சக்கரவர்த்தியோ நடந்து முடிந்த பிரச்சனையில் நெஞ்சு வலிப்பதாகக் கூறிவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட அவரை சந்திப்பதற்கு வந்து கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தவர்கள் அனைவரும் சலிப்போடு வந்த வழியே திரும்பிச் செல்லத் தொடங்கினர்.
கௌதமனோ ‘மறுபடியும் நாளைக்கு வந்து நாய் மாதிரி காத்திருக்கணும்.. இவனுங்க கூட ஒரே ரோதனையால்ல இருக்கு.. இப்படி டெய்லி வெயிட் பண்றதுக்கு வேற ஏதாவது உருப்படியா நல்ல வேலைக்கு போயிடலாம் போலயே..’ என எண்ணியவாறு வெளியே வந்தவன் தரையில் விழுந்து கிடந்த செந்தூரியைக் கண்டு திகைத்தான்.
வெளியே வந்த மற்றவர்களின் பார்வையும் செந்தூரியின் மீது பாய விநாயக் தள்ளிவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் அப்படியே தரையில் அமர்ந்திருந்தவள் அப்போதுதான் அங்கே ஆட்களின் நடமாற்றம் அதிகமாகவதை உணர்ந்து சட்டென எழுந்து நின்றாள்.
உள்ளம் பதை பதைத்துக் கொண்டே இருந்தது.
விநாயக் கூறியதைப் பார்த்தால் அவன் மீது தவறு இல்லாததைப் போல் அல்லவா இருக்கிறது.
விலகி இருந்த என்னுடைய ஆடையைத்தான் அட்ஜஸ்ட் பண்ணும் படி கூறினானா..?
ரகுவின் வார்த்தைகளைக் கேட்டுவிட்டு அதே கோபத்தில் வந்து இவன் கூறுவதை புரிந்து கொள்ளாமல் நான்தான் அவசரப்பட்டு அடித்து விட்டேனா..?
ஐயோ..!
உள்ளம் பதறியது.
அவன் சவால் விட்டுச் சென்றதைப் போலவே செய்து காட்டி விடுவானோ என எண்ணியவள் சட்டென தன் தலையை வேகமாக உலுக்கிக் கொண்டாள்.
‘நோ.. அப்படியெல்லாம் எதுவுமே நடக்காது.. என்ன நடந்தாலும் நான் அவனத் தேடி போகவே மாட்டேன்.. நான் எதுக்கு அவன்கிட்ட போகணும்..? எந்த சூழ்நிலையிலும் அவன் சொன்னது நடக்கவே நடக்காது..’ என எண்ணியவளுக்கு தன் மீதும் தவறு இருப்பது புரிந்தது.
அப்போதே இது புத்திக்கு உறைத்து இருந்தால் உடனடியாக அவனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கலாம் என எண்ணி வருந்தியவள் நெற்றியை அழுத்தமாக தேய்த்துக் கொண்ட கணம் அவள் முன்னே வந்து நின்றான் கௌதமன்.
“என்னாச்சுங்க..? ஆர் யூ ஓகே..? நான் பார்க்கும் போது தரையில் இருந்தீங்க.. கீழ விழுந்துட்டீங்களா..?” என உதவி செய்யும் நோக்கத்தோடு கௌதமன் அக்கறையாகக் கேட்க, அவனிடம் எந்தப் பதிலும் கூறாது அந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்லத் தொடங்கினாள் செந்தூரி.
அவள் இருக்கும் நிலையில் யாருடனும் பேசும் மனநிலை அவளிடம் சுத்தமாக இல்லை.
எங்கே இவனும் ஏதாவது கூறி அதையும் தப்பாக எடுத்து அவனை ஏதாவது செய்து வம்பாகிப் போகுமோ என எண்ணியவள் விலகி நடக்க முயற்சி செய்ய ரகுவோ மோட்டார் பைக்கில் அந்த வழியால் வந்தான்.
அப்போதுதான் இனி உள்ளே உள்ள அனைவரும் இந்த வழியால் தானே வெளியேற வேண்டும் என்பது புரிந்து போனது செந்தூரிக்கு.
தாமதிக்காமல் உடனேயே வீட்டிற்குச் சென்றிருக்கலாம் இனி இந்த வழியால் செல்லும் அனைவரும் என்னை ஒரு மாதிரி அல்லவா பார்த்து விட்டுச் செல்வார்கள் எனத் தயங்கியவள் ரகுவின் மோட்டார் பைக் தன்னை நெருங்குவதைக் கண்டதும் சட்டென கௌதமனின் அருகே வந்தவள்,
“நான் உங்க கூட வரட்டுமா..?” எனப் பதற்றத்தோடு கேட்டாள்.
அவளுடைய பதற்றத்தை உள்வாங்கியவாறே தன்னுடைய ஸ்கூட்டியைக் காட்டியவன் “தாராளமா வாங்க..” என்றதும் அடுத்த நொடியே அவனுடைய பைக்கில் ஏறி அவள் அமர்ந்து விட தன்னுடைய ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்த கௌதமனோ,
“அப்புறம் எங்க போகணும்னு நீங்க சொல்லவே இல்லையே..?” எனக் கேட்டான்.
ராகுவின் கண்பார்வையை விட்டு சற்று தூரம் வந்ததும் நிம்மதி பெருமூச்சை வெளியேற்றியவள் “இ.. இங்கேயே நிறுத்திடுங்க… நான் ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்..” என்க,
“இல்லங்க.. உங்களுக்கு எதுக்கு சிரமம்..?” என மென்மையாகக் கூறினாள் செந்தூரி.
“இதுல எனக்கு எந்த சிரமமும் கிடையவே கிடையாது நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்..” என்றான் அவன்.
அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை கேட்டதும் அவளுடைய முகம் சடுதியில் பத்திரகாளி போல மாறிவிட்டது.
அவளுடைய முகம் மாறிய விதத்தில் சட்டென பைக்கை அம்போவன தரையில் போட்டவன் பத்தடி விலகி நின்று,
“என்னங்க திடீர்னு சந்திரமுகி போல மாறிட்டீங்க..?” எனப் பீதியோடு கேட்க,
அப்போதுதான் மீண்டும் சுயத்திற்கு வந்தவள்,
“ஐயோ சாரிங்க.. தயவு செஞ்சு என்கிட்ட இனி அட்ஜஸ்ட் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிடாதீங்க.. எரிச்சலா இருக்கு..” என்றாள்.
‘அடடே இது வேறயா..?’ என மனதிற்குள் நினைத்தவன் அவளைப் பார்த்து தலையை எல்லா பக்கமும் அசைத்தவாறு கீழே விழுந்து கிடந்த தன்னுடைய ஸ்கூட்டியை நிமிர்த்தி அதில் அமர்ந்து கொண்டான்.
“நான் உங்களுக்கு இப்போ ஹெல்ப் பண்றதா வேணாமா..?” என அவன் தயங்கித் தயங்கிக் கேட்க சட்டென அவளுடைய இறுகிய முகம் தளர்ந்து போனது.
களம் கபடம் இல்லாத அவனுடைய சிரித்த முகத்தை பார்த்தவளுக்கு மனம் சற்றே அமைதி அடைந்தது.
இப்போது இருக்கும் மனநிலையில் சற்று நேரம் தனியாக நேரத்தை செலவழிக்க வேண்டும் போல இருக்க அருகே இருக்கும் பார்க்கில் தன்னை விட்டுச் செல்லும்படி அவனிடம் கூறினாள் செந்தூரி.
சரி என்றவன் சில நிமிடங்களில் அவள் கூறிய பார்க்கில் தன்னுடைய வண்டியை நிறுத்த அவனுடைய ஸ்கூட்டியில் இருந்து கீழே இறங்கியவள்,
“ரொம்ப தேங்க்ஸ் அண்ணா..” என்றாள்.
மீண்டும் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டவன்,
“இந்த அண்ணா மட்டும் வேணாமே.. மனசு பிசையுது..” என சிரித்தபடியே கூற இப்போது அவனை முறைத்தாள் அவள்.
“ஐயோ விநாயக் சாரை அடிச்ச மாதிரி என்னையும் அடிச்சுறாதம்மா.. என்னோட பாடி தாங்காது..” என சிரித்தவாறே அவன் கூற அவளுடைய முகமோ நொடியில் மாறிப் போனது.
அவளுடைய முகத்தில் தெரிந்த பயத்தைக் கண்டு புருவம் சுருக்கியவன்,
“எதுக்கு சாரை அடிச்சீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..? நான் எல்லாம் அவரோட மிகப்பெரிய ஃபேன்.. இதுவரைக்கும் எல்லா பொண்ணுங்களும் அவரைப் பார்த்தா ஆட்டோகிராப் வாங்குறதுக்காகத்தான் பின்னாடியே போவாங்க.. முதல் தடவை ஒரு பொண்ணு அவரை அடிக்கிறத இப்போதான் பார்க்கிறேன்..” என்றான் கௌதமன்.
“அவங்க எல்லாம் பெரிய இடத்து ஆளுங்க.. உங்க மேல தப்பு இருக்குன்னு நினைச்சீங்கன்னா ஈகோ பாக்காம மன்னிப்பு கேட்டுருங்க.. ஏன்னா அவங்கள மாதிரி பெரிய ஆளுங்கள பகைச்சிக்கிட்டு நம்மளால வாழ்ந்திட முடியாது.. முக்கியமா இந்த சினிமா பீல்டுல நுழையவே முடியாது..”
“ம்ம்..” என்றவளுக்கு வார்த்தைகள் வெளியே வரவில்லை.
மனதை சட்டென ஒரு விதமான பயம் கவ்விக் கொண்டது.
அவன் சொன்னதை சொன்னபடியே செய்து காட்டி விடுவானோ என நடுங்கிப் போனவள் இனி இந்தப் பக்கமே வரக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள்.
“சீக்கிரமே நானும் செலக்ட் ஆகி உங்க கூட ஒரு படமாவது நடிச்சிடணும்..” என்றவனைப் பார்த்தவள்,
“சாரிங்க எனக்கு நடிக்கிற ஐடியா சுத்தமா கிடையாது.. இனி இந்த பக்கமே வரமாட்டேன்.. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதுக்கு வாழ்த்துக்கள்..” என்றவள் அவனிடம் தலையசைத்து விடை பெற்று விட்டு பார்க்கினுள் நடக்கத் தொடங்கி விட சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கௌதமனுக்கு தானாக உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
‘கடைசி வரைக்கும் இவளோட பேரு என்னன்னு கேட்காம விட்டுட்டோமே..’ என வருந்தியவன் இன்னொரு நாள் அவளைச் சந்திக்கும் போது கட்டாயமாக அவளுடைய பெயரைக் கேட்க வேண்டும் என எண்ணிக் கொண்டான்.
****
ரகுவை சமாதானப்படுத்த முயன்று தோற்றுப் போனான் சேகர்.
ரகுவோ “என்ன சமாதானப்படுத்துறது இருக்கட்டும்.. முதல்ல விநாயக் சாரோட கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொல்லு.. இல்லன்னா அவரே உங்கள பூண்டோட அழிச்சிடுவாரு..” என எள்ளலாகக் கூறிவிட்டு ரகு சென்றுவிட அந்த இடத்திலேயே இடிந்து போய் அமர்ந்து விட்டான் சேகர்.
மன்னிப்பு கேட்பதற்கு கூட அவர்களால் அவனை நெருங்கி விட முடியாதல்லவா..?
அவனிடம் சென்று பேசுவதே அரும் பெரிய விடயம் அல்லவா..?
இந்த செந்தூரி இத்தனை பேரின் முன்பு அவனை அடித்துவிட்டாளே.
இவளுக்கு உதவி செய்ய முயன்ற என்னையும் சேர்த்து அதல பாதாளத்தில் தள்ளிவிட்டு விடுவாள் போல அல்லவா இருக்கின்றது என தன் தலையை பிடித்துக் கொண்டவனுக்கு உள்ளமும் உடலும் ஒரு சேர நடுங்கித்தான் போனது.
இன்று நடந்து முடிந்த விபரீத செயலுக்கான பின்விளைவுகள் இனித்தான் ஒவ்வொன்றாக வெளிப்படும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தவன் அதன் பின்னர்தான் செந்தூரி தனியாக நடந்து சென்றுவிட்டாள் என்பதை உணர்ந்து வேகமாக அந்த செட்டை விட்டு வெளியே வந்தான்.
அங்கே வீதியில் அவள் இல்லாததைக் கண்டதும் கோபத்தோடு நேராக அவளுடைய வீட்டை நோக்கிச் சென்றவனுக்கு அவள் இல்லாத வீடே அவனை வரவேற்றது.
“அடடே வாங்க தம்பி.. செந்தூரி எங்க..? டைரக்டர் சார் அக்ரிமெண்ட் போட்டுட்டாரா..? எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா..?” என ஆவலோடு மேகலா கேட்க,
தன் தலையில் கை வைத்தபடி அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டான் சேகர்.
தான் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாது இடிந்து போய் அமர்ந்திருந்த சேகரைக் கண்டு ‘என்னாச்சு தம்பி ஏதாவது பிரச்சனையா..?’ எனக் கேட்டார் அவர்.
“உங்க பொண்ணு இன்னைக்கு என்ன வேலை பண்ணி வச்சுட்டா தெரியுமா..? இனி என்னால் சக்கரவர்த்தி சாரோட முகத்துல முழிக்க முடியுமானு கூடத் தெரியல.. ப்ரொடியூசர் சாரோட அசிஸ்டன்ட்டை திட்டினது மட்டுமில்லாம விநாயக் சாரை கை நீட்டி அடிச்சிட்டா..
அங்க நின்ன எல்லாருமே ஷாக் ஆயிட்டாங்க.. அவங்க எல்லாம் ரொம்ப பெரிய ஆளுங்க ஆன்ட்டி.. பெரிய பிரச்சனை ஏதாவது வந்துருமோன்னு பயமா இருக்கு..” என கைகளைப் பிசைந்தவாறே கூறினான் அவன்.
“ஐயோ இந்த எடுபட்ட சிறுக்கி எதுக்கு இப்படி பண்ணி வச்சிட்டு வந்திருக்கான்னு தெரியலையே.. எவ்ளோ கஷ்டப்பட்டு அவள படத்துல நடிக்க வைக்கிறதுக்காக கடன் வாங்கி அங்க கூட்டிட்டுப் போனேன்.. இப்போ இப்படி பண்ணி வச்சிட்டாளே.. இதால அவ படத்துல நடிக்கிறதுல ஏதாவது பிரச்சனை வருமா தம்பி..?” என பதறியவாறு கேட்டார் அவர்.
“கண்டிப்பா வரும் ஆன்ட்டி.. விநாயக் சார் எவ்வளவு பெரிய ஆளுன்னு உங்களுக்கே தெரியும்ல.. அவர பகைச்சிக்கிட்டு சினிமா பீல்டுல யாராலயுமே நுழைஞ்சிட முடியாது..” எனக் கூறியவன்
“செந்தூரி எங்க..?” எனக் கேட்டான்.
“அவ இன்னும் வீட்டுக்கு வரவே இல்லையே..” என்றதும் அவனுடைய விழிகளிலோ பயம் வெளிப்பட்டது.
“என்ன ஆன்ட்டி சொல்றீங்க..? அவ அப்பவே கிளம்பிட்டாளே.. ஏன் இன்னும் வீட்டுக்கு வரல..?” எனக் கேட்டவன் நேரத்தைப் பார்த்தான்.
நேரமோ மதியத்தை நெருங்கிக் கொண்டிருக்க அவனுக்கோ அச்சம் உடலில் படரத் தொடங்கியது.
அக்கணம் அவர்களுடைய வாயிற் கதவு திறக்கும் சத்தம் கேட்க வேகமாக சென்று எட்டிப் பார்த்தார் மேகலா.
பார்த்தவருக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“பாவி மகளே என்னத்தடி பண்ணி வச்சிருக்க..? எதுக்குடி அவரை அடிச்ச..? இனி எப்படி உன்னால அவர் கூட படம் நடிக்க முடியும்..?” எனக் கோபத்தோடு அன்னை நடுவீட்டில் வைத்து கேள்வி எழுப்ப அவளுக்கோ சினம் எழுந்து விட்டது.
“அப்போ என்னை என்ன பண்ண சொல்றீங்க..? அந்த ப்ரொடியூசரோட அசிஸ்டன்ட் என்கிட்ட என்ன சொன்னான்னு தெரியுமா..? அட்ஜஸ்ட் பண்ணி போக சொல்றான்..” என தேம்பியவாறு அவள் அழுகையோடு கூற,
“கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போனா நீ என்ன குறைஞ்சா போயிடுவ..? அவங்க என்ன சொல்றாங்களோ அதைக் கேட்டு நடக்க வேண்டியது தானே..?” எனக் கோபத்தில் கத்தினாள் மேகலா.
“அட்ஜஸ்ட்மெண்ட்னா என்னென்னு உங்களுக்குத் தெரியுமா..? அவங்க எல்லாரும் என்ன படுக்க கூப்பிடுறாங்கம்மா.. ப்ரொடியூசர் கூட அவரோட பீச் ஹவுஸ்ல நான் தங்கணுமாம்.. அவர் கூட இருந்ததுக்கு அப்புறமா அந்த பொறுக்கி ரகு என்கிட்ட வருவானாம்.. அதுக்கு அப்புறமா கேமரா மேன் ஹீரோன்னு எல்லாருக்கும் நான் அட்ஜஸ்ட் பண்ணனுமாம்னு என்கிட்ட சொல்றான்மா..
அவனத் திட்டாம வேற என்ன செய்ய சொல்றீங்க..? அவங்க கூட போய்ப் படுக்க சொல்றீங்களா..? இதுக்கு ஒரு பாட்டில் விசத்தை வாங்கி என்கிட்ட கொடுத்துடுங்க.. நிம்மதியா குடிச்சிட்டு செத்துப் போயிடுறேன்..” என முகத்தை மூடிக்கொண்டு அவள் கதறி அழத் தொடங்கி விட இடிந்து போனார் மேகலா.
அவர் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லையே.
பணத்தைக் கொடுத்து எப்படியாவது நடிகையாக மாறிவிட்டால் பணம் சம்பாதிக்கலாம் என எண்ணியிருந்தவருக்கு பெண்ணின் உடலையே லஞ்சமாக கேட்பார்கள் என்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 39
No votes so far! Be the first to rate this post.
Post Views:861
1 thought on “08. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥”
Malar
Ithu ipathan theriyuthama unaku
Ava en vendam nu soldra nu yosichu irundhale pothum
Ithu ipathan theriyuthama unaku
Ava en vendam nu soldra nu yosichu irundhale pothum