என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 24

4.7
(15)

அத்தியாயம் : 24

வயலில் வேலை செய்வதற்கு ஆட்களைப் பார்ப்பதற்கு அந்தப் பக்கமாக வந்த வெற்றிமாறனின் கண்களுக்கு தென்பட்டார் தரகர். ‘என்ன மாமா வீட்டில் இருந்து தரகர் போறாரு என்னவா இருக்கும்…’ என்று யோசித்தவன். தரகர் அருகில் கொண்டு வண்டியை நிறுத்தினான். அவனைப் பார்த்த பிறகு, “அடடே வெற்றி தம்பி எப்படி இருக்கீங்க….?” என்றார். அவனும், “நான் நல்லா இருக்கிறேன்…. நீங்க எப்பிடி இருக்கிறீங்க…? என்ன இந்த பக்கம் வரீங்க….?”

“அது ஒன்னும் இல்லப்பா… உங்க மாமா அவர் பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்கச் சொல்லி இருந்தாரு… அதுக்கு போட்டோ குடுத்தாங்க அதான் வரன் பார்க்குறதுக்காக எடுத்துட்டு போறேன்….”

‘பொண்ணுக்கா… ஓஹோ நம்ம வாயாடிக்கா….?’ என்ற மனதிற்குள் நினைத்தவன். “சரிங்க தரகரே பார்த்து நல்ல பையனா பார்த்துக் கொடுங்க…. என்ன இருந்தாலும் என் மாமா பொண்ணு இல்ல….” என்றான் வெற்றிமாறன். 

“இந்த ரெண்டு குடும்பம் ஒண்ணா இருந்திருந்தா நான் எதுக்கு…? ஒரு பொண்ணைக் கொடுத்து ஒரு பொண்ணை எடுக்க வேண்டியதா இருந்திருக்கும்… என்ன செய்றது…?” 

“தரகரே என்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா… போங்க போங்க போய் மாமா குடுத்த வேலையைப் பாருங்க….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான். 

வெற்றிமாறன் அவன் தந்தை சொன்ன மாதிரி வேலையாட்களை அழைத்து வந்து, வயலில் வேலை செய்ய விட்டு விட்டு அதை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்கள் மட்டுமே அவர்கள் வேலை செய்வதை பார்த்தது ஆனால் அவனது எண்ணமோ தரகர் சொன்னதிலேயே இருந்தது. இத்தனை நாள் வினிதாவை விளையாட்டாக அவன் வம்பு இழுத்ததும் உண்டு. அவள் அவனை வம்பு இழுப்பதும் அவனுக்கு பிடித்தமான ஒன்று. இனிமேல் வினிதா திருமணமாகி வேறு இடத்திற்கு சென்றுவிட்டால் அவளை வம்பு இழுக்கவோ அவளுடன் விளையாடவோ முடியாது என்ற நிதர்சனம் அவனுக்கு புரிந்தது. அப்போதுதான் இன்னும் ஒன்று வெற்றிமாறனுக்கு புரிந்தது. அவள் திருமணம் செய்து சென்றுவிடுவாள் என்று சொன்னதும் அவன் மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு வலி ஒன்று. அது என்னவென்று அவன் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அமைதியாக அந்த ஆலமரத்தின் கீழே அமர்ந்திருந்தான்.

தமிழ்ச்செல்வனும் குமுதாவும் தங்கள் காதலில் மிகவும் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் குடும்பம் இரண்டு சேராமல் தாங்கள் திருமண பந்தத்தில் இணைவதில்லை என்ற முடிவையும் எடுத்திருந்தனர். வெற்றிமாறன் எப்படியாவது அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக அவர்களுக்கு உறுதியளித்திருந்தார். தாத்தா இருவரும் சேர்ந்து விட்டார்கள். அடுத்ததாக தங்கள் இருவரின் அம்மாவையும் இணைக்க வேண்டும் என நினைத்தான் வெற்றிமாறன். அதுக்கு ஏற்ற மாதிரி ரேணுகாவின் தோழியான ஒருவரின் உதவியை நாடினான். 

ரேணுகாவின் நெருங்கிய தோழி ஒருவரை நேரில் சென்று சந்தித்தான் வெற்றிமாறன். “வணக்கம் அம்மா நீங்க ரேணுகா அத்தையோட நெருங்கிய தோழி தானே….”

“அடடே வெற்றி தம்பியா வாப்பா… ஆமா ரேணுகா என்னோட நெருங்கிய தோழிதான் நான்… சொல்லு வெற்றி, எதுக்குப்பா என்ன பார்க்கணும்னு சொன்னே…”

“வசந்தி அம்மா உங்களால எனக்கு ஒரு உதவி ஆகணும்…”

“என்னால உனக்கு உதவியா…. என்னால முடிஞ்சா கண்டிப்பா பண்றேன்….”

“அது வந்து…. யாருக்கும் தெரியக்கூடாது ப்ளீஸ்….”

“சொல்லு வெற்றி என்ன உதவி செய்யணும்….? யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்…” என்றார் வசந்தி. “அது வந்து எங்க குடும்பத்தையும் ரேணுகா அத்தை குடும்பத்தையும் சேர்த்து வைக்கிறதுக்கு நான் முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன்…. அதுக்கு நீங்களும் ஒரு உதவி செய்யணும்மா….” என்றான். 

உடனே வசந்தியும், “நல்ல விஷயம் தானே வெற்றி…. இதுக்கு நான் கண்டிப்பா உதவி பண்றேன்… ஆமா நான் இப்போ என்ன செய்யணும்…?” என்று கேட்டார். அதுக்கு வெற்றிமாறனும், “நான் சொல்ற மாதிரி பண்ணினால் போதும் அம்மா…” என்றவன் அவனது திட்டத்தை அவருக்குச் சொன்னான். உடனே அவரும், “சரி வெற்றி நீ சொன்னதை சரியா பண்ணிடுவேன்…. நீ கவலைப்படாதப்பா….. இந்த சின்ன வயசுல ரெண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்கணும்னு நினைக்கிற உன்னோட மனசுக்கு நீ எப்பவும் நல்லா இருப்ப…. நீ நினைக்கிறது எல்லாமே நல்லபடியா நடக்கும்…” என்றார் வசந்தி. 

“ரொம்ப நன்றி அம்மா…. இரண்டு குடும்பமும் ஒண்ணாயிட்டா எனக்கு அதுவே போதும்…. நான் கேட்டதும் எனக்கு உதவி பண்ண சம்மதித்ததற்கு ரொம்ப நன்றி…” என்றான் வெற்றிமாறன். 

“வெற்றி, ரேணு அவங்க அண்ணி கூட எவ்வளவு ஒத்துமையா இருந்தான்னு எனக்கு நல்லாவே தெரியும்… அவங்க பிரிஞ்சதுக்கு என்ன காரணம்னு எனக்குத் தெரியாது…. ஆனால் ரேணுவை நான் பார்க்கும் போதெல்லாம் அதையே சொல்லி ரொம்ப கவலைப்படுவா…. இப்போ அவளோட குடும்பம் ரெண்டும் ஒன்னு சேருவதற்கு நான் அந்த ராமனுக்கு பாலம் கட்ட உதவி செஞ்ச அணில் போல நானும் ரேணு அவளோட குடும்பத்தோட சேர்வதற்கு என்னால முடிஞ்ச உதவியை நான் கண்டிப்பா பண்றேன்… நீ கவலைப்படாம போப்பா…”

“சரிங்க வசந்தி அம்மா…. நான் போயிட்டு வரேன்… நீங்க பண்ணப் போற உதவிக்கு அப்புறம் தான் நான் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க முடியும்… நான் வாரேன்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் வெற்றிமாறன். 

வசந்தி, ‘இந்த காலத்துல இப்படி ஒரு பிள்ளைங்களா…. குடும்பத்தை ஒன்னு சேர்க்க நினைக்கிறேன் என்ற வெற்றியோட முயற்சியை நீதான் மாரியம்மா நிறைவேற்றி வைக்கணும்….’ என்று கடவுளிடம் சிறு விண்ணப்பத்தை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றார் வசந்தி.

வெற்றிமாறன் தமிழ்ச்செல்வனுக்கு கால் பண்ணினான். மறுபக்கம் போனை எடுத்தான் தமிழ்ச்செல்வன். “சொல்லு வெற்றி… என்ன ஆச்சு…? அவங்களை சந்திச்சியா…?” என்று கேட்டான். அதுக்கு வெற்றியும், “ஆமா தமிழ் நான் அவங்களைப் பார்த்து பேசிட்டேன்…. நம்ம பிளானை அவங்க கிட்ட சொல்லிட்டேன்… அவங்களும் சம்மதிச்சுட்டாங்க…”

“சூப்பர் வெற்றி…. இதுவே நம்ம முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றிதான்….. எப்படியாவது அம்மாவையும் அத்தைகளையும். சேர்த்து வச்சா நல்லதுடா….” என்றான். 

“ஆனால் தமிழ் எங்க அம்மாவும் அத்தையும் பார்த்த இடத்தில் யாருக்கும் தெரியாத மாதிரி பேசுறதை நானும் பார்த்தேன்… அன்னைக்கு கல்யாண வீட்ல கூட மண்டபத்துக்கு பின்னால நின்னு அவங்க மூணு பேரும் பேசிட்டு இருந்தாங்க….”

“அப்படின்னா வெற்றி நம்ம இந்த பிளான கேன்சல் பண்ண வேண்டுமா….?”

“இல்லை…. இல்லை தமிழு…. நம்ம இதையும் பண்ணனும்…. அப்போதான் அவங்க மூணு பேரும் ஒரு பிரச்சனை வந்தால் ஒண்ணா நிப்பாங்க…. மாமாவையும் அவங்களையும் நம்ம குடும்பத்தோட சேர்க்க அவங்க அழுத்தம் ஒன்று கொடுக்கணும்…. அதுக்கு இந்த பிளான் கண்டிப்பாக தேவைதான்….” என்றான் வெற்றிமாறன். 

“வெற்றி இந்த குடும்பத்தை ஒன்னு சேர்க்க என்னை விட நீ தான் கஷ்டப்படுற….” என்றான் தமிழ்ச்செல்வன். 

“விடு தமிழு உனக்காக இது கூட பண்ண மாட்டேனா…. அது மட்டும் இல்லை ரெண்டு குடும்பம் சேர்ந்தா ரொம்ப நல்லது தானே…. அது ஒன்னும் பிரச்சனை இல்லை ரெண்டு பேரையும் ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து வச்சு உங்க ரெண்டு பேருக்கும் அவங்க மனசார வாழ்த்துகிற மாதிரி கல்யாணம் பண்ணி வைப்பேன்…. நான் சொன்ன வாக்கை கண்டிப்பா காப்பாற்றுவேன்….” என்றான் வெற்றிமாறன். 

“வெற்றி இதுக்கு கைமாறா நான் உனக்கு என்ன செய்யப் போறேன்னு தெரியலை…. ஆனால் உனக்கு கண்டிப்பா பெருசா ஏதாவது செய்வேன் மச்சான்…”

“இந்த கைமாறான கதை எல்லாம் தேவையில்லை… நீ சந்தோஷமா இருந்தா போதும்…. என் தங்கச்சியையும் சந்தோஷமா பார்த்துகிட்ட அதுவே எனக்கு போதும்….”

“கண்டிப்பா வெற்றி… உன் தங்கச்சியை என் கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவேன்….” என்றான். 

வெற்றிமாறன், “சரி தமிழ்… நான் சொன்ன மாதிரி அத்தையை வந்து கோயிலுக்கு அனுப்பி வச்சிடு…” என்றான்.  

“சரி வெற்றி…. நீ சொன்ன மாதிரியே நான் பண்ணிடுறன்….”

“சரி ஓகே…. நான் வீட்ல அம்மாவை கோயிலுக்கு அனுப்பி வைக்கணும். நான் அப்புறம் பேசுறேன்….” என்று போனை வைத்தான் வெற்றிமாறன். 

மறுபக்கம் போனை அணைத்த தமிழ்ச்செல்வனோ ரேணுகாவை எப்படி கோயிலுக்கு அனுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது வினிதா பாட்டு பாடிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள். அவளைப் பார்த்ததும் தமிழுக்கு ஒரு யோசனை வந்தது உடனே, “வினி இங்கே கொஞ்சம் வா….” என்று அழைத்தான். 

“உனக்கு வேணும்னா நீ வா… என்னால எல்லாம் வர முடியாது…” என்றாள் வினிதா. 

‘எல்லாம் என் கிரகம்…’ என்று நினைத்த தமிழ், “வினிமா கொஞ்சம் வாடா….” என்று அழைத்தான். “என்னடா இது உனக்கு என்ன லூசாயிடுச்சா…. இவ்வளவு பாசமா எல்லாம் கூப்பிடுற…?” என்று கேட்டாள். 

“வினி கொஞ்சம் வா ப்ளீஸ்….” என்றான் தமிழ்ச்செல்வன் அவனது அறைக்குள் அழைத்தான். ‘வினி எதுவும் தப்பு பண்ணிட்டியோ… ஒருவேளை அறைக்குள்ளே போட்டு அடிக்க போறானோ தெரியலையே….’ என்று யோசித்தாள் வினிதா. பிறகு, ‘அடிக்க எல்லாம் மாட்டான்… ஒரு வேளை அவன் எனக்கு அடிச்சான்னா நான் அவன் குமுதாவை லவ் பண்றதை வீட்டில் போட்டு உடைத்து விடலாம்…. வெரி குட் வினி…’ என்று அவளைப் பாராட்டிக் கொண்டவள், அவனது அறைக்குள் சென்றாள். உடனே அவள் தலையில் நாலு கொட்டு வைத்தான் தமிழ்ச்செல்வன். “ஐயோ அம்மா எதுக்குடா இப்ப என்ன கொட்டினே….? இந்த கொட்டு வைக்கவா என்னை வரச் சொன்னே…. பாசமா கூப்பிட்டேன்னுதான் நான் உன்னை நம்பி வந்தேன் தடியா….” என்றாள் வினிதா. 

“ஏய் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்ல கூப்பிடுறேன்…. நீ அங்க இருந்து வரமாட்டேன்னு சொல்ற….” என்றான். 

“நீ முக்கியமான விஷயம் சொல்ல போறேன்னு எனக்கு என்ன மூக்கு வேர்க்குமா…? அப்படி என்ன தலை போற விஷயம் சொல்லு முதல்ல…” 

உடனே தமிழ்ச்செல்வன், “எல்லாம் தலையெழுத்துடி…. உனக்கு நேரம் வரும்ல்ல அப்போ வச்சுக்கிறன் உன்னை….” என்று சொல்லி அவளிடம் வெற்றி சொன்ன விஷயத்தை சொன்னான். 

“வாவ் மாமா இந்த அளவுக்கு வேலை ஆரம்பிச்சிடுச்சா…. பாவம் உன் காதலால மாமா படாதபாடு படுது… நீ ஒன்னும் பேசாம அண்ணி கூட போன்லயே ரொமான்ஸ் பண்ணிட்டு இரு….”

“ஏய் என்னால முடிஞ்சதை பண்ணிட்டு தான் இருக்கிறேன்….”

“சரி இப்போ எதுக்கு என்னை கூப்பிட்ட….?”

“இப்போ என்ன பண்றன்னா அம்மாவை நைசாக பேசி கோயிலுக்கு கூட்டிட்டு போகணும்…” என்றான். 

“நான் கோயிலுக்கு போக கூப்பிட்டா அம்மா நம்பாது அண்ணா…. வர மாட்டாங்க…” 

“அது எல்லாம் எனக்குத் தெரியாது…. நீ தான் நைஸா பேசி அம்மாவை கூட்டிட்டு போறே….”

“உனக்கெல்லாம் தங்கச்சியா பிறந்தேன் பாரு… என்னைச் சொல்லணும்….” என்றான். 

“சரி நான் கூட்டிட்டு போறேன்… ஆனால் நான் கோயிலுக்கு போயிட்டு வரும்போது எனக்கு அந்த சாக்லேட் பிளேவர் ஐஸ்கிரீம் இருக்கணும்….”

“சரிடி வாங்கி வைக்கிறேன்…. முதல்ல நீ அம்மாவை கூட்டிட்டு கோயிலுக்கு போ….”

“இதோ பாரு தமிழு என்னை ஏமாற்ற நினைச்ச உன்னோட லவ் மேட்டரை நான் அப்பாக்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன்…..” என்றாள். 

“அதையே சொல்லிச் சொல்லி எத்தனை ஐஸ்கிரீம் டி வாங்கி தின்னுவ தின்னி பண்டாரம்…. போ வாங்கி வைக்கிறேன்….”

“அந்த பயம் இருக்கணும் தம்பி வரட்டா….” என்றவள் ரேணுகாவிடம் சென்றாள்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!