வெற்றிமாறன், வினிதாவிற்கு பார்த்த மாப்பிள்ளை வேலை பார்க்கும் இடத்திற்கு தனது நண்பனுடன் வந்தான். பின் அந்த மாப்பிள்ளையை பற்றி விசாரித்து அவனது தொலைபேசி எண்ணை எப்படியோ வாங்கியவன், அந்த இடத்திலிருந்து வெளியே வந்தான். அவனது நண்பனும், “மச்சான் இப்போ மாப்பிள்ளையோட பேசணும்னு தானே அழைச்சிட்டு வந்தே…. இப்ப என்ன வெளியில வந்துட்டோம்… மாப்பிள்ளையை பார்க்கவே இல்ல….”
“டேய் மாப்பிள்ளை பேசத்தான் வந்தோம் அதுக்காக அவர இப்படி நேர்ல பாத்துப் பேசணும்ன்னு இல்ல… அதுக்கப்புறம் அவர் வந்து இவர்தான் சொன்னாருனு ஒருவேளை மாமாகிட்ட சொல்லிட்டாரு வச்சிக்கோ… அப்புறம் இந்த ஜென்மத்துல இல்ல எந்த ஜென்மத்துலயும் இந்த ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர முடியாதுடா….”
“இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க வெற்றி….”
“இரு…. இரு சொல்றேன்…” என்ற வெற்றிமாறன் தனது போனில் புதிய சிம் கார்டைப் போட்டான். பின் வினிதாவிற்கு பார்த்த மாப்பிள்ளை நம்பருக்கு அந்த புதிய சிம் கார்டில் இருந்து கால் பண்ணினான்.
“மச்சான் என்னடா பண்ணிட்டு இருக்க…”
“டேய் மாப்பிள்ளைக் கிட்ட பேசணும்னா நேர்ல பேச முடியாதுல்ல…. அதுதான் போன்ல பேசுறேன்… போன்லயும் நம்ம நம்பர் குடுத்தா மாட்டிக்குவோம்…. சோ புது நம்பர் வாங்கி அதுல பண்ணிட்டு இருக்கேன்….”
“வெற்றி நீ வேற லெவல்ல யோசிக்கிற டா….”
“ வேற வழி இல்லடா அந்த வாயாடி வேற இன்னைக்கு மாப்பிள்ளை பார்க்க வந்தால் அவ விஷம் குடிக்காம எனக்கு விஷம் வச்சிருவேன்னு சொல்றா…. என் உயிர் எனக்கு முக்கியம்ல்ல…”
“அதுவும் சரிதான் மச்சான்…. வினிதா புள்ள உனக்கு நல்ல ஆப்பா வச்சாப் பாரு…” என்று சிரித்தான்.
“டேய் நீ என்ன அவளுக்கு சப்போர்டா…?”
“ச்சே ச்சே நண்பனுக்கு தான் எப்போதும் சப்போர்ட்… நீ கால் பண்ணு மச்சான்….” என்றதும் வெற்றிமாறனும் மாப்பிள்ளைக்கு கால் பண்ணினான்.
மறுபக்கம் அழைப்பு எடுக்கப்பட்டது. “ஹலோ ரஞ்சித் பேசுறேன் யாரு…?”என்றான். உடனே வெற்றிமாறன் தனது குரலை மாற்றி பேச ஆரம்பித்தான். “தம்பி நான் திருவெற்றியூரில் இருந்து பேசுறேன்பா….”
“என்ன திருவொற்றியூரில் இருந்தா…?”
“சொல்லுங்க யார் பேசுறீங்க….?”
“நான் யார் என்றது முக்கியம் இல்லப்பா… நான் சொல்லப் போற விஷயம் தான் முக்கியம்….”
“என்ன விஷயமா போன் பண்ணி இருக்கீங்கனு சொல்லுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்றான் ரஞ்சித்.
“ஐயோ தம்பி அந்த பொண்ணு பார்க்க மட்டும் நீங்க வந்துட வேணாம்….”
“ஏன்…? எதுக்காக நீங்க இப்படி சொல்றீங்க….?”
“ஐயோ தம்பி அந்த பொண்ணு பயங்கர பஜாரி மாதிரி பிஹேவ் பண்ணுவா…. அவ அடிக்கிற அடிய யாராலயும் தாங்க முடியாது…. கோவம் வந்துச்சு பக்கத்துல உள்ளவங்கள கடிச்சு வச்சுடுவா…. அதுமட்டுமில்ல சரியான தீனிப் பண்டாரம்… இதெல்லாம் விடுங்க அவ கல்யாணமே வேணாம்னு இருக்கா… அதையும் மீறி யாராவது மாப்பிள்ளை பார்க்க வந்தால் கல்லாலே மண்டைய ஒடச்சிடுவேன்னு வேற ஊர்ல சொல்லிக்கிட்டு திரியுறா…. கொஞ்சம் பேரை இன்னைக்கு வர்ற உங்களை அடிக்கிறதுக்காக செட் பண்ணி வச்சிருக்கா…. மாப்பிள்ளை தம்பி ஏதோ உங்க மேல இருக்கிற நல்ல எண்ணத்துல தான் இப்ப தேடி கால் பண்ணினேன்…. அந்த பொண்ணு கூட வாழவே முடியாது…. எதுக்கும் யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க….” என்றான் வெற்றிமாறன்.
உடனே ரஞ்சித், “ஏங்க ஒரு பொண்ண பத்தி எப்படி நீங்க தப்பா பேசலாமாங்க…. அந்த பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகிறது…?” என்றான் ரஞ்சித். “எனக்குத் தெரியும் தம்பி அந்த பொண்ண பத்தி பேசுறது தப்புதான்… ஆனா உங்க வாழ்க்கையை காப்பாத்தணும்னு நல்ல எண்ணத்தில தான் நான் சொன்னேன்…. ஏன்னா நீங்க எங்க ஊருக்கு வரும்போது எங்க ஊர் எல்லையில வெச்சே உங்களை அடிக்க பிளான் பண்ணி இருக்கிறா… ஏதோ பாவம் பார்த்து உங்களுக்கு போன் பண்ணேன் பாருங்க என்ன சொல்லணும்…. இதுக்கு மேல உங்க இஷ்டம்…” என்ற வெற்றிமாறன் ஃபோனை வைத்து விட்டான்.
“டேய் வெற்றி என்னடா பண்ணி வச்சிருக்க… இது மட்டும் வினிதா பிள்ளைக்கு தெரிஞ்சது உன்னை உரிச்சு தொங்கவிட்டுருவா….”
“அட நீ வேறடா… பின்ன என்ன பண்ண சொல்ற என்னை…. அவ வேற விஷம் வச்சுருவேன் எனக்குனு
சொல்லிட்டு இருக்கிறா என் உயிர் எனக்கு முக்கியம் மச்சான்…. அதான் அவளை பத்தி கொஞ்சம் எடுத்து விட்டேன்…..”
“இவ்வளவு பேசின… ஒரு வேளை இந்த மாப்பிள்ளை நீ சொன்னதை கேட்கலனா…?”
“சரி சரி ஆனா உன் மாமா கிட்ட மாட்டாம இருந்தா சரி… இல்லைன்னு வையேன் நாளைக்கு பஞ்சாயத்துல நம்ம எல்லாரும் நிக்கணும்….”
“அதெல்லாம் பாத்துக்கலாம் வாடா…” என்ற வெற்றிமாறன் தனது நண்பனை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான்.
இங்கே போனை வைத்த ரஞ்சித்துக்கு ஒரே யோசனையாக இருந்தது. அவன் யோசனையாக இருப்பதை பார்த்த அவனின் நண்பன், “ரஞ்சித் என்ன ஆச்சு… காலையில் எல்லாம் முகம் நல்லா பிரெஷ்ஷா இருந்துச்சு இப்ப ஏதோ யோசனையாக இருக்கிற மாதிரி இருக்கு….” என்று கேட்டான்.
அதற்கு ரஞ்சித்தும், “ஆமாண்டா இன்னைக்கு பொண்ணு பார்க்க போகலாம்னு இருக்கோம்….”
“வாவ் சூப்பர் டா பொண்ணு எந்த ஊரு டவுன்லதானா….?” என்று கேட்டான். அதற்கு ரஞ்சித், “இல்லடா பொண்ணு வந்து திருவெற்றியூர் என்ற கிராமம்….”
“பின்ன என்ன சொல்லணும்… டேய் கிராமத்து பொண்ணுங்க பாவாடை தாவிணி கட்டிக்கிட்டு தலை நிறைய பூ வச்சுக்கிட்டே திரிவாளுங்க…. நம்ம ஆபீஸ்ல வீக் என்ட்ல எப்படி பார்ட்டிஸ் நடக்கும் என்று தெரியும் தானே…. அப்போ ஃபேமிலியா வரச்சொன்னா நீ என்ன பண்ணுவ… அந்த புடவை கட்டின பொண்ணையா கூட்டிட்டு வரப் போற… இங்க எல்லாரும் என்ஜாய் பண்ணிட்டு இருப்பாங்க… அந்த பொண்ணும் அப்படி இருக்குமா…? அப்புறம் எங்க எல்லாரும் உன்னைத் தான் கேலி பண்ணுவாங்க… ஏன் மச்சான் இதெல்லாம் யோசிக்கவே மாட்டியா….?” என்றான் ரஞ்சித்தின் நண்பன் விக்ரம்.
“அட ஆமா இல்ல நான் அதை யோசிக்கவே இல்ல மச்சான்… வீட்லதான் அவங்க வசதியானவங்க ஒரே பொண்ணு அப்படின்னு சொன்னாங்க… அதுதான் நானும் சம்மதிச்சேன்….”
“ரஞ்சித் உன்னோட அம்மா அப்பா ஊர்ல இருப்பாங்க சரியா… அந்த பொண்ண அவங்க கிராமத்து விசேஷங்களுக்கு கூட்டிட்டு போலாம்… ஆனா நீ சிட்டியில இருக்கும்போது அந்த பொண்ணை ஃபங்ஷனுக்கு எப்படி கூட்டிட்டு வருவ….? அந்த பொண்ணு காலேஜ் படிச்சிருக்கலாம்டா… ஆனா இங்க இருக்கவங்க மாதிரி ஸ்டைலா பேச முடியுமா….? ஸ்டைலா டிரஸ் பண்ண முடியுமா…? எதுவும் முடியாது… அப்புறம் உனக்கும் பிரச்சனை அந்த பொண்ணுக்கும் பிரச்சனை…. மச்சான் ஐடி கம்பெனில வேலை பாக்குற நமக்கு ஐடில வேலை பாக்குற பொண்ணுங்க தான் சரியா வருவாங்க…. நீ உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லிடு இந்த பொண்ணு வேணாம்னு….”
“டேய் அப்பா பத்தி தெரியும் இல்ல நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாங்க… இப்ப என்ன பண்றது விக்ரம்….?”
“ரஞ்சித் உன்னோட வாழ்க்கைக்காக நீ தான் பேசணும்… உங்க அப்பா கிட்ட எடுத்து சொல்லு அவரு புரிஞ்சு பாரு…. இல்லன்னா அந்த பொண்ணு வேணாம்னு எந்த காரணத்தையாவது சொல்லிடு…” “ஆமால சரி நான் வீட்டுக்கு போறேன் டா….” என்ற ரஞ்சித் விக்ரமிடம் சொல்லிவிட்டு அவனின் டீம் ஹெட்டிடம் தனக்கு லீவு வேண்டும் என்ற சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றான்.
வீட்டுக்கு வந்த ரஞ்சித் தனது அப்பா அம்மாவை அழைத்தான். “அப்பா இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்ல… அந்த பொண்ண பார்க்க போகவே வேணாம்…” என்றான். வந்ததும் வராதுமாக + ரஞ்சித் இப்படி சொன்னதைக் கேட்டதும் அவனின் அப்பாவிற்கு கோபம் வந்தது.
“என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ…? அந்த பொண்ண பார்க்க வரேன்னு சொல்லி எல்லாம் பேசியாச்சு… இப்ப என்ன கல்யாணம் வேணாம் அது இதுன்னு சொல்லிட்டு இருக்க…”
“அப்பா நான் சொல்றதை கேளுங்க… எனக்கு அந்த பொண்ணு புடிக்கல… எனக்கு கிராமத்து பொண்ணுங்க வேணாம்ப்பா…. என்னோட வேலை பாக்குற எல்லாருமே வந்து சிட்டியில் இருக்கிற பொண்ணுங்களைத் தான் கல்யாணம் பண்ணிக்கிறாங்க…. நான் மட்டும் அந்த கிராமத்து பொண்ண கட்டிக்கிட்டு என்னை காலம் பூராவும் அவஸ்தைப்பட சொல்றீங்களா….?”
“ரஞ்சித் என்ன பேச்சு பேசுற நீ…? கிராமத்து பொண்ணுன்னு தெரியாம தானா பொண்ணு பாக்க போறதுக்கு சம்மதம் சொன்னியா….?”
“அப்பா எனக்கு அப்போ புரியலப்பா… இப்ப எனக்கு புரியுது ப்ளீஸ் அப்பா… எனக்கு அந்த பொண்ணு வேணாம்பா….”
“இங்க பாரு நீ எதுவும் பேசாத சாயந்தரம் பொண்ணு பாக்க போறோம் அவ்ளோதான்…. அதுக்கப்புறம் என்ன வேணும்னாலும் நம்ம யோசிச்சு முடிவெடுத்துக் கொள்ளலாம் சரியா…. வரேன்னு சொல்லிட்டோம் அதுக்காக போய் தான் ஆகணும்…. பேசாம ரெடியாகுங்க…” என்று விட்டு தனது அறைக்கு சென்று விட்டார்.
ரஞ்சித் அவன் தாயிடம், “என்ன அம்மா, அப்பா இப்படி சொல்லிட்டு போறாங்க…..”
“விடு ரஞ்சித் மொதல்ல சம்பிரதாயத்துக்கு போய் பாத்துட்டு வந்துடலாம்…. அதுக்கப்புறம் உங்க அப்பா வந்து சமாளிச்சுக்கலாம்…. நீ கவலைப்படாமல் போய் ரெடியாகு சரியா…” என்று சொல்ல ரஞ்சித் தலையாட்டி விட்டு ரெடியாகச் சென்றான்.
இங்கே தயாளன் வீட்டிலிருந்த மற்றவர்களிடம் மாப்பிள்ளை பற்றி ஆகா ஓகோ என புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். தமிழ்ச்செல்வன், ‘ஐயோ இவர் வேற நேரங் காலம் தெரியாம இப்படி பேசிக்கிட்டு இருக்கிறாரே…. ஓரளவுக்குத்தான் வினிதாவை சமாதானப்படுத்த முடியும்…. இவரு பேசுறத பாத்தா கதவை ஒடச்சிகிட்டு வெளிய வந்து கழுத்தை பிடிச்சாலும் பிடிச்சிடுவா அப்படிப்பட்டவ இந்த வினி…’ என்று யோசித்து கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super and waiting for next epi divi