மாந்தோப்பில் இருந்து வீட்டுக்கு வந்த வினிதா. சமையல் அறையில் இருந்த ரேணுகாவிடம் சென்றாள். அவள் தனது தாவணியில் வைத்திருந்த மாங்காய்களை எடுத்து ரேணுகாவிடம் கொடுத்தாள்.
“அடியே கழுத… மாங்காய் இப்படியா சுத்திட்டு வருவ… பாரு இப்போ தாவணி எப்படி அழுக்கா இருக்குன்னு….” என்று சொல்லி அவளது காதை திருகினார்.
“அம்மா போம்மா… இதை உனக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்துட்டு வந்தேன்னு தெரியுமா….?”
“எது கஷ்டப்பட்டா…? நான் இதெல்லாம் நம்பணும்….?”
“ஆமாம்மா நம்பு… இது உனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்….”
“அது என்னடி அப்படி என்ன ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் இருக்கு இந்த மாங்காய்யில….?”
“அட ஆமாம்மா… இந்த மாங்காய் இருந்த இடம் அப்படி…”
“அப்படி எங்க இருந்துச்சு அவ்வளவு காஸ்ட்லியா….?”
“ஆமா அம்மா…. அது இருந்த இடம் ரொம்ப ரொம்ப காஸ்ட்லி… யாராலயும் போக முடியாத இடத்தில…”
“என்னடி உளறிட்டு இருக்க… சொல்றன்னா சொல்லு இல்லை இடத்தை காலி பண்ணு…”
“சரி சொல்லிடுறன் அம்மா… இது உன் அண்ணனோட தோப்புல இருக்கிற மாமரத்துல இருந்து பறிச்சிட்டு வந்த மாங்காய்.…”
“என்ன வினி சொல்ற…? இதை எங்க வீட்டு தோப்பில்லையா பறிச்ச…?”
“ஆமா அந்த தோப்புல தான் பறிச்சேன்….”
“எப்படி வினி…?”
“ஐயோ அம்மா மாமாவோட தோப்பு மாங்காய் தான் நல்ல ருசி என்று எனக்கு தெரியும் இல்ல…. நானும் அவளுங்களும் போய் திருப்தியா மாங்காய் சாப்பிட்டு உனக்கும் ரெண்டு குடுக்கலாம்னு கொண்டு வந்தேன்….” என்ற வினிதாவின் காதைப் பிடித்துத் திருகினார் ரேணுகா.
“எங்க இருந்துடி உனக்கு இந்த திருட்டு புத்தி வந்துச்சு….? ஏன் உங்க அப்பா கிட்ட இருக்கிற தோப்புல இருந்து மாங்காயை எடுத்து சாப்பிட வேண்டியது தானே…. அதை விட்டுட்டு இந்த வேலை பார்த்து வச்சிருக்க….?”
“அம்மா… சும்மா இரும்மா…. உனக்கு மாங்காய் கொண்டு வந்தது என்னோட தப்பு….. நீ என்னை வச்சு செய்றல்ல… இரு இரு அடுத்த தடவை போகும்போது உனக்கு மாங்காய் கொண்டு வர மாட்டேன்….”
“இப்பொழுதே திருட்டுத்தனமா போனதே தப்பு என்றேன்… இதுல இன்னொரு தடவ நீ போவியா….? இரு உன்னை…” என்றவர் அகப்பையை கையில் எடுத்தார். “அம்மா எங்க உனக்கு நான் கொடுத்த மாங்காய் அதை என்கிட்ட குடுத்துட்டு அப்புறமா நீ என்னை அடிச்சுக்க….”
“அது….. அது எப்படி… மாங்காய் எனக்கு குடுத்திட்டு திரும்பக் கேட்கிற… அதுவும் என் அண்ணன் தோப்பில் இருந்து வந்த மாங்காயை… அதெல்லாம் உனக்கு தர முடியாது நீ போ….”
“அது எப்பிடி…. இது போங்கு அம்மா… எடுத்துட்டு வந்துட்டேன்னு தான் எனக்கு அடிச்சே… இப்போ மாங்காயை கேட்டா தரமாட்டேன்ற…”
“அதுக்கு அடிக்கலை… நீ திருடினதுக்குத்தான்…”
“நல்லா சமாளிக்கிற அம்மா… சரி சரி என்ன செய்ற அம்மாவா போயிட்ட… நீயே சாப்பிடு….” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்று விட்டாள்.
வெற்றிமாறனும் அவனின் நண்பர்களும் அந்த ஊரிலே உள்ள இந்த பெரிய மலை மீது ஏறி அமர்ந்து நன்கு காற்று வாங்கிக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெற்றிமாறனின் நண்பன் ஒருத்தன், “ஏன் மாப்ள…. நெசமாவே உனக்கு அந்த வினிதா பொண்ணு மேல எந்த எண்ணமும் இல்லையா….?”
“என்னடா இது திடீர்னு இப்படி கேக்குற…?”
“நீ சொல்லு மச்சான்… நெசமாவே உனக்கு அந்த எண்ணம் இல்லையா….?”
“இதுவரைக்கும் சத்தியமா அப்படி ஒரு எண்ணமே இல்லடா…”
“ஆனால் உங்க ரெண்டு பேரையும் பார்த்தால் அப்படி தெரியலையே மச்சான்…. நீங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிட்டாலும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சி நடந்துக்கிறீங்க…. இதிலிருந்து நாங்க என்னத்தடா நினைக்கிற….?”
“நீங்க எதுவுமே நினைச்சுக்க வேண்டாம்டா…. என்ன இருந்தாலும் அவ எனக்கு முறைப்பொண்ணு தானே…. நீங்க நினைக்கிற மாதிரி எங்களுக்குள்ள எதுவுமே இல்லை….”
“அடேய் இதுக்கு மேல என்னால முடியல மாப்ள…. இனிமே உங்க ரெண்டு பேருக்கும் இடையே என்ன நடந்தாலும் கண்டுக்கவே கூடாதுனு நான் முடிவு எடுத்துட்டேன்…”
“ரொம்ப நல்ல முடிவு மச்சான்…”
“சரி மச்சான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு போலாமா….?”
“இல்லடா எனக்கு இங்க இருக்க கொஞ்சம் நல்லா இருக்கு…. நீங்க போங்க நான் அப்புறம் வரேன்….” என்றான் வெற்றிமாறன்.
“நீ மட்டும் தனியாகவா இருக்கப் போற….?”
“நான் இருக்கேன் டா…. நீங்க போங்க… நான் கொஞ்சம் இருந்துட்டு வரேன்….”
“சரி சரி இரு… பார்த்து வா நாங்க போறோம்….” என்று சொல்லி வெற்றிமாறனின் நண்பர்கள் சென்று விட்டார்கள். வெற்றிமாறன் மட்டும் மேலே மலையில் உட்கார்ந்து இருந்தான்.
எப்போதுமே அமைதியாக இருக்கும் வெற்றிமாறனின் மனசு இன்று மிகவும் குழப்பமாக இருந்தது. கை இரண்டையும் தலைக்கு கொடுத்து, காலை நீட்டிப் படுத்திருந்தான் வெற்றிமாறன், ‘என்னடா இது…. இதுவரைக்கும் இந்த குண்டச்சி மேலே எந்த ஒரு எண்ணமும் நமக்கு வந்தது இல்லை…. ஆனால் இவனுங்க சொல்றதெல்லாம் பார்த்தா ஒரு வேளை நமக்கு அவள் மேல ஒரு இதுவா இருக்குமோ….’ என்று யோசித்தான்.
பின்னர், ‘அப்படி எல்லாம் இருக்காது…. வெற்றி உன்னை யாராலையும் கவுக்க முடியாது டா…. நீ ஸ்ட்ராங்….’ என்று அவனுக்கு அவனே பேசிக் கொண்டிருந்தான். லேசான குளிர் காற்று அடிக்க வானத்தைப் பார்த்தான். அங்கே மழை மேகங்கள் தெரிந்தன. ‘அச்சச்சோ மழை வர போகுது போல இருக்கு….’ என்று நினைத்தவன் கீழே இறங்கி பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான்.
அவன் பாதி வழி செல்லும் போதே மழை வெற்றிமாறனைப் பிடித்துக் கொண்டது. உடனே வெற்றிமாறன் பைக்கை வேகமாக ஓட்ட தொடங்கினான். இருந்தாலும் வீடு வருவதற்குள் முற்றாக நனைந்து விட்டான். வாசலில் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார் வைதேகி. “என்னம்மா வாசல்ல நிக்கிற….?” என்றவாறு பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் வெற்றிமாறன். “உன்னைத்தான் வெற்றி பார்த்துட்டு இருக்கிறன்…. இந்த மழை வேற வருது உன்னைக் காணலையே என்று பார்த்துட்டு இருந்தேன்…. மழை பெய்யுதுனு தெரியும் இல்ல… எங்கேயாவது நின்னுட்டு மழை விட்ட பிறகு வந்து இருக்கலாமே… இப்படி நனைஞ்சா வரணும்….?” என்று கேட்டவாறு தனது புடவை முந்தானைத் தலைப்பை எடுத்து மகனின் தலை துவட்டினார்.
“அம்மா இப்பவும் இப்படியா எனக்கு தலை துவட்டணும்…?” என்றான் வெற்றிமாறன்.
“வெற்றி நீ எப்பவுமே எனக்கு பையன் தான் உட்காரு…..” என்று சொல்லி வெற்றியின் தலையை துவட்டினார் வைதேகி. இதைப் பார்த்த குமுதா, “பாருடா அம்மா பையன் பாசத்தை…. என்னால தாங்க முடியல….?”
“ஏய் உனக்கு என்னடி… என்னோட பையனுக்கு நான் தலை துவட்டி விட்டால் உனக்கு எங்க குத்துது…? “ஏம்மா இது உனக்கே அடுக்குமா…? பெத்த பொண்ணு என்னை எப்பவாவது இப்படி பார்த்திருக்கிறாயா…. எப்ப பாரு வெற்றி…. வெற்றி….வெற்றி… உனக்கு அண்ணன் தான் அம்மா முத புள்ள….?”
“ஆமா நீ சொன்னாலும் சொல்லலைனாலும் எனக்கு வெற்றி தான் முதல் பையன்… அதுக்கு அப்புறம் தான் நீ…” என்றார் வைதேகி. உடனே வெற்றிமாறன் குமுதாவிற்கு “வெவ்வவே…” என்று பழிப்பு காட்டினான்.
“அம்மா பாருமா வெற்றி அண்ணா எனக்கு பழிப்பு காட்டுறான்…”
“ஏய் சும்மா போடி அங்கிட்டு…. அவனைப் பற்றி குறை சொல்லிட்டு…”
“உங்களை….” என்ற குமுதா உள்ளே சென்று தண்ணீரை எடுத்து வந்து . வெற்றிமாறனின் மீது ஊற்றி விட்டாள். வெற்றிமாறனும் பதிலுக்கு அவளை இழுத்துச் சென்று மழையில் விட்டான். பிறகு என்ன இருவரும் சேர்ந்து மழையில் ஆட்டம் போட்டனர்.
வைதேகி தலையில் அடித்துக் கொண்டு சமையல் அறைக்குச் சென்றார் அவர்கள் சூடாக சாப்பிடுவதற்கு பஜ்ஜி போடுவதற்கு.
மழையில் நன்றாக ஆடிய இருவரும். சுந்தரம் வந்து சத்தம் போடவும்தான் உள்ளே வந்தார்கள். அறைக்குள் சென்று குளித்துவிட்டு இருவரும் வர, வைதேகி சுட சுட காப்பியும் பஜ்ஜியும் எடுத்து வந்து கொடுத்தார். இருவரும் ரசிச்சு ருசிச்சு அதை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அங்கே வினிதா நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.
“வினி வா சாப்பிடலாம்…” என்றார் ரேணுகா. அதற்கு வினிதா, “அம்மா என்னமா நீ….”
“அட நீ வேற ஏன்மா….? ரொம்ப குளிரா இருக்கா இந்த பெட்ஷீட்டை விட்டு வெளியே வர முடியலை… ப்ளீஸ்மா ரெண்டு பஜ்ஜி கொண்டு வந்து இங்க பக்கத்துலயே வைங்க நான் அப்படி கடித்து சாப்பிடுவேன்…” என்றாள்.
“எனக்கென்று வந்து பொறந்திருக்கா பாரு ராட்சசி…..” என்று தலையில் அடித்து விட்டு பஜ்ஜியை எடுத்துக்கொண்டு வந்து அவள் அருகில் வைத்துவிட்டு சென்றார் ரேணுகா.
வெற்றிமாறன் வெளியே செல்வதற்கு ரெடியாகி கொண்டு வந்தான். அப்போது குமுதாவின் அறைப் பக்கம் வரும்போது, குமுதா போனில் குசு குசு என்று பேசுவது கேட்டது. ‘என்ன இவ… எப்போ பார்த்தாலும் ஊருக்கே கேட்குற மாதிரி போன் பேசுவா… இப்போ என்னடானா மெதுவா பேசுறா… என்னவாக இருக்கும்….?’ என்று. யோசித்தான்.
அப்போது அவனை, குசேலன் கூப்பிட்டார், “இதோ வந்துட்டேன் சித்தப்பா…” என்று சொல்லியவாறு அவரிடம் சென்றான் வெற்றிமாறன். அறைக்குள் இருந்த குமுதாவுக்கு ஒரு பக்கம் பயமாக இருந்தது.
‘என்ன கதவுக்கு பக்கத்துல வெற்றி அண்ணா வாய்ஸ் கேட்குது….? ஒரு வேளை நாம பேசுனதை வெற்றி அண்ணன் கேட்டிருக்குமோ…. சே…. சே… அப்படி இருக்காது….’ என பலவாறும் யோசித்தாள்.
மறுபக்கம் அவள் போனில் பேசிக் கொண்டிருந்தவனோ, “ஹலோ குமுதா…. கேட்குதா…?” என்றான்.
“ம்ம்…” என்றாள் குமுதா.
“ஏய் என்ன ஆச்சு…. இவ்வளவு நேரமும் நீ நல்லாத் தானே பேசிட்டு இருந்த…. இப்போ என்ன…?”
“இல்லை உங்ககிட்ட பேசிட்டு இருந்தேனா… வெளியில வெற்றி அண்ணனோட வாய்ஸ் கேட்டுச்சு…. அதுதான் நாம பேசிட்டு இருந்ததை வெற்றி அண்ணா கேட்டிருப்பாங்களோனு எனக்கு பயமா இருக்கு….”
“அப்படி எல்லாம் இருக்காது…. நாம பேசினது கேட்டிருந்தா உள்ளே வந்திருப்பானோ…. அப்படி வரல தானே அது வரைக்கும் சந்தோஷம் தான் பேசாம இரு பயப்படாதே….”
“உங்களுக்கு என்ன நீங்க சொல்லுவீங்க தான் பயப்படாதேனு…. ஆனால் இங்க நான் பயப்படறது எனக்கு தான் தெரியும்…. மாட்டினேன்னு வெச்சுக்கோங்க…. வெற்றி அண்ணா என்னை கொன்னு போட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கும்….”
“ஏன் உங்க வெற்றி அண்ணா என்ன இதுவரைக்கும் தனியாகவே சுத்திக்கிட்டு இருக்கிறான்….? அவனுக்கு ஏத்த பொண்ணுக்கிட்ட இன்னும் மாட்ட இல்லையா…. நான் இப்படி உன்கிட்ட மாட்டிக்கிட்டேன் ஆனால் பாரு வெற்றி யார்க்கிட்டையும் வந்து மாட்ட இல்லையா….?”
“ஆமா இப்போ இது ரொம்ப முக்கியம்… அப்போ நான் உங்களை இழுத்து வச்சிருக்கிறனா…? உங்களை இங்க யாரும் இழுத்துப் பிடிக்கல… போறதுனா போங்க….” என்றாள் குமுதா.
“சரி சரி சண்டை வேணாம்…. ஏற்கனவே ரெண்டு நாள் சண்டை போட்டு இப்போதான் சேர்ந்து இருக்கிறம்…. அதுக்குள்ள மறுபடியும் சண்டையா…? அம்மா தாயே சண்டையே வேணாம்… உன் வெற்றி அண்ணன் தனியா சுத்தட்டும் இல் ஜோடியா யார் கூட வேணாலும் சுத்தட்டும்.. நான் எதுவுமே பேசல….”
“சரிங்க நான் அப்புறமா பேசறேன்… வெச்சிடுறேன்….”
“ஓகே டி ஓகே பாய்….” என்று போனை வைத்து விட்டு வெளியே வந்தாள்.
அங்கே குசேலனுடன் பேசிக் கொண்டிருந்தான் வெற்றிமாறன். “வெற்றி நீ இன்னைக்கு டவுனுக்கு போய் இந்த உரத்தை கொஞ்சம் வாங்கிட்டு வந்தரியா…? ரெண்டு நாள்ல நம்ம தென்னங் கன்றுக்கு எல்லாம் போடணும் வெற்றி…”
“சரிங்க சித்தப்பா…. நான் போயிட்டு வந்துடறேன்…”
“சரி வெற்றி நானும் அண்ணனும் ஒரு பஞ்சாயத்து விஷயமா போறோம்…. நீ போயிட்டு வந்துடு சரியா….”
“சரி சித்தப்பா அதெல்லாம் பிரச்சனை இல்லை…. நான் போயிட்டு வந்துடறேன்….” என்று அவரிடம் பணத்தையும் உரத்தின் அளவையும் வாங்கிக் கொண்டவன், அதை தனது ஷர்ட் பாக்கெட்டில் வைத்தான்.
அப்போது ராகவி, “வெற்றி சாப்பிட்டு போப்பா……” என்றார்.
“இதோ வரேன் அம்மா….” என்றவன் சாப்பிட அமர்ந்தான். அங்கே குமுதா வருவதைப் பார்த்துவிட்டு, “வா குமுதா சாப்பிடலாம்….” என்று அழைத்தான். அவளும் அவன் அருகில் அமர்ந்தாள் சாப்பிடுவதற்கு. ராகவி வந்து இருவருக்கும் சாப்பாட்டை பரிமாற, இருவரும் சாப்பிட்டனர். குமுதா மெதுவாக சாப்பிட வெற்றியோ வேகமாக சாப்பிட்டுவிட்டு டவுனுக்கு செல்ல புறப்பட்டு விட்டான்.
நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்த வினிதாவின் முதுகில் இரண்டு வைத்தார் ரேணுகா. “அம்மாமாமாமாமாமா… இப்போ எதுக்கு என்னை அடிச்ச…?” என்றவாறு அழுது கொண்டே, கண்களை கசக்கிக் கொண்டு எழும்பினாள் வினிதா.
“அடியே மணி என்ன ஆகுதுன்னு பார்த்தியா…? உனக்கு காலேஜுக்கு போகணும்னு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா…?”
“ஏன்மா இப்போ காலேஜ்ஜ ஞாபகப்படுத்துற காலையிலேயே….”
“அடிச்சேன்னா பாரு…. கழுதை மணி என்ன ஆகுது எழும்பு… எழும்பி ரெடியாகி காலேஜுக்கு போகவேணாம்… சீக்கிரம் போ…. உன் கூட பெரிய ரோதனையா போச்சு… தினமும் காலையில உன்னை எழுப்ப நான் படுற பாடு இருக்கே…. இப்போ உனக்கு புரியாது என்னோட அருமை…. கல்யாணமாசி மாமியார் வீட்டுக்கு போவல நீ… அப்போ தெரியும்…”
“இரு அம்மா இப்போ என்ன நான் எழுந்து போய் குளிச்சு காலேஜுக்கு போகணும் அவ்வளவுதானே பண்றேன்…. அதை விட்டுட்டு மாமியார் மாமியார்னு எப்பவும் அதையே சும்மா இழுக்காதே….” என்று சொல்லியவள் பெட்சீட்டை அப்படியே போட்டுவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.
‘இவ எப்போதான் திருந்தப் போறாளோ…’ என்று தலையில் அடித்த ரேணுகா அந்த பெட்ஷீட்டை எடுத்து மடித்து ஒழுங்காக வைத்துவிட்டு சென்றார்.
வேகமாக குளித்து ரெடியாகி வந்தாலும் வினிதாவை ரேணுகா முறைத்துக் கொண்டிருந்தார்.
“சரிமா முறைக்காத எப்படியும் காலேஜுக்கு போயிடுவேன் சரியா….” என்றவள், சாப்பிட்டுக் கொண்டு இருந்த தமிழ்செல்வன் தட்டில் இருந்த ஒரு தோசையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டவள். லன்ஞ் பாக்ஸை பையில் வைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள் ரேணுகாவிற்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு.
“எப்போ பாரு பதறிட்டு தான் காலேஜ் போக ரெடி ஆகுவா… ஒரு நாளாவது நிம்மதியா காலேஜுக்கு ரெடியாகி போனதை நான் பார்த்ததே இல்லை…” என்றான் தமிழ்ச்செல்வன்.
“நானும் தான் பார்க்குறேன்…. இந்த நாலு வருஷத்துல ஒரு தடவையாவது அவளாக எழுந்து ரெடியாகி போவாள்னு முடியலையே தமிழ் என்ன செய்வோம்… எலஎல்லாம் நாம வாங்கிட்டு வந்த வரம் அப்படி….”
“அது சரி அம்மா… இவ இப்பவே இப்படி இருக்காளே… இதெல்லாம் கல்யாணம் ஆகிப்போன போற இடத்துல என்னம்மா பண்ணுவா…?”
“அதை நெனச்சாத் தான் எனக்கு இன்னும் கஷ்டமா இருக்கு…. அவ குணத்துக்கேத்த மாதிரி. ஒரு நல்ல இடம் அமைஞ்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…”
“வினி அதெல்லாம் கெட்டிக்காரிமா… நம்ம கிட்ட தான் இப்படி குழந்தைத்தனமா நடந்துக்குவா… எங்க பொறுப்பா இருக்கணுமோ அங்க அவ பொறுப்பாவே நடந்துக்குவா….”
“அது சரி எனக்கு அது புரியுது… ஆனால் எல்லா நேரமும் அவங்களோட குழந்தைத்தனத்தை யாரும் பொறுத்துக்கிட்டு போக மாட்டாங்களே…. அதுதான் எனக்கு பயமே தமிழு…”
“அம்மா அவளை பற்றி எதுக்குமே பயப்படாத எல்லாம் சரியா நடக்கும்…. சரிமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் போயிட்டு வரேன்…”
“சரி தமிழு பார்த்து பத்திரமா போயிட்டு வா….” என்று சொல்லிவிட்டு அவர் வேலைகளைப் பார்க்கச் சென்றார்.
இங்கே பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள் வினிதா. அவளின் தோழிகள் ஒருவரையும் காணவில்லை. ‘எங்கடா போயிட்டாளுங்க… ஒருவேளை பஸ் போயிடுச்சா…?’ என்று சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். சரி போனாவது பண்ணிப் பார்க்கலாம் என்று போனைப் பார்க்க, போனைக் காணவில்லை. அப்புறம்தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. போனை சார்ஜில் போட்டவள் வரும் அவசரத்தில் அதை எடுப்பதற்கு மறந்து விட்டாள் என்று. தலையில் அடித்துக் கொண்டவள், ‘சரி காலேஜுக்குத்தான் எப்படியும் போயிருப்பார்கள்… அங்கேயே போய்ப் பார்க்கலாம்…’ என்று பஸ்ஸுக்காக காத்திருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் பஸ் ஒன்று வந்தது. அதைப் பார்த்த வினிதா அதிர்ச்சி அடைந்தாள். ‘என்னடா இது எப்ப பாரு கூட்டமா வர்ற பஸ் இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு என்னவா இருக்கும்…?” என்று யோசித்தவள். சீட் காலியாக இருக்க அதில் சென்று அமர்ந்தாள். பின்னர் காலேஜ் வந்ததும் இறங்கிக்கொண்டாள். அங்கே பார்த்தால் காலேஜ் வாட்ச் மேன். இவளையே பார்த்துக் கொண்டிருந்தார். அவளும் சிரித்துக் கொண்டு அவரிடம் சென்றார்.
“ரவி அண்ணே என்ன கேட்டை மூடி வச்சு இருக்கீங்க….?”
“என்ன வினிதா… உனக்கு விஷயமே தெரியாதா….?”
“விஷயமா… என்ன விஷயம் ரவி அண்ணா…?”
“இன்னைக்கு காலேஜ்ல ஸ்ட்ரைக்…”
“என்னாது காலேஜ்ல ஸ்ட்ரைக்கா… ஏன் ஸ்ட்ரைக்…? எதுக்காக ஸ்ட்ரைக்….? ஏன் எனக்குச் சொல்லலை….? யாரு ஸ்ட்ரைக் பண்றது…?” என்று கேள்வியாக அடுக்கிக் கொண்டு சென்றாள் வினிதா.
“நிப்பாட்டுமா இத்தனை கேள்வி கேட்கிறயே உனக்கு யாரும் போன் பண்ணி சொல்லலையா இன்னைக்கு காலேஜ் ஸ்ட்ரைக்குனு… காலேஜ் ஸ்ட்ரைக் அது மட்டும் தான் எனக்குத் தெரியும்… எதுக்காக ஸ்ட்ரைக்குனு எல்லாம் எனக்கு தெரியாதுமா….” என்றார்.
தலையில் அடித்துக் கொண்டாள் வினிதா. “ஐயோ கடவுளே இதுக்குத்தான் நான் இப்படி இவ்வளவு அவசரமா ரெடி ஆகி காலேஜுக்கு வந்தனா….? சரி பரவாயில்லை காலேஜ் ஸ்ட்ரைக் நேரத்திலும் படிக்கும் ஆர்வத்தில் காலேஜுக்கு வந்த வினிதா என்று வரலாறு என்னை புகட்டும்…” என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள் வினிதா. அதே நேரத்தில் டவுனுக்கு சென்ற வெற்றிமாறன் குசேலன் சொன்ன அளவிற்கு வேண்டிய உரத்தை வாங்கிக் கொண்டு, அதை ஒரு லாரியில் ஏற்றி விட்டு, அவனின் நண்பன் ஒருவனுடன் அந்த லாரியை ஊருக்கு அனுப்பி வைத்தான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super