டைரக்டர் சக்கரவர்த்தியின் முகத்தில் சொன்ன நேரத்திற்கு சேகர் அந்தப் பெண்ணை அழைத்து வராததில் சற்றே சினம் எழத் தொடங்கியிருந்தது.
அவர் வருவதற்கு முன்பே வந்து காத்திருக்கச் சொல்லியும் கூட இப்போது வரை அவன் அந்தப் பெண்ணை அழைத்து வராததில் சினம் கொண்டவர் தன்னுடைய அலைபேசியில் இருந்த செந்தூரியின் புகைப்படத்தை அழுத்தமாகப் பார்த்தார்.
‘ரொம்ப அழகான பொண்ணுதான்.. இவள வச்சு படம் எடுத்தா கண்டிப்பா பசங்க எல்லாரும் ஜொள்ளு விட்டுப் படத்தப் பாப்பாங்க..’ என எண்ணியவர் சற்றே தொலைவில் வேகமாக சேகர் அந்தப் பெண்ணுடன் நடந்து வருவதைக் கண்டு அலைபேசியை அணைத்து வைத்தார்.
“குட் மார்னிங் சார்.. டிராபிக் கொஞ்சம் ஜாஸ்தியா இருந்ததால லேட் ஆயிருச்சு.. சாரி சார்..” என சேகர் கூற செந்தூரியின் அன்னையோ நாளை ஆரம்பிக்கவிருக்கும் படப்பிடிப்புக்காக அந்த இடத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த செட்டை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
செந்தூரிக்கோ உள்ளம் படபடத்துக் கொண்டிருந்தது.
புகைப்படத்தை விட நேரில் கொள்ளை அழகாக இருந்த செந்தூரியை சக்கரவர்த்திக்கோ மிகவும் பிடித்துப் போனது.
“இதோ பாருமா.. நீ ரொம்ப அழகா இருக்க.. ஆனா அழகு மட்டும் இதுக்கு போதாது.. திறமையும் வேணும்… நீ மட்டும் நான் சொல்ற மாதிரி நடிச்சுக் கொடுத்தீன்னா உன்னோட ரேஞ்சே மாறிடும்.. உன் பெயர் என்ன..?” என அவர் நேரடியாக செந்தூரியிடம் பேசத் தொடங்கி விட,
சில நொடி திணறியவள்,
“செந்தூரி சார்…” என்றாள்.
அவளுடைய குரலில் அசந்துதான் போனார் சக்கரவர்த்தி.
இவளுடைய காட்சிகளுக்கு டப்பிங் கூட தேவையில்லை இவளையே பேச வைக்கலாம் என கணக்கிட்டது அவருடைய பிஸ்னஸ் மூளை.
“உன்ன மாதிரியே உன்னோட பேரும் ரொம்ப அழகா இருக்குமா.. ஓகே.. இன்னைக்கு இந்த செட்ல வெச்சு நான் சொல்ற சீன நீ நடிச்சுக் காட்டணும்.. நான் சொல்றத அப்படியே நடிச்சீன்னா கண்டிப்பா உனக்கு படத்துல நடிக்க வாய்ப்புக் கொடுக்கிறேன்..” என்றதும் பதறிவிட்டார் மேகலா.
சட்டென சேகரின் அருகே சென்றவர்,
“என்ன தம்பி சார் இப்படி சொல்றாரு… பணத்தைக் கொடுத்தா படத்துல நடிக்க வைப்பேன்னு சொல்லிட்டு இப்போ நடிச்சு காட்டினாதான் வாய்ப்பு கொடுப்பேன்னு சொல்றாரே.. ஒருவேளை செந்தூரி ஒழுங்கா நடிக்கலைன்னா வாய்ப்பு கொடுக்க மாட்டாரா.” எனப் பதறியவாறு மேகலா கேட்க,
அவர் கேட்டது சக்கரவர்த்தியின் காதுகளிலும் விழுந்துவிட்டது.
“ஹா..ஹா.. நடிக்க வைக்கிறதுக்காக எல்லாம் இந்த பணத்தை நான் வாங்கல.. எத்தனையோ பேர் என்கிட்ட நடிக்க வாய்ப்பு கேட்டு லைன் கட்டி நிக்கிறாங்க.. அவங்களையே இன்னும் நான் மீட் பண்ணல..
பட் நீங்க கேட்ட அடுத்த நாளே உங்களை என்னோட செட்டுக்கு வர வச்சு மீட் பண்றேன்ல அதுக்குத்தான் இந்த 10 லட்சம். அவ்ளோ சீக்கிரமா என்ன மாதிரி ஒரு ஃபேமஸ் டைரக்டரை உங்கள மாதிரி ஆளுங்களால மீட் பண்ண முடியுமா..? இல்ல வாய்ப்பு தான் இவ்வளவு சீக்கிரம் உங்க காலடி வந்து கிடைக்குமா..? உங்கள நேரில் பார்த்து உங்களை நடிக்க வைக்கலாமா இல்லையான்னு டிசைட் பண்றதுக்குத்தான் இந்த 10 லட்சம்.. புரிஞ்சுதா..?” என அவர் காட்டமாகப் பேசிவிட்டு எழுந்து சென்றுவிட செந்தூரி கூட பதறித்தான் விட்டாள்.
அந்தப் பணத்தை இனித் திரும்ப வாங்கவே முடியாது அவரை சந்திப்பதற்காக பத்து லட்சத்தை இந்த அம்மா கொட்டிக் கொடுத்திருக்கிறாரே என்ற ஆதங்கத்தில் விழிகள் கலங்க மேகலாவை வெறித்துப் பார்த்தாள் அவள்.
“ஐயோ என்ன தம்பி இந்த ஆளு இப்படி சொல்லிட்டுப் போறாரு.. இப்போ என்ன பண்றது..? எனக்கு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு..” என மேகலா பதறியவாறு கூற,
“ஆன்ட்டி நீங்க பயப்படாதீங்க.. நம்ம செந்தூரி ரொம்ப அழகா நடிச்சுக் காட்டி இந்த வாய்ப்ப இறுக்கமா பிடிச்சுக்குவா.. அவளுக்கும் பணத்தோட அருமை தெரியும் தானே.. 10 லட்சம் பணத்தை வீணடிக்கறதுக்கு அவ நிச்சயம் விரும்பவே மாட்டா.. நீங்க கவலைப்படாதீங்க..” எனக் கூறியவாறே கடைக்கண்ணால் செந்தூரியைப் பார்க்க அவளுக்கோ முகம் மிரண்டு போயிருந்தது.
ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது என இதற்குத்தான் சொல்வார்கள் போலும் என தன்னுடைய அன்னையை எண்ணி மனதில் நொந்து கொண்டவள் தன்னைத் திடப்படுத்திக் கொண்டாள்.
கடன் வாங்கிய 10 லட்சத்தை ஏதாவது ஒரு படத்தை கண்ணியமாக நடித்துவிட்டாவது கொடுத்து விட வேண்டும் என்ற முடிவோடு சேகரைப் பார்த்தவள் “நான் நல்லா நடிக்க முயற்சி பண்றேன்.. அவர்கிட்ட சொல்லுங்க..” என்றாள்.
இனி வேறு வழியேதும் இல்லை என்பதை புரிந்து கொண்டவள் தன் மீது திணிக்கப்பட்ட முடிவுக்கு இணங்கி விட்டாள்.
“சூப்பர்டி என் ஜிலேபி..” என மகிழ்ச்சியோடு கூறியவன் சற்றே தள்ளி நின்று அசிஸ்டன்ட் டைரக்டருடன் பேசிக் கொண்டிருந்த சக்கரவர்த்தியை நெருங்கிச் சென்றவன் என்ன கூறினானோ சக்கரவர்த்தியின் முகத்தில் பிரகாசமான சிரிப்பு மலர்ந்தது.
மீண்டும் செந்தூரியன் அருகே வந்தவன்,
“அந்த கேரவனுக்கு வா.. உன்னை மேக்கப் போட்டுட்டு கூட்டிட்டு வர சொன்னாங்க..” என அழைக்க மீண்டும் மிரண்ட பார்வை பார்த்தாள் அவள்.
“ப்ச்.. எதுக்குடி பயப்படுற..? உன்ன கட்டிக்க போறவன் கூடதானே போற.. போ.. நான் இங்கேயே காத்துகிட்டு இருக்கேன்..” என சேகரோடு செந்தூரியை மேகலா அனுப்பி வைக்க பெருமூச்சோடு அந்த கேரவனுக்குள் சேகருடன் நுழைந்து கொண்டாள் செந்தூரி.
அவளை உள்ள இருந்த இருக்கையில் அமர வைத்தவன் அவளுடைய பின்னலை தன்னுடைய கரங்களில் ஏந்தி எடுக்க பதறிப் போய் அவனைப் பார்த்தாள் அவள்.
“எதுக்குடி பயம்..? நான்தான் உன் கூடவே இருக்கேன்ல..? அப்புறம் உனக்கு என்ன பயம்..?” என அன்பாகக் கேட்டான் சேகர்.
அவனுடைய அன்பு ததும்பிய வார்த்தைகளில் சற்றே அமைதி அடைந்தது அவளுடைய மனம்.
அவளுக்கோ சிந்தனைகள் எங்கெங்கோ பயணிக்க தொடங்கின.
அவனும் அவளுடைய நிறத்திற்கு பொருந்தும் வண்ணம் உதட்டுச் சாயத்தை எடுத்தவன் அவளுடைய இதழ்களில் அதை மென்மையாக பூசத் தொடங்க தடுமாறி விலக முயன்றாள் அவள்.
அவளுடைய கன்னத்தைப் பிடித்து அசையாமல் இருக்கச் செய்தவன் உதட்டுச் சாயத்தைப் பூசி முடித்துவிட்டு கண்களுக்கு காஜல் இட இவளுக்கோ வெறுப்பாக இருந்தது.
அடுத்த பத்து நிமிடங்களுக்கு எதுவும் செய்ய முடியாமல் அப்படியே அவள் அமர்ந்திருக்க ஒப்பனையை முடித்துவிட்டு அவளைப் பார்த்தவனுக்கு அவளை அள்ளி அணைக்க வேண்டும் போல கைகள் பரபரத்தன.
“வாவ் இவ்ளோ அழக இவ்ளோ நாளா நீ எங்கதான் மறைச்சு வெச்சிருந்தியோ…” என்றவன் ஆனந்தக் களிப்பில் அவளை அணைத்து விடுவிக்க கொஞ்சமே கொஞ்சம் அவளுக்கு கன்னங்கள் சிவந்துதான் போயின.
அவள் மார்பை மறைத்து ஏனோ தானோ எனப் போட்டிருந்த துப்பட்டாவை அவன் உறுவி எடுக்க பதறிப்போய் அவனைப் பார்த்தாள் செந்தூரி.
அதை எடுத்தவன் அவளுடைய தோள் பக்கத்தில் ஒற்றையாக மடித்து போட்டு விட்டான்.
“குட்.. இப்போ வா… டைரக்டர் சார் என்ன சொல்றாரோ அப்படியே நடிச்சுக் காட்டு.. உன்னால முடியும்..” என்றவன் அவளை வெளியே அழைத்துச் செல்ல கேரவனுக்குள் இருந்து வெளியே வந்த செந்தூரியைக் கண்டதும் மேகலாவுக்கோ முகம் சட்டென மலர்ந்தது.
சக்கரவர்த்தி கூட திருப்தியாக புன்னகைத்துக் கொண்டார்.
“வாம்மா.. இப்போ நீ நடிக்கிற சீன் என்னன்னு சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. இந்த சீன் ரொம்ப சோகமான சீன்தான்.. இத நடிக்கும் போது உன்னோட கண்ணுல கண்டிப்பா உயிர்ப்பு இருக்கணும்.. நடிக்கிறது சின்ன விஷயம் கிடையாது.. அந்த கதாபாத்திரமாவே நம்மள நாம உருவகப்படுத்திக்கணும்.. நீ அதுவாவே மாறிடணும்..” என சக்கரவர்த்தி கூற சரி என்றாள் அவள்.
“கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்த பொண்ணு அவளோட பேரன்ஸுக்கு உடம்பு முடியாம போனதால அவ தான் குடும்பத்தை தாங்கிக்கிறா.. கடன்காரன் வந்து அவகிட்ட தப்பு தப்பா பேச மனசு உடைஞ்சு போனவளோட ரியாக்சன் எப்படி இருக்கும்னு நீ நடிச்சுக் காட்டணும்..” என அவர் சிந்தித்து வைத்திருந்த திரைப்படத்தில் ஒரு பகுதியைக் கூறி அவளை நடத்திக்காட்டும்படி கூற அவளுக்கோ சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
தன்னுடைய தற்போதைய நிலையும் இதுதானே என எண்ணியவளுக்கு தன்னை எண்ணியே கழிவிரக்கம் பொங்கியது.
நிஜமாகவே தன் குடும்பத்திற்காக அவள் ஓடாக அல்லவா தேய்கிறாள்.
தன்னுடைய வறுமையை சிறிது கூட புரிந்து கொள்ளாத அன்னையோ கடன்களை வாங்கி குவிக்க எத்தனையோ பேர் கதவைத் தட்டுவதும் அவளை அசிங்கமாக திட்டுவதுமாகத்தானே அவர்களுடைய வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.
நடந்தவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்க அவளை அறியாமலேயே விழிகளில் இருந்து வழியத் தொடங்கியது கண்ணீர்.
தான் அனுபவித்த சொந்த வலியை விழிகளில் தேக்கி தயாரிப்பாளரை பார்த்தவள் வழமையாக கடன் கேட்டு வருபவரிடம் பயந்து பயந்து கூறுவதை அப்படியே சக்கரவர்த்தியிடம் கூறி காண்பிக்க அங்கு அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் அசந்துதான் போயினர்.
மிக அழகாக தத்ரூபமாக நடித்து விட்டாளே என சக்கரவர்த்தியோ மகிழ,
அவளுக்குத்தான் அது நடிப்பில்லை நிஜம் என்ற எண்ணம் உள்ளே எழுந்தது.
“வாவ் என்னம்மா நீ கிளிசரின் போடாமலேயே அழுகுற.. இப்படி ஒரு நடிப்பை நான் உன்கிட்ட எதிர்பார்க்கவே இல்லை.. இங்கே நிறைய பேர் வருவாங்க பட் அழகா இருந்தாலும் அவங்களுக்கு நடிக்கத் தெரியாது.. நல்லா நடிப்பாங்க பட் அழகா இருக்க மாட்டாங்க.. உன்கிட்ட ரெண்டுமே இருக்கு.. நீ ரொம்ப கொடுத்து வச்சவ.. என்னோட புது படத்துல நீ தான் செகன்ட் ஹீரோயின் நாளைக்கு செட்டுக்கு வந்துரு.. அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்..” என்றவர் சேகரிடம் பேசத் தொடங்கி விட விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே நடக்கத் தொடங்கி விட்டாள் செந்தூரி.
மேகலாவுக்கோ மகிழ்ச்சி உச்சியைத் தொட்டிருந்தது.
வாயெல்லாம் பல்லாக சிரித்தவாறு அட்வான்ஸ் எவ்வளவு கொடுப்பார்கள் என சேகரை கேட்கச் சொன்னவர் பணத்தைப் பற்றி விசாரித்துவிட்டு சேகருடன் வெளியே வரத் தொடங்கினார்.
அக்கணம் தன்னுடைய காரில் சாய்ந்திருந்து நடந்து செல்லும் செந்தூரியையே பார்த்தவாறு இருந்த ப்ரொடியூசர் காந்தனின் முகத்திலோ ரசனைப் பார்வை குடியேறி இருந்தது.
தன்னுடைய அசிஸ்டன்ட்டை பார்வையால் அழைத்த காந்தனோ “யார் இவ..? புது ஹீரோயினா..? சக்கரவர்த்தி என்கிட்ட இதைப் பத்தி எதுவும் சொல்லவே இல்லையே..” எனக் கேட்க,
Ayyayyo