முரணாய்த் தாக்கும் அரண் அவன் -17

4.8
(15)

அரண் 17

அப்படி அதிர்ச்சி அடையும் வகையில் நடந்த சம்பவம் தான் என்ன..?

இன்னும் அழைப்பு வராதது எண்ணி உயர்ந்த பட்ச பயத்துடனும், பதட்டத்துடனும் மூவரும் இருக்க திடீரென கதவு பட பட எனத் தட்டும் சத்தம் கேட்டது.

அழைப்பு மணி இருந்தும் அதை ஒழிக்கச் செய்யாமல் யாரது பட பட எனக் கதவைத் தட்டுவது என்று புரியாமல் வைதேகி சிறு பயத்துடன் எழுந்து சென்றார்.

எழுந்து சென்றவரை இடைமறித்த துருவன்.

“நானே போய் யாருன்னு பார்க்கிறேன் அம்மா நீங்க கொஞ்சம் இருங்க..” என்று கூற,

வைதேகி அதே இடத்தில் நின்று கொண்டு நடப்பது என்னவென கண்காணித்துக் கொண்டிருந்தார்.

துருவன் கதவிற்கு அருகில் சென்று நிற்க கதவு தட்டும் சத்தம் நின்றது. சத்தம் நின்றதும் சில நிமிடங்கள் கதவை திறக்காமல் அதற்கு மிகவும் நெருக்கமாகக் காத்திருந்தான்.

ஒரு நிமிடம் கழித்து பின்பு மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க கதவை மெதுவாகத் திறந்தான்.

திறந்ததும் அவனது கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை. அப்படி என்னதான் நடந்தது என்று பார்த்தால் வாசலில் நமது நாயகி அற்புதவள்ளி தான் நின்றிருந்தாள்.

ரவுடி கும்பல் கடத்திச் சென்ற அற்புதவள்ளி எவ்வாறு, எப்படி இங்கு வந்தாள் என்று புரியாமல் அவன் அதே இடத்தில் ஆணி அடித்தார் போல் அப்படியே சிலையாக நிற்க,

வைதேகியும், தனபாலும் வாசலை பார்த்த வண்ணம் ஓட்டமும் நடையுமாக ஓடியே வந்தனர்.

வைதேகிக்கு வயிற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. உடனே பாய்ந்து அற்புத வள்ளியை அனைத்து நெற்றியில் முத்தம் பதித்தார்.

“என் ராசாத்தி எங்கம்மா போன கொஞ்ச நேரத்துல எங்களை எல்லாம் கலங்க வச்சுட்டியேம்மா..” என்று கண்களில் நீர் பெருகக் கூறினார்.

“அத்தை அதெல்லாம் ஆறுதலா சொல்றேன்.. வெளியே ஆட்டோக்கார அண்ணா நிக்கிறேர் அவருக்கு காசு கொடுக்கணும் முதல்ல காசு தாங்க அத்தை..” என்று கூற

துருவம் உடனே,

“நான் போய் செட்டில்மெண்ட் பண்ணி அனுப்புறேன் நீ முதல் உள்ள போ..” என்று கூறிவிட்டு துருவன் வெளியே சென்று ஆட்டோக்காரனுக்கு அவனுக்குரிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு வாசலில் யாராவது சந்தேகப்படும் அளவில் நிற்கின்றார்களா என்று நோட்டமிட்டான்.

அப்படியே வாசலில் நிற்கும் வாட்ச்மேனிடம்,

“சந்தேகப்படும்படி யாராவது தெரிந்தால் அல்லது தெரியாத நபர் உள்ளே வரக் கேட்டால் எனக்கு பர்சனலா கால் பண்ணி அனுமதி கேட்டுட்டு தான் நீ உள்ள விடணும் அதோட பீ கேர் ஃபுல் ஒரு பிரச்சனையும் என்னோட காதுக்கு வரக்கூடாது கொஞ்சம் கவனமாக வேலையைப் பார்..” என்று கூறிவிட்டு உள்ளே நுழைய அந்த நம்பரில் இருந்து மீண்டும் அழைப்பு வந்தது.

‘அற்புத வள்ளி வந்த பிறகும் இவன் ஏன் எனக்கு கால் பண்ணனும் இந்த ரவுடி அப்படி என்னதான் சொல்றான்னு கேட்டு பார்ப்போம் என்று நினைத்தபடி அழைப்பினை எடுத்தவன்,

“சொல்லுங்க மிஸ்டர் ரவுடி..’ என்று மிகவும் எகத்தாளமாகக் கேட்டான்.

துருவன் இவ்வாறு பேச அங்கிருக்கும் ஆட்கடத்தல்காரனுக்கு விளங்கி விட்டது. இவன் இவ்வளவு திமிராக பேசுகிறான் என்றால் வள்ளி அங்கு தான் இருக்க வேண்டும் என்று கணப்பொழுதில் ஊகித்தவன்,

“என்ன சார் உங்களோட வைப் வந்து..” என்று இழுத்தான்.

“என்ன புதுசா மரியாதை எல்லாம் முளைச்சிருக்கு நீங்க என்ன துருவன் என்று தானே கூப்பிட்டீங்க 50 கோடிய எங்கே கொண்டு வரட்டும்..?”

“சாரி சார் உங்களோட பேக்கிரவுண்ட் தெரியாம நான் மோதிட்டேன் என்ன மன்னிச்சுக்கோங்க சார் எனக்க பணம் ஒன்றும் வேண்டாம் உங்க மனைவியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..”

“என்ன ரவுடி சார் இப்படி பேசுறீங்க..?” என்று குழப்பத்தில் நடந்தது என்ன என்பதை அறியும் ஆர்வத்தில் கேட்டான்.

“ஐயோ..! அது பொண்ணா சார் வாயைத் திறந்தால் மூடுதில்ல வாயில துண்டு போட்டு கட்டி தான் வைத்தோம் அப்புறம் கட்ட அவிழ்த்து விட்டால் பேசுறா பேச்சு என்ன பேச்சு பேசுறா என்னால முடியல என்னோட தாத்தன் தொடக்கம் பேரப்பிள்ளைகள் வரை கரிச்சி கொட்டி சாபம் விடுறா

அவ பேசுற பேச்ச பார்த்தா எனக்கு என்னவோ அந்த சாபமெல்லாம் பளிச்சுரும் போல இருக்கு எல்லா சாமியையும் கூப்பிட்டு எனக்கு முட்டை மந்திரிச்சு வைக்க போறாளாம் சரியான சூனியக்காரியா இருக்காளே நீங்களும் கவனம் சார்

பசிக்குதுன்னு சொன்னா சரி சரி பசிக்குது தானே என்று பக்கத்துல ஒரு கடையில் பிரியாணி வாங்கி கொடுத்தேன் சாப்பிட்டால் அப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு திரும்பியும் பசிக்குதாம்மா என்று தெரியாம கேட்டுட்டேன்.

சொன்னா பாருங்கள் சாப்பாடு லிஸ்ட் ஹோட்டல்ல வேலை செய்ற சர்வர் கூட இவ்வளவு பாஸ்டா இவ்வளவு ரெசிபி சொல்ல மாட்டாங்க

இந்தப் பொண்ணு சாப்பிடறது எல்லாம் எங்க தான் போய் சேருதோ தெரியல பசிக்குது பசிக்குதுன்னு சாப்பிட்டு முடியலை என்னாலயே வேண்டி கொடுத்து முடியல

வாழ்க்கையில இப்படி ஒரு கிட்நாப்பிங்க நான் செய்ததே இல்லை வரலாற்றிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்து நான் பார்த்ததே இல்லை இன்னையோட இந்த ஹிட்நாப் பண்றத விட்டிரலாம் என்று முடிவு பண்ணி இருக்கேன் என்னால முடியல

உங்க மனைவிக்கு வாங்கி கொடுத்து என் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரமும் பறந்து போச்சு நீங்க எப்படித்தான் வச்சு சோறு போடுறீங்களோ தெரியல

இதுல சாப்பிட்டு முடிஞ்சதும் அந்த சாப்பாட பத்தி சொல்லுவாங்க பாருங்க கமெண்ட்ஸ் என் காதே வெடிச்சுடும் போல இருக்கும் அது சரியில்லை இது சரியில்லை உப்பில்ல, காரமில்ல, டேஸ்ட் இல்லன்னு சாப்பிடாம விட்டாலும் பரவாயில்லை நல்லா வயிறு முட்ட சாப்பிட்டு அதுக்கு அப்புறம் தான் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்றாங்க இது உங்களுக்கு நியாயமா படுதா…?

உங்களோட போட்டோ மட்டும் அனுப்பி விடுங்க உங்க போட்டோவ நான் சாமியா வச்சு கும்பிடுறேன் இப்படி ஒரு மனைவியோடு நீங்கள் குடும்பம் நடத்துறீங்கல்ல நீங்க உண்மையிலேயே தெய்வம் சார்.. பெரிய தியாகி சார்..” என்று கூற

துருவனுக்கு கட்டுக்கடங்காத சிரிப்பு பொங்கி வழிந்தது. அலைபேசியை ஒரு கையால் மூடிக்கொண்டு அவன் சிரித்து சிரித்து முடியாமல் அப்படியே நடந்து வந்து ஹாலில் சோபாவில் இருந்து வயிற்றை பிடித்துக் கொண்டு மீண்டும் சிரிக்க தொடங்கினான்.

தனபாலும் வைதேகியின் என்ன நடந்தது என்று வள்ளியிடம் விசாரித்துக் கொண்டிருக்க துருவன் தொலைபேசியில் எதனையோ பேசிவிட்டு இவ்வாறு சிரிக்க அவர்கள் இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு துருவனையே இமைக்காமல் மூவரும் விசித்திரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

துருவம் சிரித்து முடிந்ததும்,

“அப்போ எப்படி என்னோட மனைவி தப்பிச்சாங்க..?” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் துருவன்.

“ஐயோ அந்தக் கதையை ஏன் கேக்குறீங்க என்னால முடியல பாஸ் இதுக்கு மேலயும் நான் என்னோட வாழ்க்கையில மறக்கணும்னு நினைக்கிற அந்த சம்பவத்தை சொல்ல விரும்பல அதை மறக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நான் வைக்கிறேன்..” என்று கூறிவிட்டு அவன் அழைப்பை துண்டித்தான்

அலைபேசியை துண்டித்து விட்டு திரும்பி பார்த்தால் டைனிங் டேபிளில் இருந்து வைதேகி வள்ளிக்கு உணவு பரிமாற வள்ளியோ,

“வேண்டாம் அத்தை எனக்கு பசி இல்லை..”

“அப்படி சொல்லாதம்மா சாப்பிடு மதியம் சாப்பிட்டவ இப்ப 11 மணி ஆகுது இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகிறது தயவுசெஞ்சு ஒரு ரெண்டு தோசையாவது எடுத்து வாயில போட்டுக்கோ ..” என்று வைதேகி குறைபட,

“இல்ல அத்தை வேணாம்..”

“என்னம்மா அதெல்லாம் முடிஞ்சு போச்சு அதை நினைச்சு கவலைப்படாத கவலைப்பட்டு உடம்பை கெடுத்துக்காத சாப்பிட்டு போய் நல்லா தூங்கு..” என்று கூற,

“சரிங்க அத்தை..” என்று சந்தோஷத்துடன் தோசை எடுத்து வாயில் வைத்து ரசித்து ருசித்து உண்டாள்.

அவள் சாப்பிடுவதை பார்த்து துருவன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ‘இந்த சாப்பாடால ஒரு கெட்டவன் நல்லவனா மாறி இருக்கானே பரவாயில்லை..” என்று தனது மனைவியை நினைத்து மெச்சிக் கொண்டான்.

அருகில் போய் இருந்த துருவன் வள்ளியைப் பார்த்து,

“ஆர் யூ ஆல்ரைட் அற்புதம்..?” என்று அன்பாகக் கேட்க,

“எனக்கு ஒன்னும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன்..” என்று கூறிவிட்டு உணவை உண்பதில் ஆர்வம் காட்டினாள்.

அவள் உணவை உண்டு முடிக்கு மட்டும் அருகில் அமைதியாக இருந்தவன் உண்டு முடித்து கை கழுவியப்பின்,

“அப்புறம் எப்படி அந்த ராஸ்கல் கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்த..?”

“அதுவாங்க அது வந்து அவங்க எல்லாரும் சேர்ந்து தண்ணி அடிச்சு கொண்டு இருந்தாங்க நான் பாத்ரூம் போகணும்னு சொன்னேன்.

அந்த பாழடைந்த பங்களாவில் என்ன ஒரு பாத்ரூமுக்குள்ள கொண்டு போய் விட்டாங்க அந்த அறையின் ஓரத்தில் ஒரு சின்ன இடைவெளி தெரிந்தது.

தண்ணிய வேகமா திறந்து விட்டுட்டு பக்கத்தில் இருக்கிற வாலியால அதை இடித்து உடைக்க முயற்சி செய்தேன்.

அந்த சின்ன இடைவெளி பெரிதாக மாறியது. அந்த ஓரத்தால புகுந்து வெளியே ஓடி வந்துட்டேன் வந்து பார்த்தேன்.

என்ன இடம் என்று எனக்கு ஒண்ணுமே தெரியல எல்லாமே இருட்டாவே இருந்துச்சு. சரியான பற்றைக்காடு மனிதர்கள் நடமாட்டமே அந்த இடத்தில் இல்லை. கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. மனதில் மாரியம்மன் நினைத்துக் கொண்டு, ரொம்ப தூரம் சத்தம் போடாமல் வேகமாக ஓடி வந்து பார்க்க ஒரு வையின் ஷாப் இருந்துச்சு

அதுக்கு அப்புறம் தான் போன உயிரே எனக்கு திரும்பி வந்துச்சு அந்த வையின் ஷாப்புக்கு பக்கத்துல ஒரு ஆட்டோக்கார அண்ணா ஆட்டோவில் தூங்கிட்டு இருந்தாரு அவர எழுப்பி கூட்டிகிட்டு வந்துட்டேன்.

எல்லாரும் சரியான போதையில் இருந்ததால என்ன கண்டுபிடிக்க முடியல அங்க இருக்கிற அந்த கூட்டத்தின் தலைவன் மட்டும் வேறு வெளியே எங்கேயோ போய்விட்டான்

அவன் இருந்திருந்தா என்னால தப்பிச்சி இருக்க முடியாது நல்ல காலம் நான் ஓடி வந்துட்டேன்..” என்று மூச்சு விடாமல் நடந்த அத்தனை விடயங்களையும் கூறி முடித்தாள் வள்ளி.

‘நீ சொல்ற கதைய பார்த்தா உனக்கு நல்ல காலம் இல்லை அவனுக்கு நல்ல காலம்ன்னு தான் நினைக்கிறேன்..’ என்று மனதிற்குள் சிந்தித்தவன் கிண்டலாகச் சிரித்து விட்டு,

“சரி சாப்பிட்டல்ல வா ரூமுக்கு போவோம்..” என்று அவளை மேலே அழைத்து சென்றான் துருவன்.

இருவரும் மாடிப்படிகளில் ஏறியபடி தங்களுக்குள் பேசிக்கொண்டு செல்ல, அதனைப் பார்த்த வைதேகியின் கண்கள் நீரினால் பூத்தது.

வள்ளியை காணவில்லை என்றதும் துடி துடித்துப் போனவர். துருவன் வள்ளியின் மீது சில நாட்களிலேயே அக்கறையையும் அன்பையும் மறைமுகமாக காட்ட அது வைதேகிக்கு மனதில் சந்தோஷத்தை விதைத்தது.

பார்ப்போம் இருவருக்கும் இடையில் காதல் எப்போது மலரும் என்று…..

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!