23. நேசம் நீயாகிறாய்!

5
(3)

🤎 நேசம் நீயாகிறாய்! 🤎

நேசம் 23

 

கதிரவனின் காதல் பார்வை பூமிப்பாவை மீது கனிந்துருகி வீச, காலைப் பொழுது அழகாய் விடிந்தது.

இன்று ரேஷ்மா வீட்டிற்குச் செல்வதற்காக எழுந்து குளித்து விட்டு வந்த ராகவ்வின் விழிகள் மனையாளைத் தேடின. எங்கு சென்றாள் என யோசித்துக் கொண்டே அவள் அயர்ன் செய்து வைத்திருந்த சர்ட்டை அணிந்தான்.

முடியைச் சீவும் போது கண்ணாடியில் அவள் விம்பம் தெரிந்தது. நொடி நேரம் தாமதித்த பின்னர் கண்களில் மின்னல் வெட்டிடத் திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி தான். 

ஆனால் இன்ப அதிர்ச்சி!

அவன் அன்று வாங்கி வந்த கறுப்பு நிற பிடவையை அணிந்திருந்தாள் அவள். தானும் கறுப்பு ஷர்ட் அணிந்ததை யோசித்த போது அவளது செயலின் காரணம் புரிந்தது 

கறுப்பு வர்ண சாரியில், முடியை விரித்து கொஞ்சமாக முன்னால் இட்டு, நெற்றியில் சிறு பொட்டு வைத்து, கழுத்தில் தாலி, நெற்றியில் குங்குமம் என்று லட்சணமாக இருந்தாள் தேன் நிலா.

“வாவ்! மை ஏஞ்சல்” அவளைக் கை விரித்து அழைக்க, அக்கைச்சிறைக்குள் பாந்தமாய் அடங்கிப் போனாள் அவனவள்.

“உனக்காக நான் வாங்கிய சாரி. என் தேன் மிட்டாய் அவ்ளோ அழகா இருக்கா” என்று சொல்லி, அவளை சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன் “எனக்கு என் ஃபர்ஸ்ட் லவ் ஞாபகம் வந்துருச்சு” என்றான் புன்னகை பூக்க.

அவளுக்கு ஓர் நொடி அதிர்ச்சியாக இருந்தாலும், “ஞாபகம் வந்ததுனா என்ன செய்யவாம்? இனி உங்க காதல் எனக்கானது. உங்க நினைவும் எனக்காக மட்டுமே இருக்கனும் ராகவ்” என்றாள் வன்மையாக.

“கொஞ்ச நாளைக்கு முன்னால அந்தக் காதலைச் சொல்லி என்னை கோபப்படுத்திட்டு இருந்தே? இப்போ இவ்ளோ பொங்குற?” காரணம் அறிய வேண்டியிருந்தது அவனுக்கு.

“தனு சொன்னதை யோசிச்சேன், உங்க காதலைப் போட்டு குழப்பிட்டு இருந்தேன். ஆனால் நான் காதலிக்க ஆரம்பிச்ச பிறகு எல்லாத்தையும் வேற மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிருச்சு என் மனசு. தனு சொன்னானு நம்பிடறதா? உங்களுக்கு ஏற்றவ நான் என்கிறதால தானே நீங்க என் கழுத்தில் தாலி கட்டி இருக்கீங்க.

அடுத்த விஷயம், உங்களுக்கு ஒரு காதல் இருந்து இருக்கலாம். ஆனால் நீங்க அதை சொல்லிக் காட்டியதே இல்ல. ஒவ்வொரு நேரமும் யதார்த்தமா சிந்திச்சு இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கிட்டு வாழனும்னு சொல்லுவீங்க. அப்படினா காதல்ல இருந்த நீங்களே இந்த கல்யாணத்தையும் என்னையும் முழு மனசோட ஏத்துக்கிட்டீங்க. நான் எதுக்கு வீம்பு பிடிக்கனும்னு அதை யோசிக்கிறதை விட்டுட்டேன்” என்றுரைத்தாள் தேனு.

அவள் கூறியதை ஆச்சரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் கணவன். அப்போது சண்டையிட்ட தேனுவிற்கும் இப்போது முதிர்ச்சியாகப் பேசுபவளுக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள்?

“இதை, இந்த மனப்பக்குவத்தைத் தான் நான் உன் கிட்ட எதிர்பார்த்தேன். எனக்கு இது போதும் டா. இந்த உலகத்தில் பெரும்பாலானவங்க காதலிச்சவங்க தான். ஆனால் அது இல்லாம போனாலும் அந்தக் காதலால பலரோட கல்யாண வாழ்க்கை முறிஞ்சு போகுது. அது என் வாழ்க்கையில் நடக்கக் கூடாதுனு நெனச்சேன்” எனக் கூறியவன், “ஆனால் என் ஃபர்ஸ்ட் லவ்வரை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கனும்னு ஆசைப்படுறேன்” என சிரித்தவாறு சொன்னான்.

“வேண்டாம். நீங்க யாரை வேணா லவ் பண்ணி இருக்கலாம். ஆனால் நீங்க காட்டிட்டீங்கனா அவங்களைக் காணும் போது எனக்கு அந்த ஞாபகம் தான் வரும். சோ அதை மட்டும் செய்ய வேண்டாம்” உறுதியாக மறுப்பை வெளியிட்டாள் பெண்.

ஆனால்!

ஆனால் அவனோ ஒரு ஆல்பம் கொண்டு வந்து அவளிடம் நீட்டினான். நீட்டியதோடு மட்டுமல்ல, அதன் முதல் பக்கத்தைத் திறந்தும் வைத்து விட்டான்.

ஒரு பெண்ணின் முதுகுப்புறம் அதில் புகைப்படமாக இருந்தது. இடை தாண்டினும் நீளமான அடர்கூந்தல். அவளின் முகம் மட்டும் தெரியவே இல்லை.

“நா..நான் இந்த பொண்ண பார்த்து இருக்கேனே” யோசனையோடு அவன் முகம் பார்க்க, “ம்ம். எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருந்தா. உனக்கும் நல்லாவே தெரியும்” என்று பதிலளித்தவனின் முகத்தில் அத்தனை நேசம்.

“எங்க பக்கத்து வீட்டில் குடியிருந்துட்டுப் போனாளே ஒரு பொண்ணு. அவளா?” என்று கேட்டவாறு மறு பக்கத்தைப் புரட்டியவளது விழிகள், அந்தப் பெண்ணின் வதனம் கண்டதும் இமைக்க மறந்தன.

பூக்களுக்கு நடுவே புன்னகையோடு நின்றிருந்தாள் அப்பாவை. தேனூறும் நேசத்தை ஆடவன் நெஞ்சத்தினுள் விதைத்த தேன் நிலா!

ஆம். அவளே தான். ராகவேந்திரனின் காதலுக்குச் சொந்தக்காரி.

அவன் காதல் அன்றும் அவளே! இன்றும் அவளே! என்றென்றும் அவளே!

“நான்…நானா?” வாயைப் பிளந்தவள் அதனைக் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ஆமா. நீ தான். என் காதலி நீ தான் தேன் மிட்டாய்” என்றதும் அவளால் தன் காதுகளை நம்ப முடியாது போயிற்று.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் நிலா. உன் கிட்ட லவ்வை சொல்லி சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கல. உனக்கும் விருப்பம் இல்லனு சொல்லி, என்னென்னவோ மனக்கசப்புகளோட நடந்து முடிஞ்சிருச்சு” அவன் குரலில் விரக்தி இழையோடியது.

இதே குரல். தனுஜாவிடமும் இதே மாதிரி விரக்தியாக அல்லவா பேசினான்? காதலைச் சொல்ல முடியவில்லை என்பது தான் அதற்கான காரணம் என்று இப்போது புரிந்தது.

அந்தப் புகைப்படத்தை ஆழ்ந்து நோக்கியவள், “ஆனால் எனக்கு இந்தளவு நீளமான முடி? ஆங்ங்.. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தது. அப்பறம் நான் கட் பண்ணேன். அப்படினா…?” கேள்வியோடு அவனை ஏறிட,

“எக்ஸாட்லி மை டியர்! உன்னை லவ் பண்ணி அஞ்சு வருஷத்துக்கு மேலாச்சு. எனக்கு வந்ததில் இருந்தே உன்னை கொஞ்சம் பிடிக்கும். அப்பறம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருச்சு. என்னை மறைஞ்சு மறைஞ்சு பார்க்கிறது, நான் உன் கூட பேச மாட்டேனானு நீ நினைக்கிறது எல்லாமே எனக்குத் தெரியும்” அவள் தோள்களில் கை வைத்துக் கூறினான் காளை.

“ரோட்ல ஒரு தடவை காணுற பையனே நம்பர் கிடைக்குமானு பின்னாடி வர்ற காலம் இது. ஆனால் நீங்க எங்க வீட்டு முன்னால குடி வந்து ஏழு வருஷமாகியும் ஒரு நாள் என் முகத்தைப் பார்த்து பேசினதில்ல, அட்லீஸ்ட் ஒரு ஸ்மைல் கூட பண்ணல. அப்படி இருந்தா எனக்கு கடுப்பா இருக்காதா?

ஒரு சமயம் இவன் எதுக்கு சிரிக்க கூட மாட்டேங்கிறான். சிரிச்சா குறைஞ்சு போயிடுவானானு திட்டுவேன். ஆனால் சில நேரம் உங்க கண்ணியத்தை நெனச்சு பிரம்மிப்பேன். இப்படி இருக்கிறது எவ்ளோ நல்லதுனு தோணும்” ராகவ்வின் நினைவில் அவளிதழ்களில் மென்னகை.

“எனக்கும் அதே எண்ணம். உன்னைக் காதலிச்சேன். ஆனால் பின்னால போறது, லவ்வை சொல்லுறது, சாக்லேட் கொடுக்கிறது, நீ ஓகே சொன்னா வீட்டுல சம்மதிப்பாங்களானு யோசிக்கிறது இதெல்லாம் எனக்கு சரியா படல.

உன் வீட்டுல விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கிட்டு உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணனும்னு கனவு கண்டேன். ஆனால் இடையில் அவங்களா கல்யாணம் முடிவு பண்ணிட்டு ஓகேவானு கேட்டதும் ஒத்துக்க வேண்டியதாப் போச்சு” தனது எண்ணத்தை விளக்கிக் கூறினான்.

“நீங்க என்னை லவ் பண்ணுனது தெரியாம நான் என்னென்னவோ யோசிச்சு ரொம்ப ஃபீல் பண்ணிட்டேன்” 

“கல்யாணம் பண்ண முதல் லவ்வை சொல்லனும்னு ஆசை ஆசையா கார்ட் சிலெக்ட் பண்ண வந்தேன். ஆனால் நீ அதுக்கு முன்னால கல்யாணம் வேணானு மேசேஜ் பண்ணி, அப்பறம் கூட வேண்டவே வேண்டாம்னு நிறுத்திட சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணுன. நான் உடைஞ்சு போயிட்டேன் நிலா.

அப்பறமும் உன் கிட்ட சொல்லனும்னு வர்றப்போ எல்லாம் நீ புரிஞ்சுக்காம பேசி வேண்டாத கல்யாணம் என்கிற மாதிரியே பேசுனது என்னை ஹர்ட்‌ பண்ணுச்சு. அதனால சில டைம்ஸ் நானும் பொறுமை இழந்து சண்டை போட்டேன். இப்படியே இருந்தா வாக்குவாதம் அதிகரிக்குமே தவிர, வேறெதுவும் நடக்காதுன்னு யூ.எஸ் போனேன்.

பார்த்தியா? நான் நெனச்ச மாதிரி உனக்கு என் மேலுள்ள காதல் புரிஞ்சுது. அந்தப் பிரிவு நினைவுகள் மூலம் நம்மளை ஒன்னு சேர்த்துருச்சு. நான் இல்லாதப்போ நீ கஷ்டப்பட்ட. நீ இல்லாமல் நானும் அதை விட கஷ்டப்பட்டேன்” சொல்லும் போதே அவனுக்கு கண்கள் கலங்கின.

ட்ராவலிங் பேகைத் திறந்து உள்ளிருந்து ஒரு துப்பட்டாவை எடுத்துக் காட்ட, அவளுக்கோ கண்கள் அகன்று விரிந்தன. அது அவளது துப்பட்டா. கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னால் அவள் பயன்படுத்தியது. அதைக் காணவில்லை என்று தேடியவள் அதன் பிறகு மறந்தே போனாள். 

“ஒரு நாள் ஜாகிங் போகும் போது நீ காயப்போட்டிருந்த துப்பட்டா என் மேல விழுந்துச்சு. அப்படியே எடுத்துக்கிட்டேன். அப்போதிலிருந்து இதைக் கட்டிக்கிட்டு தூங்குவேன். யூ.எஸ் போறப்போவும் இதை எடுத்துட்டு போனேன்” 

“எடுக்கல. சுட்டுட்டீங்க டாக்டரே! இந்த திருட்டு வேலை எல்லாம் பார்ப்பீங்கனு நெனக்கல. காதல் வந்தா என்னென்னவோ வேலை எல்லாம் பண்ணுவாங்க போல” சிரித்துக் கொண்டாலும், அவளுக்கு மனம் மகிழ்ந்தது.

தனது ஞாபகமாக எதையாவது கொண்டு போய் இருப்பானா என்று எதிர்பார்ப்போடு எண்ணினாளே. ஆனால் அனைத்தும் இருந்ததால் கொஞ்சம் மனம் சுணங்கினாள். அது கூட இப்போது காணாமல் போய் விட்டதில் நெகிழ்ந்து போனாள்.

அவள் கண்களோடு தன் கண்களைக் கலக்க விட்டு, “ஐ லவ் யூ ஹனி மூன்” என அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.

“லவ் யூ டூ ராகவ்” மன நிறைவோடு அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள் வஞ்சி.

இருவரும் மரகதத்தையும் அழைத்துக் கொண்டு ரேஷ்மா வீட்டிற்குச் சென்றனர். பாஸ்கரன் வேலை விடயமாக வெளியூர் சென்றிருப்பதால் வரவில்லை.

“மாமாஆஆ” என்று கத்தியவாறு கைகளை விரித்துக் கொண்டு வந்த ப்ரீத்தியை அணைத்துக் கொண்டு, “மை லவ்லி ப்ரின்சஸ்” என கன்னத்தைப் பிடித்து ஆட்டினான் மாமன்காரன்.

“தேனு! உன்னை ராகவ் எங்கேயும் விடறதில்ல போல?” என்று ரேஷ்மா கிண்டலாகக் கேட்க, “அப்படி இல்லக்கா. அவர் ஏன் என்னை விடாம இருக்கப் போறார்?” என சிரித்து வைத்தாள் அவள்.

“ஏன் ரேஷு உன்னை மாதிரினு நெனச்சியா அவனை? நீ தான் கல்யாணமான புதுசுல என்னை எங்கேயும் போக விடறதில்ல” என்று மாதவன் கண் சிமிட்ட, “சும்மா இரு மாது” அவனை முறைத்துப் பார்த்த ரேஷ்மாவுக்கு வெட்கமும் வந்தது.

“எங்கக்காவை கிண்டல் பண்ணாம உங்களுக்கு தூக்கம் வராதுல்ல மாம்ஸ்” ராகவ் சிரிக்க, “எங்க கிண்டலுக்குள்ளயும் காதல் இருக்கும் மச்சான்” என்றான் மாதவன்.

“எங்கப்பா வாய்ல எப்போவும் காதல் தான் மாமா. பேட் பாய் இவரு” என ப்ரீத்தி சொல்ல, “நீ வா தங்கம். உனக்கு அத்தை ட்ரெஸ் தச்சுட்டு வந்திருக்கேன்” என அதனைப் போட்டுப் பார்த்தாள் தேனு.

“வாவ்! அழகா இருக்கு தேனு. அவளுக்கு அப்படியே பொருந்திப் போயிருச்சு” என்று ரேஷ்மாவும் மரகதமும் புகழ, அழகாய் முறுவலித்தவளை மனத்தினுள் படம் பிடித்துக் கொண்டான்


மன்னவன்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

2024-11-25

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!