எண்ணம் -2

4.8
(6)

எண்ணம்-2

“ஹே! பார்த்து டி! ட்ரிப்ஸ் ஏறுது.” என்று பதறினாள் வர்ஷிதா.

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.”

“ அவரே பாய்ஸனை குடிச்சிட்டு படுத்துக்கிடக்குறார். இந்த நேரத்துல ஏன் தியா இவ்வளவு கோபப்படுற?” என்றாள் வர்ஷிதா.

“அதென்ன நீ செய்த பாயஸமா? ஆசையா குடிச்சிட்டு வந்து படுத்துக் கிடக்குறான்? இல்லை உண்மையிலே நீ தான் ஏதாவது செஞ்சு எங்கண்ணனை படுக்க வச்சுட்டியா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி.

“ ஹே! எருமை… நானே பயந்து போய் இருக்கேன். நீ என்னடான்னா கிண்டல் பண்ணிட்டு இருக்க?” என்று அவளது தலையில் ஒரு கொட்டு வைத்தாள் வர்ஷிதா.

“பின்னே, இவன் பண்ண காரியத்துக்கு பாராட்டு பத்திரமா வாசிக்க முடியும். கிண்டல் தான் பண்ண முடியும்.” என்று நக்கலாக தியாழினி கூற.

“உங்க அண்ணா இருந்த நிலையைப் பாத்திருந்தா நீயும் பயந்திருப்ப… இவர் ஃபோன் பண்ணதும் ஆசையா கிளம்பி வீட்டுக்கு வந்துப் பார்த்தா, என்னை மன்னிச்சிரு வர்ஷு! நான் பாய்சன் சாப்பிட்டுட்டேன்னு சொல்லிட்டு மயங்கிட்டாரு.

எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்றதுன்னே புரியலை. மயங்கிக் கிடந்தவரைப் பார்த்து பயந்துப் போயிட்டேன் தெரியுமா? அப்புறம் எப்படியோ வாட்ச்மேன் கிட்ட சொல்லி, அவரு ஆம்புலன்ஸுக்கு சொல்லி இந்த ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்தா, இவரை மட்டும் ஐசியூவுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.”

“அப்புறம் உன்னையும் பக்கத்து பெட்ல சேர்க்கவா முடியும்.” என்று கேட்ட தியாழினி, அந்த அறையின் மூலையில் இருந்த நாற்காலியில் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

“ ஹான்!” என்று முழித்த வர்ஷிதா, தியாழினி ஓரமாக போய் உட்கார்ந்ததைப் பார்த்து,”நான் மட்டும் பேசிட்டு இருக்கேன். நீ என்ன தியா அங்க போய் உக்காந்துட்ட?” என்று வினவினாள்.

“ ஆமா நீ பாட்டுக்கும் புலம்பிட்டே இருக்குற. அவனுக்கு ஏத்த ஜோடி தான். இரண்டு பேரும் சேர்ந்து புலம்பி முடிங்க. அதுவரைக்கும் நான் இங்கே உட்கார்ந்து இருக்கேன்.”

“ ஹே! உங்க அண்ணன் இருந்த கண்டிஷனைப் பார்த்திருந்தா இப்படி எல்லாம் நீ சொல்ல மாட்ட. இவரு ஐசியூல விட்டுட்டு, நான் தனியா தவிச்சதை உன் கிட்ட சொன்ன, அது உனக்கு புலம்புற மாதிரி தெரியுதாடி. இப்போ இவரை ரூமுக்கு ஷிப்ட் பண்ணவும் தான் உசுரே வந்துச்சு. அதுவரைக்கும் எப்படி பயந்தேன் தெரியுமா? நீ என்னென்னா கேலி பண்ற.”என்று அவள் தலையில் கொட்டினாள் வர்ஷிதா.

“ எதுக்கு பயந்த? நீ செய்த பாயாசத்தால தான் எங்க அண்ணன் ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகிட்டாங்கன்னு நான் கேஸ் குடுத்திருவேன்னு தானே பயந்த‌. அப்படிக் கேஸ் குடுக்கணூம்னா எப்பவோ குடுத்திருக்கணும்.” என்று கேலி செய்த தியாழினியின் கழுத்தை நெறிக்க வந்தாள் வர்ஷிதா‌.

“உண்மையை சொன்னா கோபம் வருதோ!”

“எதுடி உண்மை‌. ஒரு தடவை நான் செஞ்ச பாயாசம் குடிச்சு எல்லாருக்கும் லைட்டா முடியாமல் போயிடுச்சு. அதுக்காக எப்பப் பார்த்தாலும் அதையே சொல்லி காண்பிச்சுடே இருக்க எருமை.” என்றாள் வர்ஷிதா.

“ஹலோ! லைட்டா முடியலை. ரெண்டு நாளைக்கு பாத்ரூமே கதின்னு கிடந்தோம். பாயாசம் குடிச்சு யாருக்காவது பேதி ஆகுமா?”

“அளவு தெரியாமல் ஸ்வீட் அதிகமாயிடுச்சு அதை காம்பன்சேஷன் பண்றதுக்காக கொஞ்சூண்டு காரம் போட்டேன். அது இப்படி ஆகும்னு தெரியுமா? இப்போ எதுக்கு அதை சொல்லிட்டு இருக்க. நீ ஜாலியா நம்ம ஃப்ரெண்ட்ஸோட வெளியே சுத்திட்டு வந்துட்டு என்னை குறை சொல்லிட்டு இருக்கியா?”

“ஹே! நானா உன்னை வர வேணாம்னு சொன்னேன். உன்னை வர விடாமல் பண்ணது என் அண்ணன் தான். அவன் எனக்கு ஃபோன் பண்ணாமல் உனக்குத் தானே ஃபோன் பண்ணான். அப்பவும் நான் வரவான்னு கேட்டதுக்கு, அதெல்லாம் நீ வேணாம், தனியா என் கூட பேசணும்னு தான் ஃபோன் பண்ணியிருக்கார். நான் போயிட்டு வர்றேன்னு போயிட்டு இப்போ ப்ளேட்டை திருப்புறீயா?” என்று தியாழினி சண்டை போட.

“நான் என்ன கண்டேனா உன் அண்ணன் பாயாசம் சாப்பிட்டு… ச்சே பாய்ஸன் சாப்பிட்டுட்டு இப்படி கிடப்பார்னு கண்டேனா. நீ ஜாலியா மொக்கிட்டு தானே வந்த.” என்று வர்ஷிதா எகிற.

அவர்கள் இருவரிடம் ரொம்ப நேரமாக பேச முயன்ற நேத்ரன், அவர்களின் சண்டையைப் பார்த்து கடுப்பாகி பக்கத்திலிருந்த பெல்லை அழுத்தினான்.

“உன்னை விட்டுட்டு சாப்பிட மனசு இல்லாம உனக்காக பீட்சா எல்லாம் வாங்கிட்டு வந்தேன் பாரு என்ன சொல்லணும்.” என்று தியாழினி தன் கையிலிருந்த கவரை ஆட்டினாள்.

அவ்வளவு பரபரப்பிலும் ஹேண்ட்பேக்கோடு சேர்த்து பார்சல் கவரையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் தியாழினி.

“ஹே! எனக்காகவா வாங்கிட்டு வந்த செல்லம்.” என்று வர்ஷிதா ஆர்வமாக வினவ.

“ஆமாம்! ஆனா இப்போ உனக்கு கிடையாது‌.”

“ஹே! சாரிடி! என் செல்லம்.” என்று தாஜா செய்தாள் வர்ஷிதா.

“நோ! நீ ரொம்ப பேச வச்சுட்ட. சோ ஐயம் வெரி டயர்ட். சாப்பிட்டதெல்லாம் எந்தப் பக்கம் போச்சுன்னே தெரியலை. அதனால நானே சாப்பிட போறேன்.” என்று அந்தக் கவரை தனக்கு பின்னே மறைத்தாள்.

“ஹே! இப்போ தர்றியா? இல்லையா?”என்று அதை பிடுங்க முயன்றாள் வர்ஷிதா.

இருவரும் ஒருவரை, ஒருவர் தள்ளி விட்டுக் கொண்டிருக்க.

அங்கு வந்த நர்ஸோ, ”ஹலோ!என்ன நடக்குது? இது ஹாஸ்பிடலா? இல்லை உங்க வீடா? இப்படி சண்டை போட்டுட்டு பேஷன்ட்டை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று சத்தம் போட்டவர், தியாழினியைப் பார்த்ததும், “ஏன்மா நீ தானே கீழே ஹவுஸ் கீப்பிங் செய்றவங்க கையை புடிச்சுகிட்டு எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சு டாக்டர்ன்னு பதறுன, இப்ப என்னடான்ன சின்ன புள்ளையாட்டம் சண்டை போட்டுட்டு இருக்க?” என்று வினவ.

“அது…” என்று அசடு வழிந்த தியாழினியோ,”ரிசப்ஷன்ல விசாரிச்சுட்டேன்‌. அண்ணன் நல்லா இருக்காங்கன்னு சொல்லிட்டாங்க.”என்றவள், மனதிற்குள்ளோ, ‘இங்கே வந்து அவசியம் நான் மொக்கை வாங்கினதை சொல்லணுமா? இந்த குரங்கு வேற இதை வச்சு எத்தனை வருஷத்துக்கு என்னை ஓட்டப்போறாளோ தெரியலையே.’ என்று எண்ணிக் கொண்டு வர்ஷிதாவை பார்க்க.

அவளோ நக்கலாக சிரித்தாள்.

அவர்களை இருவரையும் முறைத்த நரஸ், நேத்ரனிடம் திரும்பினார்.“நீங்க தான் பெல்லடிச்சீங்களா?சொல்லுங்க சார்! ஏதாவது உங்களுக்கு வேணுமா? இல்லை உடம்பை எதுவும் பண்ணுதா?” என்று கனிவுடன் விசாரிக்க.

‘எதோ இப்பாவது விசாரிச்சாரே.’ என்று மனதிற்குள் நினைத்த நேத்ரன், “ தண்ணி வேணும்.” என்றான்.

நர்ஸ், “தண்ணி எல்லாம் குடிக்கக்கூடாது. பாய்ஸன் குடிச்ச உடனே உங்களை இங்கே அட்மிட் பண்ணிட்டாலும். நீங்க குடிச்ச பாய்ஸன் வயித்துல அபெக்ட் ஆயிருக்கு. இப்போ தான் ட்யூப் போட்டு ஸ்டொமக் வாஷ் பண்ணியிருக்கோம். ட்வெண்டி போர் ஹவர்ஸ் சாப்பாடு, தண்ணி எதுவும் கிடையாது. இன்னைக்கு ஃபுல்லா ட்ரிப்ஸ் மட்டும் தான்.” என்று விட்டு, பார்த்துக்கோங்க என்று அங்கு நின்றுக் கொண்டிருந்த தியாழினி, வர்ஷிதாவிடம் கூறியவர்,”ம்கூம்! நீங்க பேஷண்டை கவனிப்பிங்கன்னு நம்பிக்கை இல்லை. நானே வந்துப் பார்த்துக்குறேன். நேத்ரன் சார் வேற ஏதாவது வேணும்னா பெல் அடிங்க. நான் வரேன்.” என்று விட்டு செல்ல.

“எல்லாம் உன்னால தான்! அந்த நர்ஸ் கூட நம்மளை மதிக்காமல் போகுது.” என்று மீண்டும் ஆரம்பத்தாள் தியாழினி.

“விடு தியா! வர்ஷு பாவம்.” என்றான் நேத்ரன்.

உடனே வர்ஷிதாவின் முகம் மலர்ந்தது. வெட்கத்துடன் அவனைப் பார்த்து சிரித்தாள்.

அவனும் கனிவாக அவளைப் பார்த்தான்.

“ ம்கூம்! நீ இப்போ ஹாஸ்பிடல்ல இருக்க. அது உனக்கு ஞாபகம் இருக்கா? இல்லையா? நீ பாட்டுக்கும் உன் வருங்காலத்துக்கு சப்போர்ட் பண்ற? அவ என்னடான்னா வெட்கப்படுற? நீ என்னான்னா பார்வையாலே பதில் கொடுக்குற? என்னடா நடக்குது தடிமாடு?”என்று அண்ணனிடம் பாய்ந்தாள் தியாழினி

“அண்ணன் ஹாஸ்பிடல் இருக்கேனு இப்பவாது உனக்கு ஞாபகம் வந்ததே குட்டி. எப்படி இருக்கேன்னு ஏதாவது விசாரிச்சியா?” என்று நேத்ரன் வினவ.

“உன்னை கொல்லாமல் விட்டேன்னு சந்தோஷப்பட்டுக்கோ. சார் ஏதோ வீரதீர செயல் செய்ததா நினைப்பா? விசாரிக்கணுமாம்ல.” என்றதும் நேத்ரன் படக்கென்று வாயை மூடியவன், “எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு.” என்று கண்களை மூடினான் நேத்ரன்‌.

“டேய் அண்ணா! நானே செம்ம டென்ஷன்ல இருக்கேன்‌. இப்படி கேவலமா நடிச்சு என் கிட்ட வாங்கிக் கட்டிக்காதே.”

“ப்ச்! சாரி டா குட்டி. அண்ணனை மன்னிச்சிடுடா!”

“எனக்கு உன்னை விட்டா யாரு இருக்கா? என்னைப் பத்தி நீ யோசிக்கவே இல்லை.”என்று குறைப்பட்டுக் கொண்டாள் தியாழினி.

அவளது கையைப் பற்றியவன்,” நீ ஏன் டா இப்படி பேசுற. நான் இல்லைன்னாலும் வர்ஷு பார்த்துப்பான்னு நினைச்சேன்.”என்றான்.

“நீ இல்லாமல் நாங்க ரெண்டு பேரும் இருப்போம்னு நினைக்கிறியா அண்ணா.”

“அப்படி எல்லாம் சொல்லாதே! ஏதோ அந்த நேரத்துல என்ன பண்றதுன்னே தெரியாமல் செஞ்சுட்டேன்.உங்க ரெண்டு பேரையும் நல்லா வச்சுக்கணும்னு நெனச்சேன். ஆனால்…” என்றவனது குரல் தளுதளுக்க, தனது காதலியை தேடினான்.

அவனது பார்வை புரிந்த தியாழினியோ சிரிப்பை அடக்கிக் கொண்டு, அங்கு ஓரமாக இருந்த திவானில் அமர்ந்து பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வர்ஷிதாவை காட்டினாள்.

தங்கையின் பார்வையை உணர்ந்தவனோ,”பாவம்! பயந்துட்டா. ரொம்ப அலைச்சல் வேற.” என்றான்.

“அவளைப் பத்தி எனக்குத் தெரியாதாண்ணா. இப்போ உனக்கு என்ன பிரச்சனை? அதை சொல்லு. எதுவா இருந்தாலும் சமாளிக்கலாம்.” என்றாள் தியாழினி.

“கடன் அதிகமாகிடுச்சு. இதுக்கு மேல சமாளிக்க முடியுமான்னு தெரியலை.”

“சோ வாட்? மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கலாம். நாம ஒன்னும் பிறக்கும் போதே பணக்காரங்களா பிறக்கலையே. படிச்சு முடிச்சுட்டு தானே கம்பெனியை ஆரம்பிச்ச. மறுபடியும் ஜீரோல இருந்து ஆரம்பிக்கலாம். உன்னால மறுபடியும் மீண்டு எழமுடியும்னு நம்பிக்கை இல்லையா? இப்படி தான் கோழை மாதிரி முடிவு எடுப்பியா? எல்லாம் அந்த குண்டோதரிய சொல்லணும்.” என்று எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்தாள்.

“சித்தியை எதுவும் சொல்லாதே.” என்று எப்பொழுதும் போல் சப்போர்ட்டுக்கு வந்தான் நேத்ரன்.

“ப்ச்!”என்று உதட்டைப் பிதுக்கினாள் தியாழினி.

“அவங்க இல்லைன்னா இருக்கிறதுககு கூட இடம் இல்லாமல் கஷ்டப்பட்டுருப்போம். அந்த நன்றி உணர்வு எப்பவும் இருக்கணும்.”என்றான் நேத்ரன்.

“அவங்க நம்மளை அடக்கி, அடக்கி வச்சதால தான் நீ இப்படி இருக்க.”

“அதெல்லாம் இல்லை! எல்லாம் அந்த ஆர்.கேவோட பையனால வந்தது.”

“ யார்டா அந்த பையன்?” என்று வினவினாள் தியாழினி.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!