடு மட்டும் பேசியவள் மறந்தும் தேனுவின் பக்கம் திரும்பவில்லை.

அடுத்த நிமிடமே அறைக்கதவு தட்டப்பட்டது. லிரி கதவைத் திறந்து பார்த்து விட்டு, “ராகவ் கூப்பிடறான் தேனு” என்றதும் தாய்ப் பசுவைத் தேடும் கன்றுக் குட்டி போல் ஓடி வந்தாள்.

“போகலாமா?” என்று அவன் கேட்க, முகம் மலர்ந்து போனாள் மனைவி.

“இவ்ளோ நேரம் சோகமா இருந்தா‌. உன்னைப் பார்த்ததும் முகத்துல பல்பு எரியுது பாரேன்” லிரி சிரிக்க, “தெரியாத இடம்ல. அதான் கம்பர்டபிளா தோணிருக்காது” என்றவாறு அவளை அழைத்துச் சென்றான் ராகவ்.

“உனக்கு கஷ்டமா இருக்குன்னா முடியாதுன்னு சொல்லி இருக்கலாம்ல? உன் வாய்ஸ் ஒரு மாதிரி இருந்ததால நான் வந்தேன். இல்லனா அன்கம்பிடர்பிளா ஃபீல் பண்ணிட்டே அங்க இருந்திருப்பியா?” அக்கறையோடு கடிந்து கொண்டான் அவன்.

“இல்லங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட சந்தோஷமா இருப்பீங்க. நான் எதுக்கு இடையிலனு எதுவும் சொல்லல” என்றதும் அவளை முறைத்து,

“அவனுங்க கூட சந்தோஷமா இருக்கனும்னா வேறொரு நாள் கெட் டு கெதர் வெச்சு வந்திருப்பேன். இப்போ உன்னைக் கூட்டி வந்தது நான். சோ உன்னை சௌகரியமா பார்த்துக்க வேண்டியதும் என் பொறுப்பு. வந்து தூங்கு” என்றவாறு அங்கிருந்த ரூம் ஒன்றிற்குச் சென்றான்.

இருந்த அயர்வில் அவளும் தூங்கி விட, அவளைப் பார்த்துக் கொண்டே கண் அயர்ந்தான் ராகவ்.

காலையில் திருமணம். ராகவ் பேன்ட் ஷர்ட் அணிந்திருந்தான். தேனு பச்சை நிறத்தில் பாந்தமாக பிடவை கட்டியிருந்தாள்.

திருமண மண்டபம் நடந்தே செல்லும் தூரம் தான். அனைவரும் மண்டபம் சென்றனர்.

மண்டப வாயிலுக்குச் சென்ற தேன் நிலாவுக்கு தம் திருமண நாள் ஞாபகம் வந்தது. அன்று இருந்த மனநிலையில் திருமணத்தை ரசித்தாளா? மண்டப அழகினைத் தான் பார்த்தாளா? எதுவும் இல்லையே.

சந்தோஷமானதொரு நாளின் இனிய நினைவுகளைத் தேவையில்லாத எண்ணத்தால் இழந்து விட்டது போல் தோன்றியது. அன்று மட்டும் திருமணத்தை முழுமனதோடு ஏற்றிருந்தால், தன் வாழ்வின் மறக்க முடியாத நன்னாளாக அந்நாள் மாறி இருக்குமே என்று வருந்தினாள்.

இருந்தும் என்ன பயன்? நடந்தது இல்லை என்று ஆகி விடாதே. அதனை மாற்றி எழுதவும் முடியாதே. அவள் மனம் புரிந்தாலும் அமைதியாக நின்றான் ராகவ்.

ஐயர் மந்திரம் ஓத, லிரிஷாவின் கழுத்தில் தாலி கட்டினான் நகுல். தேனு மற்றும் ராகவ் தம் திருமண நாளை நினைவு கூர்ந்து ஒராவரையொருவர் பார்வையால் தழுவிக் கொண்டனர்.

அனைவரும் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடிந்ததும் அலெக்ஸோடு வெளியில் சென்று வருவதாகக் கூறிச் சென்றான் ராகவ்.

தேனு தனியாக நிற்கும் போது தனுஜா அவளருகில் வர, என்ன பேசப் போகிறாளோ என்ற பதற்றம் அவளுக்கு. இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் நின்றாள்.

“அய்ம் சாரி தேனு! அன்னிக்கு உன் கிட்ட ஹார்ஷா பேசிட்டேன்” என்று சொல்லவே, விழி விரித்துப் பார்க்கலானாள் தேனு.

“அன்னிக்கு நான் பேசினதை ராகவ் கேட்டுட்டான். என் கிட்ட கோபப்பட்டான். உனக்காக அவன் பேசியதைக் கேட்டு நானே உருகிப் போயிட்டேன்.

அவனுக்கு செட்டானவ, அவனுக்கு ஏத்த ஒரே ஒருத்தி நீ மட்டும் தான்னு சொன்னான். அவனோட ப்ரசென்ட் பியூச்சர் எல்லாமே நீ தான் தேனு. அவன் உன்னை அவ்ளோ லவ் பண்ணுறான். என்னை நெனச்சு எனக்கே அசிங்கமா இருந்துச்சு. என்னை மாதிரி பொறாமை குணம் கொண்ட ஒருத்திக்கு அவன் கிடைக்கல. ஆனா உனக்கு கெடச்சிட்டான். நெஜமாவே சொல்லுறேன் நீங்க ரெண்டு பேரும் தான் சரியான ஜோடி” என்று விட்டுச் சென்றாள் தனுஜா.

அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்தாள் தேனு. தனுஜா சொன்ன விடயம் தனக்குத் தெரியும் என்று அவன் சொன்ன போது, ‘எனக்காக அவ கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்க மாட்டாரா?’ என நினைத்தாள்.

இதோ, பேசி இருக்கிறானே?!

தனக்காக அவன் பேசியுள்ளான். நினைக்கவே பெருமிதமாக இருந்தது. அனைவரும் நம்மைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் என்று நாம் யாரும் நினைப்பதில்லை.

ஆனால் தான் விரும்பும் ஒருவர் தன்னை வேறு எவரிடமும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதை ஒவ்வொரு உள்ளமும் எதிர்பார்க்கும். அத்தூய நேசத்திற்காக இதயம் ஏங்கித் துடிக்கும். அந்த வகையில் அவன் அன்பு கிடைத்ததில் சிறு கர்வம் பிறந்தது பெண்ணவளுக்கு.

நண்பனுடன் சென்று வந்தவன் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு மனைவியுடன் தனது ஊர் நோக்கிப் புறப்பட்டான்.

மனைவியின் பார்வை மாறுதல் அவனுக்குப் புரிய, “எதுக்கு என்னைப் புதுசா பார்க்கிற?” என்று வினவினான்.

“பார்வை புதுசு. ஆனால் நீங்க புதுசு இல்லை. பழைய பீஸ் தான்” என அவள் செல்லமாக முறைக்க, “பழைய பீஸ் இல்ல. உன்னோட ரஷ்ய பீஸ்” கண் சிமிட்டிச் சொன்னதும் அவள் திருதிருவென விழித்தாள்.

“தெரியாதுன்னு நெனச்சியா? இன்னும் எத்தனை பெயர் எனக்கு வெச்சிருக்க? லிஸ்ட் போடு பார்ப்போம்” மிரட்டல் தொனியில் கூறினான் காளை.

“முடியாது ரோஸ் மில்க்” என்றவளோ தன்னையறியாமல் அவனுக்குத் தான் வைத்த செல்லப் பெயரைக் கூறி விட்டு நாக்கைக் கடித்துக் கொள்ள, சில்லறைகள் சிதறியது போல் சிரித்தான், தேன் நிலாவின் ரோஸ் மில்க்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

2024-11-22

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!