வந்த வேலை எல்லாம் முடிந்ததும் புல்லட்டை எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான் வெற்றிமாறன். அப்போது வினிதாவின் காலேஜ்ஜிற்கு அருகில் இருக்கும் ஒரு டீக்கடையில் டீ குடிப்பதற்காக புல்லட்டை நிறுத்தினான். டீ குடித்துக் கொண்டிருக்கும் போது இரண்டு தடியர்கள் வந்து அந்த ஹோட்டல் கண்ணாடியை உடைத்தார்கள். அந்த ஹோட்டல் முதலாளியும், “எதுக்காக இப்பா என்னோட கடை கண்ணாடியை உடைச்சீங்க…?” என்று கேட்டார். அதற்கு அவர்களும், “எங்க அண்ணனை போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க… அதனால அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கிறோம்.. மரியாதையாக கடையை மூடிக்கிட்டு பேசாம போயிடு…. இல்லை கடை இருக்காது….” என்று அவர்கள் எச்சரித்தார்கள்.
கடைக்கார முதலாளியும் விட்டா போதும் என்று அந்த ஹோட்டலில் இருந்தவர்களை. வெளியே போக சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். “எல்லோரும் சீக்கிரம் போயிருங்க…. இந்த ஏரியா முழுவதும் இப்ப எங்க கண்ட்ரோல்ல இருக்கு…. ஏதாவது பிரச்சனை பண்ணீங்கனா ஒழுங்கா வீடு போய் சேரமாட்டீங்க….” என்று விரட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த அடியாட்கள்.
வெற்றி மாறனும் நமக்கு எதற்கு வீண் பிரச்சனை என்று அங்கிருந்து புல்லட்டை எடுத்துக்கொண்டு இருக்கும்போது அங்கே வந்த பஸ்ஸை நிறுத்தி அதன் கண்ணாடியை உடைத்தனர். இதைப் பார்த்த வெற்றிமாறன், ‘இவர்களுக்கு வேற வேலையில்ல ஆன்னா ஊன்னானா பஸ் அடிகிறது… எரிக்கிறதுன்னே இருப்பானுங்க…’ என்ற வெற்றிமாறன் எதுவும் பேசாமல் புல்லட் எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.
வரும் வழியில் ஒரு பஸ் ஸ்டாண்டில் வினிதா நிற்பது தெரிந்தது. உடனே, அவள் அருகில் கொண்டு புல்லட்டை நிறுத்தினான். “ஏ குட்டச்சி இங்க என்னடி செய்ற….?” என்றான் வெற்றிமாறன். அவனைக் கண்டதும் வினிதாவின் முகம் பிரகாசித்தது.
“ஐ மாமா….”
“ஏய் மாமா இருக்கட்டும்…. நீ இங்க என்னடி பண்ற…?”
“அந்த சோகத்தை ஏன் மாமா கேட்கிற…? இன்னைக்கு காலேஜ்ல ஸ்ட்ரைக்… அது தெரியாம நான் மட்டும் வந்து மாட்டிக்கிட்டேன்… வீட்டுக்கு போலாம்னு பார்த்தா பஸ் எதுவும் வரல…. இவனுக்கு வேற பெரிய பெரிய கட்டையால் சுத்திக்கிட்டே இருக்காங்க… போற வர வாகனத்துக்கு அடிக்கிறாங்க…. ஆட்டோவேற கிடைக்கல பயமா இருக்கு மாமா….” என்றாள் வினிதா.
“ஏன்டி காலேஜ்க்கு வரும்போது காலேஜ் இன்னைக்கு இருக்குமா இல்லையான்னு பார்த்து வரமாட்ட… உன் போன் எங்க…?”
“உன்னை கொன்னா கூட தப்பு இல்லடி… ஏன்டி காலேஜ் போற பொண்ணு போகும் போதும் வரும் போதும் ஏதும் பிரச்சனை இருந்தா வீட்டுக்கு சொல்றதுக்காக உனக்கு போன் வாங்கி கொடுத்து இருப்பாங்க… நீ நல்லா அந்த போன்ல கேம் விளையாடிட்டு இப்போ வீட்டில விட்டுட்டு வந்துட்ட…. உனக்கு ஏதாவது நடந்தால் யாரு பதில் சொல்றது வீட்டுக்கு…?”
“அதெல்லாம் நடக்காது ஒன்னும் நடக்காது மாமா….”
“ஓ அப்படியா சரி சரி… அப்போ இங்க இருந்து பஸ் வந்ததும் மெதுவா வா…” என்றான். வினிதாவிற்கு பயம் வந்து விட்டது.
“என்ன மாமா நீ…? உன்னைப் பார்த்ததும் உன் கூட வீட்டிற்கு போயிடலாம்னு பார்த்தேன்…. ப்ளீஸ் மாமா இப்படி அம்போன்னு விட்டுட்டு போயிடாத மாமா…” என்றாள்.
“உன்னை எல்லாம் என்ன பண்றன்னே தெரியலடி… சரி ஏறித் தொலை….” என்றான். அவளும் சிரித்துக் கொண்டே புல்லட்டில் ஏறினாள். கொஞ்ச தூரம் வந்ததும் ஒரு பாலம் ஒன்று வந்தது. அந்தப் பாலத்தின் அருகில் வந்ததும் மெதுவாக புல்லட்டை நிறுத்தினான் வெற்றிமாறன்.
“மாமா ஏன் வண்டியை நிறுத்திட…? ஓஓஓ நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கவா நிறுத்தின…?” என்றாள் வினிதா. “ஆசையைப் பாரு குந்தாணிக்கு… இவ்வளவு நேரம் நல்லாத்தான் வந்துட்டு இருந்தது… இப்போ மட்டும் என்ன வா இருக்கும்… உன்னை எல்லாம் ஏத்திட்டு வந்தேன் பாரு என் புத்திய நானே அடிக்கணும்….”
“என்ன மாமா…?”
“என்ன நோமா…. வண்டியை பார்க்க முன்னாடி என்னன்னு என்கிட்ட கேட்டா எனக்கு என்னடி தெரியும்…? கொஞ்சம் இரு பார்ப்போம்…. முதல்ல வண்டியை விட்டு கீழே இறங்கு… அப்படியே உட்கார்ந்து கொண்டு கேள்வி கேட்காமல்…” என்று சொன்னவன், அவள் இறங்கியதும், வண்டியை செக் பண்ணினான்.
ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் ஸ்டார்ட் பண்ணவே இல்லை. “இது வேற நேரம் பார்த்து என்னை வச்சி செய்தே….” என்றான் வெற்றிமாறன். “இது இப்போதைக்கு ரெடி ஆகுமான்னு தெரியல…. ஊருக்கு கொண்டு போயித்தான் பார்க்கணும் வா போலாம்…” என்றான்.
“நீதான் பைக் வேலை செய்யலைன்னு சொன்ன அப்புறம் எப்படி மாமா போறது….?”
“வேற எப்படி போறது நடந்து தான் போகணும்….”
“என்னாது நடந்தா…. மாமா இங்க இருந்து நம்ம ஊரு ரொம்ப தூரமே மாமா….”
“அதுக்கு நான் என்னடி பண்றது… என் கூட வாரதுனா வா…. இல்லை உன் அப்பனுக்கு போன் பண்ணி அவன் கூட போ…”
“என்கிட்ட தான் போன் இல்லைல… மாமா நான் மறுபடியும் சொல்றேன் என் அப்பா பத்தி மட்டும் எதுவும் பேசாத….”
“ஆமா வந்துட்டா பெருசா பேச… என்ன இப்போ என்கூட வரியா இல்லை இங்க உட்கார்ந்துக்க போறியா…? ஒருவேளை அவனுக்கு வந்தாலும் வருவானுங்க…”
“ஐய்யய்யோ வேணாம் மாமா… நான் உன் கூடவே வரேன் வா போலாம்….” என்றாள். வெற்றிமாறன் பைக்கை தள்ளிக் கொண்டு வர வினிதா அவன் அருகில் நடந்து கொண்டு வந்தாள். கொஞ்ச தூரம் நடந்து வந்ததும் வினிதா, “கொஞ்சம் நில்லு மாமா….” என்று சொல்லி அந்த பைக்கில் சாய்ந்து நின்று மூச்சு வாங்கினாள். பேக்கில் இருந்த தண்ணி எடுத்து கடித்தவள், “மாமா என்னால இதுக்கு மேல முடியலை… கால் எல்லாம் வலிக்குது மாமா…” என்றாள்.
“ஏன்டி ஒரு கொஞ்ச தூரம் தான் வந்திருக்கும்…. இதுக்கு உனக்கு மூச்சு வாங்குதா….? அது சரி ஒழுங்கா வேலை வெட்டி செய்தா தெரியும்…. இது ஒன்னுமே செய்யாமல் தூங்குறதை மட்டுமே வேலையா செய்தா கால் வலிக்காம என்ன பண்ணும்…? முதல்ல உடம்பை குறை டி நடக்க முடியும்…”
“போ மாமா நீ எப்ப பாரு என்னோட உடம்பைத்தான் நீ கேலி பண்ற… நான் ஒன்னும் அவ்வளவு வெயிட் எல்லாம் இல்லை…. வெறும் ஐம்பத்தைந்து கேஜி தான்…”
“ஆமா அது பெரிய வெயிட்டில்லை பாரு…”
“மாமா இதுக்கு மேல என் வெயிட்டை கேலி பண்ணிட்டு இருந்த அப்புறம் நடக்குறதே வேற….”
“என்னடி பண்ணுவ…?” என்று அவனும் அவளுடன் சண்டைக்கு வந்தான். இருவரும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரியின் ஹாரன் சவுண்ட் இவர்களை நினைவு கொண்டு வந்தது. ‘இவ கூட ரோட்டில் வைத்து சண்டை போடுற மாதிரி நிலைமை வந்துட்டே.ய முருகா…’ என்று தலையில் கை வைத்துக்கொண்டு, “பேசாம அப்படியே வரணும்…” என்று அவளிடம் சொல்லி அவளை மேலும் இரண்டு கிலோ மீட்டர் நடத்தியே அழைத்து வந்தான். வினிதாவிற்கு நன்றாக மூச்சு வாங்கியது.
சிறிது நேரம் உட்கார்ந்து எழுந்து வந்து கொண்டிருந்தாள். ஊருக்கு. அருகில் வந்ததும் புல்லட்டை நிறுத்திவிட்டு, வெற்றிமாறன் சத்தம் போட்டு சிரிக்கத் தொடங்கினான். வினிதாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்னடா இது இவ்வளவு நேரம் நல்லா தானே இருந்துச்சு இந்த மாமா… இப்போ என்ன லூசு மாதிரி சிரிக்குது… ஒரு வேளை நடந்து வந்ததுல மாமாக்கு. பைத்தியம் புடிச்சிருக்குமோ….’ என்று யோசித்தவள், “மாமா… மாமா…” என்றாள் வெற்றிமாறனைப் பார்த்து.
அவனோ சிரிப்பை நிறுத்துவதாக இல்லை. நன்றாக சிரித்துக்கொண்டிருந்தான்.
“அப்பா முடியலப்பா….” என்றான். அதைப் பார்த்த வினிதா, “மாமா இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி சிரிக்கிற….?” என்று கேட்டாள். அதுக்கு வெற்றிமாறனோ, “அது ஒன்னும் இல்லை… உன்னை மூணு கிலோ மீட்டர் நடத்தியே கூட்டிட்டு வந்தேனே அதை நினைச்சேன் சிரிச்சேன்….” என்றான்.
“என்னாது நடத்தி கூட்டிட்டு வந்தியா….?”
“ஆமா நடத்தியே தான் கூட்டிட்டு வந்தேன்….”
“நீ லூசா மாமா…. வண்டி வேலை செய்யலைன்னுதானே நடந்து வந்தோம்…. நீ வேணும்னு கூட்டிட்டு வந்த மாதிரி சொல்ற….”
“இன்னும் உனக்கு புரியலையா…. அறிவாளியே புல்லட் எல்லாம் நல்லாத்தான் இருக்குது…. உன்னை வேணும் தான் நடக்க வச்சு கூட்டி வந்தேன்…” என்றான் வெற்றிமாறன்.
இதைக் கேட்டதும் வினிதாவின் முகம் மாறியது. “ஏன்டா மாமா… அப்போ வேணும்னு தான் என்ன நடக்க வச்சு கூட்டி வந்தியா…?”
“ஆமா இவ மகாராணி மாதிரி உட்கார்ந்து வருவாங்களாம்… இவங்களை நான் கூட்டிட்டு வரணுமாம்… அதுதான் இந்த மூணு கிலோ மீட்டர் நடக்க வச்சு கூட்டி வந்தேன்…” என்றான்.
வினிதா தனது கையில் இருந்த தண்ணீர் பாட்டிலால் அவன் தலையிலேயே ஒன்று போட்டாள். கையில் இருந்த புத்தகப் பையால் முதுகில் நான்கு அடி வைத்தாள். “ஏன் மாமா நான் இவ்வளவு மூச்சு வாங்குனேன்…. எப்படி கஷ்டப்பட்டு நடந்து வந்தேன்…. அது உனக்கு சிரிப்பா இருக்கு இல்ல…” என்று கேட்டு அடித்தாள்.
அதற்கு வெற்றிமாறன், “நீதானடி சொன்ன…. நீ ரொம்ப பலசாலின்னு அதுதான் உன் பலத்தை பார்க்க இப்படி பண்ணேன்….” என்றான். வினிதாவிற்கு அழுகையே வந்து விட்டது. “மாமா போ மாமா…. உன்னை எவ்வளவு நம்பினேன் ஆனால் நீ என்னை ஏமாத்திட்டல்ல… எனக்கு காலெல்லாம் ரொம்ப வலிக்குது தெரியுமா…” என்றாள் அழுகையுடன். அவளது அழுகையைப் பார்த்து வெற்றிமாறன்க்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
“ஏய் ஒரு விளையாட்டுக்கு பண்ணேன் டி… நீதான் பலசாலி ஆச்சே அதுதான் விளையாட்டுக்கு பண்ணேன்…. மத்தபடி உன்னை ஹர்ட் பண்ண நான் நினைக்கலடி… சாரி…” என்றான் வெற்றிமாறன். “போவோமா… நிஜமா எனக்கு கால் எல்லாம் வலிக்குது…. என்னால நடக்கக் கூட முடியல….” என்றாள்.
“ஏ சாரி…. சாரி… சாரி வினி…. இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்…” என்று அவளிடம் கெஞ்சினான் வெற்றிமாறன். “நீ போ நான் உன் கூட இனிமே பேசவே மாட்டேன்….” என்று அங்கிருந்து செல்ல முயன்றவள் கையை பிடித்தான் வெற்றிமாறன்.
“ஏய் அதை விளையாட்டுக்கு பண்ணேன்னு சொன்னேன்ல… வா வந்து இரு நான் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன்…”
“எப்பா சாமி வேண்டாம்… அப்புறம் அதுக்கும் வேற ஏதாவது சொல்லுவ… எதுவுமே வேணாம்… நீ போ… நான் இங்க இருந்து வீட்டிற்கு நடந்தே போகிறேன்… வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும்… நீங்க போங்க… என்னை சோதிக்க நீங்களும் ஏன் நடந்து வரணும்…? நீங்க போங்க நான் இப்படியே போயிடுவேன்…” என்றாள்.
வினிதா எதையும் விளையாட்டாக எடுத்துக் கொள்வாள் என்றே நினைத்தான் வெற்றிமாறன். அவள் இப்படி பேசவும் வெற்றிமாறனின் முகம் சுருங்கி விட்டது.
“இங்க பாருடி நான் வேணும்னு பண்ணலை…. விளையாட்டுக்கு பண்ணது வா…. உன்னை வந்து வீட்ல விடுறேன்…”
“ஒன்னும் தேவையில்லை என்று சொல்றேன்ல… உங்களுக்கு புரியலையா விடுங்க என் கையை….” என்ற கத்தினாள் வினிதா.
“ஏய் ரோட்டில் இருந்து கத்துற… அடிச்சேன் பாரு…. நானும் விளையாட்டுக்கு பண்ணேன் பண்ணேன்னு சொல்றேன் நீ கேட்குறதா இல்லை….” என்றான். வினிதாவும் எதுவும் பேசாமல் அமைதியாக ஏறிக்கொண்டாள். வெற்றிமாறன் ஊருக்கு வந்ததும், அவள் வீட்டிற்கு செல்லும் வழியில் வண்டியை விட வினிதா, “இங்கேயே விடுங்க…” என்றாள்.
“நான் வீட்டிலேயே விடுறேன்டி…”
“ஒன்னும் வேணாம் என்னை இங்கேயே விடுங்க… யாராவது பார்த்தால் அது வேற பிரச்சினையாகிடும்…” என்றாள்.
ஆனால் வெற்றிமாறனோ, “இல்லை நான் உன்ன வீட்டிலேயே விட்டுட்டு போயிடுறேன்…” என்றான். “சொன்னா கேட்க மாட்டீங்களா…? கால் வலியா இருக்கு இதுபோதாதுனு, உங்ககூட வீட்டுக்கு போய் அதுக்கு வேற என்னை போட்டு அப்பா அடிக்கவா…. அது தான் உங்களுக்கு சந்தோஷம்னா எங்க வீட்டிலேயே கொண்டு போய் விடுங்க….” என்றாள்.
வெற்றிமாறனும் எதுவும் பேசாமல் வண்டியை நிறுத்த, இறங்கிய வினிதா அவனை நிமிர்ந்து பார்க்காமல் சென்றுவிட்டாள். ஒரு விளையாட்டுக்கு பண்ணது இவ்வளவு சீரியஸா ஆகும்னு நினைக்கலையே. என்று நினைத்தால் வெற்றிமாறன்.
அதே நேரத்தில், ‘நீ விளையாட்டுக்கு இப்படியா பண்ணுவ… இது கொஞ்சம் ஓவர் தாண்டா…’ என்றது அவனின் மனசாட்சி. தலையை உதறிக் கொண்ட வெற்றிமாறன் அங்கிருந்து சென்று விட்டான்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Pavam vini