சொர்க்கம் – 06
இரண்டு நாட்களுக்குப் பிறகு..!
படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் இருந்த அனைவரின் முகமும் சிறு பதற்றத்தையும் எரிச்சலையும் ஒருங்கே தத்தெடுத்திருந்தது.
அந்தப் படத்தின் டைரக்டர் சக்கரவர்த்தியோ நான்காவது முறையாக தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்த்து சலிப்படைந்து போனார்.
“சார் இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள இந்த ஷூட்ட எடுத்தாகணும்… இல்லைனா மழை வந்து எல்லாத்தையும் சொதப்பிடும்..” என சற்றே அவசரமாகக் கூறினான் கேமரா மேன்.
“அப்போ நீயே போய் விநாயக் சாரை அழைச்சிட்டு வந்துடுறியா..?” என எரிச்சலோடு டைரக்டர் கேட்க கப்பென வாயை மூடிக்கொண்டான் அவன்.
பின்னே விநாயக்கிடம் சென்று அவ்வளவு இலகுவாக பேசிவிட முடியுமா என்ன..?
அவன் என்ன செய்ய வேண்டும் என நினைக்கின்றானோ அதைத்தான் செய்வான். யாரேனும் எதையேனும் சொல்லி வைத்தால் திமிராகப் பேசும் அவனுடைய வார்த்தைகளை அவர்களால் எதிர்கொள்ளவே முடியாது போய்விடும்.
திட்டினால் கூட பரவாயில்லை சில வேளை எதுவும் கூறாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிடும் ரகம் அவன்.
திமிர் என்றால் அவனுக்கு எக்கச்சக்கமாக உள்ளங்கால் முதல் உச்சிவரை பரவி இருக்கிறதே.
அவனை சென்று அழைப்பதற்கு தைரியம் இல்லாமல் அனைவரும் கைக்கடிகாரத்தை பார்ப்பதும் அவன் உள்ளே நுழைந்த கேரவனை பார்ப்பதுமாக இருந்தனர்.
அனைவரையும் காத்திருக்கச் செய்த நம் நாயகன் விநாயக்கோ கேரவனின் உள்ளே ஒரு அழகிய இளம் பெண்ணைக் கட்டித் தழுவி அவள் இதழ்களுடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தான்.
*****
அதேநேரம் அதே இடத்தில் தன்னுடைய திறமையைக் காட்டுவதற்காக பலர் நின்ற வரிசையில் பத்தாவதாக நின்றிருந்தான் கௌதமன்.
சக்கரவர்த்திதான் துணை நடிகருக்கு புதுமுகம் தேவைப்பட்டதால் திறமையான ஒருவனை தேர்ந்தெடுப்பதற்காக பலரை வர வைத்திருந்தார்.
இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்த பலரும் அந்தப் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு காலையிலேயே வந்து இரண்டு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிமுக நடிகர்களின் வரிசையில்தான் அடித்துப் பிடித்து பத்தாவதாக வியர்த்து வழிய நின்றிருந்தான் கௌதமன்.
நம் கதையின் மற்றுமொரு நாயகன்.
இதுவரை பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்காததால் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சில குறும் படங்களில் நடித்திருந்தான் அவன்.
அப்படி அவன் நடித்ததில் ‘ப்ரூம் ஸ்டிக்..’ என்ற குறும் திரைப்படம் வைரலாகி அவனுடைய நடிப்புத் திறமையை பலருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி இருந்தது.
திறமை இருந்தும் பணபலம் இல்லாததால் அவனுடைய திறமையோ குடத்துள் விளக்குப் போலவே இதுநாள் வரை இலை மறை காயாக இருந்து வருகின்றது.
படிக்கட்டு தேகம் எல்லாம் இல்லை. தொப்பையும் இல்லை. அளவான உடற்கட்டு.
மாநிற தேகம் அவனுக்கு கம்பீரத்தையே கொடுக்க ஆணழகனாக இருந்தான் கௌதமன்.
தான் மாநிறம் என்பதில் அவனுக்கோ அத்தனை கவலை.
வரிசையில் நின்றவர்களில் பாதிப்பேர் வெள்ளை வெளீரென ஷாருக்கான், கிருத்திக் ரோஷன் போல இருப்பதைக் கண்டு அவன் இதயமோ பதைபதைத்துத் துடித்தது.
‘இவனுங்க என்ன ஆப்பிள் மாதிரி இவ்வளவு அழகா வெள்ளையா இருக்கானுங்க… ஏதாவது நைட் கிரீம் வாங்கி நாமளும் போட்டு பத்தே நாள்ல வெள்ளையாகிடணும்.. அப்போதான் இன்னும் அழகா இருப்போம்..” என தன் முகத்தை வெள்ளை வெளீரென மாற்றுவதற்கான திட்டத்தை மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தவன் ஒரு பெண் வரிசையில் நில்லாமல் வேகமாக தங்களைத் தாண்டிச் செல்வதைக் கண்டு கொதித்துப் போனவனாக,
“ஹேய்… ஏய்… பர்பிள் சுடி.. உன்னத்தான்… இங்க இத்தனை பேரு லைன்ல இருக்கோமே நீ பாட்டுக்கு லைன்ல நிக்காம முன்னாடி போய்கிட்டே இருக்க..? வாட் இஸ் திஸ் யா..? போம்மா போய் லைன்ல நில்லு..” என இவன் கூற வேகமாக நடந்து சென்ற செந்தூரியின் நடையோ நின்று போனது.
கௌதமனைத் திரும்பிப் பார்த்தவள்,
“என்ன ஆல்ரெடி செலக்ட் பண்ணிட்டாங்க அண்ணா..” என உணர்வுகளைக் காட்டாத குரலில் கூற, அவள் திரும்பியதுமே அவளுடைய அபார அழகில் ஒரு சில நொடிகள் மலைத்துப் போய் நின்று விட்டான் அவன்.
அடுத்த நொடியே சுயமடைந்தவனுக்கோ நெஞ்சு வலிப்பது போல இருந்தது.
பின்னே இவ்வளவு அழகான பெண் பார்த்த உடனேயே அண்ணா என்றால் அப்படித்தானே இருக்கும்.
கதறித் துடித்த இதயத்தை ஒற்றைக் கையால் வருடிவிட்டவன் ‘டோன்ட் வொரிடா செல்லக்குட்டி.. நான் அவளை தங்கச்சியா ஏத்துக்கல.. நீ கவலைப்படாதே..’ என இதயத்தை தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தி விட்டு தன்னைப் பார்த்தவாறு நின்ற செந்தூரியை மீண்டும் பார்வையால் அளவிட்டவன்,
“இவ்வளவு அழகான பொண்ண அவங்க செலக்ட் பண்ணலைன்னாதான் தப்பு. இப்படி செக்கச் செவன்னு தக்காளிப் பழம் மாதிரி இருந்தா செலக்ட் பண்ணதான் செய்வாங்க..” என்ற கௌதமனைப் பார்த்து முறைத்தவள் தன் முகத்தை திருப்பிக் கொண்டு முன்னே சென்றுவிட,
“அம்மாடியோவ் பார்த்தும்மா கழுத்து சுளுக்கிக்கப் போகுது..” என்றான் சிரித்தபடியே.
அசைந்தாடிய அவளுடைய நீண்ட கூந்தலைப் பார்த்தவனுக்கு விழிகளில் இரசனை கூடியது.
‘சீக்கிரமா நானும் ஆடிஷன்ல செலக்ட் ஆகி இந்த அழகான பொண்ணு கூட நடிக்கணும் கடவுளே…’ என தன்னுடைய குலதெய்வத்திடம் அவசர வேண்டுதலை வைத்தான் அவன்.
“நீ எதுக்கு யாரோ ஒருத்தன்கிட்ட எல்லாம் பேசுற..?” என செந்தூரியிடம் சிடுசிடுத்தான் சேகர்.
“நான் எங்க பேசினேன்..? அவர் தானே என்னைக் கூப்பிட்டு பேசினார்..” என சேகருக்கு விளக்கம் கொடுத்தாள் அவள்.
“பொறுக்கிப் பசங்க அப்படித்தான் வழிய கூப்பிட்டுப் பேசுவாங்க பதிலுக்கு நீயும் நின்னு பேசுவியா..?”
“சரி சரி இனி பேசலை..” என்றவளின் உதடுகளில் அவனேடைய பொறாமையை உணர்ந்து சிறு புன்னகை மலர்ந்தது.
சக்கரவர்த்தி கோபமாக கேமரா மேனுடன் கத்திக் கொண்டிருப்பதைக் கண்ட செந்தூரியோ அவரை நெருங்காமல் சேகருடன் சற்றே தள்ளி நிற்க, அவளைப் பார்த்ததும் விழிகளால் தன்னருகே அவர்களை அழைத்தார் சக்கரவர்த்தி.
“இங்க வந்ததும் என்ன வந்து பார்க்கணும்னு தெரியாதா..? நானா கூப்பிடும் வரைக்கும் அப்படியே அசையாம நிப்பீங்களா..? நடிக்க வந்தீங்களா இல்ல வேடிக்கை பார்க்க வந்தீங்களா..?” என அவர் விநாயக்கின் மீது இருந்த கோபத்தை செந்தூரியின் மீது காட்ட பதறிப் போனாள் அவள்.
வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் அவரை நெருங்கிச் சென்று தொந்தரவு செய்யக் கூடாது என்றல்லவா அவன் விலகி நின்றாள்.
இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் வைத்து திட்டும் போது அவளுக்கோ அவமானமாக இருந்தது.
அத்தனை பேரின் முன்பும் அவர் திட்டியதில் சற்றே சினம் துளிர்க்க சேகரை கலக்கத்தோடு பார்த்தாள் அவள்.
“சாரி சார் ஷூட்டிங் எல்லாரும் ரெடியா இருந்த மாதிரி இருந்துச்சு.. அதனாலதான் தள்ளி நின்னு நீங்க கூப்பிடுறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தோம்..” என அவன் பணிவாகக் கூற ஏதோ பெரிய மனது பண்ணி மன்னித்தவர் போல மெதுவாக தலையசைத்தார் சக்கரவர்த்தி.
“ஷூட்டிங் இந்த நேரத்துக்கு முடிஞ்சிருக்கணும்.. ஆனா நம்ம ஹீரோ சார்தான் கேரவனுக்குள்ள போய் அரை மணி நேரமாச்சு.. இன்னும் வெளிய வரவே இல்ல.. பொண்ணுங்க கூட இருக்கிறதுன்னா அவங்க வீட்ட கூப்பிட்டு ஒன்னா இருக்க வேண்டியதுதானே..? எங்க வேலை நேரத்துலதான் பொண்ணு சுகம் வேணுமா..? ச்சை.. என்ன பண்றது எல்லாம் என் தலவிதி.. ரொம்ப ஃபேமஸான ஆக்டர் வச்சு படம் பண்ணினா இதெல்லாம் அனுபவிச்சுத்தான் ஆகணும்..” என சலித்துக்கொண்டவாறு நெற்றியை நீவி விட்டார் அவர்.
அவர் கூறிய வார்த்தைகளில் அதிர்ந்து போய் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தூரி.
அவளுடைய அதிர்ந்த பார்வையை பார்த்த சேகரோ அவருடைய காதருகே நெருங்கி “ஹீரோவும் ஹீரோயினும் உள்ள இருந்து ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்கடி.. அதனாலதான் இன்னும் ஷூட்டிங் ஸ்டார்ட் ஆகலை.. டைரக்டர் சார் செம கடுப்புல இருக்காரு…” என கிசுகிசுக்க அவளுடைய முகமோ அஷ்ட கோணலாக மாறியது.
இத்தனை பேர் வெளியே இருக்கும் போது எப்படி ஒரு நடிகையுடன் சல்லாபிக்க முடிகின்றது..?
இவர்களுக்கு வெட்கம் மானமெல்லாம் கிடையவே கிடையாதா என வெறுப்போடு மனதிற்குள் எண்ணிக் கொண்டவள் தன்னை வீட்டுக்குக் கிளம்பச் சொன்னால் ஓடி விடுவேன் என்பதைப் போல நின்றாள்.
“சரி இப்போ என்னால உங்ககிட்ட பேச முடியாது.. நேத்து உன்னைப் பத்தி ப்ரொடியூசர் விசாரிச்சார்மா. அதோ அங்கதான் ப்ரொடியூசர் இருக்காரு.. போய் என்னன்னு பேசிட்டு வந்துரு..” என சக்கரவர்த்தி கூற கடனே எனும் விதமாக தலையை அசைத்துவிட்டு சேகருடன் ப்ரொடியூசர் காந்தனை நோக்கி செல்லத் தொடங்கினாள் செந்தூரி.
அவள் அருகே வந்ததும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையால் அளவெடுத்த காந்தனோ சேகரைப் போகும் படி விழிகளால் கூற,
அவனும் “ஓகே சார்..” என்றபடி அவர்களை விட்டு விலகிச் சென்றான்.
சேகர் விலகியதும் பதறியவளாய் அவள் காந்தனைப் பார்க்க அவனோ அவளைத்தான் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையில் இவளுக்கோ முதுகுத்தண்டு சில்லிடுவதைப் போல இருந்தது.
காந்தனின் கள்ளப் பார்வைக்கு சற்றும் குறையாத பார்வையை அவனுடைய அசிஸ்டன்ட் ரகுவும் அவளைப் பார்த்து வைக்க அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காதவளாய் தன்னுடைய பார்வையை தழைத்துக் கொண்டாள் செந்தூரி.
“அழகும் திறமையும் உன்கிட்ட இருக்குன்னு நேத்தே புரிஞ்சுகிட்டேன்.. பட் அழகும் திறமையும் இருந்தா மட்டும் சினிமா துறையில நம்மளால ஜெய்ச்சிட முடியாது.. அதிர்ஷ்டம் நம்ம வீட்டுக் கதவைத் தட்டினா மட்டும்தான் நம்மளால இந்த ஃபீல்டுல வின் பண்ண முடியும்..”
சுரத்தே இல்லாமல் “ம்ம்..” என்றாள் அவள்.
“நீ மட்டும் நான் சொல்றதை கேட்டேன்னா தினமும் உன்னோட வீட்டுக்கதவை அதிர்ஷ்டம் தட்டிக்கிட்டே இருக்கும்.. என்ன சொல்ற..?” என குழைவான குரலில் காந்தன் கூற இவளுக்கோ எதுவோ தவறாகப்பட்டது.
இன்னும் பணத்தை எதிர்பார்க்கிறார்களோ என எண்ணியவள் சலிப்புடன்,
“ஆல்ரெடி எங்ககிட்ட இருந்த பணத்தை எல்லாம் கொடுத்துட்டோம் சார்.. இதுக்கு மேல பணம் ரெடி பண்ண முடியாது..” என தன்மையாகக் கூறினாள்.
“நீ எதுக்குடி செல்லம் பணம் கொடுக்கிற..? நீ இம்முனு ஒரு வார்த்தை சொன்னா நாங்க எல்லோரும் உனக்கு பணத்தையும் பட வாய்ப்பையும் கொட்டிக் கொடுப்போம்.. நீ கேட்கிற எல்லாத்தையும் வாங்கிக் கொடுப்போம்..” என அவன் கூறியதும் இவளுக்கு உடலில் ஒரு விதமான நடுக்கம் வேகமாக பரவியது.
“பு.. புரியல..” என்றாள் அவள் நடுக்கத்தோடு.
“என் கூட அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துக்கிட்டேன்னா எல்லாமே சூப்பரா போகும்..” என்றதும் அட்ஜஸ்ட்மென்ட் என்றால் எதைக் குறிப்பிடுகிறான் எனப் புரியாது திணறிப் போனாள் அவள்.
“ஓகே உன்னோட முடிவு பாசிடிவ்வாதான் இருக்கும்னு நம்புறேன்.. பாசிட்டிவாதான் இருக்கணும்..” என அழுத்தமாகக் கூறிய காந்தனோ,
“ரகு இவகிட்ட டீல் பேசி முடிச்சிடு…” என்றவன் தனக்கு வந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தவாறு நகர்ந்து சென்றுவிட இப்போது அவளை விழுங்குவது போல பார்த்த ரகுவை நிமிர்ந்து பார்த்தாள் செந்தூரி.
“என்ன பேபி உனக்கு ஓகேவா..?”
“எதுக்கு ஓகேவான்னு கேட்குறீங்க..?”
“என்ன பேபி நீ இவ்வளவு டியூப் லைட்டா இருக்க..? சரி நான் நேராவே விஷயத்துக்கு வரேன்.. சார் சொன்னதுக்கு உனக்கு ஓகேன்னா சொல்லு.. இன்னைக்கு அவரோட பீச் ஹவுஸ்ல நாம எல்லாரும் ஒன்னா ஸ்டே பண்ணலாம்..
எப்பவுமே சார்தான் ஃபர்ஸ்ட் பொண்ணுங்க கூட இருப்பாரு.. அவர் ஒன்னா இருந்து முடிச்சதுக்கு அப்புறமா எனக்கும் சான்ஸ் கிடைக்கும்.. நீ என்கூடவும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணித்தான் ஆகணும்.. அதுக்கப்புறம் என்னோட அசிஸ்டன்ட் ஒருத்தன் இருக்கான் அவன் கூடவும் நீ இருக்கணும்.. சம் டைம் ஹீரோஸ் கூடவும் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும்..
இப்போதைக்கு நாங்க மூணு பேரு மட்டும்தான்.. உனக்கு பட வாய்ப்பு வேணுமா இல்ல பணம் வேணுமா.. எது வேணும்னு சொல்லு.. இன்னைக்கு நைட்டே கச்சேரியை ஆரம்பிச்சிடலாம்..” என ரகு சிரித்தவாறு கூற விதிர்விதிர்த்துப் போனாள் செந்தூரி.
💜💜💜💜
So sad
Adei porukkingala nalla varuthu en vaila 🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈😈